உன் கண்ணில் நீர் வழிந்தால்

காதல்
5 out of 5 (70 Ratings)
Share this story

மழைபெய்து ஓய்ந்திருந்த அந்தி மாலை அது.நகரத்தின் ஒதுக்குபுறமாய் இருந்த வீட்டின் மூலையில் உள்ள பழைய டேப் ரெக்கார்டரில் “நலம் வாழ எந்நாளும் நல்வாழ்த்துக்கள்” பாடல் போதுமான சத்தத்துடன் (வெளியாட்கள் யாரும் கேட்டிராத வகையில்) ஒலித்துக் கொண்டிருந்தது. மேசையில் வைக்கப்பட்டிருந்த மின்விசிறியின் காற்று மிதமாய் வீச, ஹாலின் நடுவே இயக்குனர் பிரபஞ்சன் தன் கால்களை நீட்டியபடி எழுத்தாளர் மாலனின் புத்தகத்தை இடது கையில் வைத்து படித்தபடி உக்காந்திருந்தார். பக்கத்தில் சூடான தேநீர் நாக்கை பிரபஞ்சனின் நனைப்பதற்காக காத்து கொண்டிருந்தது. அந்த தேநீரை வலது கையால் எடுத்து பருகினார். “மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்” என்ற பாடல் வரி ஒலிக்கும் போது விஜி கையில் ஒரு ட்ரேவுடன் பிரபஞ்சன் வலது பக்கத்தில் சம்மணம் போட்டபடி வந்தமர்ந்தாள்‌. அந்த ட்ரேவில் நகவெட்டி, தண்ணீர் நிரம்பிய டம்ளர் ஒன்றும் இருந்தது.
விஜி, ரெடியா? என்று கேட்க, பிரபஞ்சன் தலையசைத்து தன் வலது கையை விஜியிடம் ஒப்படைத்தார். அந்த வலது கை விரல்கள் முழுக்க எழுதியே தேய்ந்து போன வடு இருந்தது. அந்த விரல் நகங்களை விஜி மெல்ல பிடித்து நகவெட்டியால் நறுக்க தொடங்க “விரல்களை தாண்டி வளர்ந்ததை கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு” என்ற வரிகள் ஒலிக்க இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்து கொண்டனர். பிரபஞ்சனுக்கு மாதம் ஒரு முறை விஜியால் நகம் வெட்டும் உற்சவம் நடைபெறும். அந்த உற்சவம் இருவருக்குமே உற்சாகத்தை தரக்கூடியதாக இருக்கும். என்ன தோன்றியதோ என்று தெரியவில்லை பிரபஞ்சன் திடீரென புத்தகத்தை மூடி வைத்து விட்டு விஜியை உற்று நோக்கினார். உற்று நோக்குதலில் பாலு பெரும் வித்தைக்காரர். பிரபஞ்சனின் கேமரா கண்களின் வெளிச்சம் விஜியின் முகத்தை கூச செய்ய விஜி மெல்ல அவரை பார்த்து என்ன என்பது போல கண் புருவத்தை உயர்த்தி வினாவினாள். விஜியின் மேனசரிங்களில் முக்கியமானது கண் புருவத்தை உயர்த்துவது. பிரபஞ்சனும் அதை அடிக்கடி சொல்லி சிலாகிப்பார். விஜியும் அந்த சிலாகிப்பில் சிலிர்த்து போவாள்.
“உனக்கு இப்ப நாப்பது வயசு இருக்குமா? என்று பிரபஞ்சன் சாதாரணமாக கேட்டார். ஆனால் இந்த கேள்வி சாதாரணமாக கேட்கப்படவில்லை என்பது விஜிக்கு நன்றாகவே தெரியும்.
“எதுக்கு ஒரு வயச அதிகமா சொல்றீங்க” என்று விஜி குசும்பாக கூறினாள்‌.
“தப்பு தான்மா மன்னிச்சிடு” என்றார் பிரபஞ்சன்.
“நீங்க காரணம் இல்லாம இப்டிலாம் கேக்க மாட்டீங்களே” என்று தலையை ஆட்டினாள் விஜி.
