க(வ)னம்

kamaliayappa
உண்மைக் கதைகள்
4.9 out of 5 (57 Ratings)
Share this story

“தம்பி! மேல உன்‌‌ ரூம்ல லைட், ஃபேன் ஸ்விட்ச் எல்லாம் நிறுத்திட்டியாடா?” என்று படியில் இறங்கிவந்துக்கொண்டிருந்த இளையமகன் கவினிடம், கீழே ஹாலில் நின்றுகொண்டே கேட்டார் காவேரி.

“ஆன். நிறுத்திட்டேன் நிறுத்திட்டேன்” என்று சலித்துக்கொண்டான் அவன்.

“அண்ணன் ரூம்ல?” என்று காவேரி மீண்டும் கேட்க, “எல்லாம் நிறுத்தி தான்மா இருக்கு” என்றான் சலிப்புத்தொனி மாறாமல்.

காவேரி அடுத்த வார்த்தைப் பேசுவதற்குள் கீழே இறங்கி தாய் நின்றிருந்த இடத்திற்கே வந்துவிட்டான் கவின்.

“மேல பாத்ரூம்ல தண்ணிலாம் எதுவும் தொறந்து இல்லைல்ல. நல்லா பாத்துட்டியாடா?” என்று காவேரி கேட்க, “இல்ல்ல்ல்ம்ம்ம்மா” என்ற கவின் பதிலில் தான் எத்தனை அழுத்தம்.

‘இதற்கு மேல் எதுவும் கேட்காதே!’ என்று உணர்த்தும் அழுத்தம்.

அதற்கெல்லாம் அசரவில்லை காவேரி. “இன்னொரு தடவை மேல போய் பார்த்துட்டு வாடா தம்பி!” என்றார்.

“முடியாது போ ம்மா! இப்போ தான பார்த்துட்டு வந்தேன்” என்று முரண்டு பிடித்த இருபது வயது மகனிடம், “என் செல்லம்ல்ல. பாருடா!” என்று கொஞ்சலோடு கேட்க, “உன்னோட தொல்லைம்மா!” என்று முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு மீண்டும் படியேறிய மகனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டார் காவேரி.

“டேய். அப்டியே பால்கனி கதவு மூடியிருக்கா பாரு. அப்புறம் ரெண்டு ரூம்லயும் ஜன்னல் கதவெல்லாம் மூடியிருக்கா பாரு. மழைவந்தா உள்ள சாரல் அடிக்கும்டா” என்று காவேரி சொல்ல, “ஆமாம்! இவங்களுக்கு மட்டும் சித்தரை மாசம் தனியா ஷவர் வச்சு மழை கனெக்ஷன் குடுக்கறாங்க பாரு! ஏதோ மழை சாரல்ல வீடு ரொம்பிடப்போற மாதிரி!” என்று முனகளுடனே போய் தாய் சரிபார்க்கச்சொன்னதையெல்லாம் சரியாகப் பார்த்துக்கொண்டு மீண்டும் கீழே போனான் கவின்.

“டேய் அப்புறம்” என்று காவேரி தொடங்கும் போதே, தந்தைக்கு உதவியாகப் பயணமூட்டைகளை எல்லாம் மகிழுந்தில் ஏற்றிவிட்டு மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தான் மூத்தமகன் கார்த்தி.

அவன் வருவதைப் பார்த்துவிட்ட கவின், “அம்மா அம்மா. அவன் வர்றான். அடுத்து என்ன பாக்கணும்ன்னு அவன் கிட்ட சொல்லும்மா. நான் தான் ரெண்டு தடவை மேல ஏறி எறங்குனேன்ல்ல” என்று கவின் சொல்ல, காவேரியும் மூத்தமகனைப் பிடித்துக்கொண்டார்.

“டேய்! கார்த்தி. கிட்சனுக்குப் போய் சிலிண்டர் நிறுத்தியிருக்கா பாரு!” என்று தாய் சொல்லவும், “ஒரேயொரு டைம் தான் பாப்பேன்!” என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்தான் கார்த்தி.

“ஆமாம்மா. நிறுத்தி தான் இருக்கு!” என்று பார்த்துவிட்டு வந்து சொன்ன மகனிடம், “நல்லா பாத்தியா? நிறுத்திதான இருக்கு?” என்று மீண்டும் கேட்டார் காவேரி.

