JUNE 10th - JULY 10th
"ஏங்க. மணி அடிகறது காதுல விழலயா?
போய் கதவ தொறங்க. எல்லா அந்த ஹவுஸ் ஓனர் கிழவனா தான் இருக்கும்."
"இந்த வாட்டி மட்டும் நீ கதவ தொற டி.
அடுத்த வாரத்துல இருந்து நானே தொறக்கறேன்."
"நா மாக்சியோட போய் அந்தால பாக்கானுமா? போங்க" என்று பத்தி விட்டால் சௌந்தர்யா.
விஷால் சௌந்தர்யா தம்பதியினர் பங்குளூரில் யாருக்குமே கிடைக்காத சௌகரியமான தனி வீட்டில் வாடகைக்கு இருந்தனர். மேலும் கீழுமாக இரண்டு வீடுகள். அதில் மேல் வீட்டில் உரிமையாளரின் பொருட்கள் போட்டு வைக்கப் பட்டிருந்ததால், பல பணக்காரர்களுக்கும் கூட கிடைக்காத பங்குளூரு தனி வீடு கனவு விஷாலுக்கு அமைந்தது.
உரிமையாளரோ சொக்கத் தங்கம்.
வாடகை கூட கையில வாங்கி கருப்பு பணமாக்கமாட்டார். வங்கியில் செலுத்திய பின் மின் அஞ்சல் மூலம் கையொப்பம் இட்ட ரசீதை உடனே அனுப்பி வைப்பார்.
மின் விளக்கு பழுதில் ஆரம்பித்து தூய்மை பணியாளர் தீபாவளி படி காசு வரை அனைத்தயும் கொடுத்து விட்டு அதை வாடகையில் கழித்துகொள்ள சொல்லும் நாகரீகமான வீட்டு உரிமையாளர் ராஜு.
பத்து பதினைந்து கிலோமீட்டர் தள்ளி அவரின் அலுவலகம் அருகிலேயே ஒரு ஸ்மார்ட் அடுக்கு மாடி கட்டிடத்தில் கடந்த ஆறு ஏழு வருடமாக வாழ்ந்து வருகிறார்.
அவரிடம் இருந்த ஒரே தொல்லை, வாரம் தவறாமல் ஞாயிறுகளில் தன் பழைய வீட்டின் அருகே உள்ள ஒரு மைதானத்தில் பழைய நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதே.
மொத்த கிரிக்கெட் கிட்டும் விஷால் இருக்கும் அந்த வீட்டின் மாடி போர்ஷனில் தான் வைத்திருந்தார்.
அந்த மாடி போர்ஷனுக்கு படிகட்டு, வீட்டினுள் இருந்து தான் செல்ல முடியும்.
விளைவு, வாரா வாரம் ஞாயிறு காலை ஐந்தரை மணிக்கெல்லாம் ராஜு, விஷால் கதவை தட்டுவார்.
"குட் மார்னிங் சார்" விஷால் கதவை திறக்க, "சாரி சாரி, இதோ சட்டுனு கிட் எடுத்துக்கிட்டு போயிடறேன்." என்று குடு குடு வென கிட் எடுத்த அடுத்த நொடியே மற்றொரு சாரி சொல்லி, மேலும் நீங்க படுத்துகோங்க என்று சொல்லி விளையாட ஓடிவிடுவார். ஒரு ஒன்பது மணி அளவில் கிரிக்கெட் கிட் திரும்ப வைக்க வருவார்.
வருபவர் ஏன் வீடு ஒட்டடை படிந்து இருக்கு? மரத்தில் இருந்து விழும் சருகுகள எடுக்கலயா? என்று வெட்டி கேள்விகள் கேட்க மாட்டார். மின்னல் போல் தன் வேலையை மட்டும் பார்த்து பறந்தேவிடுவார்.
இருந்தும், சவுந்தர்யாவுக்கும் விஷாலுக்கும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தூங்க முடியாமல் போவது எவ்வளவு கோவத்தை தூண்டும்.
