வெம்பல்

கற்பனை
5 out of 5 (3 Ratings)
Share this story

தூங்கி எழும் போதே மாதவனுடைய ஞாபகம் தான். அந்த சம்பவத்தை நினைத்தவுடன் மனதில் குழப்பமே நிலவியது. ஏன் அப்படி நடந்திருக்க வேண்டும். நடந்திருக்கவேகூடாது. அவற்றில் ஏதோ சஞ்சலம் இருந்து கொண்டேஇருந்தது. அந்த சம்பவம் அடிக்கடி என் நினைவில் இருந்துகொண்டே இருந்தது. ஏன் இந்த சம்பவம் மட்டும் என்னைவிட்டு அகலவேயில்லை என்று தெரியவில்லை.

நான் அப்பொழுது என் புத்தக அலமாரியை பார்த்தேன். புத்தக அலமாரியை பார்க்கும் போது அப்படியே உறையும்தன்மை ஏற்படும் அதை பார்த்துக் கொண்டே இருப்பேன். மனம் ஏதோ அமைதியாக ஒருமுகப்படுவதாக இருக்கும். எவ்வளவு நேரம் அப்படியே பார்த்துக் கொண்டே இருப்பேன்என்று தெரியாது அந்த நேரத்தில் நான் டீ கூட குடித்துக்கொண்டு இருக்கலாம். ஆனால் டீ குடிப்பதைப் பற்றியசெயல் அனிச்சையாக நடந்து கொண்டிருக்கும். புத்தகங்களை பார்த்துக் கொண்டே இருப்பேன். மனம்ஏதேசச்கையாக காடு நாவலில் நிலை கொண்டது. அதில்இருநூறாவது பக்கத்தில் எழுதி இருப்பவற்றை அவ்வப்போதுநண்பர்களிடம் பேசினேன். சில நேரம் வாசித்தும்காட்டுவேன். நான் தனியாக இருக்கும் நேரம் கூட அதைநினைத்து நினைத்து சிரித்து கொண்டே இருப்பேன்.குரிசு அருவியில் குளிக்கும் ஒரு பெண்ணைப்பார்த்துவிட்ட பித்து நிலை பற்றியும் பாதர் வயதானபெண்மனிக்கு பாவமன்னிப்பு கொடுப்பதும், அந்த குனிந்ததலை நிமிராத பாதர் இறக்கும் தருணமும் என்னையறியாமல்சிரிப்பை வரவழைத்துக் கொண்டே இருக்கும். யாரும் கூடஇல்லாத தனி அறையில் தன்னந்தனி ஆளாக சிரிக்கும் அந்தஅர்த்தமுள்ள சிரிப்பு ஆனந்தத்தை தரும். அந்த நேரம்அலைபேசி பாடியது. ஆர்வமுள்ள நண்பன் மில்ட்டன்அழைக்கிறான். நலம் விசாரிப்பு முடிந்ததும் சந்தோஷ்சைனாவிலிருந்து வருவதாகவும், அவன் என்னை சந்திக்கவிரும்புவதாகவும் நீங்கள் குன்னூர் வரமுடியுமா என்றுகேட்டான். சரி வெங்கடேஸ்வரா லாட்ஜில் ரூம் நம்பர் இருநூற்றி ஐந்தை புக்செய்து விடுங்கள் என்றேன். ரூம் நம்பர் இருநூற்றி ஐந்தில்பின்புற கதவை திறந்தால் மெயின் ரோடு அதை தாண்டியதும்ரயில்வே ட்ராக். காலையிலும் மாலையிலும் ரயில் வந்துசெல்லும் போது அறையின் உள்ளிருந்து திறந்த கதவுவழியாக ஒவ்வொரு பெட்டியாக மெல்ல நகரும்போது மனதுஅதை ரசிக்கும் ஒருமுகப்படும்.

