அழகான அபத்தங்கள்

காதல்
4.8 out of 5 (48 )

அழகான அபத்தங்கள்


சென்னை சென்றலில் அந்த தொடர் வண்டி அதன் இயக்கத்தை நிறுத்தி விட்டு கொஞ்சம் இளைப்பாறியது. அந்த நேரத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அங்கே இறங்க வேண்டியவர்கள் இறங்கினார்கள்.


அந்த ஸ்டேஷனே அல்லோகலப்பட்டது. ஏதோ தாங்கள் சென்று தான் இந்த உலகத்தின் தலை எழுத்தையே மாற்றி எழுத வேண்டும் என்பதைப் போல ஒரு நிமிஷ நேரம் கூட நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தார்கள்.


அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் வந்து இறங்கிய கலையமுதன் நடைபாதை இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.


அவனுக்கும் இந்த மாதிரி எந்த வேலையும் இல்லை என்று சொல்ல முடியாது. அடுத்த வாரம் வரும் இரண்டு இதழ்களுக்கு தன் தொடரை எழுதித் தர வேண்டிய இமாலயப் பணி அவனுக்கும் இருக்கிறது. ஆனாலும் அதைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் அந்த இருக்கையில் அமர்ந்து தொடர் வண்டி எப்பொழுது கிளம்பும் என்று காத்துக் கொண்டிருந்தான்.


அந்த வண்டியும் தன் இளைப்பாறுதலை முடித்துக் கொண்டு அடுத்த பகுதியில் மக்களைக் கொண்டு சேர்க்கும் கடமை அழைக்க தன் இயக்கத்தை ஆரம்பித்தது.


அப்பொழுது கலையமுதன் பார்வை கூர்மையாக அதன் சக்கரத்தில் படிந்தது. அவனுக்கு இந்தத் தொடர் வண்டியின் சக்கரத்திற்கும் தண்டவாளத்திற்கும் இருக்கும் காதலின் ஆழத்தை என்றுமே புரிந்து கொள்ள முடிந்ததில்லை.


காட்டுக் கத்தல் கத்திக் கொண்டு சென்றாலும் தண்டவாளம் அதைப் புன்னகையுடன் ரசித்துக் கொண்டே தன் காதலியை வருடிக் கொடுப்பது போல் மெல்லிய வருடலுடன் வழியனுப்புகிறது.


அதைப் பார்ப்பதற்கு கலையமுதனுக்கு என்றுமே அலுப்பதில்லை. அந்த இரைச்சல் அவன் காதுகளின் பசியைப் போக்கிக் கொண்டும்,தொடர்வண்டிக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் இருக்கும் நெருக்கம் அவன் கண்களுக்கு விருந்தாகிக் கொண்டும் இருந்தது.


சில நொடிகள் மட்டும் உறவாடி விட்டுப் போகும் தொடர் வண்டி தண்டவாளத்திடம் என்ன ரகசியம் பேசிக் கொள்ளும் என்று கற்பனை செய்து மகிழ்வான்.


அவனுடைய ரசனை இப்படித் தான் இருக்கும். எதையும் எந்த பரபரப்பிலும் ரசிக்க அவனால் மட்டுமே முடியும்.


அவனுடைய ரசனையைக் கலைக்கும் விதத்தில், "அமுதா" என்ற ஆனந்தக் கூக்குரல் அவன் செவியைத் தீண்டியதுமே அவனுடைய உடலில் மொத்த உணர்ச்சியும் பேயாட்டம் போட்டது.


குரல் வந்த திசையில் தன் பார்வையைச் செலுத்தியவனுக்கு அவன் காதுகள் பொய் சொல்லவில்லை. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனான அவனுடைய நண்பன் கிருஷ்ணனும் அவனுடைய மனைவி ஜானகியும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.


அவர்களைப் பார்த்ததும் மனசெல்லாம் படபடவென்று துடிக்க, அவன் உடல் முழுவதும் வேர்த்துக் கொட்டியது. அவன் இதயம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்வேன் என்பது போல் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது.


அவன் நினைவுகள் பறந்து போய் இளமைக்காலத்தின் வாசலில் நின்றது.


அன்று அவனுடைய நண்பன் கிருஷ்ணன் தொடர்பு கொண்டு தன் திருமணத் தகவலைச் சொல்லி சீக்கிரமே வந்து சேருடா என்றான்.