சரி இதற்கு முடிவு கட்ட சனி கிழமை இரவே சுற்றுலா எங்கேயும் போகலாம். ஆனால் அந்த செலவு எக்கச்சக்கமாகிவிடும்.
அதையும் மீறி ஒரு முறை செய்த போது, "நீங்க எப்படியும் திரும்ப வந்துருவீங்கன்னு நம்பி நா எங்க டீமோட நம்ப வீட்டு வாசல்லயே ஒரு மணி நேரம் காத்திருந்தேன். இந்த மாதிரி போகிறதா இருந்தா தயவு செஞ்சு சாவி கொடுத்துட்டு போறீங்களா சார்?"
என்று வாய் விட்டு கேட்டுவிட்டார் ராஜு.
"இவர்கள் விளையாடும் இடம் பொது மைதானம் இல்லயாம். யாரோ ஒருவரின் காலி நிலமாம். உரிமையாளர் யார் என்று கண்டு பிடித்து அவரிடம் புகார் எதுவும் கொடுத்து பார்க்கலாமா?" என்று சவுந்தர்யா ஒரு முறை சொன்னதும், தெரியாத எண்ணில் இருந்து அந்த நில உரிமையாளரிடம், "சார் வணக்கம். நா உங்க நலவிரும்பி. உங்க லேண்ட்ல வாரா வாரம் சில பெருசுங்க கிரிக்கெட் ஆடுறதா சொல்லி குடிச்சு கும்மாளம் அடிக்கறாங்க. உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்" என்று விஷால் நூல் விட,
"இருக்காதே! அப்படியே எதிர் கட்டடத்தில் தான் நா இருக்கேன். அது எங்க குடும்ப சொத்து, விக்க முடியாம பல பங்காளி சிக்கல். நானும் தான் அங்க போய் விளையாடுறேன். யாரும் நீங்க சொல்றா மாதிரி தப்பு எதுவும் பண்ண மாடாங்களே" என்று எதிர் முனையில் சொன்னதும் பேச்சு மூச்சு இல்லாமல் வேர்துப் போய் அழைப்பை துண்டித்தான் விஷால்.
ராஜு. நல்ல மனுஷன். நாபத்தஞ்சு அம்பது வயசிருக்கும். இந்த கிட் கருமத்த அவர் வாழற வீட்டுலயே வெச்சுக்களாமேனு ஒரு முறை விஷால் சூசகமாக கேட்டதற்கு "மொத்த கிட் அளவு ரொம்ப பெருசு. காருல தான் வெச்சு எடுத்துட்டு வர முடியும். எனக்கு கார் ஓட்டத் தெரியாது. இருசக்கர வாகனம் தான் என் கருடன்" என்று சிரித்துக்கொண்டே கிட் எடுத்துக்கிட்டு போய்ட்டார்.
"இந்த வாரம் மட்டும். பிளீஸ் டா சவுண்டு. நா வேணும்னா மொத்த காய் கறி ஷாப்பிங்கும் இன்னைக்கு தனியா முடிச்சிட்டு வறேன்."
என்று பல உருட்டுகளை அள்ளி விட்டும்,
"உங்க பொண்டாட்டி இப்படி தூக்க கலக்கத்துல மாக்சியோட ஒரு ஆம்பள முன்னாடி நின்னா உங்களுக்கு ஓக்கேயா?" என்ற கேள்வியை வைத்தே விஷால் வாயை அடைத்துவிட்டால்.
சனி கிழமை இரவு நொறுக்கு தீனிகள் ஆளை மறைக்க, ஓடிடியில் ஒரு படத்தை பார்த்துவிட்டு நள்ளிரவுவரை சமூக வலைத்தளத்தில் நேரம் கழித்து இரண்டு மணிக்கு படுக்கும் விஷால், ஒரு ஞாயிறு கூட நிம்மதியாக எந்த தொந்தரவும் இல்லாமல் தூங்கினது இல்லை. காரணம் "ஹவுஸ் ஓனர் கிழவன் கிரிக்கெட் விளையாட வந்துடுவானே".
