மாயத்தின் நிழலுருக்கள்

கற்பனை
5 out of 5 (13 Ratings)
Share this story

நான் தீவிரமாக உறங்கிபோயிருந்தேன். ஒரு பனி படர்ந்த அடர்வனத்தில், மாயப்பறவைகள் நிறைந்து கூச்சலிடும் அடர்வனத்தில் நான் தனித்து உறங்கிக் கிடப்பதாக உணர்கிறேன். கிளைகள், இலைகளற்ற நெட்ட நெடும் மரங்கள் எங்கே முடிகின்றன என்று அறியா வண்ணம் வானுயர்ந்து பனியில் கலந்திருந்தன. வெள்ளி நிறத்தில் மிளிர்வது உடலை போர்த்திய உடையோ, உடைகள் தவிர்த்த உடலோ என்றறிய இயலா வண்ணமிருந்த அழகிய பெண்கள் பலர் அங்கே மிதந்து கொண்டிருந்தார்கள். பெண்கள் என்பதை விட , அவர்கள் பெண்கள் போன்றும், மனிதர்கள் போன்றும் இருக்கும் ஏதோ ஒன்றுகள்.. நானே அந்த நிலத்தில் மனிதன் என்றல்லாமல், ஒரு புழுவாக, பூச்சியாக, புல், பூண்டாக, பூவாக, வகைப்படுத்த இயலாத ஏதோ ஒன்றாகத்தான் இருக்கிறேன்..! தூக்கத்தின் ஆழத்தில், மாயக் கனவுகளின் பிடியில் எங்கோ, ஏதோ ஒன்றாக நான் இருக்கிறேன்!

என் ஆயிஷா (என் மனைவி) என்னை சில முறையாக அழைத்து கொண்டிருக்கிறாள் என்பதை உணராமல் தூங்கிக்கொண்டிருக்கிறேன்.

சற்று சத்தமாக அழைத்தாள் ஆயிஷா,

நான் மாயங்களின் பிடியிலிருந்து இயல்பு திரும்பினேன். பொதுவாக இயல்பு திரும்புதல் என்பது எனக்கு இயல்பான காரியமல்ல. நான் எப்போதும் இயல்பற்று மாயங்களின் பிடியிலிருப்பதாகவே எண்ணுகிறேன். தூக்கமோ, கனவோ, கற்பனையோ அல்லது சிந்தனையோ என்னை மாயத்தின் பிடியிலேயே வைத்திருக்கின்றன. இவ்வுலகில் அத்தனையும் புரிதலற்ற மாயமாய் எனக்கு படுவதால் மாயம் எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.

என் அறையில் சுழன்று கொண்டிருந்த மின் விசிறியில் கீச்சிட்டு சிறகடித்து கொண்டிருந்தன அந்த மாயப் பறவைகள். நெட்டநெடு மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் கொண்டிருக்க, நாற்புறமும் சுவர்கள் சூழ்ந்த அறை என் பார்வைக்கு விரிந்தது. அறையில் இன்னும் மாய உலகத்து பனி சூழ்ந்தே இருந்தது. வெள்ளி நிற தேவதைகள் mistல் mystery ஆகிப் போனார்கள். பனிவிலகியது.

என் மூளை செய்த மாயக் கற்பனாவாதங்கள் அத்தனையும் மாயமாகிப் போய் நாம் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிற ஒரு இயல் உலகம் என் கண்முன் விரிந்தது. மரத்தால், பிளாஸ்டிக்கால், இரும்பால் ஆன உலகம். நான் நிஜத்திலும், கனவிலும் வாழ்பவன். எனக்கு வரும் கனவுகள், நான் ஒரு மாய உலகத்தில் வசிக்கும் மனிதனாக என்னை சித்தரிக்கின்றன. மாய உலகத்திலிருந்து நான் காணும் விசித்திர கனவுகளின் தொகுப்பே இந்த நிகழுலக(நிஜ) வாழ்க்கை என்று நம்பிக்கொண்டிருப்பவன் திடிரென நிகழுலகில் கண் விழிக்கும் வேளைகளில், எங்கே கனவுலத்திலேயே சிக்கி விட்டோமா என பதறிப்போகிறேன். இயல் உலகிற்கு மாயம் அதிசயம் என்றால், மாய உலக மனிதனிற்கு இயல் உலகம் அதிசயிமல்லவா?

நாம் எங்கிருந்து எதை காண்கிறோமோ அது அதிசயமாகி போகிறது! பூமியிலிருந்து நோக்கினால் வானாம் அதிசயம். வானத்திலிருந்து நோக்கினால் பூமி அதிசயம். அதிசயிப்பது என்பது இருக்கும் இடத்திலிருந்து கைக்கெட்டாதவற்றை பார்த்து பிரமிக்கும் செயல்.

