ஆசையே அலை போலே ....!!

sureshkrenganathan
நகைச்சுவை
4.9 out of 5 (15 )

சேஷ கோபாலன் ராமபத்திரனுக்கு (சுருக்கமாக 'சேஷ்') வாழ்க்கையின் நிறைவேறாத 'லட்சியம்' ஒன்று உள்ளது. அது, அவர் மனதை வெகு நாட்களாக வாட்டிக் கொண்டிருந்தது. தனது வாழ்க்கையை 'இன்ஜினியரிங் ட்ரைனி 'ஆக துவக்கிய அவர், இந்த MNC கம்பெனிக்கு உழைத்த உழைப்பைச் சொல்லி மாளாது..

"சேஷ் இன் லட்சியம் அதே கம்பெனியில் படிப்படியாக முன்னேறி, CEO ஆக உயர்வதுதான்" -என அவசரமாக யூகித்தவர்கள்..,'சாரி' , கன்னத்தில் போட்டுக்கொள்ளவும் ஏனென்றால், அவர் ஏற்கனேவே அந்த கம்பெனியின் CEO ..!

பின்ன, "பிரச்னைதான் என்ன ?" எனக் கேட்பவர்களுக்காக..,

- 'அவர் வாழ்க்கையில் 'ஒரே முறையாவது மெரினாவில் பஜ்ஜி' சாப்பிட ஆசைப் பட்டார் ..'

"ப்ப்பூ..! இவ்வளவுதானா?", என்பவர்களுக்காக - அவரது முயற்சிகளைச் சொல்ல, நாம் கடமைப் பட்டிருக்கிறோம் .

ஆரம்பக்காலங்களில் மும்பையில் பணி புரிந்ததால் 'கடற்கரை பஜ்ஜி 'வாய்ப்பை தவற விட்டவருக்கு, இங்கு வந்துதான் தெரிந்தது, அவரது 'பதவி' - அவரது ஆசைக்கு, இந்த அளவுக்கு 'எதிரி'..யாக இருக்கும் என்று.

கம்பெனியின் டர்ன்ஓவர் '5 பில்லியனை, 10 பில்லியனாக' அலட்சியமாக மாற்றியவருக்கு (ஏனெனில் 'அவருக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள், வாய்தான் கொஞ்சம் நீளும்..') இந்த 'பஜ்ஜி டாஸ்க்', கை நழுவிச் சென்றுகொண்டே இருந்தது.

-அதுவும் ஒரே சீராக வெட்டி, இரண்டு பக்கங்களிலும் சம அளவு உயர்ந்தும், தாழ்ந்தும் எடுக்கப்படும் சென்னை பொன்னிற பஜ்ஜிகளை, மாலை நடைப் பயிற்சியில் ஓரக்கண்ணால் (ஏக்கத்துடன்) பார்த்துக் கொண்டே நடப்பார். கூடவே ஒரு P.A வோ அல்லது ஒரு ப்ராஜெக்ட் மேனேஜரோ சீரியஸ் ஆக 'டேட்டா'க்களை பொழிந்த வண்ணம் வருவார்கள் (வாசனையை மட்டுமே அள்ள முடியும்..)

..அதிலும் கொடுமை என்னவெனில்,

-"தியசொபிக்கல் சொசைட்டி மற்றும் ஐஐடி வளாகங்களில், அவரை ஒத்தவர்கள் நடக்க - சார் மட்டும் மெரினாவில் நடப்பது ஏன் தெரியுமா..? நடக்கும் போதே, 'நாட்டு நடப்பு, மக்களின் இன்றைய ரசனை, தற்போதைய மார்க்கெட் தேவைகள் என எல்லா தரவுகளையும் ஒரு பார்வையிலேயே கலெக்ட் பண்ணிடுவார் தெரியுமா?!" - என்று யாரோ பெருமையாகக் கூறியதாக, இவர் காதில் விழுந்ததுதான்.. (அட ராமா..!)

தனியாக வரும் சந்தர்ப்பங்களில், வாய்ப்பை எதிர் பார்ப்பார்.

அப்படித்தான், அன்று ஒரு நாள் நடந்து கொண்டிருந்த போது இடை மறித்தார், காமேஸ்வரன் (அவரது முதல் கஸின் ) - பார்த்தால் கையில் மிளிரும் பஜ்ஜிகள்..!! (டாம் & ஜெரி யில் வரும்,' டாம் 'ஐப் போல நம் ‘சேஷ்’இன் கண்கள் மின்னின..)

"பேத்தியைக் கூட்டி வந்தேன்.." - என சொல்லி, அந்த தட்டை, ஏழு வயது சிறுமியுடன் கொடுக்க, அந்த பெண்,

"பஜ்ஜி எடுத்துக்கங்க அங்கிள்..!"

