JUNE 10th - JULY 10th
செவன்சி பஸ்ஸில் டிஎஸ்பி பேருந்து நிறுத்தத்தில்தான் அவன் ஏறினான். ஏறினான் என்பதை விட என்னை ஒட்டி உரசிக் கொண்டே தொற்றினான் என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் சுதாரித்தேன். அவனிடமிருருந்து படிக்கட்டில் தாவி, நடுவண்டிக்குச் சென்றேன். அப்பவும் தாவி வந்து என்னை ஒட்டியே நின்றேன். தெரிந்து விட்டது. அவன் என்னவோ செய்யப்போகிறான். அந்த நடுமையத்திலிருந்து பின்னுக்குத் தாவினேன்.
கடைசி சீட்டில் நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். ஐந்தாவது ஆளாக நான் அமர்ந்தேன். அங்கிருந்து அவனைப் பார்த்தேன்.
நடுவண்டியிலேயே இருந்தான் மேலே கைப்பிடிக் கம்பியை பிடித்தாறே என்னைப் பார்த்தான். நானும் அவனைக் கவனித்தேன்.
அநியாயத்திற்கு ஒல்லியான உடம்பு. வெளிர் நீல நிற தொளபுளா சட்டை. அடர் நீலத்தில் பேண்ட். கொஞ்சம் கூடுதலான அழுக்காய் இருந்தான். இப்போது வலது புற சீட்டில் இருந்த ஒரு நபரை மேலிருந்து கீழாக எட்டிப் பார்த்தான். திரும்ப என்னைப் பார்த்தான்.
நான் அவனைப் பார்த்ததில் எரிச்சல் பட்டிருக்க வேண்டும். வண்டி வேகமெடுத்தது போலவே தானும் வேகமாக கம்பியைப் பிடித்தபடி பாய்ந்து வந்தான். என்னருகில் நின்றான்.
‘‘என்ன முறைக்கறே?’’
எனக்கு சற்று குப்பென்று வியர்த்தது. ஆனாலும் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
‘‘யாரு முறைச்சா?’’
‘நீதான். இப்ப முறைச்சியே?’’
‘‘அப்படி நீ நினைச்சுட்டா நான் என்ன செய்யறது?’’
அவன் இப்போது கூடுதலாக முறைத்தான்.
‘‘அப்புறம் நீ பார்த்த பார்வைக்கு என்ன அர்த்தம்?’’
‘‘ஒண்ணுமில்லே. சும்மா பார்த்தேன்!’’
‘‘அப்படியா? சரி, தாராளமா பாரு. ஆனா நான் சில பிஸினஸ் செய்வேன் கண்டுக்காதே!’’
எனக்கு இன்னும் வியர்த்தது.
‘‘நான் எதுக்குக் கண்டுக்கப் போறேன்?’’ என்றேன்.
திரும்ப அவன் நடு வண்டிக்குத் தாவினான். கொஞ்சம் திகில்தான். அவனைப் பார்த்து ஒண்ணுகிடக்க ஒண்ணு செய்து விட்டான் என்றால் என்ன செய்வது? அவன் விலகின கணம்தான் அந்த வாசத்தை நாசி உணர்ந்தது. டாஸ்மாக் சரக்கு.
இப்போது அவனைப் பார்க்கவில்லை. வேறு பக்கமாக முகம் திருப்பிக் கொண்டேன். ஆனாலும் அவன் பக்கமே பார்வை சென்றது. பார்க்காதே என்றால்தானே அதைப் பார்க்கவே மனம் தாவுகிறது. மனம் ஒரு குரங்கு.
இப்போதும் அவனைத்தான் பார்த்தேன். நல்லவேளை அவன் என்னைப் பார்க்கவில்லை.
இப்போது பேருந்தின் நடுப்பகுதியில் இடப்பகுதியில் இருந்த கம்பியில் ஒய்யாரமாய் சாய்ந்தபடி நின்றிருந்தான்.
