பாண்டு

rakshankiruthik
பெண்மையக் கதைகள்
4.9 out of 5 (10 )

பாண்டு:-


“அவ வயிற்றுல வளர்ற குழந்தைக்கு நான்தான் அப்பன்.” என்று ஜெயின்காரன் சொன்னதை கேட்டு ஊரே அதிர்ச்சியில் உறைந்து போய் கெடந்தது.

“அந்த புள்ள வயசு என்ன? இவன் வயசு என்ன? இப்படியோரு காரியத்தை செய்ய இந்த கிழட்டு பயலுக்கு எப்படிய்யா மனசு வந்தது.”

“பச்ச புள்ளய என்னத்த சொல்லி எமாத்துனான்னு தெரியல. அது இந்த கிழட்டு பயகிட்ட வாழ்க்கைய தொலைச்சிட்டு நிற்குது.”

“பதிமூனு வயசு புள்ள, அதுக்கு என்னய்யா தெரியும். ஐஸ் குச்சிக்கு ஏமாறுற வயசு.”

“இந்த மாதிரி ஆட்களையெல்லாம் சும்மா விடக்கூடாது.”

“ஏய், அப்படியெல்லாம் ஒருத்தன் மேல அவசரப்பட்டு கை வைச்சிட முடியாதுப்பா. அவன் பொண்டாட்டி என்ன சொல்லுதுன்னு, தெரியுமா?”

எல்லோரும் தெரியாது என்பதற்கு அடையாளமாக கேட்டவனின் முகத்தையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தார்கள். அவனே தொடர்ந்து... “ம், அத தெரிஞ்சிகிட்டு பேசுங்க. ஆளாளுக்கு எதையாவது பேசிட்டும் முடிவெடுத்துட்டும் இருக்காதீங்க. இருபத்தைந்து வருஷம் அவனோட வாழ்ந்துட்டேன். எந்த குறையும் இல்லாம இருக்கற, என் வயித்துல ஒரு புழு பூச்சியகூட தர துப்பில்லாதவனாய்யா, இந்த பச்சப்புள்ள வயித்துல குழந்தைய கொடுத்துட போறான்னு கேட்குது. என்ன பதில் சொல்லறது.”

“அந்த பொம்பள கேட்கறதுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு இருக்கிறதுக்கு, நாமளா அவ புருஷன் மேல பலிய சுமத்துனோம். அவனேதான் வலிய வந்து ஒத்துகிட்டான்.”

“அவன் புள்ள கிறுக்கு புடிச்சி அழையுறான். அவனோட பொண்டாட்டி வயிற்றுல ஒரு புள்ள இல்லங்கறத காரணமா சொல்லி பொண்டாட்டிகிட்டயே அவனுக்கு ஒரு பொண்ண பார்த்து கட்டி வைக்க சொல்லி தினம் தினம் மல்லுக்கு நின்னான். இந்த லட்சணத்தில பொண்ணுக்கு முப்பது வயசுக்கு கீழே இருக்கணும். புள்ள பெற தகுதி உள்ளவளா இருக்கணும்னு ஆயிரத்தி எட்டு கண்டிசன் வேற. இவ்வளவுக்கும், தனக்கு அந்த தகுதி இருக்கான்னு தெரியாம பேசுறான். அந்த பொம்பளயும் இவன் தொல்லை தாங்க முடியாம நாலஞ்சி இடத்துல போயி பொண்ணு கேட்டு அலைஞ்சது. கிழவனுக்கு கழுத்த நீட்ட எவ சம்மதிப்பா? அந்த காலத்த போல பெத்தவங்க, தன்னோட புள்ளைய கட்டிக்க வாரவனுக்கு வயசு இல்லாட்டியும் பரவாயில்ல, வசதியிருந்தா போதும், குமரு கரையேறுனா போதும்னு நினைக்கற காலமா இது.”

“மலட்டு பயன்னு ஊரு ஏளனம் பண்ணுனதுக்கு, இழந்தத மீட்டு எடுக்கறதுக்கு தோதாவும், கௌரவம் தர்ற மாதிரி சின்ன பொண்ணா, கிடைக்கறப்ப கசக்குதா? அதுதான் வலிய போய் ஒத்துகிட்டான்.”

