தவறான தவறுகள்

sarulkumarphd
உண்மைக் கதைகள்
4.8 out of 5 (16 Ratings)
Share this story

அழகியலூர் என்ற பேருக்கேத்த அழகான கிராமம். மார்கழி குளிர்ல சூரியனுக்கும் கொஞ்சம் சோம்பேறித்தனந்தான் போல. மேகப் போர்வையை நல்லா போத்திக்கிட்டு லேசா எட்டிப் பாக்குறான். நகரம் போல காலயிலேயே கச்சாமுச்சான்னு எந்தவிதமான பரபரப்பும் இல்லாம கிராமத்து வாழ்க்க நிதானமா இருக்கும்னு நாம நினச்சா அதாங்க இல்ல.நகரத்தோட பரபரப்பு பக்கத்துல இருக்குற இது மாதிரி சின்ன சின்ன கிராமங்களையும் தொத்திக்கிச்சு. இருக்காதா?இங்க இருக்குற முக்காவாசி பேர் பக்கத்திலிருக்கிற நகரங்கள்ல சின்ன சின்ன வேலையில சேந்துட்டாங்க. என்னது நீங்க கேக்குறது புரியுது. விவசாயந்தானே? அதை செய்ய தேவையான ஆட்களும் தண்ணியும் கிடைக்காததால சில பேர் தவிர யாரும் விவசாயம் பக்கம் திரும்பிக்கூட பாக்கிறதில்ல. நிம்மதியா மாச சம்பளத்த வாங்குனோமா கடையில போய் தேவையான அரிசி பருப்பு வாங்குணோமான்னு போக ஆரம்பிச்சுட்டாங்க.

பார்த்திபன் அந்த ஊரில் அனைவரும் காலையிலேயே பாக்கணும்னு நினைக்கிற ஒரு முக்கியப் புள்ளி.ஆமாங்க பார்த்திபன பாக்க தாமதமானா கொஞ்சங் கூட இவங்க யாராலும் பொறுத்துக்க முடியாது. இருங்க இருங்க வேற கற்பனைக்கு போய்டாதீங்க . நம்மாளு பார்த்திபன் அந்த ஊர் பால்காரர். பத்து பசுமாடு வச்சுட்டு அந்த ஊர்ல இருக்குற எல்லாருக்கும் பால் கொடுத்துட்டு இருக்கார். பேசுறதுக்கும் பழகுறதுக்கும் இனிமையானவர். இந்த காலத்திலயும் அண்ணாமலை படத்துல வர்ர மாதிரி சைக்கிள்ல போய் பால் கொடுக்குறார்ன்னா பாத்துக்கோங்க.அவ்ளோ எளிமைங்க. அந்த கிராமத்து ஆறு மணி சங்கே நமது பார்த்திபனின் சைக்கிள் மணி ஓசை தான். பெரிசா லாபம் பாத்து சம்பாதிச்சு சேத்து வைக்கலன்னாலும் சுத்தமான பாலை கொடுத்து நல்ல பேரை சம்பாதிச்சுட்டார். இவரைப் போல மத்த ஊர்ல இருக்குற பால்காரர்கள் இவர்கிட்ட வந்து சின்ன சின்னதா கலப்படங்கள் பண்ணிணா நல்ல லாபத்துக்கு விக்கலாமேன்னு பலதடவ சொல்லியும் கண்டுக்காம அதெல்லாம் தப்புங்கன்னு சொல்லிட்டு நேர்மையாவே இருந்துட்டிருக்கார். இளமையும் சுறுசுறுப்பாவும் இருக்குற பார்த்திபனுக்கு பொண்ணு பாத்துட்டு இருந்தாங்க அவரோட அப்பா அம்மா‌. பார்த்திபனோட நல்ல பேருக்கும் குணத்துக்கும் பலபேரு பொண்ணு கொடுக்கறேன்னாங்க.நல்லா யோசிச்சு வயசான தங்கள பாத்துக்கவும் மாடுகள பாத்துக்கவும் குடும்பத்தையும் அனுசரிச்சு போறமாரி தூரத்து உறவு முறையில இருந்த இவங்கள விட ஏழையான ஒரு குடும்பத்தில இருந்து சுகந்தின்னு ஒரு பொண்ண முடிவு செஞ்சாங்க.கல்யாணம் நல்லா தடபுடலா நடந்துச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம பார்த்திபன் இன்னும் பொறுப்பா மாறி தொழில பெருசாக்க 10 மாடுகள புதுசா வாங்கினார். குடும்ப பொறுப்பு முழுசும் சுகந்திகிட்ட வந்துச்சு.மாமனார் மாமியாரை நல்லா பாத்துக்கிட்டா.கொஞ்சம் மாசம் போச்சு. வளைகாப்பு முடிஞ்சு அம்மா வீட்டுக்கு போனா சுகந்தி. சுத்தி இருக்கிறவங்களாம் சுகந்தியோட அம்மாகிட்ட உங்க பொண்ணு போணப்புறம் உங்க மாப்பிள புதுசா 10 மாடு வாங்கியும் பெருசா முன்னேறலயேன்னு குத்தி காட்டிட்டு போணாங்க.அம்மா அவங்க முன்னாடி ஏதேதோ சமாளிச்சாலும் தன் பொண்ணோட ராசியோன்னு உள்ள வந்து புலம்பிட்டு இருந்தாங்க.