மதிய நேரம். பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை. நாலைந்து சீட்டுக்கு ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருந்தனர். பஸ்ஸில் மொத்தமே பத்திருபது பேர் இருந்தால் அதிகம். காலை மாலை ஃபுட் போர்டில் தொங்கும் அளவுக்கு பயணிகள் கூட்டம் உள்ள பேருந்து ரூட் அது. நான் ஏறிய டி.எஸ்.பி நிறுத்தத்திலிருந்து கேஜி தியேட்டர் வழியே ரேஸ்கோர்ஸ், தாமஸ் பார்க், புலியகுளம் சென்று, வலது புறம் திரும்பி, ராமநாதபுரம், டேக்ஸ் ஆபீஸ், சுங்கம், ரயில்வே ஸ்டேஷன், டவுன்ஹால், ரங்கே கவுடர் வீதி, காந்திபார்க் செல்லக்கூடிய வண்டி அது. இப்போது அடுத்த ஸ்டாப் கேஜியில் நின்றது. அங்கே ரெண்டு பேர் மட்டும் ஏறினார்கள்.
மறுபடி பஸ் வேகமெடுத்தது. அவன் தான் நின்றிருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டே அந்த சீட்டில் அமர்ந்திருந்த இருவரில் ஒருவர் பாக்கெட்டை எட்டிப் பார்ப்பது தெரிந்தது. அந்தப் பாக்கெட்டில் இவன் கைவிட எத்தனித்தான். என்னைப் போலவே அவனையே மற்றவர்களும் கவனிப்பது தெரிந்தது. அதை விட அந்தக்குறிப்பிட்ட பாக்கெட்டுக்கு சொந்தக்கார பயணி உஷாராக இருந்தார். தன் பாக்கெட்டில் தானே கைவிட்டு,
‘‘இந்தா இந்தப் பீடிக்கட்டுதான் இருக்கு. வேணுமா?’’ என்றார்.
வயதில் பெரியவர். எந்த அளவு எரிச்சல்பட்டிருப்பார் என்று அவர் பார்த்தபார்வையில் உணர முடிந்தது. அங்கு நடப்பதை சிலர் திரும்பிப் பார்த்தனர். யாரிடமும் எந்த அசைவும் இல்லை.
கம்பி ஆசாமி யாரை நோக்கியும் திரும்பவில்லை. பெரியவர் சொன்னதைக் கேட்டு துளியும் அசரவில்லை. பெரியவர் நீட்டின பீடிக்கட்டை பிடுங்கி ஒரு உருட்டு உருட்டி விட்டு, அவர் பாக்கெட்டிலேயே வைத்தான். இப்போது இடதுபக்கம் தாவினான். அவனை ஒட்டியும் ஒட்டாமல் கண்டக்டர் தன் ஹேண்ட் பேக்கைத் தழுவிக் கொண்டு, ‘டிக்கெட், டிக்கெட்’ என்றபடி வந்து கொண்டிருந்தார்.
புதிதாக ஏறின இரண்டு பேர் உட்பட என்னிடமும் சில்லரை வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுத்தார்.
திரும்பவும் அவன் மீதே பார்வை சென்றது. இப்போது அவன் இடதுபுறம் இரண்டு பேர் உள்ள இருக்கைக்கு மாறி நின்றான். அங்கே கம்பியில் சாய்ந்து அமர்ந்திருந்த ஒருவரின் பாக்கெட்டில் கை விட்டான். அவ்வளவு லகுவாக அடுத்தவன் பாக்கெட்டில் அந்நியன் ஒருவன் கை விட முடியும் என்பதை அப்போதுதான் பார்த்தேன். அந்த ஆசாமி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். இப்போது இவன் கை போன வேகத்தில் திரும்பி வெளியே வந்தது. பெரியவரிடமாவது பீடி இருந்தது. இவரிடம் அதுவும் இல்லை. இப்போது அந்த ஆள் என்னைப் பார்த்தான். பழைய வேகத்தோடு என்னிடம் வந்தான். இப்போது முன்னை விட பயந்தேன்.
