JUNE 10th - JULY 10th
கொஞ்சம் கூட எனக்கு அழுகை வரவேயில்லை. வாயில் போட்ட கறுப்பு திராட்சையைக் கடித்து மென்று சாற்றோடு எச்சிலை நிரப்பி சுவைத்துக்கொண்டிருந்தேன். மடியிலிருந்த தட்டில் ஏழெட்டு திராட்சை உருண்டைகளும், கைப்பிடியளவு மாதுளை முத்துகளும் மிச்சமிருந்தன. ஏற்கனவே, பப்பாளித் துண்டங்களைத் தின்று முடித்திருந்தேன்.
எதிர் ஃஷோபாவில் அமர்ந்திருந்த பவானியின் மடியிலும் ஒரு தட்டு இருந்தது. இருவரும் தான் சாப்பிட உட்கார்ந்தோம். நான் கொஞ்சம் கூட அழாமல் அடுத்த திராட்சையை எடுத்து வாயில் போட்டு அதக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து என்ன நினைத்திருப்பாரோ தெரியவில்லை பவானி.
என்ன நினைத்தால் என்ன? கதைகளைச் சொல்லிச் சொல்லி என்னை தோளில் தூக்கி வளர்த்த சுப்பராயன் தாத்தா இறந்தபோது அழுததோடு சரி. அதன்பிறகு எனக்கு அழுகையே வருவதில்லை. அதற்காக நான் அழுவதே இல்லை என்று சொல்லிவிட முடியாது. இப்போதும் தொலைக்காட்சி திரைப்படங்களில் நெகிழ்வான காட்சிகளைப் பார்க்கும்போது கண்களில் நீர் ததும்பிக் கொண்ட் நிற்கும். அப்படி நிற்கும்போதேல்லாம் பூரணி ஓரக்கண்ணால் என்னைப் பார்ப்பாள்.
பிம்ப மனிதர்களைப்பார்க்கும்போது சுரந்து வருகிற இந்தக் கண்ணீர் நிஜ மனிதர்கள் முன் சுரப்பதற்கு அஞ்சி எங்கே போய் ஒளிந்துகொள்கிறதோ? தவிரவும் அழுகை வேறு, கண்ணீர் வேறு என்று தோன்றுகிறது.
ஒரு பெண்ணின் முன் அழக்கூடாது என்கிற வைராக்கியம் எதுவும் இல்லை. பவானி சொல்லி முடித்தபோது அழுகையை விடவும் கோபம் தான் கொப்பளித்துக்கொண்டு வந்தது எனக்கு. அடச் சீ… என்ன உலகம் இது? அந்த நேரத்தில் கோபத்தை மனத்தில் நிறுத்தி வைத்துக்கொண்டு அழுகையையும், கண்ணீரையும் ஒளித்து வைத்துக்கொள்வதே சரியெனப் பட்டது எனக்கு. தேம்பித் தேம்பி அழுகிற பவானியின் முன் அழுது வைக்கத் தோன்றவில்லை.
பவானியின் அழுது வடியும் முகத்தையே பார்த்தபடி அடுத்த திராட்சையை வாயில் போட்டு அதக்கிக்கொண்டேன். அந்த நேரத்தில் ஆறுதலாக இருந்தது அந்த திராட்சை. சட்டென எழுந்துவந்து தன் கன்னத்தில் வழிகிற கண்ணீரைத் துடைத்துவிடமாட்டானா என்கிற ஏக்கம் பவானியின் சிவந்த முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
அந்த அழுகையைக் கண்டுகொள்ளாதவன் போலிருப்பது போல் காட்டிக்கொள்ள இன்னொரு திராட்சையை அதக்கிக் கொண்டேன்.
இருவருக்குமிடையில் மேசை மீதிருக்கும் இந்தக் கறுப்பு நிற ஸ்வெட்டரை காலையில் தான் வாங்கிக்கொண்டு வந்தேன். பவானியிடம் ஏற்கனேவே ஸ்வெட்டர், குல்லா என எல்லாம் இருக்கின்றன. யாருக்காக இந்த ஸ்வெட்டர் என நான் கேட்டதற்கு பதில் சொல்லத் தொடங்கிய பவானி இந்த அழுகையில் வந்து நின்றிருக்கிறார் இப்போது.
பவானியின் தட்டில் திராட்சை, மாதுளை முத்துகளோடு பப்பாளித் துண்டங்களும் மிச்சமிருந்தன அப்படியே. முதலில் எடுத்த திராட்சை உருண்டை இன்னமும் அப்படியே இருக்கிறது பவானியின் கையில்.
