கைவிடப்பட்ட கைத்தடி

sarathy
பெண்மையக் கதைகள்
4.9 out of 5 (46 )

கைவிடப்பட்ட கைத்தடி

இரா. சாரதி

66/1 மூன்றாவது தெரு

வீனஸ் காலனி, வேளச்சேரி

சென்னை - 600 042

மின்னஞ்சல் : sarathystays@hotmail.com

அலைபேசி : 9884035494

அந்த உயர்ரக உணவகத்தினுள் தாயும், மகனும் நுழைந்தனர். சுடிதார் அணிந்த தாய் ஒரு கைத்தடியைப் பிடித்தவாறு தள்ளாடியவாறு நுழைந்தாள். அலுவலக ஆடையணிந்த வாலிப மகன் தாய்க்கு உதவி செய்யாமல் வேகமாக கோபமாக முன்னே சென்றான்.

"அந்த மூணாவது ஜன்னலோர டேபிளில் உட்கார்”, தாய் முந்திக் கொண்டு கூறினாள்.

சலிப்போடு மகன் மூன்றாவது மேஜையின் நாற்காலியில் உட்கார, எதிரே தாய் தாமதமாகத் தடவியவாறு நடுக்கத்தோடு ஆனால் ஆவலோடு உட்கார்ந்தாள். கைத்தடியை மேஜையருகே வைத்தாள்.

"இந்த நடுக்கத்துல அதுவும் காலங்கார்த்தாலே ஹோட்டலுக்கு வரணும்ன்னு அடம் பிடிக்கணுமா? எனக்கு எத்தனை வேலையிருக்கு....ம் இதுல எப்பவும் அவ கூட ஒரு பனிப்போர் வேற.......,” மகன் அவை நாகரீகம் கருதி குறைவான குரலில் குமுறினான். ஆனாலும் அவனது முகத்தை ஆசையோடும் புன்னகையோடும் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் அன்னை.

உணவகத்தின் சேவகன் பவ்யமாக வந்தான்.

"சார், என்ன வேணும்?"

"அந்தம்மாகிட்டே கேளுங்க"

"மேடம்"

"ஒரு பிளேட் நூடுல்ஸ்!"

சின்னக் குழந்தைபோல சிலிர்த்துக் கொண்டு பதிலளித்தாள்.

"சார் உங்களுக்கு"

"நோ தேங்ஸ்"

தாய் பதறினாள். "வயித்தை காயப்போடக் கூடாது சன். ஏதாவது சாப்பிடு"

"இரண்டு இட்லி..... ம் அப்புறம்," மகன் ஆரம்பிக்க “ஒரு வடை!” எனத் தாய் முடித்தாள். தன் மகனுக்கு என்னென்ன உணவுகள் பிடிக்கும் என அவளுக்கு நன்றாகத் தெரியும்.

சேவகன் பவ்யமாகக் கூறினான்.

"சார், நூடுல்ஸ் வர பதினைந்து நிமிஷமாகும். இட்லியை இப்பவே கொண்டு வரவா?"

""ஒண்ணும் அவசரம் இல்லை. ரெண்டத்தையும் ரெடியானபிறகு சேர்த்துக் கொண்டாங்க. இடைப்பட்ட நேரத்துல எனக்கு எழுதுற வேலை இருக்கு"

மகன் ஆசுவாசமாக கூறிவிட்டு தனது அலுவலக பையிலிருந்து இரு காகிதங்களை எடுத்து தாயின் பார்வைக்கு எட்டாதவாறு தன் மடிமீது வைத்து எழுத ஆரம்பித்தான்.

ஒரு காகிதம் ‘அமெரிக்கா செல்லுவதற்கான விண்ணப்பம் பற்றியது.’ தன் பெயரையும் தன் மனைவியின் பெயரையும் எழுதி மற்ற குறிப்புகளை நிரப்பினான். `உடன் வேறு யாரும் வரவில்லை’ எனத் தீர்மானமாக எழுதி கையெழுத்திட்டான்.

