JUNE 10th - JULY 10th
இரவு சற்றே ஊரை விழுங்கிய நிலை. ஒரு மூன்று சென்டிமீட்டர் அளவெடுத்து, அதற்குள் வெள்ளையும் கொஞ்சம் மஞ்சளும் அடித்தது போல பௌர்ணமி நிலா காட்சி தந்து கொண்டிருந்தது. அந்தக் குளிரான இருட்டில், காற்று தேகத்தைத் தழுவும் அளவிற்கு, கதர் சட்டை, கரை வேட்டி அணிந்து, பேருந்து நிலையத்தில் காத்திருந்தார் முருகைய்யன். ("முருகா" என்று ஊரார் அழைப்பதால், கதையிலும் அவ்வாறே நம்மோடு பயணிப்பார்)
9 மணி பஸ்.. 9.30 ஆகியும் வந்தபாடில்லை. வழியைப் பார்ப்பதும் கடிகாரத்தைப் பார்ப்பதுமாக இருந்தார் முருகன். அவர் மனதில் எழுந்த ஆவல்விளக்கை சற்று குறைக்கவே, பளிச்சென்று மஞ்சள் நிறக்கண்களைக் கொண்ட பேருந்து, ஆடி, அசைந்து முருகனின் பக்கத்தில் வந்து நின்றது. முருகன் அதில் ஏறிக்கொண்டார். "ஒரு மெட்ராஸ்...." என்று கேட்கையில், "என்னப்பா முருகா.. வீட்ல எல்லாரும் சவுக்கியமா.? திடீர்னு என்ன பட்டணத்துக்கு?" என்று நடத்துனர் கேட்டார். "வீட்ல எல்லாரும் சவுக்கியம் தானுங்க.. கொஞ்சநாளா பையன் நியாபகமாவே இருக்கு. அதான் ஒரு எட்டுப்போய் பார்த்துட்டு வந்துடலாம்னு கிளம்பிட்டேன்" என்றார்.
"உனக்கென்ன யா கவல? பையன் நல்லாதான் யா இருப்பான். மருமவ எப்டி?"
"அதுலாம் தங்கம்பா..! வாரந்தவறாம ஃபோன் போட்ரும். ஆனா.. கொஞ்ச நாளா என்ன பிரச்சனன்னு தெரில.." என்றார் முருகன்.
"ஓ.. சரிசரி..! ஆனா.. எனக்கு ஒரே ஒரு வருத்தம் யா உன் மவங் கிட்ட..! உன் பொண்டாட்டி இருந்த வரிக்கும் மவராசி எல்லாம் பாத்துக்கிட்டா. உம்ம மவன் நிலபுலத்து மேல ஆச வைக்காம, கம்ப்யூட்டர் மேலல்ல ஆச வெச்சிட்டான். இப்போ பொண்டாட்டி போய்ட்டா. நீ மனசு மாறி, பட்டணத்துக்குப் போற நினப்புல இல்ல.... ம்ம்.. ஒண்டி கட்டையா எவ்ளோ நாள் யா கஷ்டப்படுவ?" என்று முருகன் மேல் இருக்கும் அக்கறையைப் விசாரிப்பில் காட்டினார் நடத்துனர்.
பேருந்து ஒரு வேகத்தடையில் சட்டென்று நின்றதும், முருகன் இருக்கையிலிருந்து அரைஜான் சருக்கினார். "ப்பாடா..! ஐயா.. டிரைவர் ஐயா..! கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க. இப்பதான் மண்டையில இலையுதிர் காலம் ஆரம்பமாகிருக்கு. அதுக்குள்ள பரமேஸ்வரன கூப்டு விட்றாதீங்க.." என்று டிரைவரை நோக்கி மெதுவாக சிரித்துவிட்டு, நடத்துநரிடம் திரும்பினார்.