‘ஆமாம்’ இப்போது “ம்ம்ம்”ஆக சுருங்கியது.

“இன்னொரு டைம் பார்த்துட்டு வாடா. அப்டியே மோட்டார் சுவிட்ச் நிறுத்தியிருக்கான்னு பாருடா!” என்று காவேரி சொல்ல, “அப்போவே சொன்னேன்ல. ஒரு டைம் தான் பாப்பேன்னு” என்று குறைப்பட்டுக்கொண்ட மகனிடம், “இன்னொரு முறைப் பார்த்தா கொறஞ்சா போய்டுவ?” என்று கடிந்துக்கொண்டார் காவேரி.

“உன்னோட எப்போவும் இதே ரோதனை” என்று கடுமையான முகத்துடனே மீண்டும் சமையலறைக்குச் சென்று சரி பார்த்துவிட்டு வந்தான் கார்த்தி.

“டேய்! கிட்சன் ஸின்க்ல எதுவும் தண்ணி ஒழுகலைல்ல?” என்று காவேரி புதிதாக ஒன்றைத் தொடங்க, “அதெல்லாம் மூடி தான் இருக்கு. அப்டியே ஸின்க்ல தண்ணி வழிஞ்சு வீடு ஒன்னும் முழுகிடாதும்மா. வாம்மா” என்று பதிலோடே தாயின் தோள் பற்றி வாசல் வரைத் தள்ளிச்சென்றான் அந்த இருபத்தி மூன்றுவயது மூத்தவன்.

காவேரியின் கணவர், சண்முகம், ஓட்டுனர் இருக்கையில், மகிழுந்தைக் கிளப்ப ஆயத்தமாகவே அமர்ந்துக்கொண்டிருக்க, வாசல் கதவைப் பூட்டினார் காவேரி.

சரியாகப் பூட்டித்தான் இருக்கிறதா என்று இரு மகன்களையும் ஆளுக்கொரு முறை கதவைத் தள்ளிப் பார்க்கப் பணிக்கவும் தவறவில்லை.

மகிழுந்தில் ஏறி அமர்ந்த பிறகும், “எல்லாம் சரியா தான இருக்கு” என்று காவேரி தொடங்க, கணவர், இருமகன்கள் என மூன்று ஆண்களும், “எல்லாம் பாத்தாச்சு! நிறுத்தும்மா” என்றனர் ஒரே குரலில்.

விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கித் தொடங்கியது அவர்களின் மகிழுந்துப் பயணம். காவேரியின் அக்காவும், அவர் கணவரும், காவேரியும், சண்முகமும் என நால்வருக்கும் இன்றிரவு தொடங்கி, பத்து நாட்களுக்கு வட இந்திய பக்திக் பயணம்.

நால்வருமாகச் சென்னை சென்றுவிட்டு, காவேரியும் சண்முகமும் அங்கிருந்து வட இந்தியப் பயணம் மேற்கொள்ள, அப்பா-அம்மா, பெரியம்மா-பெரியப்பா நால்வரையும் வழியனுப்பிவிட்டு, இன்றிரவே கார்த்திக், கவின் இருவரும் இல்லம் திரும்புவதாகத் திட்டம்.

அடுத்த நாள் மூத்தவன் அலுவலகத்திற்கும், இளையவன் கல்லூரிக்கும் செல்ல வேண்டியிருந்தது.

ஒரு நாள் வீட்டை விட்டுவிட்டுச் சென்றாலே, அத்தனை முறை எல்லாவற்றையும் சரிபார்ப்பவர் காவேரி. பத்துநாள் பயணமென்றால் சொல்லவா வேண்டும்.

தான் சரிபார்த்தது இல்லாமல், கணவர் மகன்கள் என அனைவரையும், ‘அது நிறுத்தி இருக்கா... இது நிறுத்தி இருக்கா’ என்று கேட்டு அவர்களையும் ஓடவிட்டார்.

வீட்டு வாசலை விட்டு வண்டி கிளம்பியதும், “இந்த அம்மா தொல்லை தாங்கலப்பா! ஒரு மனுஷன் சிலிண்டர் மூடி இருக்கான்னு எத்தனை முறைப் பாக்குறது” என்று தந்தையிடம் முறையிட்டான் கார்த்திக்.

“டேய். நானெல்லாம் மாடிப்படி ஏறிப்போய் மேல்ரூம் எல்லாம் செக் பண்ணேன். கீழ இருக்க கிட்சனுக்கு நடந்ததுக்கே சலிச்சிக்கற” என்றான் கவின்.

