JUNE 10th - JULY 10th
சூரியனின் வரவிற்காகக் காத்திருந்த சூரியகந்தியும், தாமரையும் சூரியனின் கதிர்கள் பட்டபோது, தாயின் முகம் கண்ட சேய் போல மலர்ந்தன. அழகிய சிவப்பு நிற கொண்டயுடைய சேவல்கள் கூவுகின்றன, ஒவ்வொரு சேவலும் மற்ற சேவல்களுடன் போட்டிப் போட்டுக் கொண்டு கூவுவதில் தன் திறமையை வெளிக்காட்டி பேடுகளை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில், பறவைகள் கீச்சிடும் சத்தமும், அதோடு சில மனிதர்களின் நடமாட்ட சலசலப்பும் சேர்ந்து சூரியனின் வருகையை உணர்த்தும் அக்கால அலாரம் ஆகும். இச்சத்தங்களெல்லாம் கேட்டவுடனே உறக்கத்தைக் கலைத்து விட்டு, இரைதேடச் செல்லும் பறவைகள் போல, மனிதர்களும் அன்றாட கடமைகளைச் செய்ய பறந்து செல்கிறார்கள். தினமும் சூரியனையே எழுப்பிவிடும் இவள், இன்று சூரியன் வந்துவிட்டது என்று உணர்த்தும் சத்தங்களைக் கேட்டு எழுந்த்திருக்கிறாள். சூரியன் கிழக்கில் பிறந்திடுச்சு வேலை கிடக்கு என சொல்லிக் கொண்டே பட்டுனு எழுந்திருச்சு போய் வாசல்ல தண்ணி தெளிக்கப் போகும்போது அடிவயிற்றில் இருந்து குமட்டிக்கொண்டு வாந்தி வந்தது. வாந்தி எடுக்கும் போது வந்த சத்தம் வாந்தி வருகிறது என்பதை மட்டும் உணர்த்தவில்லை, பிறக்கப் போகும் குழந்தையின் வருகையையும் உணர்த்துகிறது. வாந்தி எடுக்கும்போதே நினைவு ஏற்கனவே இருக்கும் ஒரு கைக்குழந்தையும் ஓடி விளையாடுற வயசில இருக்கும் இரண்டு குழந்தைகள் பற்றியும் யோசிக்கிறது. இந்த மூனு பேரையும் பாத்துக்கவே முடியாதக் காரியமா இருக்க, இந்த பாழாப்போன உடம்ப வச்சிக்கிட்டு இன்னொன்னா. அப்படி யோசிக்கும்போதே உடம்பெல்லாம் சிலிர்த்துப் போகுது, படபடனு வந்து உட்கார்ந்தாச்சு, உட்கார்ந்த நிமிசத்துல வேலை நியாபகம் வந்ததும் கால்ல சக்கரத்த கட்டிக்கிட்டு ஓடியாச்சு, வேலைச்சுமைக்கு இடையிலும் அப்பப்ப வயிர தடவிக்கொண்டே வேலை எல்லாம் முடிச்சாச்சு. அப்டின்னு நினைக்கும்போது, சாப்பாடு எடுத்து வைடி அப்டினு குரல் கேட்டதும் பானையில இருந்த சோறுல பாதிய ஒரு தட்டுல போட்டுக்கிட்டு, கத்திரிக்காய் மிதக்கும் குழம்பு கிண்ணத்த எடுத்துக்கிட்டு போய் வைச்சா, முதல்ல தண்ணி கொண்டுவந்து வை, உடனே தண்ணி கொண்டு வந்து வச்சிட்டு, கிழவனார்க்கு கஞ்சி இன்னும் ஊத்தி வைக்கல வச்சிட்டு வரேன்னு தன் சேலை முந்தானைய இடுப்பில சொருகும்போது வேலை நினைவில மறந்து போன விசயம் மின்னல் மாதிரி வந்து பயமுறுத்துகிறது. அடிவயிற்றை தொட்டுப்பார்த்துக் கொண்டே, இவர் சாப்பிட்டு முடிக்கட்டும் சொல்லுவோம் என்று நினைத்துக்கொண்டே, கிண்ணத்துல கஞ்சியும் தண்ணியுமா ஊத்திக்கிட்டு கஞ்சிக்கு கடிக்க கத்தரிக்காயும் குழம்புமா