JUNE 10th - JULY 10th
இரவு 10 மணி, நாளை நடக்கவிருக்கும் போராட்டத்திற்காக தோழர்கள் முழக்கங்களையும் பதாகைகளையும் தயார் செய்து கொண்டிருந்தனர். எந்த ஒரு காரணத்தினாலும் நாளை நடக்கவிருக்கும் போராட்டம் தடைபட்டுவிடக்கூடாது என்பதற்கான கருத்துக்கூட்டமும் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தது.
கிருபா தோழர் முழக்கங்களை சரி பார்த்துக் கொண்டிருந்தபோது ஸ்டெல்லா தோழர் உள்ளே நுழைந்தார்.
ஸ்டெல்லா தோழர்: கிருபா தோழர், உங்கள பாக்குறதுக்கு காந்திநகர் மக்கள் வந்துருக்காங்க.
கிருபா தோழர்: இங்க உட்காருவதற்கு வசதியா இருக்காது அதனால பக்கத்துல இருக்கிற நம்ம நூலகத்தில் உட்கார வைங்க, அப்படியே அவங்க எல்லோருக்கும் டீ சொல்லிருங்க. வேலு அண்ணே ஏதாவது கேட்டாருன்னா இந்த வார கடைசியில் தந்திடலாம் என்று சொல்லிடுங்க.
ஸ்டெல்லா தோழர் காந்திநகர் மக்களை நூலகத்திற்கு அழைத்துச் சென்று நூலகத்தின் இருக்கையில் அமர வைத்தார்.
கிருபா தோழர் இப்போ வந்துவிடுவார் என்று கூறிவிட்டு, அருகில் இருக்கும் டீ கடைக்கு சென்றார்.
டீ கடைக்காரரிடம் "ன்னா! 15டீ லைப்ரரிக்கு" என்று சொன்னார். கடையில் வேலைசெய்யும் பையன் நூலகத்திற்கு டீயை எடுத்துச் சென்றார். கிருபா தோழர் சொன்னதுபோல் டீக்கடைக்காரர் பழைய பாக்கி பற்றிக் கேட்டார். இந்த வார இறுதிக்குள் கொடுப்பதாக கிருபா தோழர் சொன்னதாக சொன்னார்.
சரிமா பார்த்துக்கோங்க, நான் ஒன்னும் பெரிய மளிகைக் கடைக்காரன் கிடையாது சாதாரண சின்ன டீக்கடை தான். இதுல வர 100, 200 வச்சுதான் என் வாழ்க்கையை ஓட்டிட்டுஇருக்கேன்.
ஸ்டெல்லா தோழர்: சரினா, புரியுது இந்த வார இறுதிக்குள் உங்களுக்கு எல்லா பாக்கியும் வந்துவிடும் என்று உறுதியளித்தார்.
இவர்கள் பேசிக்கொண்டே இருக்கும்போது நூலகத்திற்கு டீ எடுத்து சென்ற பையன் திரும்பிவந்ததை கவனித்த ஸ்டெல்லா தோழர் நூலகத்திற்கு கிளம்பினார்.
தோழர் நூலகத்திற்கு சென்றபோது அங்கே கிருபா தோழர் மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நூலகத்தின் உள்ளே ஐந்து நபர்கள் மட்டுமே இருந்தனர் மீதம் உள்ள பத்து நபர்களும் நூலகத்திற்கு வெளியே பேசிக் கொண்டிருந்தனர்.
ஸ்டெல்லா தோழர் நூலகத்தின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும்,
நபர்1: சார் எங்களுக்கு பயமா இருக்கு சார் நைட்டு 7 மணிக்கெல்லாம் போலீஸ்காரங்க 5, 6 ஜீப்பில வந்து எல்லாரையும் மிரட்டிட்டு போயிருக்காங்க. நாளைக்கு நீங்க எல்லாம் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவதா தகவல் வந்திருக்கு. நாளைக்கு அந்த போராட்டம் நடக்க கூடாது உங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுருக்கு மீறி யாராவது போராட்டம் நடத்தினா உங்க எல்லோரையும் கைது செய்வோம்"னு வீடு வீடா வந்து மிரட்டிட்டு போயிருக்காங்க சார்.
