JUNE 10th - JULY 10th
மனப்பிறழ்வு
அழகர்சாமி ரெங்கராஜன்
உலகத்தின் உண்மை தான் என்ன? இப்படி விபரீதமாக உறுத்தியபடியே மிதக்கவிடுகிறதே, தூரத்தில் ஏதோ ஒன்று நகர்வது போல் தெரிந்தது ஆ... அது என்... செல்லக் குழந்தை: ஐயையோ அது ரோட்டைபார்த்து போகிறது.. என்னுள் ஏதோ ஒரு வேகம் சட்டென்று எழுந்து குழந்தையை பிடிக்க ஓடுகிறேன். யாரோ என் கையை பிடித்து இழுத்தது போல இருந்தது, வேகமாகவும் ஆத்திரத்துடனும் திரும்பினேன். ஒரு இளவயதுக்காரன் என் கையை பிடித்திருந்தது தெரிந்ததும், வலது கையால் அவன் கன்னத்தில் பளார் பளார்ரென்று பலங்கொண்ட மட்டும் அறைந்தேன், அவன் உதட்டோரம் இரத்தம் வழிந்தது. அவன் கன்னத்தில் விழுந்த அறையின் வலியைவிட மனவலி அதிகம் அவன் முகத்தில் தெரிந்தது. மன வலியை மறைத்தபடி, கண்களில் வழிந்த கண்ணீருடன்,
"அம்மா எங்கம்மா போர" என்றான்
யாரிவன் என்னை அம்மா என்று சொல்கிறானே, கூர்ந்து பார்க்கிறேன் மீசை அரும்பிய சின்ன முகம், எண்ணைப் பிசுக்குடன் எங்கிருந்தோ ஓடி வந்த களைப்பு, நெற்றியில் வேர்வை முத்துக்களுடன்... பார்த்த அந்த மெல்லிய பார்வையில் இருந்த எதுவோ, அவனிடமிருந்து விலக மறுத்து, அந்த முகத்துக்குள் ஏதோ மறைந்திருந்தது..
குறு குறுவென்ற அழகு கண்களுடன் அழகான அகன்ற நெற்றியில் காலையில் வைத்த கருஞ்சாந்து பொட்டு, கின்னம் போன்று உப்பிய கன்னம் அதில் பாதி அழிந்து இளிவிய திருஷ்டிப் பொட்டு அதில் அழகிய ரோஜா இதழ் போன்ற உதடுகள் என் மார்பை நோக்கி பாய்ந்து சப் சப்பென்று உருஞ்சுவது போல் தோன்றியது. என் மனசே உள்ளுக்குள் கெஞ்சிக் கொண்டது: மறுபடியும் அடிக்க மேலே எழுந்த கை கிழே தணிந்தது, எனக்கு ஏன் இப்படி ஒரு அகங்காரம் அவனையா... இப்படி அடித்துத் தொலைத்தேன். என்னை அறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. எந்தவொரு உணர்ச்சியும் உடம்போடு இன்னும் ஒட்டிக் கொண்டிருப்பதில்லை, அவை தன்னுடையவை தானென்று உறுதிப்படுத்திக்கொள்ளவும் முடியவில்லை. மனத்தின் ஒரு ஓரத்தில் துளிர் விட்ட அந்த ஏக்கம் என்னை மூழ்கடிக்க முற்படும்போது. தலைக்குள் மறுபடியும் நமைச்சல் எடுத்தது. என் கனவுகளில் அடிக்கடி வந்து துன்புறுத்தும் காட்டு விலங்கு மனிதர்களின் கோர முகம் என்னை மெல்லுவது போல தோன்றியது.
சுவற்றின் மேல் உட்கார்ந்திருந்த அந்த பெரிய அண்டங் காக்காய் பெரிய குரலெழுப்பிவிட்டுத் கருப்பு சிறகுகளை தன் மூக்கால் கோதிக்கொண்டது.