"அட விடுங்க.. கண்டக்டர் சார்..! எனக்கும் அந்த விஷயத்துல வருத்தம் தான். அதனால என்ன? எங்கப்பா கூடத்தான், நான் கம்ப்யூட்டர் தொழில் படிக்கணும்னு ஆசபட்டாரு. கழுத எனக்குத் தான் படிப்பு ஏறல; அவரு ஆச, இப்ப எம்மவன் மூலமா நிறவேறிடுச்சி..! அது அவனோட ஆசையும் கூட..! ஒன்னு புரிஞ்சிக்கணும்ங்க ஐயா.. நாம பெத்துட்டா நம்ம புள்ளைங்க நாம சொல்றதுலா கேக்கணும்னு இல்ல; அறிவு புரியுற வரிக்கும் நாம வளக்கணும்; எடுத்து சொல்லணும்; அதுக்கப்றம்.... கண்டிப்பா பிடிச்சி வைக்க கூடாது. இந்த உலகத்தில் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு. ஒவ்வொரு செடிக்கும் எப்படி ஒரு விதை இருக்கோ, அந்த மாதிரி ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு லட்சியம் இருக்கும். அந்தப் பாதையைக் காண்பிக்கிறது தான், பெற்றோர்கள் நம்ம வேலை..! மிச்சத பசங்க பாத்துப்பாங்க..!" என்று தெளிவாக வருத்தம் ஏதுமின்றி, நம்பிக்கையோடு சொன்னார்.
நடத்துநர் அசந்துபோய்விட்டார். "என்னயா முருகா...! படிக்காமயே இவளோ பேசுறீயே..! யோசிச்சி பாத்தா நீ சொல்றது நெசம் தான் யா.! ஆமா.. இன்னும் பசங்களுக்கு வகுப்பு எடுக்குறியா என்ன?"
"ஆமா.. அது இல்லாம எப்டி? தினமும் சாயங்காலம் எடுக்குறேன். இனிக்கு சாய்ந்திரம் கூட வகுப்பு எடுத்துட்டு தா வரேன். இப்பல்லாம் கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா, யானை கவுனி, மூங்கில் அரிசி, குடவாழை இதெல்லாம் யாருப்பா விளைய வைக்குறாங்க? ரொம்ப கம்மி..! இது போல அரிசி வகைங்க இருக்குதுன்னு நம்ம பசங்க புள்ளங்களுக்குத் தெரியாம போய்டக்கூடாது பாருங்க. நாடு இப்ப இருக்குற நிலைக்கு, அரிசியே கூட ரொம்ப கொறஞ்சிட்டு.." என்று லேசான வாட்டம் காட்டினார்.
அதற்கு நடத்துநரிடமும் அதே வகையில் ஆமோதிப்பு. "அட ஆமாயா.. ஆனா உன்ன பாராட்டனும்யா..! பொதுவா... படிக்காத சனத்துக்கு இவ்ளோ புத்தி எட்டுறதே பெருசு. அத செய்யனும்னு நினைச்சா, மனசுக்குள்ள ஆயிரம் தயக்கம். யாராவது நம்மள பேசிடுவானோன்னு பயம்; இன்னொன்னு நல்ல எண்ணம் வரதே பெருசு யா..! நீ அத செயலுக்குக் கொண்டுவந்து, தெகிரியமா செய்ற..! சபாஷ்.. தொடர்ந்து வேளாண்மை பத்தி வகுப்பு எடு..! பழைய அரிசி பத்தி சொல்லிக்கொடு" என்று உற்சாகமாகப் பேசினார்.
இருவரின் பேச்சுப்பயணம் மதராஸ் வரை தொடர்ந்தது. மனித சலசலப்பு ஏதுமற்ற ராப்பொழுதில், மரங்களும் இவர்கள் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டு வந்தன....
