நீலா

ragavankuppilan
காதல்
4.8 out of 5 (6 Ratings)
Share this story

1

நீலா கத்தியால் தன் இடது கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டபோது அவள் பிறந்து 15 வருடங்களும் 9 மாதங்களும் கடந்திருந்தன. வெட்டும் தருணத்தில் மட்டும் சுள்ளென்று வலித்தது. அதன் பிறகு ஒன்றுமில்லை. மெல்லிய எரிச்சல் இருந்தது. படிக்கிற மேசையில்தான் இருந்தாள். சொட்டுகின்ற இரத்தம் புத்தகங்களை நனைத்துவிடக்கூடாதென்ற கவனத்துடன் இடது கையை மேசைக்குக் கீழே பிடித்தாள். நிலம் செந்நிறமாகத்தானிருந்தது. அதை மீறி இரத்தப் பொட்டுகள் தெளிவாகத் தெரிந்தன. அந்தப் பொட்டுக்களின் மேல் கண்ணீர்த்துளிகளும் வந்து விழுந்தன.

வீட்டில் யாருமில்லை. அப்பா புகையிலை வியாபாரி. எனவே இந்தத் தருணத்தில் யாராவது தோட்டக்காரனோடு கதைத்துக்கொண்டிருப்பார்.

அண்ணன் இந்த நேரத்தில் எங்கே இருப்பான் என்று யாருக்குமே தெரியாது. சந்தி மதகில் இருந்து நண்பர்களோடு கதைத்துக்கொண்டிருக்கலாம். வேம்படி மைதானத்தில் உதைபந்து விளையாடிக்கொண்டிருக்கலாம். வீச்சுரொட்டி மணியத்தின் கடையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம். இரவு பத்து மணிக்கு முன்னர் அவனை வீட்டில் எதிர்பார்க்க முடியாது.

அம்மா பூரணம் மாமியின் வீட்டுக்குப் போயிருந்தாள். பூரணம் மாமியின் இரண்டாவது மகளுக்கு நாளை திருமணம் நடக்க இருக்கிறது. மூத்த மகளைவிட அவள் அழகாக இருந்தமையால் வெளிநாட்டிலிருந்து மாப்பிள்ளை வந்து குதித்திருக்கிறான். மூத்த மகள் காத்திருக்கிறாள்.

“நீயும் வாறியாடி” என்று அம்மா கேட்டிருந்தாள். அவள் படிக்கவேண்டும் என்று சொல்லி மறுத்துவிட்டாள்.

“உப்பிடியே ஒருத்தரோடையும் பழகாமல் வீட்டுக்குள்ளையே கிட” என்று திட்டிவிட்டு அம்மா போய்விட்டாள்.

நீலாவுக்கு ஆட்கள் என்றாலே ஒவ்வாமை. பேசுவதும் குறைவு. நன்றாகப் பழகியவர்களோடு ஓரளவு பேசுவாள். மற்றும்படி கேட்ட கேள்விக்குப் பதில் வரும். பாடசாலையில் அவளுக்குன்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியிருந்தது. அது அவளது அமைதியாலா அல்லது அழகினாலா என்று சொல்வது கடினம்.

ஒல்லியாய், உயரமாய், தும்பாக மீசை அரும்பியிருக்கும், உயர்தரத்தில் கணிதப் பிரிவில் படித்துக்கொண்டிருக்கும் வரதன் அவளை எப்போது பார்த்தாலும் சிரிப்பதற்கு முயற்சித்துக்கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் சட்டென்று கண்களைத் தாழ்த்திக்கொள்வாள். அவனது முகத்தில் தெரியும் அந்தத் தவிப்பை இரகசியமாக இரசிப்பாள்.

யதுர்சன் அவள் கடக்கும் தருணத்தில் பக்கத்தில் இருந்த நண்பர்களிடம், “உன்ரை போன் நம்பர் என்னடா?” என்று கேட்டபடியிருக்கிறான். அல்லது தன்னுடைய கைபேசி இலக்கத்தை உரத்த குரலில் நண்பனுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

கடந்த பிறந்தநாளின்போதுதான் அப்பா அவளுக்கு ஒரு கைபேசியை வாங்கித் தந்திருந்தார். அந்த விடயம் அவளது நெருங்கிய நண்பிகளுக்கு மட்டும்தான் தெரியும். அதைப் பாடசாலைக்கு எடுத்துச் செல்வதில்லை. ஆசிரியர்கள் யாராவது பிடுங்கிக்கொண்டால் மீள வாங்குவதைக் கனவுகூடக் காண முடியாது. அந்த விடயம் யதுர்சனுக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை குத்துமதிப்பாகத்தான் கேட்கிறானா?