ஒரு தட்டுலயும், மிளகா வத்தலும் கோவக்க வத்தலும் ஒரு தட்டுல எடுத்துக்கிட்டு இருக்கும்போதே, குடும்மா நான் எடுத்துக்கிட்டு போறேன், நீ தண்ணி கொண்டு வாத்தானு சொல்லிட்டு திண்ணையில போய் கஞ்சி கிண்ணத்தோட உட்கார்ந்திட்டாரு, முன்னாடி தான் வருசமே கூழா குடிச்சிங்க இப்பதான் நெல்லுச்சோறு அப்பப்போ நெல்லுச்சோறு கிடைக்குதே சோற சாப்பிட வேண்டியது தானே என்று சொல்லிக்கிட்டே சொம்ப வச்சிட்டு நின்றாள். என்ன தான் சோறு கிடைச்சாலும் அப்பா குடிச்ச கூழுக்கும் கஞ்சிக்கும் ஈடாகுமானு சொல்லிகிட்டே முதல் வாய் கஞ்சிய வச்சுட்டு மென்னுகிட்டே, பெரிய மனுசி எங்க போனா ஆளவேக்காணோம் வயலுக்குப் போயிட்டாளா. அத்த சீக்கிரமே போயிட்டாங்க போல ஆளவே பாக்கலனு சொல்லிட்டு இருக்கும்போது, சாப்பாடு நடக்குதாக்கும் அப்டினு கையில இருந்த மண்வெட்டிய போடுற சத்தம். காலையில வெள்ள வெயில் வரவரைக்கும் தூங்குனா குடும்பம் விளங்கும். அதுக்காக உன்ன மாதிரி தூங்காம மூணு மணிக்கே எழுந்திரிக்கணுமா. நீ அப்டி எழுந்திருச்சு என்ன வேலைய பாத்துப்புட்ட, வயலுக்குப் போறேன்ற பெயரில வெட்டின களையவே தினம் வெட்டுற, போமா போய் சாப்பிடுமா. இவ சமைச்சத போய் நான் சாப்பிடுவேனா, விறக பத்த வைச்சு, கொதிக்கிற உலையில அரிசிய போட்டு தனக்கு மட்டும் சோறு வடிச்சு உடனே தட்டுல போட்டு, தொண்டையே வெந்து போற அளவுக்கு வெந்தும் வேகமா இருக்க சோற கையில உருட்டி உருட்டி வாயில போடுறாங்க வாய் சிவந்து போய் இருக்கு, அது வெத்தல போடுற பழக்கத்துனால அப்டி இருக்கா, சுடசுட சாப்பிடுறதுனால இருக்கானு தெரியல, சாப்பிடுறத பார்த்துட்டு கிழவனார் தன் தலையில அடிச்சிக்கிட்டே இவ திருந்தவே மாட்டா, மருமக சமைச்சத சாப்பிட்டா குறைஞ்சா போய்டுவா அப்டின்னு சொல்லிக்கிட்டே மந்தய பக்கமா குச்சிய ஊன்றியபடி நடக்க ஆரம்பிச்சிட்டாரு. வீட்டில நடக்கிறதெல்லாம் பார்த்திட்டு இருந்த மகன் எதுவுமே பேசாம, வழக்கம்போல பத்து மணி பஸ்க்கு டவுனுக்கு கிளம்பிட்டார். என்னங்க டவுனுக்கா என கேட்டதுக்கு கூட பதிலே சொல்லாம கிளம்பி போய்ட்டார். ‘சும்மா கிடக்கும் ஆட்டுக்கிடவ வம்பு இழுக்கும் முட்டுக்கிடா சண்டை போல’, சண்டையை நிறுத்த ஆள் இல்லாத நேரத்தில் மாமியார் சண்டையை ஆரம்பித்துவிட்டாள், மாமியார் பேசும் வசவுகளை தாங்க முடியாமல் போய் படுத்துக்கொண்டு அழுகிறாள். பிள்ளைகளின் நினைவு வந்து, விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளை அழைத்து, தன் சோகத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பரிவோடு சாப்பாடு ஊட்டி விடுகிறாள், அப்போது பக்கத்து வீட்டு கூட்டாளிகள் விளையாட கூப்பிட