காதல் சாதி(தீ)..

பெண்மையக் கதைகள்
4.9 out of 5 (67 Ratings)
Share this story

காதல் சாதி(தீ)…

"சாதிகள் ஒழிய உதவுவது கல்வியா….

நடுவர் அவர்களே, கேள்வியே இங்க அபத்தமானது…

சாதிகள் இல்லையடி பாப்பா

குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

அப்படின்னு பாரதி பாட்டு சொல்லித்தர ஸ்கூல்ல

சேர கொடுக்கப்படுற அப்பிளிக்கேஷன்ல முதல் பத்து கேள்விகள்ல அதிமுக்கியமான ஒன்னு சாதி.

ஸ்காலர்ஷிப்ல தொடங்கி என்டரென்ஸ் எக்ஸாம் வரை சாதி கோட்டால தான் இங்க எல்லாம் நடக்குது…

இதுல கல்வி சாதிய ஒழிக்க போகுதாம்.

ஆகுற கதையா இதெல்லாம்.

ஆனா அதுவே பாருங்க தலைவரே , இருமனம் சேரும் காதல் திருமணத்தில் தானுங்களே சாதி ஒழிந்து போகும்.

பெத்தவங்க செய்து வைக்குற திருமணத்தில் இல்லை நடுவர் அவர்களே….

காதல் திருமணங்களில் மட்டுமே தான் அந்த மேஜிக் நடக்கும்.

பெத்தவங்க நிச்சயக்கிற கல்யாணத்துல எப்படி ஜாதி இல்லாமல் போகும். கல்யாணம் அப்டின்னு சொன்னதுமே அவங்க மனசுல வர்ற முதல் விசயம் சாதி தான்.

அதுக்கு பிறகு தான் ஜாதகம், வேலை, குடும்பம் இத்தியாதி இத்தியாதிகள் எல்லாம்.

ஜாதிக்கு ஒரு திருமண தகவல் மையமும், இணையதளங்களும் இருக்கதே அதுக்கு ஒரு சாட்சி.

அதுவே காதல் திருமணத்தில பாருங்க..

மனசு தான் அதுல முதலிடம்.

இனம், மதம், மொழி, நாடு அட சில இடங்கள்ல கண்டங்கள் கூட கடந்து வர்றது தான் காதல்.

காதல் சுத்தமே பார்க்காதாம்…

நா சொல்லல மக்களே கவிபேரரசு வைரமுத்து அய்யா சொல்றாரு… "

அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது.

நடுவரும் " அப்படி போடு.. அவரே சொல்லிட்டாரா…அதுக்கு பின்ன நாம ஒன்னும் சொல்ல முடியாதுல" என சொல்லி ஊக்குவிக்க, பேச்சாளர் தொடர்ந்தார்.

"அப்படி இருக்கும் போது இதுல மத்தத எங்க பார்க்க…"

ஆகவே சாதிகள் ஒழிய பெரிதும் உதவுவது காதலே.. காதலே…என்று கூறிக் கொண்டு….."

என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஓடிக்கொண்டு இருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை நிறுத்தி விட்டு மதிய உணவை தயார் செய்ய எழுந்தாள் சக்தி.

கைகள் பழக்கத்தில் வேலைகள் செய்ய, மனதுக்குள் சில கேள்விகள் அவளை குடைந்து கொண்டே இருந்தது.

அவளுக்கும் காதல் திருமணம் தான். படித்து இரு பட்டங்கள் பெற்று உடன் வேலை பார்த்த சிவாவை மூன்று ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்தவள் தான் சக்தி.

ஆனால் சாதி ஒழிந்ததா?

மில்லியன் டாலர் கேள்வி.

இருமனம் மட்டுமே இணைவதால் காதல் எளிதாய் கை சேர்ந்தது. ஆனால் திருமணம்???????

அரசின் சட்டப்படி இருவரும் ஒரே தட்டில். ஆனால் நடைமுறை பழக்கவழக்கம் அனைத்திலும் கிழக்கும் மேற்குமாய் இரு குடும்பங்களும்.

" என்ன தான் லவ் மேரேஜ்ன்னு சொன்னாலும் எங்க இனத்துல பொண்ணுவீடு தான் கல்யாண செலவு முழுசா செய்யணும். அதுனால அதை நீங்களே பாத்துக்கோங்க" என்று சக்தி - சிவா திருமண நிச்சயத்தில் ஆரம்பித்தது சாதியின் சத்தம்.

