JUNE 10th - JULY 10th
ரெண்டு கோமாளிகள்
இரவு நேரம் அது. சிங்காரச் சென்னை மாநகரில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் இடம் அது.
அந்தப் பகுதியில் வீற்றிருந்த ஒரு அழகிய பங்களாவில் இருந்து தான் செருப்பு ஒன்று காற்றில் பறந்து வந்து வெளியே விழுந்தது. அது ஆண்கள் அணியும் செருப்பாக இருந்தது. சில நொடிகள் கழித்து மற்றொரு செருப்பும் வந்து விழுந்தது.
அதன் பிறகு அதன் மதில் சுவரில் இருந்து ஒரு உருவம் தெருவில் குதித்தது. அது எழுந்து சென்று செருப்புகளைச் சேகரித்து எடுத்துக் கொண்டு ஒரு ஓரமாக ஒதுங்கி நிற்க, அடுத்ததாக பங்களாவிற்குள் இருந்து மற்றொரு செருப்பு பறந்து வந்து அந்த உருவத்தின் காலடியிலேயே விழ, அது எதையோ முணுமுணுத்தபடியே விலகி நின்றது.அடுத்த நொடியே மற்றொரு செருப்பும் உள்ளேயிருந்து வந்து வெளியே விழுந்தது. இம் முறை வந்த செருப்பானது அந்த உருவத்தின் தோள்பட்டையிலேயே பட்டுத் தெறித்துக் கீழே விழுந்தது.
"எரும மாடு.வேணும்ன்னே பண்ணுது" என்று வாய்விட்டுத் திட்டிவிட்டு மதில் சுவரையே முறைத்துக் கொண்டிருந்தது அந்த உருவம்.
வெளிப்பட்ட குரலை வைத்து அது ஒரு ஆணின் உருவம் என்பது தெரிய வந்தது. அடுத்த நொடியே மதில் சுவரில் இருந்து மற்றொரு உருவதும் கீழே குதித்தது.
எங்கோ அதற்கு அடிபட, "ஆ" என்று அலறிக்கொண்டே எழுந்து நின்றது. அது ஒரு பெண்ணின் குரலாக இருந்தது.
"பார்த்து குதிக்குறதுக்கு என்ன?" என்று அந்த ஆண் குரல் சீறினான்.
"அறிவிருக்கா உனக்கு? இருட்டுல எப்படிக் கரெக்டா பார்த்து குதிக்க முடியும்? குத்து மதிப்பா தான் குதிக்க முடியும்" என்றாள் அடிபட்ட இடத்தை நீவி விட்டபடியே.
"சரி சரி! சீக்கிரம் வா! உன் சொற்பொழிவை நின்னு கேட்க எல்லாம் இப்போ நேரம் இல்ல! செக்யூரிட்டி வந்திடுவான். அவன் வர்றதுக்கு முன்னாடி இங்க இருந்து எஸ்கேப் ஆயிடணும்! இல்லன்னா காலத்துக்கு களி தான் திங்கணும்" என்றான் அவன் எரிச்சலோடு.
"என் செருப்பு எங்க?" என்று அவள் தேட, அவன் குனிந்து எடுத்து அவளது கால்களுக்கு அடியில் போட்டான்.
அணிந்து கொண்டவள் அவனுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தாள். இருவரும் திரும்பித் திரும்பி அந்த வீட்டையே பார்த்துக் கொண்டு நடந்தனர். இவர்கள் அந்தத் தெருவைக் கடக்க சில நொடிகளே இருந்த தருவாயில் தான் அவர்களின் பின்புறம் இருந்து அந்த சத்தம் கேட்டது.
காவலர்கள் பயன்படுத்தும் வாகனத்தில் இருந்து எழும் அலறல் ஒலியாக அது இருக்க, இருவருமே பயந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் அந்நொடியே இருட்டில் ஓட ஆரம்பித்தனர். எதிர்பட்ட தெருக்களில் எல்லாம் புகுந்து இருவரும் ஓட, அந்த சைரன் ஒலியும் இவர்களை விடாமல் துரத்திக்கொண்டு வர, கன்னாபின்னாவென்று ஓட ஆரம்பித்தனர் இருவரும்.
ஒருவழியாக தெருக்களைக் கடந்து சாலைக்குள் பிரவேசித்தனர் இருவரும்.