எட்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு பேருந்து சென்னையை அடைந்தது. "பாம்.. பாம்.." என்ற சத்தம் உறக்கத்திலிருந்த ஓரிரண்டு பயணிகளையும் எழுப்பியது. காக்கை, குருவிகளின் சத்தத்தோடு ஒரு சில கொட்டாவி சத்தமும் முருகனின் காதுகளில் விழ, தானும் சோம்பல் முறித்துக் கொண்டு, வெகு உற்சாகமாக நடத்துநரிடம் விடைபெற்று, சாலைக்கு எதிரிலுள்ள தேநீர் கடைக்குச்செல்ல எத்தனித்தார் முருகன்.
பேருந்து, அடுத்த பயணிகளை வரவேற்க, தனது நிறுத்தத்தில் உறுமிக்கொண்டு தயாராய் நின்றது.
அந்தப் பக்கம் முருகன் சாலையைக் கடக்க இருந்த போது, மகிழுந்து ஒன்று வேகமாக அவரின் மேல் மோதுவது போல வந்து, சரேலென்று பிரேக் அடித்து நின்றது. முருகன் அதிர்ந்து போய்விட்டார். மகிழுந்திலிருந்த மனிதன் உடனே மளமளவென கீழிறங்கி, "ஐயா.. ஐயா.. ஒன்னுலிங்க.. மன்னிச்சிக்குங்க..! பார்த்து வரக்கூடாதுங்களா.." என்று கேட்டுவிட்டு ஒரு நிமிடம் கண் சிமிட்டாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான். முருகன் சற்று சுதாரித்து, "கொஞ்ச சோர்வா இருந்தேன் பா. அதான் வண்டிய கவனிக்கல.. மன்னிச்சிடுயா.." என்றார்.
"சரி சரி.. வாங்க..! எதிர்ல டீ கடைக்கு தானே போறீங்க..? நானும் அங்க தான் போறேன். வாங்க.." என வண்டியில் ஏற்றிக்கொண்டான். (தெரிந்தும்) "எந்த ஊருங்கய்யா நீங்க?" என்று கேட்டான் மகிழுந்து மனிதன்.
"நெல்லை ப்பா" என்று சொல்லிவிட்டு, குறுகுறுவென்று அந்த மனிதன் போட்டிருக்கும் உடையைக் பார்த்துக் கொண்டிருந்தார்.
"என்னங்க யா? அப்டி பாக்குறீங்க? கழுத இந்த உடுப்ப பத்திங்களா?"
"ஆமா.. மொத அந்த சந்தேகம் மட்டும் தான். இப்ப ஊரு பாஷையும் ஒன்னா இருக்குதே அதான்..."
மகிழுந்து மனிதன், சற்று சுதாரித்துக் கொண்டு, "ஆமாங்க யா.. எனக்கு அதே ஊரு தானுங்க..! நட ஒட எது மாறுனாலும் நம்ம ஊரு ஆளுங்க பேசவும் அதுவே தானா வருதுங்க..! பொறவு இந்த உடுப்பு கொரோனா கட்டுப்படுத்துதலுக்காக எங்க கம்பெனில கொடுத்திருக்காங்க. நோய்ப் பரவல் கம்மியா இருக்கும்னு..."
"ஓ.. சரி தான்...! சரி தான்..! நோய் வருதோ இல்லியோ.. நீங்க பேசுற பேச்சு சத்தமே கூட வெளிய கம்மியா தான் வருது தம்பி.." என்று கலகலவென்று சிரித்தார் முருகன்.
மகிழுந்து மனிதன், அந்த வெள்ளந்தியான சிரிப்பை ரசித்தவாறே, "சரிங்கய்யா. என்ன விஷயமா பட்டணத்துக்கு வந்திருக்கீங்க?" என்று கேட்டதும் மெதுவாய்த்தான் முருகன் காதில் விழுந்தது. சிறிது தயக்கத்தோடு, "அது..." என்று கூறுகையில், மகிழுந்து மனிதனின் செல்பேசி அலறியது. "ஒரு நிமிசோ.." என்று வண்டியை ஓரங்கட்டி விட்டு, சிறிது நேரம் பேசி முடித்ததும் அவனது செல்போனின் பூட்டுத்திரையில் (LOCKSCREEN) இருந்த நிழற்படத்தைப் பார்த்த முருகனுக்கு லேசாய் ஒரு கலக்கம்....! "எங்கேயோ பாத்த மொகம்.. நல்லா பாத்தா தெரிஞ்சிடும்..." என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, மகிழுந்து மனிதன் ஒரு கையில் ஃபோனை வைத்தவனாய், "சொல்லுங்க யா.. எங்க போனும்..? என்ன விசயமா வந்திருக்கீங்க?" என்று கேட்டான்.