நபர்2: பெரியவங்க நாங்களே பயந்துபோய் இருக்கோம். பாவம் சின்ன பசங்க என்னசார் பண்ணுவாங்க, அழுதுட்டு இருக்காங்க சார்.
நபர் 3: எங்க தெரு முழுக்க சுத்திகிட்டு இருந்த போலீஸ்காரவங்களோட சைரன் சத்தம் இன்னும் காதுல கேட்டுகிட்டே இருக்கு சார். நாளைக்கு போராட்டம் நடக்க கூடாது. நாளைக்கு கருப்புக்கொடி மட்டுமில்ல கருப்பு கலர்ல சட்டை கூட யாரும் போக கூடாது, அப்படி போட்டா தடியடி நடத்துவோம், கைது பண்ணுவோம் அப்படின்னு ஸ்பீக்கர்ல சொல்லிட்டே தெரு முழுக்க போயிருக்காங்க. வீட்டைவிட்டு யாருமே வெளியே வரல. தோ, இந்த பொண்ணோட அப்பா கடைக்கு போயிட்டு வந்துட்டு இருந்தவர ஏன் என்னென்னு கூட கேட்காமல் போலீஸ்காரங்க அடிச்சிருக்காங்க சார்.
நபர்4: சார் நாம வேணும்னா நாளைக்கு முதலமைச்சர் போனதுக்கப்புறம் போராட்டம் நடத்தலாமா?
( காந்திநகர் மக்களின் பதட்டமும் வலிகளும் தோழர்களுக்கு புரிந்தது)
கிருபா தோழர்: உங்களோட பதற்றமும் குழப்பமும் எனக்கு நல்லா புரியுது. நாளைக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் போராட்டம் நடந்திடக்கூடாதுனு போலீஸ் ரொம்ப மும்முரமா இருக்காங்க. நம்மளோட வீடுகளை இந்த அரசாங்கம் இடிச்சிட்டு இருங்கங்கன்னு மட்டும் நம்ம போராடல. நம்மோட இந்த போராட்டம் அதையும் தாண்டி தொலைநோக்குடையது. கொஞ்சம் யோசிச்சுபாருங்க 50 வருஷத்துக்கு முன்னாடி நீங்க இருக்கிற அதே இடம் முழுக்க கூரைவீடுகளாகதான் இருந்துச்சு. அடுத்து வந்த தலைமுறைகள் உழைச்சி சம்பாரிச்சி அந்த கூரைவீடுகள ஓட்டுவீடுகளாகவும் கல்வீடுகளாகவும் மாத்துனாங்க. ஏன் இன்னமும் காந்திநகர்ல ரெண்டு மூணு கூரை வீடுகளில் இருந்துட்டுதானே இருக்கு. தலைமுறை தலைமுறையா உழைச்சி சேத்து வச்ச காசுல கட்டின வீட்டை ஒரு நொடியில் அரசாங்கம் இடிக்கிறது சரியா? புறம்போக்கு நிலாம்னா பதியப்படாத நிலம்னுதான் அர்த்தமேதாவிர மாறாக யாருக்குவேனும்னாலும் இந்த நிலத்தை கையகப்படுத்திக்கலாம்னு அர்த்தம் இல்ல. அப்படி எந்த ஒரு சட்டமும் சொல்லல. நீங்க தலைமுறை தலைமுறையா இதே இடத்தில் வாழ்ந்துட்டு இருக்கீங்க உங்களுக்கு கொடுத்திருக்கக் கூடிய ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் இதில் எல்லா அரசு ஆவணங்களும் இந்த நிலத்தோட ஒத்துப் போனது. இந்த நிலம் உங்களுக்கான நிலம் இதயாராலையும் உங்ககிட்டருந்து பிரிக்கமுடியாது. எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசுகள் உழைக்கும் மக்களுக்கு எதிராதான் செயல்பட்டுகிட்டு இருக்கு. இப்படி அரசுகள் தவறுசெய்யும்போது மக்களாகிய நாம்தான் இந்த அரசாங்கத்த எதிர்த்து கேள்விகேட்கனும், அரசின் தவறான முடிவுகளை தடுத்து நிறுத்தணும். இதுமட்டும் நடக்கலைனா இன்னைக்கு நமக்கு இழைக்கப்பட்ட கொடுமை நாளைக்கு வேற ஒரு நகர் மக்களுக்கும் நடக்கும்.
