கூழாங்கற்களின் கூட்டுக்காரர்கள்

ramarajini
கற்பனை
4.9 out of 5 (15 Ratings)
Share this story

அந்த ஒற்றைப் புத்தர்பூ கொஞ்சம் அவசரமாகவே உதிர்ந்து கீழே விழுந்தது. தரையில் இருக்கும் கூூழாங்கற்களிடம் தன் பாரத்தை இறக்கி வைக்கும் விதமாக ஏதோ சொல்ல விரும்பியதாகத் தோன்றியது. என்ன அவசரமோ. நான் பார்க்கும் பல சமயங்களில் அப்பூக்கள் தென்றல் வீசும்போது அதன் கூடவே மெதுவாக பேசியபடி... உதிர்வது தெரியாமல் இறங்கி வந்து தரையில் அமரும். பலத்த காற்றிலும், மழையிலும் அவைஉதிர்வது எனக்கு வேறு வகையான தோற்றம் தரும். இதமான வெண்மையில், மஞ்சள் வண்ணம் அடிக்கப்பெற்று புத்தர் சிலையின் அருகில் பூத்துப்பொலிய.. புத்தர் பூ என்றே அழைக்கிறேன் அவற்றை. கூழாங்கற்கள் மேல் வந்து அமர்ந்திருப்பவற்றை அன்புடன் அள்ளி கைகளில் அவ்வப்போது நிறைத்து வைத்துக்கொள்வேன். நான் உணரும் மகிழ்வினைக்கண்டு அவை முறுவலிப்பதுதான் அதிக அழகுகென்று உணர்வேன். அவற்றை அப்படியே அருகில் இருக்கும் குருவிக்குளத்தில் மிதக்க விடுவேன்.

இந்த அவசரப்பூவையும் குருவிக்குளத்தில் விடப்போன போதுதான் அதிர்ந்து நின்றேன். அது அழுக்குகள் படிந்து சரியாக கவனிக்கப்படாமல் அருவருப்பான நிலையில் இருந்ததால் அதில் போட மனம் வரவில்லை. குருவிக்குளம் என்பது நாம் நினைக்கும் அளவிற்கு பெரிதான குளம் ஒன்றுமில்லை. பழைய காலத்து கல்தொட்டி... மனதைக் கவரும் நீள்வட்டத்தில் சிறியதாக அழகாக செதுக்கப்பட்ட கலை வேலைப்பாட்டுடன் கூடிய சிறு தொட்டி. பாட்டி வீட்டில் பழைய சாமான்களுடன் இருந்ததை ஆசையுடன் எடுத்து வந்தேன். வீட்டிற்கு முன் இருக்கும் சதுரமான வெற்றிடம் தான் என் தோட்டம். புராதானமும் கலைநயமும் கலந்த தோட்டம் அமைக்க ஆசைப்பட்டேன். கற்களால் ஆன பழைய பொருட்களை கண்டால் அலாதிபிரியம் எனக்கு. சிலைகள், தூண்களைக்கண்டால் அப்படியேலயித்துப் போய் விடுவேன். எனக்கு கிடைத்த கொஞ்சம் கல் ஜாடிகள், கல் குதிரைகள், மயில்கள் எல்லாவற்றையும் சேகரித்து அமைத்த தோட்டத்தில் கூழாங்கற்கள் பதித்த சிறுபகுதியும்உண்டு. அதாவது உலர்தோட்டம் என்று கூட இதைச் சொல்லலாம். தண்ணீர் இல்லாத சமயங்களில் செடிகள் கஷ்டப்படுவதை விரும்புவதில்லை நான். நல்ல வெயிலைத் தாங்கும் சிலசெடிகளை மட்டுமே தேர்வு செய்து வாங்கி வைத்தேன். கவனிக்க முடியாத காலங்களில் ஆள் தேட வேண்டியதில்லையே...

"கவனிக்க ஆள்" என்றவுடனேயே கண்கள் கலங்கத் தொடங்கிவிட்டன. ஆள் இருந்தும் கவனிக்கப்படாமல் போன என் அன்பு புத்தரை எண்ணி தோட்டத்து மேசையில் வைப்பதற்கான கல்லால் ஆன கலைப்பொருளை தேடிக்கொண்டிருந்த போது தான் எனக்கே எனக்கென்று கிடைத்தது அந்த அழகான மார்பளவில் அமைந்திருந்த புத்தர் சிலை...