சட்டென்று நினைவுக்கு வந்தது , ஆ... என் குழந்தை ரோட்டைப் பார்த்து போனானே, விருட்டென்று திரும்பினேன் கையை விடுவித்துக் கொண்டு திமிறி ஓட எத்தனித்தேன். வேறு ஒரு கருத்த முரட்டுக் கை என் வலக்கையை பிடித்தது, கோபம் தலைக்கேற திரும்பினேன், கலைத்து விட்ட மேகம் போல தலைமயிறு, நெற்றியில் சிறு சிறு அம்மை தழும்புகளுடன் அடர்ந்த புருவத்துக்கு கிழே ஒடுங்கிய கண்களுடன், உள்ளடங்கிய கருவிழியில் சிறிது வெள்ளைகள், கரும் மஞ்சளில் இருந்தன, கன்னம் ஒடுங்கி குழிவிழுந்திருந்தது, ஒற்றை நாடியில் கம்பளிப்பூச்சியின் முதுகில் நீண்டு நீண்டு தெரியும் உரோமம் போன்ற மீசையுடன் பாழுங் கிணற்றில் தெரியும் பாசி படர்ந்த கருமையான உலர்ந்து போன உதடுகள், காவி படிந்த பற்களுடன்,
"சரோஜா எங்கம்மா போர" என்றான்
இடது கையை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டு மார்பில் கை வைத்து பலமாக உந்தித்தள்ளினேன், அவன் நிலை தடுமாறி அருகே இருந்த தூணில்போய் மடாரென்று முட்டினான், கைகளிரண்டையும் பின் மண்டையில் அழுத்திய படி உட்கார்ந்தான். கட்டியிருந்த கையிலிக் கிழிசலில் அவன் உள்ளே அணிந்திருந்த அழுக்கடைந்த அண்டர் வேர் அசிங்கமாய் தெரிந்தது.
பயம் திடீரென்று நெஞ்சை உலுக்கியது, இயல்புக்கும் ஒவ்வாத கோபமும் வெறுப்பும் ஒரு காரணமும் இல்லாமல் கொலை வெறியோடு கூடவே ஒரு வெலவெலப்பு , எப்படியோ மனத்தை திடப்படுத்திக் கொண்டு கீழே விழுந்தவனை உத்துப் பார்த்தேன்.
நன்றாக படிந்து சீவிய தலையுடன் மாசு மறுவற்ற ஏறிய நெற்றியில் அழகான அடர்ந்த புருவம், கூர்மையான கண்களுடன் எடுப்பான நாசி அதற்கு கீழ் வில் போல வரைந்தது போன்ற மீசையுடன், களிமண் பூசப்பட்ட தாழ்ந்து சரிந்திருந்த ஒரு சிறிய குடிசையில், சானியால் மெழுகிய அந்த தரையில், ஆடையில்லாத என் மார்பில் புதைந்த போது அந்த கூர்மையான கருப்பு முனையில் அவன் மீசை குத்தியது.
தலைக்குள் ஏதோ ஒன்று வெடிப்பது போன்று உணர்ந்தேன். காரண காரியமில்லாமல் என் மனம் ஊகித்து வைத்திருந்த அனைத்தும், வேறு யாருக்கோ சொந்தமானதைப் போல அசைவற்றிருக்கும் என்று தோன்றியது. திமிறிக் கொண்டு அசுர பலத்தோடு அவனது வயிற்றில் உதைத்தேன்,
" ஐய்யோ " என்ற அலறலுடன் அவன் அருகே ஒரு இளவயது பெண் வந்து தாங்கிப் பிடித்தாள். ஆத்திரமும் கோபமும் மேலும் அதிகரிக்க அந்தப் பெண்ணின் தலை முடியை பற்றி அவள் கன்னத்திலும் ஓங்கி அடிக்க கையை ஓங்கினேன் யாரோ அருகிலிருந்த ஆள் என் கையை பிடித்துக் கொண்டான்.
"ஏம்மா இப்பிடி" என்ற வார்த்தைகள் உணர்ச்சிகளின் உந்துதலில் அழுந்தியபடி அவள் கண்களில் முட்டி நிற்கும் ஈரம் உடைந்து, கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.
அழகிய வட்ட முகம் இரண்டு புருவத்திற்க்கும் நடுவே சின்னதாக ஒரு சிவப்பு ஸ்டிக்கர் பொட்டு, சோகமான நிலையிலும் அவளது கண்களில் வழிந்த கண்ணீர் துளிகளில் பட்டுத் தெறித்த சூரிய ஒளியையும் தாண்டி அவளது முகம் பிரகாசித்தது.