சுகந்தியும் நம்ம வீட்டுக்காரர் எவ்ளோ உழைப்பு போட்டும் பெருசா தொழில்ல லாபம் இல்லையேன்னு யோசிச்சா. அழகான பெண் குழந்தை பொறந்துச்சு. ரொம்ப சந்தோஷமா பார்த்திபன் வந்து தன்னோட பொண்ணையும் பொண்டாட்டியையும் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்த உடனே சுகந்தி தொழில்ல பெருசா லாபம் பாக்க முடியாம போற காரணங்களத் தேடிப்பாத்தா. அப்போதான் அவளுக்கு தெரிஞ்சுது பார்த்திபன் கறக்கற பால அப்டியே எடுத்துட்டு போய் எல்லாருக்கும் கொடுத்திடுவாருன்னு. அதனால பெருசா எதுவும் நிக்கலன்னு புரிஞ்சுகிட்டா.

வியாபாரத்தில இந்த ஊரே ஆச்சரியப்படுற மாதிரி நிறைய காசு பணம் சம்பாதிக்கனும்னு முடிவு பண்ணிணா.அதனால யாருக்கும் தெரியாம முக்கியமா பார்த்திபனுக்கு தெரியாம பால்ல தண்ணி கலக்க ஆரம்பிச்சா. சில நாளிலேயே பார்த்திபனுக்கு பாலின் அளவு திடீர்ன்னு எப்படி அதிகமாச்சுன்னு பாக்கும்போது பால்ல சுகந்தி தண்ணி கலப்பத பாத்துட்டான். இது தப்பு நாம செய்யக்கூடாதுன்னு சொன்னான். அதுக்கு அவன் மனைவி அவங்கவங்க ஏதேதோ கலக்குறாங்க நான் வெறும் தண்ணி தான கலக்குறேன். அதனால யாருக்கும் எந்த கெடுதலும் வராது, நீங்க கண்டுக்காதீங்கன்னு சொல்லிட்டா‌ பார்த்திபனுக்கு மனசு ஒத்துக்கல.ஆனாலும் பொண்டாட்டியோட பேச்சயும் தட்ட முடியல. வேறு வழி இல்லாம அமைதியா போறான். வரவு செலவு கணக்குலாம் சுகந்தியே பாக்க ஆரம்பிச்சாச்சு. சில மாசத்துலயே கிடச்ச லாபத்த வச்சு சைக்கிள் வண்டியா மாறிடுச்சு. மேலும் பல மாடுங்க வாங்குறாங்க. பார்த்திபனோட உழைப்புக்கு யாராலும் போட்டி போட முடியல.அதனால இன்னும் லாபம் கிடைக்குது. மேலும் பல மாடுகள்னு தொழில் நல்லா பெருசா வளருது.2 ஆளுங்கள வச்சு பால வெளி ஊர்களுக்கும் கொடுக்க ஆரம்பிச்சாங்க.