நீங்கள் ஒரு வீட்டின் அறையின் மூலையில் உறங்கிக்கொண்டே யாரும் கண்டிராத புதிரான உலகங்களுக்கு பயணப்பட முடியும் என்றால், அந்த அனுபவத்தை கற்பனைகளாலும், கனவுகளாலும் மட்டுமே தர முடியும்!

சற்று சத்தமாக அழைத்தாள் ஆயிஷா, நான் மாயங்களின் பிடியிலிருந்து இயல்பு திரும்பினேன். அவள் பேசலானாள்,

"சைக்கிள பார்க்க வந்திருக்காங்க. கீழ போய் பாருங்க" என்றாள்.

"சைக்கிளா?" நான் ஆச்சரியமிகுந்தேன். ஆம் சைக்கிள் என்ற ஒரு வஸ்து இவ்வுலகில் இருக்கிறதல்லவா? என்னிடம் கூட பால்யத்தில் மூன்று சைக்கிள்கள் இருந்தன. என் தந்தை சில வீணாய் போன சைக்கிள்களின் உபபண்டங்களை வைத்து கோர்த்து உருவாக்கிய சைக்கிள்தான் நான் முதன்முதலில் பயன்படுத்திய சைக்கிள். அன்று அது எங்களது அன்றைய ஏழ்மைக்கும், என் தந்தையின் சைக்கிள் உருவாக்கும் ஆர்வத்திற்கும் ஒரு சேர அடையாளமாக விளங்கியது. அதன் பிறகு என் தாத்தா எனக்கு வாங்கிக்கொடுத்த ஹீரோ சைக்கிளைத்தான் நான் வெகு காலமாக பயன்படுத்தினேன். அப்புறம்…

"என்ன சைக்கிளா? தூங்கி எழுந்திரிச்சா, எல்லாமே மறந்து போய்டுமே உங்களுக்கு? அப்படியே, உலகத்தையே புதுசா பாப்பிங்களே?" என்றாள் என் ஆயிஷா. உலகம் எனக்கு புதிதாகவும், புதிராகவுமே இருக்கிறது. என் ஆயிஷா அதை உணர்ந்திருக்கிறாள். ஒரு கனவுலகவாசி தன்னை நிகழுலகத்தில் நிலை நிறுத்திக் கொள்வதற்குள் திண்டாடிப்போகிறான். தர்க்கமற்ற கனவுகளையே அவனால் ஏற்கமுடிகிறது. காரணங்களை கொண்டு இயங்கும் உலகம் அவனுக்கு ஏற்புடையதாய் இன்றி மீண்டும் மீண்டும் அதிசயிக்கும் சுழலில் அவனை சிக்கிக்கொள்ள செய்கிறது.

என் அறையில் சுழலும் மின்விசிறியிலிருந்து உராய்வு சத்தங்கள் எழுந்தன. எனக்கோ மாயப்பறவைகள் மின்விசிறிக்குள் சிக்கிக்கொண்டு கீறிச் கிறிச்சென கூச்சலிடுவதாக தோன்றியது. "Electrician"ஐ அழைக்க வேண்டும். அதுதான் சரி. பதிலாக, நான் அந்த மாயப்பறவைகளை காப்பாற்றி எனது கனவுலகத்தில் சேர்த்து விட்டால், ஃபேன் சீராகிவிடும் என்றெண்ணினால், என்னை நீங்களும், என் ஆயிஷாவும், இந்த உலகமும் பைத்தியகாரன் என்பீர்கள். ஒரு பைத்தியக்காரனாய் இருப்பதில் எனக்கு எந்த ஒரு சங்கடமும் இல்லை. ஏனெனில் நான் எழுதாமல் போயிருந்தால் ஒரு பைத்தியக்காரனாகத்தான் இருந்திருப்பேன். ஒரு பைத்தியக்காரனாக இருப்பதால்தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நிகழ் உலகில் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக, ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதாக, ஒன்றை மற்றொன்று பாதிப்பதாக இருக்கிறது. இங்கு நிகழும் அத்தனைக்கும் காரண காரியமுண்டு. எல்லாவற்றிற்கும் பின்னாலும் ஒரு காரணமிருப்பதாகவே மனிதர்கள் நம்புகிறார்கள். காரணம் கேட்கிறார்கள். காரணங்களை தேடியலைகிறார்கள். காரணங்களை கற்பித்துக்கொள்கிறார்கள். ஒன்று கடவுளை காரணமாக முன் நிறுத்துவார்கள் அல்லது அறிவியலை காரணம் காட்டுவார்கள். அறிவும், அறிவுக்கு எட்டா கடவுளும் இங்கு காரணத்தால் பிறந்தவை.