வருகிறார்கள், அவர்களுக்கும் தட்டுல இருந்த சோறை ஒரொரு வாய் ஊட்டி விட்டாள். அம்மா சாப்பாடு போதும்மா நாங்க விளையாட போறோம், நான் தங்கச்சிய விளையாட கூட்டிட்டு போறேன் என்று கூறுகிறான் மூத்தப்பையன், அம்மா நான் அண்ணன் கூட விளையாட போறேன் நீ தம்பிய பாத்துக்க, நீ எங்களுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டுட்டு தானே சாப்பிடுவ அதுனால நீயும் சாப்பிடுமா என்று விளையாட்டு நோக்கத்தோட, மழலை மாறாத சிரிப்போடு சொல்லிட்டு ஓடுகிறாள். தொட்டிச்சேலையை விலக்கினால் கள்ளம் கபடமற்ற முகத்தோடு உறங்கும் குழந்தையின் முகத்தைப் பார்க்கும்போது அனைத்தையும் மறந்தாள். ஆனால் ஓயாத மழைபோல் வார்த்தைகளே கொட்டித் தீர்க்கும் சத்தம் மீண்டும் அவளை அழுகைக்கடலுக்கு கொண்டு சென்றது. மழைக்கு ஒதுங்கும் உயிர்களைப் போல ஒதுங்கும் போது மறந்ததை நினைவூட்ட வாந்தி வந்தது, மனசு மேலும் பாரமானது. தடுமாறிய நடையோடு தொட்டிசேலையின் ஓரமாக சுருண்டு கிடக்கிறாள். டவுனுக்குப் போனவர் வார்த்தைப் புயலுக்குப் பின் வருகிறார், எழுந்திரிமா சாப்பிடு, அத பத்திதான் தெரியும்ல கண்டுக்கிறாம விடுமா. அவர் பேசிட்டு இருக்கும்போது திடீர்னு எழுந்திருச்சு போய் வாந்தி எடுக்கிறத பார்த்திட்டு உடம்பு சரியில்லையா அதான் காலைல இருந்தே முகம் வாட்டமா இருக்கா, சரிவா ஆஸ்பத்திரிக்குப் போவோம். அதெல்லாம் உடம்புக்கு ஒன்னும்மில்ல கருஉண்டாகிருக்கு போல, இதை கேட்டதும் அவர் முகத்தில தெரியுறது சந்தோசமா, வருத்தமா அப்டினு அவருக்கே தெரியல. அப்போ அவருக்கு மூணு வருசத்துக்கு முன்னாடி டாக்டர் சொன்னது தான் நியாபகத்துக்கு வந்தது, இவங்க ரொம்ப பலவீனமா இருக்காங்க அதனால இவங்களுக்கு இந்த மூன்று குழந்தையோட குடும்பகட்டுப்பாடு செய்திடுவோம் போதும், ஆனா இதை இப்பவே பண்ண முடியாது இப்பதான் குழந்தைய பெத்தெடுத்திருக்காங்க உடம்பு நல்லா ஆகவும் கூட்டிட்டு வாங்க அப்டினு சொல்லி மூணு வருசம் ஆகிடுச்சு டாக்டர் கிட்ட போகவே இல்ல. ஆஸ்பத்திரிக்குப் போனா இவளையும் பாத்துக்கணும் மூணு குழந்தையும் பாத்துக்கணும் ரெண்டு பேர் வீட்டிலயும் பாத்துக்க ஆள் இல்ல. அப்பவே மூன்றவதா பிறந்த பையன பார்க்க வரவே இல்ல, உங்க வீட்டில கூட்டிட்டு போய் கூட வச்சு பாத்துக்கோங்க அப்டினு சொன்னதுக்கு, என்னால பாத்துக்க முடியாது நீங்களே பாத்துக்கோங்க அப்டினு சொன்னங்க இப்ப மட்டும் வரவா போறாங்க. எங்க அம்மா இவள தொந்தரவு பண்ணாம இருந்தாலே போதும் அதுவும் நடக்காத காரியம். இப்ப எப்படியும் ஆஸ்பத்திரிக்குப் போய்தான் ஆகணும், சரி விடும்மா நாளைக்கு காலையிலேயே போயிட்டு வந்திடலாம், நீ சாப்பிடு முதல்ல. சூரியன் மறைந்து