அவளின் உடலைப் பற்றிய ஆண்களின் வர்ணனைகள் கேட்பதற்கு மகிழ்ச்சியாகத்தானிருக்கின்றன. ஆனால் எதையும் முகத்தில் காட்டிக்கொள்வதில்லை. அதை ஒரு இரகசிய சந்தோசமாக மனதுக்குள் ஒளித்து வைத்திருந்தாள். இரவில் எல்லோரும் உறங்கச் சென்று குறட்டை ஒலியோடு , கீச்சிடுவானின் ஒலியும் கலந்திருக்கும் வேளையில் அவள் மட்டும் விழித்திருப்பாள். அந்த நேரங்களில் மட்டும் அவள் விரும்பும் ஆண்மகன் புகையாகத் தோன்றி வருவான். அவளோடு உரையாடுவான். சண்டை பிடிப்பான். பேசாமல் இருப்பான். மீண்டும் பேசிக்கொள்வான்.

ஜன்னல் வழியாக காற்று உள்ளே வந்து புத்தகங்களை விரித்துப் பார்க்கும். இரவின் அமைதியில் சிற்றொலி கூடத் தெளிவாகக் கேட்கும். மிக மெலிதாக பாடல்கள் கேட்பாள். பாடல்களைக் கேட்டபடியே கிறங்கிப்போய் இருப்பாள். சொல்ல முடியாத உணர்வொன்று மனதை ஆட்கொள்ளும். ஏதோ ஒன்றுக்கான தவிப்பு. நிறைவேற முடியாத ஏக்கம். ஜென்ம ஜென்மமாகவே அந்த உணர்வுக்காகவே அவள் காத்திருப்பதாகத் தோன்றும். பாடல்களில் அது ஒளிந்திருக்கிறது. கேட்கும்தோறும் அதைக் கண்டுபிடித்துவிடலாம் என்று நினைப்பாள். ஆனால் அது என்றென்றைக்குமாக நழுவிக்கொண்டேயிருக்கிறது. ஒருவேளை மரணம்தான் அதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரே வழியா?

இரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தபோது கணக்கு வாத்தியார் நினைவுக்கு வந்தார். வாத்தியார் என்று மரியாதையாக விளிக்கும் அளவுக்கு அவன் அவ்வளவு வயதானவன் அல்லன். இருபதிலிருந்து இருபத்தைந்துக்குள் இருக்கலாம். அதைவிடக் குறைவாகச் சொன்னாலும் நம்பிவிடுவார்கள். அவள் அவனுடைய வயதைக் கேட்க நினைப்பாள். ஆனால் கேட்டதில்லை. ஒவ்வொரு முறையும் உரையாடலின் நடுவே வயதைக் கேட்பதற்கான தருணங்கள் வாய்க்கும். அவள்தான் கேள்வியை உள்ளுக்குள்ளேயே விழுங்கிக்கொள்வாள். மனதுக்குள் நூறு வார்த்தைகளை நினைத்தால் வெளியே பத்து வார்த்தைகளைப் பேசுவாள். எல்லோருமே மனதைத் தொகுத்து வெட்டி நறுக்கித்தான் சொற்களாக மாற்றுகிறார்களா?

கணக்குப் பாடத்தில் அவளுக்கு கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. நாற்பதுக்கும் ஐம்பதுக்கும் இடையில் புள்ளிகள் ஏறி இறங்கிக்;கொண்டிருந்தன. அம்மாதான் அவனை ஏற்பாடு செய்தாள். சிவமக்காவின் மகன் என்றுதான் தெரியும். பெயர்கூடத் தெரியாது. ‘தங்கப் பவுன்’ என்று அம்மா சொல்லியிருந்தாள். முதல்நாள் தட்டுத்தடுமாறித்தான் சொல்லிக்கொடுத்தான். கொஞ்ச நாளில் எல்லாமே சரியாகிவிட்டது. அம்மா அவன் வரும் நேரங்களில் வெளியே போவதில்லை. பால் தேநீர் கொண்டுவரும்போது மட்டும் அறைக்குள் வருவாள். தேவையில்லாமல் எட்டிப் பார்ப்பதில்லை.

அவன் மெல்லிய நகைச்சுவைகள் சொல்லும் அளவுக்கு முன்னேறிக்கொண்டிருந்தான். சில நகைச்சுவைகள் மிகப் பழையவை. அவள் ஏற்கனவே பல தடவைகள் கேட்டவை. ஆனாலும் அவன் மனம் வருந்தக்கூடாது என்பதற்காகவே சிரிப்பாள். அவளாக ஒருபோதும் நகைச்சுவை சொன்னதில்லை.

