தனிக்குடித்தனம்

mrspriyankasriram
காதல்
4.9 out of 5 (64 Ratings)
Share this story

திருக்குறள்

தனிப்படர்மிகுதி

குறள் எண் : 1192


வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி.

மு.வரதராசனார் உரை

தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கின்றவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.


தனிக்குடித்தனம்.


தந்தை சிவநாயகம் உடன் அமர்ந்து மாலை காபி அருந்தி கொண்டிருந்த வசந்தனுக்கு அவன் மனைவி கேளுங்க என சைகை செய்ய வசந்தன் சற்று தயங்கியவன் அப்புறம் என ஜாடை செய்து கண்களால் கெஞ்சினான் மனைவி துர்காவோ தன் தலையில் அடித்து கொண்டு வாயில் ஏதோ சப்தமில்லாமல் முனுமுனுத்து கொண்டே சமையலறைக்கு சென்றாள்.


வசந்தன் மனமோ 'அப்படி ஒன்னும் நீ தப்பிச்சுட முடியாது' என்றது.


சிவநாயகம் ஓய்வு பெற்ற தாசில்தார் மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பணி ஓய்வு பெற்றிருந்தார் மிகவும் கறாரானவர் பணியில் கடமை உணர்வு தவறாமல் நேர்மையாக பணிபுரிந்தவர்.


மனைவி சிவகவிதா அன்பான அமைதியான குடும்ப தலைவி தமிழகம் முழுக்க பல பணி மாறுதல்களை கடந்து இப்போது கடலூரில் தங்கள் சொந்த இல்லத்தில் தன் ஓய்வு வாழ்வை ஆரம்பித்திருந்தார் பல வித கனவுகளுடன்.


சிவநாயகம் சிவகவிதா தம்பதியின் மூத்த மகள் சவிதா திருமணமாகி கடலூரில் தான் அவளும் இருக்கிறாள் சவிதாவின் கணவர் புவியரசன் அரசு போக்குவரத்துகழக பணிமனையில் பணிபுரிகிறார் இரு குழந்தைகள் மகிழினி மகிழன்பன் முறையே ஐந்தாவதும் மூன்றாவது படிக்கின்றனர்.


இளையவன் வசந்தன் மின்வாரியத்தில் பொறியாளராக பணிபுரிகிறான் அவன் மனைவி துர்கா இவர்களின் ஒரே மகள் பெயர் எழிலமுது இரண்டாவது படிக்கிறாள்.


சிவநாயகம் தமிழின் மீது பெரும் பற்று கொண்டவர் புத்தக வாசிப்பு என்றால் உயிர், தினமும் ஒரு பக்கமாவது படித்து விட வேண்டும் இல்லையேல் இவருக்கு தூக்கம் வராது. பழைய பாடல்களை விரும்பி கேட்க கூடியவர் மிகவும் லயித்து போகும் சமயங்களில் பாடலோடு இணைந்து பாடவும் செய்வார் உணவு பிரியரான சிவநாயகம் மனைவியின் சமையலை விரும்பி உண்பார் காலை மாலை நடைபயிற்சி யோகா தவறாது செய்பவர்.


நீரிழிவு உயர் ரத்த அழுத்தம் ஆகியவை வயதால் வந்த வியாதிகள். மனைவியின் உணவு கட்டுப்பாட்டின் மூலம் அவற்றை கட்டுக்குள் வைத்து கொண்டார் தன் மனைவி மேல் உயிரையே வைத்திருப்பவர்.


இரவு உணவு முடிந்து வசந்தன் பெரும் தயக்கத்தோடு அறைக்குள் அடியெடுத்து வைத்தான் நினைத்தது போலவே தான் மனைவி உக்கிர ரூபினியாக அமர்ந்திருந்தாள்.