" உனக்காக தான் இந்த கல்யாணத்துக்கு நாங்க சம்மதிச்சதே. நம்ம பக்கம் மாப்பிள்ளை வீட்ல தான் கல்யாணம். உங்க அண்ணனுக்கு நாம தானா செஞ்சோம். இப்போ என்ன புதுசா ஆரம்பிக்கிராங்க பையன் வீட்ல…அதெல்லாம் முடியாது… சொல்லி வை மாப்பிள்ளை கிட்ட."

ஜெகஜோதியாய் பற்றி எரிந்தது இரு பக்கமும்.

தொட்டதுக்கும் முட்டிக்கொண்ட இரு வீட்டாரின் சாதி தீயின் நடுவே மாட்டிக்கொண்டு தவித்தது காதல் மனங்கள்.

" உங்க ஆளுக போல இங்க மூனு நேரமும் சாதம் சாப்பிட மாட்டோம். ஒரு நேரம் தான் சாதம். காலைக்கும் இராத்திரிக்கும் பலகாரம் தான் இங்க. எது செய்றதா இருந்தாலும் கவனிச்சு என்கிட்ட கேட்டு செய்."

திருமணம் முடிந்த மூன்றாம் நாள் உரத்து கேட்க ஆரம்பித்த வார்த்தைகள், சாதியின் சதியே.

" ஏன் டா சோறுன்னு சொன்னா சொத்து எதும் குறஞ்சிடுமா… அப்போ எதுக்கு அந்த ஒரு நேரம் மட்டும் சா….தோ….ம் சாப்பிடுறீங்க… அப்பவும் பீட்ஸா பர்கர் சாப்ட வேண்டியது தான… பெரிய எலிசபெத் பேராண்டிக…"என்று கணவனிடம் நக்கலாய் சொல்லி சென்றாள் காதல் மனைவி சக்தி.

கிருத்திகை, பிரதோஷம் என்று இருக்கும் குடும்பத்தில் தீபாவளி, பொங்கல் மட்டுமே விசேஷம் என்று வாழ்ந்தவள் மருமகளாக வந்தாள் என்ன நடக்குமோ அதுவே மிக சிறப்பாக நடந்தது.

" என்ன இது, ஒரு நாள் கிழமை எதும் இல்லையா உங்களுக்கு…" என்ற பாட்டியின் கேள்விக்கு

" நாளும் கிழமையும் ஒன்னு தானே டா புருசா" என்று கடந்து விட்டாள் சக்தி.

" எங்க ஆளுகள்ல வருசம் முழுசுக்கும் ஒரு பண்டிகை இருக்கும். சித்திரா பௌர்ணமில ஆரம்பிச்சு பங்குனி உத்திரம் வரை விசேஷம் தான் எங்க ஆளுங்களுக்கு." எந்த மாமியாரின் சொல்லுக்கு

" ஒரு மாசம் கூட சும்மா இருக்கிறது இல்ல. இதெல்லாம் கண்டுபிடிச்ச கடன்காரன் என் கைல சிக்கனும் அவன கைமா பண்ணிட்டு தான் மறு வேலை." மல்லுக்கட்டினாள் மனதோடு.

" ஒரு அமாவாசை விரதம் தெரியல.. என்ன ஆளுங்களோ…" என்ற நாத்தானாரின் மாமியார் கேள்விக்கு

" நீங்க இருக்கிறது பேரு விரதமா… மனசாட்சி தொட்டு சொல்ல சொல்லுங்க பா… அன்னைக்கு தான் பாயாசம் எல்லாம் வச்சு வகையா சாப்பாடு இங்க நடக்குது. எங்க ஊர்ல எல்லாம் விரதம்ன்னா சாப்பாடு சாப்பிட மாட்டாங்க…இதெல்லாம் கேக்க மாட்டியா பாரதி நீ…. எனக்கு ஒரு நியாயத்தை சொல்லுங்க நாட்டாமை" என்று நாத்தனாரிடமே நியாயம் கேட்டாள்.

இத்தனை பேசும் சக்தி தான் அந்த சமையலை செய்கிறாள் இன்று வரை.

" எங்க இனத்துல எல்லாம் காதுகுத்துக்கு தாய்மாமன் தங்கத்தில ஊசி கொண்டு வருவாங்க…" என்று குத்தி காட்டிய மாமனாருக்கு

" எதுக்கு கண்ணுல எதும் குத்திக்க போறாங்களோ… டாக்டர் கிட்ட தான் காது குத்துவாங்களாம்….எங்க அண்ணன் மடில பிள்ளையும் உட்கார வைக்க மாட்டங்களாம்…. பின்ன எதுக்கு அண்ணன் தங்க ஊசி கொண்டு வரணும்…" சிவாவின் சட்டையை பிடித்தாள்.

