எவனோ ஒருவன் எழுதுகிறான்

shanthikumar21
கற்பனை
4.9 out of 5 (66 )

எவனோ ஒருவன் எழுதுகிறான்.....

சாந்தி குமார்

அந்த யாருமில்லா வெட்ட வெளியில்,யாருக்கோ பயந்தவராய்,தலை தெறிக்க,ஓடிக் கொண்டிருந்தார் கதிரேசன். இதயம் தாறுமாறாய் துடித்து,வாய் வழியே வெளியே வந்து விழுந்து விடுமோ என தோன்றியது. முகத்தின் வியர்வை கண்ணில் பட்டு எரிச்சலூட்டியது. பயந்தவாறே மெல்ல திரும்பிய போது,அந்த ஒற்றை கண், மெல்ல மெல்ல மிக பெரிதாகி,இவரை விழுங்க நெருங்க,….

ஒரு திடுக்கிடலுடன் எழுந்தார் கதிரேசன்.வியர்வையில் தொப்பலாய் குளித்திருந்தார் .சே!என்ன கனவு இது? விடாமல் இந்த நான்கு வருடங்களாய் மாதத்திற்கு ஒரு முறையேனும் வருகிறது. கனவு மட்டும் வந்தாலும் பரவாயில்லை..கனவு வந்த மறு நாளே தாங்க முடியா கால் வலியுடன் கூடிய ஜுரம் வந்து தொலைகிறதே...ஐயையோ, நாளை ஜுரம் வந்தால் என்ன செய்ய?ஜுரத்திற்கு மருந்து எடுத்துக் கொண்டால் வயிறு,வாய் புண்ணாகிறது.. ஏதோ ஒன்று மாற்றி ஒன்று..ஆனால் எதையும் தாங்க முடிவதில்லை...

எதுவும் இவரை நெருங்கியது இல்லை.... வசந்தா இருந்த வரை.....!அவள் இருந்த வரை அவளது தான தர்மங்கள் இவரை சுற்றி கவசமாய் இருந்திருக்கும் போல..

வசந்தாவின் இறப்பு, இப்படி கூட ஒரு மனிதனுக்கு சாவு வருமா என்று எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்த ஒரு மரணம். ஒரு வெள்ளி கிழமை,பூஜை அறையில் இருந்தவளிடம் இருந்து ஒரு வினோத சப்தம்,ஒரு நீண்ட விக்கல் போல்.அடுத்த நொடி தலை சாய்ந்து விட்டது. முகத்தில் அப்படி ஒரு சாந்தம், நிறைவு....!

என்ன மனுஷி அவள்! யாரையும் ,எதற்கும் குறை சொல்ல தெரியாதவள். கதிரேசனோ குறை சொல்வதை தவிர வேறு ஒன்றும் தெரியாதவர்.அவரைப் பொறுத்த வரை, அவள் ஒரு அழகான வீடு,கார் போல் அழகான மனைவி...அவ்வளவு தான். அவள் தான் தன்னை சார்ந்து இருந்ததாய், எத்தனை சொல்லாலும், செயலாலும் காயப் படுத்தியிருப்பார்?அப்போதெல்லாம் அவளிடம் இருந்து ஒரு புன்னகை..அட அசடே!என்பதாய்..!

அசடு தான்! பைத்தியக்காரதனம் தான்! தான் தான் அவளை முழுவதும் சார்ந்து இருந்து இருக்கிறோம் என்பதை அவள் இல்லாத தன்னிருப்பு நெற்றியடியாய் புரிய வைத்து இருக்கிறது.

நாட்டின் மிக சிறந்த ஒரு பொறியியல் கல்லூரியின் புரொஃபசர்!ஹெட் ஆப் த டிபார்ட்மெண்ட்!போட்டி தேர்வுகளின் கேள்வி தாள் தயாரிக்கும் குழுவில் முக்கிய புள்ளி, இவரை நேருக்கு நேர் பார்க்கவே எவருக்கும் தயக்கமாக இருக்கும்.அப்படி ஒரு கடுமையும் கம்பீரமும் இவர் முகத்தில் எப்போதும் இருக்கும்.