வசந்தன் உறங்கும் குழந்தையை ஒரு முறை பார்த்து விட்டு மனைவி அருகே அமர்ந்து அவள் தோள் பற்றி “செல்லம் ஏன்டா முகம் இத்தனை ஆவேசமா இருக்கு?“ என ஏதுமறியாதவன் போல் கேட்க


துர்கா கணவனின் கையை தட்டிவிட்டவள் “தொடாதீங்க உங்ககிட்ட என்ன சொன்னேன் ஒரு வாரமா உங்ககிட்ட சொல்லிகிட்டு தானே இருக்கேன் பேசுறதுக்கு என்ன கேடு உங்க அப்பா என்ன புலியா சிங்கமா அப்படியே கடிச்சு கொதறிடுவாரு ஊர் உலகத்தில் இல்லாத அப்பா பையன் இந்த பயம் பயப்படுறீங்க நானும் பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு அப்பாவுக்கு பயந்த பையனை பார்க்கலைப்பா“ என படபடவென பொறிந்து கொட்ட


வசந்தன் “அப்பானா எனக்கு பயம் தான் நான் ஒத்துக்குறேன் தெருவில் போற யாருக்கோ நான் பயப்படலையே எங்க அப்பாவுக்கு நான் பயப்படுறேன் இதை சொல்ல நான் வெட்கப்படமாட்டேன்….“ என வேகமாக ஆரம்பித்தவன் மனைவியின் பயந்த தோற்றத்தில் தனிந்து அவள் கைகளை எடுத்து தன் கரங்களுக்குள் அடக்கியபடி தொடர்ந்தான் "…துர்காம்மா அப்பா வேலையில் ரொம்ப கண்டிப்பு அதே கண்டிப்பு தான் எங்கள்கிட்டயும் அம்மா தான் ரெண்டு பேருக்குமே செல்லம் எங்களுக்கு ஏதாவது வேனும்னா கூட நாங்க எங்க அம்மாவை தான் கேட்போம் அம்மா தான் அப்பாகிட்ட கேட்டு வாங்கி தருவாங்க அப்பாவை அப்படியே பார்த்து பழகிட்டு என்ன செய்ய இப்போதும் அந்த பயம் மாற மாட்டேங்குதே நீ சொல்றது நியாயம் தான் நான் நாளை பேசுறேன் ஆனா அப்பாவை எதுக்கும் என்னால் வற்புறுத்தவும் முடியாது எதிர்கவும் முடியாது அதை மட்டும் மறக்காதே“ என அழுத்தமாகவே கூறி முடித்தான்.


துர்கா “எப்படியோ பேசுறேன்னு சொன்னீங்களே அதுவே போதும்ங்க இதுக்கு சீக்கிரம் ஒரு முடிவு தெரிய தான் வேனும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லோரும் என்னை தானே கேட்குறாங்க நீங்க பேசியும் சரி வரலைனா நாம வேற ஊருக்கு மாற்றல் வாங்கிகலாம் அதுக்கு நீங்க தடை சொல்லாதீங்க“ என கணவன் போன்றே அழுத்தமாக கூறினாள்.

மறுநாள் மாலை தந்தையுடன் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்த வசந்தன் தந்தையை பார்ப்பதும் டிவியை பார்ப்பதுமாக இருக்க அதை கவனித்த சிவநாயகம் “என்னப்பா என்கிட்ட ஏதாவது பேசனுமா?“ என தன் அதிகாரம் குறையாத குரலில் கேட்க


தந்தையின் திடீர் கேள்வியில் பதறி போன வசந்தன் “ஆமாம் அப்பா… இல்லை…ஆமாம்“ என தடுமாற


சிவநாயகம் மகனின் பதற்றத்தில் மெல்ல முறுவலித்தவர் “இயல்பா இரு வசந்த் உன் அப்பாவோட குரல் இதான் உங்ககிட்ட எல்லாம் நான் இன்னும் கொஞ்சம் தன்மையா நடந்து இருக்கனும் உங்க அம்மா எல்லாத்தையும் பார்த்துப்பானு நான் குடும்பத்தோடு ஒன்றாமலேயே போய்ட்டேன் நீ நம்ம எழில் கூட கொஞ்சி விளையாடும் போதெல்லாம் உண்மையை சொன்னா எனக்கு ஏக்கமா தான் இருக்கு“ என ஏக்க பெரு மூச்சோடு கூறினார்.