அந்தக் குரல்... ? கேட்ட குரல் போல இருந்தது, அடிவயிற்றில் கொதித்த இனந்தெரியாத உணர்ச்சி, நெஞ்சு வரை ஏறி தெறித்தது, சுவரில் மாட்டியிருந்த எண்ணெய் விளக்கில் மங்கலான வெளிச்சத்தில் அழகிய குட்டிக் கால்களுடன் தத்தித்தத்தி ஒடி வந்து காலை கட்டிக் கொண்ட, அந்த பூ போன்ற கைகளை பற்றி தூக்கி அழகிய பஞ்சு மிட்டாய் போன்ற கன்னத்தை கல்வியது போன்ற உணர்வு, பிஞ்சு குழந்தையின் கண்கள், அவளது வாய், அவளது வன்னமயமான வழு வழு சருமம், எல்லாம் என்னை ஆட்கொண்டது. அந்தக் குழந்தையின் சிரிப்பை பார்த்த போது எனக்குள் ஏதோவொன்று இறுகியது.
அருகே டீக்கடையில் " மருத மலை மாமனியே " என்ற பாடல் சத்தமாக... ரோட்டில் லாரி வரும் சத்தமும் கேட்டு திரும்பினேன் குழந்தை ஓடினானே... என்று நினைவுடன் வேகமாக ஓடினேன்.
என் பின்னால் எல்லோரும் ஓடி வரும் சத்தம் கேட்டது, திடீரென்று எதற்காக ஓடி வந்தோம் என்று மறந்துவிட்டது. அந்தக் காலை நேரத்தின் பேதலிப்பு வேறொரு வகையான வெறி என்னை ஆட்கொண்டது. ஒரு விதமான புதைச்சகதியில் சிக்கிக் கொண்டிருப்பது போன்ற தோற்றம், என் பார்வை ரோட்டோரம் நான் இது நாள் வரை சேர்த்து வைத்திருந்த பழைய கூடை, பழைய சட்டி, உடைந்த சேர், கிழிந்த போர்வை, விரித்து படுக்க வைத்திருந்த பாய், விளிம்பில்லா பிளாஸ்டிக் குடம், கை பிடியில்லாத கரண்டி, மூடிவைக்க வைத்திருந்த விளம்பர பிளக்ஸ் போர்டுகள் அனைத்தும் சிதறிக் கிடந்தது. என் குழந்தைகளுக்காக நான் சேர்த்த அழகான உடைந்த பொம்மைகள் அனைத்தும். பதறியபடி அங்கே ஓடினேன், வெறுப்பும் ஆத்திரமும் வந்து தலை சூடேறியது, காறி துப்பியபடி அருகே கிடந்த கல்லை எடுத்து என்னை நோக்கி ஓடி வந்தவர்களைப் பார்த்து எறிய எத்தனித்தேன், எல்லோரும் பயந்து அங்கேயே நின்றனர், அந்தப் பையன் கத்தினான்
"அம்மா நா ஒம் மவன் ராஜு என்னத் தெரியலையா?" என்றான் அழுகையுடன். அந்தப் பெண் தலையில் அடித்துக் கொண்டு கூப்பாடு போட்டாள்.
"ஆசை ஆசையா எங்களவளத்த அம்மாவுக்கு இப்படி ஆயிட்டதே" என்று.
ஏன் இவர்கள் என்னிடம் இதெல்லாம் சொல்ல வேண்டும் கல்லை வீச மேலே எழுந்த கை கெஞ்சுவது போலிருந்தது. எனக்குள்ளிருந்த மனிதனைத் தேடிக் கொண்டிருந்தேன், எந்த மிருகமும் மனித வெறுப்புணர்வின் அவலங்களையும் கொடுமைகளையும் கொண்டிருப்பதில்லை.