இந்த பிரச்சனை இங்கிருந்து ஆரம்பிச்சதும் கிடையாது, இது காந்திநகரோட முடியும்போதும் கிடையாது. தங்குறதுக்கு வீடு இல்லாத மக்கள் இருக்கிற நாட்டுல பொழுதுபோக்கு பூங்கா அவசியமா? இன்னைக்கு நீங்க கஷ்டப்பட்ட மாதிரி நாளைக்கு உங்க குழந்தைங்க கஷ்டப்படக்கூடாது. நீங்க வேலை செய்யற இடம், நம்ம பசங்க படிக்கிற பள்ளிக்கூடம்னு எல்லாமே உங்க காந்தி நகருக்கு பக்கத்துலதான் இருக்கு. அரசாங்கம் உங்களுக்கு மாற்று ஏற்பாடு பண்ணிருக்க இடம் இந்த சிட்டிக்கு 90 கிலோ மீட்டர் வெளியே இருக்கு. ஓடாத குதிரைகளுக்கு ரேஸ் கோர்ஸ் இருக்கு, மக்களை தங்கவைக்க சிட்டில இடமில்லையாம். நாளைக்கு போராட்டம் நடக்கணுமா நடக்ககூடாதான்னு போலீஸ் முடிவுபண்ணகூடாது, நீங்கதான் முடிவுபண்ணனும். நீங்க என்ன முடிவு எடுத்தாலும் கடைசிவரைக்கும் நாங்க உங்க கூட இருபோம்.
கிருபா தோழர் பேசி முடித்தார், சபையில் சற்றுநேரம் அமைதி நிலவியது. மக்களின் குழப்பங்களுக்கு சற்று தெளிவு கிடைத்தது.
நபர்1: நாங்க பட்ட கஷ்டம் எங்க புள்ளைங்க படக்கூடாது. என்ன நடந்தாலும் நாளைக்கு ஒருகை பாத்துடலாம் சார்.
மக்கள் நூலகத்திலிருந்து தைரியமாக விடைபெற்றனர். ஆனால் ஒரு பெண் மட்டும் சற்று தயக்கத்துடன் கிருபாத்தோழரின் அருகில் சென்றார்.
செல்வி: கிருபா எப்படிடா இருக்க?
கிருபா: நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? அப்பாவுக்கு இப்ப பரவாயில்லையா?
செல்வி: இப்ப கொஞ்சம் பேசுறாரு, அம்மா கூட இருந்து பாத்துக்கிறாங்க. டாக்டர் நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொல்லிருக்காராம்.
கிருபா: இப்ப எங்க தங்கி இருக்க, பசங்களாம் எங்க இருக்காங்க?
செல்வி: ஊரே இப்ப மசூதிலதான் இருக்காங்க. பிரட்சனை முடியற வரைக்கும் அங்கேயே தாங்கிக்க சொல்லிட்டாங்க.
பசங்களும் அங்கதான் இருக்காங்க. வள்ளி அக்காவ பாத்துக்க சொல்லிட்டு வந்திருக்கேன். நீ சாப்டியா டா?
(ஏதோ புரிந்ததுபோல ஸ்டெல்லா தோழரும் மணி தோழரும் சற்றுநேரம் வெளியே காத்திருந்தனர்) வெளியே மக்கள் பேசிக்கொண்டிருக்கும் சத்தமும் கேட்டது. எல்லாவற்றையும் கவனித்தவாறு,
கிருபா: இனிமேல் தான். தோழர்கள் கொஞ்சம் வேலைய இருக்காங்க முடிஞ்சதும் வெளியபோய் சாப்பிடுவோம்.
செல்வி:(சற்றுநேர அமைதிக்கு பிறகு, தயக்கத்துடன்) நான் உன்கிட்ட ஒன்னு கேக்கவா? என் மேல் எதாவது கோவமா உனக்கு
கிருபா: ஏன் திடீர்னு இப்படி ஒரு கேள்வி?
செல்வி: நான் உன்ன எந்த காரணத்துக்காக விட்டுட்டு போனேனோ இப்ப அதே காரணத்துக்காக உன்ன தேடி வந்திருக்கேன்னு.