இதுக்கெல்லாம் ஈடு கட்டும் வகையில்
ஞாயிறு மதியம் வாரம் தவறாமல் விருந்து போல சாப்பாடு தான். இதப்பண்ணு அதப்பண்ணு என்று சௌந்தர்யாவை சமைக்கச் சொல்லி அப்படியே சொமாட்டோவில் வீட்டில் சமைக்க முடியாத ஓர் இரு வறுவல், பிரட்டல்களை வாங்கி வெளுத்து கட்டி, கைகளை கழுவிய நொடியே மெத்தையில் பாய்ந்து விழும் ஆனந்தத்தை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டான்.
அப்படி ஒரு ஞாயிறு மதியம் மூணு மணி இருக்கும், வெளிக் கதவு மணி அடித்தது.
சற்றும் சினுங்காமல் படுத்துக் கிடந்தான். சௌந்தர்யா வந்து விஷாலை எழுப்பி, அவரின் பாலிய நண்பன் பிரின்ஸ் வந்திருப்பதாக கூறினால். மதம் கொண்ட யானையின் சினத்தில் "உடம்பு சரி இல்லை, கொரோனா, உயிருக்கு போராடிகிட்டு இருக்காரு, அது இதுன்னு எதாவது சொல்லி அப்பறம் வர சொல்ல வேண்டி தானே? வேணும்னே இப்படி பன்றியா?" என்று எரிந்து விழுந்தபடி வெளியே வந்தான்.
"என்ன மச்சான், நம்ப சாயங்காலம் ஃபோன் பண்ணிட்டு சந்திக்கலாம்ன்னு தானே பேசினோம்…"
"இல்லடா. இந்தப் பக்கம் வந்தேன், அப்படியே உண்ணயும் பாத்துட்டு, உங்க வீட்டுல காப்பி சாப்டு போலாமே" என்று மட மட வென உள்ளிருந்து ஒரு பெரிய ஃபயில், பல வர்ணங்களில் விளம்பர அட்டை என்று எடுக்க தொடங்கினான்.
"போச்சு. நீ மல்டி லெவல் மார்க்கெட்டிங் பிசினசுக்கு ஆள் சேக்க நான் தான் கேடச்சேனாடா?
அய்யகோ, உன் ஜாதகத்தில சுக்கரன் நீச்சம். உனக்கு இந்த சுக்கர தெச இரவது வருஷமும் சுகக் கேடுன்னு எங்க பெரியப்பா அன்னைக்கே சொன்னாரு. நான் தான் பெரிய இவன் மாதிரி அதெல்லாம் நம்பிக்கை இல்லன்னு தத்துவம் பேசினேன்.
பத்தாப்பு படிக்கர காலத்துல இருந்தே சௌரியமா ஒரு விஷயம் கூட அனுபவிச்சதில்ல." என்று மனம் குமுற
"மாமா.
இதெல்லாம் நமக்கு ஒத்து வராது டா. நா ஒரு குணம் கெட்டவன் டா. என் கூட ஒழுங்கா பேசி பழகவே ஒன்னு ரெண்டு ஃப்ரண்ட்ஸ் தான் இருக்காங்க, அவங்க கிட்ட நா இதையெல்லாம் கொண்டு நீட்டினா, கண் காணாத இடம் தேடி ஓடியே போய்டுவாங்க.." என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது ஒரு அமோக யோசனை வந்தது விஷாலுக்கு.
'நீயும் சேர்ந்துக்கோ, உனக்கு கீழ ஆள் சேரு. வீடு துடைக்கர சோப்பு வாங்கிக்கோ'னு சொன்னா உயிர் நண்பர்களே தெரிச்சு ஓடும் போது, அதையே ஏன் ஹவுஸ் ஓனர் கிட்ட விக்கறா மாதிரி பாவலா காட்டின்னா போதுமே. அந்தால் நம்ப கிட்ட இருந்து தப்பிச்சா போதும்னு பதுங்கிற மாட்டான் என்று ஒரு ராஜதந்திரம் தோன்றியது.
