சீருடை

karthikagandhi91
கற்பனை
5 out of 5 (7 )

விடிந்தால் பொங்கல் கார்த்திக்கு இருப்பு கொள்ளவில்லை.. படுக்கையில் பல மணி நேரம் புரண்டுப் படுத்தும் தூக்கம் வரவில்லை.. அலமாரியில் உள்ள புத்தாடையே அவனது இந்த அவஸ்தைக்கு காரணம். டெல்டாவின் கடைமடையான நாகையில் பிறந்து வளர்ந்த அவனுக்கு பொங்கல் பண்டிகை ஒன்றே புத்தாடையை அளிக்கும் தினமாக இருந்தது. அந்த எண்ணம் தான் இரவு முழுவதும் தூங்க விடாமல் அவனை பாடாய் படுத்தியது. உறங்கி உறங்காமலும் காலையில் உற்சாகமாக எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணியும் பரவசத்தில் அம்மாவிடம் போய் நின்றான் கார்த்தி..

“அம்மா.. புது டிரெஸ் குடுமா போட்டுக்க.”


“பொங்க வெச்சி, படையல் போட்டு, மாட எல்லாம் கோயிலுக்கு ஓட்டிட்டு போகும் போதுதான் தம்பி புதுத்துணி போடனும்..”

“சரிமா.. சாயுங்காலம் போட்டுக்கறேன்.. என்ன டிரெஸ் வாங்கியிருக்கணு மட்டும் காமிமா.. பாத்துட்டு தந்துடறேன்..

“அம்மா வேலையா இருக்கேன்ல, சாயுங்காலம் தான் போட போறல.. என் கண்னுல நீ போய் மாட்டலாம் குளிப்பாட்டி ஓட்டியாப்பா…”

“போ மா… நீ அப்பா கிட்ட சொல்லு.. நான் கரும்பு தின்ன போறன்” என கத்திக்கொண்டே பானை அருகில் இருந்த முழு கரும்பை தூக்கிக் கொண்டு தன் நண்பர்களுடன் ஓடினான் கார்த்தி..

ஊர் முழுவதும் யார் யார் வீட்டில் எத்தனை பானையில் பொங்க வைக்கிறார்கள், எந்த மாட்டுக்கு அலங்காரம் அழகா இருக்கு எந்த வீட்டுக்கோலம் பெருசா இருக்கு என மதிப்பெண் போடுவதற்கே கார்த்திக்கும் அவனது நண்பர்களுக்கும் நேரம் சரியாக இருந்தது.. இடை இடையே புத்தாடையும் கண்ணில் வந்து மறைந்தது

“ஏய் கணேசு. பொங்கலுக்கு உனக்கு என்ன துணிடா எடுத்துருக்காங்க?”

“கரும்பு கலர்ல ஒரு பேண்டும்.. ஜிகுஜிகு ஒரு சட்டையும் எங்கப்பா வாங்கிட்டு வந்தாருடா.. சும்மா சூப்ரா இருக்கு தெரியுமா?” “ஆனா, படைச்சிட்டுத்தான் போடனும்னு எங்க அம்மா சொல்லிடாங்க டா.”

“ஆமாண் டா, எங்க அம்மாவும் அதுதான் டா சொன்னாங்க”.

“ஆமா.. கார்த்தி உனக்கு என்ன டிரெஸ் டா உங்க வீட்டுல எடுத்து இருக்காங்க?”


“யாருக்கு தெரியும்.. நான் இன்னும் பாக்கவே இல்லடா.”


“ஹேய் பொய் சொல்லாதடா.. உனக்கு டிரெஸ் எடுத்தாங்கலா இல்லையா.. சும்மா டிரெஸ் எடுத்தாங்கனு புலுகறியா?”

" அவங்க வீட்டுல எங்க டா எடுத்திருக்க போராங்க. அவங்க அம்மாவே தண்டல் கட்டலனு தண்டல் காரன் காலையில தான் கேட்டுட்டு இருந்தான். நான் பார்த்தேன். இதுல இவனுக்கு புது துணியா? " என மற்ற ஒருவன் கேலி பேச...

" டேய்.. நான் தான் பாத்தணு சொல்றேன் ல.. நேத்து எங்க அப்பா எடுத்துனு வந்தாரு நான் ஏன் பொய் சொல்ல போறேன்.. போடா…” என தன் நண்பர் கணேஷிடம் பொய் கோபம் காண்பித்து வீட்டுக்கு புறப்பட்டான் கார்த்தி..