வசந்தன் “விடுங்க அப்பா ஃபீல் பண்ணாதீங்க எங்களுக்கும் இப்படியே பழகி போய்ட்டு நம்ம எழில் மகிழன்பன் மகிழினினு உங்க மேலே ஏறி இறங்கி விளையாடுறாங்க தானே அப்புறம் என்ன அப்பா இனி உங்கள் ஏக்கங்களை இவங்க கூட விளையாண்டு தீர்த்துகோங்க“ என முறுவலோடு கூறினான்.


சிவநாயகம் “ஆமாம் அப்படி தான் என் ஏக்கங்களை இனி நான் தீர்த்துகனும் பின்னே இந்த வயசில் உன்னை தூக்கி கொஞ்ச தான் முடியுமா இல்லை நீ தான் என் மேல் ஏறி விளையாட முடியுமா?“ என பலமான சிரிப்போடு கூற


தந்தையிடம் முன்பெல்லாம் இது போன்ற சிலேடை பேச்சையோ இப்படியான முகம் மலர்ந்த சிரிப்பையோ கண்டிராத வசந்தன் முறுவலோடு தந்தையையே பார்த்து கொண்டிருந்தான்.


சிரிப்போடே சிவநாயகம் “கவிம்மா கிளம்பிட்டியா?“ என குரல் கொடுக்க


சிவநாயகத்தின் மனையாளோ “இதோ கிளம்பிட்டேன் ஐந்து நிமிஷம்ங்க“ என அறையினுல் இருந்தே குரல் கொடுத்தார்.


வசந்தன் “அப்பா நீங்களும் அம்மாவும் வெளியே போறீங்களா?“ என தயக்கத்தோடு சிறிய குரலில் கேட்க


சிவநாயகம் “ஆமாம்ப்பா நானும் உங்க அம்மாவும் படத்துக்கு போறோம் நம்ம கிருஷ்ணா தியேட்டரில் ஹாலிவுட் மூவி ஒன்னு வந்திருக்கு உங்க அம்மாவுக்கு தான் ஹாலிவுட் மூவீஸ்னா பிடிக்குமே அதான் அங்கே போய்ட்டு அப்படியே டின்னர் முடிச்சுட்டு வரலாம்னு இருக்கோம்“ என உற்சாகமாக கூற


வசந்தன் “அது வந்து அப்பா….“ என இழுக்க


சிவநாயகம் “எதுவானாலும் தயங்காமல் சொல் வசந்த்“ என ஊக்கினார்.


வசந்தன் தைரியத்தை வரவழைத்து கொண்டவன் “முந்தா நாள் தானே அப்பா ரெண்டு பேரும் படத்துக்கு போய்ட்டு வந்தீங்க நேத்து சில்வர் பீச் வாரத்தில் கிட்டதட்ட ஆறு நாள் வெளியே போய்டுறீங்க அது கூட பரவாயில்லை அம்மா சுடிதார் தான் உங்க கூட வரும் போது போடுறாங்க நாங்க சின்னவங்களா இருந்தப்போ கூட அம்மா புடவை தான் கட்டினாங்க இப்போ என்னடானா தினம் ஒரு புது சுடிதார் போடுறாங்க வயசுக்கு ஏத்தது போல் புடவையாவது கட்டலாம் இல்லையா அப்புறம்……..“ என தொடர்ந்தவனின் பேச்சை சிவநாயகத்தின் ஆத்திர குரல் தடுத்தது.