உள்ளூர்ல பார்த்திபனோட பால் தண்ணியா இருக்குன்னு லேசா பேச்சு அடிபட ஆரம்பிக்குது. சில பேர் நேராவே பாத்து சொல்லிட்டாங்க. இதை பொண்டாட்டிக்கிட்ட சொல்லி வருத்தப்பட்டான்.அதுக்கு சுகந்தி இது ஒன்னும் பெரிய பிரச்சின இல்ல நான் பாத்துக்கிறேன் என்ட விட்டுடுங்கன்னு சொல்லி சமாதானப் படுத்துறா. அடுத்த சில நாளிலேயே பால் பழைய மாதிரி தண்ணியா இல்லாம நல்லா திக்கா இருக்கு. பரவால்லையே நாம சங்கடப்பட்டதுக்கு சுகந்தி தண்ணி கலப்பத நிறுத்திட்டான்னு சந்தோஷமா தன் வேலைய பாக்குறான் பார்த்திபன்.அடுத்த சில வருசத்துல நிறைய லாபம் பாத்து நிறைய பசுக்கள வாங்கி வியாபாரத்த மிகப்பெரிய அளவுல நடத்த ஆரம்பிச்சாங்க. மாவட்டத்திலேயே பெரிய பண்ணை நம்ம பார்த்திபனோடதுதான் . இப்போ பார்த்திபன் நிறைய பேர வேலைக்கு வச்சு சின்ன சின்ன வண்டிகள் வாங்கி மாவட்டம் முழுசும் பால் கொடுக்குறாங்க.ஒரு ஆண் குழந்தையும் பிறந்து வளந்துடுச்சு‌‌. பொண்ணு அமலா, நாலாம் வகுப்பிலும் பையன் பிரகாஷ் ஒன்னாம் வகுப்பும் படிக்கிறாங்க.

பள்ளியிலேயே முதலாவதா வருவா நம்ம அமலா.நல்ல அறிவு அதுமட்டுமில்ல விளையாட்டுலயும் படு சுட்டி. ரெண்டுலயும் பரிசா வாங்கி குவிப்பா. பையன் பிரகாஷ்க்கு வரைவதிலும் பாடுவதிலும் ஆச அதிகம் போல.ஒன்னு ஏதாவது பாடிட்டு இருப்பான் இல்ல எதையாவது பாத்து வரஞ்சிட்டுப் இருப்பான். தாத்தா பாட்டி பேரன் பேத்தியுடன் குடும்பம் மகிழ்ச்சியா இருந்துச்சு.

வரப்போற பொங்கலுக்கு புதுத்துணி எடுக்க குடும்பத்துல எல்லாரும் பக்கத்துல இருக்கிற நகரத்துக்கு போறாங்க. அந்த ஊரிலேயே இருக்குற பெரிய கடையில துணிலாம் எடுத்துட்டு பெரிய ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வீட்டுக்கு கார்ல போயிட்டிருக்காங்க.