"மெயின் ரோட்ல ஓடினா சீக்கிரம் பாட்டிக்குவோம். எதிர்ல ஒரு ரோடு போகுது பாரு. ரோட்டைக் க்ராஸ் பண்ணி அந்த ரோடுக்குப் போயிடலாம்" என்றான் அந்த ஆண்.
"அதுக்குள்ள போலீஸ் எப்படி வந்துச்சு?" என்று கேட்டபடியே அப்பெண்ணும் அவனைத் தொடர்ந்தாள்.
சாலையைக் கடந்து அதன் கிளையில் பிரிந்த மற்றொரு குறுகிய தெருவிற்குள் இருவரும் ஓட ஆரம்பித்தனர்.
"சைரன் சத்தம் வரல பார்த்தியா?" என்று அப்பெண் கேட்க,
"ஆஃப் பண்ணி வெச்சிட்டுத் துரத்துவாங்க! திரும்பிப் பார்க்காம ஓடி வா" என்று கூறியபடியே அவன் வேகத்தைக் கூட்டினான்.
அதே நேரம் பின்னால் ஏதோ வாகனம் வரும் ஓசை கேட்க, இருவரின் உடலுமே விரைத்துக் கொண்டது. மேலும் வேகத்தைக் கூட்டினர் இருவரும். தலைதெறிக்க ஓடியபடி இருந்தனர் இருவரும்.
"முடியாது ஹரீஷ்! இதுக்கு மேல ஓடினா இதயம் வாய் வழியா வெளிய வந்து விழுந்திடும் போல இருக்குடா" என்றாள் அப்பெண் களைத்துப் போனவளாய்.
"வேற வழியில்ல சசி! ஓடி தான் ஆகணும்! எனக்கும் கூட நுரையீரல் வெளில வந்து விழுந்திடும் போல இருக்கு!மாட்டினா தொலஞ்சோம்" என்றான் அவன் மூச்சிரைக்க.
"எங்கயாவது ஒளியலாமா?" என்றாள் சசி என்று அழைக்கப்பட்டவள்.
"ஒளிஞ்சா எல்லாம் ஈஸியா மாட்டிக்குவோம். பேசாம வா" என்றான் அவன்.
சற்று தூரம் சென்றதும் சட்டென நின்று விட்டாள் சசி.
"இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது ஹரி" என்றாள் மூச்சு வாங்கிக் கொண்டே.
ஹரீஷ் அப்பகுதியை நோட்டம் விட்டான். பின்னால் வாகனம் ஒன்று தூரத்தில் வந்து கொண்டிருந்தது.
சட்டென அவளின் கையைப் பிடித்து இழுத்தவன், அவனின் பக்கவாட்டில் இருந்த பெரிய குப்பைத் தொட்டியின் அருகே அவளை அழைத்துச் சென்றான். அதன் பின்னால் இருவரும் மறைந்து அமர்ந்து கொண்டனர்.
"டேய்! கருமம் பிடிச்சவனே! நாத்தம் குடலைப் பொரட்டுதுடா" என்று வாயையும், மூக்கையும் சேர்த்துப் பொத்திக் கொண்டாள்.
"பேசாம உட்காரு! நீ தானே ஓட முடியலன்னு சொன்ன" என்றான் ஹரீஷ்.
"அதுக்குன்னு இப்படியா? குப்பைத் தொட்டி பின்னால கூட்டிட்டு வருவ?" என்று அவள் எகிற, ஹரீஷ் எதுவும் பேசாமல் மௌனம் காத்தான்.
அந்த நேரத்தில் அந்த வாகனம் அவர்களைக் கடந்து சென்றது.
"ஹப்பாடா! போயிட்டானுங்க! முதல்ல இங்க இருந்து நகரலாம்" என்றபடியே சசி எழ, அவளைத் தொடர்ந்து ஹரீஷும் எழ முயன்றான். அதேநேரம் வேறொரு வாகனம் வருவதைப் பார்த்துவிட்டு சட்டென குனிந்தவன் , அவளையும் இழுத்து அமர வைத்தான்.
அமர்ந்த போது சசி எதன் மீதோ கையை வைத்தாள். அது கொழகொழவென்று இருக்க விருட்டென்று கையை எடுத்தாள் அதிலிருந்து.
"டேய் எரும!" என்று சீறினாள் கையை உதறியபடியே.
"ஏன்டி?" என்றான் அவன்.