என கரிசனத்துடன் நீட்ட (ஸ்கூல் இல் 'ஷேர் & கேர் 'சரியாகச் சொல்லி கொடுத்திருப்பார்கள் போலும்), 'தீ'யை மிதித்தது போல 'காமு' பாய்ந்து வந்து தடுத்தான்.

"மாமா ரொம்ப ஹைஜின் பார்ப்பார், இதெல்லாம் சாப்பிடமாட்டார்" எனத் தடை போட, தட்டு உடன் திரும்பப் பெறப்பட்டது.

அன்று பின்இரவு வரையில் காமுவுக்கு சாபம் கொடுத்தபடி இருந்தார் சேஷ் ..

இன்னொரு நாள் மாலையில் கடலை நோக்கி நடந்தபடி இருந்தார்.

குதிரை எலும்பைப் பற்றிக்கொண்டு குழந்தைகள் சவாரி செய்துகொண்டிருந்தன.. (மனதினால் குதிரைக்காரனுக்குச் சவுக்கடி கொடுத்தார்)

தாண்டிச் சென்ற போது 'குடைக்குள் மழை' யாக இருந்த ஜோடியிடம், பதினோராவது முறையாக,

"அக்கா சுண்டல் வாங்கிக்கங்க அக்கா..", என பையன், பேரம் செய்து கொண்டிருந்தான் ("இந்தப் பையனை விட்டு, நம் சேல்ஸ் டீமுக்கு ' இண்டக்ஷன் ' எடுக்க வைக்கணும்.. - கிளையண்ட், மூணு தடவை கதவை மூடினாலே, போய் கேக்கிறதுக்கு மூக்கால அழுவானுங்க..")

.. தீடிரென தென்றலாக 'பஜ்ஜி' யின் மணம் ...

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கடை முன் சென்றார் ..உடன் கடைக்கார பையன் பஜ்ஜி எடுப்பதை நிறுத்திவிட்டு, ஓடி வந்து, ஒரு ஸ்டூல் ஐ எடுத்துப் போட்டு உபசாரம் செய்ய, அக மகிழ்ந்து 'ஒரு ப்ளேட்' என ஆரம்பிப்பதற்குள் முந்திக்கொண்டு,

"சார், நான் உங்க கம்பெனிலதான் ஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்ட்ல வேலை பாக்குறேன். சாயங்காலம் சொந்த தொழில். உங்க 'ஷூ லேஸ்' அவுந்திருக்கு பார்த்தேன், அதான் வசதியா கட்டிக்க ஸ்டூல் போட்டேன்.." என்றான் - ஆசை, அல்பாயிஸ் ஆகி விட்டது...

அன்றும் அப்படித்தான், காரில் இருந்து கடற்கரையில் கால் பதித்தவரை, ஒருவன் துப்பாக்கி காட்டி மறித்தான்.,

"இந்தா சுடு வாத்தியாரே..!, பத்து பலூன், பத்து ரூபாய் .."

அவரது 'டார்கெட்' வேறு என்பதால், அவனை ஒதுக்கி, மேலே நடந்தார். தூரத்தில்,சோளத்தை வாட்டி 'நட்சத்திரங்களை' வரவழைத்து கொண்டிருந்தாள் ஒரு நங்கை. அவளுக்கு அருகிலிருந்த பஜ்ஜி கடையில் மூக்கை (முகத்தை) நுழைத்தார்..

"சார் !..", என மிகச் சமீபமாகக் குரல் கேட்க, டிரைவர் தனபால் ..!

"சார், வண்டிலேயே 'செல்' ஐ விட்டுட்டு வந்துட்டீங்க...டென்ஷன் ஆயிடுவீங்களேன்னு கொணாந்தேன்..!"

"சரி.. தேங்க்ஸ் என்றார் (போலியாகச் சிரிப்பை வரவழைத்து )

தயங்கி நின்றான் ..

"என்னப்பா? "

"ட்ராபிக் ஆயிடும் சார்..போலாமா..?"

அன்று ஒரு முடிவுக்கு வந்தார் சேஷ் ...

கடற்கரையில் பஜ்ஜி சாப்பிடுவது ஒன்றும் சுலபமான விஷயம் அல்ல..!

கம்பெனி வளர்ச்சியின் ஒவ்வொரு அசைவையும் தெளிவாகச் சிந்தித்து, அதைச் செவ்வனே நிறைவேற்றியதுபோல இதையும் முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தார் (சுருக்கமாக "எதையும் ப்பிளான்.. பண்ணனும்..!")