மற்றொரு காகிதம் ‘முதியோர் இல்லத்தில் சேர்ப்பது’ பற்றியது. தன் தாயின் பெயரை எழுதி குறிப்புகளை நிரப்பினான். மகன் ஏதோ அலுவலக வேலை செய்துகொண்டிருக்கிறான் எனத் தாய் நினைத்துக் கொண்டிருந்தாள். அவனது முகத்தை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சேவகன் வந்து நூடுல்சை அம்மாவின் பக்கத்திலும் இட்லி தட்டை மகனின் பக்கத்திலும் வைத்தான். மகன் எழுந்து கை கழுவச் சென்றான். தாய் அங்கேயே உட்கார்ந்திருந்தாள். நடுக்கத்தின் காரணமாக தாய் கைகழுவ எழவில்லை என மகன் நினைத்தான். `தனக்கு பாரம் குறைந்தது, ரொம்ப நல்லதாப் போச்சு’ எனத் தோள்களை உலுக்கியவாறு நகர்ந்தான். கைகளை சுத்தம் செதுவிட்டு வந்தவனுக்கு சற்று ஆச்சரியம். இட்லி தட்டு தாயின் பக்கமும் தன் பக்கம் நூடுல்ஸ் தட்டும் இருந்தன.

“யார் மாற்றினார்கள்?’’ எனக் குழம்பியவனுக்கு மேலும் ஒரு ஆச்சர்யம்.

நூடுல்ஸ் குவியலுக்கு மத்தியில் ஒரு பல் குத்தும் குச்சி சொருகப்படடிருந்தது. குச்சியின் நுனியில் `ஹேப்பி பர்த் டே சன்னி’ என்ற ஒரு சின்ன பதாகை பட்டொளி வீசியது.

இப்பொழுதுதான் நினைவு கொண்டான். அவசரமாக அடுத்தடுத்து வேலை நிமித்தம் காரணமாக தன் பிறந்த நாளை மறந்துபோனான். ஆனால் அவனது தாய் நன்றாக ஞாபகம் வைத்திருக்கிறாள்.

“அவளுக்குக் கூட ஞாபகமில்லையேம்மா...,’’ தன் மனைவி மறந்துவிட்டதைக் கூறினான்.

தாய் கூறலானாள், ``உனக்கு ஞாபகம் இருக்கா. நீ அப்போ ஒன்பதாவது படிச்சபோது, கணக்குல நூறு மார்க் எடுத்தே. உனக்கு என்ன வேணும்ன்னு நான் கேட்டப்போ, நீ இந்த ஹோட்டலில் நூடுல்ஸ் வாங்கி கொடுன்னு சொன்னே. நானும் உடனே வாங்கிக் கொடுத்தேன். அதுக்கப்புறம் நீ எப்பப்ப கணக்கில் நூறு எடுத்தாலும், நான் பரிசா நூடுல்ஸ் வாங்கிக் கொடுப்பதை வழக்கமா வச்சிருந்தேன். அப்புறம் நீ திருச்சி ஆர்.இ.சி. காலேஜிலே சேர்ந்த பொழுது இந்த ‘நூறுக்கு நூடுல்ஸ்’ பழக்கம் விட்டுபோச்சு.”

“இந்த பக்கமாத்தானே டெய்லி உன்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவேன்,’’ சாளரத்தை சரளமாக நோட்டமிட்டவாறு அந்தக் காலங்களை நினைத்தாள். அவனும் ஜன்னல் வழியே விழி இமைக்காமல் பார்த்தான். ஜன்னல் வெளியே ஜாகையிலிருந்து பள்ளிக்குச் செல்லும் அவனும் அவனது அன்னையும் தெரிந்தனர்.

திடீரென சுதாரித்துக் கொண்டு அலைபேசியில் தனது முதலாளியை அழைத்தான்.