“நீ நடிக்கணும் விஜி” என்றார் நிதானமாக, இதை எதிர்பார்த்திராத விஜி நிமிர்ந்து பிரபஞ்சனை பார்த்தாள்.
“நீங்க டைரக்ட் பண்றனு சொல்லுங்க நா இப்பவே ரெடி” என்றாள் விஜி உற்சாகமாக.

“எனக்கும் ஆச தான் விஜி ஆனா உடம்பு தான் மாட்டேன்னு அடம் புடிக்குதே. என்ன‌ பண்றது” என்று தன் உடல் நிலை குறித்து கவலைப்பட்டார் பிரபஞ்சன்.
“நீங்க சேர்ல உக்காந்து ஆக்ஷன் கட் மட்டும் சொல்லுங்க மத்தத நா பாத்துக்கறன்” என்று நடித்து காட்டி பேசினாள் விஜி. பிரபஞ்சன் மேலிருந்து தன் தலையை சாய்த்து விஜியை நக்கல் தொனியில் பார்த்தார்.
பிரபஞ்சன், “இத எப்பமா கத்துக்கிட்ட” என்றார் கிண்டலாக.
“இருவத்தஞ்சி வருஷம் உங்க கூட வாழ்ந்துருக்கறன் அந்த அனுபவம் பத்தாதா?” என்றாள் தீர்க்கமாக. பிரபஞ்சன் நக்கலாய் சிரித்து,
“அதுவும் சரி தான் இப்பலாம் கேமரா இருந்துட்டாலே போதும் படம் எடுத்தறாங்க. அதுவும் குப்ப படம் எடுக்கறதுல அவ்ளோ சந்தோஷம் அவனுங்களுக்கு. மக்கள் தான் பாவம் எல்லாத்தையும் சகிச்சிட்டு பாக்க வேண்டியதா இருக்கு” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நல்ல படைப்பாளிகளுக்கே உரித்தான ஆதங்கம் இது.
“உங்க பசங்க படத்தயுமா சேத்து சொல்றீங்க”என்று திரியை கொளுத்தினாள் விஜி.
“அவனுங்க தான் கொஞ்சம் பாக்கற மாதிரி படம் எடுக்கறானுங்க. அவனுங்க இல்லனா தமிழ்சினிமா இன்னும் மோசமாயிடும்” என்றார்.
அந்த வார்த்தைகளில் கர்வம் இருந்தது. இருக்கத் தானே செய்யும் அவரின் வேரில் வந்தவர்கள் தான் இப்போது தமிழ் சினிமாவின் ஆணிவேராக இருக்கின்றனர். அந்த பெருமை பிரபஞ்சனை தான் சாரும்.
விஜி, “விட்டுக் குடுக்க மாட்டீங்களே” என்று சொல்லி, பிரபஞ்சனின் வலது கை விரல்களை பிடித்தாள்.
பிரபஞ்சன், “யேன் விதைங்க விஜி, எப்டி விட்டுக் குடுக்க முடியும்” என்று சொல்ல, “சொன்னது தப்பு தான் சாமி கண்ணத்துல போட்டுக்கறன்‌” என்று சொல்லி அவளது இடது கையால் கண்ணத்தில் போட்டுக் கொண்டாள் விஜி.பிரபஞ்சன் சின்ன சிரிப்பை உதிர்த்தபடியே ”உனக்கு ஒரு விஷியம் தெரியுமா? என்று சொல்ல, என்ன என்பது போல விஜி மீண்டும் தன் புருவத்தை உயர்த்தினாள்.
“உன் கண் புருவத்தையும், கண்ணத்தையும் பாத்து தான் உன்ன நடிகையாவே தேர்வு செஞ்சன்” என்று பிரபஞ்சன் சொல்ல, விஜியின் குட்டி கண்கள் அகலமாக விரிந்தன.
விரிந்த கண்களோடே “எத்தன நாள் கேட்ருப்பன் இப்ப தான் சொல்லணும்னு தோணுச்சா”
என்று சந்தோஷத்தில் சிலிர்த்து போனாள்.
“சொல்ல கூடாதுனு தான் இருந்தன், வாய் தவறி வந்துடுச்சி” என்றார் பிரபஞ்சன்.