‘இவனைப் போன்ற பிக்பாக்கெட்டுகள் வாயில், கடைவாயில், பல்லிடுக்கில் பிளேடுத் துகள்களை வைத்திருப்பார்கள்’ என்று கேள்விப்பட்டது கணநேரத்தில் நினைப்பிற்கு வந்தது.
அது மட்டுமா? நெற்றியில் தலைமுடிக்குள், கம்பியோ, கத்தியோ எதையோ சொருகி வைத்திருப்பார்களாமே. டக்கென்று தலைக்கு தலை முட்டினால் நம் தலையில் ரத்தம் கொப்பளிக்குமாமே?
அப்பா தன் சின்ன வயசில் ராயல் தியேட்டர் டிக்கெட் எடுக்க வாசலில் மோதிய பிக்பாக்கெட் கும்பலில் ஒருவன் இப்படித்தான் செய்தான். போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் போய் எதுவும் எடுபடவில்லை. அந்தக் கதையெல்லாம் நினைவில் ஆடியது.
நல்லவேளை. இவன் அப்படி எதுவும் செய்யவில்லை. கடைசி சீட்டுக்கு முன்னால் உள்ள கம்பியைப் பிடித்துத் தொங்கினான். வண்டியின் தள்ளாட்டமா? டாஸ்மாக் சரக்கு தந்த ஆடுபுலி ஆட்டமா பிரித்துணர முடியவில்லை.
‘‘நான் சில பிஸினஸ் செய்வேன். பாக்காதேன்னு சொன்னேன்ல. அப்பறம் ஏன் மறுபடி மறுபடி பார்க்கறே?’’ கடுகடுவென அவன் குரல் கிட்டத்தில். நான் பதில் பேசவில்லை. அவன் அப்படியே எனக்கு முன்புற சீட்டில் அமர்ந்தான். என்னையும் பார்த்தான்.
தனக்கு முன்னேயே அந்த சீட்டில் அமர்ந்திருந்த பயணியையும் பார்த்தான். அந்தப் பயணியின் பாக்கெட்டிற்கு அவன் பார்வைத் தாவும் முன்னரே, தன் பாக்கெட்டை இறுகப் பிடித்திருந்தார் பயணி. இவன் எதுவும் செய்யவில்லை. அடுத்த பஸ் நிறுத்தம் ராமநாதபுரம் சிக்னல். வண்டி நின்றிருந்தது.
‘‘வந்திருக்கிறது எல்லாமே சாவுகிராக்கிங்க. ஒரு பிஸின‘ஸிற்கு லாயக்கில்லை!’’ என்று முணு, முணுத்தவாறே வேகமாய் பின் கதவுப் படிக்கட்டிற்குத் தாவினான். இறங்கினான்.
‘‘போலாம் ரைட்!’’ ஓங்கிக் கத்தின அவர் குரல் கேட்டது.
சிக்னலில் சிகப்பு விளக்கு அணைந்து பச்சை விளக்கு எரிந்தது. பஸ் அடுத்த ஸ்டாப்பில் நிற்கும் வரை யாரும் எதுவும் பேசவில்லை. திரும்ப வண்டி புறப்பட்ட போது ஆளாளுக்கு சல, சலக்க ஆரம்பித்தார்கள்.
‘‘பிக்பாக்கெட்டுகள் இப்படி பகிரங்கமா உலாவ ஆரம்பிச்சிட்டாங்க. யாருக்காவது அவனைத் தட்டிக் கேட்கிற தைரியம் உண்டா?’’