கிருபா: எனக்கு யார் மேலயும் கோபம் இல்ல, நா படிச்ச கம்யூனிசம், உழைக்கும் அடித்தட்டு மக்கள்மீது அன்பு செலுத்தத்தான் சொல்லிருக்கேதவிர யாரையும் வெறுக்க சொல்லல. ஜெயிலுக்கு போறவங்க எல்லாம் கெட்டவங்க இல்லன்னு உங்க அப்பாக்கு புரிஞ்சா போதும். அதுவுமில்லாம எனக்கு இப்ப இருக்கிற எண்ணமெல்லாம் நாளைக்கு நடக்கக்கூடிய போராட்டம் நல்லபடியா முடிஞ்சு காந்திநகர் மக்களுக்கு நீதி கிடைக்கணும் அவ்ளோதான்.
செல்வி: இவ்வளவு நல்லவனா இருக்க, ஆனா உங்களபோய் எல்லாருமே தப்பா பேசிட்டு இருக்காங்க. என்னென்ன பேசுறாங்க தெரியுமாடா. அது எப்படி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம ஒரு கம்ம்யூனிஸ்ட் இயக்கம் திடீர்னு வந்து நமக்கு உதவி செய்ய முடியும், கண்டிப்பாக உள்நோக்கம் ஏதாவது இருக்கும். எதிர் கட்சிக்காரன் நிறைய காசு கொடுத்து மக்களைப் போராடத் தூண்டிவிட சொல்லிருப்பான். கோர்ட்டு கேஸுன்னு வந்துட்டா நம்மள மாட்டி விட்டுட்டு அவங்க போய்டுவாங்கன்னு என்னென்னமோ பேசுறாங்க டா.
கிருபா: நேரம் ஆயிடுச்சு நீ கிளம்பு நாளைக்கு பேசிக்கலாம்.
செல்வி: நான் சொல்றது உனக்கு புரியலல?
கிருபா: போராட்டம்னு வந்துட்டா போலீஸ் மக்களை குழப்புரத்துக்கு இந்தமாதியான வேலைகளெல்லாம் செய்றது சகஜம்தான், மக்களை ஏமாற்றி திசைதிருப்பி அவர்களுக்கு எதிராகவே அவங்கள நிக்க வைப்பாங்க. பாவம் அப்பாவி மக்கள், எது உண்மை எது பொய்னு தெரியாமல் சில நேரத்துல தப்பான முடிவு எடுத்துடுவாங்க. போராளிகளைக் காட்டிக் கொடுக்குறவங்களும், போராட்டத்தை சீர்குலைக்க நினைக்கிறவங்கன்னு எல்லாமே மக்கள்ல இருந்து தான் வருவாங்க, அதுக்காக ஒரு நாளும் நாங்க மக்கள குறைசொல்ல மாட்டோம்.
(வெளியிலிருந்து, செல்வி என்று அழைக்கும் குரல் கேட்டது)
கிருபா:சரி, நீ கிளம்பு. அப்பா வந்ததும் அவர அடிச்ச போலீஸ் யார் என்னனு விசாரிச்சு வை பாத்துக்கலாம்.
மௌனத்தினால் அவள் விடைபெற்றாள்.
தோழர்கள் அனைவரும் தங்களுக்கான வேலைகளை முடித்துவிட்டு உணவருந்த சென்றார்கள்.
இரவு 11மணி, தோழர்கள் அனைவரும் சாலையோர தள்ளுவண்டி கடையில் இரவு உணவு உட்கொண்டிருந்தார்கள்.
தோழர்கள் ஓய்வெடுக்க சென்றுள்ளதாக எல்லோரும் நினைத்திருக்க மாஸ்டர் பிளான் சாலையோர தள்ளுவண்டி கடைகள் முன்பு விவாதிக்கப்பட்டது.
அப்துல் தோழர்: மதுரை, நாமக்கல், விழுப்புரத்தில் உள்ள நம்ம தோழர்கள் பேருந்து ஏறிட்டாங்க. எல்லோருக்கும் தகவல் சொல்லியாச்சு. நாளைக்கு முதல் 12 பேரில் நமது தோழர்கள் தான் கைது ஆவதற்கு முன்வருவாங்க. காந்திநகர் மக்கள்ல யார்பெயரும் வழக்குல வராது.