அவனிடம் சரி என்று சொல்லி விட்டு வைத்தவனுக்கு அந்தக் கல்யாணத்திற்குச் செல்ல முடியாமல் அவனுடைய சொந்தக் கிராமத்திற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை.


அவனின் காதலி தனக்குக் கல்யாணம் உறுதி செய்திருப்பதாகவும் கடைசி நிமிஷத்தில் தான் சொன்னார்கள் நீ உடனே வா என்று சொல்லி அழைத்திருந்தாள். அதனால் எல்லா வேலையும் போட்டு விட்டுத் தன் காதலைக் காப்பாற்ற மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் தன் கிராமத்திற்கு ஓடினான்.


காதலியின் பெற்றோர்களுக்கு எவ்வளவோ சொல்லிப் புரிய வைக்க முயன்றான். அவர்களோ, "காகிதத்தில் கிறுக்கிப் பிழைப்பு நடத்தறவனுக்கு பெண்ணைத் தரமாட்டோம். ஆம்பளைனா லட்சணமா ஓடியாடி வேலை செய்ய வேண்டாமா? அதென்ன உட்கார்ந்த இடத்தில் மோட்டு வளையப் பார்த்துக்கிட்டு காகிதத்தில் எழுதிக் கொண்டும் இதெல்லாம் ஒரு பிழைப்பா?" என்று அவனைக் கேலி செய்தார்கள்.


மனம் துவண்டு போனான் இதே தன் எழுத்தை வேறு யாரும் இவ்வளவு குறைவாகப் பேசியிருந்தால் அந்த இடத்திலேயே அவர்களை ஒரு கை பார்த்து விடுவான்.


ஆனால் அன்று அது முடியவில்லை. எது தடுக்கிறது கதவு மூலையில் நின்று கொண்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் அவன் காதலியின் பார்வை அவனை எதையும் தாங்கும் இதயமாக மெருகேற்றி இருந்தது.


அவள் கண்ணீரைப் பார்த்த அவன் மனம் வெம்பியது. அவள் விழிகளையே ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தான் பின் வேகமாகச் சென்று விட்டான்.


அவன் பார்த்த பார்வையில் மறைந்திருந்த கேள்வியில் அழுது கரைந்தாள் அந்தப் பேதைப் பெண்.


அமுதா எங்க அப்பா அம்மா என் பேச்சை கேட்பாங்க நாம மத்தவங்க மாதிரி வீட்டில் சொல்லாமல் கல்யாணம் பண்ண வேண்டாம்.


எங்க வீட்டில் சொல்லி ஊர் அறியக் கல்யாணம் பண்ணி பெருமையோடு உன் கையைப் பிடுச்சுட்டு என் வீட்டு வாசல்படியைத் தாண்டி உன்னோடு வருவேன். அதுவரை இந்த மாதிரி அபத்தமா பேசாதே என்று திருமணத்திற்கு வற்புறுத்திய போது சொல்லி இருந்தாள்.


இன்று நான் சொன்னேன் கேட்டியா? என்பது போல் பார்த்து விட்டுச் சென்றதை அவள் உயிர்ப்பே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.


எல்லாம் கைமீறிப் போய் விட்டது இனி அவள் முன்பு நின்று அவளைச் சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்து அங்கிருந்து கிளம்பி விட்டான்.


வெறும் உடல் மட்டுமே அவனோடு சென்றது உயிர் அவளிடமே தங்கி விட்டது அது என்றும் அவளிடம் தான் இருக்கும் அவளை விட்டு வராது என்ற முடிவுடன் சென்று விட்டான்.


தன் வசிப்பிடத்திற்கு வந்து சிறிது நாட்கள் பைத்தியக் காரன் போல் சுத்திக் கொண்டிருந்தான். எதிலும் ஈடுபாடு இல்லை இனி வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு கடமைக்கே என்று வாழ்ந்து கொண்டிருந்தான்.


அப்பொழுது தான் அவனுடைய நண்பன் கிருஷ்ணன், "டேய் கல்யாணத்திற்குத் தான் வரலை ஊரில் திருவிழா வருது அதுக்காகவாவது வாடா எனக்குன்னு இருக்கிற நண்பன் நீ மட்டும் தான் நீயும் பட்டும் படாமலும் இருந்தால் என்னடா பண்றது" என்று சலித்துக் கொண்டான்.


"சரிடா வரேன்" என்று உறுதி கொடுத்து விட்டு அதற்கான ஏற்பாட்டைச் செய்தான்.


