கல்யாண சைக்கிள்

உண்மைக் கதைகள்
5 out of 5 (15 )

(இக் கதையில் வருவது எங்கள் கிராமத்தில் வழக்கத்தில் இருந்த ஒன்று. பைக்குகள் போன்ற வாகனங்கள் கிராமங்களை அவ்வளவாக பாதித்திராத காலம்.அதன் மையமே இந்த சிறுகதை)

கல்யாண சைக்கிள்

மண்ணடுப்பில் எரிந்து கொண்டிருக்கும் குச்சியை நன்றாக எரிவதற்காக அடுப்பினுள் தள்ளிவிட்ட மலர்,'தாலியை வேணும்னா வித்துடுலாமாங்க' என்று நா தழுதழுக்க கண்ணத்தில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டே கூறினாள் .

அவள் கூறியதைக் காதில் வாங்காதவனாக வாசற்படியில் விழும் சூரிய வெளிச்சத்தையே ரத்தனம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அது கிழக்கு பார்த்த வாசலுள்ள வீடு என்பதால் ஒரே அளவில் கோடுப் போட்டது போல் நடு வீட்டைத் தாண்டி சூரியவெளிச்சம் உள்ளே பரவியிருந்தது.நேற்று மழைப் பெய்ததால் என்னவோ காலையிலேயே வெயில் அதிகமாயிருந்தது.

என்ன மாமா நான் சொல்றத காதுல வாங்காம வூட்டு உள்ளயே என்னத்த உத்துப் பாத்துகிட்டு இருக்கீங்க என்று மணதுக்குள் மெலிதாக எழும் கோபத்தை வார்த்தையால் காட்டிவிடக் கூடாது என்ற கவனத்தில் கேட்டாள் மலர். இருந்தாலும் அவளின் குரல் வழக்கத்தைவிட கொஞ்சம் கடுமையாக இருக்கிறது என்பது ரத்தனத்திற்கு தெரியும்.

அவள் சொல்வதைக் கேட்டு எதுவும் பதில் பேசாதவனாக தலைகீழாகக் கவுத்து போட்டிருந்த மர உரலில் உட்கார்ந்திருந்த ரத்தனம் , ம்…. ம்...என்று முனகி விட்டு எழுந்து நின்று சோம்பல் முறித்துக்கொண்டுக் குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொடு என்றான்.அடுப்படியில் இருந்த மலர் வீட்டின் உள்ளே எழுந்துசென்று பிளாஸ்டிக் குடத்திலிருந்து ஒரு சொம்புத் தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தாள்.ரத்தனம் அப்போதுதான் பார்த்தான் மலரின் கண்கள் சிவந்து போய் இருந்தது. அவள் கண்கள் சிவந்து போனதற்குக் காரணம் அடுப்பிலிருந்து வரும் புகை மட்டும் இல்லை என்பது அவனுக்குத் தெரியும்.

எந்த ஒரு வார்த்தையும் பேசாதவனாய் ஒரு சொம்பு தண்ணீரையும் மடக்… மடக்… என்று குடித்து முடித்து ரத்தனம் பாதி நரைத்த தாடியில் வழியும் தண்ணீரை துடைத்தவாறே உன்கிட்ட தங்கம்னு இருக்கிறதே இந்தத் தாலி மட்டும் தான்.இதையும் வித்துப்புட்டு ஒரு பொட்டுத் தங்கம் கூட இல்லாம முண்டச்சி மாதிரி நிக்கப் போறியாக்கும் என்று சோகம் கலந்த கோவத்தில் கூறினான்.

அதுக்கு இல்லங்க,மாப்ள வீட்ல கேட்டத எல்லாத்தையும் வாங்கியாச்சு. சைக்கிள் மட்டும் தான் பாக்கி. அத மட்டும் வாங்கியாச்சுனா மொத்த சொமையும் கொறஞ்ச மாதிரி இருக்கும் அதான் சொன்னேன்.