"எது மேலயோ கையை வெச்சித் தொலச்சிட்டேன். கருமம்! எல்லாம் உன்னால தான்" என்று கொந்தளித்தாள்.
"பேசுவடி! நீ எக்கேடும் கெட்டுப்போன்னு நெனைக்காமல் உன்னையும் இழுத்துக்கிட்டே ஓடிட்டு இருக்கேன் பாரு! நீ இதுவும் பேசுவ! இன்னமும் பேசுவ" என்றான் ஹரீஷ்.
"என்னன்னு தெரியல. கொழ கொழன்னு சாணி மாதிரி இருக்கு" என்றாள் சசி அருவருப்புடன்.
"மாட்டுச் சாணியா? இல்ல மனுஷ சாணியா?" என்று விசாரித்தான் ஹரீஷ்.
"இருட்டுல ஒண்ணும் தெரியல" என்றாள் சசி.
"மோந்து பாரு! தெரிஞ்சிடும்" என்றான் அவன்.
"கொழுப்புடா உனக்கு" என்று கொதித்தாள் சசி.
சிறிது நேரம் காத்திருந்தனர் இருவரும். பின்னர் மெள்ள எழுந்து சாலையை நோட்டம் விட்டான் ஹரீஷ்.
"ஏய்! சீக்கிரம் வா! யாரையும் காணோம்" என்றான் அவன்.
"கையைக் கொடுடா! எப்படி எழுந்திருக்குறது?" என்றாள் சசி.
"அய்யே! நான் மாட்டேன்!" என்று கூறிவிட்டு அவன் நகர,
"உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா எரும! எரும!" என்று திட்டிக் கொண்டே எழுந்து அவனைத் தொடர்ந்தாள் சசி.
சிறிது தூரம் சென்றதும் முதன்மைச் சாலை வந்துவிட, இருவரும் நடையின் வேகத்தைக் கூட்டினர்.
சிறிது தூரம் நடந்து சென்றதும் பூட்டிக் கிடந்த சிறிய உணவகம் ஒன்று இவர்கள் கண்ணிற்குத் தட்டுபட, இருவரும் அங்கு விரைந்தனர்.
"கொஞ்ச நேரம் இப்படி மறைவா உட்காரலாம் வா" என்ற ஹரீஷ் முன்னால் செல்ல, உணவகத்தின் வெளியே ஒரு தொட்டி இருப்பதைக் கவனித்த சசி அதை நோக்கி நகர்ந்தாள்.
நல்ல வேளையாக அதில் சிறிது தண்ணீரும் ஒரு கப்பும் இருக்க, நிம்மதியுற்றாள். தண்ணீரை ஊற்றித் தன் கையைச் சுத்தம் செய்தாள். நன்றாகக் கழுவியவள் மெள்ள கையை எடுத்து மூக்கின் அருகே வைத்தாள். குடல் வெளியே வந்துவிடும் போல் இருந்தது.
"ச்சே! எல்லாத்துக்கும் இந்தச் சனியன் பிடிச்சவன் தான் காரணம். வரலன்னு சொன்னவள வம்பா இழுத்துட்டு வந்து, இப்படி வம்புல மாட்டி விட்டுட்டான்"என்று உள்ளுக்குள் பொங்கியவள், அவன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி நகர்ந்தாள்.
"வா! வா! இப்படி வந்து உட்காரு" என்றான் ஹரீஷ்.
"ஆமா! இது உங்க வீட்டு ஹால் இல்ல! வந்து சொகுசா உட்காருறதுக்கு?" என்று இடக்காகக் கேட்டுக் கொண்டே அவனருகில் அமர்ந்தாள் சசி.
"இந்த நிலையிலும் உன் திமிரு குறையுதா பாரேன்?" என்றான் ஹரீஷ்.
"அதைவிடு! அடுத்து என்ன பண்ணப் போறோம்?" என்றாள் சசி.
"என்ன பண்றதா? இங்க இருந்து இரயில்வே ஸ்டேஷன் ஒரு மூணு நாலு கிலோ மீட்டர் இருக்கும்! நடந்தே போயிட வேண்டியது தான்" என்றான் அவன்.
"ரயில்வே ஸ்டேஷனுக்கா? அங்க போய் என்ன பண்ண?" என்றாள் சசி எதுவும் புரியாமல்.