அவனுடைய நண்பனின் ஊர் ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இளையாம்பாளையம்புதூர் என்ற சிறிய கிராமம்.


அந்தக் கிராமத்தின் அழகை வார்த்தையில் சொல்லி விட முடியாது எங்கும் பசுமையின் ஆட்சியில் அந்தக் கிராமம் செல்வச் செழிப்புடன் இருந்தது.


பேருந்து வசதியோ இன்றைய நாகரிகத்தின் சுவடுகளோ படியாத அசல் கிராமமாக அதன் இயற்கை அழகோடும் பெருமையோடும் நிமிர்ந்து நின்றது.


அப்படிப்பட்ட ஊரில் வாழ்வதே கௌரவமாக நினைத்த கிருஷ்ணன் தான் படித்த படிப்பிற்கு வேலை தேடிக் கொள்ளாமல் அந்த ஊரிலேயே மில் வைத்து நடத்திக் கொண்டிருந்தான்.


இன்று அழைத்ததும் அந்த ஊரில் இருக்கும் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்குத் தான். எப்பொழுதும் அந்த மாரியம்மனைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருப்பான்.


எங்க ஊர் மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தது. யார் என்ன கேட்டாலும் அது அவர்களுக்கு நல்லதா இருந்தால் நடத்திக் கொடுப்பாள் எனக்கு இன்னொரு அம்மா மாதிரி என்று சொல்வான்.


அதனாலையே அவனுக்குத் தீபாவளி பொங்கலை விட மாரியம்மன் திருவிழா வந்து விட்டால் கொண்டாட்டமாகத் தான் இருக்கும் இந்த வருஷமாவது போகவேண்டும்.


நம்ம மனநிலைக்கும் இப்படி எங்காவது போய்விட்டு வந்தால் தேவலாம் போல இருக்கும் என்று எண்ணிக் கொண்டான்.


அதே மாதிரி திருவிழாவிற்கு ஊருக்குச் சென்றவனைக் கல்யாணத்திற்குக் கூட வரவில்லை என்று கோபித்துக் கொண்டு மனைவியை அறிமுகப் படுத்தவும், பார்த்துக் கொண்ட இருவருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது.


ஆம் அங்கே கிருஷ்ணனின் மனைவியாக நின்றது கலையமுதனின் முன்னால் காதலி தான். அவனுக்கு ஒரு நிமிஷம் மூச்சடைத்து விட்டது மயக்கம் வராத குறையாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.


ஜானகிக்கும் கண்கலங்கி விட்டது காபி கொண்டு வரும் சாக்கில் உள்ளுக்குள் மறைந்து கொண்டாள். ஆனால் அவனுக்கு மறைவிடம் கிடைக்கவில்லை தன் உணர்வுகளை மறைக்கப் பெரும்பாடு பட்டான்.


இதே வீட்டில் இன்னும் இரண்டு நாள் எப்படி இருப்பது அது என்னால் முடியுமா? என்ன காரணம் சொல்லி இங்கிருந்து செல்வது என்று ஆயிரம் எண்ணங்கள் அவன் மனதில் வலம் வந்து கொண்டிருந்தன.


அந்த எண்ணத்திற்கு இடையில் ஜானகி சந்தோஷமாக வாழ்கிறாளா? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்தது.


காபியை ஜானகி கொண்டு வராமல் அவளுடைய மாமியாரிடமே கொடுத்து விட்டாள்.


அதை வாங்கி அருந்திக் கொண்டிருக்கும் போது, "நீ எதுவும் தப்பா எடுத்துக்காதடா ஜானகி எங்க தூரத்து உறவுப் பெண் தான் படிச்சிருக்காள் ஆனால் என்னமோ தெரியலை யார் முன்னாலும் வருவதில்லை.


உன்னை மாதிரியே ரசனையானவள் எனக்குத் தான் அவள் ரசனைகள் எதுவும் பிடிபடுவதில்லை" என்று சொல்லி பெருமூச்சு விட்டவன், "வா மில்லுக்குப் போய்விட்டு அப்படியே தோட்டத்துக்கும் போய்விட்டு வரலாம்" என்று அழைத்துச் சென்றான்.


இயந்திரம் போல் அவன் பின்னே சென்றவன் மனசு எங்கே சென்றாலும் எனக்கு நிம்மதியே இல்லையா என்ற கேள்வியோடு பின் சென்றது.