“உங்ககிட்ட வாய் தவறி தானே உண்மைய தெரிஞ்சிக்க முடியுது”
என்று வார்த்தைகளில் நெடியைத் தூவினாள்‌ விஜி.

“என்ன விஜி ஏதோ பொடி வச்சி பேசுற மாதிரி தெரியுது”என்றார்.
“ஆமா மொளகா பொடி வச்சி பேசறன்‌. சும்மா கூட எதுவும் சொல்லக் கூடாதே உடனே ஆராய்ச்சி பண்ணுவீங்களே‌” என்று சலித்துக் கொண்டாள்.
“ஒரு படைப்பாளி எல்லா விஷியத்தையும் நுணுக்கமா ஆராய்ச்சி பண்ணி தான் ஆகணும் விஜி இல்லனா அவன் படைப்பாளியாவே இருக்க முடியாது” என்றார் முப்பத்தி ஆறு வருட அனுபவசாலி.
“உங்ககிட்ட வாதாடி ஜெயிக்க முடியாது சாமி நா இதோட நிறுத்திக்கறன்” என்று தோல்வியை ஒப்புக் கொண்டாள்‌ விஜி‌.
வெற்றிக் களிப்பில் பிரபஞ்சன் சிரிக்க, விஜி மூக்கை சுளித்து காட்டி நகத்தை நறுக்க ஆரம்பித்தாள்.
பிரபஞ்சன், “விஜி”என்று வார்த்தையை மிருதுவாக்கினார்‌. விஜி கேட்டும் கேட்காதது போல் இருந்தாள்.பாலுவின் மிருதுவான பேச்சுக்கு பின்னால் பெரும் சூட்சமம் ஒளிந்திருக்கும் என்பது இந்த இருபத்தைந்து வருட வாழ்க்கையில் இருவருக்குமான புரிதல். ஆதலால் விஜி அமைதியாக பிரபஞ்சனின் வார்த்தைகளை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
“நீ எனக்கு ரெண்டு சத்தியம் பண்ணி தரணும்” என்றார். வட்டிக்காரரிடம் கடன் கேட்பவர் தொனியில்,
“என்ன டைரக்டர் சார் ஏதோ பெரிய குண்டா தூக்கி போட போறீங்க போல” என்றாள் விஜி எச்சரிக்கையாக.
பிரபஞ்சன் நிதானமாக, “நீ மறுபடியும் நடிக்கணும் விஜி உன்ன மாதிரி நடிகைலாம் கெடைக்கறது அபூர்வம்‌” என்று சொல்ல, விஜி வினோதமான சிரிப்பொன்றை உதிர்த்தாள்‌.
“இப்ப யாரு என்ன நடிக்க கூப்டுவா அப்டியே கூப்ட்டாலும் என்ன விட வயசான நடிகருக்கு அம்மாவா, இல்ல அக்காவா நடிக்கணும்” என்று சலிப்படைந்தாள்.ஒரு வேளை அவள் நினைவில் சுஜாதா, லஷ்மி,ஸ்ரீ வித்யாவின் முகங்கள் வந்து போயிருக்கலாம். சினிமாவில் தான் பெரும்பாலும் கதாநாயகர்கள் சாகும் வரை கதாநாயகனாகவே இருப்பார்கள். ஆனால் கதாநாயகிகள் எந்த கதாநாயகனோடு காதலித்து டூயட் பாடினார்களோ அதே கதாநாயகனுக்கு அக்கா, அம்மா, மாமியார் என பல அவதாரங்களை எடுக்க வேண்டியுள்ளது.
“அப்படி பாத்தா நா கூடத்தான் உன்ன விட 28 வயசு பெரியவன் நீ யேன் கூட வாழ்லயா. ஆர்ட்டிஸ்ட்ல என்ன விஜி அம்மா,அக்கானு நிர்வாணமா ரோட்ல படுக்கணும் சொன்னாலும் படுக்கணும் அதான் உண்மையான ஆர்ட்டிஸ்ட். மேக்கப் போட்டு நடிக்கறவங்க ஆர்ட்டிஸ்ட் இல்ல அது மனசுக்குள்ள இருந்து ஆத்மார்த்தா வரணும்” என்றார் தமிழ் சினிமாவிற்கு தரமான கதாநாயகிகளை பட்டைத் தீட்டியவர்‌.