அதுக்குன்னுத் தாலிய விக்கச் சொல்றியா .நீ என்னய கல்யாணம் பண்ணிக்கிட்டு வரும் போது காது,மூக்கு,கழுத்துனு எவ்வளவு நகை போட்டுருந்த.இப்ப எப்படி இருக்க என்று கண்கள் கலங்க அழாத குறையாக சொன்னான்.

நாம என்ன பண்றது நாலஞ்சு வருஷமா ஒரு சொட்டு மழை இல்ல. ஊரே வரண்டு போய் காடு கரையெல்லாம் வெடுப்பு வெடிச்சு கெடக்குது. நேத்துதான் கொஞ்சம் மழை பேஞ்சுது.அந்த மழைத் தண்ணியும் வெடிச்சி கெடக்குற வாப்பாட்டக் கூட நெரப்புல. நாம என்ன பண்ண முடியும் என்று சொல்லி பெருமூச்சு விட்டாள் மலர்.

அவள் சொல்வதையெல்லாம் ஆமோதிப்பது போல தலையசைத்துக் கொண்டு தாயின் மார்பை முட்டி முட்டி பால் குடிக்கும் கன்றுவைப் போல அடுப்பிலிருந்து எழுந்த நெருப்பு குண்டானை ஆரத்தழுவி எரிந்து கொண்டிருக்கும் காட்சியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரத்தனம்.

பொண்ணுக்கும் வயசு கூடிக்கிட்டே போவுது. வீட்ல வறுமை இருக்கிறதால வயசுக்கு வந்த புள்ளையை வூட்லயே வச்சுக்கிட்டு இருக்க முடியுமா?.ஊர்ல நாலு பேரு நாலு விதமா பேசமாட்டாங்கனு என்ன நிச்சயம் என்றாள் மலர்.

அதுவரை அவள் பேசுவதற்கு குறுக்கே எதுவும் பேசாமல் இருந்த ரத்தனத்துக்கு கண்களில் நீர் பெருக்கெடுத்தது.தன் குடும்பம் இந்த நிலையில் இருப்பதற்கு தானும் ஒரு முக்கிய காரணம் என்ற எண்ணம் முள் தைத்ததைப்போல நெஞ்சில் சுருக்கென்று வலித்தது.அவனின் பழைய நினைவுகள் ஒரு நிமிடம் கண்முன்னே வந்து போனது.

°°°

ரத்தனத்தைத் திருமணம் செய்து கொண்டு மேலூருக்கு வரும்போது மலர் போட்டுருந்த நகையையும் அவள் கட்டியிருந்த புடவையையும் பார்த்து ஊரே வாயடைத்து போனது.ஊர்முழுக்க ரத்தனத்தைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது.இவனுக்குப் போய் இப்படி ஒரு பொண்ணானு .ஊரில் எல்லோரும் கொஞ்சம் பொறாமையோடு தான் கிசுகிசுத்துக் கொண்டார்கள். மர பீரோ, கட்டில் ,ஆட்டுக்கல்லு ,அம்மி ,செப்பு தவளை ,வெள்ளித் தட்டு ,வெள்ளி டம்ளர்,இளவம் பஞ்சு தலகாணி, புது போர்வனு இரண்டு மூன்று கட்டை வண்டி நிறைய மலர் சீர்ராக கொண்டு வந்திருந்தாள். அது மட்டுமில்லாமல் மூன்றுநான்கு சேவல்,நெற்றியில் சிவப்பு நாமம் போட்ட சுழி சுத்தமான வெள்ளை பசு மாடு ஒன்றும் கன்னுக்குட்டியோடு கொண்டு வந்திருந்தாள்.