மில்லுக்குச் சென்று விட்டு தோட்டத்துக்கு வந்தவர்கள், "என்னடா சரியா பேசக் கூட மாட்டேங்கற நீ முன்னை மாதிரி இல்லை உனக்கு என்னாச்சு" என்று கவலையுடன் கேட்டான் கிருஷ்ணன்.


"ஒன்னுமில்லைடா வந்த கலைப்பு இப்ப சரியாகிருச்சு இந்த ரோஜாப் பூவெல்லாம் எவ்வளவு அழகா இருக்கு பார்த்தியா?


அது நிமிர்ந்து நிற்பதைப் பார்த்தால் நான் எவ்வளவு அழகா இருக்கிறேன் என் கூட அழகிப் போட்டிக்கு வரையா? என்று சவால் விடுவது போல் இருக்குடா" என்று ஆசையுடன் பூவைப் பார்த்து ரசித்துக் கொண்டே சொன்னான்.


அதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்த கிருஷ்ணன், "எப்படிடா நீயும் ஜானகியும் ஒரே மாதிரி நினைக்கிறீங்க, அவளை இங்கே அழைத்து வந்த போது இந்த ரோஜாவைப் பறித்துக் கொடுத்தேன் அவளுக்குக் கோபம் வந்துருச்சு தெரியுமா?" என்று சொன்னான்.


கலையமுதனும் அதே கோபத்துடன், "அதை எதுக்குடா பறிச்சுக் கொடுத்த அது செடியிலிருந்தால் எவ்வளவு அழகா இருக்கும். நம்ம கைக்கு வந்தால் அதனுடைய ஆயுள் ஒரு நாள் தான். அதே செடியிலிருந்தால் மூன்று நாள் உயிரோடு இருக்கும். ஒரு உயிரைப் பறித்துத் தருவது உனக்கு அவ்வளவு ஈசியா போயிருச்சா?" என்று மூச்சடைக்கக் கத்தினான்.


அவனை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், "அமுதா அப்படியே ஜானகி சொன்ன மாதிரியே சொல்றியேடா எப்படிடா என்னால் நம்பவே முடியலை போ" என்று அதிசயப்பட்டான்.


கலையமுதனோ உள்ளுக்குள் உடைந்து போனான். அவளுடைய ரசனையும் அவனுடைய ரசனையும் ஒன்றாக இருக்கப் போய் தானே இருவருக்குள்ளும் காதல் தீ பாய் விரித்துப் படுத்திருந்தது.


அவன் நினைவுகளைக் கலைத்த கிருஷ்ணன், "அன்னைக்கு ஒரு நாள் பட்டாம் பூச்சி பறந்து வந்து அவள் கையில் உட்கார்ந்துச்சுடா அதை அப்படியே பார்த்துக்கிட்டே இருந்தாள்.


நான் ஆசையா பார்க்கறான்னு நினைத்து அதைப் பிடித்துக் கொடுத்தேன் அதுக்கும் சண்டை போடறாடா. அதே எவ்வளவு மென்மையா இருக்கு அதைப் போய் பிடிக்கறீங்களே உங்களுக்கு இறக்கமே இல்லையான்னு நான் என்னவோ கொலைக் குற்றம் செய்த மாதிரி பேசறாடா.


இதே மாதிரி தான் ஒவ்வொரு நாளும் எங்களுக்குள்ள எதுவுமே சரியா இல்லைடா அவளுடைய ரசனையும் மனசும் எனக்குப் பிடிபடவே மாட்டேங்குது.


என்னுடைய குணத்தை அவள் தெரிந்து கொள்ளக் கூட விரும்புவதில்லை. தெரியாத இந்த ரசனையை எனக்கும் சொல்லிக் கொடுத்தால் புரிஞ்சுக்க முயற்சிக்க மாட்டேனா? என்னமோ போ அவள் விலகி இருக்கறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா" என்று தன் மனவேதனையை நண்பனிடம் பகிர்ந்து கொண்டிருந்தான்.


அதைக் கேட்ட கலையமுதனுக்கு உயிர் வரை துடித்து அடங்கியது. 'ஏன் ஜானு? அது தான் நம்ம ரெண்டு பேருக்குள்ளும் ஒன்னுமில்லைன்னு ஆகிருச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டவனோடவாவது சந்தோஷமா வாழ வேண்டாமா? இப்படி இவன் வாழ்க்கையும் சேர்த்துக் கெடுத்துக்கிட்டு இறுக்கியே உனக்கே இது சரியாப் படுதா ஜானு' என்று மனசுக்குள் அவளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.