" வழக்கமா இது மாதிரியான சூழ்நிலைல மாட்டிக்கிட்டவங்க என்ன பண்ணுவாங்களோ, அதைத் தான் நாமளும் பண்ணப் போறோம்! கிளம்பத் தயாரா இருக்குற ஏதாவது ஒரு ட்ரெயின்ல ஏறித் தப்பிச்சிடலாம். ஒரு வாரம் பத்து நாள் போனதும் மெதுவா இங்க வரலாம்" என்றான் ஹரீஷ்.
"எதுக்குடா?" என்றாள் சசி பரிதாபமாக.
" என்னடி கேள்வி இது! தப்பு பண்ணிட்டு உள்ளூர்லயே சுத்திட்டு இருந்தா மாட்டிக்க மாட்டோமா? அதுக்குத் தான்" என்றான் அவன்.
"அதுக்காக ஊரைவிட்டு ஓடணும்னா எப்படி?" என்றாள் சசி.
பிறகு இருவரும் கலந்து பேசி முடிவுக்கு வந்தனர். அங்கிருந்து நகர்ந்து நடக்க ஆரம்பித்தனர்.
சிறிது தூரம் சென்றதும் திரையரங்கு ஒன்று தென்பட, ஹரீஷ் மனம் மகிழ்ந்தான்.
"ஹேய் தியேட்டர் ஒண்ணு இருக்கு பாருடி! அங்க போனா நிச்சயம் ஆட்டோ கிடைக்கும்! இது கூட படம் முடியுற டைம் தான்" என்றான்.
இருவரும் திரையரங்கை அடைந்த போது, அங்கு இவர்களுக்காகவே காத்திருந்தாற் போல் ஆட்டோ ஒன்று நின்றிருந்தது.
பேரம் பேசாமல் அதில் பயணித்து இருவரும் இரயில் நிலையத்தை வந்தடைந்தனர்.
இறங்கி உள்ளே சென்று பயணச் சீட்டு வழங்கப்படும் இடத்திற்கு விரைந்தனர்.
"மூணு மணிக்குத் தான் மும்பை போற ட்ரெயின் இருக்கு" என்றார் ஊழியர் இவர்கள் இருவரையும் ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே.
"சரி! ரெண்டு டிக்கெட் கொடுங்க சார்" என்று கேட்டு வாங்கினான் ஹரீஷ்.
"காலக் கொடுமைடி! அவன் நம்ம ரெண்டு பேரையும் பார்த்த பார்வையைக் கவனிச்சியா?" என்றான் நொந்துபோனவனாய்.
"ம்ம்! கவனிச்சேன். இந்த நேரத்துக்கு வந்து டிக்கெட் வாங்கினா, அதுவும் நானும் நீயுமா வந்து வாங்கினா என்ன நெனப்பான்? லவ்வர்ஸ் போல இருக்கு! ஊர விட்டு ஓடப்போகுதுங்க போலயிருக்குனு தான் நெனப்பான்" என்றாள் சசி அசால்ட்டாக.
"உன் கூட எல்லாம் மனுஷன் ஓடிப் போவானாடி?" என்று நொந்தவன் முதுகில் ஓங்கி ஒரு குத்து குத்தினாள் சசி.
"எரும நாயே! உன்னால தான்டா எனக்கும் இந்த நெலம" என்று கொந்தளித்தாள்.
இவர்கள் செல்லவிருந்த இரயில் வந்து நிற்கும் பரப்ப மேடையை நோக்கி விரைந்தனர்.
"மணி ஒண்ணேமுக்கால் தான் ஆகுது. ட்ரெயின் வர இன்னும் ஒரு மணி நேரத்துக்கும் மேல ஆகும். அதுவரைக்கும் என்ன பண்றது?" என்றாள் சசி.
"வழக்கமா சினிமால பண்றது மாதிரி தான் பண்ணணும்" என்றான் ஹரீஷ்.
"சினிமால பண்ற மாதிரியா? என்னடா சொல்ற? என்று சலித்துக் கொண்டே நடந்தாள் சசி.
"ஃப்ளாட் ஃபார்ம்ல உட்கார்ந்து கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்தத நெனச்சு பார்க்கணும். அதாவது ஃப்ளாஷ்பேக் கதையை ஓப்பன் பண்ணணும் " என்றான் ஹரீஷ்.
"கிழிஞ்சது! கதை முடியுறதுக்குள்ள போலீஸ்காரங்க வந்து நம்மள கொத்தா அள்ளிட்டுப் போயிடுவாங்க" என்றாள் சசி.