ரத்தனமும் தான் மிதமிஞ்சிக் குடிக்கும்போதெல்லாம் என் பொண்டாட்டி வந்த நேரம்தான் என் வீடு வாசல்,வயல்,தோட்டம்,தொரவுனு எல்லாம் செழிப்பா இருக்கு.நம்ம ஊரும் பஞ்சமில்லாமல் முப்போகமும் அறுவடை பண்ணுதுன்னு கூட்டாளிகளிடமும் சொந்த பந்தத்திடமும் ஊர் முழுக்கக் சொல்லிக் கொண்டு திரிந்தான்.

என் பொண்டாட்டி போட்ருந்த நகைய கடனா வாங்கி போட்டுகிட்டு தான் நம்ம ஊர்ல பலபேறு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.அது மட்டுமில்ல என் மனைவி நகை இல்லனா மேலத்தெரு அஞ்சல பொண்ணுக்கு கல்யாணமே ஆயிருக்காது என்று எல்லோரிடமும் இந்நாள் வரை பெருமையாக சொல்லிக் கொள்வான்.

என்னதான் சொத்துபத்து இருந்தாலும் அதை சரியாக கவனிக்கவில்லை எனில் காற்றில் வைத்தக் கற்பூரம் கரைந்து போவதைப் போலக் கண்ணுக்கே தெரியாமல் கரைந்துவிடும்.ரத்தனமும் அப்படித்தான் இருந்தான்.தினமும் குடிப்பது.சினிமாவுக்குப் போவது.மூனு சீட்டு விளையாடுவது,ஏன் சில நேரங்களில் சின்னப் பையன்களுடன் சேர்ந்து கோலிக்குண்டு விளையாடுவது என்று எந்த ஒரு வேலைக்கும் போகாமல் அப்பனாத்தா சேர்த்து வைத்த சொத்து மட்டுமில்லாமல் தன் பொண்டாட்டி கொண்டு வந்ததையும் குடித்தே அழித்துக் கொண்டிருந்தான்.

எத்தனையோ தடவை மலர் எடுத்து சொல்லியும் அதனைக் கேட்டுக்கொள்ளாதவனாக தன் இஷ்டம்போல குடித்து அழித்தான்.

ரத்தனம் குடித்துவிட்டு வருவதால் எத்தனையோ நாட்கள் இருவருக்கும் சண்டை வருவதுண்டு.என்னதான் சண்டை போட்டாலும் வருஷத்துக்கு ஒன்னுனு இரண்டுக் குழந்தைகள் பிறக்காமலும் அல்ல.

ஒருநாள் மூத்த மகனுக்கு உடல் சரியில்லாமல் போக.குழந்தையைத் தூக்கிக்கொண்டு மலரும், ரத்தனமும் டவுன் மருத்துவமணைக்கு குறுக்கு பாதை வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தனர்.அப்போது ரத்தனத்தின் கண்ணில் சாராயக் கடை தென்பட்டது.அவ்வளவு தான்.அவனது நாக்கு நமநமத்தது.கால்கள் நகர மறுத்தன.

மலரு,குழந்தையைத் தூக்கிட்டு நீ முன்னாடிப் போய்கிட்டு இரு.எனக்கு வவுத்த கலக்குது நான்‌ இப்டி ஓரமா போய்ட்டு வரேன் என்று சொல்லி சாராயக் கடை இருக்கும் பக்கமாக சென்றான்.

பிள்ளைக்கு உடல் அனலாக் கொதிக்கவும் அவன் எங்கு போகிறான் என்பதைக்கூடப் பார்க்காமல் காய்ச்சலைத் தாங்கமுடியாமல் அழுது கொண்டிருக்கும் மகனைத் தோலில் போட்டுக்கொண்டு விறுவிறுவென நடந்தாள் மலர்.

வடமாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துனரை குடிபோதையில் இருந்த ஒருவன் சாதிப் பெயரைதச் சொல்லித் திட்டி விட்டதால் தமிழகம் முழுதும் பந்த் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களாக பேருந்துகள் நிறுத்தப்பட்டன.அதனால் தனது மகனை மேலூரிலிருந்து, பெண்ணாடம் ஆஸ்பத்திரி வரை நடந்தே தூக்கி வந்தாள் மலர்.