சண்முகம் சிரித்துக்கொண்டார்.

“டேய். அதெல்லாம் நாலு பேர் நாலு முறைப் பார்த்தா நல்லது தான. ரொம்பத்தான் பண்றீங்க” என்றார் காவேரி.

“அப்பா. ஒருவேளை அம்மாவுக்கு ஓசிடி இருக்குமோ!” என்று கார்த்திக் சிரிப்பை அடக்கிக்கொண்டு சீரியஸாகக் கேட்க, “இருக்குமோ!” என்றான் கவின் கார்த்தியை மிஞ்சிவிடும் நடிப்பில்.

“ஓசிடியா? அப்டின்னா என்னதுடா...” என்று காவேரி கேட்க, “அது ஒரு நோய்ம்மா!” என்றான் கவின்.

“என்னது? நோயா?” என்று காவேரி பதற, “ஆமாம்மா! அந்த நோய் இருக்கவங்கலாம் இப்படித்தான் கதவு மூடியிருக்கா, அடுப்பு அணைச்சு இருக்கான்னு ரெண்டு மூணு தடவைப் பார்ப்பாங்க” என்றான் கார்த்தி.

“டேய்! சும்மா தான சொல்றீங்க?” என்று காவேரி கேட்க, “இல்லம்மா நிஜமாதான்” என்றனர் இருமகன்களும்.

“ஏங்க! இங்க பாருங்க” என்று காவேரி சிணுங்க, மனைவியின் சிணுங்கள் தாங்காதவராய் “சும்மா இருங்கடா!” என்று மகன்களை அதட்டினார் இத்தனை நேரம் சிரித்துக்கொண்டிருந்த சண்முகம்.

“ரெண்டு மூணு தடவை சரி பார்த்தா அந்த நோய் இருக்குன்னு அர்த்தமாங்க?” என்று காவேரி கேட்க, “இவனுங்க கெடக்கறானுங்க. அந்த மாதிரி Obsessive–Compulsive Thinking தொண்ணூற்று நாலு சதவீத மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில இருக்கும். அதுக்காக அவங்க எல்லாருக்கும் மனநோய்ன்னு சொல்லிட முடியுமா?!. இதெல்லாம் ஒரு அளவுக்கு மேல போனா தான் பிரச்சனை.

நீ என்ன? எதுவும் தப்பாகிடக் கூடாதுன்னு, ஒன்னுக்கு ரெண்டு தடவைப் பார்க்கற. அவ்வளவு தான.

இப்போ நம்ப ஊருக்குப் போனதுக்கு அப்புறமும் கூட, வீட்டைப் பூட்டுனோமான்னு யோசிப்பியா? இல்ல, பாதி தூரம் போனதுக்கு அப்புறம் லைட் ஸ்விட்ச் நிறுத்துனோமான்னு யோசிப்பியா?” என்று கேட்டார் சண்முகம்.

“அதெல்லாம் இல்லையே. வீட்ல இருந்து கிளம்புனதுக்கு அப்பறம்லாம் அதெல்லாம் யோசிக்க மாட்டேனே” என்று பதிலளித்த மனைவியிடம் “இந்த மாதிரி இல்லாம அளவுக்கு மீறிப் போனா‌ தான் பிரச்சனை. இவனுங்க சும்மா உன்ன வம்பிழுக்க சொல்றானுங்க காவேரி” என்றார் சண்முகம்.

காவேரி மகன்கள் இருவரையும் முரைக்க, இருவரும் தங்களுக்குள்ளாகச் சிரித்துக்கொண்டனர்.

“என்ன பாத்தா சிரிப்பா இருக்கு உங்க ரெண்டு பேருக்கும். பத்து நாள் நான் வீட்ல இருக்க மாட்டேன். எதையாவது போட்டுவிட்டுட்டே கிளம்பிப் போகப்போறீங்க பாருங்க ரெண்டு பேரும்.” என்று காவேரி சொல்ல, “அதெல்லாம் நாங்க கரெக்ட்டா ஒரு டைம் பாத்துட்டு போவோம். நாங்க என்ன உன்னை மாதிரி சந்தேக கேஸா? அத்தனை தடவைப் பார்க்க” என்றான் கார்த்தி.