அந்தக் கண்கள்... கீழே பார்க்கும் கருணையுடன் நம்மையும் பார்த்து சிரிப்பதான நிலையில் இருக்கும். புத்தனின் மென்மையை புவி அறியும். அதற்கு வையமே வசப்பட்டும் விடுவது இதனால்தானோ? எனக்கும் இந்த புத்தருக்கும் தெரிந்த ரகசியமொன்றும் இருந்தது. ரொம்ப நாள் கழித்து, வீட்டுவேலைக்கு வரும் முத்துச்செல்விக்கும் வாட்ச்மேன் பரமய்யாவுக்கும் மட்டும் சொன்னேன் அதை...

வடநாட்டிலிருந்து சிலைகள் வரவழைத்து விற்பனை செய்யும் சான்யோ வீட்டிற்கு முதன்முறையாக சென்றபோது பல சிலைகளின் ஊடே இருந்த புத்தர் மட்டும் என்னை அதிகம் கவர்ந்துவிட... "ஆஹா! அழகு கற்சிலை" என கையில் எடுத்தேன். சான்யோ சொன்னதைக் கேட்டு ஆச்சர்யமடைந்தேன். அது கல்லால்செதுக்கப்பட்ட புத்தர் இல்லையாம். டெரிக்கோட்டா மண் சிற்பத்திற்கு மேலே கல் பூச்சு தரப்பட்டு கற்சிலையின் தோற்றம் தரும் புத்தராம்.எதுவாக இருந்தால் என்ன.?எனக்கு பிடித்த புத்தர். கண்களில் பேசும் புன்னகை. வார்த்தைகளை மிக மெதுவாக வெளிப்படுத்தும் இதழோர இளநகை...

என்னை எனக்குள் போக வைத்த புத்தர்…

"யாரோ இல்லை எவரும்.."

என்று சொல்லித் தந்துகொண்டிருந்த புத்தர்.

வாங்காமல் விடுவேனா? புத்தர் பூக்கள் பூப்பது தோட்டத்து மூலையில் உள்ள குறுமரத்தில். அந்த மரத்தடியில் இருக்கும் கல்மேசையில் வைக்கப்பட்ட புத்தர் அங்கே வருபவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துவிட, ஒரே மகிழ்ச்சி எனக்குள். வாட்ச்மேன் பரமய்யாவிற்கு வாய்ப்பாடு வகுப்பு போன்று தோட்டப்பராமரிப்பு வகுப்பு எடுத்து எடுத்து பழக்கமாகிவிட்டது எனக்கு. "புத்தர் ஐயாவை நான் கவனிச்சுக்குவேன் தாயீ... கவலையே படாதீங்க…" என்னைப் பார்த்ததுமே கூற ஆரம்பித்து விடுவார் பரமய்யா. சுகாதாரம் பற்றியும், தோட்டத்தின் தூய்மை பற்றியும், புத்தரை கவனிப்பது பற்றியும் நான் கூற கேட்டுக்கேட்டு அவர் சலிப்படைந்திருக்கவேண்டும்.

இரவில் மட்டும் எங்கள் வீட்டின் காவல் பணியை ஏற்றுக்கொண்ட அவர் காட்டிய உற்சாகம்தான் தோட்டப்பணியிலும் அவரை இணைக்க வைத்தது. அவரை, அவரின் தோட்டப்பராமரிப்பை அதிகம் நம்பினேன். அவருக்கு புத்தர் மேல் கொண்ட ஈடுபாடுதான் புத்தரின் முன் கல்தொட்டியைவைத்து மலர்களையும் போட்டுப் பார்க்கும் எண்ணத்தை எனக்குள்வளர்த்தது. அன்று வீட்டுக்கு வேலைக்கு வந்த முத்துச்செல்வியை ஏதோ வேலைக்காக கூப்பிட முன் வாசலுக்கு வந்தேன். என்னைப் பார்த்ததும் அங்கேயே நிற்கச் சொல்லி சைகை காட்டினாள் அவள். அருகில் வந்து கிசுகிசுத்தாள்..