திடீர்னு அமலா வாந்தி எடுத்துட்டு மயங்கிட்டா. பக்கத்தில இருக்கிற மருத்துவமனைக்கு ஓடுறாங்க.மருத்துவர் பாத்துட்டு ஹோட்டல்ல சாப்ட்ட சாப்பாடு ஒத்துக்காம இப்டி ஆயிருக்கலாம்ன்னு சொல்லி மருந்து கொடுத்தார். எதுக்கும் இருக்கட்டும்னு ரத்த மாதிரி எடுத்துக்கிறாங்க. 3 நாளு கழிச்சு மருத்துவமனையில் இருந்து பார்த்திபனுக்கு நேர்ல வர சொல்லி அழைப்பு வருது.போன பார்த்திபனிடம் மருத்துவர் உங்க பொண்ணுக்கு சாதாரண சாப்பாட்டுப் பிரச்சன இல்ல. அவளுக்கு குடல்ல புத்துநோயோட அறிகுறி மாதிரி இருக்கு .அவ பொதுவா வெளிய எங்கயாவது அதிகமா சாப்பிடுவாளா? இல்ல பாக்கெட்ல அடச்சு விக்குற தீனி நிறைய சாப்பிடுவாளான்னு கேக்குறார்.பார்திபனுக்கு தலையே சுத்துச்சு.சுதாரிச்சுக்கிட்டு இல்லங்க அவ வீட்டில மட்டுந்தான் சாப்டுவா.எப்பவாச்சுந்தான் ஹோட்டலில் சாப்பிடுவோம்.அதுக்கு மருத்துவர் அப்போ உன் வீட்டில இருக்குற ஏதோ ஒரு உணவுப் பொருள்ல கலப்படம் அதிகமாக இருக்கு. அதனால தான் இது ஏற்பட்டிருக்குன்னு சொல்றார்.அத கண்டுபிடிச்சு நிறுத்துங்க.இப்போதைக்கு சில மருந்துகள் தர்றேன் நேரத்துக்கு கொடுங்க, தைரியமா இருங்கன்னு சொல்லி அனுப்புறார்.

எந்த பொருளால அமலாக்கு இந்த வியாதி வந்திருக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சார்.நம்ம வீட்டுக்கு ஒவ்வொரு பொருளையும் எங்க இருந்து வாங்குறோம்னு ஆராய ஆரம்பிக்கிறார். பால் நம்மிடமே உள்ளது. அரிசி பருப்பு மளிகை காய்கறி பழங்கள் இவைதான் வெளியில இருந்து வாங்குறோம்.அப்ப ஒவ்வொரு கடையா போய் பாப்போம்னு முதல்ல காய்கறி கடைய பாக்கப் போனார். அவங்க ஆர்கானிக்னு சொல்லப்படுற இயற்கை உரங்கள மட்டுந்தான் பயன்படுத்துறதா சொன்னாங்க.அதனால அங்க பிரச்சனை இல்ல.அடுத்தது பழங்கள வாங்குற பாலு கடைக்கு போனார். அங்க பாலு எங்களுக்கு பழங்கள்லாம் வெளியிலிருந்து தான் வருது.நாங்க பழுக்க வச்சு விக்கிறோம் அவ்ளோதான் சொல்றார்.இங்கயும் ஒன்னுமில்லன்னு வெளிய வந்து வண்டி எடுக்கும் போது ஒரு வேலையாள் ஓடி வந்து எங்க முதலாளி பழம் சீக்கிரம் பழுக்க வைக்க சில ரசாயனங்கள வச்சிருக்காங்க.நான் பாத்திருக்கேன்‌.எனக்கும் பசங்க இருக்காங்க.அவங்களுக்கு உங்க பால தான் கொடுக்கிறேன்.அதனால என்னால உங்ககிட்ட சொல்லாம இருக்க முடியால.நான் சொன்னதா யார்கிட்டயும் சொல்லிடாதீங்கன்னு போய்ட்டார். பெரிய யோசனையோடு கடைக்குள்ள போய் கொஞ்சம் பழம் வாங்கிட்டு அடுத்து மளிகை கடைக்கு போறார். அங்க எல்லா பொருளும் வாங்கி விக்றாங்க.அதனால கடைசியா அரிசி கடைக்கார் முருகேசனை பாக்க போறார். முருகேசனும் அதே ஊரில் பிறந்து வளந்தவர் தான்.7-8 வருசத்துக்கு முன்னாடி வெறும் இரண்டு ஏக்கர்ல விவசாயம் செஞ்சிட்டு இருந்தவர். இன்று ஊர்ல இருக்குற முக்காவாசி நிலத்திலயும் அவர்தான் சாகுபடி செய்றார்.அந்தளவுக்கு விவசாயத்துல முன்னேறியிருக்கார்.நிறைய லாபமும் சம்பாதிக்கிறார்.