“ஏதோ! வீட்டை உங்க பொறுப்புல விட்டுட்டுப் போறேன். ஒழுங்கா பார்த்துக்கிட்டா சரி தான்!” என்றுவிட்டார் காவேரி.

பெற்றோர் இருவரையும் சென்னை வரைச் சென்று வழியனுப்பிவிட்டு, மகன்கள் இருவரும் இல்லம் திரும்பினர்.

அடுத்த நாள் காலை, கவின் காய்கறி நறுக்க, கார்த்தி தனக்குத் தெரிந்த சமையலை வைத்து சமைத்துச் சமாளிக்க, இருவருமாகப் பாத்திரம் துலக்கி, வீடு பெருக்கி என எப்படியோ காலையில் கிளம்பிவிட்டனர்.

‘தண்ணி பாட்டில் எடுத்துக்கிட்டியா, லஞ்ச் டப்பா எடுத்துக்கிட்டியா?’ என்று தொடங்கி, ‘கைக்குட்டை எடுத்துகிட்டியா?’ என்று தினந்தினம் கேட்கும் தாய் இல்லை என்றாலும், ‘அம்மா இருந்தா இந்நேரம் கேட்டிருப்பாங்கல்ல!’ என்ற ஞாபகத்திலேயே மகன்கள் இருவரும் அனைத்தையும் சரியாக எடுத்து வைத்துக்கொண்டனர்.

செல்லும் முன், மின் சொடுக்கிகள், சிலிண்டர் என காவேரி சொன்னதையெல்லாம் ஒரு முறைச் சரி பார்த்தனர்.

வீட்டைப் பூட்டி, சாவியை எடுத்துக்கொண்டு இருவரும் இருச்சக்கர வாகனத்தில் கிளம்ப ஆயத்தமாகினர்.

கார்த்திக் ஓட்ட, கவின் அவனுக்குப் பின் அமர்ந்துக்கொண்டான்.

“கிளம்பலாமா டா!” என்று கார்த்தி கேட்க, “கிளம்பலாம்” என்றான் கவின்.

வண்டியைக் கிளப்பும் முன், கார்த்தி பூட்டியிருந்த வீட்டை ஒரு முறைப் பார்வையால் தழுவ, ‘வீட்டை உங்க பொறுப்புல விட்டுட்டுப் போறேன்!’ என தாய் சொன்னது தானாக நினைவுக்கு வந்தது.

“டேய் கவின். எல்லாம் சரியா பாத்துட்டோம்ல்ல!” என்று பின்னால் அமர்ந்திருந்த தம்பியிடம் கேட்டான் கார்த்தி.

காவேரி கேட்டபோதெல்லாம், ‘ஆன். ஆன். பாத்துட்டேன்' என்று அலட்சியமும் சலிப்புமாகப் பதில் சொன்னது போல் கவினால் இப்போது பதில் சொல்ல முடியாமல் போகவும், “பாத்துட்டோம் தான!” என்றான் உறுதியில்லாமல்.

இருவருக்கும் ஒரே நேரத்தில், ‘அதெல்லாம் நாங்க ஒரு டைம் கரெக்ட்டா பார்த்துட்டுப் போவோம்’ என்று முன்தினம் தாயிடம் சொன்னது நினைவுக்கு வர, ஒருவரையொருவர் பார்த்து ஒரு சங்கோஜ சிரிப்புச் சிரித்துக்கொண்டனர்.

“சரியா தான் பார்த்திருப்போம் டா. ஆனா, வாசல் சரியா பூட்டியிருக்கோமான்னு மட்டும் பாத்துட்டு வரியா?” என்று கவினிடம் கேட்டான் கார்த்தி.

முதல் முறையாக ‘இரண்டாம் முறைச் சரிபார்ப்பு’க்குச் சலிப்பில்லாமல் நடந்தான் கவின்.

‘பொறுப்பு என்ற வார்த்தை எத்தனை கனம்’ என்று யோசித்துக்கொண்டே அன்றைய தினம் வீட்டை விட்டுக் கிளம்பினர் இருவரும்.

அதன் பின்னான நாட்களில், இரண்டாம் முறைச் சரி பார்க்க கவினைக் கொஞ்சவோ, கார்த்தியைத் திட்டவோ அவசியமே ஏற்படவில்லை.

இருவரும் அந்த கனத்தை உணர்ந்த காரணத்தால்!

Stories you will love

X
Please Wait ...