தேனியிலிருந்து குன்னூர் செல்வதாக இருந்தால்முதலில் மேட்டுப்பாளையம். மேட்டுப்பாளையத்திலிருந்துகுன்னூர் செல்ல வேண்டும். ஆனால் என் பயணத்திற்குதேவையான உடைகள் புத்தகங்கள் ஆயத்தமான பின்முதலில் ஒட்டன்சத்திரம் செல்ல வேண்டும் என்றும், அங்கிருந்து காரிலோ, பைக்கிலோ லிப்ட் கேட்டுதாராபுரத்திற்கு செல்ல வேண்டும் எனமுடிவெடுத்திருந்தேன். அப்போது தான் நான் அடிக்கடிபுல்லட்டில் அந்த பக்கம் செல்லும் பொழுதெல்லாம் கள்ளிமந்தயம் தாண்டி சில தூரம் சென்றதும் சாலையின் இடதுபக்கம் ஒரு பெரிய ஆலமரம் இருக்கும். அம்மரத்தைஎன்னால் பார்க்கக்கூடிய தொலைவில் இருந்தே அதுஎன்னை கவரும். அதை பார்த்துக் கொண்டேசெல்லும்போது அந்த மரம் என்னைநோக்கி வந்துகொண்டிருப்பது போன்று தோன்றும். அம்மரத்தருகேசென்றதும் வண்டியை நிறுத்தி கவனிப்பேன். மைனாக்களின்சத்தம் மற்ற எல்லா சத்தத்தையும் காணாமல் போகச்செய்யும். மேலே தொங்கிக் கொண்டிருக்கிற பழவௌவால்கள் நம்மை நோக்கி இருப்பது போலவேதோன்றும். மரத்திற்கு கொஞ்சம் தள்ளி கூழ்கடை. பசியின்அளவைப் பொறுத்து ஒரு சொம்போ இரண்டு சொம்போஉள்ளிழுத்துக் கொள்வேன். பின் ஒரு சிகரெட். மீண்டும்மரத்தைப் பார்ப்பேன். எப்போது போகத் தோன்றுகிறதோஅப்போது வண்டியை கிளப்புவேன். அதே அந்த அனுபவத்தைபெறவே இந்த ப்ளான்.

ஒட்டன்சத்திரம் வந்திறங்கினேன். அங்கு பைபாஸில்இருக்கும் ராமசாமி சித்தர் ஜீவசமாதிக்கு நடந்துசென்றேன். அவரை வணங்கிவிட்டு மதிய உணவை முடித்துக்கொண்டேன். ரோட்டில் ஒரு அரை மணி நேரம் பொறுமைகாத்து கை காட்டியபின் ஒரு டுவீலர் லிப்ட் தர முன் வந்தது.இந்த ரோட்டில் எவ்வளவு தூரம் நீங்கள் செல்வீர்களோஅந்த இடத்தில் என்னை இறக்கி விடுங்கள் என்றேன். அவர்சிரித்துக்கொண்டே நான் திருப்பூர் வரை செல்கிறேன்என்றார். ரொம்ப சந்தோஷம் நான் தாராபுரத்தில் இறங்கிக்கொள்கிறேன் என்றேன். பயணம் தொடர்ந்தது.அம்பிளிக்கை நெருங்கும் பொழுதெல்லாம் என்னிடம்சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டார். திருப்பூரில் கோன்வைண்டிங் செய்து வருவதாகவும் ஒரு வேலையாக சொந்தஊர் சென்று வருகிறேன் என்று சொன்னார். நான் இந்தரோட்டில் டுவீலர் செல்வது பிடிக்கும் என்று தெரிவித்தேன். என்ன வேலை செய்கிறீர்கள் என்று ஏதேதோ கேட்டுக்கொண்டே வந்தார். நான் என்ன செல்வது எப்போதோசெய்த வேலையை இப்போது செய்து கொண்டிருக்கிறேன் என மழுப்பினேன். கள்ளிமந்தயம் வந்ததை கவனித்தேன். என்னுடைய ஏரியா வரப்போகிறது என்று ஆர்வமடைந்தேன். அங்கு சாலைகள் தன் பருமனை பெருக்கியிருந்தன. நான்இதுவரை வராத ஏரியா போலவும் இது ஏதோ புது வழிபோலவும் தெரிய சிறிய பதற்றத்தோடு குழப்பமடைந்தேன். அவர் ஏதோ கேட்டார் நான் பதில் சொல்லவில்லை. காற்றின் வேகத்தில் ஏதும் கேட்கவில்லை போல என்றுநினைத்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். நான் என்னசெய்வது எனக்கு தெரியவில்லை. தூரத்தில் ஒரு மலைதெரிந்தது. அதை அடையாளமாக வைத்து பார்த்தால் நாம்இப்போது அந்த இடத்தை கடந்து விட்டோம் என்றுதோன்றியது. அவர் ஏதும் பேசினாரா என்று தெரியவில்லை. நான்ரோட்டையும் பார்க்கவில்லை அந்த மரம் இப்போதுஎன்னவாகியிருக்கும் கூழ் கடைக்காரர் என்ன ஆனார்.

தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்து இறங்கி கொண்டேன். மில்டனிடமிருந்து அழைப்புவந்தது. என்ன தல இன்னும் ஆளக்காணோம்.இந்நேரம்வந்திருக்கணுமே என்றான். வழியில் கொஞ்சம் தாமதமாகிவிட்டது என்று சொல்லி ஆறு மணிக்குள் வந்து விடுகிறேன்என்றேன்.மேட்டுப்பாளையத்திலிருந்து எப்போதும் மலை வழியாகலிப்ட் கேட்டு செல்வதுதான் வழக்கம். ஆனால் இம்முறைஅப்படி செல்ல மனம் வரவில்லை. மேட்டுப்பாளையம் to குன்னூர் மலைப் பேருந்திலேயே பயணம் செய்தேன். காட்டேரி நெருங்கும் போதே மலை வாசஸ்தல பரவசம்என்னை தொற்றிக் கொண்டது. என்னுள் இருந்த எல்லாநிகழ்வுகளும் அழிந்தது போலவும் ஏதோ புதிய உற்சாகமானமாணவனை போலவும் ஆனேன்.குளிர்ந்த மாலைப் பொழுதில் அறையின் கதவைதிறந்தேன். ஒயிட் டீ சர்ட்டும் புளூ ஜீன்ஸும் கருத்த மனிதர்கை குலுக்கி வரவேற்றார். அருகே மில்ட்டன் இரண்டு நல்லநட்புகளை ஒன்றிணைக்கும் பரவசத்தோடு நின்றிருந்தார்.சந்தோஷ் ரைஸ் ஒயினை ஓப்பன் செய்து குடிப்பதற்குதயார் படுத்தினார். அவர் சைனாவில் வாத்தியார் வேலைசெய்வதாகவும், அந்த நாட்டு உணவு முறை பற்றியும் வேலைமுறை பற்றியும் எங்களுடைய அறிமுக படலம்தொடங்கியது. பேச்சு நீண்டு சென்று ஓநாய் குலச்சின்னம்நாவலுக்கு வந்தது. நான் ஜென்சென்னின் பக்கமிருந்துபேசிக் கொண்டிருந்தேன். அவர் பில்ஜியின் பக்கம் பேசிக்கொண்டிருந்தார். ஆக அந்த புள்ளியில் நாங்கள்ஒன்றிணைந்தோம். பேச்சு சுவாரசியத்தில் எப்போதுதூங்கினோம் என்று தெரியவில்லை. பத்து மணிக்கு டைகர் ஹில்ஸ் போவதெனமுடிவெத்தோம். அங்கு இருந்து ரன்னிமேடை பார்க்கமுடியும். யானைகள் மேய்ந்தால் அவற்றை அங்கிருந்துநன்றாக பார்க்க முடியும். பிரைவேட் எஸ்டேட்கள் சூழ்ந்தடைகர் ஹில்லுக்கு சாதிக் ஆட்டோவில் சென்றோம். ஒருமஞ்சள் இளம் வெயில் படர்ந்திருந்தது. மலை உச்சிஅங்கிருந்து ரன்னிமேடை கீழ் நோக்கி பார்க்கும் போதுதேயிலை எஸ்டேட் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைஅலை அலையாக தெரிந்தது. யானை எங்காவதுஇருக்கிறதா என்று ஆவலுடன் தேடிப் பார்த்தோம். இல்லை. அப்போது தேயிலைகளுனூடே புதுமணதம்பதிகள் வந்துகொண்டிருந்தது தெரிந்தது. அவன் அவள் தோளின் மீது கைபோட்டபடி இந்த மலையே எனக்கு சொந்தம் என்பது போல்பேசிக் கொண்டே வந்தான். நாங்கள் இருப்பதைப் பார்த்துவிட தோளின் மீது கையை எடுத்துவிட்டு ஏதும் பேசிக்கொள்ளாமல் எங்களை கடந்து சென்றனர். அவர்களைபார்த்ததும் மீண்டும் எனக்கு மாதவனுடைய ஞாபகம் வந்தது.

நீண்ட நேரம் பேசாமல் இருந்த என் மௌனத்தைகேள்விகளாக்கினர். நான் மாதவனை பற்றி சொல்லானேன்.பெங்களூருவிலிருந்து சென்னை வந்திருந்தேன். கையில் பணப் பற்றாக்குறை. கோயம்பேடு மார்கெட்டில்தக்காளி கமிஷன் மண்டி வைத்திருக்கும் என்னுடன் படித்தமணியினுடைய ஞாபகம் வந்தது. அவனை சந்தித்துதற்சமயத்திற்கு மட்டும் ஏதாவது வேலை வேண்டும் எனதெரிவித்தேன். அவனுக்கு அது தொல்லையாகதான்இருக்கும். மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவனாகஇருந்தாலும் இவன் ஏதும் நமக்கு தொல்லையாகஅமைவானோ என்று யோசிக்க கூடியவன். அவனை சந்தித்தநேரம் காலை ஆறு மணி.வா போகலாம் என்றழைத்தான் மணி. இருவரும்அவனுடைய கடை இருந்த ப்ளாக்கை தாண்டி வேறு ப்ளாக்வழியாக சென்றோம். வரிசையாக எல்லா கடை வாசலிலும்தக்காளி பெட்டிகள். இவ்வளவு தக்காளிகளை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. தக்காளிகளின்அணிவகுப்புகளுக்கிடையே நடந்து செல்வதுபோல்இருந்தது. அப்போது தான் அந்த குரல் என்னை ஈர்த்தது. ஒரு இருபதுவயது மதிக்கத்தக்க இளைஞன் தக்காளி பெட்டிகளுக்குஇடையே வியாபார கூவல் விடுத்துக் கொண்டிருந்தான்.