முருகன் கலக்கத்திலிருந்து மீண்டுவராய், "தம்பி... எம்மகன் இங்க தான் இருக்கான். ஒரே பையன்... அவன துணையாய் கொடுத்துட்டு, துணைவி போய் சேந்துட்டா...! நல்ல கெட்டிக்காரப்பிள்ளை. மூணு வருசத்துக்கு முன்ன, பட்டணத்தில வேலை கிடைச்சு இங்க வந்துட்டான். ஆனா.. மாசந்தவறாம என்ன பாக்க மனைவி மகனோட வந்துருவான். என்னனு தெரில..... இந்த ஊரடங்கு போட்டதுலேர்ந்து அவன ஆளையே காணோம். அவனுக்கு என்ன அவசரமோ ஒரு சேதியுமில்ல..! அதான்.. ஒரு எட்டுப் பார்த்துட்டா திருப்தியா போய்டும்னு.." என்று விலாசத்தை, கைநடுங்க நீட்டினார்.
அமைதியாய்க் கேட்டுக்கொண்டிருந்த மகிழுந்து மனிதனுக்கு லேசாய் தொண்டையை அடைத்தது. அதைக் கட்டுப்படுத்தியவனாய், "இந்த விலாசம் எனக்கு தெரியும்ங்க.. ஒரே ஊரா போய்ட்டோம். நா காலைல டிஃபனுக்கு வீட்டுக்குப் போறேன். என்னோட வாங்களேன்.." என்று பணிவோடு கேட்டுக்கொள்ள, முருகனும் "சரி.. தம்பி..! நேரம் தாமதிக்காம கொஞ்சம் என்ன எம்பையன் வீட்ல விட்ருப்பா" என்ற நிபந்தனையோடு சம்மதித்தார்.
செல்லும் போதும் முருகனின் மனதில் சிறு குழப்பங்கள் இருந்தது தான். இருப்பினும், மகிழுந்தில் ஓடிய மெல்லிசை பாடல் அனைத்தையும் மறக்கச்செய்தது....
அரைமணிநேர பயணத்திற்குப் பிறகு, மகிழுந்து மனிதனின் வீட்டை அடைந்தனர்.
"உள்ள வாங்கப்பா.." (கவனிக்க) என்று அவனின் அன்பான குரலும் வாசலில் இட்டிருந்த கோலமும் முருகனை வரவேற்றன. முருகனின் எதிர்ப்பார்ப்பும் மனநிலையும் ஏதோ சொல்லிக்கொண்டே இருந்ததற்கு ஏற்றார் போல், அந்த மகிழுந்து மனிதன் உள்ளே சென்று நிலைக்கண்ணாடியைப் பார்த்து, தனது கவச உடையை விலக்கினான். "வள்ளி.. வள்ளி...." என்று அவன் அதரங்கள் விரிந்ததும் முருகனின் உடம்பெல்லாம் சிலிர்த்தது. அதே சிலிர்ப்போடு கண்ணாடியைப் பார்த்தார். அங்கே அவர் கண்டது.....