“இந்த தற்குறிக்கு அவ்ளோ அறிவல்லாம் இல்லைங்க சாமி. மன்னிச்சிடுங்க” என்று பிரபஞ்சனின் காலை தொட்டு கும்பிட, “காட் ப்ளஸ் மை சைல்ட்” என்று பிரபஞ்சன் கிண்டலடிக்க, விஜி பலமாக வெடித்து சிரித்தாள்.
பிரபஞ்சனுக்கு ஹியூமர் அனிச்சையாக வரும். பிரபஞ்சன் உடனே அமைதியாகி, “இந்த சிரிப்ப முழுசா இன்னும் ரெண்டு வருஷம் பாப்பனா? அதுக்கப்றம் கைலாசம் தான்” என்று சொல்ல, விஜி உடனே சிரிப்பை விழுங்கி கொண்டாள். விஜியின் முகம் சாத்தான்குளம் மக்களை போல கலவரமாக மாறியது.
“வார்த்தய தேடிப் புடிச்சி கஷ்டப்படுத்துவீங்களா. குழந்தையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலயும் ஆட்டி விட்றது உங்களுக்கென்னா புதுசா?
என்று விஜி படபடவென வார்த்தைகளால் பொறிந்து தள்ளி எழுந்துக்கொள்ள, பிரபஞ்சன் அவளின் முருங்கை கைகளை இறுகப் பிடித்து உட்கார வைத்தார். விஜி உட்கார்ந்து தன் முகத்தை திருப்பி கொள்கிறாள்.
“பழமொழி எல்லாம் சொல்லி திட்ற சான்ஸே இல்ல விஜி செம்ம ரியாக்ஷன். இப்ப மட்டும் யேன் கைய்ல கேமரா இருந்தா ஒரு பியூட்டிபுல் ஸ்னாப் எடுத்துடுவன். படத்துல கூட நீ இந்த மாதிரி ரியாக்ஷன் குடுத்ததில்ல அவ்ளோ அழகா இருக்கு” என்று வார்த்தைகளால் வசியப்படுத்தினார் பிரபஞ்சன்.
விஜி மெல்ல முகத்தை பிரபஞ்சனின் நேர் கோட்டிற்கு கொண்டு வருகிறாள். விஜியின் முகம் கோபத்தில் இருந்து தளர்ந்து புன்னகையை உதிர்க்க, பிரபஞ்சனும் சிரித்து விடுகிறார்.சில நொடிகள் சிரிப்பலை ஓய்ந்து முடிந்ததும் விஜி, பிரபஞ்சனிடம், “அந்த இன்னொரு சத்தியம்” என்று வலை வீசினாள்.
“நா செத்ததுக்கப்றம் நீ இன்னொரு துணை தேடிக்கணும்.நீ முடியாதுனு தான் சொல்லுவ ஆனா கண்டிப்பா பண்ணிக்கனும்” என்றார் கொஞ்சம் கண்டிப்பாக.
“துணை எதுக்கு உடம்பு சுகத்துக்கா?என்று விஜி கோபமானாள். விஜி அப்படி தான் பாசத்தை எவ்வளவு காட்டுகிறாளோ, அதை விட ஒரு படி மேலே கோபத்தையும் காட்டுவாள். பிரபஞ்சனுக்கு விஜியின் கோபத்தின் மீது எப்போதும் சற்று அச்சம் உண்டு. பெரும்பாலும் அந்த கோபத்தை தணிக்க பிரபஞ்சன் வார்த்தைகளை விட தொடுதலை தான் பெரிதும் கையாள்வார். ஆனால் இந்த முறை அதற்கும் வாய்ப்பில்லை என்றே அவருக்கு தோன்றியது‌.
“எதுக்கு விஜி இப்டிலாம் பேசற” என்று நொந்து கொண்டார் பிரபஞ்சன்.