அவன் குரல் கொடுக்கும் போது மட்டும் ஆங்காங்கேஇருந்த மற்ற வியாபாரிகள் அவனையே பார்த்தனர். இவன்நின்றிருந்த மேடைக்கு எதிர் மேடையில் இருந்தவியாபாரியிடம் ஒரு பெண் பேரம் பேசிக் கொண்டிருந்தாள். அப்போது இவன் பெருங்குரலெடுத்தான். வா வா இங்க பாருதங்கத்த இங்க வந்து பாரு என் தங்கத்த எல்லாத்தையும்தோப்புளி விலை கம்மி. அது ஏதோ வியாபார சமிக்ஞைமட்டும் என்று புரிந்தது. அந்த பெரிய சரடு போன்ற செயின்போட்டிருந்த பெண்மணி மட்டுமல்லாது இன்னும் இரண்டுவியாபாரிகளும் அவனிடம் வந்து சேர்ந்தனர். ஏதேதோ பேசிஅவர்களிடம் இருபது முப்பது பெட்டிகளை விற்றுவிட்டான். வா வா இன்னைக்கி நம்மகிட்ட ஸ்பெஷல் டிஸ்கவுண்ட்என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தான்.

தக்காளி கிரவுண்டிற்கு அழைத்து சென்றான். அப்போதுதான் முதன் முதலாக பார்த்தேன். கிரவுண்டின் இரு புறமும்வரிசையாக லாரிகள். பெட்டியில் தக்காளிகளுடன். ஒவ்வொரு லாரியும் எனக்கு சிறு சிறு தக்காளி மலைகளாகதோன்றின. பெரு வியாபாரிகளின் குரல்கள் அவற்றின்மலைகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. குட்டிஆட்டோக்களும் ட்ரை சைக்கிள்களும் தக்காளியைகடத்திய வண்ணமே இருந்தன. ஜனங்கள் ஏதோ பார்க்காதபொருளை பார்த்தபடி அள்ளிக் கொண்டிருந்தன. கிரவுண்டின் வெளியே தக்காளி ஏற்றி வந்த லாரிகள் வரிசைகட்டி நின்றுகொண்டிருந்தன. இந்த கூட்டத்திற்கிடையேமணி ஏ மாப்ள இங்க வா என்று ஏழாவதாக நின்றிருந்தலாரியின் அருகில் இருந்து என்னை அழைத்தான்.

அவ்வளவு தூரத்தில் என்னை அழைத்தான் என்றால்பெரிய திராணி வேண்டும். அருகே சென்றதும் இவங்ககடைல இருந்த மூர்த்தி ஒரு வாரம் ஊருக்குபோயிருக்கானாம். ஒரு வாரமோ பத்து நாளோ அவர் வர்றவரையும் இங்கே இருந்து வேலைய பாரு என்றான். தலையாட்டினேன். சரி வேல முடிஞ்ச உடனே கடைக்கு வாஎன்று கிளம்பினான்.

அங்கு லாரியின் மேலே இரண்டு ஆட்கள்நின்றிருந்தார்கள். கிழே ஒரு நாற்பது பெட்டிஅடுக்கப்பட்டிருந்தது. அதில் மேலே இருந்த பேப்பர் பேடைஎன்னிடம் கொடுத்தார் அங்கிருந்தவர். நம்மகிட்டசரக்கெடுத்துட்டு போறவங்க பேரெழுதி எத்தனை பெட்டினுஇதுல குறிக்கணும் என்றார். ஆர்வமாக தலையாட்டினேன்.

அவரிடம் விலை பேசி முடித்ததும் வாங்கி செல்பவரின்பெயரைக் கேட்டு குறித்து கொள்ள ஆரம்பித்தேன். ஒவ்வொருவரிடமும் இப்படியாக நான் குறித்துக்கொண்டிருக்க லாரியின் மேல் நின்றிருந்தவர்களிடம்ஆர்வக் கோளாறு என்று பெயரெடுத்திருந்தேன். எனக்குவேலை கொடுத்தவர் பெயர் பால்ராஜ் என தெரிந்துகொண்டேன். ஓரிரு மணி நேரம் கழித்து நான் எழுதியகுறிப்பை வாங்கி பார்த்தார். ஏம்ப்பா விலை என்னாண்ணேஎழுதலியே. நான் ஒன்றும் பேசவில்லை. சரி விடு நான்பாத்துக்கறேன் நீ பேர மட்டும் எழுது என்றார். அப்போதுதான் வியாபாரம் செய்யும் விலை பற்றிய எண்களை அவர்கள்பேசுவதில்லை என கவனித்தேன். அதற்கு பதிலாக அவர்கள்சரணம், தங்கா சரணம், தோப்புளி என சமிக்ஞைவார்த்தைகளை பயன்படுத்துவதை தெரிந்துகொண்டேன். ஒரு லாரி தக்காளி விற்று முடித்ததும் உடனே மறு லாரிவந்தது. அதுவும் அன்று விற்று தீர்ந்தது. பின் அங்கிருந்தலோடு மேன்களோடு தக்காளி பெட்டி கலெக் ஷனுக்குஎன்னை அனுப்பினார். மதியம் பன்னிரண்டு மணிக்கெல்லாம்வேலை முடிந்தது. அன்றைய நாள் சம்பளமும் கிடைத்தது. மணி கடை இருக்கும் ப்ளாக்கில் பொழுதை போக்கினேன். அப்போது தான் அந்த சிறுவன் வந்தான் மணி அண்ணேன்இருக்காரா என்றான். இல்ல கலெக் ஷனுக்குபோயிருக்காரு என்றேன். என்னருகே வந்து நீங்க யாருகாலைல அவர் கூட பார்த்தேன் என்றான். நான்மணியினுடைய கிளாஸ்மேட் என்பதை தெரிவித்தேன். அவரு எப்புடி இருக்காரு, நீங்க என்ன இப்டி இருக்கீங்கஎன்றான்.