மருத்துவமணைக்கு வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்திலேயே குழந்தை வாயில் நுறைத்தள்ளி இறந்துபோனான்.நெஞ்சம் வெடித்து அழுத மலர் கணவன் இன்னமும் வராததால் என்ன செய்வதென்று தெரியாமல் இறந்த குழந்தையை தோலில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஊருக்கு நடந்தே வந்துகொண்டிருந்தாள்.அகரம் அருகே வரும்போது புளிய மரத்தடியில் குடிபோதையில் வீழ்ந்து கிடக்கும் ரத்தனத்தைப் பார்த்து கதறிக் கதறி அழுதாள் மலர்.

அன்றிலிருந்து பலவருடம் மலர் ரத்தனத்திடம் பேசவேயில்லை.ஆனால் என்ன செய்வது பெண்குழந்தை ஒன்றுய இருக்கிறதே.அதற்கு கல்யாணம் காட்சி பண்ணிபார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் பேசத் தொடங்கினாள்.என்ன செய்வது கணவனாயிற்றே.அதுமட்டுமில்லாமல் ஆண் குழந்தை இறந்ததற்கு நாம் தான் காரணம் என்ற எண்ணத்தில் ரத்தனம் குடிப்பதையும் சூதாடுவதையும் அடியோடு நிறுத்தியிருந்தான்.

அவன் குடியை நிறுத்தினாலும்,மழைப் பொய்த்து போய் ஊர்குடியை கெடுத்தது.இரண்டு மூன்று வருடங்கள் மழைத்தண்ணியில்லாமல் ஊரே வரண்டு போனது.பெண்குழந்தை வளர வளர வீட்டில் வறுமையும் கூடவே வளர்ந்தது.

°°°

வழியும் கண்ணீரை புறங்கையால் துடைத்துவிட்ட மலர், ராமசாமி மாமாகிட்ட வேணும்னா கொஞ்சம் பணம் கேட்டு பாருங்களேன் என்றாள்.

ஏற்கனவே வீட்ல இருந்த பொருளு, பசுமாடு எல்லாத்தையும் அந்த ஆளுகிட்ட வித்துதான் நாலஞ்சு வருஷமா குடும்பத்த ஓட்டுணோம். இப்போ ஒன்னும் இல்லாம போய் கடன் கேட்டா கொடுப்பானா?.

புருஷனுக்கு உடம்பு சரியில்லைன்னு பணம் கேட்டதுக்கு கூட பொறந்த தங்கச்சிக்கிட்டேயே அவ பேர்லருந்த பெரியேரிக் காட்ட அடமானமா வாங்கிக்கிட்டுத் தான் பணம் கொடுத்தான். நான் போய் கேட்டவொடனே வாங்க மாப்பிள்ளை வந்து வாங்கிட்டு போங்கன்னு பணத்த நீட்டுவாம் பாரு என்று ரத்தனம் கொஞ்சம் எரிச்சலாக சொன்னான்.

அப்போ உங்க தங்கச்சி கிட்ட போய் சொல்லுங்க.நகை ,பொருளு சீர் செனத்தி மட்டும் கல்யாணத்தப்ப செய்ரோம். கல்யாணம் முடிஞ்ச மறு வருஷத்துலேயே சைக்கிள் வாங்கி கொடுத்தறோம்னு என்று மலர் குண்டானை கவிழ்த்து கஞ்சியை வடித்து கொண்டே சொன்னாள்.