கிருபா தோழர்: சிறப்பு. மக்கள் ஒண்ணா வரட்டும் ஆனா நம்ம தோழர்கள் எல்லாருமே தனித்தனியா போய் போராட்டம் நடக்குற இடத்துல ஒன்னுசேருவோம்.
விடிந்தது. தோழர்கள் அனைவரும் திட்டமிட்டபடி சாலையில் ஒன்று சேர்ந்தனர். ஒரு நொடியில் சாலையின் ஓரம் கட்டி வைத்திருந்த அனைத்து கட்சி கொடிகளும் நொறுக்கப்பட்டு கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. அனைவரும் சாலையில் வந்து இறங்கினார்கள், முழக்கங்கள் எட்டுத் திசைக்கும் கேட்கும்படி முழங்கினர். முதலமைச்சரின் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. 40 நிமிட போராட்டத்திற்கு பிறகு காவல்துறை அனைவரையும் கைது செய்து அருகே இருக்கும் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். சமூக வலைதளங்களில் போராட்டங்கள் பற்றிய தகவல்கள் தீயென பரவின. சமூக வலைத்தளம், தொலைக்காட்சிகள் என அனைத்திலும் போராட்டத்தைப் பற்றிய செய்திகள் வெகுவென விவாதிக்கப்பட்டது.
10:00மணி ஆனது, ஒவ்வொருவராக வந்து பெயர் கூறுங்கள் என்று காவல் துறையிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. திட்டப்பிட்டதுபோல் முதல் அந்த 12 நபர்கள் தோழர்கள் சென்றார்கள். முதல் 10 நபரை மட்டும் போதும் என்று காவல்துறையினரால் முடிவு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் காந்திநகர் மக்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்த வண்ணமிருந்தனர்.
சற்று நேரத்தில் முக்கிய செய்தி " காந்திநகரில் செயல்பட விருந்த பொழுதுபோக்கு பூங்கா திட்டம் அரசு கைவிடுகிறது என முதலமைச்சர் வாய்மொழியாக பேட்டி அளித்தார்" வீடுகள் இடிக்கப்பட்ட அவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு தருவதாக வாக்களித்தார். போராட்டம் வெற்றி அடைந்தது. முதல் கட்டமாக பெண்களையும் குழந்தைகளையும் காவல்துறையினர் விடுதலை செய்தனர். 10தோழர்கள் மீது ipc341,353,143,188,506 போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மீதமுள்ளோர் விடுதலை செய்யப்பட்டனர். விசாரணைகள் முடிந்து தோழர்கள் சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர், இரவு 7 மணிக்கு சிறைச்சாலைக்கு வெளியே அவர்களுக்கான மத்திய உணவை காவலர்கள் வழங்கினார்கள்.
அப்துல் தோழர்: காவலர்கள் எல்லோரும் சாப்டாங்களா?
தலைமை காவலர்: ஜெயிலர் கிட்ட ஹாண்ட்ஓவர் பண்ணிட்டோம்னா, நாங்க வீட்டுக்கு போய்ட்டு சாப்பிடுவோம்.
தோழர்கள் உணவு அருந்தி முடித்ததும் சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
ஜெயிலர்: எல்லோரும் குத்தவச்சி கீழ உக்காருங்க உருப்படி என்னனும்.
தோழர்கள்: (சற்று புன்னகையுடன்) முடியாது.
தோழர்களின் கைகளில் இருந்த புத்தகங்களை கவனித்த ஜெயிலர் வந்தவர்கள் யார் என புரிந்துகொண்டார்.
பெயர், அப்பா பெயர், வயது, தழும்பு, மச்சம் என எல்லாக்கட்ட சோதனைகளும் முடிந்தது.
ஜெயிலர்: இது என்ன புக்கு, துப்பாக்கி படம் போட்டுருக்கு? நெல்சன் மண்டேலா வா. இதெல்லாம் அனுமதிக்க முடியாது. மத்த புத்தகங்களவேனா எடுத்துட்டு போங்க.
கிருபா தோழர் சட்டென புத்தகத்தின் அட்டையை கிழித்துவிட்டு புத்தகத்தை எடுத்து சென்றார்.
சுதந்திரம் அடைந்த பிறகும் போராளிகளையும் புத்தகங்களையும் சிறைச்சாலை வரவேற்றுக்கொண்டே இருந்தது.