முருகேசனுக்கும் நம்ம பார்த்திபனும் கிட்டதட்ட ஒரே வயசுதான்.ரெண்டு பேருக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி நல்ல பழக்கம் இருந்துச்சு.அப்புறம் குடும்பம் தொழில்னு பெருசா சந்திச்சுக்கல . முருகேசனை பாத்து நீ சாதாரண விவசாயியாதான இருந்த,எப்படி கொஞ்ச வருசத்துல இவ்வளவு பெரிய கடை வருமானம் எல்லாம்னு?கேக்குறான் பார்த்திபன்.

அப்போ நம்ம முருகேசன் நீ சொல்ற மாதிரி நானும் சாதாரணமா தான் விவசாயம் செஞ்சிட்டு இருந்தேன்.பெருசா லாபம்லாம் இல்ல.நல்ல வரன் வந்துச்சுன்னு வீட்டுல எனக்கு திடீர்னு கல்யாணமும் பண்ணி வச்சிட்டாங்க.ஆரம்பத்தில எல்லாம் நல்லா போய்டிருந்தது. சில மாசத்துல என் பொண்டாட்டி என்கிட்ட பெருசா பணம் இல்லையா, சம்பாதிக்க தெரியாதான்னு நச்சரிக்க ஆரம்பிச்சா.அதனால கையில இருந்த கொஞ்ச காசு வச்சி பக்கத்துல இருந்த நிலங்கள குத்தகைக்கு எடுத்தேன்‌. கொஞ்ச நாளிலேயே விளையுற புதிய நெல் வகைகள தேடி வாங்கி நட்டேன்.அதுக்கு நிறைய செயற்கை உரங்களெல்லாம் போட்டு வளத்தேன். நல்லா விளஞ்சுது.அத அரிசியாக்கி இங்கேயே விக்க ஆரம்பிச்சுட்டேன். நல்ல லாபமும் கிடச்சுது. அத வச்சு இன்னும் நிறைய நிலங்கள குத்தகைக்கு இல்ல விலைக்குன்னு வாங்கி இன்னும் அதிகமா விவசாயத்த செஞ்சிட்டு இருக்கேன்னு சொன்னார்.

பார்த்திபனுக்கு இப்போ லேசா புரிய ஆரம்பிக்குது.அமலாவோட நோய்க்கு காரணமா ரெண்டு விசயங்கள் இருக்கலாம்.ஒன்னு செயற்கையா பழுக்க வச்ச பழங்கள வாங்கிக் கொடுத்தது.ரெண்டாவது செயற்கை உரங்கள போட்டு வளக்கும் அரிசியை வாங்குறது. அதனால வாங்கி வந்த பழங்களையும் வீட்ல இருந்து கொஞ்சம் அரிசியையும் கொண்டு போய் நகரத்தில இருக்குற நண்பர் கிட்ட கொடுத்து உதவி கேட்டார்.அவர் அந்த ரெண்டையும் ஆய்வுக்கு அனுப்பினார். ஒரு வாரம் கழிச்சு முடிவு வந்துச்சு.ரெண்டிலும் உடம்புக்கு நோய உருவாக்குற ரசாயனங்கள் நிறைய இருக்கிறதாவும் அதனால கண்டிப்பா உடம்புக்கு ரொம்ப ஆபத்துன்னும் இருந்துச்சு.

