வயதுக்கு மரியாதை.

கற்பனை
5 out of 5 (2 )

காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தட்டுத் தடுமாறி வெளியேறி,மெதுவாக அவிநாசி சாலையைத் தொட்டு,ஆறு சிக்னல்களின் நீண்ட காத்திருப்பிற்கு நடுவே, இடையிடையே, கால்களைக் கடித்து விட்டு அசைந்தவுடன் பறந்து விடும் கொசுக்களைப் போல,சிறிய இடைவெளிகளில் சாகசமாய் நுழைந்து செல்லும் பைக் ஓட்டிகளை சமாளித்து,சின்னக் கீறலும் விழுந்து விடாமல் லட்சங்களை விழுங்கி சாலையில் மிதக்கும் கார்களின் பின்னாலும்,வேலை முடிந்து வீட்டுக்கு விரையும் வேகத்தில் மிச்சமிருக்கும் பொருள்கள் சாக்குக்குள் வலியத் திணிக்கப் படுவது போல்,மக்களை அடைத்துக் கொண்டு சீறிப்பாயும் ஷேர் ஆட்டோக்களைக் கடந்தும் ஒரு வழியாக திருச்சி சாலையைத் தொட்டிருந்தது கோவையிலிருந்து பல்லடம் வழியாக தாராபுரம் செல்கிற தனியார் பேருந்து.நல்லவேளை சரக்கு லாரிகள் எட்டு மணிக்கு மேல்தான் நகர எல்லைக்குள் வரவேண்டும் என்பதால் சரக்கு லாரிகளின் சாலை நெரிசலில் சிக்கிக் கொள்ளவில்லை.கிட்டத்தட்ட கிளம்பிய நேரத்திலிருந்து ஒன்றேகால் மணிநேரத்தைக் கடந்திருந்தது.
காலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணி வரையிலும்,மாலை ஐந்து மணியிலிருந்து எட்டு மணி வரையிலும் கோவையிலிருந்து தாராபுரம் செல்வதும் ஒரு சாகசம் தான்.தாராபுரத்திற்குச் செல்லும் பேருந்துகள் காந்திபுரத்திலிருந்து தான் கிளம்பும்.காந்திபுரத்திலேயே பேருந்து நிறைந்து விடும்.வழியில் ஒண்டிப்புதூர் வரை அங்கங்கே ஏற்றப்படும் பயணிகள் உட்கார இடம் கிடைப்பது கடினம்.நின்று கொண்டே தான் பயணிக்க வேண்டும்.ஒட்டன்சத்திரம் வழியாக வெளியூர் செல்லும் பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும்.அனைத்துமே தாராபுரம் வழியாகத் தான் செல்லும் ஆனால் பயண வாய்ப்பு நடத்துனரின் மன நிலையைப் பொறுத்தது.சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முழுக்க திண்டுக்கல் மட்டும் ஏறு,மதுரை மட்டும் ஏறு,தேனி மட்டும் ஏறு என்று செல்லக் கூடிய கடைசி ஊரின் பெயரை உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கும் நடத்துனர்களின் குரலையே கேட்க முடியும்.இருக்கைகள் நிறைந்த பின் நடத்துனர் மனது வைத்தால் தாராபுரம், ஒட்டன்சத்திரம் வரை நின்று கொண்டே போகலாம்.சூலூர்,பல்லடம் எல்லாம் நிற்க வாய்ப்பே இல்லை அதனால் ஏற்றவே மாட்டார்கள். வார நாட்களில் இந்த நிலை என்றால் வார இறுதி சனிக்கிழமைகளில் சொல்லவே வேண்டாம். அருகாமை ஊர்களில் இருந்து கோவை வந்து தங்கியிருந்து பணிபுரியும் மொத்த கூட்டமும் ஞாயிறு விடுமுறையைக் கழிக்க சொந்த ஊருக்குப் படையெடுப்பதால் கோவையின் பேருந்து நிலையங்கள் வாராவாரம் திருவிழா காணும்.