அப்போ நீங்களும் நம்ம ஏரியா பக்கமா! பேசிக்கொண்டே பாக்கெட்டிலிருந்த மாவாவை எடுத்துஅதக்கிக் கொண்டான். சுற்றி இருந்த வேறு நபர்களிடம்டாம்பீகமாக பேசிக் கொண்டிருந்தான்.

அதிகாலை இரண்டு மணிக்கே மார்க்கெட் முழித்துவிடும். எங்களைப் போன்றோர் அந்த நேரத்தில் கிரவுண்டில்இருக்க வேண்டும். அந்த நேரத்தில் நடக்கும் மொத்தவியாபாரம் தான் மற்ற சின்ன மார்க்கெட்டுகளுக்குசெல்லும். வியாபாரம் ஆரம்பித்தது. எனக்கு அந்த சமிக்ஞைவார்த்தைகள் ஒன்றும் பிடிபடவில்லை. எப்படியாவது கற்றிடவேண்டும் என்ற ஆர்வம் துள்ளியது. ஒன்றும் புரியவில்லை. அப்போது ஒரு யோசனை வந்தது. நான் பால்ராஜிடம் டீசாப்பிட்டு வருகிறேன் என்றேன். அவர் ஒன்றும் பேசாமல்தக்காளியை கடித்துக் கொண்டிருந்தார். தயங்கியபடி நின்றுகொண்டிருந்தேன். லாரியின் மேலிருந்த லோடு மேன்கள்என்னை போடும்படி சைகை செய்தார்கள். நான் நேராகஅந்த வியாபார சிறுவன் மாதவனிடம் போனேன். எனதுசிக்கலை தெரியப்படுத்தினேன். அவன் ஒவ்வொன்றாகசொல்ல சொல்ல சமிக்ஞை வார்த்தைகளையும் அதன்உண்மை பெயர் எண் விலையையும் ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டேன். அவன் எனக்கு சமிக்ஞை வார்த்தைகளைகற்றுக் கடுத்த குருவானான். அன்று வியாபாரம் முடிந்தபின்பால்ராஜிடம் குறிப்பை கொடுத்தேன் அதில் விலையும்சேர்ந்து எழுதியிருப்பதை பார்த்து ஆச்சர்யமாக ஒரு பார்வைமட்டும் பார்த்தார்.

மாதவனும் நானும் நண்பர்களானோம். எங்களது நட்புஅடிக்கடி ஒயின்ஷாப்புக்கு சென்றது. அங்கு இருவரும்ஆளுக்கு ஒரு அரை பியர் மட்டும் அருந்துவோம். சினிமாவுக்கு செல்வோம். பீச்சுக்கு செல்வோம். இப்படிநாங்கள் இருவரும் பேசிய படியே இருந்தோம். நாங்கள்பேச தினமும் புது விஷயங்கள் இருந்தன. நான் ஊர்சுற்றுவதையே பிழைப்பாக வைத்திருப்பதை பெருமையாகசொல்வான். ஊர் சுற்றிய அனுபவங்களின் சுவாரசியங்களைரசிப்பான். ஆனால் அவன் இவ்வளவு ஜன நெருக்கடியில்இருந்தாலும் தனி ஆளாகத்தான் இருந்தான். பத்தொன்பதுவயதிலேயே திருமணம் செய்து விட்டதையும் இப்போதுஊரோடு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இங்கு வந்துமூன்று வருடங்களாகியது பற்றியும் வியாபாரம்தன்னிச்சையாக சிறு வயதிலேயே ஆர்வக்கோளாறில்தொடங்கியது பற்றியும், அவனுக்கு வியாபாரத்தில்சுற்றியுள்ள எதிரிகளை பற்றியும் பேசினான். அப்போது தான்அவனுடைய வாஞ்சை பிடிபட்டது. அவன் எனக்கு அண்ணன்என்ற உரிமை தந்திருந்தான். எனக்கும் அவன் பிடித்துப்போனான். அவனில்லாத நிமிடங்கள் குறைவு. இப்படியேசந்தோஷமாக வியாபாரம் முடிந்த தக்காளி கிரவுண்டில்பெருச்சாளிகள் மட்டுமே சுற்றும் நேரத்தில் எங்களதுபொழுதுகளை அர்த்தமாக்கினோம். நான் அவனை விட்டுவிலகமுடியாது என்றே தோன்றியது. ப்ளாக்குளின்ப்ளாட்பாரத்தில் தூங்கி எழும்போதே அவன் எங்கேஇருக்கிறான் என்றே எழுவேன்.