"அம்மா, சத்தம் போடாதீங்க... புத்தர் அய்யா குளம் குருவிக் குளமாயிடுச்சு. வந்து பாருங்க... ஏழு குருவிங்க சேர்ந்து வந்துச்சுங்க...குளத்தை சுத்தி சுத்தி வந்துட்டு இப்படி அப்படி பார்த்துட்டு குளத்துக்குள்ள ஒண்ணு ரெண்டா போய் குளிச்சு முக்குளிக்குதுங்க, விளையாடுதுங்க, வெளியே வருதுங்க... "அங்கன.. பையப்பாருங்க.. அவுக வெளியே வர்றாக. சிக்கெடுக்கிறாக.." படு ஆச்சரியம் எனக்கு. எட்டிப்பார்த்தேன் ஆமாம்! அந்தக்குருவிகள் புத்தரின் முன்னுள்ள கல் தொட்டியின் விளிம்பில் அமர்ந்து இறகுகளை விரித்து உலர்த்திக் கொண்டிருந்தன. அன்றிலிருந்து அந்த கல்தொட்டி குருவிக் குளமானது. அதற்கு சற்று தூரத்தில் தட்டொன்றில் தானியங்களைப் பரப்பி வைக்க... குருவிகளுடன், மைனா, மரங்கொத்தி எல்லாமே வர ஆரம்பித்தன. அணிற்பிள்ளைகளுடன் அவை சண்டையிடுவதும் ஒரு அழகுதான். பச்சைக்கிளி களையும் பார்த்ததாக முத்துச்செல்வி சொன்னபோது நிறைந்து போனது மனது. வீட்டிற்கு வந்த நெருங்கிய தோழிகள் கேட்டுக்கொண்டார்கள் "என்ன செய்வியோ தெரியாதும்மா... இதே மாதிரி புத்தர் சிலையை வரவழைச்சுக் கொடுத்துரு... இல்லைன்னா இவரைக் கொண்டு போயிடுவோம். "நானும் சிரித்து விடுவேன். ஒவ்வொரு முறை வெளியே வரும்போதும், போகும்போதும் புத்தர் சிலையின் பாதுகாப்பு, தோட்ட சுத்தம்,இவற்றை கண்காணிக்க மட்டுமே கண்கள் சுழலும். யாராவது தோட்டப் பக்கம் சென்றால் சலிக்காமல் உடன் சென்று விடும் என் கால்களும்.

அன்று என் கணவரின் தூரத்துச் சொந்தக்காரர்கள் கல்யாண அழைப்பிதழுடன் வீட்டின் உள்ளே வந்து விட்டு தோட்டப்பக்கம் வந்ததும் புத்தரின் அருகில் நின்றுகொண்டார்கள். விரைந்து அங்கு போனபோது திடுக்கிட்டேன். பழைய இலைகள் தழைகள் எல்லாம் தோட்டத்துத்தரையில் அகற்றப்படாமல், புற்கள் முளைத்து தோட்டம் பராமரிப்பில்லாமல் காணப்பட்டது. சின்னத் தோட்டம் என்றாலும் சுத்தமாக, கச்சிதமாக அல்லவா இருக்கும் எப்போதும். மனது ஒரே பாரமாகி நிலைகொள்ளாமல் தவித்தது. ஏன் பரமய்யா இதை கவனிக்கவில்லை..?

அன்றிரவு மிகத் தாமதமாக வந்ததால் அவரிடம் பேச முடியவில்லை. மறுநாள் காலை அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தவரிடம் கேட்டபோது "கொஞ்சம் தூக்க கலக்கம் தாயி... போயிட்டேன். விடுங்க நான் பார்த்துக்கிறேன்." அவர் தந்த பதில் திருப்தியாக இல்லை.. அதன்பின் புத்தரை என்னிடம் சேர்த்த சான்யோ, புதுக்கடை ஒன்றை ஆரம்பிக்கப் போகிறேன் என்று என்னை அழைக்க வந்தாள்.