இவ ஒருத்தி.புத்தி கெட்டவ.மச்சான் கிட்ட நம்ம பொண்ண கல்யாணம் பண்ணிக்க சம்மதம் வாங்கவே போதும் போதும்னு ஆயிடுச்சு.வெறும்பய வீட்ல எவன் பொண்ணு எடுப்பானு என் மச்சான் சொன்னது உன் காதுல ஏரலயாக்கும்.ஏதோ என் தங்கச்சி அழுது புரண்டு கல்யாணத்துக்கு மச்சான ஒத்துக்க வச்சிருக்கு. இப்ப போய் சைக்கிளை மட்டும் அப்புறமா வாங்கித் தரேன்னு சொன்னா அவ்வளவுதான் மச்சான் கல்யாணத்தையே நிறுத்தி புடுவான். மாப்பிள்ளை வேறு பி.ஏ வர படிச்சிருக்கான்.கவர்மண்ட் வேலைக்கு வேற ஏதோ பரிட்சை எழுதிருக்கானாம். அரசாங்க உத்தியோகத்துக்கு போகப் போரவனுக்கு ஒரு சைக்கிள் கூட வாங்கித் தர வக்குல்லன்னு ஊர்ல எவனாவது மச்சான்கிட்ட ஏத்திவுட்டுட்டா என்ன பண்ணுறது.எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். நீ சும்மா இரு என்று ரத்தனம் கோபமாகச் சொன்னான்.

என்ன சொல்வதென்று தெரியாமல் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த மலர் சரி சீக்கிரம் ஏதாவது ரெடி பண்ணுங்க என்று சோகமாக கூறிவிட்டு முறத்தில் இருந்த முருங்கைக்கீரையை உருவ தொடங்கினாள்.

சுண்ணாம்பு உதிர்ந்து போய் திட்டுத்திட்டாக இருந்த சுவரில் சிறிது நேரம் அமைதியாக சாய்ந்திருந்த ரத்தனம் ஏதோ யோசனை வந்தவனாய், மலரு! நீ கொழம்பக் கூட்டு.நான் போய் ஒரு ஆள பார்த்துட்டு வந்துடறேன் என்று வெளுத்துப்போயிருந்த சிவப்பு கோடு போட்ட பச்சைத் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு தெருவில் இறங்கி மேலத்தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

கலைந்து அலங்கோலமாய் கிடந்த முடியை சுருட்டி கொண்டை போட்டு விட்டு புழுதியில் புரண்டு புரண்டு அழுது கொண்டிருக்கும் இரண்டு வயதுக் குழந்தையை தூக்கி அழாதப்பா அழாதப்பானு அழுதுகொண்டே ஆறுதல் சொன்னவளை காலால் ஓங்கி எட்டி மிதித்து ஏண்டி நாயே! கல்யாணம் பண்ணி மூணு வருஷம் ஆவுது.இன்னும் ஒன் ஆத்தா அப்பன் சொன்ன மாதிரி ஒரு சைக்கிள் வாங்கி கொடுக்க வக்குல்ல.ஒப்பன திட்டுனா மட்டும் கோவம் மசுறு பொத்துக்கிட்டு வருதோ என்று சொல்லிப் பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டு பழனி குடிபோதையில் தெருவில் நின்று கத்திக் கொண்டிருந்தான்.

பழனியின் மனைவி தன் கணவன் திட்டுவதைக் கண்டுகொள்ளாமல் அழும் குழந்தையவேச் சமாதானம் செய்துகொண்டிருந்தாள்.

இவன் கல்யாணத்தன்னைக்கே தாலியை கட்ட முடியாதுன்னு பெண்ணாடம் பெரிய கோயில்ல இருந்து எந்திரிச்சு வந்துட்டான். அப்புறம் ஏதோ சமாதானப்படுத்தி இப்போ தாலியை கட்டுங்க மாப்ள. கொஞ்ச நாள்ல சைக்கிளை வாங்கி தரம்னு பொண்ணோட அப்பம்மா அழுததால தாலியை கட்டினான். அவங்களும் என்னதான் பண்ணுவாங்க நாலஞ்சு வருஷமா மழை இல்லாம, காடுகர வெளையாம, வேலை வெட்டி எதுவும் இல்லாம, எல்லாம் கெடக்குது.இதுல இந்த குடிகார பயலுக்கு சைக்கிள் மட்டும்தான் குறைச்சலாக்கும்.சைக்கிள் வாங்கி கொடுத்தா அதையும் வித்து குடிச்சு மூத்தரத்த வுட்டுட்டு ஒக்காந்துக்குவான் என்று பக்கத்து வீட்டிலிருந்து யாரோ பேசிக்கொண்டிருப்பது கேட்டது.