பின் இருவரும் கோவிலுக்குச் சென்று மாரியம்மனைத் தரிசனம் பண்ணி விட்டு வீட்டிற்குச் சென்றார்கள். இரவு உணவைக் கொடுக்கவும் ஜானகி வரவில்லை மாமியாரை அனுப்பி விட்டாள்.


ஆனால் உணவு எல்லாமே கலையமுதனுக்குப் பிடித்ததாக இருக்க அவனால் ஒரு வாய் கூட உள்ளே இறக்க முடியவில்லை. கண்கலங்கி உடல் விம்மியது அறை ஜன்னல் வழியாக இதைப் பார்த்தவளுக்கும் மனசு ரணமாகிப் போனது.


யாருக்காக இந்தக் கல்யாணம் எங்க அப்பா அம்மா ஆசைக்காகவும் பிடிவாதத்துக்காகவும் பண்ணிக் கொண்டேன். இப்ப கிருஷ்ணனும் அமுதனும் ஏமாந்து நிற்கிறார்களே. நான் இரு ஆண்களின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டேன் எனக்கு விமோசனமே கிடையாது என்று அழுது தீர்த்தாள்.


திருவிழா முடிந்து ஊருக்குக் கிளம்பும் போது நண்பனை பேருந்தில் வைத்து விட மனைவியையும் அழைத்துக் கொண்டு வந்தான் கிருஷ்ணன்.


பேருந்து நிலையத்தில் யாருமில்லாத இடத்தில் நின்று கொண்டு, "அமுதா இன்னும் எவ்வளவு நேரத்திற்கு இதே நாடகத்தைத் தொடரப் போற கிளம்பும் போதாவது சொல்லி விட்டுப் போ உனக்கும் ஜானகிக்கும் என்ன தொடர்பு" என்று சுத்தி வளைக்காமல் நேரடியாகவே கேட்டான்.


இருவருமே அதிர்ந்து போய், "அப்படி எதுவும் இல்லை" என்று அவசரமாகச் சொன்னார்கள்.


"என்கிட்ட பொய் வேண்டாம் அமுதா நீ ரோஜாப் பூவைப் பத்தி சொல்லும் போது எதார்த்தமா நினைத்தேன். ஜானகி எங்கம்மாவை அனுப்பி சாப்பாடு போடும் போது எனக்குச் சந்தேகம் வந்துச்சு. உன் முன்னால் வராதவ ஜன்னலில் நின்று ஏன் கண்ணீர் வடிக்கிறா?.


இதுவரை ஏன் என் கூட வாழ மறுக்கிறாள்ன்னு எனக்குப் புரியாமல் இருந்துச்சு இப்ப உங்க வாயால் கேட்க விரும்பறேன் அப்படி இல்லைன்னு சொல்லாதே அமுதா.


ஜானகி என் மனைவியாக மட்டும் இருந்திருந்தால் நீ எப்படிப் பேசி பழகி இருப்பேன்னு எனக்குத் தெரியும்" என்றான் விடாப்பிடியாக.


வேறு வழியில்லாமல் அமுதன் நடந்ததைச் சொல்ல ஜானகி கதறி அழுதாள்.


எல்லாம் கேட்டு வேதனைப்பட்ட கிருஷ்ணன், "இதற்கு மேல ஜானகி இங்க இருக்க வேண்டாம் நீ கூட்டிக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ணிக்கடா அவ எத்தனை வருஷம் என் கூட இருந்தாலும் என் கூட வாழ மாட்டாள்" என்று சொன்னான்.


அதிர்ந்து போன அழுதன் கோபத்துடன் நண்பனைத் திட்டி விட்டு வந்த பேருந்தில் ஏறி ஊர் வந்து சேர்ந்தான். அதன் பிறகு இன்று இந்த இடத்தில் தான் பார்க்கிறான்.


அவனைப் பார்த்தவன் மெல்ல எழுந்து நிற்க அதற்குள் அவன் அருகில் ஜானகியும் கிருஷ்ணனும் வந்து சேர்ந்தார்கள். அவர்களைப் பார்த்த பிறகு தான் தனக்கு வயதாகி விட்டது என்பதே தெரிந்தது அமுதனுக்கு.


கிருஷ்ணன் ஜானகி இருவருக்குமே முடி நரைத்து முதுமை தழுவி நின்றது. அவர்களைப் பார்த்தவன் நெகிழ்வுடன், "எப்படி இருக்கீங்க" என்று நலம் விசாரித்தான்.