தனியா வீட்டில உக்காந்து என்ன செய்றதுன்னு யோசிச்சிகிட்டிருக்கும் போது சுகந்தி பால் கறந்து வைக்குற இடத்துக்கு போறது தெரிஞ்சுது.

பின்னாடியே போய் பாக்கும்போது அவள் கையில இருந்து ஏதோ மாவு மாதிரி ஒன்ன எடுத்து எல்லா பால் கேனிலும் கொஞ்சங் கொஞ்சம் கலந்தாள். அப்புறம் நல்லா தண்ணிய ஊத்தி கிளறினா.யாரும் வராங்களான்னு பாத்துக்கிட்டே வெளியே வந்தாள். உடனே குறுக்கே போய் வழி மறிச்சு என்ன கலந்த என கேட்க அதுக்கு சுகந்தி பயந்து போய் எச்சு முழுங்கி பதிலே சொல்லாம நின்னுக்கிட்டு இருந்தா. பொண்டாட்டி மேல இதுவரைக்கும் கோவப்படாத பார்த்திபன் சொல்றியா இல்லயான்னு கைய ஓங்க அழுதுகிட்டே பால் திக்கா இருக்கிறதுக்கும் தண்ணி கலந்தது வெளிய தெரியாம இருப்பதுக்கும் கொஞ்சம் யூரியாவை கலந்தேன்னு சொன்னா.

ஐயோ நம் குழந்தையும் அதையே தாண்டி குடிக்குதுன்னு கத்துனான் பார்த்திபன். அதுக்கு சுகந்தி நம்ம குழந்தைக்கு தனியா எடுத்து வச்சுட்டு தான் கலக்குறேன்னா. இத குடிச்சு எத்தன பேருக்கு என்னென்ன ஆச்சோன்னு பார்த்திபனுக்கு மயக்கமே வந்துச்சு.

இப்போதான் பார்த்திபனுக்கு எல்லாம் கொஞ்சங் கொஞ்சமா புரிஞ்சுது.

எல்லா உற்பத்தியாளர்களும் அந்த தொழிலை சேந்தவங்களும் அவங்கவங்க தேவைக்கு மட்டும் எடுத்துக்கிட்டு லாபத்துக்காக வெளியே விற்குறதுல கலப்படம் செஞ்சுதான் விக்கிறாங்க . தன்னோட வீட்டுக்கும் குழந்தைகளுக்கும் எந்த ஆபத்தும் இல்லன்னு நம்பிக்கிட்டு மத்தவங்களுக்கு அந்த ஆபத்த உருவாக்குறாங்க.தன்னோட பொருளத் தவிர மீதி பொருட்கள வெளிய வாங்கும்போது அதெல்லாம் தனக்கும் கலப்படமா தான் வரும்னு புரிஞ்சுக்காம போய்டாங்க.

பொண்டாட்டி கிட்ட இனி இது மாதிரி செய்யாதன்னு திட்டிட்டு, இருக்குற பால் எல்லாத்தையும் கீழ சாச்சிட்டு வேகமா வெளிய போனான்.

முருகேசனையும் பழக்கடை பாலுவையும் ஒரே இடத்துக்கு வர சொன்னான். ரெண்டு பேரும் வந்தப்புறம் கையில எடுத்துட்டு போன ஆய்வறிக்கையை படிச்சு காமிச்சான். நீங்க கலக்குற ரசாயனங்கள் மற்றும் உரங்கள் மத்தவங்களுக்கு எவ்ளோ பெரிய ஆபத்து இருக்கு.இன்னைக்கு என் பொண்ணு நாளைக்கு உங்க வீட்ட சேந்தவங்க இல்ல நம்ம வாடிக்கை காரங்க. மத்தவங்க உடம்ப கெடுத்து நாம சம்பாரிக்கனுமா .நிறைய நோய்களையும் நோயாளிகளையும் உருவாக்க போறோமான்னு கேட்டான்.பேசிட்டு இருக்கும் போதே மருத்துவமனையிலிருந்து போன் வர பார்த்திபன் பதட்டமா வண்டி எடுக்கப்போய் கீழே விழ உடனே முருகேசனும் பாலுவும் பார்த்திபனை பிடித்து தூக்கி நாங்களும் வற்றோம்னு‌ சொல்லி மூவரும் மருத்துவமனைக்கு வேகமா போறாங்க.