“பின்ன நீங்க சொன்ன வார்த்தைக்கு வஞ்சர மீன வறுத்து வாய்ல ஊட்டுவாங்களா, இனிமே இப்டி பேசனீங்கனா கடிச்சிடுவன்”என்று சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை நிகழ்த்தியும் காட்டினாள்.
பிரபஞ்சன் வலியில் “ஆ” என்று வேகமாக கத்த,”அய்யயோ சாரிங்க நா வெளயாட்டுக்கு தான் கடிச்சன்” என்று மன்னிப்பு கேட்டாள் விஜி.
“பல்லு பதியுற மாதிரி கடிக்கறதுக்கு பேரு வெளயாட்டா? என்றார் பிரபஞ்சன் காட்டமாக.
“அப்டி பாத்தா என் உடம்பு புல்லா உங்க பல்லு பதியாத எடமே இல்லயே” என்று சொல்லி வெட்கத்தால் தலைகுனிந்தாள் விஜி.
“ரொம்ப நாளைக்கு அப்றம் நீ வெட்கப்பட்றத பாக்கறன் விஜி இன்னொரு வாட்டி ப்ளீஸ் “ என்று அன்புக் கட்டளையிட விஜி மீண்டும் வெட்கப்பட்டு சிரித்தாள்.
பிரபஞ்சன் மீண்டும் “ஒன்மோர்” கேட்க, “நீங்க உங்க டைரக்டர் வேலய காட்ட ஆரம்பிச்சிட்டீங்க இனிமே என்னால முடியாது” என்று சொல்ல, பிரபஞ்சன்
“நா சொல்ல வந்ததயே மறந்துட்டன். எல்லாம் உன்னால தான்” என்றார்.
“நீ துணை தேடிக்கணும் விஜி அதானே” என்றாள் விஜி. பிரபஞ்சனின் ஒவ்வொரு அசைவும் விஜிக்கு அத்துப்படி.
“இல்ல விஜி உடல் தேவை எல்லாம் ஒரு வயசு வரைக்கும் தான் அதுக்கு மேல நம்ம கூட உக்காந்து பேச நம்ம பண்ற கிறுக்குத்தனத்த சகிச்சிக்க இந்த உலகத்துல யாராச்சி கூட இருக்கணும் இல்லனா வாழ்றதுல அர்த்தமே இல்ல விஜி.தனிமை சந்தோஷத்தை தரும் சொல்றதெல்லாம் ஒரு மித்து(Myth) தான் அது ரொம்ப நாளைக்கு நீடிக்காது” என்று தத்துவார்த்த ரீதியாக பேச, விஜி கண் இமைக்காமல் பிரபஞ்சன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்.
“எனக்கு உங்கள தவர யாரையும் அந்த எடத்துல வச்சு பாக்க முடியாது‌ங்க. அப்படி அந்த எடத்துல வச்சு பாக்கற மாதிரி ஒருத்தர் இருந்தா நீங்க ஆசைப்பட்ட மாதிரியே நா அவர் கூட வாழறன்‌. ஆனா என்ன இப்ப கட்டாயப்படுத்தாதீங்க” என்றாள் கண்டிப்பாக.
“நீ தற்குறி இல்ல விஜி நெறய பேச கத்துக்கிட்ட” என்று மெச்சினார் பிரபஞ்சன்.
“நானும் டைரக்டர் பொண்டாட்டி தான்”என்று சொல்லி தோள்பட்டையில் கை வைத்து,
“என்ன ஊரறிய கழுத்துல தாலி கட்டல அவ்ளோ தான” என்ற விஜி வார்த்தையில் தன் நீண்டநாள் சோகத்தின் வடு இருந்தது. பிரபஞ்சன் முகம் கொஞ்சம் சற்று இறுகி போனது.
“நானே உன் வாழ்க்கையை கெடுத்துட்டனோனு குற்ற உணர்ச்சில இருக்கன்.நீ வேற வார்த்தயால கஷ்டப்படுத்தறியே விஜி” என்றார் விரக்தியாக.
“எதுக்கு குற்ற உணர்ச்சி, நீங்க ஒண்ணும் என்ன கட்டாயப்படுத்தலயே நானா புடிச்சி தான் உங்க கூட வாழ்ந்துட்டு இருக்கறன்” என்று வார்த்தைகளால் பிரபஞ்சனை ஆசுவாசப்படுத்தினாள் விஜி.