நிகழுலகில் காரணங்களற்றவற்றை, காரணங்கள் கண்டறிய இயலாதவற்றை மனிதன் மாயை என கற்பித்துக்கொள்கிறான். இல்லையேல் கடவுளையோ, பிசாசுகளையோ சாடுகிறான். மாய உலகம் அப்படியா? அங்கு நிகழ்வதெற்கெல்லாம் காரணம் வேண்டுமா? எத்தனை மாயைகள்? விந்தைகள்? எல்லாமும் காரணத்தோடா நிகழ்வன? எது எதை பாதிக்கிறது? எது எதை தூண்டுகிறதென அறுதியிட்டு அங்கே கூற முடியாது.

"ஏங்க….. எந்த உலகத்துல இருக்கிங்க நீங்க? நா பேசுறது காதுல விழுதா இல்லையா? சைக்கிள பாக்க வந்து இருக்காங்க. கீழ போய் பாருங்க" என்றாள் என் ஆயிஷா.. நான் எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு, படிகளில் இறங்கி கீழே காத்திருக்கும் மனிதர்களை அடைந்தேன். இன்று காலையில் நிகழ்ந்தவை யாவும் என் நினைவலையில் ஓடின,

காலையில் நான் ராஹத் கார்டனில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். ராஹத் கார்டன் என்பது நாங்கள் தங்கியிருக்கும் குடியிருப்பின் பெயர்.
பழமை, பழமை, ராஹத் கார்டனில் எங்கும் பாரபட்சமற்று பழமை கொட்டிக்கிடக்கும். பாழாய் போன ஸ்கூட்டர்கள், மோட்டார்கள், வாகன எச்சங்கள், துருபிடித்த இரும்புகள், உடைந்த மர நாற்காலிகள் என இங்கு வாழ்ந்து விட்டு போன மனிதர்கள் எச்சங்களை ஆங்காங்கே விட்டு போயிருக்கிறார்கள். எதற்கும் உதவாதவை என இவற்றை சக மனிதர்கள் கடக்கும் வேளையில் நான் மட்டும் இவற்றை அதிசயிப்பேன். பழமை மீது எப்போதும் எனக்கு தீரா காதல். என்னை பொருத்த வரை இந்த ராஹத் கார்டனை அலங்கரிக்கும் கலை பொருட்கள் இவை. பழம்பொருட்கள் நிறைந்த இந்த ராஹத் கார்டனை ஒரு பழம்பொருளகம்(antique shop) போன்றும், ஒரு பழம் பொருட்காட்சிசாலை(museum) போன்றும் நினைத்துக்கொள்வேன்.

ராஹத் கார்டனின் நிழற்பாதையிலும், பரந்து விரிந்த மாடிப்பரப்பிலும் அல்லும், பகலும் புகைப்படம் எடுத்த படி, வெற்று பிரபஞ்சத்தை வெறித்த படி, சிந்தனைகளின், மாயைகளின் பிடியில் அலைந்து திரிந்து கொண்டிருப்பவனை கண்டால் நீங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவனை நானென நம்பலாம்.

இன்று காலை, நான் நிழற்பாதையில் அங்குமிங்கும் உலாவியபடி புகைப்படம் எடுத்து கொண்டிருந்தேன். முதல் தளத்தில் உள்ள எங்களது வீட்டில், அக்காவும் (ஆயிஷாவின் அக்கா), அம்மாவும் (ஆயிஷாவின் அம்மா) பேசிக்கொண்டிருந்தார்கள். காற்றில் அவர்களது பேச்சுக் குரல் நிறைந்திருந்தது. அந்த நிமிடத்தில் அக்காவின் தீராத பேச்சுக்களால் இந்த பிரபஞ்சம் நிரம்பிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டேன். ஒவ்வொரு மனித மனமும் பேசாத பேச்சுக்களின் சுமைகளால் நிறைந்தவை. அத்தனையும் பேசிவிட ஒரு மனிதன் கிடைத்து விடுவது அபூர்வம்தான். பேசும் மனிதனை விட, பேச்சுகளை கேட்கும் மனிதன் அபூர்வமானவன்.