‘‘திருடர்களை அடிக்கக்கூடாது. அவங்களை தண்டிக்கிற உரிமை பொதுமக்களுக்கு இல்லை. அப்படி அவங்களைப் பிடிச்சா பாதுகாப்பா போலீஸ்ல ஒப்படைக்கணும். நீதிமன்றம்தான் தண்டிக்கணும்ன்னு இப்பத்தான் கோர்ட் சொல்லியிருக்கு. திருடர்களை பிடிச்சு உதைச்ச ரெண்டு பேருக்குத் தண்டனை வேற கொடுத்திருக்கே?’’
‘‘அதுதான் இவங்களுக்கெல்லாம் குளிர் விட்டுப் போச்சு. நான் திருடுவேன். பிக்பாக்கெட் அடிப்பேன். நீ அடி பார்க்கலாம். நீ அடிபார்க்கலாம்ன்னு நம்ம முன்னாடியே எல்லாம் பண்ணுதுக!’’
‘‘நாடு ரொம்பத்தான் கெட்டுப் போச்சு. இனிமே படிக்கிறது வேலைக்குப் போறதெல்லாம் வேஸ்ட், பேசாம சம்பாதிக்கிறதை எல்லாம் இப்படிப்பட்ட பிக்பாக்கெட்டுக கையில கொடுத்தர வேண்டியதுதான்...!’’
‘‘இந்தப் போலீஸ் என்னதான் செய்யுதோ?’’
‘‘ம்.. அவங்க எல்லாம் இந்த பிக்பாக்கெட்டுககிட்ட மாமூல் வாங்கீட்டு இருந்தா இப்படித்தான் நடக்கும்...!’’
‘‘பொதுமக்களுக்கு கொஞ்சம் கூட பாதுகாப்பே இல்லை...!’’
‘‘நம்மதான் உஷாரா இருந்துக்கணும்!’’
‘‘உங்க கூட அவன் பேசினானே. அப்பவே நான் உஷராயிட்டேன். இவன் பிக்பாக்கெட்தான்னு!’’ ஆளாளுக்கு மிஸ்டர் பொதுஜனங்கள் உதிர்த்த வார்த்தைகள்.
யாரோ ஒருவர் கேட்டார். ‘‘ஏங்க கண்டக்டர். நீங்களாவது இதை சரி செய்ய வேண்டாமா? போலீஸ் ஸ்டேஷனுக்கு வண்டியை விட்டுப் பிடிச்சுக் கொடுக்க வேண்டாமா?’’
கண்டக்டர் கடுப்பானார். ‘‘என் ரூட்ல போகாம போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனா என் மேலதிகாரிக்கு யார் பதில் சொல்றது? அப்புறம் என் கலெக்ஷன் பேக்குக்கு யார் உத்திரவாதம் தர்றது?’’
இப்போதும் யாரும் பேசவில்லை. வண்டி வேகமெடுத்து இரைச்சலில் சென்று கொண்டிருந்தது.
#578
Current Rank
60,350
Points
Reader Points 350
Editor Points : 60,000
7 readers have supported this story
Ratings & Reviews 5 (7 Ratings)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
John Robert
அருமை, நல்ல முயற்சி - தொடருங்கள்
kavithaishanthi
நம் சமூகத்தில் யாரும் யாரை பற்றிய விமர்சனத்தையும் முகத்துக்கு நேராக சொல்லுவதில்லை.. முதுகுக்கு பின்னால்தான் சொல்வார்கள்.... இந்த கதையிலும் அப்படித்தான் திருடன் போன பிறகு நம் பேச்சும் வீரமும் எதற்கு உதவும்.. ஒற்றை குரலில் எல்லோரும் ஒன்றாக நின்று இருந்தால்.... இந்த கேள்வி எனக்கு எல்லா இடங்களிலும் இருக்கிறது.... அநீதிக்கு எதிராக அனைவரும் கரம் கோர்த்தால் தான் சமூக மாற்றம் நிகழும்.... அருமை கதை...
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points