ஒரு முறை செல்பேசியின் பூட்டுத்திரையில் இருந்த நிழற்படம் ஏற்படுத்திய கலக்கம், வீட்டில் கால் பதித்ததும் ஏற்பட்ட மனநிறைவு அனைத்திற்கும் விடையாக நிலைக்கண்ணாடியில் தெரிந்த முகம் அமைந்தது. ஆம்!! அவன் வேறாருமில்லை. அவருடைய அன்பு மகன் முகுந்தன் தான்! நிழற்படத்தில் இருந்தது அவரின் மருமகள் வள்ளி. முகுந்தன், பேச முடியாதவனாய் "அப்பா.." என்று சொல்லிக்கொண்டு அவர் முகத்தையே பார்த்தவாறு நின்றான். அந்தப் பார்வையில் மன்னிப்பின் சாயல் மண்டியிட்டது.
"மகனைப் பார்த்த மகிழ்ச்சி" முருகனுக்கும் தொற்றிக்கொள்ள, இருவரும் ஒருவரையொருவர் பாசத்தில் கட்டிக்கொண்டனர். வள்ளி வெளியே வந்து, இந்தக் காட்சியைப் பார்த்ததும் மிகுந்த சந்தோசம் அடைந்தாள். "வாங்க...! வாங்க மாமா..! ஊரடங்குனால உறவுகள பாக்கமுடியாம போயிடுமோனு மனசு வருத்தப்பட்டேன். நல்லவேளை நீங்க வந்தீங்க..! இவரு தான் எதுவும் சொல்லவேணாம்னு...." என்று மளமளவென்று பேசினாள். கையில் ஒரு குடுவையோடு வந்தவள், அதை முகுந்தன், முருகன் இருவர் கையிலும் சிறிது ஊற்றினாள். முகுந்தனுக்கு இது பழகிவிட்டது. முருகன் சற்று உணர்ந்தவராய், "இது வேப்பிலையும் பச்ச கற்பூரமுமா? நல்லது நல்லது..! கொஞ்சம் மஞ்சளும் சேத்துக்கலாம் கண்ணு...!" என்றார்.
அவளும் "சரிங்க மாமா..! அடுத்த தடவ போட்டுட்டா போறது..! இது இயற்கை சேனிடைசர் ங்குறதுனால எந்த பயமும் இல்லிங் மாமா.." என்று ஒருவித பற்றோடு கூறினாள். உண்மையில், அந்த எண்ணம் முருகனுக்கு மிகவும் பிடித்திருந்தது. நிதானமான உபசரிப்பிற்குப் பிறகு, முகுந்தன், தான் யார் என்று காட்டிக்கொள்ளாமல் இருந்ததற்கு மன்னிப்பு கோரினான். அதற்கு முருகன், "வேணாம்யா… நான் கஷ்டப்படுவேணு தானே இப்படிச்சொல்லி கூட்டிட்டு வந்த..! நீ பக்குவப்பட்டுட்டேயா.. அது போதும் எனக்கு...!" என்று உளமார கூறி, "சரி.. அந்த விலாசம் என்னாச்சு..?" என்று கேட்டார்.
முகுந்தன் சற்று மெதுவாக சொல்லத் தொடங்கினான். "இங்க வேலை கிடைச்சதுன்னு வந்தேன்ல பா.. திடீர்னு நிறுவனத்தில நட்டம்னு நிறையபேரை வேலைய விட்டு தூக்கிட்டாங்க; அதுல நானும் ஒருத்தன்; என்ன பண்றதுன்னு தெரியாம இருத்தப்ப புயல் வந்து, அது பங்குக்குக் கொஞ்சம் எடுத்துட்டுப்போயிடுச்சு. மேற்படி செலவுக்கே கஷ்டமா ஆகுற சமயத்துல, நல்ல விலைக்கு வீட்ட ஒருத்தர் வாங்கிக்கிறேனு சொல்லவும் வித்துட்டேன்... இது வாடகை வீடு தான்.... இப்ப என்னோட படிப்புக்கேத்த கவர்மெண்ட் வேலைக்குப் படிச்சிட்டு இருக்கேன்.." என மனம் வருந்தினான். முருகன் லேசாக கண் கலங்கிவிட்டார். பட்டென்று தன் தோள் துண்டால் அதைத் துடைத்துக்கொண்டு, "விடுயா.. முகுந்தா..! வேற நல்லவேலை சீக்கிரம் கிடைச்சிடும்; இத விட நல்ல வீட்டுக்கு நீ ஒனரா இருப்ப.. கவலப்படாத யா..! அடுத்த முற எதுனாலும் என்கிட்ட ஒரு வார்த்த சொல்லு..! என்னால முடிஞ்சத செய்வேன்யா.." என்று ஆறுதல் கூறினார்.