சுகந்தி அங்க அழுதுட்டு இருந்தா.அமலா மீண்டும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததால என்ன செய்றதுன்னு புரியாம இங்க கூட்டிட்டு வந்தோம்ன்னு சொன்னா.என்ன ஏதுன்னே சொல்லாம மருத்துவர் அமலாவை அவசர அவசரமா அறுவை சிகிச்சைக்கு அழைச்சுட்டு போய்டாங்க எனக்கு பயமாயிருக்குன்னு கத்தி அழ ஆரம்பிச்சா‌.கடவுளே நான் செஞ்ச தப்புக்கு என்ன எப்டி வேணா தண்டிச்சுக்கோ என் பொண்ண விட்று இனிமே பால்ல எதுவும் கலக்க மாட்டேன்னு புலம்பனா.முருகேசனும் பாலுவும் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டாங்க.பாலு கடையில இருக்குற தம்பிக்கு போன் செஞ்சு ரசாயனங்கள் வச்சு பழுத்த பழங்களை எல்லாம் குழி தோண்டி புதைக்க சொன்னார்.இதை பார்த்த முருகேசனும் கடைக்கு போன் செய்து கடையை மூடி சாவியை விட்டுல கொடுக்க சொன்னார்.நாங்களும் பெரிய தப்பு பண்ணிட்டோம்.இனிமே சத்தியமா செயற்கையா எதுவும் செய்யாம கலப்படம் செய்யாம இயற்கையா விக்கிறோம்னு கண் கலங்கி பார்த்திபனின் கைய பிடிச்சு சொல்லிட்டு இருந்தாங்க.

மருத்துவர் வெளியே வர பார்த்திபன் அவரிடம் ஓடுகிறான்.அமலாக்கு என்னாச்சு சொல்லுங்கன்னு குரல் உடஞ்சு சைகையில கேக்க நல்ல நேரத்துல கூட்டிட்டு வந்தீங்க.இங்க இன்னக்கி மருத்துவ கருத்தரங்கு நடந்துச்சு.அதுல புற்று நோய் நிபுணர்கள் நிறைய பேர் வந்திருந்தாங்க.அவங்க கிளம்பும் போது உங்க பொண்ண தூக்கிட்டு வந்தாங்க.அதுனால 3 சிறப்பு மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கிட்டாங்க.அதான் உங்களுக்கு தகவல் சொல்ல சொல்லிட்டு உடனே அறுவை சிகிச்சை ஆரம்பிச்சோம் ஆரம்ப நிலைங்கிறதால பெருசா பிரச்சன இல்லாம நல்ல படியா முடிஞ்சது.இனி அமலா பத்தி கவல பட வேணாம்‌.நல்லத நினைச்சா நல்லதே நடக்கும் போங்கன்னு சொல்லிட்டு போய்ட்டார்.

ஏதோ சத்தம் கேட்டு பார்த்திபன் சுகந்தி முருகேசன் பாலு எல்லாரும் திரும்பி பாக்க காற்றில் மருத்துவமனை பலகை “யாரோ ஒருவர் எங்கோ செய்யும் ஒரு தவறு பலரின் வாழ்க்கையை பாதிக்கிறது” அதனால் பிறருக்கு கெடுதல் செய்யாமல் வாழ்வோம்” என்ற பொன்மொழியோடு ஆடிட்டிருந்தது.

Stories you will love

X
Please Wait ...