மெது மெதுவாக கூச்சத்துடன் தன் எம்.எல்.எம் நிறுவன திட்டங்களை சொல்லும் போதே,
"நிறுத்து டா. நா சேர விரும்பறேன். எவ்ளோ பணம் கட்டணும்? என்னோட ஆள் சேர்கற கிட் எனக்கு எப்போ வந்து சேரும்?" என்று சரமாரியாக கேட்க, வந்தவன் கண்ணுல தண்ணி வச்சுண்டுட்டான். விண்ணப்பங்களில் கை ஒப்பம் வாங்கி, காசோலை கொடுத்தால் நாள் ஆகுமோ என்று கையோடு ஆறாயிரம் ரூபாய் பணம் கட்டி "நாளைக்கு மதியமே என் அலுவலகத்துக்கு கிட் வந்துறும்ல டா?" என்று உற்சாக தாண்டவத்தில் இருந்தான்.
"என்னங்க! என்னங்க!" என்று தனியே அழைத்து கொண்டே இருக்க, சவுண்ட் சவுந்தர்யா கடுப்பாகி, "இப்போ இங்க வரீங்களா என்ன?" என்று அதட்டி, உள்ளே வரவழைத்தாள்.
"பைத்தியமா உங்களுக்கு?"
"அடி போடி, இந்த ஆள் சேர்கர பிசினஸ்ஸ காட்டியே பயமுடுத்தி அந்த ஹவுஸ் ஓனர் கிழவன விரட்டி அடிக்கறேன் பாரு."
"அதுக்கு ஆறாயிரம் ரூபாய் கட்டி வீணாக்கணுமா?"
"நாலற வருஷம் டி. நாலற வருஷமா நா ஒரு ஞாயித்தி கிழமை கூட நிம்மதியா தூங்கல. நடுவுல கொரோனா காலத்துல எதோ ஒரு மூணு மாசம், மூணே மாசம் லீவு விட்டான். அப்பறம் பள்ளிகூட பையன் மாதிரி மட்டைய தூக்கிட்டு என் தூக்கத்தை கெடுக்க வந்துட்டான்.
டேய் கிழவா கிரிகெட்டா விளையாட வர. உன்னை எப்படி ஓட விடறேன் பாரு" என்று அசுர வெறியில் பணத்தை கட்டி, அடுத்த ஞாயி்று காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து ஹவுஸ் ஓனர் ராஜுவிற்காக காத்து கிடந்தான்.
அவர் மணி அடிப்பதற்கு முன்னே கதவை திறந்து சிரித்த முகத்துடன் "குட் மார்னிங் சார்" என்றான்.
வீட்டு உரிமையாளர் ராஜு ஆச்சரியத்தில் "அடேடே. வெரி குட் மார்னிங் விஷால்" என்று மின்னல் வேகத்தில் கிட் எடுக்க போக,
"சார் ஒரு இரவது நிமிஷம் உங்க அபாயின்மெண்ட் வேணும். நா ஃப்ரெஷ் ஒ ஃப்ரெஷ்னு ஒரு மல்டி லெவல் மார்க்கெட்டிங் பிசினஸ்ல சேர்ந்திருக்கேன் சார். உங்களுக்கு இருக்கற ஃப்ரெண்ட்ஸ் சர்கிலுக்கு நீங்க ஒரே வருஷத்துல லட்ச கணக்குல சம்பாதிக்கலாம் சார்" என்று நமுட்டு சிரிப்போடு ஆரம்பித்தான்.
ஆரம்பத்தில் உங்களுக்கு அறிவே இல்லை என்று பரிகாசம் செய்தாலும், உரிமையாளர் என்னென்ன சொல்லி தப்பிக்க பார்பாரோ என்ற ஆர்வன் பொங்கி கதவு இடுக்கில் இருந்து சௌந்தர்யா கள்ளக் கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
இந்த வயசுலயே நேரத்த வீண் அடிக்காம, இன்னும் நாலு காசு சம்பாதிச்சு சேக்கணும்ன்னு நினைகர்தெல்லாம் ஒரு பெரிய பிலஸ்ஸிங் பா. உனக்கு முப்பது வயசுல வந்த இந்த பொறுப்பு எனக்கு என்னோட நாப்பத்து மூணாவது வியாசுல தான் வந்தது. ஆனா விடா முயற்ச்சி எடுத்து நல்ல பண்ணிட்டு இருக்கேன்" என்று ஃப்ரெஷ் ஒ ஃப்ரெஷ் படம் போட்ட கைகளை கழுவும் சோப்பை கிட்டில் இருந்து எடுத்து காட்டினார்."