"கல்யாணம் ஆகி எட்டு வருசம் ஆக போகுது நம்ம பக்க பழக்கம் ஒன்னு வர்ல டா இன்னும் உன் பொண்டாட்டிக்கு…" என்று கொளுத்தி போட்ட ஒன்னு விட்ட அத்தைக்கு,

" இன்னும் இருபது வருஷம் ஆனாலும் வராது செல்லம்… வாய்ப்பில்லை ராசா வாய்ப்பில்லை…" என கவுன்டர் குடுத்தாள் அருகில் இருந்த கொழுந்தன் மனைவியிடம்.

" உங்க வீட்ல பரவாயில்லை அக்கா.. எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு புதுசா வந்து இருக்கவங்களும் லவ் மேரேஜ் தான். ஆனா பாருங்க கவர்ன்மென்ட் கோட்டா வேண்டி பிள்ளைங்களுக்கு அவங்க அப்பாவோடத குடுத்து இருக்காங்க. வீட்ல அந்த அம்மா பக்கத்து பழக்க வழக்கம் தான். இப்போ பாருங்க ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..." என்று புது குண்டு ஒன்றை குடும்பத்தில் வீசி செல்லும் தன் சின்ன மாமியாரின் தலையை எதை கொண்டு உடைக்கலாம் என்று யோசிக்க மட்டுமே முடிந்தது சக்தியால்.

பிள்ளைகளுக்கும் சாதி சான்றிதழ் வாங்கப்பட்டது…

கணவன் பிறந்த சாதியை கொண்டு.

தினம் ஒரு முறையேனும் கொட்டப்படும் சாதிய எச்சங்களுக்கு நடுவே கடந்து போகிறது அவர்களின் காதல் திருமணம்.

இதில் எங்கு இருந்து ஒழிந்தது சாதி…

அட போங்க டா என்று இருந்தது சக்திக்கு.

"இனிமேல் எவனாச்சும் காதல் திருமணங்கள் சாதிய ஒழிக்கும்ன்னு பேசட்டும் அவனுங்க வாய்லயே வெட்டுறேன்" என்று கூறிக்கொண்டே வாழைக்காயை வெட்டினாள் சக்தி.

கொடி பிடித்து கோசம் போட்டு கோட்டையை பிடிக்கும் எண்ணமில்லை சக்திக்கு. தனது சக்திக்கு ஏற்ப வாழ்க்கையை சச்சரவுகள் இல்லாது கொண்டு போக துடிக்கும் சராசரி இந்திய பெண்.

சாதிக்காக ஆணவக்கொலைகள் நடக்கும் இந்த சமூகத்தில் சாதிகள் இல்லை என்று எப்படி மார்தட்ட முடியும்.

காதல் திருமணத்தால் சாதிகள் ஒழிந்து போனது என்றால் அத்திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு எப்படி சாதி சான்றிதழ் கிடைக்கிறது.

காதல் திருமணங்களில் சக்திகளும் - சிவாக்களும் இடம் மாறி இருக்கலாம். ஆனால் சாதி அசைக்க முடியாத ஒன்றாக தான் இருக்கிறது.

என்ன தான் பொதுவெளியில் பேசிக்கொண்டு இருந்தாலும் காதல் திருமணங்கள் மூலம் சாதிகள் அவ்வளவு எளிதில் ஒழிவதில்லை என்பதே நிதர்சமான உண்மை.

இணையும் இருமனங்களில் எது ஆளுமையோடு, பொருளாதார பின்புலத்தோடு இருக்கிறதோ அதன் சாதி வரும் தலைமுறைக்கு கடத்தப்பட்டு வருகிறது என்பதே முகத்தில் அறையும் நிஜம்.

விதிவிலக்குகள் இருக்கலாம். பெரும்பான்மை என்பது தானே சமூகம்.

ஆயிரம் பேசலாம். புரட்சிகள் செய்யலாம். ஆனாலும் இந்த மண்ணில் வாழும் மனங்களில் இருந்து சாதியை களைவது என்பது பகீரத பிரயத்தனமே…


முற்றும் வைக்க விரும்பாத என் முதல் முயற்சி…

Stories you will love

X
Please Wait ...