ஒரு நல்ல ஸ்வெட்டரை வாங்கிக்கொண்டு நாளையே வர வேண்டும் என நேற்று இரவு ஃபோன் செய்து சொன்ன பவானியின் குரல் ஒரு கட்டளையைப் பிறப்பித்தது போல் இருந்தது எனக்கு. அப்படியெல்லாம் கட்டளையிடுபவர் இல்லை பவானி. அதிலும் அதிர்ந்து பேசாத குரல். இன்று ஞாயிற்றுக்கிழமையாக அமைந்துவிட்டதால் எனக்கும் சௌகரியமாகப் போயிற்று. விடிந்ததும் பவானி அம்மாவைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று பூரணியிடம் சொல்லிவிட்டு உடனே காரெடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். நல்லவேளையாக டவுனில் இருக்கும் அந்தத் துணிக்கடை ஞாயிற்றுக்கிழமையன்றும் ஒன்பது மணிக்கே திறந்து வைத்திருந்தார்கள். தைப் பொங்கலுக்கு இன்னும் பத்து நாள்கள் தாம் இருக்கின்றன. பொங்கல் வியாபாரத்தை முன்னிட்டு ஞாயிறன்றும் கடை திறந்திருக்கும் என்று வெவ்வேறு டிசைன் ஸ்வெட்டர்களை எடுத்துப் போட்டுக் காண்பித்த துணிக்கடை தம்பி சொன்னான். இந்த கறுப்பு நிற ஸ்வெட்டரை வாங்கிக்கொண்டு தோட்டத்துக்கு பத்து பதினொரு மணி வாக்கில் வந்து சேர்ந்தேன்.
இந்தப் பன்னிரண்டு மணி பகற்பொழுதிலும் மார்கழி மாதக் குளிர் இன்னும் விட்டுப் போகவில்லை. அதிலும் இந்த மலையடிவாரம் பங்குனி சித்திரையிலும் கூட சிலுசிலுவென்று தான் இருக்கும். ஆறேழு ஆண்டுகளுக்கு முன் பவானியும், நானும் ஒரே வங்கியில் தான் வேலை செய்தோம். எனக்குத் திருமணம் ஆன சில மாதங்களில் பவானி வேலையை விட்டு விட்டு மலையடிவாரத்தில் இந்த தோட்டத்தை வாங்கிக்கொண்டு வந்து விட்டார். எல்லா எதிர்ப்புகளையும் மீறி எனக்கும், பூரணிக்கும் திருமணம் செய்துவைத்ததே பவானி தான்.
என்னை விடவும் ஏழெட்டு வயது மூத்தவர். ஆனாலும், நான் பவானி என்று பெயர் சொல்லித் தான் அழைப்பேன். வங்கிப் பணியில் வயது வித்தியாசம் பார்க்காமல் பெயர் சொல்லி அழைத்துக் கொள்வது தான் பணி சார்ந்து இயங்குவதற்குத் தோதாக இருக்கும். திருமணம் செய்துகொள்ளாத பவானிக்கு இப்போது திருமண வயதெல்லாம் அதோ அந்த மலையைக் கடந்து போய்விட்டது.
இந்தத் தோட்டம், தென்னை மரங்கள், கொய்யாத் தோப்பு, அழகான இந்தப் பெரிய வீடு என வசதிக்கு ஒன்றும் குறைச்சலில்லை பவானிக்கு. ஆனாலும், இத்தனை பெரிய தோட்டத்தில், இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருக்கும் பவானியை நினைத்தால் ஓர் இருண்மை சூழ்ந்துவிடும் எனக்கு.
“ஆஆஆன்னு அலறுனா கூட ஏன்னு கேட்க பக்கத்துல ஆளில்லாத அந்த மலையடிவாரத்துல, அவ்ளோ பெரிய தோட்டத்துல எப்படித் தனியா இருக்க முடியுது பவானி அம்மாவால?” என்று என்னிடம் அடிக்கடி கேட்பாள் பூரணி. “ மனிதர்கள் வாசமே இல்லாத இடத்துல தனிமையில் உங்களால் எப்படி இருக்க முடியுது?” என்று நானும் கூட அடிக்கடி கேட்பதுண்டு பவானியைப் பார்த்து. சின்ன சிரிப்பு மட்டுமே பதிலாக வரும். “தோட்டத்த வித்துட்டு டவுன்ல ஒரு வீட்ட வாங்கிட்டு அங்கேயே வந்துடலாமே பவானி. இப்படி இங்க தனிமையில ஏன் கஷ்டப்பட்டுட்டு பயத்தோட இருக்கணும்” என்று ஒரு முறை கொஞ்சம் அழுத்தமாகவே கேட்டேன்.