இப்படியான ஒரு சனிக் கிழமை மாலையில் அலுவலகத்தில் இருந்து அவசரமாய்க் கிளம்பி,காந்திபுரம் வந்து சேர்ந்து நான்கைந்து பேருந்துகள் கடந்தபின் இந்தப் பேருந்தில் ஒரு வழியாக சன்னலோர இருக்கையில் இடம்பிடித்து அமர்ந்து கொண்டான் ராஜா.சாலை நெரிசல் ஒரு புறம்,மூச்சு விட முடியாத அளவு கூட்டம் ஒரு புறம்,அலறிக் கொண்டிருக்கும் ஹார்னின் சத்தம் ஒருபுறம்,பேருந்துக்கென்றே எழுதப்பட்டது போல அதிரும் இசையில் ஓடிக் கொண்டிருக்கும் பாடல்கள் ஒரு புறம் இத்தனையும் சேர்ந்து அந்த ஒன்றே கால் மணி நேரத்தை விழுங்கி இருந்தது.
பகலை மெல்ல விழுங்கத் தொடங்கி இருந்தது முன் இரவு.மாலை நேரத்துப் பறவைகள் பூச்சிகளின் சத்தம் தொடங்கியிருந்ததை ஒரு பாடல் முடிந்து அடுத்த பாடல் துவங்கும் அந்த இடைவெளியில் நன்கு உணர முடிந்தது.
செவ்வானம் முழுவதுமாய் மலர்ந்திருந்தது.சன்னலின் வழியே எதிர்த்திசையில் மின்னலாய் மறையும் மக்களையும் வாகனங்களையும் அவ்வப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டே,தன் பையிலிருந்த வார இதழ் ஒன்றை புரட்டிப் படிக்க ஆரம்பித்தான்.
முன் அட்டையில் இருந்த உயர்த்திக் காட்டப்பட்ட இரண்டு கட்டுரைகளை முதலில் வாசிக்கத் தொடங்கினான் ராஜா.இடையிடையே நேரத்தையும் வந்துள்ள ஊர்களையும் பார்த்துக் கொண்டே வந்தான்.அதிக நேரம் ஆகிவிட்டால் ராஜாவின் ஊருக்குப் போய்ச் சேர முடியாது.தாராபுரத்திலிருந்து கடைசி டவுன் பேருந்து ஒன்பதே கால் மணிக்கு.
அதை விட்டால் திருப்பூரிலிருந்து பழனி செல்லும் பேருந்து ஆனால் அதில் ஏற நடத்துனர் தான் மனது வைக்க வேண்டும்.சில நேரங்களில் பஸ் வரவே டிரைவரும் மனது வைக்க வேண்டி இருக்கும்.பேருந்து வராது.
தாராபுரத்திலிருந்து பழனி செல்வதற்கு தொப்பம்பட்டி வழி,அலங்கியம் வழி என இரண்டு வழிகள் உண்டு.பெரும்பாலும் பேருந்துகள் தொப்பம்பட்டி வழியாகத் தான் செல்லும்.அலங்கியம் வழியில் குறைவான,குறிப்பிட்ட நேரத்திலேயே பேருந்துகள் உண்டு.பெரும்பாலும் இந்தச் சாலையில் நெரிசல் இருக்காது. பழனி மலைக்குப் பாதயாத்திரை செல்ல தாராபுரம் மார்க்கமாக வரக்கூடிய பக்தர்கள் பெரும்பாலும் இந்த அலங்கியம் வழியாகத் தான் செல்வார்கள். அப்படியே பெரிச்சிபாளையம், நால்ரோடு,கோரிக்கடவு,நரிக்கல்பட்டி வழியாகச் சென்று மானூர் சண்முகா நதியில் நீராடி பின் முருகனை தரிசிக்கச் செல்வார்கள்.
இந்தச் சாலையின் முக்கியப் பகுதியான அலங்கியத்தை அடுத்த ஊரான பெரிச்சிபாளையத்தில் தான் ராஜாவின் வீடு.அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமையில் ஒரு திருமண நிகழ்விற்காக ராஜா ஊருக்குச் செல்கிறான்.வேகமாகக் காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றாலும் ஒரு நிறுத்தம் கூட விடாமல்,யார் கை காட்டினாலும் நிறுத்தி ஏற்றிக்கொண்டு,பறந்து கொண்டிருந்தது பேருந்து.