“அம்மா மட்டும் டிரெஸ காமிச்சிருந்தா நாமலும் பெருமையா சொல்லிருக்கலாம்..” “என்ன டிரெஸ்தான் எடுத்துணு வந்துருக்காங்கனு தெரிலயே..” என சிந்தித்துக்கொண்டே வீட்டுக்குச்சென்ற கார்த்தியை வாசலில் கட்டி வைத்திருந்த மாடுகளும், அவற்றின் அலங்காரமும் வரவேற்றன. கூடவே படையல் முடிந்து புத்தாடை அணியும் நேரம் வந்துவிட்டது என்பதையும், அந்த மாடுகள் உணர்த்தின..

உற்சாகம் தொத்திக் கொண்டவனாக ஒரே பாய்ச்சலில் வீட்டில் புகுந்தான் கார்த்தி..


“அம்மா..”


“ஏன் டா நல்ல நாளுல கூட வீட்டுல தங்க மாட்டியா..” என பொரிந்து தள்ளினார் கார்த்தியின் அப்பா..


“ஏங்க சும்மா புள்ளைய திட்டறீங்க..” என அம்மா பரிந்து வர.. கார்த்தியின் கண்கள் மட்டும் சாமி படம் முன்பு வைக்கப்பட்டிருந்த கட்டைப்பை மீதே பதிந்திருந்தது… படையல் முடிந்து.. புத்தாடையை எடுத்து நீட்டினார் கார்த்தியின் அம்மா…


கார்த்தி ஏறக்குறையே அழுதே விட்டான்…


“அடுத்த வருஷம் நீ ஒன்பதாவது போறல கண்ணா.. பள்ளிக்கூடம் திறக்கும் போது திடீர்னு எப்படி பேண்ட் வாங்கறது? அதான் பொங்கலுக்கே உனக்கு ஸ்கூல் டிரெஸ் அப்பா வாங்கிட்டு வந்துட்டார்..” என விளக்கம் கொடுத்தார் அம்மா..


………………………..(மவுனம் காத்தான் கார்த்தி)
பள்ளி திறக்கும் போது முதல்நாளே யூனிஃபாமில் போக போகிறோம் என்ற மகிழ்ச்சியை விட, பொங்கல் புத்தாடைக்காக இரவு முழுவதும் காத்திருந்தது வீணாகி விட்டதே என்ற கவலைத்தான் கார்த்திக்கு அதிகம் இருந்தது..


“என்ன டா ராசா அம்மா வாங்கியாந்த துணி புடிக்கலையா உனக்கு?”


“நீல பேண்ட், வெள்ளச் சட்ட இதுல எத பாத்து புடிக்குதுனு சொல்லறது..” மனதுக்குள் வெம்பினான் கார்த்தி..
“பாருபா புள்ளைங்கலாம் புது சொக்கா போட்டுக்கிட்டு.. மாட்டுவண்டில போகுதுங்க.. ஓடு நீயும் புது துணி போட்டுக்கோ..”


“ம்………………..”


கார்த்தியின் கையில் இருந்த, புது யூனிஃபாம் அவனை பார்த்து சிரிப்பதாய் தோன்றியது அவனுக்கு…

“என்னங்க பொங்கல் அதுவுமா இவ்வளவு நேரமா தூங்கறது?”..
மனைவில் அதட்டல் கலந்த கொஞ்சலில் தூக்கம் கலைந்து நிகழ்காலத்திற்கு திரும்பினான் கார்த்தி..


“கொஞ்சம் எழுந்து பொங்கல் வெக்கற குக்கர செல்ப்ல இருந்து எடுத்துதாங்க.” “அப்போதான் நீங்க ஆபிஸ் போறதுக்குள்ள படையல் போட முடியும். அப்புறம் லேட் ஆகிடுச்சி அப்படி இப்படினு சொல்லக்கூடாது.”
சின்ன வயதில் கொண்டாட்டமாய் இருந்த பொங்கல் தினம்.. இப்போது எல்லாம் ஆண்டு ஒருநாள் வரும் சராசரி தினமாக மாறி போனதில் கார்த்திக்கு சற்று சலிப்பு இருக்கதான் செய்கிறது.

சொந்த ஊரில் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே தயாராகும் பொங்கல் பண்டிகைக்கும், பெங்களூரு போன்ற பெருநகருக்கு படித்து பிழைப்புக்காக வந்த பிறகு கொண்டாடும் பொங்கலுக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள். குடும்பத்து வாட்ஸ் அப் குரூப்பில் போட்டோ அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றால், பொங்கல் தினமும் சாதாரண நாளாய் தான் போகும் என மனதிற்குள் ஆதங்கப்பட்டு கொண்டிருந்தான் கார்த்தி.