“ நான் தனிமையில இருக்கேன்னு யார் சொன்னது உனக்கு? என்னைச் சுத்தியும் நிறைய மரங்கள் இருக்கு. அத தேடி தினந்தோறும் நிறைய்ய்ய பறவைகள் வருதுங்க. காட்டு முயல், காட்டுப் பன்னிலாம் கூட வருதுங்க போகுதுங்க. அதோ வாசல்ல ரெண்டு நாய்கள் துணைக்கு இருக்கு. தோட்டத்துல வேலைக்கு வர கறுப்பன் தாத்தா காலைல வந்தா சாயந்தரம் வரைக்கும் இங்க தான் இருக்காரு. கூப்பிட்டா உடனே ஓடிவர நீ இருக்க. தோணும்போதெல்லாம் ஃபோன் பண்ணி பேச பூரணி இருக்கா. அதுக்கும் மேல அப்பப்ப வந்து பார்க்க குட்டி அம்மணி இருக்கா. எனக்கென்ன பயம்? நான் தனியா இருக்கறனேயொழிய தனிமைல இல்லயே. அவ்வளவு என் மேல அக்கறை இருந்தா என்னைக் கல்யாணம் பண்ணி கூட்டிட்டுப் போயிடு” என்று சிரித்தபடியே சொன்ன பவானியின் கண்களில் என் மேலான காதல் மிளிர்ந்து வழிந்ததை அப்போது தான் முதல் முறையாகவும், கடைசி முறையாகவும் பார்த்தேன்.
தனியாக இருந்தாலும் தோட்டத்தில் பவானி சும்மாவெல்லாம் இருக்கமாட்டார். நாய்க்கு சோறு வைப்பது, வீட்டு முற்றத்தில் அமரும் பறவைகளுக்கு தானியம் வீசுவது, கொய்யா தோப்பில் பழங்கள் சேகரிப்பது என எதாவது ஒரு வேலையில் தன்னை இழுத்துப் போட்டுக்கொள்வார். நடுநடுவில் கறுப்பன் தாத்தாவுக்கு கருப்பட்டி கலந்த தேநீர் வைத்துக்கொடுக்க வேண்டும். காலையும், மதியமும் பவானி கையால் தான் அவருக்குச் சோறு.
மூன்று வருடங்களாகிறது கறுப்பன் தாத்தா இந்தத் தோட்டத்துக்கு வேலைக்கு வர ஆரம்பித்து. அவரது மனைவி இறந்த புதுசில் அவராகத் தான் பவானியிடம் வந்து, “என் பொஞ்சாதி செத்து மூனு மாசமாச்சுங்க அம்மணி. எனக்கு மூனு பொம்பள புள்ளைங்க. அல்லாருக்கும் கண்ணாலம் பண்ணி கொடுத்தாச்சு. பேரம்பேத்திகள்லாம் பாத்தாச்சு. இவ்வளவு காலமா வேல செஞ்ச தோட்டத்தயும் வேற வித்து போட்டாங்க. எதோ பெரிய மில்லு கட்டறாங்களாம். இங்க நம்ம தோட்டத்துல மரங்கன்னு நட்டு தண்ணி காட்டி வளர்த்திக் கொடுக்கலாம் ன்னு நெனச்சு தான் வந்து கேட்கறேன். பெருசா கூலி சம்பளம்லாம் எதிர்பார்க்கல அம்மணி. வாங்கி மட்டும் என்ன பண்ண போறேன் இனிமே. உங்க கையால ரெண்டு வேல சோறு மட்டும் போட்டா போதுங்க அம்மணி. சோத்துக்காக பொட்டபுள்ளைங்க வாசல்ல போய் நிக்க கூடாது பாருங்க.” என்று கேட்க இப்படித் தான் இங்கு அவர் வேலைக்கு வர ஆரம்பித்தது.
கரும்பு வெட்ட போனது, களை எடுக்க போனது என நிறைய இன்னும் வெவ்வேறு கதைகளும் அவரிடமிருக்கிறது.
