கல்யாண சமையல் சாதம்

samykrish90
உண்மைக் கதைகள்
4.9 out of 5 (30 रेटिंग्स)
कहानी को शेयर करें


வனிதாவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நாளிலிருந்தே அவளது குடும்பம் பதற்றம் கலந்த பரபரப்போடே இயங்கிக் கொண்டிருந்து.அவளது அப்பா கடைத்தெருவில் சந்திக்கும் யாரிடமும் வனிதாவின் திருமணம் குறித்த பேச்சுகளை வேண்டுமென்றே தவிர்த்தார்.அவளின் அம்மாவோ எப்படியாவது இந்த கல்யாணம் எந்த பிரச்சினையும் இல்லாம நல்லபடியா நடந்துறனும்னு அக்கம் பக்கம் வீட்டாரிடமெல்லாம் சொல்லி புலம்பினாள்.வனிதாலின் அண்ணனோ இந்த கல்யாணத்துல எவனாவது பிரச்சினை பண்ணுனா அவன் எவனா இருந்தாலும் வெட்டிட்டு ஜெயிலுக்குப் போவவும் தயாரா இருப்பதாக சொல்லித் திரிந்தான்.வனிதாவின் அப்பா..அம்மா..அணணன் எல்லோருக்கும் உள்ளுக்குள் உருண்ட ஒருவித பயம்தான் அவர்களை இப்படியெல்லாம் செயல்பட வைத்தது.அவர்கள் யாரை நம்புவது யாரை நம்ப முடியாது என்கிற தெளிவில்லாமல் தவித்தனர்.
வனிதா குடும்பத்தினரின் பயத்திற்கும் சிக்கலான காரணமொன்று இருக்கவே செய்தது.சிறு வயதிலிருந்தே வனிதாவை அவளது அத்தை மகனான உதயாவிற்கு கட்டுவதாகத்தான் பேச்சிருந்தது.வனிதாவிற்கும் உதயாவை கட்டிக்கொள்வதற்கு பெரிய அளவில் விருப்பமில்லாவிடினும் வீட்டாரின் விருப்பத்திற்காக சம்மதம் தெரிவித்திருந்தாள்.அவளது ஒரே நிபந்தனை டிகிரி முடித்துவிட்டு திருமணம் செய்துகொள்கிறேன் என்பதுதான்.வனிதாவும் உதயாவும் எதர்கால இல்லற வாழ்வில் இணையப் போகிறவர்களாக இருந்தாலும் பால்ய வயதில் அவர்களுக்குள் என்ன மாதிரியான உறவு இருந்ததோ அதே உறவுதான் இன்றைய வயது வரை நீடிக்கிறது.உதயா வனிதாவைவிட மூன்று வயது மூத்தவன்.வனிதா இ்ப்போது பன்னிரெண்டாவது முடித்து கல்லூரிக்கு போக காத்திருந்த சந்தோசமான தருணத்தில்தான் இருவரது வீட்டு வெகுநாள் உறவில் விரிசல் ஏற்பட்டு அதே ஊரிலேயே வேறொரு பையனுக்கு வனிதாவை கட்டுவதென முடிவெடுத்து இந்த திடீர் திருமண ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன.