'காலத்தைக் கடவுள் தீர்மானிப்பான்...நேரத்தை மனிதன் தீர்மானிக்க வேண்டும்' என்ற நம் புகழ் பெற்ற எழுத்தாளரின் 'வாக்கியத்தை' எடுத்துக்கொண்டார். காலம், நேரம் இரண்டையுமே அவரே முடிவு செய்தார்... (காலம், 'மழைக் காலம் '; நேரம்,' நரசிம்மர் தூணிலிருந்து வந்த அந்தியும், இரவும் இணையும் நேரம்..')

நவம்பர் மாதத்திற்காகக் காத்திருந்தார்...அந்த (திரு)நாளும் வந்தது. 'தமிழ்நாடு வெதர் மேன், ரமணனின் வாரிசுகள், கூகிள் குரு என ஒரு சேர அனைவரும் மழை, மழை என்று சொன்ன ஒரு மாலைப் பொழுதில் கடற்கரையில் இறங்கினார்..(மொபைலை மறக்காமல் எடுத்துக் கொண்டார்)

காற்று குளிராக வீச, வானம் ஒரு பெரு மழையைக் கொட்டி ஒரு சிறிய இடைவேளை விட, கூட்டமில்லாத கடற்கரை அவரை மலர்ச்சியாக வரவேற்றது. கண்ணதாசன் பாடல் ஒன்றை வாயில் பொருத்திக் கொண்டார் .. (கரெக்ட் 'அதே பாடல்தான்..!')

திடீரென, இந்த மழைக்குப் பஜ்ஜி கடைகள் திறந்திருக்காதோ.. எனக் கவலை 'திக்' என நெஞ்சை அடைக்க, 'ஒரு மினுக்கென்று LED பல்ப் ஒளிர',

பெரிய பரபரப்போடு அந்த இடத்தை நோக்கி விரைந்தார்..

யெஸ்..,யெஸ்..! 'பஜ்ஜி கடைதான்..!!

அவரை பார்த்த அதிர்ஷ்டத்தில்(!) கடைக்காரர், அவசரமாக அடுப்பைப் பற்ற வைத்து 'என்ன சார் பஜ்ஜியா?, எனக் கேட்க ஒரு முறைக்கு, பல முறையாகத் தலையை ஆட்டினார்..

சுற்றிலும் மயான அமைதி. ஒரு தலை கூட அருகில் தெரியவில்லை..'பஜ்ஜிகள் எண்ணெய்..யில் மிதக்க, மனம் மந்திரம் சொல்லியது;

‘கனவு மெய்ப்பட வேண்டும்.. கைவசமாவது விரைவினில் வேண்டும் ..'

சுடச்சுட..பளபள, பஜ்ஜி(களை) கையில் கொடுத்து,"சார் சட்னி ?"

"அதைத் தொந்தரவு செய்யாதே. அப்படியே விட்டு விடு"..-என வாயில் போட..'ஆப்பிள்', கிணு கிணுத்தது.. ஒளிரும் திரை 'எனது போட்டி கம்பெனியின் COO, 'முரளி கிருஷ்ணன்' என்றது..- இவன் ஏன் இந்த நேரத்தில் அடிக்கிறான்..? - அது ஓயும் வரை அடிக்க விட்டு, பின் அணைத்தார் - எந்த நேரத்திலும் 'முதலிரவு' தடைப்படுமோ என தவிக்கும் மணமகனைப் போல, அவசர, அவசரமாக விழுங்கினார்..

-படுக்கச் செல்கையில் ஞாபகம் வர, "என்ன முரளி ? ஒரு அர்ஜென்ட் விஷயம், அதான் எடுக்க முடியல.. "

"தெரியும் சேஷ்..எதாவது 'போர்டு மீட்டிங்ல' மாட்டிருப்பன்னு, ஆனா, ஒரு நல்ல சான்ஸ் ஐ மிஸ் பண்ணிட்ட..! - மழை நாளும் அதுவுமா, நம்ம 'கிராண்ட்' ல, ஒரு சூப்பர் 'ஸ்ட்ரீட் புட் ' பெஸ்டிவல்...! அதுவும் 'தோட்டா தரணி' செட் மாதிரி போட்டு, கடற்கரை சூழ்நிலையை அப்படியே கொண்டு வந்திருந்தாங்க. லுங்கி கட்டிக்கிட்டு ஆளுங்க 'சுடச்சுட 'மிளகாய் பஜ்ஜி 'போட..மொத்த V.VIP கும்பலும் அங்கதான்.. அதான், வரயானு கூப்பிட்டேன்..!"

.

.

.

.

ஹலோ ஹலோ.. லைன் ல இருக்கியா...?

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...