"சார்….?"
"என்ன மன்னிச்சிடு ப்பா. நா கொரோனாவுக்கு முன்னாடியே இதே ஃப்ரெஷ் ஒ ஃப்ரெஷ்ல ஒரு ஏழை நண்பர் மூலம் ஏஜன்ட் ஆகிட்டேன். அவர உற்சாக படுத்த எதாவது வாங்கன்னுமேன்னு இருக்கரதுலயே கம்மி விலையில் இருந்த ஹாண்ட் சானிடைசர் நம்ப ஸ்போர்ட்ஸ் கிலப் டோர்ணமென்ட்காக இரவது பெட்டி வாங்கினேன்.
கூடவே கொரோனா வந்தது.
ஒரு ஒரு பாட்டிலுக்கும் நூறு ரூபா லாபம் வெச்சு வித்து செம்ம லாபம் ப்பா. உங்க வீட்டுக்கு கூட ஒரு பாட்டில் கொடுத்து விட்டேனே? என் திறமைய பார்த்து ஃப்ரெஷ் ஒ ஃப்ரெஷ்ல என்ன பிளாட்டினம் ஆக்கிடாங்க ப்பா.. எனக்கு கீழ நூத்தி அம்பது பேருக்கு மேல ஏஜட்ஸ் இருக்காங்க. சாரி விஷால். உங்களுக்கு இவ்வளவு ஆருவம் ன்னு தெரிஞ்சிருந்தா நா லாஸ்ட் இயரே உங்களையும் சேர்த்து விட்டிருப்பேன். இன்னைக்கு சாயங்காலம் எங்க வீட்டுல ஃப்ரெஷ் ஒ ஃப்ரெஷ் மீட்டிங் இருக்கு. நீங்க உங்க வைஃப கூட்டிகிட்டு கண்டிப்பா வரணும்"
என்று சொன்ன படியே கிட்டை தூக்கிட்டு ஓடினார் ராஜு.
ஏமாற்றத்தின் உச்சத்தில் சிரிப்பதா செத்து மடிவதா என்று திரும்பினால் கொரோனா காலத்தில் வீட்டு உரிமையாளர் கொடுத்த ஃப்ரெஷ் ஓ ஃப்ரெஷ் ஹாண்ட் சாணிடைசர் பாட்டிலோடும் புருவங்கள் உயர்த்தி மூக்கை சுருக்கி உதடுகளில் கெட்ட வார்த்தைகள் முணங்கிய படி சௌந்தர்யா.
"ஏம்மா, இந்த பாட்டில் இவர் கோடுத்தது தான்னு, என் பிரென்ட் வந்த அன்னைக்கே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே..?"
"எனக்கென்ன தெரியும். இது உங்க வளராத பால்கனி தோட்டத்துல இருந்தது. போன வருஷம் இவர் இத கொடுக்கும் போது, அது என்னுது. உனக்கு வேணும்னா நீ தனியா வாங்கிக்கோ. இந்த கொரோனா காலத்துல நா வீட்டு தோட்டம் போட்டு பெரிய விவசாயி ஆகி, தற்ச்சார்பு வாழ்கை வாழ்ந்து கிழிப்பேன்னு, இத என் கண்ணுல கூட காட்டாம போனதன் விளைவு, இங்க வந்து விட்டுருக்கு" என்று முறுக்கி கொண்டு புலம்பிய படியே பால் காய்ச்ச சென்றால்.
"பணமும் போச்சு, திட்டமும் போச்சு, பொண்டாட்டி முன்னாடி மானமும் போச்சு. இனி நம்ப சிக்கனம் பேசும் போதெல்லாம், இவ இத காலத்துக்கும் சொல்லிக் காட்டாம விட மாட்டா."