கறுப்பன் தாத்தாவை வேலைக்கு வர ஆரம்பித்த பிறகு அவருக்கும் சேர்த்து சமைப்பது பெரும் மனநிறைவைக் கொடுத்தது. அதை பவானியே பலமுறை என்னிடம் சொல்லி மகிழ்ந்ததுமுண்டு. அதற்காக வெறும் சோறு மட்டும் போடுவது மட்டுமின்று மாதம் ஆனால ஒரு தொகை சம்பளமாகவும் கொடுப்பதுண்டு. இவ்வளவு சம்பளம் வேண்டுமென கறுப்பன் தாத்தாவும் கேட்டதில்லை. இவ்வளவு தான் தருவேன் என பவானியும் பேரம் பேசியதில்லை. இவர் இஷ்டப்படி வருவார். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். அந்தக் கனகாம்பர பூந்தோட்டம் கறுப்பன் தாத்தாவின் கைவண்ணத்தில் தான் செக்கச் செவேரென சிரித்துக்கொண்டிருக்கிறது. இன்று நான் வரும்போது கூட கடைசி தென்னை மரத்தைத் தாண்டி ஒரு நெல்லிமரக் கன்று நட்டு வைத்துக்கொண்டிருந்தார்.
மம்பட்டியை வைத்துக்கொண்டு வாய்க்கால் வெட்டி தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதைப் பார்க்கும் போது வங்கியின் ஏ.சி அறையில் பணக்கட்டுகளை எண்ணிக்கொண்டிருந்த பவானியா இது என்று ஆச்சரியமாக இருக்கும் எனக்கு.
அம்மணி என்று தான் பவானியைக் கூப்பிடுவார் கறுப்பன் தாத்தா. அவருக்குப் பூரணி சின்ன அம்மணி. அவ்வப்போது பூரணி, மகள் லலிதா, நான் மூவரும் இங்கு தோட்டத்துக்கு காரெடுத்துக்கொண்டு வருவதுண்டு. குட்டி அம்மணி என்று லலிதாவைக் கறுப்பன் தாத்தா கூப்பிட்டுப் பழக்கியதால் நாங்களும் கூட அவளைச் செல்லமாகக் குட்டி அம்மணி என்று தான் கூப்பிடுகிறோம். இங்குத் தோட்டத்துக்கு வந்துவிட்டால் லலிதா கறுப்பன் தாத்தாவோடு தான் சுற்றிக்கொண்டிருப்பாள். தோட்டத்துக் கிணற்றில் லலிதாவுக்கு நீச்சல் சொல்லிக்கொடுத்துவிட்டார் கறுப்பன் தாத்தா.
‘அதோ பாரு செம்போத்து. இதோ கேட்குதே இது தான் குயிலோட குரல். இதுக்குப் பேரு சின்னான் குருவி. தென்ன மரத்துல மரங்கொத்தி உட்கார்ந்திருக்கு பாரு.’ என தோட்டத்துக்கு வரும் ஒவ்வொரு பறவையையும் அது குறித்த சின்னச் சின்னத் தகவல்களையும் லலிதாவுக்குச் சொல்லிக் கொடுப்பார் கறுப்பன் தாத்தா.
நானும், பூரணியும் இருவீட்டார் எதிர்ப்புக்கிடையில் காதல் திருமணம் செய்துகொண்டதால் இரு வீட்டாரிடமும் பெரியளவு ஒட்டுறவு இல்லை. தாத்தா பாட்டியின் கவனிப்பில் வளர்வதற்கான சூழல் லலிதாவுக்கு இல்லாமலே போய்விட்டது. பவானி, கறுப்பன் தாத்தா, தோட்டம், பறவைகள் இவையே லலிதாவின் சின்ன உலகம். அவளுக்காகவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த மலையடிவாரத்திலிருக்கும் பவானியின் தோட்டத்துக்கு காரெடுத்துக்கொண்டு வந்துவிடுவோம்.
லலிதாவுக்காக மட்டும் தான் வருகிறோம் என்றும் சொல்லிவிட வேண்டியதில்லை. பவானிக்காகவும் தான் வருகிறோம். எங்களை விட்டால் யாரிருக்கிறார்கள் அவருக்கு? நாள், கிழமையெல்லாம் கிடையாது. எப்போது தோன்றினாலும் உடனே பவானிக்கு ஃபோன் செய்துவிட்டுக் கிளம்பிவிடுவோம்.
லலிதாவுக்கு போன வாரம் தான் ஐந்து வயது முழுமையானது. அடுத்த ஆண்டு பள்ளியில் சேர்க்க வேண்டும். பள்ளியில் சேர்த்த பிறகு இப்படி தோன்றும் போதெல்லாம் வர முடியாது. விடுமுறை நாள்களில் தான் வர முடியும்.