“அந்த பொம்பள சொல்றத பத்தியும் நாம கொஞ்சம் யோசிக்கணும். அது படிச்சது. அது மட்டும் இல்ல வாத்தியாராக இருந்து பத்து புள்ளைகளுக்கு புத்திமதி சொல்லி கொடுத்தது.”

இப்படி ஊரே அங்கங்கே கூடி கூடி ஆளாளுக்கு ஒரு விஷயத்த பேசிட்டு இருக்காங்களே தவிர, யாரும் இதுக்கொரு முடிவு சொன்னதாக தெரியல. போலிஸுக்கும் தகவல் சொல்லி நடவடிக்கை எடுப்பதற்கு வழியில்ல. தேவரு, கோனாரு, பிள்ளைமார், ரெட்டியார், ஆசாரி, நாவிதர், வேளாளர், பறையர், சக்கிலியர், வண்ணாருன்னு பலதரப்பட்ட ஜாதிக்காரர்கள் வாழ கூடிய ஊர்ல அடுத்த ஜாதிக்காரன் உள்ளே புகுந்து நியாயம் சொல்லிட கூடாதுங்கறதுல மட்டும் உறுதியாக இருந்தார்கள்.

ஊரில் எல்லோரும் அவனை ஜெயின்காரர் என்றுதான் அழைப்பார்கள். அதற்காக, அவர் ஒன்றும் நகைக்கடைக்காரர் இல்லை. கழுத்தில் எப்போதும் ஒரு பத்து சவரனில் நகை அணிந்திருப்பார். சட்டை போடாமல் தோளில் ஒரு தேங்காய்ப்பூ துண்டு ஒன்றை சட்டை போல் போர்த்திய படி இருப்பார். ஐந்தரை அடி உயரத்தில் சிறிய அளவிலான தொப்பை வயிற்றுடன் ஓர் அளவிற்கு பருமனான உடல் வாகுடன் இருந்தார். வயது ஐம்பதுக்கும் மேல் இருக்கும். இரண்டு வருடங்களாகதான் ஊரில் அவரை பார்க்கறோம். இதற்கு முன் அவர் மும்பையில் ரெயில்வேயில் வேலை பார்த்து கொண்டிருந்தார் அவர் மனைவியும் மும்பையில ஆசிரியராக பணி செய்து வந்தார். குழந்தைகள் இல்லாததால் இருவரும் விருப்ப ஓய்வு வாங்கிவிட்டு கிராமத்தில் வந்து குடியேறி விட்டார்கள். இருவருக்கும் மாத மாதம் ஓய்வூதியம் வருவதால் மாதாந்திர குடும்ப செலவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இருவரும் மும்பையில் இருந்தவரை அவர்களுக்கு குழந்தை இல்லை என்ற நினைப்பு வந்ததே கிடையாது. தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருந்தவர்களுக்கு, இந்த ஊருக்கு வந்த நாளுல இருந்து அது பெரிய குறையாக தெரிய ஆரம்பித்து விட்டது. அதுக்கு இந்த கிராம சூழலும் ஒரு காரணம்தான். என் புள்ளைக்கு கல்யாணம் பண்ண போறேன். என் புள்ளைக்கு வளைகாப்பு பண்ண போறேன். என் புள்ளைய ஆடிக்கு கூப்பிட போறேன். என் பேத்திக்கு காது குத்த போறோம். பேரனுக்கு முடி எடுக்க போறோம்னு வீடு தேடி போயி தினம் ஆட்கள் சொன்னத கேட்டு நமக்கும் ஒரு புள்ள இருந்திருந்தா, நாமளும் நம்ம புள்ளைகளுக்கு இப்படி ஏதாவது விழா எடுத்து ஊர கூப்பிட்டு சந்தோச பட்டிருக்களாங்கற எண்ணம் வந்ததோட விளைவு தான். ஜெயின்காரனை இரண்டாவது திருமணம் செய்யுற அளவுக்கு கொண்டு வந்துவிட்டது. அதற்காக நகர வாழ்க்கை குழந்தைகள் பற்றிய எண்ணத்தை ஏற்படுத்தாது என்றில்லை. நகரத்தில் இருந்தபோது குழந்தை பற்றிய எண்ணம் வரும்போது மனசு முழுவதும் வேலையில் லயித்து இருந்ததால் அவ்வளவாக தெரியவில்லை.