தனக்கு தான் எல்லாம் தெரியும்..தனக்கு மட்டும் தான் ..என்ற நினைவு அதிகம்..தான் சொல்வது மட்டும் தான் சரி என்று சாதிக்கும் பிடிவாதம்..தனக்கு ஒன்று வேண்டும் எல்லாம்,அது பதவியாய் இருக்கட்டும்,பட்டமாய் இருக்கட்டும்..அதற்காக எந்த எல்லைக்கும் போகும் தீவீரம்...தனக்கு சமமாக இல்லாத எவரையும் மனிதனாக கூட மதிக்காத குணம்..

இவரைப் போல் யாரும் தெளிவாக பாடம் நடத்த முடியாது தான்..ஆனாலும் வகுப்பில் இவரது கவனம் முழுவதும் சராசரிக்கும் மேல் உள்ள மாணவர்களிடம் தான்..சரசரிக்கும் கீழே உள்ளவர்களை இவர் மிகவும் நோக அடிப்பார்.அவர்கள் கல்லூரிக்கு வருவதே வீண் என்றும்,ஏன் பிறந்ததே வேஸ்ட் என்றும் ...

எத்தனை பேரை,இவரை எதிர்த்து பேசினர் என்ற ஒரே காரணத்திற்காக இன்டெர்னலில் கை வைத்து அவர்களது carreer ஐ கெடுத்து இருக்கிறார்! இவரது டார்ச்சர் தாங்காமல் ஒரு மாணவன் தற்கொலைக்கே முயன்று இருக்கிறான்..ஒருவன் கொஞ்ச காலம் மன நிலை பாதிக்கப்பட்டு இருத்திருக்கிறான்.

இவர் ரிடயர் ஆனதை சில மாணவர்கள் வெடி வெடித்து கொண்டாடினர் என்றும் கேள்வி..

இவரைப் பொறுத்த வரை மார்க்ஸ் மட்டுமே ஒரு மாணவனின் புத்திசாலிதனத்தை அளக்கும் கருவி..இவர் மகன் பார்த்திபனும் யூனிவர்சிட்டி முதலாய் வந்து கேம்பஸ் இன்டர்வியூ வில் மிக அதிக சம்பளத்தில் வேலை கிடைத்ததும் இவர் ஆணவம் அதிகமானது..

எல்லாம் இந்த நாலு வருடத்தில் எப்படி மாறி போயி இருக்கிறது?தானே தலை கீழாய் மாறி போனதாய், காலம் தன்னை ,மாற்றியதாய் தோன்றியது..சாட்சி..இதோ ..தான் ராமசாமிக்காய் காத்திருப்பது..ராமசாமி இவரின் பால்ய நண்பன்.இவர் பொறியியல் கல்லூரியில் சேர,ராமசாமியோ தமிழில் முதுகலை பட்டம் பெற்று, உயர்நிலை பள்ளி தமிழ் ஆசிரியன் ஆனார், ஒரு விதத்தில் வசந்தாவிற்கு ஒன்று விட்ட அண்ணன் முறை. முன்பெல்லாம் இவன் தனக்கு வேண்டா விருந்தாளி..இப்போதோ ,தான் அவனுக்காய் காத்திருக்கும் அவலம்..

ஆனால் ராமசாமியிடம் எந்த மாற்றமும் இல்லை.அதே சல,சல பேச்சு..ஊருக்காய் கவலைப் படும் குணம்.எல்லோரையும் ஒருங்கிணைக்கும் ஆற்றல்..

ஒரு கையில் தன் பேத்தியையும், மறு கையில் கதிரேசன் பேரனையும் பிடித்தவாறு கேட்டை திறந்து உள்ளே வந்தார் ராமசாமி.

‘” என்னப்பா எப்டி இருக்க?என்ன செய்யற?சொன்னா கேக்கறீங்களா?பையன அதான் ரொம்ப நல்ல ஸ்கூல்னு 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கற ஸ்கூல் ல சேர்த்திருக்கீங்க? போக வரவே குழந்தை வாடி போயிடறான்.என்ன படிப்போ போ?