தன் மனைவியை அடித்து உதைத்து தெருவில் நின்று கத்திக் கொண்டிருக்கும் பழனியைப் பார்த்து இவனைப் போல் தன் மகளையும் கட்டிக்கிட்டு போறவன் அடித்து துரத்தி விட்டால் என்ன பண்ணுவது என்ற பயத்தில் பழனியை கண்டு கொள்ளாதவன் போல் ரத்தனம் மாரியம்மன் கோயிலுக்கு தெற்கு பக்கமாக சிறு சிறு கருங்கற்கள் துருத்திக்கொண்டிருக்கும் செம்மன்ரோட்டில் மேலத்தெருவை நோக்கி வேக வேகமாக நடந்தான்.

நல்லா வளர்ந்த பெரிய மனுஷன் உள்ளங்கை அகலம் அளவும், இரு முனையிலும் கொக்கிகள் போல் இருக்கும் பச்சை நிற பெல்ட்டை அவிழ்த்து தான் அமர்ந்திருந்த கயிற்றுக்கட்டிலில் இருந்த தலையணை மேல் வைத்துவிட்டு பிருமனைப்போல் சுற்றியிருந்த இடுப்பு வேஷ்டியை தளர்த்தி இடது பக்கமிருந்த வெற்றிலைப் பெட்டியில் கொத்தாக சுருட்டி வைக்கப்பட்டிருந்த வெத்தலையில் இருந்து ஒரு வெற்றிலையை தேர்ந்தெடுத்தார் முருகேசன். வெற்றிலை காம்பினை லாவகமாகக் கிள்ளி எறிந்து விட்டு வலப்பக்கத் தொடையில் வெற்றிலையை ஒத்தடம் கொடுப்பதுப் போல் தடவினார்.பின் அதில் சுண்ணாம்பை தடவிக் கொஞ்சம் அதில் கொட்டப் பாக்கை வைத்து மடித்தார்.இடப்பக்கக் கடவாய் பல் விழுந்து விட்டதால் வலப்பக்கம் வெற்றிலையை வைத்து மென்று விட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு கொஞ்சம் புகையிலையைக் கொத்தாக அள்ளி எடுத்து வாயில் போட்டு அதக்கிக் கொண்டிருந்தார் முருகேசன்.

மாமா வெத்தல போடுற வெதமே தனிதான் என்று சொல்லி சிரித்துக் கொண்டே ரத்தனம் முருகேசனின் பக்கத்தில் வந்து நின்றான்.

வாயில் போட்டுக் குதப்பிக் கொண்டிருந்த வெத்தலையை,இரண்டு விரலால் உதட்டை அழுத்தி விரல்களுக்கிடையில் எச்சில் படாதவாறு நேர்த்தியாக கீழேத் துப்பி விட்டு.மீண்டும் வாயில் உள்ளப் புகையிலையை அசை போட்டவாறே வாங்க மாப்ள! என்ன வராத ஆளு வந்துருக்கீங்க. அதுவும் காலையிலேயே வீட்டுக்கு வந்திருக்கீங்க.இப்படி கட்டுல்ல ஒக்காரது என்று முருகேசன் சிறு புன்முறுவலுடன் சொன்னார்.

பரவாயில்ல மாமா இருக்கட்டும்.என்ன கட்டுல வெளிய போட்டு ஒக்காந்திருக்கீங்க என்றான் ரத்தனம்.