எங்கும் காரிருள் பரவியது போல் இவர்கள் மனமும் இருளானது. நாளைக்கு டாக்டர் என்ன சொல்லுவர், உடம்பு சரியாகிடுச்சு பிரச்னை இல்ல என்று சொல்லுவாரா... இல்ல அதற்கு எதிர்மறையாகிடுமா என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை அவர்களால். ‘புண்ணை மொய்க்கும் ஈக்கள் போல’ இவருடைய சிந்தனையும் டாக்டர் சொல்லப் போகும் வார்த்தைகளை நோக்கியே வட்டமிடுகின்றன. தூங்கினாலோ இல்லையோ, சூரியனுடனான போட்டியில் சூரியனையும் வென்று முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து, இரண்டு பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பின்னர் மூன்றாவது குழந்தையை தூக்கிக்கொண்டு மூவருமாக ஆஸ்பத்திரிக்கு சென்றன. அங்கு ஒரே கூட்டம் காத்திருக்கின்றன, ‘காத்திருப்பு கொக்கின் கதியகிறதோ அல்லது கிளியின் கதியாகிறதோ தெரியவில்லை.’ ரொம்ப நேரம் கழித்து டாக்டர்கிட்ட போயாச்சு, என்ன செய்யுது, வாந்தியும் மயக்கமுமா இருக்கு டாக்டர். அவங்க பரிசோதனை பண்ணிட்டு, நீங்க கர்ப்பமா இருக்கீங்கனு டாக்டர் சொன்ன உடனே, இவ உடம்புக்கு ஒன்னும் பிரட்சனை இல்லைல டாக்டர் என்று கேட்க்கிறார் . இல்ல இவங்க ரொம்ப ‘பலவீனமா இருக்காங்க’ இந்த குழந்தைய பெத்துக்கவே கஷ்ட்டமாகிடும். மாத்திரை, ஊசியால சரி பண்ணி குழந்தைய பெத்துக்கலாமா டாக்டர். அது முடியாது சார் அவங்க குழந்தைய பெத்துக்கிட்டா கண்டிப்பா அவங்க உயிருக்கே ஆபத்தாகிடும் இல்ல குழந்தைக்கு கூட எதும் ஆகலாம், எப்படி இருந்தாலும் அவங்களுக்கு இதுனால பிரச்சனை தான். இப்பதான் குழந்தை வயித்துல வளரதுக்கான ஆரம்ப நிலை, அதனால கருவை களைச்சிடலாம். டாக்டர் எப்படியாவது சரி பண்ணி குழந்தைய பெத்துக்கலாம். புரியாம பேசாதிங்க அம்மா, அப்டிலாம் சரி பண்ண முடியாது, அப்டியும் பண்ணா உங்க உயிருக்குதான் ஆபத்து, கொஞ்சம் புரியவைங்க சார் அவங்களுக்கு. அதான் டாக்டர் சொல்லுறாங்கள உனக்கு ஆபத்துன்னு. ஏங்க எப்டிங்க வயித்துல இருக்க உயிர அழிக்க முடியும் பாவம்ங்க. ஏம்மா உன்னுடைய வயித்துல உள்ள கரு ரொம்ப ஆரம்பநிலை தான், இன்னும் வளரல அதுனால இது தப்பு இல்ல, பெத்துக்கிட்டா உங்க உயிருக்கு பிரச்சனை வரும் அதான் தப்பு புரியுதா, நான் மாத்திரை தரேன் இதுக்கு மேல உங்க விருப்பம், தரவா சார். மாத்திரைய வாங்கிக்கிறோம் டாக்டர், சரி ஒரு மாத்திரைய இப்போ போனதும் போடுங்க மற்றத காலைல போடுங்க எதும் பிரச்னைனா வாங்க, இப்ப நீங்க கிளம்பலாம்னு சொல்லிட்டு அடுத்த ஆளுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. காலைல வந்தோம் இப்போ பொழுதாகிப் போச்சு, சரி எதாவது சாப்பிடுமா பாவம் இவனுக்கு தான் மதியம் பாலும் பிஸ்கட்டும் வாங்கி