வீட்டு தலைவரின் ஆத்திர குரல் கேட்டு வீட்டு பெண்கள் பதற்றமாக வந்து பார்க்க சிவநாயகம் மகனை உறுத்து விழித்தபடி திட்டுவதற்கு ஆயத்தமாக இடையிட்ட சிவகவிதா “என்னங்க என்ன ஆச்சு?“ என பதற்றமாக கேட்டார்.


சிவநாயகம் “உன் பையனுக்கு நாம நம்ம வாழ்க்கையை வாழ்றது பிடிக்கலையாம்“ என மகன் கூறியதை சொல்ல சிவகவிதா முகம் வெளுத்து அமைதியாக நின்று விட்டார்.


துர்கா என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தவள் இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் அமையாது என்பதை உணர்ந்து கொண்டு “மாமா உங்க மகன் சொன்னத்தில் தப்பு ஒன்னும் இல்லையே ஊர் உலகத்தில் உங்க வயசுகாரங்க எல்லோரும் இப்படியா இருக்காங்க“ என சற்று குரலை உயர்த்திட


மனைவியின் பேச்சில் ஆத்திரமுற்ற வசந்தன் “ஏய் என்ன குரல் எல்லாம் உயருது எங்க அப்பாகிட்ட பேசுற மனசில் வச்சு பேசு“ என அதட்டலாக கூறி கை ஓங்கியபடியே மனைவியை நெருங்கிட இடை புகுந்த சிவகவிதா மகனின் கைப்பற்றி தடுத்தவர் “என்னடா இது பழக்கம் கட்டினவளை கை நீட்டுறது உன்னை நான் இப்படியா வளர்த்தேன் உன்னை விட உங்க அப்பா கோபக்காரர் ஆனா இதுவரை ஒரு முறை கூட என்னை கை நீட்டினதில்லை துர்கா செய்தது தப்பாவே இருக்கட்டுமே புருஷனா பொறுப்பா எடுத்து சொல்லு அதை விட்டு என்ன இது“ என கண்டிக்க


துர்கா “போதும் மாமி என் புருஷன் என்னை கண்டிக்குறார் உங்களை கேட்க போய் இப்போ எங்களுக்குள் பிரச்சனை ஆகுது எல்லாத்துக்கும் காரணமே நீங்க தான் நீங்க ரெண்டு பேரும் வயசுக்கேத்த மாதிரி இருந்திருந்தா எங்களுக்குள் ஏன் சண்டை வருது“ என கடுமையாக கூற


வசந்தன் நிலைமை கை மீறி போவதை உணர்ந்தவன் “துர்கா இனி ஒரு வார்த்தை நீ பேச கூடாது போ ரூம்க்கு“ என அதட்டினான்.


சிவகவிதா மருமகளின் பேச்சில் மனம் குன்றியவர் இயலாமையோடு கணவர் முகத்தை பார்த்தார்.


கணவனின் அதட்டலில் துர்கா ஆத்திரமாக தங்கள் அறைக்கு செல்ல சிவநாயகம் ஒரு முடிவெடுத்தவராக “வசந்த் வரும் ஞாயிறு அன்னிக்கு காலை இது சம்பந்தமா பேசிக்கலாம் அதுவரை இதை பத்தி யாரும் எதுவும் பேச கூடாது அதோட இனி இதனால் உங்களுக்குள் பிரச்சனை வர கூடாது“ என அதிகாரமாக கூறியவர் “கவிம்மா வா ரூம்க்கு“ என மனைவியை கைப்பிடியாய் அழைத்து கொண்டு தங்கள் அறைக்கு சென்றார்.