இன்றும் கூட கிளம்பும்போது பூரணியையும், லலிதாவையும் உடன் அழைத்து வரலாம் என்று தான் இருந்தேன். மார்கழி மாத இந்தக் கடும்பனியில் எட்டு மணிக்கு மேலும் இருவரும் போர்வைக்குள் சுருண்டு கிடந்தார்கள். அதனால் பூரணியிடம் மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பி வந்து விட்டேன். விழித்ததும் “அப்பா ஏன் என்னை விட்டுட்டு போனாரு” என அழுது பூரணியிடம் அடம் பண்ணுவாள் லலிதா. “ தோட்டத்துக்குக் கூட்டிட்டுப் போங்கப்பா. கிளி பொம்மை செய்யக் கத்துத் தரேன்னு கறுப்பன் தாத்தா சொன்னாரு” என்று இரண்டு நாள்களுக்கு முன் கூட செல்லமாகக் கெஞ்சிக்கொண்டிருந்தாள் குட்டி அம்மணி.
கறுப்பன் தாத்தா ஏழெட்டு பேரன் பேத்தி பார்த்தவர். எல்லோரும் நெடுநெடுவென வளர்ந்துவிட்டவர்கள். சென்ற ஆண்டு தன் மூத்த பேத்தி திருமணத்திற்கு பவானியையும், எங்கள் மூவரையும் கூப்பிட்டிருந்தார். வங்கிப் பணி நிமித்தம் வெளியூர் போக வேண்டியிருந்ததால் எங்களால் அந்தத் திருமணத்திற்குப் போக முடியவில்லை. பவானி மட்டும் போய் வந்ததாகச் சொன்னார். அதன் பிறகு ஒரு நாள் கறுப்பன் தாத்தா, “ தோ பாரு சாமி… பேத்தி கண்ணாலத்துக்கு தான் வரல. அடுத்த வாரம் வெசாழக் கெழம எங்க கொல தெய்வம் மதுரவீரனுக்கு நோம்பி. எங்க சொந்தக்கார சனமெல்லாம் பெருங்கும்பலா கூடும். கெடா வெட்டும் விருந்தும் உண்டு. அதுக்காச்சும் அவசியம் வந்துடணும். சின்ன அம்மணியையும், குட்டி அம்மணியையும் கூட்டிட்டு வந்துடணும்.” என்று சொன்னார்.
பவானியின் தோட்டத்திலிருந்து நான்கைந்து கிலோ மீட்டர் தூரத்திலிருந்த அந்த மதுரவீரன் கோயில் பண்டிகைக்கு நாங்கள் நால்வருமே ஒன்றாக போனோம். நல்ல கும்பல். அவ்வளவு பெரிய கும்பலில் கறுப்பன் தாத்தா மட்டும் தனியாகத் தெரிந்தார். அத்தனை பெரிய கும்பலுக்கும் அவர் தான் நாட்டாமையாம். பரிவட்டம் கட்டி, வெற்றுடம்பு முழுக்க சந்தனம் பூசி, புது மஞ்சள் வேட்டி கட்டி தனியாகத் தெரிந்தார் கறுப்பன் தாத்தா.
மதுரவீரன் சாமிக்கு பூசை போட்டது, தழுவு சோறு வெச்சது, கெடா துளுக்க தீர்த்தம் தெளிச்சது என எல்லா கோயில் வேலைகளும் கறுப்பன் தாத்தா கையில் தான். மக்கள் எல்லோரும் அவரை நாட்டாம, நாட்டாம என அழைத்து அவ்வளவு மதிப்பு கொடுத்தார்கள். அதையெல்லாம் பார்த்த நானும், பூரணியும், பவானியும் வியந்து தான் போனோம். இவ்வளவு மதிப்பும், மரியாதையுமான ஆளு தோட்டத்துல வந்து சும்மாடு கட்டிட்டு சலிக்காம அவ்வளவு வேலை பார்க்கறாரே என்று பேசிக்கொண்டோம்.
கடைசி திராட்சை உருண்டையை எடுத்து வாயில் போட்டபோது, “ அம்மணி” என்ற குரல் வீட்டுக்குள் நுழைந்தது. சட்டென்று கண்ணீரைத் துடைத்துக்கொண்ட பவானி “ உள்ள வாங்க தாத்தா “ என்று குரல் கொடுத்துவிட்டு சட்டென பாத்ரூமுக்குள் போய்விட்டார்.