“இல்ல விஜி நீ யேன் மேல இருக்கற அன்புல சொல்ற ஆனா உண்மனு ஒண்ணு இருக்குல. அதுக்கு முன்னாடி என்னோட சுயநலம் தான் அப்பட்டமா தெரியுது.அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகாம” என்று மீண்டும் தன் மீதான குற்றத்தை வார்த்தைகளில் உலவ விட்டார் பிரபஞ்சன்.

“உங்கள மாதிரிலாம் எனக்கு வார்த்தய கோத்து பேச வராதுங்க.ஆனா ஒண்ணு மட்டும் நெஜம் இந்த விஜி உங்க கண்ணுல படாம போயிருந்தா அவளுக்குனு ஒரு அடையாளமே இருந்துருக்காது. இந்த நடிகைன்ற அடையாளம் புகழ் எல்லாமே நீங்க எனக்கு போட்ட பிச்ச தான்.அந்த பிச்சைக்கு ஈடா நா என்ன குடுத்தாலும் பத்தாது அதான் என்னையே குடுத்துட்டன்.இது சரியா தப்பானு சொல்ல தெரியல” என்று தன் ஆழ்மனதில் இருந்த எல்லாவற்றையும் கொட்டி தீர்த்தாள்.பிரபஞ்சன் கண்ணத்தில் கை வைத்தபடி விஜியின் முகத்தையே பார்த்தபடி இருந்தார்.
“என் விஜிக்கு இப்டிலாம் பேச வருமா. என்னோட அடுத்த படத்துக்கு நீதான் வசனம் எழுதணும் அட்வான்ஸ் எவ்ளோ சொல்லு”என்று கிண்டலாய் கேட்க, விஜி செல்லமாக கோபித்து தலையாட்டி பிரபஞ்சனின் கால் முட்டியில் கிள்ளுகிறாள்.
பிரபஞ்சன் “ஆ”வென சிணுங்க, “அட்வான்ஸ் எவ்ளோ தருவீங்க” என்று விஜி மூக்கை நீட்டியபடி கேட்டாள்.
“உன் கூட இன்னும் பத்து வருஷம் எக்ஸ்ட்ரா வாழப்போறன் அதான் அட்வான்ஸ்” என்றார் பிரபஞ்சன்.
“பத்து வருஷம் தானா? என்று விஜி உச் கொட்ட, “பத்து வருஷம் பத்தாது தான் ஆனா எமன் சும்மா இருப்பானா” என்றார் பிரபஞ்சன்.
“சும்மா சும்மா அப்டி பேசாதீங்க நீங்க இல்லனா நா எப்படி இருப்பனு நெனச்சி பாத்தாலே மனசெல்லாம் படபடனு துடிக்குது.எங்க போனாலும் நீங்க தான கையப் புடிச்சி கூட்டு போவீங்க. சாகறப்பவும் என்ன கூட்டு போய்டுங்க” என்றாள். ஆம் விஜிக்கு எல்லாமே பிரபஞ்சன் தான் கடைத் தெருவுக்கு கூட அவள் தனியாக போனதில்லை. நடிகை என்ற அடையாளத்தை விட பிரபஞ்சனின் மனைவி என்பதிலே விஜிக்கு ஆகப்பெரும் பெருமிதம்.
“சாவறதப் பத்திலாம் நீ யோசிக்கவே கூடாது விஜி. நம்ம இருபத்தஞ்சி வருஷ வாழ்க்கையில எவ்ளோ சந்தோஷமான நினைவுகள்லாம் இருக்கு அது எல்லாத்தையும் நெனச்சி பாத்தாலே இருபது வருஷம் ஓடிடும்‌. அதுக்கு மேல வேணா செத்துக்கோ” என்றார் பிரபஞ்சன். ஊரார் தூற்றிய இவர்களின் உறவுக்கு பின்னால் ஒரு உன்னதமான அன்பு இருக்கவே செய்தது.