“குட்மார்னிங் சார். இன்னிக்கு நான் லீவு’’

“என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?’’

“உடம்பு நல்லாயிருக்கு. இன்னிக்குத்தான் உள்ளம் நிறைவா இருக்கு. அதான் லீவு. ‘ஐ வான்ட் டு என்ஜாய்.’”

“. . . . . . . ?’’

உடலும் உள்ளமும் ஒருசேர நன்றாக இருப்பதால் விடுமுறை என்னும் பதிலால் மறுமுனையில் நிசப்தம். இவன் துண்டித்துவிட்டு தன் மனைவியை அழைத்தான்.

“ஏய், இன்னிக்கு `என்ன நாள்’ன்னு சொல்லு?’

“ம்ம்.....ஹா, ஹா,ஹா. யூஎஸ் எம்பசிக்கு அப்ளை பண்ணும் நாள். நாம் சுதந்திரமா `சுதந்திர சிலை’ நாட்டுக்கு பறக்கப் போறதுக்கு விசா அப்ளை பண்ணும் நாள்!’’

“அதெல்லாம் சரி. இன்னிக்கு என் பிறந்தநாள்’’

“ஓ! ஸாரி மறந்தே போயிட்டேன் ஹனி. நான் பாதி நாள் லீவு போட்டு வர்றேன். வரும்போது கேக் வாங்கிட்டு வர்றேன்.’’

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீ லீவு போடாம சாயங்காலம் வரும்போது கேக் வாங்கிட்டு வா. ஓகே’’

உடனே தாரத்துவுடனான தொடர்பை தற்காலிகமாக துண்டித்துவிட்டு தன் தாயுடன் மகிழ்வாக உரையாடினான். ஒவ்வொரு நூடுல்ஸ் குவிப்பை அவன் விழுங்கும்பொழுது சுவையான பழைய நினைவுகள் உமிழ ஆரம்பித்தன. ஆரம்ப காலத்திலேயே தந்தையைப் பறிகொடுத்தவன். ‘ஆண் ஆதரவற்ற அன்னை தன்னை எவ்வாறு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தாள்! சில்லறை சம்பாத்தியத்திலும் சிக்கனமாக வாழ்ந்து தன்னை சீராட்டி வளர்த்தாள். தாயில்லாமல் தான் இல்லை’ என்பதை உணர்ந்தான்.

இதற்கு மத்தியில் தகுதிக்கு மீறின எத்தனை ‘நூறுக்கு நூடுல்ஸ்’ அன்பளிப்புகளைக் கொடுத்தாள்.

இன்றைய அவசர வாழ்க்கை முறையில் அன்னையின் மீது பாசம் காட்ட மறந்திருந்தான். பிறந்த நாளில் தெளிவும், புத்துணர்ச்சியும் பெற்றான். சாப்பாட்டின் முடிவில் தாய் இறுக்கி சுருக்கி கட்டப்பட்ட ஒரு கைக்குட்டையை அவிழ்த்தாள். சில்லரைகள் சிதறின.

“இந்த ஸ்பெஷல் நாள் நூடுல்சுக்கு செலவு பண்ணத்தான் இதையெல்லாம் எடுத்துட்டு வந்தேன்’’

“அம்மா, நான் உனக்கு காசே கொடுக்கிறதில்லையே. அப்புறம் எப்படி இவ்வளவு காசு?’’

“காசு இல்லதான். ஆனா மனசு இருக்குல. நம்ம வீட்டு சாமி உண்டியலை உடைச்சிட்டேன்’’

கண் சிமிட்டியவாறு சில்லறையாகச் சிரித்தாள்.

“அம்மா! அது திருப்பதி கோயிலுக்கு நான் சேர்த்துவைச்சது. சாமிக்காசும்மா! அதப் போயி. . . .”

“நீதான்பா என் சாமி”. அவள் உடனே சொற்களையும் புன்னகையையும் உதிர்த்தாள்.