இந்த உரையாடலுக்கிடையே பேரன் இயலவன் ஒரு அறையிலிருந்து ஓடி வந்தான். முருகனைப் பார்த்ததும், "தாத்தா......" என்று ஆவலுடன் கட்டியணைத்துக் கொண்டான். அந்தக் காட்சியைப் பார்க்கும் போது, ஒரு புத்தகத்தின் முதல் பக்கமும் கடைசி பக்கமும் ஒன்றிணைந்து இருப்பது போல இருந்தது...!
தாத்தாவோடு சிறிது நேரம் பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த இயலவன், சற்று நேரம் விளையாட்டெல்லாம் ஓய்ந்த பிறகு, "அம்மா.. நீங்க எனக்குப்பிடிச்ச கீரக்குழம்புக்கு எல்லாம் ரெடி பண்ணிவைங்க.. நான் தாத்தாவ எனக்குப் பிடிச்ச இடத்துக்கு கூட்டிட்டுப் போறேன்" என்றான் சூட்டியாக. வள்ளி நகைத்துக் கொண்டே, "சரிடா..! அது என்னமோ எம்மவனுக்கு எப்பவும் கீரக்குழம்பு தான். பாருங்க மாமா..! காலைல கீர கேக்குறான்..! சரிங் மாமா நீங்க அவனோட போங்க.. நா ரெடி பண்ணி வைக்குறேன்.." என்று சமையலறை பக்கம் சென்றாள்.
தாத்தா கொஞ்சம் ஆவலாய், இயலவனிடம், "எங்கடா கண்ணா..?" என்றார். "வாங்க வாங்க... தாத்தா...!" என்று மெதுவாக கைப்பிடித்து மேல்மாடிக்கு அழைத்துப்போனான் அவன்.
மேலே சென்று கதவை அடைந்ததும் தாத்தா இயலவனைத் தூக்கிக்கொண்டார். இயலவன் தனது மழலை விரல்களால் அவர் கண்களை மூடிக்கொண்டு, "தாத்தா!! கண்ணை திறக்காம கதவை மட்டும் திறங்க பாக்கலாம்.." என்று கூறினான். முருகனும் கொஞ்சம் தட்டுத்தடுமாறி, மெல்ல கதவைத் திறந்தார். கதவு தனது நீண்ட உதடுகளைச் சற்றே பிரித்து வைத்துக் கொள்ள சம்மதித்தது.
இயலவன், தன் பிஞ்சு விரல்களைத் தாத்தாவின் கண்களிலிருந்து எடுத்து விட்டு கண்கவருமாறு, "தோ பாருங்க.. தாத்தா...!" என்று கத்திக்கொண்டே கைகாட்டினான். ஆஹா..! ஆஹா..! ஆஹா..! அந்த இடத்தில், வண்ண வண்ணப்பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன; வெளிச்சம் வருகிற அளவுக்கு பச்சென்று கம்பிகள் போடப்பட்டு, சிறுசிறு தொட்டியில் காய்கறிகள், கீரைகள் என விளைந்து, ஒவ்வொரு தொட்டியிலும் ஒரு சிறு பச்சை குழந்தை எட்டிப்பார்ப்பது போல காட்சியளித்தன. பார்ப்பதற்கே அத்தனை பசுமை..! கண் குளிர்ந்து விட்டது முருகனுக்கு..!