உள்ளே வந்த கறுப்பன் தாத்தா “எப்ப சாமி வந்தீங்க. நல்லா இருக்கீங்களா. குட்டி அம்மணி வந்திருக்கா “ என்று கேட்டார். சாமி என்று தான் கூப்பிட்டுப் பழக்கி வைத்திருக்கிறார் என்னை.
“ இல்ல தாத்தா… நான் கிளம்பும்போது குளிர்ல ரெண்டு பேரும் போர்வைக்குள்ள சுருண்டு கிடந்தாங்க. அதான் நான் மட்டும் வந்தேன்.”
“ ஆமாஞ்சாமி… இந்த வருசம் குளுவுரு கொஞ்சம் சாஸ்தி தான். என்னாலயே தாங்க முடியலைன்னா பார்த்துக்கோங்களேன். அதான் அம்மணி கிட்ட ஒரு சொட்டர் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டிருந்தேன்”
“ ஆமாந் தாத்தா. நேத்தே பவானியம்மா எனக்கு ஃபோன் பண்ணி சொன்னாங்க. காலைல கடைக்குப் போய் வாங்கிட்டு அத கொடுத்துட்டுப் போலாம்ன்னு தான் வந்தேன். ஸ்வெட்டர் உங்களுக்குத் தான்னு இப்ப தான் பவானியம்மா சொன்னாங்க”
அதற்குள் முகத்திலிருந்த அழுகையைக் கழுவிக்கொண்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்த பவானி மேசை மேலிருந்த கறுப்பு ஸ்வெட்டரை எடுத்து அவரிடம் நீட்டி நின்றார். வாங்கிக்கொண்ட கறுப்பன் தாத்தா அப்போதே அதைப் போட்டுக்கொண்டு அழகு பார்த்தபடி, “ சரியா இருக்கு சாமி. நல்ல துணியாவும் இருக்கு. எவ்வளவு ரூவா சாமி “ என்றார்.
“ பத்தாயிரம் ரூவா தாத்தா” என்றேன் கிண்டலாக.
சிரித்தபடியே “கெணத்துப் பக்கம் வேல கெடக்கு. நான் வாரேன். சம்பளத்துல புடிச்சிக்கோங்க அம்மணி” என்று பவானியிடம் சொல்லிவிட்டு வெளியே போனார் கறுப்பன் தாத்தா.
தாத்தா போனதும் எனக்கெதிரே அமர்ந்து தன் தட்டிலிருந்து பப்பாளித் துண்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டு அதக்கிக்கொண்டிருக்கிறார் பவானி.
கட்டளையிடும் விதமாக ஸ்வெட்டர் ஒன்று வாங்கி வரச்சொல்லி நேற்று இரவு ஃபோன் செய்தபோது கூட அது கறுப்பன் தாத்தாவுக்குத் தான் என்று சொல்லவில்லை பவானி. அவருக்காகத் தான் இருக்கும் என்று நானாவது யூகித்திருக்க வேண்டாமா? யாருக்கு இந்த ஸ்வெட்டர் எனக் கேட்கப் போய் அவர் தேம்பித் தேம்பி அழ வேண்டியதாகிவிட்டது.
பப்பாளித் துண்டுகளை மென்று தின்னும் பவானியைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு கறுப்பன் தாத்தா சொன்னதாக பவானி சொன்ன சொற்கள் மறுபடி மறுபடி ஞாபகத்தில் வந்து வந்து போகின்றன.
“குளுரு ரொம்ப சாஸ்தியா இருக்கு அம்மணி. ராவுல தாங்க முடியல. ரூவா எவ்வளவா இருந்தாலும் பரவால. சம்பளத்துல கூட புடிச்சிக்கோங்க. நல்லதா ஒரு சொட்டரு வாங்கித் தாங்க அம்மணி. உங்கள தொந்தரவு பண்ணாம நானே கூட டவுனுக்குப் போயி வாங்கிக்குவேன். நீங்களே போய் வாங்குனா நல்ல பொருளா இருக்கும். எங்க சாதி சனமெல்லாம் போனா நல்ல துணிகளக்கூட கடக்காரனுவ எடுத்துப் போட்டு காட்ட மாட்டாங்க அம்மணி…
#622
Current Rank
70,250
Points
Reader Points 250
Editor Points : 70,000
55 readers have supported this story
Ratings & Reviews 5 (55 Ratings)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
chinnakkannan18
வெகு அழகு
k.kanimozhik
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points