அட ஒன்னுமில்ல. உங்க அத்தை காரி சமைக்கிர லட்சனம்தான் வூடே பொகமூட்டம் போடுதே தெரியிலயா?.உள்ள இருந்தா கண்ணு எறியுதுனு இப்டி காத்தோட்டமா உக்காந்துருக்கன் என்றார் முருகேசன்.

சரிதான்!.எங்க அத்தையக் கொர சொல்லுலனா உங்களுக்குத் தூக்கம் வராதே என்று சொல்லிச் சிரித்தான் ரத்தனம்.

ஒங்கொத்தைக்கு சப்போடாக்கும்.சரி சரி அதுக் கெடக்குட்டும் என்னக் காரியமா வந்தீங்க.

அத எப்படி சொல்றதுனுத் தெரியல. உங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்லை. பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன். முடிஞ்ச அளவுக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த காட்டை வித்து கடன உடன வாங்கி பொண்ணுக்காண சீர்வரிசை பொருளை வாங்கிட்டேன்.மாப்பிள்ளைக்கு மட்டும் சைக்கிள் வாங்கணும் அதுக்கு தான் பணம் கொஞ்சம் தேவையா இருக்கு. அதான் உங்கள பாத்துட்டு போலாம்னு வந்தேன் என்று முன் வழுக்கை விழுந்த தலையை சொரிந்து கொண்டே சொன்னான் ரத்தனம்.

அட! என்ன மாப்ள நீ நல்ல காரியத்துக்கு பணம் கேக்குற ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடியே வந்து கேட்டுருக்க கூடாதா .நேத்துதான் மாரியம்மா வந்து பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கனு சொல்லிப் பணம் வாங்கிட்டுப் போச்சு. வீட்டு செலவுக்கு கொஞ்சம் பணம் வச்சிருந்தன் அதையும் அப்பனுக்கு உடம்பு சரியில்ல,சிறுநீரகத்துல கோளாறுனு சொல்லி என் தங்கச்சி மொவன் வந்து பணத்த வாங்கிட்டு போயிட்டான். எப்பவும் கேட்காத ஆளு நீ. உனக்கு கொடுக்குறதுக்கு பணம் இல்லங்கும்போது தான் கஷ்டமா இருக்கு என்று சொல்லி முருகேசன் வாயிலிருந்த புகையிலையை பக்கத்தில் கொட்டி வைத்திருந்த ஆற்று மணலில் துப்பினார்.

ரத்தனத்துக்கு இதுத் தெரிந்துதான். கடன் கேட்க வருபவர்களுக்கு அதிகபட்சமாகக் கிடைப்பது நேற்றே வந்திருக்கக் கூடாதா என்பதுதான். சரி மாமா பரவால்ல.நான் வேற எங்கேயாவது பணம் கிடைக்குதானு கேட்டுப் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கனத்த இதயத்தோடு நகர்ந்தான்.

பக்கத்து வீட்டிலிருந்த ரேடியோவில் ''கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்'' என்ற நாடக பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.ஆனால் இங்கு கடன் கேட்பதற்கே சிலர் கலங்குவதுண்டு .இந்த கடன் வாங்கும் பழக்கம் எப்போது வந்திருக்கும்?.முதல் முதலில் கடன் கொடுத்தவன் யார்?.அதை முதன் முதலில் வாங்கியவன் யார்?. யாருக்குத் தெரியும்,கடவுளே கடன் வாங்கினார் என்று சொல்லிக் கொள்கிறார்களே!, அற்ப மனிதன் நாம் எம்மாத்திரம் என்று ஏதேதோக் கற்பனையில் ரத்தனத்தின் மனம் அலைமோதிக் கொண்டிருந்தது.