"இந்நேரம் அவங்க நம்மள பஸ் ஸ்டாண்ட், இரயில்வே ஸ்டேஷன்ல எல்லாம் தேடிட்டு இருப்பாங்க. கொஞ்ச நேரத்துல இங்கேயும் வந்திடுவாங்க " என்றான் ஹரீஷ் ஒரு இடத்தில் அமர்ந்தபடியே.
"அந்த நேரத்துல நாம தான் அங்க இருந்தோம்னு செக்யூரிட்டி வேற தகவல் சொல்லியிருப்பாரு. ஈஸியா வந்து அமுக்கப் போறாங்கடா நம்மள" என்றாள் சசி கவலையுடன்.
"எல்லாம் விதிடி! எப்படி இருந்த நாம, இப்போ தேடப்படும் குற்றவாளியா இருக்கோம் பாரு" என்று வருந்தினான் ஹரீஷ்.
"வேணாம் வேணாம்னு தலபாடா அடிச்சிக்கிட்டேன்! இன்னொரு நாள் போகலாம்னு கெஞ்சினேன்! கேட்டியா நீ?" என்று சசியும் வருந்தினாள்.
"நடந்தது நடந்து போச்சு! விடு! யாரு கண்டா? இப்படி ஆகும்னு?" என்றான் அவன்.
"யாரா இருக்கும் டா ஹரி?" என்றாள் சசி.
"அந்தத் தயாரிப்பாளரா தான் இருக்கும்டி! அவனே தான்!" என்றான் ஹரீஷ் உறுதியுடன்.
"போலீஸ்ல இதைப் பத்தி நாம சொன்னா நம்பமாட்டாங்களா?" என்றாள் சசி.
"ம்ம்! நம்புவாங்க! நம்புவாங்க" என்றான் ஹரீஷ் இடக்காக.
பேசிக் கொண்டே திரும்பிய சசி அதிர்ந்து போனாள்.
டேய்! நாலஞ்சு ரயில்வே போலீஸ் வராங்கடா! சட்டுன்னு திரும்பிப் பார்க்காத! அப்படியே உட்காரு" என்றாள் பதட்டத்துடன்.
தன் தலையை மேலும் கீழே புதைத்துக் கொண்டான் ஹரீஷ். வேடிக்கை பார்ப்பவள் போல பாவனை செய்து கொண்டு மெள்ள தன் தலையைத் திருப்பிக் கொண்டாள் சசி. வந்தவர்கள் இவர்களைக் கடந்து செல்ல, இருவரும் நிம்மதி அடைந்தனர்.
"ச்சே! எதைப் பார்த்தாலும் பயம்! யாரைப் பார்த்தாலும் பயம்" என்றாள் சசி.
"ட்ரெயின் ஏறி தப்பிச்சிட்டா போதும் " என்றான் ஹரீஷும் பயத்துடன்.
மணி மூன்றான போது மும்பை இரயிலும் வந்து நின்றது. ஆற அமர இருவரும் அதில் ஏறினர். கூட்டம் அதிகம் இல்லாது இருக்க, ஆளுக்கொரு இருக்கையில் படுத்துக் கொண்டனர்.
மிகுந்த களைப்பினாலோ என்னவோ இருவருமே படுத்த அடுத்த நொடியே உறங்கியும் போயினர்.
தூக்கம் கலைந்து விழித்த சசி, இரயிலானது எங்கோ நின்றிருப்பதை உணர்ந்து வேகமாக எழுந்து அமர்ந்தாள். கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள். அது ஏழு மணி என்று காட்ட, எதிரே படுத்திருந்த ஹரீஷை எழுப்பினாள்.
"அதுக்குள்ள மும்பை வந்துட்டோமா?" என்று கேட்டுக் கொண்டே அவனும் எழுந்து அமர்ந்தான்.
"லூசு! அதுக்குள்ள மும்பை வந்திடுமா? இது வேற ஏதோவொரு ஊரு தான். ட்ரெயின் நின்னுட்டு தான் இருக்கு. இறங்கிப் போய் காபி வாங்கிட்டு வா" என்றாள்.
"ஹரீஷும் இறங்கினான். இதென்ன? இதே மாதிரியான கடையை சென்னைலேயும் பார்த்தோமே!" என்று யோசித்தவாறே விரைந்தான்.