வார இதழின் தலைப்புகளை மீண்டும் ஆழமாய் வாசித்தான்.ஏதோ உறுத்துவது போல இருந்தது."இப்ப எல்லாம் யாரு சார் ஜாதி பாக்கறாங்க" என்ற தலைப்பில் நகர்ப்புறங்களை முன்னிறுத்தி ஒரு கட்டுரையும்,"காலங்காலமாய்த் தொடரும் தீண்டாமைக் கொடுமைகள் " என்ற தலைப்பில் கிராமங்களை மையப்படுத்தி ஒரு கட்டுரையும் இருந்தது. மனதை ஒரு முகப்படுத்தி இரண்டு கட்டுரைகளையும் வாசித்து முடித்தான் ராஜா.
மிகச் சிறந்த எழுத்தாளர்கள் இருவரின் மாறுபட்ட இரண்டு கட்டுரைகளையும் மனதுக்குள் அசை போட்டான்.காலங்காலமாய் தொடர்ந்து வருகின்ற சாதியக் கொடுமைகள் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறான் ராஜா.அந்தக் கட்டுரைகளின் படி சாதிய உணர்வுகளை ஆழமாக ஊட்டுவது கிராமங்கள் தான் என்றே தோன்றியது.
சாதிய வேறுபாடுகளற்று கிட்டத்தட்ட எல்லாரும் சமம் என்ற நிலையை நோக்கி நகரங்கள் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அவனுக்குப் பட்டது. நகரத்தின் வளர்ச்சியும் மக்களின் அடர்த்தியும் அவனை அந்த அளவில் யோசிக்க வைத்தது.தான் கடந்து வந்த பாதைகளையும் அதில் தன்னைக் கடந்து சென்றவர்களில் சாதிய உணர்வோடு இருந்தவர்களையும்,சாதிய உணர்வுகளால் அடிமையாக்கப் பட்டவர்களையும்,நேரடியாக அல்லாமல் செய்திகளாகவோ கதைகளாகவோ சாதியில் சிக்குண்டவர்களையும் தன் மனதிற்குள் சந்தித்து உரையாடத் தொடங்கினான்.
உரையாடல்களை உயிர்ப்பிக்க சமகாலச் சூழ்நிலைகளும் அவனுக்குக் கை கொடுத்தது.அப்படியே அந்தப் பேருந்துக்குள் தன் பார்வையைச் சுற்றி ஓட விட்டான்.நெருக்கியடித்துக் கொண்டிருக்கும் அந்தக் கூட்டத்தின் கால்களுக்கடியில் சாதியம் செத்துக் கொண்டிருப்பதாய் அவனுக்குப் பட்டது.கட்டுரையை ஒப்பிட்டுப் பார்த்தான். நகரங்கள் சாதி மறுப்பை முன்னோக்கி நகர்வதாய் சொல்லப்பட்ட கூற்று கொஞ்சம் ஒத்துப் போவதுபோல் இருந்தது.
இந்தச் சமநிலையால் தான் ஒரு காலத்தில் கிராமங்களாக இருந்தவை நகரங்களாக மாறியதாகவும்,மனிதச் சமநிலையை மறுப்பதாலே இன்னும் கிராமங்கள் முன்னேறாமல் இருப்பதாகவும் எண்ணத் தொடங்கினான்.ஒரு வழியாய் தாராபுரத்தை அடைந்தது பேருந்து.அந்தப் பேருந்து நிலையத்தில் குழுமம் குழுமமாக மக்கள் அமர்ந்திருந்தார்கள்.கடைசிப் பேருந்து என்பதால் தாராபுரம் டூ கீரனூர் செல்லும் 3ம் நம்பர் பேருந்தை எதிர்பார்த்து ஒரு பெரிய கூட்டமே இருந்தது.
மூன்றாம் நம்பர் பேருந்து தாராபுரம் பேருந்து நிலையத்திற்குள் வந்தவுடன் வழக்கம் போல் இருக்கைகள் நிறைந்தன.வெளியூர்களிலிருந்து வருபவர்களும் அலங்கியத்திலிருந்து கீரனூர் சுற்றுவட்டாரத்தில் வசித்து தாராபுரத்தில் வேலைக்கு வருபவர்களும் என அனைவரும் கடைசி வண்டிக்கு காத்திருப்பதால் எப்போதும் இருக்கைகள் நிறைந்துவிடும்.ஒரு வழியாக டவுன்பஸ் கீரனூரை நோக்கிக் கிளம்பியது.பெரிச்சிபாளையம் வருவதற்கு அரை கிலோ மீட்டர் முன்பே தூரத்தில் பள்ளிவாசல் மினரா தெரியும்.அதைக் கண்டவுடனே ராஜா எழுந்து இறங்கத் தயாரானான்.