“நா உங்க வாழ்க்கையில வராம இருந்துருந்தா நீங்க அமலாம்மா கூட சந்தோஷமா வாழ்ந்திருப்பீங்கள்ல” என்ற விஜியின் குரலில் பெரும் சோகத்தின் வடு இருந்தது.அந்த வடு பிரபஞ்சனையும் சற்று அசைத்து தான் பார்த்தது.சிறிய மௌனம் அங்கு நிழலாடியது.
“இது எல்லாமே இயற்கை விஜி நீயோ நானோலாம் அத சுலபமா மாத்திட முடியாது. இந்த இடத்துல நீ இல்லனா லதாவோ, சுபாவோ இருந்துருப்பாங்க அவ்ளோ தான். மனுஷன் மனசு எப்பவும் குரங்கு தான் விஜி உருவம் மட்டும் தான் மாறி இருக்கு” என்றதும், “அப்ப நானும் குரங்கா? என்று அப்பாவியாக கேட்டாள் விஜி. பிரபஞ்சன் தன் இரு கைகளாலும் விஜியின் வட்ட முகத்தை கைகளில் பற்றிக் கொண்டார்.
“ஆமா என் செல்லமான குரங்கு.நீ என் கண்ணுக்கு தெரியாம போயிருந்தா, என் வாழ்க்கையில ஒரு வெளிச்சம் இல்லாமலே போயிருக்கும் விஜி” என்று சொல்ல, விஜி கண்களில் மெல்ல கண்ணீர் திவலைகள் வழிய ஆரம்பித்தது. பிரபஞ்சன் அந்த கண்ணீரில் தன் இதழை பதித்தார். நலம் வாழ எந்நாளும் நல்வாழ்த்துக்கள் பாடல் ஒலித்து முடிந்து கண்ணே கலைமானே பாடல் ஒலித்து கொண்டிருந்தது. அப்போது டெலிபோன் மணி ஒலித்தது. விஜி எழுந்து போய் டெலிபோனை எடுத்து பேசினாள்.விஜி முகம் மாறியது.

“எப்போ? எந்த ஆஸ்பிட்டல்? என்ற விஜியின் குரலில் பதட்டம் தெரிந்தது.

பிரபஞ்சன் உடனே திரும்பி “விஜி” என்று கூப்பிட,
“அமலாம்மாவ ஹாஸ்பிட்டல்ல சேத்துருக்காங்களாம் ஹார்ட் அட்டாக்” என்றாள். பிரபஞ்சன் எதுவும் பதில் பேசாமல் அந்த பொன்னிற மாலையில் விஜியின் வீட்டில் இருந்து விடைபெற்று செல்லும்போது திரும்பி விஜியை ஒரு பார்வை பார்த்தார். விஜியை அவர் கடைசியாக பார்க்கும் கடைசி பார்வை என்பது அப்போது அவருக்கும் தெரியாது. விஜிக்கும் தெரியாது.அதன் பிறகு இரண்டு வருடங்கள் அவர் விஜியை பார்க்க வரவே இல்லை.விஜியும் அவரை பார்க்க எவ்வளவோ முயற்சி செய்தும் பார்க்க முடியவில்லை. மனித வாழ்வில் உறவுகளின் பிரிவென்பது ஒரு மீளா துயரம் விஜி அந்த துயரில் ஆட்கொண்டாள். பிரபஞ்சன் நினைத்திருந்தால் விஜியை சந்தித்திருக்கலாம் ஆனால் ஏனோ அவர் மறுத்துவிட்டார். மனித மனங்கள் தான் எவ்வளவு குரூரமானவை. விஜி தினமும் டெலிபோனை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். என்றாவது ஒருநாள் தனக்கானவர் போன் செய்துவிட மாட்டாரா என்று ஏங்கினாள்.ஒவ்வொரு நாள் டெலிபோன் ஒலிக்கும் போதும் விஜி ஆர்வமாய் எடுத்து பேசுவாள். ஆனால் மறுமுனையில் அவளுக்கு பிடித்தமானவரின் குரல் என்று தெரிந்ததும் மனமுடைந்து போவாள்.