"இதுதான் எனக்குப்பிடிச்ச இடம் தாத்தா....! எப்டியிருக்கு? என்று மழலைமொழியில் கேட்டுவிட்டு அவர் தோளிலிருந்து கீழிறங்கி அங்குமிங்கும் ஓடினான். அவன் பின்னே சென்ற முருகன், மீண்டும் ஒருமுறை அவனைக் கட்டியணைத்து உச்சிமோந்து கொண்டார். அவர் கண்களில் அவரையும் அறியாமல் நீர் ஆறாய் ஓடிற்று. இயலவன் அவர் கண்ணைத் துடைத்தவாறே, "தாத்தா... ஏன் கண்ணுல தண்ணி வருது? வாங்க நம்ம ஜாலியா இனிக்கு கீரைக்குழம்புக்குக் கீரை பறிக்கலாம்...! வாங்க..." என்று ஆர்வமாய்க் கூப்பிட்டான்.
"தோ வரேன்டா கண்ணா.." என்று செல்லும் அந்தச்சமயத்தில், முகுந்தன் மேலே வந்தான். "அப்பா.. என் வேலை போயிட்டத உங்ககிட்ட சொல்லாததுக்கு மன்னிச்சிடுங்கப்பா.. நானா தான் இந்த வேலை பிடிக்கும்னு வந்தேன். ஆனா, இங்க நிறைய அரசியல் நடக்குது ப்பா... ஆபீஸ்லயும் அப்பப்ப எனக்கு மேனேஜருக்கும் சண்ட வரும்; அதுனால இப்ப இந்த நிலைமைக்கு வந்துட்டேன். நா கண்டிப்பா மேல வந்துருவேன்பா.. நீங்க விதைச்ச விதை வளராம போயிடுச்சேன்னு என்ன நினைச்சி வருத்தம் இல்லல்ல பா..." என்று கண் கலங்கினான். "அட என்னயா? கண்ணுலாம் கலங்கிகிட்டு" என்று தோள் துண்டை எடுத்து துடைத்துவிட்டு, "நான் சந்தோசமா தான் யா இருக்கேன். உன்மேல எனக்கு எந்த வருத்தமுமில்ல. நீ நினைச்சது கண்டிப்பா உனக்கு கிடைக்கும்; சின்ன வயசுலர்ந்தே நீ அதிகம் ஆசபட்டதில்ல; உன்னோட ஆச ரொம்ப நியாயமானதா இருக்கும்; வெரசா உனக்கு வேலை கெடைக்கும் ப்பா..! அதேபோல, நா வெதச்ச விதையும் வீணாகல…!" என்று தாவரத்தோடு பேசியபடி கீரையைப்பறித்து விட்டு கீழே போகும் இயலவனைப் பார்த்தவாறே சொன்னார்......!
"வேளாண்மை" என்னும் சொல்லில், வேள் என்பது ஈகையைக் குறிக்கும். ஆக, விவசாயத்தில் விளையும் பொருட்கள் யாவுமே, நிலம் நமக்குத் தரும் கொடையாகும். ஐம்பூதங்களில், நிலம் கொண்டு உழுது, நீர் கொண்டு ஊட்டமளித்து, காற்றையே உணவாக்கி, நெருப்புச் சூரியனை அரணாக்கி, ஆகாயம் பார்த்து, தாவரங்களை வளரச்செய்யும் உழவர்கள் யாவரும் வள்ளல்களே..! கொடையில் சிறந்தவர்கள் என்று, இவர்களைத் தாராளமாகச் சொல்லலாம்..! ஐம்பூதங்களால் ஆன நாம், ஐம்பூதத்தோடு தொடர்புடைய இந்த விவசாயத்தை,வெறும் தொழிலாக மட்டும் காண்பது நியாயமாகுமா? ஊன், உயிரோடு கலந்திருக்கும் இது, ஓர் உணர்வு..! ஆம்.. நாம் ஒவ்வொருவரும் ஒரு விதை...!
☘️
#104
54,370
4,370
: 50,000
89
4.9 (89 )
karthikarumugam469
Vidhai seriyathu veedai periyathu ✨
girisubashne
shaznahfarwin
Great one. Keep it up
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50