பெரிச்சிபாளையம் பஸ் ஸ்டாப்பில் இறங்கியவுடன் ராஜாவின் மனதுக்குள் இனம் புரியாத ஆனந்தம் புகுந்து கொண்டது.வெளியூரில் வசித்து வந்து சொந்த மண்ணை மிதிக்கும் அனைவருக்கும் இப்படியான இன்பம் இருக்கும் என எண்ணிக் கொண்டான் ராஜா.வீட்டை அடைந்து உணவுண்டபின் பயணக் களைப்பில் அயர்ந்து உறங்கிப் போனான்.
உறக்கத்தில் இருந்தாலும் அந்தக் கட்டுரைகளின் கருத்தாழம் அவன் சிந்தையில் ஓடிக் கொண்டே இருந்தது. அடுத்த நாள் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட ராஜா,பந்தி பறிமாற ஓடியாடி சோற்றையும் குழம்பையும் வாளியில் தூக்கிக் கொண்டு திருமணத்திற்கு வந்தவர்களை உபசரித்துக் கொண்டிருந்தான்.திடீரென திருமண மண்டபத்தின் சமையலறையில் ஒரு கூச்சல் கேட்டது.ராஜாவும் அங்கே ஓடினான்.அங்கே பத்துப் பதினைந்து வயதுடைய ராஜாவின் உறவுக்காரப் பையன் சத்தம் போட்டுக் கொண்டிருந்தான்.கூடவே இரண்டு மூன்று நடுத்தர,வயது முதிர்ந்த பெரியவர்களும் அவனை ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"ஏம்மா உனக்கு அறிவில்ல? சொந்தக்காரங்க எல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கப்பறம் உனக்கு சோறு தரேன் னு எத்தன தடவ சொல்றது? வந்தர்ரது தூக்குவாளிய தூக்கிட்டு,போ அந்தப் பக்கம் " என மிரட்டும் தொனியில் பேசிக் கொண்டிருந்தான் அந்தப் பையன்.
"காலைல இருந்து பாத்தரம் கழுவுனேன்,கல்யாண வீட்லயும் கூட்டிப் பெருக்கி கழுவி எல்லா வேலையும் செஞ்சேன்.இப்பக் கூட மண்டபத்து பாத்தரமெல்லாம் கழுவி முடிச்சிட்டுத் தான்ங்க ஐயா,சோறு கேட்டேன்.என கண்ணில் நீர்துளிர்க்க பதில் சொன்னார் ஐம்பது வயதைக் கடந்த அந்த அம்மா!
அதான் பையன் சொல்றான்ல வெளிய போ என அதட்டினார்கள் அந்தப் பெரியவர்களும்.ராஜா திகைத்துப் போய் நின்றான்.ராஜாவின் தாத்தாவுடைய காலத்தில் அந்த அம்மா சின்னப் பெண் ,அப்பாவுடைய காலத்தில் திருமணமானவர்,இப்போது பாட்டியாகி விட்டவர் அவரை தலைமுறை தலைமுறையாக குழந்தைகள் கூட பேர் சொல்லி அழைப்பது,என்ன மரியாதை?
வயதுக்காவது மரியாதை வேண்டாமா?அடுத்த தலைமுறைகளை இப்படியா வளர்ப்பார்கள்? என தனக்குள்ளே கேட்டுக் கொண்டான் ராஜா.அவர்களின் வலுவான அந்தக் கட்டமைப்பை இரத்தத்தில் ஊறிப்போன மேட்டுக்குடி உணர்வை எதிர்த்துத் தன்னால் ஏதும் செய்ய முடியாத நிலையை எண்ணி நொந்தான்.