நான் வந்து பன்னிரெண்டு நாள் ஆகியிருந்தது. அன்றுஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்த மூர்த்திவந்துவிட்டார். நான் அடுத்த பயணம் மேற்கொள்ள வேண்டியநேரம் வந்துவிட்டது. நான் செல்கிறேன் என்பதைமாதவனிடம் தெரியப்படுத்தினேன். கேட்டதும் என்னிடம்ஏதும் பேசவில்லை. அமைதியான முறையில் வியாபாரத்தைதொடர்ந்து கொண்டிருந்தான். அன்றைய வியாபாரத்தைஅவன் முடித்ததும் மணி கடைக்கு சென்றோம். நான்மணியிடம் விடை பெற்றேன். நான் சினிமாவுக்கு செல்வோம்சாயங்காலம் ஊர் செல்கிறேன் என்றேன். வேண்டாம் ஒயின்ஷாப்புக்கு போவோம் என்றான்.

பியர் அருந்தினோம். அவன் அழுதான். அவன்அழுகையை தடுக்கப் போனேன். பின் வேண்டாம் எனவிட்டுவிட்டேன். எனக்கும் கண்கள் ஈரமாகியது. இந்த முறைநான் மீண்டும் பியர் வாங்கினேன். அருந்தினோம். பின் நேரம்கடத்த மார்க்கெட்டுக்குள் சென்றோம். ப்ளாக்குகளின்பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்தோம். நான் அப்போதுஅடிக்கடி சிகரெட் அடித்தேன். சரி நான் விடைபெறலாம்என எழுந்தேன். அவன் கட்டிபிடித்துக் கொண்டான்.

நாளை நீ ஊருக்கு போ என்றான். நான் மணியிடம்சொல்லிவிட்டேன். இனி நான் இங்கு இருந்தால் அவன்பேச்சுக்கு ஆளாக முடியாது என்றேன். சரி நீ இங்கு தங்கவேண்டாம். நம் வீட்டுக்கு போவோம். நாளை நான்வியாபாரத்துக்கு வரவில்லை காலைல கறி எடுக்கறோம்; சரக்கடிக்கறோம்; சினிமாவுக்கு போறோம் என்றான். நான்சிரித்தேன்.

முதன் முதலாக அவன் வீட்டிற்கு செல்கிறோம் என்றுபோகும் வழியில் சில பழங்களை வாங்கினேன். மணி ஏழுஇருக்கும் வீடடைந்த போது. உள்ளே ஒரு குண்டானபிள்ளை என்னை வரவேற்றாள். இவனுக்கும் அந்தபிள்ளைக்கும் சம்மந்தம் இல்லாதது போலவே இருந்தது. வீடுபத்துக்கு பதினைந்து கொண்ட ஒரு அறை ஒரு அடுப்படிஅட்டாச்டு பாத்ரூம். அவ்வளவுதான்.

அந்த பிள்ளை இவனளவுக்கு என்னிடம் பேசவில்லை. ஆனால் தான் ஏதோ இவனை கல்யாணம் செய்திருப்பதுபெரிய விஷயம் என்ற தோரணையே அவளிடம்வெளிப்பட்டது. நான் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. இரவுஉணவாக கடை இட்லி வந்தது. சாப்பிட்டோம். அந்தஅறையிலேயே மூவரும் தூங்கினோம். எனக்கு இருப்புகொள்ளவில்லை. தூக்கம் வரவில்லை. குறட்டை ஒலி வேறு. சிறிது நேரமாக மாதவனிடம் இருந்துதான் வருகிறது என்றுநினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் குறட்டை ஒலிவந்தது சுவற்றோரம் தூங்கிக் கொண்டிருந்தஅவளிடமிருந்து. அயர்ச்சியில் எப்படியோ தூங்கினேன். ஏதோ சலசலப்பு சப்தம் கேட்க முழித்தேன்.