"ஆஹா.. அழகான தோட்டத்தில அம்சமா நம்ம புத்தரை வச்சிருக்கீங்க" என்று பாராட்டியவள், புத்தரின் மிக அருகில் சென்றாள். "புத்தர் மேலே அழுத்தமா தண்ணி பட்டிருக்கு.. இந்தச்சிலை மேல ரொம்ப அழுத்தமா தண்ணி ஊத்தக்கூடாதே. நீங்க கவனிக்கலையா?" கேட்டதும் மயக்கமே வந்துவிட்டது எனக்கு. புத்தரின் தலையில், பக்கவாட்டில், தோள்களில் கல்வர்ணம் பெயர்ந்து பெயர்ந்து அங்கங்கு சிகப்புத்தழும்புகள் தெரிந்தன. சமீபத்தில் வெளியூர் போயிருந்ததை நினைவுபடுத்தி மிக வருத்தப்பட ஆரம்பித்தேன்.

"நாலஞ்சு நாளைக்கு முன்னாடி புத்தரைய்யா மேல படிஞ்ச அழுக்கை பார்த்து சுத்தம் பண்ணிடலாம்னு தெனம் ரெண்டு வாளி தண்ணிய ஊத்திப்புட்டேன். இத கல்லு செலன்னு நெனச்சிட்டேன். நீங்க சொன்னது அயத்துடுச்சு.. இனிமேல ஊத்தல... நல்ல பெயிண்டரை கூட்டியாரேன். வர்ணம் பூசிடலாம்..." வேலியே பயிரை மேய்ந்தாகிவிட்டது. ஹும்... வர்ணம் பூச அனுப்பிவைக்கப்பட்ட என் புத்தர் இன்னும் வரவேயில்லை. மனதை திடப்படுத்த அதிக சிரமம் ஏற்க வேண்டியதிருந்தது. இன்றும் அதே நிகழ்ச்சி...

குருவிக்குளம்... குருவிகளுக்கே வந்து குளிக்கப்பிடிக்காத.. குப்பைக் குளம். இப்போது.. இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது. எத்தனை நேரம் பலத்த யோசனைகளுடனும் வருத்தத்துடனும் புத்தர் இல்லாத வெற்றிடத்தையும் குருவிக்குளத்தையும் பார்த்தபடி நின்றிருந்தேனோ. கால்கள்வலிக்க ஆரம்பித்த பின்னர்தான் வீட்டிற்குள் திரும்பிப்போக நினைத்தேன்.

"மன்னிச்சுக்கோங்க தாயி...கொஞ்ச நாளா நான் நானாக இல்ல.நீங்க சொல்றதுக்கு "உம் உம்" மங்கறேன்.. எதுவுமே மனசுல தங்கல. ஒண்ணுகெடக்க ஒண்ணு செய்யிறேன்.. மறந்தும் போயிடுறேன்.." உங்களுக்கு தோட்டம் புடிக்கும். புத்தரய்யாவை புடிக்கும்... சுத்தமா இருக்காட்டா வருத்தம் வரும்னுதெரியும் தாயி. காலைல.. இங்கன இருந்து போறேனா. வீட்டுல போய் சோறாக்கணும்... மருமக இப்ப சுகமில்லாம படுத்துக்கிடக்கு. வேகமா பஞ்சாலைப் பக்கம் போயி என் வேலையை பார்க்கணும்... நான் லோடுமேனு.. பெரிய பெரிய பருத்தி மூட்டைகள லாரியிலேருந்து இறக்கி கை வண்டியில வச்சு தள்ளிட்டுப் போயி பாக்டெரியில எறக்கிடுவேன், சாப்பாட்டுக்கு சம்பாதிச்சிடுவேன். இப்ப என் பையனோட புள்ளங்க ஆணு ஒண்ணு பொண்ணு ஒண்ணு ரெண்டும் பெரிய படிப்புக்கு வந்துடுச்சாம்... இத்தன நாளா சமாளிச்சுட்டேன் செல்லுபோனுல படிக்கணுமாம், பெருசா பீஸுகட்டணுமாம் கொஞ்சம் நல்லதா ரெண்டு துணி உடுத்திக்கிடணுமாம்.. எல்லாம் கேட்டு தவியா தவிச்சுட்டேன்... அப்பன் இல்லாத புள்ளைங்க... யாரு கிட்ட தாயீ கேக்குங்க.. "

அவசரமாக உதிர்ந்த அந்த மலரை கைகளில் ஏந்திக் கொண்டேன். தாமே குருவிக் குளமாகிட கைகள் விரும்புவதை கண்டுகொண்டேன்.

திருமதி

ரஜினிபெத்துராஜா

Stories you will love

X
Please Wait ...