"ஏதோ இருக்கோம்" என்று பதில் தந்தான் கிருஷ்ணன்.


"நீங்க எப்படி இருக்கீங்க" என்று ஜானகி மெல்லக் கேட்டாள்.


"நானும் ஏதோ இருக்கேன்" என்று சொன்னான்.


ஒரு காலத்தில் வாய் ஓயாமல் மனதிலிருப்பதைக் கொட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு அன்று பேச வார்த்தைகளே கிடைக்காமல் அமைதியாக நின்றார்கள்.


அதை உடைக்க விரும்பிய அமுதன் "உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இப்ப எல்லாம் என்ன பண்றாங்க" என்று விசாரித்தான்.


"குழந்தைகளா? எனக்கு அவ குழந்தை, அவளுக்கு நான் குழந்தை, இவ்வளவு தான் எங்க வாழ்க்கை இதில் குழந்தை எங்கிருந்து வரும்?" என்று சொன்னதைக் கேட்ட அமுதனுக்குக் காலுக்குக் கீழ் பூமி நழுவியது போல் இருந்தது.


"அப்ப நீங்க வாழவே இல்லையா!" என்று தயக்கத்துடன் கேட்டான்.


"நான் சொன்ன மாதிரி நீ இவளைக் கூட்டிப் போயிருந்தால் கொஞ்ச நாளில் நானும் வேறு கல்யாணம் செய்துகொண்டு வாழ்ந்திருப்பேனோ என்னவோ. நானும் உன்னைத் தேடி உன் ஊருக்குப் போய் விசாரித்தேன்.


நம்ம நண்பர்கள் அனைவரிடமும் உன்னைத் தேடச் சொன்னேன். நீ உன் அடையாளத்தையே மறைத்துக் கொண்டு எங்கேயோ போய்ட்ட. நாங்க என்ன தான் பண்றது நீயே சொல்லுடா?"


"நீங்க ரெண்டு பேரும் வாழனும்னு தான் உங்களை விட்டு விலகிப் போனேன் என்னைப் பார்த்தால் உங்க ரெண்டு பேருக்கும் தேவையில்லாத மனச் சஞ்சலம் வருமென்று நினைத்தேன். கடைசியில் என்னை மொத்தமா குற்றவுணர்ச்சியில் தவிக்க வெச்சுட்டீங்களே" என்று சொன்னவனின் குரல் இடறியது கண்கலங்கிப் போனது.


"நீ உன் காதலியை விட்டுட்டுப் போயிட்ட அவளுக்கு என் கூட ஒட்டவே இல்லை. நானும் நண்பன் காதலின்னு பார்க்க ஆரம்பித்து விட்டேன். அவளும் உன்னை நினைத்த மனசால் வேற யாரையும் நினைக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்துட்டா. நீ நண்பனுக்காகவும் நண்பன் மனைவிக்காகவும்ன்னு விட்டுக் கொடுத்துட்டுப் போயிட்ட, நாங்களும் அப்படியே ஊருக்காக வாழ்ந்தாயிற்று. இனி காடு போறது தான் எப்பன்னு தெரியல"‌ என்று ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு சொன்னான்.


அமுதனுக்குக் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. ஊருக்காக உலகத்துக்காக அம்மா அப்பாவுக்காக என்று மூன்று பேரின் வாழ்க்கையும் வாழாமலே முடிந்து போனதை நினைத்து அவனுக்குச் சொல்ல முடியாத துயரம் அவன் மனதை ஆக்கிரமித்தது. அப்படியே தளர்ந்து போய் இருக்கையில் அமர்ந்தான்.


"அமுதா எங்களுக்கு டிரெயின் வந்துருச்சு நாங்க கிளம்பறோம். இந்தா என்போன் நம்பர் விருப்பமிருந்தால் கூப்பிடு" என்று சொல்லி தன் நம்பரை எழுதிக் கொடுத்து விட்டு மனைவி கையைப் பிடித்துக் கொண்டு டிரெயினை நோக்கிச் சென்றான் கிருஷ்ணன்.


ஜானகி கணவனின் கையைப் பற்றிக் கொண்டு சென்றவளின் விழிகள் அமுதனைப் பார்த்துக் கொண்டே சென்றது. அமுதனும் அவள் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‌‌‌‌‌ அன்புடனும் நட்புடனும்

கவிதா அன்புசெல்வன்



যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...