மேற்கே இருந்த மாரியம்மன் கோயிலிலிருந்து மேளத்தாளத்தோடு ஆரவாரமாக ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. மேளக்காரர்களின் அடிகளுக்கு சம்பந்தமே இல்லாமல் சிறுசிறு பொடுசுகளும்,இளவட்டங்களும்,குடிபோதையில் ஒரு சில பெரியவர்களும் தன் இஷ்டத்துக்கு மனம்போனப் போக்கில் மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டு வந்தனர்.

அலங்காரம் செய்யப்பட்டத் திருவிழாக் குதிரையைப் போல பச்சைநிறத்தில் இருந்த இரண்டு சைக்கிள்களும் பூக்களால் ஜோடிக்கப்பட்டிருந்தது. சைக்கிளில் வலதுபக்க ஹேன்ட்பாரில் ஐஸ் விற்பவன் வைத்திருப்பது போல் ஒலியெழுப்பி இருந்தது .இரண்டு சைக்கிளின் சக்கரங்களின் கம்பிகளிளும், முக்கோணத்திலும் கலர் பேப்பர் ஒட்டி இருந்தது. சைக்கிளில் முன்னாடி இருந்த லைட்டில் மல்லிப்பூ பெண்ணின் கொண்டையை சுற்றி இருப்பது போல் சுற்றியிருந்தது. கைப்பிடியின் முனையில் சொருகியிருந்த கலர் கலர் பேப்பர்கள் பூவை போல காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. இரண்டு சைக்கிள்களின் கேரியர்களையும் இணைத்து மரப்பலகை வைத்து அதன் மேல் போர்வையை சுற்றி கல்யாணக் கலையில் முகமெல்லாம் பூருத்திருக்க மாரியம்மாவின் மகள் அமர்ந்து வந்துகொண்டிருந்தாள். அவளின் மேல் வெயில் படாதவாறு கருப்பு குடை பிடித்துக்கொண்டு இளவயது பெண்ணொருத்தி கூடவே நடந்து வந்து கொண்டிருந்தாள்.முறைமாமன்கள் தங்களது மிடுக்கையும்,சீர்வரிசையின் பெருமையையும் பற்றி ஊர்க்காரர்கள் பேசவேண்டும் என்று தோரணையில் நடந்து வந்துக்கொண்டிருந்தனர்.

கால்சட்டை மட்டுமே போட்டிருந்த சிறு பையன்களும் கணுக்கால் வரை நீண்டிருக்கும் அப்பாவின் சட்டையை போட்டிருந்த பெண் பிள்ளைகளும் சைக்கிள் ஓட்டுவது போலவும்,பெல் அடிப்பது போலவும் பாவனை செய்து கொண்டு தெருக்களில் புழுதி பறக்க விளையாடிக்கொண்டிருந்தனர். கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டே வாரம்தான் இருக்கிறது. பணம் ஒன்னும் கிடைக்கவில்லை.என்ன செய்வதென்றக் கவலையில்,ஊர்வலம் வந்து கொண்டிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு வேக வேகமாக வீட்டை நோக்கி நடந்தான் ரத்தனம்.ரத்தனத்தின் வழுக்கை விழுந்த முன் மண்டையில் சூரிய வெளிச்சம் பட்டுத் தெரித்தது.வியர்வை வழிய வீட்டினுள் நுழையும் ரத்தனத்தின் முகத்தைப் பார்த்ததுமே பணம் எதுவும் கிடைக்கவில்லை என்று மலருக்கு புரிந்து விட்டது.நீண்ட நேரம் இருவரும் அமைதியாக உட்கார்நிருந்தனர்.

ஊர் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வீட்டினுள் நுழையும் தன் மகளைப் பார்த்ததும் மலருக்கு கண்கள் கலங்க ஆரம்பித்து.ஒருமுறை தன் தாலியைக் தடவிப் பார்த்துக் கொண்டாள்.கடைசியில் தாலியை விற்று விடுவது என்று முடிவானது.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...