மாதவன் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தான். மணிஇரண்டு. நான் என்ன என்றேன். மார்க்கெட்டுக்கு போய்ட்டுவந்திருறேன் நீ தூங்குண்ணே என்றான். நான் அப்படியேஅவனை வெறித்துப் பார்த்தேன். குறட்டை ஒலி மீண்டும்கேட்டது. அதெல்லாம் போக வேணாம் படு என்றேன். அவன்ம்ஹும் என்றான். ஏற்கனவே அந்த பிள்ளை நடந்து கொண்டவிதம் பிடிக்கவில்லை. இதில் குறட்டை வேறு. இப்போதுஇவன் வெள்ளந்தியாய் நம்மை பாடாய் படுத்துகிறான் என்றுஎரிச்சல் வந்தது. அவன் கையை இழுத்து வீட்டின் வெளியேகாம்பவுண்ட் தாண்டி ரோட்டிற்கு இழுத்து வந்தேன். எனனபண்ற நீ...

இல்லண்ணேன்... ஏவாரிகளுக்கு காசு கொடுக்கணும். தண்டல் கட்டணும். யோசிச்சேன் ஒரு ரெண்டு மணி நேரம்மட்டும் ஏவாரத்த பாத்திட்டு வந்திடறேன்.

எனக்கு வெறி ஏறியது.

ஏண்ணேன் என்றான்.

அந்த வெள்ளந்தித்தனம் இன்னும் என்னைஎரிச்சலாக்கியது. ஓங்கி ஒரு அறை அறைந்தேன். அதைசற்றும் எதிர்பாராத அவன். கண் கசிந்தவாறே என்னைபார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய சைக்கிளை பூட்டிசாவியை எடுத்துக்கொண்டேன். வீட்டினுள் சென்றேன்என்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு இருந்தேன்சிறிது நேரத்தை நான் தாமதப்படுத்தினேன். அப்போதாவதுஅவன் உள்ளே வருவான் என்று எதிர்பார்த்தேன். அவன்வரவில்லை. உடைமைகளை எடுத்துக்கொண்டுவெளியேறினேன். சைக்கிள் சாவியை அவனிடம் தூக்கிஎறிந்தேன். அவன் என் கைகளை பற்றினான். மீண்டும்எரிச்சலாகியது. அவனுக்கு பட்டென்று ஒன்று வைத்தேன். திரும்பி பார்க்காமல் நடந்து சென்றேன்.

பின் ஓரிரு நாள் கழித்து அவனுக்கு நான் போன்செய்தேன். அவன் எடுக்கவில்லை. அப்படி இரண்டு மூன்றுமுறை அழைத்தேன் அவன் தொடர்பு கொள்ளவில்லை. இரணடு வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை அழைத்தான்நான் எடுக்க முடியாத சூழ்நிலை. அதன் பின் தொடர்புகொண்டேன் அவன் எண் தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்ததுஎன்று சொல்லி முடித்தேன். ஆட்டோ சாதிக் எங்கள்மூவரின் பின் எதையோ பார்த்து மிரண்டார். வேகமாவண்டில ஏறுங்க ஏறுங்க என்று துரிதப்படுத்த எங்கள்பின்னால் முப்பது அடி தூரத்தில் ஒரு காட்டுமாடு மேய்ந்துகொண்டிருந்தது.

இரண்டு நாள் கழித்து, சந்தோஷ் என்னிடம் நான்சென்னையில் சில வின்டேஜ் பொருட்களை விசாரித்துவைத்திருக்கிறேன். அதை வாங்க நீங்கள் உதவ வேண்டும்என்றும் அப்படியே நாம் மாதவனை சென்று பார்ப்போம்என்று கூறினான்.

சென்னையில் மதியத்துக்குள்ளாகவே சந்தோஷினுடையவேலையை முடித்துவிட்டோம். ஆட்டோவில்கோயம்பேடிற்கு பயணமானோம். செல்லும்போது தான்எனக்குள் பரிதவிப்பு ஏற்பட்டது. மாதவன் இந்நேரம்எப்படியும் வியாபாரத்தில் வளர்ந்திருப்பான். இத்தனைவருடம் கழித்து போனால் நம்மை மதிப்பானா. அந்தஞாபகங்களை மீட்டெடுப்பானா அல்லது இந்த வியாபாரசூழல் வேறொரு ஆளாக பெருமனிதாக்கி நம்மைமறக்கடித்திருக்குமா. எனக்கு அவன் அன்றை போலவேவேண்டும் என்று தோன்றியது.

அந்த மதிய நேரத்தில் அவன் தக்காளி கிரவுண்டில்இல்லை. அருகில் விசாரித்ததில் அவனா என்றிழுத்தவர்ஏதும் பேசவில்லை. டீ கடைக்காரரிடம் விசாரித்தேன் அவர்உதட்டை பிதுக்கினார். சந்தோஷை டீ கடையிலேயேஉட்கார சொல்லிவிட்டு மணி கடையை நோக்கி சென்றேன். சந்தோஷை, மணி கடைக்கு அழைத்து சென்றால் தகுந்தமரியாதை கொடுப்பானா என்பது சந்தேகமே. டீ கடையில்இருப்பதே உத்தமம் என்ற எண்ணத்திலேயே மணியிடம்சென்றேன். விசாரித்தேன். நீ எதுக்கு அவன தேடுற என்றான்எக்காளத் தொனியோடு. மீண்டும் கணக்கு வழக்குகளிலும்செல்லிலும் பிஸியாக இருந்தான். சிறிது நேரம்நின்றிருந்தேன். வேறெந்த பதிலும் வரவில்லை. அங்கிருந்துஅகன்றேன்.