அறையில் கணவன் தோளில் சாய்ந்த சிவகவிதா “நம்ம பையனுமாங்க? துர்காவை நான் மருமகளா ஏன் வேற வீட்டிலிருந்து வந்தவளா கூட பிரிச்சு பார்த்தது இல்லையேங்க நம்ம சவிதா போல் தானே பார்த்தேன் அவளுக்கு இல்லாமல் ஏதாவது நான் வாங்கி இருக்கேனா வயசுக்கு ஏத்த மாதிரி இருக்கனுமாமே“ என அழுகையோடு புலம்பிட


சிவநாயகம் மனைவியின் முகத்தை நிமிர்த்தி கண்ணீரை துடைத்து விட்டு “இது அழ கூடிய விஷயமே இல்லை அமைதியா இரு யாருகாகவும் நாம நம்மை மாத்திக்க வேண்டாம் நீ சந்தோஷமா இருக்கனும் எனக்கு அதான் வேனும் எனக்காக நீ பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை கவிம்மா அப்போ எனக்கு தைரியமோ அறிவோ இல்லை இப்போ இருக்கு அதை திரும்பவும் இழக்க நான் தயாரா இல்லைம்மா கிளம்பு போகலாம்“ என திடமாக கூறி அழைக்க


சிவகவிதா தயக்கத்தோடு “வேண்டாம்ங்க இனியும்…..“ என முடிக்காமல் நிறுத்த


சிவநாயகம் “சரி தான்“ என கூறி ஏளனமாக சிரித்தார்.


கணவனின் ஏளன சிரிப்புக்கு அர்த்தம் புரியாமல் விழித்த சிவகவிதா என்னவென கேட்க


சிவநாயகம் “தாலி கொடி உறவை விட பொம்பளைங்களுக்கு தொப்புள் கொடி உறவு தான் உசத்தினு ஒரு புத்தகத்தில் படிச்சேன் நீயும் வசந்த் பேச்சுக்காக என்னை அலட்சியம் செய்துட்ட இல்லை“ என வெறுமை குரலில் கூற


கணவனின் குரலில் பதறிய சிவகவிதா “வான்னா வந்துட்டு போறேன் பத்து மாசம் சுமந்து பெத்தாலும் சரி இத்தனை வருஷம் உயிரா வளர்த்தாலும் சரி நம்ம பிள்ளைங்க ரெண்டுமே எனக்கு உங்களுக்கு அப்புறம் தான் வாங்க போகலாம்“ என வேகமாக கூறி தன் கண்ணீரை துடைத்து கொண்டு புறப்பட்டார்.


சிவநாயகம் முறுவலோடு மனைவியுடன் புறப்பட்டார்.


ஞாயிறு காலை சவிதா அவள் கணவன் புவியரசன் மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்தாள் தந்தையின் அழைப்பின் பேரில்.


உணவு உபசரிப்பு முடிந்த பின் குழந்தைகளை விளையாட உள்ளறைக்கு அனுப்பி விட்டு பெரியவர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்தனர்.


சிவநாயகம் தங்கள் அறையில் இருந்து ஒரு ஃபீரீப்கேஸ் உடன் வந்து சோபாவில் அமர்ந்தவர் மனைவியையும் உடன் அமர வைத்த பின் ஃபீரீப்கேஸை திறந்து அதிலிருந்து மூன்று ஃபைல்களை எடுத்தவர் ஃபைலில் எழுதி இருந்த பெயரை பார்த்து மகனிடம் ஒன்றும் மகளிடம் ஒன்றும் கொடுத்தவர் மீதம் இருந்த ஃபைல்லை மனைவியிடம் கொடுத்தார்.


சவிதாவும் வசந்தனும் தந்தை கொடுத்த ஃபைல்லை பிரிக்காமல் பெற்றோரின் முகத்தையே பார்த்திருக்க


புவியரசன் “மாமா என்ன இதெல்லாம் நீங்க வர சொன்னீங்க வந்தோம் என்ன ஏதுனு ஒன்னுமே சொல்லாமல் ஏதோ ஃபைல்லை எடுத்து கொடுக்குறீங்க உங்க ரெண்டு பேர் முகத்திலும் மலர்ச்சியே இல்லையே ஏன்?“ என அமைதியாகவே கேட்டான்.