அக்காவிடமிருந்து இடை நிறுத்தமில்லாது பேச்சுக்கள் தொடர்ந்த வண்ணமிருக்க, அம்மாவும் அதை கேட்டுக் கொண்ட படியே சில வார்த்தைகள் பேசுவதும், பின் புத்தனின் நெடும் மௌனத்துடன் பேச்சுக்களை அவதானித்து கொண்டே இருப்பதுமாய் இருந்தார். நான் ராஹத் கார்டனின் எந்த மூலைக்கு சென்றாலும் அவர்கள் பேச்சை கேட்க முடிந்தது! நான் வெளியேறி சாலையில் இறங்கினேன். அங்கும் அவர்களது குரல் கேட்டுக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் நடந்து ICM ஜபவீடு வரைக்கும் போனேன். அங்கும் அவர்களது குரல் நிறைந்தே இருந்தது. இந்த உலகமே மௌனமாகி இவர்கள் இருவர் மட்டுமே பேசிக்கொண்டிருப்பதை போல, எங்கும் அவர்களது குரல். சில நேரங்களில் இந்த ராஹத் கார்டன் இப்படி முற்றிலும் அமைதியாகி வெறுமையாகி விடுகிறது. அது தன்னிலும், தனது சுற்றத்திலும் பேரமைதியை நிலவ விடுகிறது.

ஒருசமயம் இந்த வேளையில், பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு நபர், ராஹத் கார்டன் அல்லது சக்தி நகர் வரை வர வழி தெரியாமல் நிற்கிறார் என்றால், அவர் எதையும் யோசிக்காமல், இடைநிறுத்தமில்லாது கேட்டு கொண்டே இருக்கும் அக்காவின் குரல் கேட்கும் திசையை நோக்கி வந்து கொண்டே இருந்தால் போதும். யாரின் உதவியும் இல்லாமல் இங்கே வந்து விடலாம்.

பழமைகளை தாங்கிய அழுக்கடைந்த மூட்டைகளை சுமந்து சென்ற மனிதனை சற்று முன்பு சாலையில் கண்டேன். காலத்தின் எச்சம் போல போய் கொண்டிருந்தான். ராஹத் கார்டனை கடக்கும் போது, குரல்கள் கேட்கும் திசையை நோக்கி முகஸ்துதி செய்வதை போல பார்த்து விட்டு சென்றான். என் கற்பனையில் அடிக்கடி வரும், காலத்தின் எச்சங்களை சுமந்து செல்லும் ரயில், இவனை ரயில் நிலையத்தில் உதரி விட்டு போயிருக்குமோ? இந்த மனிதன் குரல்கள் எழும் திசையை கொண்டு தனக்கான பாதையை கண்டறிந்து, இங்கே வந்திருக்கின்றானோ? என் கற்பனைகள், கனவுகள் எல்லாம் உயிர் கொண்டு இந்த ராஹத் கார்டனை சுற்றி திரியத் துவங்கிவிட்டனவோ?

நிஜத்திலும், கற்பனைகளிலும் அலைந்து திரிந்து கொண்டிருந்த நான், என்றோ சுவற்றில் சாய்த்து நிறுத்தப்பட்ட, இன்று என் பயன்பாட்டில் இல்லாத, ராஹத் கார்டனின் பழம்பொருட்களில் ஒன்றாய் கலந்துவிட்ட, என் சைக்கிளை கண்டேன். என் சைக்கிள் எப்போதும் பெருந்தவத்திலேயே இருக்கிறது. என் வாழ்க்கைக்குள் அது நுழைந்த சுவடுகளை நினைவுகோரினேன்.

நாம் தேடிச் செல்லும் எதையும் தனக்குள் வைத்திருக்கும் பல்லாவரம் வாரச் சந்தைக்கு என் மைத்துனன் (ஆயிஷாவின் தம்பி) உடன், சைக்கிள் வாங்க சென்றிருந்தேன். மைத்துனனுடன் நிதானமாக பொறுமையுடன் சைக்கிள்களை தேடினேன். தரமான இரண்டாம் தர சைக்கிள் எனது தேவை. இரண்டாம் தர சைக்கிள்களை பழுது பார்த்து, துடைத்து, கழுவி புதிது போல பார்வைக்கு வைத்திருப்பார்கள். தரமான ஒன்றை கண்டறிவது இங்கு அவ்வளவு சுலபம் அல்ல. கொஞ்சம் அசந்தாலும் வேலைக்கு ஆகாத ஒன்றை உங்கள் தலையில் கட்டிவிடுவார்கள். வேலைக்கு ஆகாதவைதான் இங்கு நல்ல விலைக்கு போகும். இங்கு மின்னுவதெல்லாம் நிச்சயம் பொன்னல்ல.