குடுத்தோம்,இப்போ சாப்பிட்டு போவோம். இல்ல பிள்ளைகளுக்கு மட்டும் எதாவது வாங்கிட்டு வாங்க வீட்டுக்கு போவோம் நேராகுது. தெருவுல விளையாடிக் கொண்டிருந்த ரெண்டும் பஸ்ல இருந்து வரும் அம்மா அப்பாவ பார்த்திட்டு ஓடிப்போய் எங்க போனீங்கனு கேட்டுகிட்டே கையில இருந்த பையவாங்கி என்ன வாங்கிட்டு வந்தாங்கனு பாக்குறாங்க, உங்களுக்குத்தான் அத வீட்டுல போய் எடுத்துக்கலாம், தின்பண்டத்தை பார்த்துட்டு எங்க போனாங்க அப்பிடின்ற கேள்வியவே மறந்துட்டாங்க. அந்த மாத்திரைல ஒன்னு எடுத்து குடுத்து போடுமா அப்படின்னு சொல்லுறாரு, வேலை இருக்கு ராத்திருக்கு போட்டுகிறேன். மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்துல சமைச்சுட்டு எல்லாருக்கும் சாப்பாடு போட்டுட்டு, தானும் சாப்பிட்டாள். மாத்திரையை போட்டியா, இல்லங்க வேணாம் குழந்தைய பெத்துபோம். உனக்கு பிரச்னை ஆகிடும் மாத்திரையை போடுமா. அதெல்லாம் எனக்கு ஒன்னும் ஆகாதுங்க. அப்படியே மாத்திரையை போடுறதா இருந்தாலும் நீங்க நல்லா யோசிங்க நாளைக்கு கூட போடலாம், அப்படின்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் படுத்துட்டு அதையே யோசிச்சிட்டு இருக்காங்க. ஒரு கட்டத்துக்கு மேல அவங்கள அறியாமலையே எதையும் யோசிக்க விடாம தூக்கம் அமுக்கிருச்சு. அந்த தூக்கத்தினால பெரிய மாற்றமே ஆகிருச்சு. இன்னைக்கு அவங்களுக்கு விடியலே வித்தியாசமா இருக்கு, வழக்கமா காலைல முடிக்க வேண்டிய வேலையெல்லாம் முடுச்சுட்டு, ஏங்க எனக்கு எதாவது ஆகிருச்சுனா மூணு குழந்தைகள யார் பாப்பாங்க அதுனால மாத்திரையை போடவானு அழுதுக்கிட்டே கேக்குறாங்க. நீ அழாத உனக்கு ஒன்னும் ஆகாது மாத்திரையை போட வேணாம். என்ன சொல்லுறிங்க போட வேணாமா எனக்கு ஒன்னும் புரியல, நேத்து வேற மாதிரி பேசுனீங்க, இப்ப வேற மாதிரி பேசுரீங்க. ஏன் இப்ப திடீருன்னு மாறீட்டிங்க, அதுவா ராத்திரி ஒரு கனவு வந்துச்சு ,அதுக்கப்புறம் மனசுல எந்த குழப்பமும் இல்ல ,அதுனால தான் சொல்லுறேன் மாத்திரிரையை போடவேணாம், குழந்தையை பெத்துபோம். எந்த பிரச்சனையும் வராது அப்படின்னு கடவுள் மேல பாரத்த போடுவோம். என்ன இருந்தாலும் நம்மளோட ஆசையினால வந்தது. என்னங்க கனவு அது இதுன்னு என்னனமோ பேசுறீங்களே அத என்னனு சொல்லுங்க. அதுவா! வயித்துல இருக்க குழந்தையை பத்திதான், நம்பிகையோட இரு, குழந்தையை பெத்துபோம், கனவுல வைத்துள இருக்குற குழந்தைக்கும் உனக்கும் எந்த பிரச்னையும் இல்லாம பெத்துட்ட, அதுவும் பொம்பளபிள்ளை, நல்லா வளர்ந்து ஓடிகிட்டு திரியுது, உன்கிட்ட இருந்து அப்பானு! என்கிட்டையே வருது... அப்படி இருக்க குழந்தை வேணாமுன்னு நான் எப்படி