சிவநாயகம் “அந்த ஃபைல்லை பாருங்க மாப்பிள்ளை அப்புறம் மத்ததை பேசிக்கலாம்“ என சொல்ல


புவியரசன் தன் மனைவியிடம் இருந்து ஃபைல்லை வாங்கி முழுவதும் படித்து முடித்தவன் “என்ன மாமா இதெல்லாம் இப்போ இதுக்கெல்லாம் என்ன அவசரம்?“ என அதிர்ச்சி விலகாதவனாக கேட்க


சிவநாயகம் “அவசரம் இல்லை மாப்பிள்ளை அவசியம் என் சொத்துக்களில் எங்க பிள்ளைகளுக்கு நியாயமா சேர வேண்டியதை சமமா பிரிச்சு எழுதி வச்சுட்டேன் எங்களுக்கு ஒரு பங்கு தனியா வச்சுகிட்டேன் எங்க காலத்துக்கு பிறகு அதையும் சரிசமமா பிரிச்சு எழுதிட்டேன் மாப்பிள்ளை எங்களுக்கும் வயசாகுது இல்லையா எல்லாம் செய்துடனும்னு தான்“ என அமைதியாகவே கூறி முடிக்க


வசந்தன் எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தான் துர்கா இப்படி நடக்கும் என எதிர்பாராதவள் தவிப்போடு கைகளை பிசைந்தபடி நின்றிருந்தாள்.


சவிதா எழுந்து தன் தாயின் கையை பற்றி கொண்டவள் “அம்மா என்ன அம்மா ஆச்சு? ஏன் அப்பா இப்போ இப்படி செய்றாங்க?“ என கண்ணீரோடு கேட்டாள்.


சிவகவிதா "எல்லாம் உங்க அப்பா முடிவு தான்ம்மா அவர் எதை செய்தாலும் சரியா தான் இருக்கும்“ என மகளின் கன்னம் வருடி கண்ணீரை துடைத்து விட்டு சொன்னார்.


சிவநாயகம் “நான் பேசி முடிக்கும் வரை யாரும் குறுக்க பேசாதீங்க இந்த முடிவு என் சொந்த முடிவு அதான் உங்க முன்னாடியே எல்லாம் செய்துட்டேன் கூத்தப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு நானும் என் மனைவியும் இந்த வாரமே தனிக்குடித்தனம் போறோம் எங்க கடமைகள் முடிஞ்சுட்டு இனி எங்களோட மிச்சம் இருக்கும் முதுமை காலத்தை நாங்க நினைச்சபடி சந்தோஷமா வாழ போறோம் எங்களோட சந்தோஷம் மத்தவங்க கண்களுக்கு உறுத்தது என்கிற போது நாங்க விலகி இருக்கறது தான் எல்லோருக்குமே நல்லது“ என தன் வழக்கமான குரலிலேயே கூறினார்.


குடும்பத்தினர் பதறி போக வசந்தன் “அப்பா என்னை மன்னிச்சுடுங்க எல்லாம் என்னால் வந்தது துர்கா பேச்சை கேட்டு தெரியாம பேசிட்டேன் அப்பா தயவு செய்து எங்களை விட்டு போய்டாதீங்க“ என கெஞ்சுதலாக கேட்க


கணவனை பின்பற்றிய துர்காவும் "மாமா, மாமி மத்தவங்க பேச்சை கேட்டு நான் தான் உங்க மகனை பேச சொல்லி வற்புறுத்தினேன் என்னை மன்னிச்சுடுங்க" என கண்ணீரோடு கேட்க