அப்படியே சோர்ந்து ஞாயிற்று கிழமையே வெருமையில் போனது
இதற்கு நடுவில் 'ஒரு வாரம் ஆச்சே எதாவது பிசினஸ் புடிச்சியா?'ன்னு நண்பன் கூப்பிட்டபடி இருந்தான்.
சட்டுனு ஒரு அலை பேசி அழைப்பு.
வீட்டு உரிமையாளர் ராஜு.
"என்னப்பா இன்னைக்கு மீட்டிங் வரலயா? நாலு பேர, வாரா வாரம் பாத்தா தான்பா ஒரு பத்து பேரையாவது நமக்கு கீழ சேக்க முடியும்.
சரி, காலையில சொல்லனும்னு வந்த விஷயத்த இந்த எம்.எல்.எம் பேச்சுக்கு நடுவுல மறந்துட்டேன்.
எனக்கு வி.ஆர்.எஸ் அப்ரூவ் ஆகிரிச்சு விஷால். பல மாசம் போராடி சரியா நா இருக்கற வீடு லீஸ் முடியும் சமயம் பாத்து இதுவும் வந்திருக்கு. இன்னும் சரியா ரெண்டு மாசம் சர்வீஸ் பண்ணனும். அதுக்கு அப்பறம் நா என் சொந்த ஊரு பெல்காமுக்கு போயிடுவேன். அப்பறம் இந்த பக்கம் வரது கஷ்டம். எப்பவும் போல நீங்க ஆன்லைன்ல வீட்டு வாடகை போட்டு விட்டுருங்க. மத்த படி எதாவதுன்னா ஃபோன்ல தான் பேசிக்கனும்" என்று சொல்லி அழைப்பை துண்டித்தார்.
மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று அறியாமல் ஆனந்த கூத்தாடினான் விஷால். கொலவெறியில் இருந்த சவுந்தர்யாவிடம் இந்த நல்ல செய்தியை சொல்லி சாந்தப் படுத்தி அதோடு இரு மாதங்களிலேயே அவன் நினைத்தது போன்ற ஞாயிறு தூக்கத்தை அமோகமாக அனுபவித்தான்.
நீச்சத்தில் இருந்த தன் சுக்கர தெசையின் இருவது ஆண்டு காலம் முடிவடைந்தது போல என்று அவனே நினைத்துக் கொண்டான்.
இரண்டே மாதம். பெரிய வயல், வீட்டு தோட்டம், இயற்கை சூழ் வாழ்வு என்று
ஊரை காலிப்பண்ணிக் கொண்டு பெல்கமில் பரம்பரை வீட்டிற்க்கு மாறிய ராஜுவிற்க்கு விழுந்ததே ஒரு அடி.
அவர் வீட்டில் இருந்து நூறடி தூரத்தில் கர்நாடகாவின் ஒரு முக்கிய அரசியல்வாதியின் சர்க்கரை ஆளை இருந்தது. வாரா வாரம் சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு மேல் பல லாரிகள் வந்து சர்க்கரை எடுத்து செல்வது வழக்கம் போல.
சனிக்கிழமைகளில் இரவு பத்து மணி முதல் ஒரு மணி வரை, இந்த லாரிகள் வருவதென்ன, அதில் மூட்டைகளை ஏற்றும் ஆட்கள் போடும் கூச்சல் என்ன என்று மறுபடியும் எல்லா லாரிகளும் கிளம்பும் வரை தூங்க முடியாது.
சரியாக தூங்காமல் போவதால், ஞாயிறு காலை இந்த ஊர் நண்பர்களுடன் கிரிகெட் விளையாட அதிகாலை எழ முடியாமல் போனது.
அதன் பிறகு, ராஜு ஞாயிறுகளில் சிடு சிடுவென்றே இருந்தார்.
விஷாலை விட்ட நீச்ச சுக்கிரன் இப்போது பிடித்தது யார் என்று தெரிகிறதா?
#280
58,057
1,390
: 56,667
28
5 (28 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
ramanujamwise
Rcla123
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50