ஜெயின்காரன் அவனது மனைவியிடமே உன்னாலதான் எனக்கு ஒரு புள்ளைய பெத்து தர முடியல. கடைசி காலத்துல நம்மள உரிமையோடு தூக்கி அடக்கம் பண்ண ஆள் வேணாமா? அனாதை பொணமாகவா செத்து போறதுன்னு சொல்லி தனக்கு ஒரு பெண்ண பார்த்து திருமணம் செய்து வைக்க சொன்னார். மனைவியும் குழந்தை பெற்று தர தகுதியுள்ள சின்ன பொண்ணுங்களாக தேடிகிட்டுதான் இருந்தது. யாரும் அவரை திருமணம் செய்ய முன் வராதனால் திருமணம் தள்ளி கொண்டே சென்றது.
பாட புத்தகங்களை சுமக்க வேண்டிய வயதில் வறுமையை சுமந்ததோடு மட்டுமில்லாமல் வயிற்றுல குழந்தையையும் சுமந்துகிட்டு நிற்குது. தனது வயிற்றிலே வளர்றத உணரக்கூட திறன் இல்லாத புள்ள அது. தன் வயிற்றிலே வளர்ற புள்ளைக்கு அப்பா யாருன்னு அடையாளம் காட்ட தெரியாமல் பெற்றோரை தவிக்க வைத்தியிருந்தவள்தான் மதி.

அய்யாசாமி, கோமதி தம்பதியின் இரண்டாவது மகள் மதி. அய்யாசாமியின் மூத்த மகள் பவானி திருமண வயதை கடந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் கல்யாணம் பண்ணி வைக்க வசதியில்லாததால் குடும்பத்தை காப்பாற்ற கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தாள். இரண்டாவது மகள்தான் மதி வயது பதிமூன்று ஆகிறது. அதற்குள் மதி கெட்டு மூன்று மாத குழந்தையை சுமந்து கொண்டு நிற்கிறாள். கடைக்குட்டி பையனுக்கு ஆறு வயதுதான் ஆவுது. இந்த மூன்று பிள்ளைகளையும் அய்யாசாமியை நம்பி பெத்து போட்டுட்டு கோமதி சிவலோக பதவியடைந்து விட்டாள். வீட்டில் ஐந்து எருமை மாடுகள் இருந்தது. அதை மதிதான் மேய்ச்சல் காடுகளுக்கு ஓட்டிச் சென்று மேய்த்து கொண்டு வருவாள். மாடுகள் மேய்க்க சென்ற இடத்தில் ஒருத்தன் அல்ல, ஒன்றுக்கு மேற்பட்டோர்கள் பெண்ணிடம் சோமாரி விட்டனர். அவள் யாரைத்தான் இன்னாரு என்னை கெடுத்தான் என்று குறிப்பிட்டு சொல்லுவாள். பல்லாங்குழி, தாயம் விளையாட்டு போல அம்மா, அப்பா விளையாட்டையும் நினைக்க வைத்து கற்பழித்து விட்டார்கள் காம கொடூரர்கள். ஜெயின்காரனுக்கும் இரண்டு மாடுகள் இருந்தது. அவற்றை மதி மாடு மேய்க்க செல்லும் இடங்களுக்கு அவளோடுதான் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வான். அப்போது தவறு நடந்துவிட்டதாக அவன் ஊரில் சொன்னான்.

“அவன் ஒத்துகிட்டாலும் ஒரு சின்ன புள்ளைய எப்படிய்யா ஒரு பிடிமானம் இல்லாம கட்டி வைக்கறது. அதுக்கு இன்னும் கல்யாண வயசே ஆகல. அவனுக்கு கட்டி வைச்சா இன்னும் ஐந்து வருஷம் இருப்பானோ, பத்து வருஷம் இருப்பானோ தெரியல. அவன் காலத்துக்கு அப்பறம் யாரு அந்த புள்ளைக்கு ஆதரவு. அதனால அவன் பண்ணுன தப்புக்காக அவன்கிட்ட ஒரு பெரிய தொகையை அந்த புள்ளை பேருல பேங்க்ல போட சொல்லுவோம். ஆண்டவன் இந்த கிழவன் தலை எழுத்தோடதான் இந்த புள்ளையோட தலை எழுத்தையும் சேர்த்து ஏழுதிட்டான்னு நினைச்சி கட்டி வைப்போம். அவன் காலத்துக்கு பிறகு பொண்ணுக்கும் பொறக்க போற குழந்தைக்கும் அந்த பணம் பாதுகாப்பா இருக்கும். ஒரே சாதிக்குள்ள வேற என்ன செய்திட முடியும்.” என்றார் அந்த சாதிய கட்டமைப்பாளர்.