"மோ.. அந்தான போமா.. யாவாரத்த கெடுத்துகிட்டு" லுங்கி, கை பனியன் அணிந்த சைக்கிள் கடைக்காரர் அவர்களை விரட்டினார். சிறுவனும், முப்பதுக்கும் மேல் மதிக்கத்தக்க பெண்மணியும் அந்த இடத்தை விட்டு நகராமல் பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த சிறுவன் ஒரு அழகிய ஆரஞ்சு நிற சைக்கிளை கையில் பிடித்திருந்தான். அந்த சைக்கிளுக்கான பேரம்தான் அங்கு நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. இரண்டாம் தர சைக்கிள்தான் என்றாலும் அதை அவர்கள் 800 ரூபாய்க்கு கேட்பது அபத்தம். கடைக்காரர் 3500 ரூபாய்க்கு ஒரு ரூபாய் குறைக்க முடியாதென விரட்டினார். நல்ல தரத்துடன் கூடிய ஹீரோ சைக்கிள் வகை சைக்கிள் அது. மனம் கவரும் தோற்றமும், வலிமையான உடற்பாகங்களும், அப்படி ஒன்றும் பழமையடையாததுமாய் அது என்னை வசீகரித்தது.

"இப்போ இந்த ரூபாய வாங்கிகோணா.. புல்ல ஆசபட்து. கைல காசு வர வரே தரேண்ணா.." அந்த பெண்ணின் பேச்சில் வடக்கர்களின் தழில் நெடி. பிழைப்பை தேடி ஊர் ஊராய் புலம்பெயர்ந்தவளின் முகத்தில் ஏகப்பட்ட கலாச்சார, பண்பாட்டுக்கு பழகிய ரேகைகள், அவளது அடையாளத்தையே சிதைத்திருந்தன. புலம்பெயர்ந்து கொண்டே இருக்கும் மனிதர்கள் ஏதோவொன்றாக மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் முகமும், உடலும் வெறும் சுவடுகளாக இருக்கின்றன. அவர்களிடமிருந்து பழமையின் வீச்சம் எப்போதும் வீசிக்கொண்டிருக்கிறது.

நாங்கள் அந்த சைக்கிளை நோக்கி, வர, வர அந்த சிறுவன் இன்னமும் இறுக்கமாய் சைக்கிளை பிடித்துக் கொண்டான். நாங்கள் அருகே சென்றதும் அவர்களை வலுகட்டாயமாய் பிடித்து நகர்த்தி விட்டார் கடைக்காரர். சைக்கிள் விலையை விசாரிக்க, 3500ரூபாய் சொன்னார். இந்த சைக்கிளை இந்த விலைக்கு எங்கேயும் வாங்கி விட முடியாது என்பதாகவும், ஒரு புதிய சைக்கிள் கூட இதன் தரத்தில் இருக்காது எனவும் கூறி, ஓட்டிப்பார்க்க சொன்னார். நான் ஓட்டிப்பார்த்தேன்.

இந்த சைக்கிளை எப்படி 3500 ரூபாய்க்கு விற்கிறார்கள்? இத்தனை இலகுவான பயண அனுபவத்தை தரும் இதை முதன்முதலில் பயன்படுத்திய மனிதன் யார்? இப்படி ஒரு சைக்கிளை எப்படி அவன் இங்கே விற்றுப்போனான்?

நான் ஓட்டிப்பார்த்து திரும்பி வந்த போது, கடைக்காரர் ஏதோ கவிதை ஒன்றை வாசிக்க தந்தவரை போல என்னை பார்த்தார். அந்த சைக்கிள் ஒரு Art (கலை). பொது அம்சங்களிலிருந்து தன்னை தனித்துக்கொள்ளக் கூடிய எதுவும் கலையாக மாறுகின்றன. ஒரு கலைக்கு எப்படி நான் பேரம் பேச முடியும்? நான் 3500 ரூபாயை கடைக்காரரிடம் நீட்டினேன். அவர் அதிலிருந்து 500 ரூபாயை என்னிடம் கொடுத்து விட்டு 3000 மட்டும் எடுத்துக்கொண்டார், தவிர தனது நிரந்தர கடை எங்கே இருக்கிறது என கூறி, "எதாவது பிரச்சனை என்றால் அங்கே வாருங்கள், பழுது பார்த்து தருகிறேன்" என்றும் கூறினார். மிகவும் நம்பிக்கையாய், சைக்கிளை எடுத்துக்கொண்டு நிறைவோடு நகர்ந்தோம்.

இத்தனையையும் ஏக்கமாய், அடக்க முடியாத துயரங்களோடு பார்த்துக்கொண்டிருந்தனர் அந்த சிறுவனும், அவனது தாயும்!