இதனை மனைவியிடம் காட்ட முடியாதே… படுக்கையை விட்டு எழுந்து சோம்பல் முறித்தப்படியே…
“சரிமா போ வரேன்.” “நீ போய் எல்லாத்தையும் ரெடி பண்ணு”.. என ஹாலுக்கு வந்தான் ..


வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அலமாரியை விட்டு கிழே இறங்கும்.. அந்த பொங்கல் குக்கரையும்.. பொங்கலுக்காகவே ஆண்டுவ்தோறும் புதியதாக அம்மா வாங்கும் மண்பானையையும் நினைத்து சிரித்தான் தூக்கத்தில் இருந்து எழுந்த பிறகும் நீங்காத பழைய நினைவுகளுடன்..


”ஐயா என்ன இன்னைகு ஜாலி மூட்ல இருக்கீங்க போல.. காலைல எழுந்ததுல இருந்து ஒரே சிரிப்பா இருக்கீங்க?” என வம்பிழுத்தாள் கார்த்தியின் காதல் மனைவி..


”ஏன் டீ ஒரு மனுஷன் சிரிக்கறது தப்பா”


”சிரிக்கறது தப்பு இல்ல செல்லம்.. தனியா சிரிக்கறது தப்புனு எங்க ஊர்ல சொல்லுவாங்க..”


“ஆமா பெரிய ஊரு.. உங்க ஊருல இத மட்டும்தான் சொல்வாங்கலா.. புருஷன் எழுந்தா அவனுக்கு குளிக்க தண்ணீர் எடுத்து வைக்கணும்.. முதுகு தேச்சி விடனும் அப்படினுலாம் சொல்லி தர மாட்டாங்கலா..?”


“ஓ சாருக்கு இப்படிலாம் கூட நெனப்பா.. போ பா போ போய் பொங்க வைக்கற வழியப்பாரு..”


“உனக்கு வர வர வாய் ரொம்ப ஆகிடுச்சி டீ..”


“ஆமா பாவம் டைய்லி என் வாய டேப் வைச்சி அளந்தே சாருக்கு நேரம் போய்டுது..”


“ஆத்தா நீ ஆள விடு ஆபீஸ்க்கு டைம் ஆகுது.. நான் போய் ரெடி ஆகறேன்..”


“தட்ஸ் குட்..” என கார்த்திக்கும் அவன் மனைவி ஓவிக்கும் இடையிலான உரையாடல் முடிந்து..

கார்த்தி அலுவலகத்திற்கு தயாராகினான். குளித்து முடித்து அலுவலகம் செல்ல தயராக வந்த கார்த்தியை கம கம மணத்துடன் வரவேற்றது சாப்பாட்டு மேசை மீதிருந்த பொங்கல்..

முதல்வேலையாக எல்லாவற்றையும் போட்டோ எடுத்து குரூப்பில் போட்டான். அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் என கூறிவிட்டு, அவசர அவசரமாக பொங்கலை கொரிக்க ஆரம்பித்தான்.


“என்னங்க பொங்கலுக்கு எடுத்த டிரெஸ் போடாம யூனிஃபாம் போட்டுட்டு போறீங்க?”

“சாப்பிட கூட விட மாட்டியாடீ சும்மா நச்சரிச்சிட்டே இருப்ப”


“இல்ல கடை கடையா தேடி பொங்கலுக்குனு புது டிரெஸ் எடுத்தீங்க.. இப்போ அத போடலையேனு கேட்டேன்”


“மாசத்துக்கு 4 டிரெஸ் எடுக்கறோம்.. இதுல என்னடி இருக்கு பொங்கலுக்குனு தனியா?”


“ம்…………..” என்று முகத்தைச் சுருக்கிய மனைவியிடம்,


“இன்னைக்கு கம்பெனில புராஜெக்ட் மீட்டிங்.. ஃபாரீன் கிளையண்ட்ஸ் வராங்க.. சோ பாஸ் டீம் எல்லாரையும் யூனிஃபாம்ல வர சொல்லிட்டார்..” என விளக்கினான் கார்த்தி..


“அப்படியா ஓகே.. ஓகே.. என்ஜாய்.. ஈவ்னீங் சீக்கரம் வாந்துடுங்க..” என வழியனுப்பிய மனைவியிடமிருந்து விடைப்பெற்ற கார்த்தியை பார்த்து சிரித்தன.. யூனிஃபாம் சட்டையும் கோட்டும்..

கார்த்திகா செல்வன்..

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...