சிவநாயகம் “நீங்க மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எந்த தப்பும் செய்யலை. துர்கா உன்னை எப்போதும் நாங்க எங்க மகளா தான்ம்மா பாக்குறோம். வசந்த் உங்களை சர்வ சுதந்திரமா வளர்த்து எங்க கடமைகளை முடிச்சுட்டோம் இத்தனை காலமா உங்களுக்காகவே வாழ்ந்த நாங்க இனி எங்க வாழ்வை நாங்க ரசிச்சு வாழும் போது அது உங்களுக்கு கஷ்டமா இருக்கு ஆமாம் உடைக்கும் சந்தோஷத்துக்கும் வயசு நிர்னையம் செய்தது யாருப்பா? சென்னை சிட்டியில் பாட்டி சுடிதார் போட்டா அது இயல்பு இந்த கடலூரில் உங்க அம்மா சுடிதார் போட்டா உங்களுக்கு கௌரவ குறைச்சலாக இருக்கா? ஹாலிவுட் மூவி பார்க்க வயசு முக்கியமா என்ன? சட்டம் சொல்லும் வயசை நாங்க கடந்து பல வருஷம் ஆச்சு


இன்னும் பல இடங்களில் மகள் வயசுக்கு வந்துட்டா அம்மா கொலுசு, ஜமிக்கி போட கூடாது பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆகிட்டா அம்மா கொண்டை தான் போட்டுக்கனும் இதுலாம் எப்படி முட்டாள்தனமானதோ அப்படி தான் நீங்க நினைக்கறதும் என் பொண்டாட்டியை கூப்பிட்டு நான் எப்போ வேனா வெளியே போவேன் எத்தனை நாள் வேனா போவேன் எங்கே வேனா போவேன் அதை யாரும் கேட்க முடியாது நாங்க தான் உங்களை பெத்தோம் உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் நாங்க விதிச்சது இல்லை ஆனா நீங்க எங்களுக்கு கட்டுப்பாடு விதிக்குறீங்களே அது ஏன்?" என ஆத்திரமாக பேச ஆரம்பித்தவர் மனைவியின் கை அழுத்தத்தில் நிதானத்துக்கு வந்து அமைதியாக பேச ஆரம்பித்தார்


"....உங்க அம்மா என்னை விட அதிகம் படிச்சவ எங்க அம்மா அப்பா பேச்சை கேட்டு அவ ஆசைப்பட்ட எதையும் நான் நிறைவேற்றலை அவளை வேலைக்கு போக கூடாதுனு சொல்லிட்டேன் , குடும்ப பொம்பளைங்க இங்க்லீஷ் படம் பார்க்க கூடாதுங்குற எங்க அம்மாவோட பத்தாம் பசலிதனத்தை நானும் ஆதரிச்சேன், சுடிதார் போட கூடாதுனு சொன்னேன், உங்க அம்மாவுக்கு நான் அவ பெயரை செல்ல சுருக்கமா கூப்பிடனும்னு ஆசை அதை கூட எங்க அம்மா பேச்சை கேட்டு நான் மறுத்தேன்


உங்க அம்மா தன் மருமகளை அதான் உன் மனைவியை தான் பெத்த மகளா நினைச்சு பார்த்துக்க காரணம் அவ அனுபவிச்ச வலிகள் உன் மனைவிக்கு வந்துட கூடாதுனு தான் உங்க அம்மாவை நான் கை நீட்டி அடிச்சது இல்லை ஆனா மனசளவில் அவளை நான் ரொம்ப நோகடிச்சுட்டேன் இத்தனை கொடுமையை அவளுக்கு செய்த நான் கடைசியா என் மனைவியை அடுப்படியில் அடைச்சேன் அவ கனவுகளை கொண்னேன் சந்தோஷங்களை அழிச்சேன்