“நீங்கள் ஏன் இவ்வளவு அமைதியாய் இருக்கிறிங்கள்?” என்று ஒருநாள் கேட்டான். அவள் ஒரு புன்னகை செய்தாள். அவன் பதிலை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது.

“அமைதியாய் இருக்கிறாக்களிலை ஒரு கவர்ச்சி இருக்கு தெரியுமா?” என்றான். நெஞ்சின் மையத்தில் ஊசியால் குத்தியது போல வலித்தது. சந்தோசமான தருணங்களில் இந்த வலி எங்கிருந்து வருகிறதென்றே தெரியவில்லை. இனிமையான படபடப்பு. பதற்றம் நிறைந்த பரவசம். மீண்டும் அந்த உணர்வு. எப்போதும் பாடல்களுக்குள் தேடிக்கொண்டிருந்த இரகசியம்.

சனி, ஞாயிறு தினங்களில் மட்டும்தான் அவன் வருவான். வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து திரும்பும்போது அடுத்த நாள் சனிக்கிழமை என்பது ஞாபகத்தில் எழுந்து பரவசத்தைக் கிளப்பும். எந்த உடை அணிவதென்ற இனிய குழப்பத்தில் மனம் தடுமாறும். புதிய உடை அணிந்திருந்தால் நிச்சயமாக அவன் கேட்பான்.

“என்ன உடுப்பு புதுசு போலை?”

“இல்லை. பழசு”

“பொய் சொல்லாதைங்கோ. பாத்தாலே தெரியுதே”

“ஏற்கனவே ஒருநாள் போட்டனான்”

“எண்டைக்கு?”

“அண்டைக்கு”

“அதுதான் எப்ப?”

“எப்பவெண்டு மறந்து போச்சு”

“சரி விடுங்கோ. நாவூறு பாத்திடுவேன் எண்டு நினைக்கிறிங்களா?”

“உங்கன்ரை சேட்டும் புதுசுதானே?”

“இதா? கதையை மாத்துறிங்களா? வருசம் முழுக்க இதைத்தானே போடுறேன்”

“ஆனா புதுசு மாதிரித்தான் இருக்கு”

“இனிமேல் உடுப்பைப் பற்றிக் கேக்கவே மாட்டேன். சரியா?”

அவள் புன்னகை செய்வாள்.

தோடுகளை மாற்றினால் ஆவலுடன் அவனுடைய கேள்வியை எதிர்பார்த்துக்கொண்டேயிருப்பாள். அவன் வந்தவுடனேயே அவதானித்திருப்பான். ஆனால் வேண்டுமென்றே எதுவும் சொல்லாமல் பாடத்தைத் தொடர்வான். அவளது எதிர்பார்ப்பெல்லாம் வடிந்து போன தருணத்தில் எங்கேயோ பார்த்தபடி தன்னுடைய காதுகளை தொட்டுக் காட்டுவான். அவள் புன்னகையை அடக்க முடியாமல் திணறுவாள். அவனைக் கோபமாக ஒரு பார்வை பார்ப்பாள்.

ஒருநாள் அம்மா தேநீர் கொண்டு வந்த சமயம் அவர்கள் இருவரும் சிரித்து முடித்த கடைசித்துளி எஞ்சியிருந்தது. அம்மாவைக் கண்டதும் இருவரும் சட்டென்று முகம் மாறினார்கள். அம்மா ஒரு புன்னகையுடன் பால்தேநீரை வைத்துவிட்டுச் சென்றாள். நீலா அவனது முகத்தைப் பார்த்தாள். அவனது முகம் இருண்டு கிடந்தது. அதன்பிறகு அவன் பாடத்தையன்றி எதிலும் கவனம் செலுத்தவில்லை.

மறுநாள் அவளோடு சேர்ந்து படிக்க இரண்டு பெண்கள் வந்தார்கள். நீலாவோடு ஒரே பாடசாலையில் படிக்கிறவர்கள்தான். அம்மா அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

“இவையும் உங்களிட்டைத்தான் படிக்க வேணுமெண்டு ஒற்றைக்காலிலை நிக்கினம்” என்று நகைச்சுவையாகச் சொல்வது போலச் சொன்னாள். அவன் புன்னகையுடன் தலையாட்டினாலும், அந்தப் புன்னகைக்குப் பின்னால் ஏதோ இருந்தது. அவன் சம்பிரதாயமாக அவர்கள் இருவரினதும் பெயர், பாடசாலை முதலிய விபரங்களைக் கேட்டுவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்தான். நீலா அந்தக் கணத்தில் அவர்கள் இருவரையும் கடுமையாக வெறுத்தாள். பாடத்தின்போது காதோரம் அவர்களில் ஒருத்தி கேட்ட சந்தேகத்துக்கு வெறுப்போடு பதில் சொன்னாள்.