எப்படியான புரிதலுள்ள உறவானாலும் வருடக் கணக்கில் நெருடல் இல்லாமல் நீடித்து நிலைப்பது சாத்தியமில்லாத காலகட்டம் இது.அதுவும் நெருங்கிய சொந்தங்களுக்குள் என்றால் சொல்லவே வேண்டாம்.நல்லது கெட்டதுகளில் அடிக்கடி சந்தித்தே அலுத்துவிடுகிறது போலும்.ஒவ்வொரு நிகழ்விலும் ஒருவருக்கொருவர் குறைபட்டு மாற்றி மாற்றி அடுத்தவரிடத்தில் ஒருவரைப் பற்றி இன்னொருவர் குற்றம் சொல்லி காலவோட்டத்தில் பெருங்கசப்பு ஏற்பட்டு விடுகிறது.இப்படித்தான் வனிதா, உதயா இருவர் வீட்டுக்காரர்களுக்கும் பிள்ளைகளுக்கு மொட்டையடித்ததில் தொடங்கி காதுகுத்து, மொய்விருந்து, புதுமனை புகுவிழா என கடைசியாய் நடந்த வனிதாவின் மஞ்சள் நீராட்டு விழா வரை செய்முறை செய்வதில் ஆரம்பித்து கொடுக்கல் வாங்கல் என சங்கடங்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்து இப்போது ஒடிந்தே விட்டது எனலாம்.
ஒடிந்த உறவை எப்படியும் இரண்டு பக்கமும் இன்னும் மிச்சமிருக்கும் சிறிது ஈரப்பசை கொண்டு ஒட்ட.வைத்துவிடலாம் என்றுதான் ஊரார் நினைத்தனர்.ஆனால் நிலைமை கைமீறி போய்விட்டது.வனிதாவின் அம்மாவும் உதயாவின் அப்பாவும் ஒரே வயிற்றில் பிறந்தவர்கள்தான்.வனிதாவின் அம்மாவை திருமணம் செய்யும்போது அவருக்கு சீதனமாக ஒரு ஏக்கர் நிலம் தருவதாக பேச்சு.ஆனால் முறைப்படி கிரயம் செய்துகொள்ளாமல் நம்பிக்கையின்பேரிலே அந்த நிலத்தினை வனிதா குடும்பம் விவசாயம் செய்து வந்தது.இரண்டு குடும்பங்களுக்கும் இருந்த நெருக்கத்தில் நிலத்தை முறைப்படி பதிவு செய்வது பற்றி யாரும் பெரிதாய் யோசிக்கவில்லை.காலப்போக்கில் ஏற்பட்ட மனச் சங்கடங்களும் விதவிதமான வருத்தங்களும் நிலத்தை வனிதாவின் அப்பா பேருக்கு பதிவு செய்து தர வேண்டும் என கேட்க வைத்தது.உதயாவின் குடும்பத்தினரோ வனிதாவை அவர்கள் வீட்டு மருமகளாக கொண்டு வருவதன்மூலம் அந்த ஒரு ஏக்கர் நிலத்தை அப்படியே தாங்களே வைத்துக்கொள்ளலாம் என கணக்குப் போட்டிருந்தனர்.ஆனால் வனிதா குடும்பமோ இன்றைக்கு நிலம் விற்கும் விலைக்கு ஒரு ஏக்கர் நிலமெல்லாம் சீதனமாக தர முடியாது என்றும் வேண்டுமானால் ஒரு 'மா..'மட்டும் கொடுக்கலாம் என்பது அவர்களின் வாதம்.அதற்கு முதலில் ஒரு ஏக்கர் நிலத்தையும் வனிதாவின் அப்பா பெயருக்கு உடனடியாக எழுதிக் கொடுக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றனர்.இந்த நிலத்தகராறில் இரண்டு குடும்பத்திற்கும் இடையிலான பல தடவையான வாய்ப்பேச்சுகள் ஒருதடவையான கைகலப்பு என பிரச்சினை ஒருவழியாய் ஊர்ப்பஞ்சாயத்திற்கு வந்துவிட்டது.

பஞ்சாயத்து தலைவர் சொந்தக்காரர்கள் சண்டைதானே சுமூகமாய் முடித்துவிடலாம் என்று நினைத்துதான் தொடங்கினார்.
பஞ்சாயத்து நடந்த இடத்தில் வீற்றிருந்த கருப்புசாமியை வணங்கியவாறு
'என்னப்பா..இத்தன காலம் எல்லா ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்துட்டு இப்டி ஊரு முன்னாடி வந்து நிக்கிறீங்க..'
'ஒன்னுமில்லங்க.. பேசுனபடி என்னோட பேருக்கு நெலத்த எழுதி வைக்க சொல்லுங்கய்யா..' வனிதாவின் அப்பா.
'அதெல்லாம் முடியாதுங்க அன்னைக்கு எங்க வீட்டு பொண்ணுக்கு சீதனமா கொடுத்தது மாரி இன்னைக்கு அவுங்க வீட்டுப் பொண்ணுக்கு சீதனமா கொடுக்கச் சொல்லுங்க..அவளோதான் இதுல பேச என்ன வேண்டியிருக்கு..' உதயாவின் அப்பா.
அப்டிலாம் முடியாதுங்க வேணும்னா ஒரு 'மா..'நெலத்த எம்புள்ள பேருக்கு எழுதி வைக்குறோம்ங்க..இன்னைக்கு விக்கிற வெலவாசிக்கு அவ்ளோதான் எங்களால முடியும்.நானும் இன்னும் ஒரு பொண்ண கரை சேக்கனும்ல..'வனிதாவின் அப்பா உறுதியாய் சொன்னார்.
'அவுங்க இவ்ளோ உறுதியா நின்னா ஒன்னும் பண்ண முடியாதுங்க.வேணும்னா ஒரு ஏக்கரையும் அவுங்க மக பேருக்கே எழுதி வைக்குறோம்.அதுவும் கல்யாணத்துக்கு பெறவு.. உதயாவின் அப்பா அவரது எண்ணத்தில் வலுவாய் நின்றார்.
இருவரும் மாறி மாறி விடாப்பிடியாய் பேசி வந்ததை பஞ்சாயத்தோடு சேர்ந்து கேட்டு வருவதாக சுற்றி நின்ற மரங்களும் தலையசைத்தன.
'அதெல்லாம் முடியாதுங்க..இப்பவே எம்பேருக்கு எழுதி வைக்கச் சொல்லுங்க இல்லனா அவங்க பயனுக்கு வேற எடத்த பாத்துக்கச் சொல்லுங்க' ஒரேயடியாய் வனிதாவின் அப்பா வெட்டிப் பேசியதுதான் தாமதம்.. 'அதான் சொல்லிட்டான்ல அப்பறம் என்ன பஞ்சாயத்து வேண்டிருக்கு பஞ்சாயத்து எல்லாரும் கௌம்புங்க' என்று விரட்டியவாறு துள்ளி விழுந்து கிளம்பினார் உதயாவின் அப்பா.பஞ்சாயத்துக்காக வந்திருந்த இரு தரப்பு ஆட்களும் எவ்வளவு கெஞ்சியும் அவர் கேட்காது வெறுப்பு கலந்த நடையில் வீடு நோக்கினார்.
'இதுக்காடா என்னைய இங்க வரைக்கும் கூட்டி வந்தீக' என்று தன்னைத்தானே நொந்தவாறு கருப்புசாமி கணக்காக எழுந்து நின்றார் தலைவர் ஒன்றும் புரியாதவாராய்.