மகனின் கணத்த காய்மனம் கனியாக மிருதுவாக சுவையான சுளையாக மாறியது. கூடவே கண்ணீர் மல்கியது. துடைத்துக் கொண்டு தெளிவானான். அவன் சிறுவனைப் போல கண்ணீரைத் துடைத்துக் கொள்ளும் இக்கோலம் அக்காலத்தில் அவன் தேன்மிட்டாய்க்காக தேம்பித் தேம்பி அழும் காட்சிகளை அவளுக்கு நினைவூட்டின. அவளது புன்னகை விஸ்தரித்தது. மகன் எழுந்து பயபக்தியாகக் கூறினான்.

“சரி வாம்மா. நாம கோயிலுக்குப் போகலாம்”

“எந்த கோயிலுக்குப்பா?”

“நம்ம வீடுதான்ம்மா கோயில்”

இப்படியான ஒரு பக்குவமான அழகான அரவணைப்பான ஆசுவாசப்படுத்தும் பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை. மாறுபட்ட மாந்தர்கள் மத்தியில் ஒரு கோப்பை காபி மாத்திரமே மந்திரமாக பல நல்ல திருப்பங்களை உண்டாக்கும் என்பர். அதுபோல இங்கு ஒரு தட்டு நூடுல்ஸ் நூதனமாக நுட்பமாக நாசுக்காக நளினமாக நெளிவில்லாமல் ‘தொலைந்த’ பாசத்தை நறுக்கென மெனக்கெட்டு மீண்டும் உயிர்ப்பித்து தெளிவாக தெளித்திருக்கிறது.

இக்காலத்தின் கட்டாயமான அவசர வாழ்க்கை முறையில் இருட்டடிக்கப்பட்ட அன்பு முன்பு போல் இன்று மிளிரத் தொடங்கியது.

முதுமை ஒரு குழந்தை. அக்குழந்தை பாசத்துக்கு ஏங்கியவாறு எங்கோ காணாமல் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அப்படி இப்படி என தொலைத்துவிட்டாலும்கூட எப்படியாவது மீட்டெடுத்தல் முக்கியம் என்பதை இங்கே அவன் உணர்ந்திருக்கிறான். தாயின் புன்முறுவலுக்கு ஏற்ப தன் எஃகு மனதினை இஃதாக பொன்உருகும் செயலைச் செய்தான். சற்றுமுன் வரை பொக்கிஷமாக மறைத்திருந்த இரு காகிதங்களை விஷமாக கருதி கசக்கி குப்பைத் தொட்டியில் கடாசினான்.

“என்னப்பா எதோ ஆபிஸ் வேலையா முக்கியமா எழுதிக்கிட்டிருந்த. அதை குப்பைத் தொட்டியில் போட்டுட்டே?”

“ஒண்ணுமில்லம்மா டைம்பாஸ்க்காக குறுக்கெழுத்து எழுதினேன். அது வெறும் குப்பைக் காகிதம். குட் பை காகிதம். தேவையில்லை” மகன் பதிலளித்தவாறு எழுந்து தன் தாய் எழ ஏதுவாக மெதுவாக லாபகமாக உதவினான். மகனின் நேர்த்தியான வழிகாட்டுதலில் தாய் நடுக்கமின்றி நடந்தாள்.

அரைமணி நேரம் முன்புவரை தாயின் அடையாளமான அந்த கைத்தடி இப்பொழுது ஆதரவற்று அங்கேயே அனாதையாகக் கிடந்தது. ஞானம் பிறந்த மகன் ‘மறந்து விட்டேன்’ என ஞாபகார்த்தமாக கைத்தடியை தேடி நிச்சயம் எச்சமயமும் வரப்போவதில்லை. அது ஒரு கைவிடப்பட்ட கைத்தடி.

- முற்றும் –

இரா. சாரதி

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...