சிலர் என்னை அமுக்கி பிடித்து விட்டனர், நான் திமிறினேன் என்னன பிடித்திருந்தவர்கள் மேல் காறி துப்பினேன். என் கைகள் கட்டப்பட்டது. கொஞ்ச நாளாக எனக்கு டீயும் பன்னும் தந்த டீக்கடைக்காரர் சோகமாக பார்த்தார். காலையும் மாலையும் சோறு தந்த கோழிக் கடை பாய் வீட்டுகார அம்மாள் கண்ணீருடன், வாஞ்சையோடு பார்த்துக் கொன்டிருந்தாள்.
அந்த இளவயது பெண் என் அருகில் வந்து என் கிழிந்து அழுக்கேறிய சேலையை சரி செய்தாள். என் இடுப்பில் கட்டி இந்த மடியை தொடும் போது நான் திமிறினேன். அப்போது அதிலிருந்து சின்ன பால் கிண்ணம் கீழே நழுவி விழுந்தது. அதைப் பார்த்த அந்தப் பெண் கதறி அழுதாள். என் நினைவு ரோட்டோரம் போன குழந்தை மீதே இருந்தது.
குண்டுக்கட்டாக என்னை ஒரு ஆட்டோவில் திணித்தனர். அந்தப் பையனும் அந்த மனிதரும் நான் திமிற முடியாமல் பிடித்திருந்தனர். ஏதோ பழக்கப்பட்ட வேர்வை நாற்றம், என் நினைவுகள் எங்கோ தடுமாறியது. கண்கள் எரிந்தன. உடம்பு சிறிது நடுங்கியது, சூடாக இருப்பது போல் தோன்றியது மூளைக்குள் ஏதோ ஊர்ந்து வருவதை படபடப்போடு உணர்ந்தேன்.
ஆட்டோ ஒரு பெரிய கட்டிடத்தின் முன் நின்றது உள்ளேயிருந்து சிலர் வந்து என்ன அமுக்கிப் பிடித்து கிழே இறக்கி உள்ளே அழைத்துச் சென்றனர். ஏன் இப்படி என்னை துன்புறுத்துகிறார்கள் என்று புரியவில்லை. சித்திரவதை நிபுணர்கள் போல் சிலர் நெருங்கி வந்து சோதித்கின்றனர். இந்த சிறிய அறை இருட்டாகவும் சுத்தமாகவும் மருந்து வாசனையுடன் இருந்தது. வளர்ந்த ஆள் ஒருவர் என் கைகளில் ஏதோ ஒன்றை இறக்கினார். நான் அந்த அறையின் வாசலை பார்த்தேன். அந்த இளவயது பையனும், அந்தப் பெண்ணும், அந்த மனிதரும் கண்களில் கண்ணீருடன் சோகமே வடிவாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நீல நிற திரையை விலக்கி வெள்ளை உடைகளில் மிடுக்காக உடை உடுத்திய நர்ஸ்சுகள் அனிவகுப்புக்கு முன் அழகிய வெள்ளை கோட் அணிந்து உள்ளே வந்த டாக்டர் பரிசோதித்தார்.
"ஒருசில டெஸ்ட் எடுத்தால் சரியா புரிஞ்சுடும் " என்றார்.
கண்ணாடியை தாண்டி ஊடுருவும் எலக்ட்ரிக் கண்கள். குத்துவேன் என்பது போலக் கூரிய மூக்கு. எல்லோரும் நிமிர்ந்து பார்த்து பேச வேண்டிய உயரம். அதிகம் உண்ணாமல் பாதுகாத்த அளவான உடம்பு. எல்லா டாக்டர்கள் போல சுருக்கெழுத்தில் பேசும் நேர்த்தி.
கூரையிலிருந்து துணுக்குகளும் பொடிக்கற்களும் மணலும் என் மீது விழுவது போலிந்தது. தலை சுழன்றது, தூரத்து மனிதர்களின் முகங்களும், வாய்களும், கலைவையாகி பிசுபிசுபித்த கண்களினூடாக தெரிந்தது. பல குரல்கள் மேலே சுழன்று கொண்டிருந்த மின் விசிறிகளின் ஓசையை காட்டிலும், மெதுவாக மெல்லும் இருட்டையும் மீறி கேட்Lது.
#551
45,400
400
: 45,000
8
5 (8 )
prstnpsc
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
purushothraj1798
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50