பேசிக் கொண்டே சுவாதீனமாய் கிச்சனில் நுழைந்து இரு குழந்தைகளுக்கும் பாலை காய்ச்சி கொடுத்து விட்டு,தங்கள் இருவருக்கும் காஃபி கலந்துக் கொண்டே ,தான் வாங்கி வந்த ஆப்பிளை கழுவி ,நறுக்கி இரு குழந்தைகளுக்கும் கொடுத்தார்.

இதில் எதிலுமே கவனம் செல்லாமல் இரு குழந்தைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார் கதிரேசன்..ராமசாமியின் பேத்தி சந்தோஷி,பேருக்கு ஏற்றார் போல் சந்தோஷமாய்,கை கால் முளைத்த ரோஜாவாய் துள்ளிக் கொண்டிருக்க,வருணோ நமுத்துப் போன அப்பளமாய் துவண்டு தெரிந்தான்.

எப்போதும் எதையோ பறி கொடுத்தாற் போல் நிலை குத்திய பார்வை..சிரித்தே யாரும் பார்த்தது இல்லை.

அடையாறில் இருக்கும் பங்களாவோ, போர்டிகோவில் இருக்கும் BMW காரோ,வங்கியில் இருக்கும் சில கோடிகளோ இந்த பிஞ்சின் முகத்தில் சிரிப்பை தர முடியவில்லையே?மகனும் மருமகளும் வேலை நெருக்கடி இருந்தாலும் இவனை கவனிப்பதில் குறை வைக்கவில்லையே? பல டாக்டர்களிடம் காட்டியாகி விட்டது. குறை என்று ஏதுமில்லை.ஆனால் ஏன் இப்படி இருக்கிறான் என்று தெரியவில்லை.

இவன் ஸ்கூலில் பேரண்ட்ஸ் மீட்டிங்கில் சொல்லி விட்டார்கள் ‘ ஹி இஸ் அன்பிட் டூ திஸ் ஸ்கூல்,பிளீஸ் சேஞ்ச் ஹிம் டூ சம் அதர் பிளேஸ்””

என் பேரன் அன்பிட்டா?அந்த பள்ளியில் படிக்க தகுதி இல்லாதவனா?முதலில் கோபம் வந்தது, பின் மனம் வலிக்க வலிக்க குத்திக் காட்டியது.எத்தனை பேரை நீ இதே வார்த்தை சொல்லி விமர்சித்து இருப்பாய்?எத்தனை பேருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை கெடுத்திருப்பாய்?

இவர் செய்வது தனக்கே தாள முடியாமல் போகும் போதெல்லாம் வசந்தா புலம்புவது...”பரம்பரைக்கு சொத்து சேர்க்க வேண்டாம்.பாவம் சேர்க்காமல் இருந்தால் போதும்..மேல இருந்து ஒருத்தன் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கான்.பாவ கணக்கை எல்லாம் எழுதிக்கிட்டு தான் இருக்கான்.பாத்து நடந்துக்குங்க ‘”

அப்போதெல்லாம் இவருக்கு கோபம் வரும்..நான் என்ன அடுத்தவன் சொத்தையா கொள்ளை அடிக்கிறேன்?..இப்போது தான் புரிகிறது..அடுத்தவனுக்கு கிடைக்க வேண்டியதை தட்டி பறிப்பதும் பாவம் தான்,,மற்றவர் மனதை நோக அடிப்பது தான் மிக பெரிய பாவம் .

தன் பரம்பரையே அறிவுஜீவி பரம்பரை என்பதில் தான் இவருக்கு எத்தனை கர்வம்?அந்தஅறிவினால் கிடைத்த பதவியை வைத்துக் கொண்டு இவர் ஆடிய ஆட்டம் என்ன கொஞ்சமா?

இவரைப் பொறுத்த வரை கடவுள் இல்லை..ஆனால் எல்லோருக்கும் மேலே எவனோ ஒருவன் இருந்து பாவ கணக்கை எல்லாம் எழுதிக் கொண்டு தான் இருக்கிறான் என்பது புரிந்து விட்டது..அவன் மிக புத்திசாலி. பாவ மூட்டையின் கனம் தாங்க முடியாமல் போகும் போது அதை எங்கே அடித்தால் பாவம் செய்தவனுக்கு வலிக்குமோ அங்கே இறக்கி வைத்து விடுகிறான்.