சொல்லுவேன் அப்போ போட வேணாம்ல. ஏன் தயங்குறிங்க போட வேணாங்க நம்ம அவள பெத்துப்போம். அந்த நம்பிக்கையோட மாதங்கள் ஓடுது, குடும்பத்தில பல கஷ்ட்டங்கள் வருது அத ரெண்டு பேரும் சமாளிக்குறாங்க. ‘காட்டில விறகு கட்ட சுமந்து வரும்போது காலில் நெருஞ்சிமுள் குத்தும் தலைச்சுமையோடு எடுக்கவும் முடியாது, அதோடு நடக்கவும் முடியாது இருந்தாலும் நடந்து வந்துட்டே இருக்கணும் அதுவா விழும் வரை அது உருத்திக்கொண்டே வலி கொடுக்கும் அதுபோல, எடுத்த முடிவு சரிதானா, அதனால் விளைவு எதும் தப்பாகிடுமா என்று ஒவ்வொரு நாளும் மனது காலில் குத்திய நெருஞ்சிமுள் போல வலி கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மாதம் பத்தாகி விட்டது, காரிருள் சூழ்ந்த இரவு, முழு நிலவு வெளிச்சம் தரும் நேரத்தில் வலி வருகிறது, கூட உதவிக்கு வர ஒரு பொம்பளை ஆளு இருந்தா நல்லதுனு நினைச்சிட்டு பஸ்க்கு நடந்து போகும்போது, என்ன வலி வந்திருச்சா, எங்க உன்னோட அம்மா வேற யாரும் வரலையா. இல்ல, விடும்மா கூட நான் வரேன் நீ பயப்படாதடி. பிள்ளைங்க மூணும் எங்கமா, கிழவனார் பாத்துக்கிருவார். இப்போ வேற ஆஸ்பத்திரிக்குப் போயாச்சு, டாக்டர் பார்த்திட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல பிரசவமாகிடும்னு சொல்லும்போதே அதுல எதும் பிரச்சனை இல்லைல டாக்டர், கொஞ்சம் சிக்கல் தான் நாங்க பாத்துக்கிறோம். இரவு முழுக்க வலியால் துடிதுடிக்கும் சத்தம், நர்சுகளின் பரபரப்பு, பிறக்கும் நேரம் தாமதமாவது எல்லாம் மேலும்மேலும் வேதனையை கூட்டுகிறது நேரம் ஆகஆக, முடிவு தப்பாகிடுச்சோ என்று எதற்கும் கலங்காதவரையும் புலம்ப்பி அழவைத்து விட்டது. பக்கத்து வீட்டுக்காரங்க ஆறுதல் சொல்ல முடியாமல் உள்ள போவதும் வருவதுமாக இருக்காங்க. டாக்டர் கிட்ட கேட்ட இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது, ஆனா எப்படியும் கொஞ்ச நேரத்துல பிரசவம் ஆகிடுமுனு சொல்லுறாரு. வானத்தில் விண்மீன்கள் கீழாக இருங்கி மறைந்து கொண்டது போலவும், முழு நிலவும் ஒதுங்கி கொள்ள, வானமானது மஞ்சள் நிறம் பூசிக்கொண்டு சூரியன் கொஞ்சமாக தன் தலையை காட்டிய அந்த நேரதித்ல் பறவைகளின் சத்தமும், சேவல் கூவும் சத்தத்திற்கு இடையே அன்று விடியலில் மேலும் ஒரு குரல் கேட்டது, அது பொழுது விடிந்ததை உணர்த்த வந்த குரல் அல்ல, நான் பிறந்து விட்டேன் என்று உணர்த்த வந்த குரல். செங்கதிர்கள் வந்து பட்டதும் தாமரை மலர்ந்ததை போல் சூரியன் பிறந்த அந்த நேரத்தில் பத்து மாதம் கனவாக இருந்த அந்த மொட்டும் பிறந்தது. கருவிலேயே பெண் என்று தெரிந்துவிட்டால் கருவை களைத்தோ அல்லது பிறந்த பெண் குழந்தையை பெண்ணே