"அண்ணா! இது எந்த ஊரு?" என்று விசாரித்தான்.
கடைக்காரர் இவனை ஏற இறங்க பார்த்துவிட்டு "நல்ல தூக்கம் போலயே" என்றார் கேலியாக.
"ஆமாண்ணா! ட்ரெயின் ஏறின அடுத்த நிமிஷமே தூங்கியாச்சு. இப்போ தான் எழுந்தேன்" என்றான் ஹரீஷ்.
"அதான் நிலவரம் உங்களுக்குத் தெரியல! இது சென்னை தான் தம்பி! இரயில்ல ஏதோ கோளாறாமா! அதான் அது கிளம்பவே இல்ல. நாலு மணி நேரமா இங்க தான் நின்னுட்டு இருக்கு. எல்லாருமே சடஞ்சு போய் உங்கள மாதிரியே படுத்துத் தூங்கிட்டாங்க" என்றார் கடைக்காரர்.
திருதிருவென முழித்தான் ஹரீஷ்.
"ரெண்டு காபி தாங்கண்ணா" என்று கூறிவிட்டு அருகில் அடுக்கப்பட்டிருந்த தினசரிகளில் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டான். காபி தயாரானதும் வாங்கிக் கொண்டு விரைந்தான்.
"இதுக்கு இவ்வளவு நேரமா? ட்ரெயின எடுத்துடுவாங்களோன்னு பயத்துட்டே இருந்தேன்" என்றபடியே காபியை வாங்கிக் கொண்டாள் சசி.
அவளை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு தினசரியைப் புரட்ட ஆரம்பித்தான் ஹரீஷ்.
"இது எந்த ஊருன்னு கேட்டியா?" என்றாள் சசி.
" ம்ம்! கேட்டேன்! சென்னைன்னு சொன்னாங்க" என்று அவன் சிரத்தையுடன் கூற, அதிர்ந்தாள் சசி.
"என்னடா சொல்ற?" என்றாள் சசி.
கடைக்காரர் கூறிய விஷயத்தை அவளிடம் தெரிவித்தான் அவன்.
"சரியா போச்சு! ஏறின இடத்துலயே தான் இன்னமும் இருக்கோமா? என்றாள் சசி.
"ஆமா" என்ற ஹரீஷ் தினசரியை வேகமாகப் புரட்டுவதைப் பார்த்து.
"என்னடா? நம்ம ஃபோட்டோ எந்தப் பக்கத்துல வந்திருக்குனு பார்க்குறியா?" என்றாள்.
"ஆமாடி! ஆனா நேத்து நடந்த விஷயத்தைப் பத்தி ஒரு நியூஸ் கூட வரலயே! அவ்வளவு பெரிய பாப்புலர் ஃபிகர் அவங்க! அவங்களுக்கு இப்படி ஆனது எவ்வளவு பெரிய நியூஸ். முதல் பக்கத்துலயே வந்திருக்க வேண்டிய செய்தி. கடைசி பக்கத்துல கூட வரலடி!" என்றான் ஹரீஷ் ஆச்சரியத்துடன்.
" என்னமோ தப்பு நடந்திருக்கும்டா!" என்றாள் சசி யோசனையுடன்.
"ஆமா! இப்போ என்ன பண்றது? அதைப் பத்தி எப்படித் தெரிஞ்சிக்கிறது?" என்றான் ஹரீஷ் கலக்கத்துடன்.
"வொரி பண்ணிக்காதடா! ஏதாவது யோசிக்கலாம்" என்றாள் அவள்.
" நம்ம ஃப்ரண்ட்ஸ் யாரையாவது கூப்ட்டு விசாரிக்கலாமா?" என்றான் ஹரீஷ்.
"வேற வினையே வேணாம்! அடுத்த நிமிஷமே போலீஸ் இங்க வந்து நின்னுடும். இந்நேரம் நம்மாளுங்கள பிடிச்சு குடை குடைன்னு குடஞ்சிட்டு தான் இருப்பாங்க" என்றாள் சசி.
சற்று நேரம் இருவரும் யோசித்தனர்.
"வேற வழியில்ல! நாமளே அங்க போய் நோட்டம் பார்க்கலாம்" என்றான் ஹரீஷ் முடிவாக.
"நானும் அதைத் தான் நெனச்சேன். இறங்கு! போலாம்!" என்றாள் சசி
இருவரும் இரயிலில் இருந்து இறங்கி வெளியே வந்து ஆட்டோவில் ஏறி நடிகை கமலியின் வீட்டிற்கு விரைந்தனர்.