மீண்டும் கோவைக்குத் திரும்பிய ராஜா.நகர்ப்புறத்தை ஆராயத் தொடங்கினான்.நாள்பட நாள்பட கிராமங்களை விட நகரங்கள் அதிகமாய் சாதிய வலைகளில் சிக்குண்டு வருவதைத் தெளிவாகக் கண்டு கொண்டான்.என்ன கிராமங்களில் நேரடியாக அவமதிப்பார்கள்,இங்கே கொஞ்சம் மரியாதையாக அவமதிக்கிறார்கள்.வேலை செய்யும் இடங்களில் மேலாளர்கள் பணியாட்கள் என்ற புது வித இடைவெளியை நகரங்கள் உருவாக்கி வைத்துள்ளன.பணியாட்களுக்குத் தனி உணவு ,தனி கழிப்பறை அதைத் தூய்மைப் படுத்துவதில் கூட மிகப் பெரிய பாகுபாடு.நகரத்தின் பேருந்துகளிலும் ஆளைப் பார்த்து மரியாதை.இவர்கள் எப்படி அடையாளம் காண்கிறார்கள் என்பது அதிசயம் தான்.நகரங்களின் வீடுகளுக்கு குப்பை எடுக்க வருபவர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதை ,கடைநிலை பணி செய்பவர்களும் மனிதர்கள் தான் என்ற மனிதத் தன்மை முற்றிலுமாய் மறைந்து இருபதாகிலும்,ஐம்பதாகிலும்,தொண்ணூறாகிலும் ஒருமை பேச்சு தான்.ஏய்,வா,போ தான்.நகரங்கள் முன்னேறுகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால் நகர மக்களில் குறிப்பிட்ட சிலரின் அடிமை வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது ராஜாவுக்கு உரைத்தது.
கிராமங்களின்றி நகரங்கள் இல்லை தான்.கிராமத்தின் எல்லாமும் நகரத்திலும் இருக்கின்றன.ஏற்றத்தாழ்வும் கூட.என்ற உண்மையை ராஜா உணர்ந்து கொண்டான்.
எத்தனை சீர்திருத்த வாதிகள் தோன்றி மறைந்தும், சமகாலத்தில் வாழ்ந்தும் இன்னும் இந்த மனித ஏற்றத்தாழ்வு சளைக்காமல் வாழ்ந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்த்தான் ராஜா.
எப்போதோ படித்த ஒரு வரி அவனது நினைவுக்கு வந்தது.
"உன்னைத் திருத்து உலகம் திருந்தும்"
மெதுவாகத் தனக்குள் உச்சரித்தான்.

ராஜா எப்போதும் வயதில் பெரியவர்களை மரியாதையாகத் தான் அழைப்பான்.வழக்கம் போல குப்பை எடுக்க வந்தவரிடம் "இந்தாங்க அக்கா" என மரியாதையாய் அழைத்து வீட்டுக் குப்பையைக் கொடுத்தான்.அடுத்த முறை குடும்பத்துடன் ஊருக்குப் போக வேண்டி இருப்பதால்,இப்போதே பிள்ளைகளிடம் தெளிவாக சொல்லிக் கொடுத்தான் "வயசுல பெரியவங்க எல்லாரையும் மரியாதையா தான் கூப்டனும்,அக்கா ,அம்மா,அண்ணா, ஐயா
னு எல்லாருக்கும் மரியாத குடுக்கனும் "என்று சொல்லிக் கொடுத்தான்.

அடுத்த தடவை ஊருக்குப் போனபோது,ராஜாவின் மகன் அக்கா சாப்டீங்களா வாங்க அக்கா வந்து உக்காந்து சாப்பிடுங்க என்று கூப்பிட்ட போது ஐந்து தலைமுறை கடந்து "ங்க" மரியாதையும் அக்கா என முதல்முறையும் கேட்டு கண்ணீர் விட்டார் போன நிகழ்வில் அவமதிக்கப்பட்ட அந்த அம்மாள்.
ராஜாவை நல்லா புள்ளய வளத்துருக்கீங்க தம்பி.நல்லா இருங்க என ஆசீர்வதிக்கும் சைகையில் வாழ்த்தினார் அந்த அம்மா.

தன்னைத் திருத்தி,தனக்கடுத்த தலைமுறையையும் திருத்திக் கொண்டான் ராஜா.

எப்போதாவது இந்த உலகம் திருந்தும் என உறுதியாக நம்பினான்.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...