அவன் போனபிறகு ஒருத்தி கேட்டாள்:

“நாங்கள் வந்தது பிடிக்கையில்லை போலையிருக்கு?”

“அப்பிடியெல்லாம் இல்லை. விடியவிலையிருந்து ஒரே தலையிடி”

“பனடோல் போட்டனியா?”

“ம். ரண்டு போட்டனான்”

“சேர் என்ன சிரிக்கவே மாட்டாரா?”

“அவர் பாடம் நடத்த வந்தவரோ? சிரிக்க வந்தவரோ?”

“அவரை எனக்கு ஏற்கனவே தெரியும்”

“எங்கை பாத்தனி?”

“எங்கன்ரை ஸ்கூலிலைதான் படிச்சவர். முந்தி பட்டிமன்றம் எல்லாம் செய்தவர். நாடகத்திலையும் நடிக்கிறவர்”

“இப்ப அதுக்கென்ன?”

“சொன்னனான்”

அதன் பிறகு சில நாட்களுக்கு பாடம் அமைதியாகவே தொடர்ந்தது. இரண்டு பெண்களில் மதுரா நல்ல வாயாடி. மதுரா அளவுக்கு இல்லையென்றாலும் அபிதாவும் கதைக்கக்கூடியவள்தான். ஒருநாள் மதுரா அவனை நேரடியாக கேட்டுவிட்டாள்.

“நீங்கள் சிரிக்கவே மாட்டியளோ எண்டு இவா கேக்கிறா”

“நான் எங்கேடி கேட்டனான்?” என்றாள் அபிதா.

அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

“கணக்கு வாத்தியார் எண்டா சிரிக்காயினமாம்”

“ஆர் சொன்னது?”

“ஆரோ சொல்லிச்சினம்”

அவனால் உரையாடாமல் இருக்க முடியவில்லை. மதுராதான் அதிகம் பேசினாள். நீலா முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொண்டாள். அவனுக்கு அவளோடு எப்படியாவது பேச வேண்டும். முன்பு போல அந்தரங்கமாக, யாரும் இல்லாத தனிமையில் அவளைச் சிரிக்கவைக்க வேண்டும். ஆனால் அந்தப் பெண்கள் இருவரும் அவன் வெளியேறிய பிறகு, நீலாவோடு சற்று நேரம் இருந்து கதைத்துவிட்டுத்தான் சென்றார்கள். ஒரு மின்னல் நொடியில் நீலாவைப் பார்த்துவிட்டு அவன் வெளியேறுவான்.

ஒரு மழை நாளில் நீலாவும், மதுராவும் மட்டுமே வந்திருந்தனர். அவன் மிகுந்த தவிப்போடிருந்தான். முடியும் தறுவாயில் சட்டென்று யாரும் கவனிக்கா வண்ணம் கணிதப் புத்தகத்தின் நடுவில் ஒரு கடிதத்தை வைத்து மூடி நீலாவிடம் கொடுத்தான். உடனேயே வெளியேறிவிட்டான்.

அதன்பிறகு என்ன நடந்தது என்றே அவனுக்குத் தெரியவில்லை. நீலாவின் அம்மா அவனைக் கைபேசியில் அழைத்து அவனை வரவேண்டாம் என்றே சொல்லிவிட்டாள். நேரடியாகச் சொல்லவில்லை.

“அவள் யாழ்ப்பாணத்திலை சிநேகிதப் பிள்ளையின்ரை வீட்டிலை இருந்து படிக்கப் போறாளாம். இனி மற்றப் பாடங்களையும் கவனிக்கவேணுமல்லோ? இந்த மாசம் ரண்டு நாளா வந்தனிங்கள்? முழு மாதக் காசையுமே தாறேன்” என்றாள். அவன் வெறிகொண்டு கைபேசியின் இணைப்பைத் துண்டித்தான்.

2

“எனக்கு ஏனப்பா நீலா எண்டு பேர் வைச்சனிங்கள்?” என்று கேட்டாள் மகள்.

“நல்லாய்க் கதை கட்டுவார் கேள்” என்றாள் மனைவி.

“வானம் என்ன நிறம்?”

“நீலம்”

“அந்த வானத்தைப் போல உங்கன்ரை புகழும் இந்த உலகமெல்லாம் பரவியிருக்கும்”

“உண்மையாவா?”

“பொய்” என்றாள் மனைவி.

நீலா ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டாள்.

நீலா.

வானத்தைப் போலவே நிரந்தரமானவள்.

Stories you will love

X
Please Wait ...