இதோ இங்கே இவர் பேரன் வருண் சுமப்பதைப் போல..நினைக்க நினைக்க நெஞ்சு வெடித்து விடும் போல் இருந்தது.

உள்ளே இருந்து இது எதையும் கவனிக்காமல் பேசிக் கொண்டே வந்தார் ராமசாமி.இது என்ன அநியாயம் பாருப்பா!எங்க தெருவில பரிமளான்னு ஒரு பொண்ணு..நல்ல மார்க் +2 ல.நீட் எக்ஸாம் ல மார்க் இல்லையாம்..சூசைட் அட்டெம்ப்ட் பண்ணியிருக்கு..நல்ல வேலை காப்பாத்தியாச்சு’.

முன்பாக இருந்தால் ,பல் இருக்கறவன் பட்டாணி திங்கலாம்.இல்லாதவன் எதுக்கு ஆசைப் படணும் என்று எகத்தாளம் செய்வார்.இப்போதோ வாய் வரவில்லை.

ராமசாமி பட படத்தார் .மருத்துவம் என்பது ஒரு வேலை யா?இல்லை அது ஒரு சேவை..அதற்கு மார்க் மட்டும் தான் தகுதியா? ஒரு சேவை மனப்பான்மை வேண்டாமா?நீட் எக்ஸாம் தேவை தான்.நல்ல தகுதி உள்ளவங்க தான் மருத்துவராகனும்.ஏன்னா அவங்க உயிரோட விளையாடரவங்களாச்சே!ஆனா அதுக்கு பள்ளி பாட திட்டங்களின் தரத்தை உயர்த்தனும்.அதை விட்டுட்டு பிரைவேட் செண்டெர்ல ஸ்பெஷல் கோச்சிங் எடுக்கரவங்க தான் பாஸ் பண்ண முடியும்னா அப்ப பாவப்பட்ட மக்களோட கதி?பணம் இருக்கறவன் தகுதி இருக்கோ இல்லையோ பிரைவேட் மெடிக்கல் காலேஜ் ல பல லட்சம் செலவு பண்ணி சேர்ந்துடறான்.அவன் படிச்சிட்டு சம்பாதிக்க பாப்பானா,சேவை செய்யணும்னு நினைப்பானா?

சரி,இப்படியெல்லாம் புலம்பி என்ன செய்ய? நம்மால என்ன செய்ய முடியும்னு யோசிச்சு தான் இலவச நீட் பயிற்சி மையம் தொடங்கலாம்னு இருக்கோம்.கெமிஸ்ட்ரி, பயலோஜிக்கு டியூடர் கிடைச்சாச்சு.ஆனா ஃபிசிக்ஸ்...நீ ....எடுக்க முடியுமா? தயங்கி, தயங்கி., கேட்டார் ராமசாமி.

கட்டாயம் எடுக்கறேன்..கதிரேசன் ஆர்வம் காட்ட,மேற்கொண்டு காரியங்கள் மளமள வென நடந்தன.படிக்க வேண்டும் என்ற வெறியும்,வறுமையுமே அங்கு மாணவனாக சேர தகுதியாக நிர்ணயிக்கப் பட்டது.கதிரேசனது அடையார் வீட்டையே அதற்கு பயன் படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்யப் பட்டது.அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டு வீடு திரும்பும் பொது ஆச்சரியமாக இருந்தது கதிரேசனுக்கு.கொஞ்ச காலமாக எந்த உடல் உபாதையும் தன்னை வதைக்கவில்லையே என்று தோன்றியது.

தொலைத்த இடத்தில் தானே தேட வேண்டும்..இல்லை இல்லை, பாவம் சேர்த்த இடத்தில் தானே தொலைக்க வேண்டும். தான் போகும் பாதை சரி தான் என்று தோன்றியது.திரும்பி பார்த்த போது வருண் தன்னைப் பார்த்து சிறிதாய் சிரிப்பதாய் தோன்றியது.இது பிரமையாய் இருக்கலாம்.ஆனால் விரைவில் உண்மையாகும் என்ற நம்பிக்கை வந்தது.

சாந்தி குமார்

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...