என்ன செய்வது என்ற குழப்பத்திலேயே கிரவுண்டில்நின்று கொண்டிருந்தேன். அப்போது நான் ஏற்கனவேபன்னிரெண்டு நாள் வேலை செய்த கடையின் லோடுமேன்முருகன் ட்ரை சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். அவரிடம் விசாரித்தேன்.

பீடியை பற்ற வைத்தவாறே, சார் கொழம்புலயும்ரசத்துலயும் போட்டு நசுக்கி பிழியறிதுதான் தக்காளி. ஆனாதக்காளி ஏவாரம் கொஞ்சம் ஆள் அசந்தா நம்மளநசுக்கிடும். இதோ அங்க கூவிட்டு இருக்காம் பாருசிங்காரம் அவன்தான் அவனுக்கு விக்காத தக்காளில்லாம்இவன்கிட்ட தள்ளி அப்படியே அவன முழுங்கிட்டான்.ஏகப்பட்ட கடன். காசு வசூலிக்க வீடு வரைக்கும்போய்ட்டிருந்தவன் அந்த பிள்ள அப்படியே இவனுக்குதொடுப்பாயிடுச்சு. அவன் வாழ்க்க அல்லோலம் சில்லோலம்ஆகிபுடுச்சு. அவன என்னாத்துக்கு சார் தேடுற ஒன்னுசாக்கண்ணா கடைல இருப்பான். இல்ல பூ மார்க்கெட்பிளாட்பாரத்துல மல்லாந்து கெடப்பான். இந்த பக்கம்லாம்ஆள் வந்து வருசமாச்சு. என்னுள் இடி இறங்கியது. இடுப்பின்மீது கை வைத்துக்கொண்டு கண்ணீரை அடக்கிக்கொண்டேன்.

ஒயின்ஷாப்புக்கு போகவே கால்கள் நடுங்கியது. நல்லவேளை அவன் இல்லை. சிறிது ஆசுவாசமடைந்தேன். அப்போது தான் என் தோள் மீது ஒரு கை வந்து விழுந்தது.

என்னா இந்த பக்கம்...

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். தாடிகுளிக்காத தலைமுடி. அழுக்கு சட்டை கைலி. அருகில்நின்றாலே நாற்றம். ஆம் அவன் மாதவனே தான். பார்க்கவேசகிக்கவில்லை. என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒருஅம்பது ரூவா குடு கட்டிங் போடணும் என்றான்.

நான் யார்னு என்று பேச ஆரம்பித்தேன். அதெல்லாம் வுடுகட்டிங் குடு என்றான். சந்தோஷும் நானும் அவனையேபார்த்துக் கொண்டிருந்தோம்.

சிறிது நேரங்கழித்து என்னை உலுக்கினான். ஐநூறுரூபாய் தாள் ஒன்றை அவனிடம் கொடுத்தேன். வாங்கிஉற்சாகமாக அவன் கடைக்குள் சென்றான். நாங்கள் ஏதும்பேசிக்கொள்ளாமல் அங்கிருந்து சென்றோம்.

நான் ஊருக்கு செல்கிறேன். நீங்கள் ஊட்டி பஸ்ஸில்செல்லுங்கள் என்றேன். சந்தோஷை பஸ்ஸில் ஏற்றிவிட்டுபஸ் கிளம்பி சென்ற பின் நாம் செல்லலாம் என்றுகாத்திருந்தேன். பஸ்ஸிலிருந்து இறங்கிய சந்தோஷ்என்னருகே வந்தார். சிறிது நேரம் நின்றார். திடீரென ஒருஅறை விட்டார். மீண்டும் சிறிது நேரம் அங்கேயே நின்றார். பின் பஸ் ஏறினார்.

நான் மார்க்கெட்டிற்குள் வந்து தெற்கு பக்கம் ஏதாவதுலாரி போகுதா என்று விசாரித்தேன். குமுளிக்கு ஒரு லாரிசெல்வதாக இருந்தது. அதில் கேட்டு ஏறிக் கொண்டேன். அந்த பயணத்தில் சந்தோஷினுடைய அறையும்மாதவனுடைய நிலையும் மாறி மாறி சஞ்சலப்படுத்தியது. கொஞ்சம் கூட கண் அசரவில்லை. விடிந்திருந்தது. நான்இறங்க வேண்டிய இடம் தாண்டி வெகுதூரம் லாரிபயணப்பட்டுக் கொண்டிருப்பதை அப்போது தான்கவனித்தேன்.

Stories you will love

X
Please Wait ...