ராஹத் கார்டன் அருகே இருக்கும் பல்லாவரம் பாலத்தின் (பாண்ட்ஸ் பிரிட்ஜ்) கீழேதான் வசிக்கிறார்கள் அந்த பெண்மணியும், அந்த சிறுவனும். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் ஒரு 14, 15 பேர் அந்த பாலத்தின் கீழே வசிக்கிறார்கள். வீடற்றவர்கள் வானத்தை மறைத்து நிற்கும் ஏதாவது ஒரு கூரைக்கு கீழே தஞ்சம் புகுந்து விடுகிறார்கள். எந்த கனவுகளும், இலக்குகளும் இல்லாத அவர்களது வாழ்வு அற்புதமானது, கனவுகளும், இலக்குகளும் பிறக்காத வரை.

அலுவலகம் செல்லும் போதும், மளிகை கடைக்கு செல்லும் போதும் சைக்கிளை ஏக்கமாய் பார்த்துக்கொண்டே இருக்கும் அந்த சிறுவனை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அலுவலகம் செல்லும் போது ரயில் நிலைய சைக்கிள் நிறுத்தத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்வேன். ஒருமுறை அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகையில் ரயில் பெட்டியிலிருந்து சைக்கிள் நிறுத்தத்தை கண்டேன். அங்கே அந்த சிறுவன் என் சைக்கிளை தொட்டு ஸ்பரிசித்து பார்த்துக்கொண்டிருப்பதை காண முடிந்தது. அவனது செயல் என் மனதில் பெருந்துயரமாக படிந்தது.

ஒருமுறை என்னிடமே அவன் நேரிடையாக கேட்டான்.

"அண்ணா நீ புது சைக்கிள் வாங்கிட்டா, இத எனக்கு தரியாண்ணா?" என. பிறகு என்னை பார்க்க நேரிடுகையில் எல்லாம்
அவன் கேட்பது வாடிக்கையாகி போனது.

"அண்ணா, யார்ட்டையும் கொட்துராதணா. சைக்கிள் விக்கிற மாறி இருந்தா என்ட முதல்ல சொல்லு." நான் அவனிடம்தான்
நிச்சயம் தருவேன் என உறுதியளித்திருந்தேன்.

இப்போது சில நாட்களாய் பாலத்தின் அடியில் அவர்களை காணவில்லை. அவர்கள் எங்கோ அப்புறப்படுத்தப்பட்டு விட்டார்கள்.

நான் பைக் வாங்கி விட்டேன். சைக்கிளின் தேவை இப்போது முற்றிலும் இல்லாமல் போனது என் வாழ்வில். அந்த சிறுவனின் தூரத்து மனம் சைக்கிளில் கரைபடிந்து கொண்டிருக்கிறது. நான் எனது சைக்கிளையும் படம் பிடித்தேன். அப்போது என் பின்னே சில மனித குரல்கள்,

"என்ன சார் OLXல போட போறிங்களா?" என கேட்டார், எதிர் வீட்டுக்காரர்.

"இல்லணா, சும்மா போட்டோ எடுக்கிறேண்ணா." என்றேன்.

"சும்மாவா?" என ஆச்சரியித்த அவர்,

"விக்கிறதா இருந்தா சொல்லுங்க. நா வாங்கிக்கிறேன்." என்றார். சைக்கிளை பார்க்கும் யாவரும் அதை விலைக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பைக் வாங்கிய பின் இதை அந்த சிறுவனிடம் தந்து விடலாம் என்றிருந்தேன். அவர்கள் புலம்பெயர்ந்து விட்டார்கள். வேறு யாருக்கும் கொடுக்கும் மனமும் எனக்கு வரவில்லை.

"நா வீட்ல கேட்டு சொல்றேணா" என்றபடி அகன்றேன். நான் ஆயிஷாவிடம் கூறியபோது, அவள்

"மழைலையும், வெயில்லயும் கடந்து வீணா போது, அவர்தான் கேக்குறார்ல்ல? அவர்கிட்ட வித்திடுங்க" என்றாள். நான் யோசித்தேன். அவள் நான் என்ன யோசிக்கிறேன் என்பதை உணர்ந்தவள் போல சொன்னாள்,

"போங்க ஒவ்வொரு பாலத்துக்கு அடியிலே போய், அவங்கள தேடுங்க. தேடிப்பிடிச்சு அந்த பையன் கிட்டையே அத கொடுத்துட்டு வாங்க" என்று விட்டு, இவன் தேடிப்போனாலும் போவான் போல, என்றபடி என்னை பார்த்தாள்.