கொன்றுவிடும் காலத்தில் பல தடைகளுக்கு பின், பிறந்த அந்த குழந்தையின் குரலை கேட்டவுடனே தந்தைக்கும் தாயிக்கும் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மகள் பிறந்திருக்கா என்று சொன்னதும் இவ்வளோ நாளா கனவாய் இருந்தது நனவாகிவிட்டதே என்ற மகிழ்ச்சிக்கு இந்த வானமே எல்லை இல்லை, அந்த சமயம் கால் ஒரு இடத்தில் நிற்க்கவில்லை, முதலில் டாக்டரிடம் போய் தாயிக்கும் குழந்தைக்கும் எந்த பிரச்சனையும் இல்லையே என்று கேட்டதற்கு, கொஞ்சம் அவங்க மயக்கத்துல இருக்காங்க தெம்புக்கு குளுகோசும், ரத்தம் குறைவாக இருக்குறதுனால ரத்தமும் ஏறிகிட்டு இருக்கு மற்றபடி எந்த பிரச்சனையும் இல்ல என்றார் டாக்டர். அந்த வார்த்தைகளை கேட்டவுடன் கால் ஒரு இடத்துல இருக்க முடியாம கடைக்கு ஓடிபோய் மிட்டாய் வாங்கிட்டு வந்து அங்கிருந்த அனைவருக்கும் பரபரப்போடும், தடுமாறிய கையோடும் கொடுக்கிறார். அதை அனைவரும் வேடிக்கையாக பார்க்கின்றனர். அவள் கண்களை விளித்து பார்க்கும் வரை அவளை கண் கொட்டமால் பார்த்து கொண்டிருக்கிறார், கண் விழித்ததும் அவள் பெற்ற மலரைக் கொடுக்கிறார். வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு இது வெறும் கனவாக தெரியும், ஆனால் இந்த கனவு அவர்களுக்கு வெறும் கனவு அல்ல, அவர்களின் மனசாட்சி மற்றும் நம்பிக்கை. மூவர் கனவு கண்டனர், ஆனால் மூவர் கண்ட கனவும் ஒன்றுதான் இந்த தருணம் கனவு பலித்தது. பொண்ணுக்கு நீயே சேனை வைமா, அத வாங்கி பிரசவத்துக்கு துணைக்கு வந்த பக்கத்து வீட்டுகாரவங்கள வைங்கன்னு சொல்லுகிறாள். சரியான நேரத்தில் உதவிக்கு வந்த அவங்க தன் விரலால் தேனை தொட்டு வைத்து அந்த பெண் குழந்தையின் வாழ்க்கையை இனிப்புடன் தொடங்கி வைக்கிறார்கள். பின் தன் குழந்தைதையை தூக்கி தாய் பாலை ஊட்டுகிறாள், அப்போது சந்தோசத்தோடு குழந்தையின் கையை ஒருகையால் தாங்கி கொண்டு மறுகையால் அருகில் இருந்த கணவரின் தலையை கோதிவிட்டுக்கொண்டே நீங்க கண்ட கனவு நினைவாகிருச்சுங்க. நீங்க சொன்னதெல்லாம் பலிச்சுருச்சுனு சொல்லும் போது மடியில் இருந்த கால், அவள் அப்பாவின் மரபில் உதைத்தது. அந்த குழந்தையின் வாழ்க்கை ஆனந்தத்தில் தொடந்தது................
#63
Current Rank
27,010
Points
Reader Points 7,010
Editor Points : 20,000
141 readers have supported this story
Ratings & Reviews 5 (141 Ratings)
aathisakthir1
rajeshwari1999
நல்ல கதை இது..இது கதையாக இல்லாமல் உயிர் ஓட்டத்தில் கலந்து கொண்டு செல்கிறது....நல்ல கதையை வாசித்த திருப்தி...வெற்றி பெற வாழ்த்துக்கள்
darsanhari0
Best story
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points