அவ கல்யாணம் ஆகி வரும் போது ஆசையா வாங்கி எடுத்துட்டு வந்த புது சுடிதார்கள் எல்லத்தையும் நான் சொன்ன சொல்லுக்காக அனாதை ஆசிரமத்துக்கு தூக்கி கொடுத்தப்போ அவ கண்களில் தெரிஞ்ச வலி என்னை உலுக்குச்சு அன்னைக்கு அவளுக்கு வாக்கு கொடுத்தேன் என் ஓய்வு காலத்தில் நம்ம கடமைகள் முடிச்ச பிறகு நாம நமக்காக வாழ்வோம்னு அப்போ எங்க அம்மா பேச்சை மீறும் தைரியம் எனக்கு இல்லை நான் கோழை என் மனைவிக்கும் மனசு இருக்குனு புரியாத முட்டாள் புரிஞ்சாலும் எதையும் செயல்படுத்த துணியாத பைத்தியகாரன் இப்போ அவளுக்காக நான் வாழ்றேன் அவ ஆசை எல்லாம் நிறைவேத்துறேன் இதில் தப்புனு ஒன்னும் இல்லை


வயசாகிட்டா புருஷன் பொண்டாட்டி கை பிடிச்சு நடக்க கூடாதா? தோளோட அணைச்சுக்க கூடாதா? எங்களுக்குனு தனிமை கூடாதா? இதுலாம் உங்களால், சமூகத்தால் ஏத்துக்க முடியலை இந்த வயசில் நாங்க ஓய்ஞ்சு போய் வீட்டோட முடங்கி தான் கிடக்கனுமா? பெத்த பிள்ளைங்க, பேர பிள்ளைங்க தான் எங்க உலகமா இருக்கனும்னு ஏதும் சட்டம் இருக்கா? இளமையில் நேசம் பல ஆசைகளை கொண்டது வேகமானது


உடல் தாண்டின ஆத்மார்த்தமான நேசம் பின் ஐம்பதுகளில் தான் வரும் இப்போ எங்களுக்கு தேவை எங்க ஒருத்தரோட ஒருத்தர் அருகாமை, கவனிப்பு, பாசம், பிணைப்பு தான் முதுமையின் நேசம் இது ஆத்மார்த்தமானது எந்த கடமைகளும் இல்லாமல் என் மனைவிக்கு நான் கணவனாவும், அவ எனக்கு மனைவியாவும் மட்டுமே வாழ்றோம் இதில் வெட்கப்பட ஒன்னுமே இல்லை


நியாயமா நீங்க எங்களை புரிஞ்சு இருந்து இருக்கனும் உலகம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் வயசானவங்களுக்குனு தனி வாழ்க்கை, விறுப்பு, வெறுப்பு இருக்க கூடாதுனு நினைக்குற குறுகிய மனப்பான்மை ரொம்ப அபத்தமானது இப்போ தான் எங்களுக்கு எங்க துணையோட அருமையே புரியும் உங்களுக்கும் ஒரு நாள் வயசாகும் அப்போ எங்க மனநிலை புரியும் பல வீடுகளில் அம்மா அப்பாவை பசங்க பிரிச்சு ஆளுக்கு ஒரு பக்கமா அழைச்சுட்டு போயிடுறாங்க இனிமே இவங்களுக்கு என்ன தனி வாழ்க்கைனு இனிமே தான் எங்களுக்குகான வாழ்க்கையே இருக்குனு பாவம் அந்த அப்பாவி பெத்தவங்க வாயை திறந்து சொல்றது இல்லை நான் தைரியமா முடிவெடுத்துட்டேன்


நாங்க இப்படி தான் இருப்போம் எங்களுக்கு தோனும் போது உங்களை எல்லாம் வந்து பாக்குறோம் எங்க வாழ்க்கையை எங்களை வாழ விடுங்க உங்களையும் பேர பிள்ளைகளையும் நல்லா பார்த்துகோங்க“ என தன் கம்பீர குரலால் கூறியவர் குடும்பத்தினரின் அதிர்ச்சியை பொருட்படுத்தாமல் மனைவியின் தோளில் கரம் போட்டு தன்னோடு சேர்த்து அணைத்தபடி தங்கள் அறைக்கு சென்றார்.


நன்றி.

Stories you will love

X
Please Wait ...