"சரிமா, அவர் கிட்டையே கொடுத்திடலாம். உங்க அத்தா கிட்ட சொல்லி எவ்வளவு தருவாருன்னு கேட்க சொல்லு" என்றேன். வெயிலில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டே அலைந்த களைப்பில் அந்த பகலில் தூங்கிப்போனேன்.

இரண்டு மணி நேர ஆழமான தீவிர உறக்கம். தூக்கத்தின் அடி ஆழத்திற்கு போய் மாயக் கனவுகளின் பிடியில் வீழ்ந்து, பின் ஆயிஷாவால் எழுப்பப்பட்டு, சைக்கிளை வாங்க கீழே காத்திருக்கும் மனிதர்களை அடைந்தேன். கீழே எதிர் வீட்டு மனிதர்கள் இருவரும், என் மாமனாரும்(ஆயிஷாவின் அப்பா), நடுமயமாய் சைக்கிள் நிற்க, அதனை சூழ்ந்து நின்று கொண்டிருந்தார்கள். என் மாமனார் நான் தூங்கிப் போன இடைவெளியில் சைக்கிளை நன்கு கழுவி, துடைத்து, எண்ணெய் போட்டு, புதிது போல மாற்றி இருந்தார். எனக்கு ஒரு நிமிடம் இதை விற்காமல் நாமே வைத்துக்கொள்ளலாமே என தோன்றிற்று.

"மாப்ள.. 2000 ரூபா தராங்களாம்.உங்களுக்கு ஓகேவா"என்றார் என் மாமனார்.2000 ரூபாய்..!தாராளமாய்"ஓகே"என்றேன்.எதிர்வீட்டுக்காரர் அலட்சியமாய் நான்கு 500 ரூபாய் நோட்டுகளை நீட்டினார்.அதை வாங்கிக்கொண்டு நான்,சைக்கிளின் சாவிகளை அவரிடம் கொடுத்தேன். சைக்கிளை நகர்த்திக்கொண்டு அவர் நகர எத்தனிக்கையில் தூரத்தில் கிட்டதட்ட என்னை நோக்கி ஓடி வந்தார்கள் அந்த சிறுவனும், பெண்மணியும். நான் ஆச்சரியங்களோடும், குற்ற உணர்ச்சிகளோடும் அவர்கள் வருவதை பார்த்துக்கொண்டிருந்தேன். அருகில் வந்ததும் அவன்,

"சைக்கிள விக்கிறியாண்ணா?என்ட கொடுக்கிறேனுதான்னா சொல்லி இருந்த?"என்றான்.நான் தலைகுனிந்தேன்.

என் மாமனார்,

"உங்களுக்காகதான் மாப்ள சைக்கிள விக்காம வச்சியிருந்தாரு.நடுவுல நீங்க எங்க போனிங்கனு தெர்ல.இவங்களும் சைக்கிள ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்ததால,அவங்கள்டயே வித்துட்டோம்.இப்ப எதுவும் பண்ண முடியாதுமா?"என கைவிரித்தார்.அந்த சிறுவன் என் கைகளில் திணிந்திருந்த,நான்கு ஐநூறுகளை பார்த்தான்.தலை கவிழ்ந்தபடியே,தாயுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

எத்தனை முறைதான் இந்த சிறுவன் ஏங்கி போவான்?எத்தனை முறை இவனை நான் ஏமாற்றுவேன்?2000 ரூபாய் லாபம் பார்த்து விட்டதால் இப்படி ஊமையாகி நிற்கிறேனா?கைநிறைவது மட்டுமே லாபமா?லாபம் என்பது மனநிறைவில் இல்லையா?அந்த சிறுவனிடம் கொடுப்பதில்தான் என் மனம் நிறைவடையும்.

நான் எதிர் வீட்டுக்காரரிடம்,

"சைக்கிள அந்த பையனுக்கு தரதா சொல்லி இருந்தேண்ணா.ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்கான்.இத அவன் கிட்ட கொடுக்கறதுதான்னா நியாயம்.சாரிண்ணா"என்றபடி, 2000 ரூபாயை அவரிடம் கொடுத்து விட்டு,சைக்கிளை பற்றினேன்.என்ன நினைத்தாரோ,எதுவும் பேசாமல் பற்றி இருந்த சைக்கிளை என்னிடம் விடுவித்தார்.

"டேய் தம்பி"நான் கத்திக்கொண்டே ஓடி வருவதை பார்த்தவர்கள் நின்றார்கள்.