அந்த நெடிய இரவில் சிறைக்குள் நிலவின் வெளிச்சத்தில் நெல்சன் மண்டேலாவின் புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார் கிருபா தோழர்.
"It always seems impossible until it is done" என்ற வார்த்தையை மீண்டும் அடிக்கோடிட்டார் கிருபா தோழர்.
சிலநாட்கள் சிறைக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் தோழர்கள் வெளியே வந்தனர்.
தோழர்களுக்கு நன்றி தெரிவிக்க மாலை வேளைகளில் காந்திநகர் மக்கள் அலுவலகத்தை வந்து அடைந்தார்கள். நூலகத்திற்கு வெளியே ஸ்டெல்லா தோழரை சந்தித்த காந்திநகர் மக்கள்.
மா, நான் ஆளுங்கட்சியில் இருக்கேன், ஆனா ஆளுங்கட்சி மெம்பரா இருந்து என்ன பிரயோஜனம். எங்களால ஒண்ணுமே செய்ய முடியல. திடீர்னு காலி பண்ண சொன்னா எப்படி, ஒரு ஆறு மாசம் அவகாசம் கொடுங்கனு கேட்டோம். முடியாதுனு சொல்லிட்டாங்க. சரிங்க ஐயா இன்னும் ஒரு மாசத்துல பசங்களுக்கு 10, 12வது பரிட்சை வருது அந்த பரிசை வரைக்குமாவது கொஞ்சம் அவகாசம் கொடுங்கன்னுகூட கேட்டோம். ஆனா அதையும் அவங்க தர தயாரா இல்ல.
இப்போ எங்க எல்லோரையும் நிரந்தரமா இங்கேயே தங்க சொல்லி எங்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்ரோம்னு அரசாங்கம் சொல்லிருக்காங்க. இது எல்லாம் உங்களால மட்டும் தான் நடந்துச்சு. இந்த உதவிய நாங்க என்னைக்கும் மறக்க மாட்டோம்.
ஸ்டெல்லா தோழர்: இது உங்களோட போராட்டம் இது உங்களுக்கு கிடைச்ச வெற்றி நாங்க உங்களுக்கு உறுதுணையா மட்டும்தான் இருந்தோம் மத்தபடி இது உங்களுக்கான வெற்றி. ஆனா நம்ம இதோட நின்னுடக்கூடாது. பட்டா கிடைக்கிற வரைக்கும் தொடர்ந்து நம்ம அதற்கான வேலைகள முன்னெடுத்து தொடர்ந்து செய்யப்பட்டுட்டே இருக்கனும். நாளைக்கு முதல் கட்டமா மேயரை சந்தித்து உங்கள் கோரிக்கை மனுக்களை கொடுங்க. நிச்சயம் நமக்கு பட்டா கிடைக்கும் அதை யாராலும் தடுக்க முடியாது.
ரொம்ப நன்றி மா, கிருபா சாரை பார்க்கணும் இருக்காரா?
ஸ்டெல்லா தோழர்: உள்ள ஒரு சின்ன மீட்டிங் பேசிகிட்டு இருக்காரு நீங்க உக்காருங்க அரை மணி நேரத்துல வந்துடுவாரு.
நூலகத்திற்கு வெளியே இருந்த நாற்காலியில் அமர்ந்து இருந்தனர் காந்திநகர் மக்கள். உள்ளே தோழர்களும் சில தொழிலாளர்களும் பேசிக் கொண்டிருந்த சத்தம் கேட்டது.
20 வருஷமா மாநகராட்சில துப்புரவு பணியாளர்களா வேலை செஞ்சுட்டு இருக்கோம். கன்டராக்ட் முறை வேண்டாம் எங்கள பணிநிரந்தரம் பண்ணுங்கன்னு அரசாங்கத்திற்கு பலமுறை கோரிக்கைகள் வச்சோம். ஆனா இதுவரைக்கும் எங்களுக்கு வேலை கிடைத்தபாடில்ல. எங்க யாருக்குமே இன்சூரன்ஸ், பிஎஃப், ஈஎஸ்ஐனு எதுவுமே கிடையாது.
தோழர்களின் பயணம் தொடரும்...
#313
42,857
1,190
: 41,667
24
5 (24 )
anandhselvam56
sunandhameena
"its always seems impossible until it is done" I think you made it happen. Nice story. Way to go
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50