“என் புருஷன் தப்பு பண்ணிட்டேன்னு ஒத்துகிட்டாலும் அவன் தப்பு பண்ணலேங்கறத என்னால மருத்துவ ரீதியாக நிரூபிச்சிட முடியும். ஒரு பொம்பள புள்ளையோட நல்வாழ்வுக்கு பணம் கொடுக்கறதுல எனக்கு சந்தோசம்தான். இந்த தப்பு வீட்டுக்குள்ள நடந்துச்சா, இல்ல வெளியில நடந்துச்சான்னு ஆராச்சி பண்ண சொல்லல. எல்லா சாதிக்காரனும்தான் ஆடு மேய்க்க போறான், மாடு மேய்க்க போறான். இதுல யாரு மேல சந்தேகப்பட்டு நாம பரிசோதனைக்கு கூப்பிடுறது. என் புருஷனுக்கு இல்லாட்டியும் நம்ம சாதிக்காரனுக்கு உருவான குழந்தையா இருந்தா, அத என் வீட்டு வாரிசா ஏத்துக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல, பரிபூரண சம்மதம்தான். இன்னொரு சாதிக்காரனுக்கு கரு உண்டாகி இருந்தா, நாளைக்கு அந்த புள்ள பொறந்ததுக்கு அப்புறம் நம்ம குலதெய்வம் கோயிலுக்குள்ள கூட்டிட்டு போக முடியுமா? அப்படியே கூட்டிட்டு போனோம்னா, அது தெய்வ குற்றம் ஆகிடாதா? அப்படி ஒரு கட்டுப்பாடு இல்லாம இருக்கிறதுக்கு, ஏன் சாதிக்கு ஒரு சாமி வச்சி கும்பிடனும்?” என்றவள் தொடர்ந்து “கருவ களைச்சிட்டு இந்த பொண்ணுக்கு ஏதாவது மகளிர் அமைப்புகளோட உதவிய கேட்டு அந்த புள்ளயோட எதிர்கால நலனுக்கு ஏதாவது தொழில் கத்துக்க ஏற்பாடு பண்ணுவோம். அதவிட்டுட்டு எமாந்தவன் தலையில மொத்தத்தையும் கட்டுறது நியாயம் இல்லை.” என்று சொல்லி செயின்காரன் மனைவி அவர்களால் முடிந்த ஒரு தொகையை கொடுத்துவிட்டு “இதுதான் எங்களால முடியும். இதுக்கு மேல பஞ்சாயத்து எதிர்பார்த்ததுன்னா, போலீஸ்ல புகார் பண்ணிக்கங்க. நான் கோர்ட்டுல பார்த்துக்கறேன்.” என்றாள் ஜெயின்காரன் மனைவி.

ஜெயின்காரன் நினைத்தது நடக்காம போனாலும், அவதார தொகையை ஊர் பஞ்சாயத்தில் கட்டியதன் மூலம் தன்னையும் ஆண்மையுள்ள ஒரு ஆண் மகனாக ஊர் ஏற்றுக்கொண்டு விட்டது என்று நினைத்துக்கொண்டு தலை நிமிர்ந்தே ஊரை வலம் வந்து கொண்டிருந்தான்.

மதிக்கு குழந்தையை அழிக்க முயன்றதில் மருத்துவர்கள் காலம் கடந்துவிட்டது, இனிமேல கருவை கலைக்க முயன்றால் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்று மறுத்தனர். அறிவாளிகள், அனுபவஸ்தர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்களின் சொல்கேட்டு முறையான பயிற்சி இல்லாதவர்கள் மூலம் கரு கலைப்பு செய்து பார்த்ததில் மதி ஜன்னி கண்டு இறந்து போனாள். பொழுது புலர்வதற்குள் மதியை எரித்து அவள் வாழ்ந்த தடம் தெரியாமலேயே பண்ணிவிட்டார்கள் சாதிய கட்டமைப்பாளர்கள்.

முற்றும்.
எழுத்து,
Rakshan kiruthik.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...