வீட்டிற்கு முன் இறங்காமல் சற்றுத் தள்ளிப் போய் இறங்கிக் கொண்டனர்.
பரபரப்பு ஏதும் இல்லாமல் அந்த வீடு அமைதியாகவே இருந்தது. செக்யூரிட்டி வெளியே நின்றவாறு யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
"நடக்குறது நடக்கட்டும்! உள்ள போயே பார்த்துடலாம்" என்ற ஹரீஷ் விறுவிறுவென சென்று செக்யூரிட்டியின் முன்பாக நின்றான்.
"நீங்களா? என்ன இந்த நேரத்துல? அம்மா ஷூட்டிங் கிளம்பிட்டு இருக்காங்களே" என்றார் சாதாரணமாக.
இருவரும் அதிர்ந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தனர்.
"சரி போங்க" என்றவர் கதவைத் திறந்து விட, இருவரும் உள்ளே ஓடினர்.
"வாசலில் நின்றிருந்த மேனேஜர், இப்போ பேட்டி எல்லாம் எடுக்க முடியாது" என்றார் எரிச்சலோடு.
"மேனேஜர்! அவங்கள உள்ள விடுங்க" என்று உள்ளேயிருந்து வந்த கமலியின் குரலைக் கேட்டதுமே அவர் விலகி நிற்க, இவர்கள் முன்னேறினர்.
"வாங்க! நேத்து ஏன் சொல்லிக்காம கூட போயிட்டீங்க?" என்றாள் கமலி.
"அது வந்து" என்று இருவரும் இழுக்க, வாய் விட்டுச் சிரித்தாள் கமலி.
"நான் செத்துப் போயிட்டேன்னு நெனச்சு தானே அந்த ஓட்டம் ஓடினீங்க" என்றாள் அவள்.
இருவரும் திருதிருவென முழிக்க, அவளே தொடர்ந்தாள்.
பகல் நேரத்துல என்னால உங்க பத்திரிகைக்குப் பேட்டி தர முடியலன்னு தான் உங்கல நைட் டைம்ல வரச் சொன்னேன். நீங்களும் வந்து வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க. அப்போ தான் வீட்டுக்கு வரேன்னு சொல்லி அந்தத் தயாரிப்பாளர் வேற ஒரே நச்சு நச்சினாரு. அவர் கிட்ட இருந்து தப்பிக்க தான் நேத்து ஒரு சீன் போட்டேன். எதையாவது பண்ணி அவரைச் சீக்கிரம் அனுப்பிட்டு வந்து உங்கள பார்க்க நெனச்சேன்.அதான் பேசிட்டு இருக்கும் போதே மயக்கம் போட்ட மாதிரி நடிச்சு கீழ விழுந்தேன். அவரும் பயந்து போய்க் கிளம்பிட்டாரு. உடனே எழுந்திரிக்க வேணாம். அந்த ஆளு திரும்ப வந்தாலும் வருவாருன்னு நெனச்சு தான் அப்படியே கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். ஆனா களைப்புல தூங்கிட்டேன். எனக்காக வெயிட் பண்ணி சடஞ்சு போய் என்னைத் தேடி நீங்க மாடிக்கு வந்திருக்கீங்க போல. நான் விழுந்து கெடந்தத பார்த்துட்டு பயந்து போய் நீங்களும் ஓடியிருக்கீங்க போல" என்று கூறிவிட்டுச் சிரிக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நொந்துகொண்டனர்.
"சாரி ஃப்ரண்ட்ஸ்! இன்னைக்கு ஈவினிங் நிச்சயம் நாம சந்திப்போம். இப்போ நான் கிளம்பறேன்" என்ற கமலியை இருவரும் பரிதாபமாகப் பார்த்தனர். நேற்று இரவு அவர்கள் ஓடிய ஓட்டம் நினைவிற்கு வந்தது.நொந்து போயினர் இருவரும்.
"நீங்க பண்ணிட்டு இருக்குற படத்தோட பேரென்ன மேம்" என்றான் ஹரீஷ் .
"ரெண்டு கோமாளிகள்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சிரித்தபடி நகர்ந்தாள் கமலி.
#548
40,400
400
: 40,000
8
5 (8 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Na.GOPALAKRISHNAN
Darahikannan
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50