சில நேரங்களில் அவர் தன்னுடன் இருப்பதாக நினைத்து அவருடன் சிரித்து பேசி கொண்டிருப்பாள். நமக்கு நெருக்கமானவர்களின் இறப்பை விட பிரிவு கொடுமையானது தான். ஒரு நாள் காலை விஜி வீட்டை சுற்றி காகங்கள் கரைந்து கொண்டிருந்தன. விஜிக்கு காகங்கள் கரைவது ஒரு வித சந்தோஷத்தை தந்தது. காரணம் காகம் கரைந்தால் உறவினர் வீட்டிற்கு வருவார்கள் என்பது ஒரு நம்பிக்கை. விஜி குளித்து முடித்து அவருக்கு பிடித்தமான சட்டை உடுத்தி வாசலை பார்த்தபடி இருந்தாள்.அப்போது டெலிபோன் மணி ஒலித்தது. விஜி ஆர்வமாய் போனை எடுத்து பேசினாள். மறுமுனையில் பேசியவரின் குரலில் ஒரு பதட்டம் இருந்தது‌.விஜி உடனே மௌனமானாள்.ஆம் பிரபஞ்சன் ஆன்மா இந்த மண்ணை விட்டு பிரிந்த செய்தி தான் அது. விஜி அவர் உடலை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பி போனாள். பிரபஞ்சன் வீட்டை சுற்றிலும் சினிமா பிரமுகர்களும், பத்திரிக்கையாளர்களும், அவரின் ரசிகர்களும் சூழ்ந்திருந்தனர்.
விஜியை, பிரபஞ்சன் வீட்டு வாசலிலே அவரை வழி மறித்தனர் அவரின் சீடர்கள். வழிமறித்ததோடு இல்லாமல் “தெவிடியா நீ எதுக்குடி இங்க வந்த” என்று கெட்ட வாரத்தைகளில் வசைபாடினர். விஜி அதை எல்லாம் பொருட்படுத்தாமல்,
“நா ஒரே வாட்டி அவர பாத்துக்கறன்” என்று கெஞ்சினாள்.
“எப்ப உன்ன பாத்தாரோ அப்பவே அவருக்கு சனியன் புடிச்சிடுச்சி ஒழுங்கு மரியாதயா ஓடிடு” என்று மிரட்டும் தொனியில் பேசினார்கள்.
ஆனால் விஜி பிடிவாதமாய் அங்கேயே நின்றிருந்தாள். ஒருகட்டத்தில் விஜியை தள்ளி விட விஜி கீழே விழுந்தாள். பத்திரிக்கையாளர்கள் உடனே விஜியை சூழ்ந்து கொண்டனர்.
“உங்களால தான் பிரபஞ்சன் சாரோட வாழ்க்க சீரழிஞ்சுதுனு சொல்றாங்க அது உண்மயா? என்று கேட்க, விஜி எதுவும் பேசாமல் மீண்டும் வீட்டுக்குள்ளே நுழைந்தார்.
பிரபஞ்சனின் சீடர்கள் மீண்டும் விஜியை வழிமறிக்க, பிரபஞ்சனின் மனைவி அமலா வந்து விஜியை உள்ளே செல்ல அனுமதித்தார். விஜி அமலாவை கை எடுத்து கும்பிட்டு உள்ளே நுழைந்தாள். பிரபஞ்சனின் உடல் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது. விஜி பிரபஞ்சனின் உடலையே உற்று பார்த்தபடி இருந்தாள். பிரபஞ்சன் அமைதியாக உறங்குவது போல இருந்தார். விஜி, பிரபஞ்சனின் முகத்தில் இருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக பார்த்தபடியே இருந்தாள். பிரபஞ்சன் கைகளில் விரல் நகங்கள் நறுக்கப்படாமல் பத்து சென்டிமீட்டருக்கு மேல் வளர்ந்திருந்தன. அதை பார்த்ததும் அவளுக்குள் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டு வெளியே வந்தது. விஜியால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. அழுதப்படியே அங்கிருந்து புறப்பட்டு வெளியே சென்றாள்‌ தூரத்தில் ஏதோவொரு டீக்கடையில் “விரல்களை தாண்டி வளர்ந்ததை கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு” என்ற பாடல் வரிகள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

கலை ராகவ்..
Mobile: 7871592360


Stories you will love

X
Please Wait ...