"இந்தா"என்றேன் அவனிடம்.அவன் சைக்கிளை தீவிரமாய் பற்றிக் கொண்டான்.பூரணமடைந்த அவர்களது முக மலர்ச்சிகளை
கூற வார்த்தைகளில்லை.அவன் பையிலிருந்த 800 ரூபாயை என்னிடம் நீட்டினான்.

"அதுலாம் ஒண்ணும் வேணாண்டா.வச்சிக்கோ"என்றேன்.அந்த பெண்மணி

"இல்லணா.நீ வாங்கிகோணா"என்றாள்.நான் எவ்வளவு மறுத்தும் அவர்கள் கேட்பதாக இல்லை.

"அத வாங்கிக்கோணா,இல்லனா சைக்கிளே எங்களுக்கு வேணாணா"என்றாள் அந்த பெண்மணி.ஏழைகள் என்றால்,என்ன என்று நான் நினைத்துக்கொண்டேன்?எதுவும் அவர்களுக்கு இலவசமாகவோ,உபரியாகவோ தேவை இல்லை.எதையும் உழைத்தே வாங்கி பழக்கப்பட்டவர்கள். தேவை இருந்தால் ஒழிய அவர்களுக்கு எந்த இனாமும் தேவையில்லை.

பணத்தை வாங்கி கொண்டேன்.ஒரு 800 ரூபாயின் கனத்தை அப்போதுதான் உணர்ந்தேன்.அவர்கள் சைக்கிளோடு,காற்றில் கவிதையாய் தொலைந்து போனார்கள்.

லுங்கி அணிந்திருந்ததால் பணத்தை சட்டை பையில் வைத்தேன்.நிரம்பிய என் சட்டை பையை பார்க்கையில்,நிறைந்த என் இதயம் நெஞ்சை கடந்து புடைத்துக்கொண்டிருப்பதை போல தோன்றியது.பணம் படைத்தவர்களின் 2000 ரூபாயை விட இல்லாதவர்களின் 800 ரூபாய் எவ்வளவு கனமானது? மனநிறைவில் படுக்கையில் வீழ்ந்தவன் அப்படியே உறங்கி போனேன்.

கண் விழித்த போது,உலகம் என் காலுக்கு அடியில் நழுவிக்கொண்டிருந்தது.ஒரு மரத்தடியில் சாய்ந்து உறங்கியவன் இப்போதுதான் விழித்திருக்கிறேன்.மரத்தின் கிளைகள் என் காலுக்கு கீழே தவழும் மேகங்களுக்குள்ளே போய் காணாமல் போயிருந்தன.நெட்டநெடும் உயரத்தில் அதன் வேர்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.ஏதேனும் ஒரு மாயம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.என் உலகத்தில் வண்ணங்கள் ஏழல்ல.நூறும்,ஆயிரமுமாய் இருக்கிறது.இதுதான் என் உலகின் இயல்பு.நான் நிகழுலகத்தை பற்றிய கனவுகளில் இருந்திருக்கிறேன்.நிதம்,நிதம் என் மாய உலகை பார்த்து ஆச்சரியப்படும் நிகழுலகவாசி இன்று முற்றிலும் என்னை ஆச்சரியப்படுத்தி விட்டான்.மாயவுலகில் மட்டுமே சாத்தியமான ஒன்றை நிகழுலகில் நிகழ்த்திவிட்டான்.இங்கேதான் அணுக்களில் பிரபஞ்சம் அடங்கும்.ஒரு முயல் சிங்கத்தை வேட்டையாடும்.சாதுக்கள் காட்டை ஆளும்.சரியான ஒன்றை நிகழ்த்துவதற்காக அந்த நிகழுலகவாசி அதன் தர்க்கத்தையே உடைத்து விட்டான்.இரண்டாயிரம் ரூபாய் என்பது எண்ணூறு ரூபாயின் ஒரு சிறு துணுக்கென மாற்றிவிட்டான்!


ஆந்த ஆச்சரியங்களிலேயே என் மாய உலகில் உறங்கி போன நான்,மீண்டெழுந்த போது,எதை பற்றிய புரிதலுமற்ற ஏதோ ஒன்றாய் இருந்தேன். நிகழும்,மாயமுமாய் இரு வேறு கனவுகளின் நீட்சிகளை கொண்ட நான் என்பது என்னவென்று அறியவியலாத வனத்தில்,மாயப்பறவைகள் நிறைந்து கூச்சலிடும் நிலத்தில் புல்லாக,பூவாக,பூண்டாக ஏதோ ஒன்றாக அல்லது எல்லாமுமானதாக இருக்கிறேன்!

Stories you will love

X
Please Wait ...