அன்றைக்கு மாலையே வனிதாவுக்கு மாப்பிள்ளை பார்த்து அடுத்த நாள் நிச்சயம் செய்தார்கள்.தனது வாழ்வு குறித்த அத்தனை முடிவுகளையும் தனது குடும்பத்தாரிடம் ஒப்புக் கொடுத்தவளாய் உதயா என்றிருந்த பெயரை முத்து என மாற்றிக்கொண்டாள்.அவளுக்கு எப்படியாவது தன்னை படிக்க விட்டால்போதும் என்றுதான் தோன்றியது.முத்துதான் மாப்பிள்ளை என்று நிச்சயிக்கப்ட்டபோதுகூட அவள் சொன்னது 'நிச்சயம் வேணும்னா செஞ்சுக்குங்க..ப்பா..ஆனா கல்யாணம் டிகிரி முடித்துதான் என்பது மட்டுந்தான்.அவளின் முடிவுக்கு வீட்டாரும் சம்மதிக்கவே நிச்சயதார்ததம் நிகழ்ந்தது.
இதற்கிடையே உதயாவிற்கும் திருமண ஏற்பாடுகள் விறுவிறுவென நடப்பதும் மணநாள் குறிக்கப்பட்ட செய்தியும் வனிதா குடும்பத்தினரை எட்டியது.உடனே வனிதாவின் அப்பா..'எம்புள்ளக்கு அவனுக்கு முன்னாடி ஜாம்..ஜாம்..னு கல்யாணம் செஞ்சு வைக்குறேன் பாருன்னு' உணர்ச்சிப் பொங்க கூறிவிட்டு புது மாப்பிள்ளையின் வீடு நோக்கி நடந்தார்.
இந்த செய்தியை தனது அம்மாவின் முலம் அறிந்த வனிதா தனது அப்பாவின்மீது வெறுப்புற்று வெடித்து அழுதாள்.'என்ன பிரச்சினை இந்த ஆளுக்கு யாரு எப்போ கல்யாணம் பண்ணா என்ன..அது என்ன அவுங்களுக்கு முன்னாடி எப்டியாது தன்னோட புள்ளக்கி பண்ணனும்னு நெனக்கிறது.. என்னமாதிரியான புத்தி இதுவென' மனதிற்குள் புலம்பி அழுதாள்.இதுல என்ன கௌரவம் அடங்கிருக்குனு எனக்கு புரியலம்மா' என அம்மாவிடம் தேம்பியவாறு குழந்தைத்தனம் வழிய கூறினாள் வனிதா.

'சம்மந்தி..சம்பந்தி என சத்தமிட்டார் வனிதாவின் அப்பா.'வாங்க சம்மந்தி என்ன திடீர்னு..போன் பண்ணிருந்தா நானே வந்திருப்பேனே' என்றவாறு வெளியே வந்தார் முத்துவின் அப்பா.
'முக்கியமான சமாச்சாரம் சம்மந்தி அதான் நேர்லயே வந்து பேசிட்டு போயிரலாம்னு..ஒன்னுமில்ல அந்த பிராடுகாரப்பய அவன் மயனுக்கு வர்ற இருபதாந்தேதி கல்யாணம் வச்சுருக்கானாம்.அதனால நம்ம வீட்டு கல்யாணத்த அதுக்கும் மொத முகூர்த்தத்துலேயே முடிச்சுப்புடனும்னு ஒரு வயிராக்கியத்தோடு வந்துருக்கேன்.நீங்க என்ன சொல்லுறிய..' என்று வந்த செய்தியை வாய்விடாமல் சொல்லி முடித்தார் வனிதாவின் அப்பா.
'என்ன சம்மந்தி சொல்லுறிய இப்டி திடுதிப்புனு வந்து..சரி எனக்கு ஒன்னும் பிரச்சினையில்ல பையனும் அவசரந்தான் படுறான்.அதனால நாம நம்ம கடமய செஞ்சுவிட்டுட்டா அது அதும் அதுக வேலயப் பாக்கும்.இருந்தாலும் கட்டிக்கப் போற பொண்ணுக்கிட்ட கலந்துகிட்டியளா..அதுவேற படிப்பு முடியனும் அது இதுனு சொல்லிக்கிட்டு இருந்துச்சே..'என்றவாறு இழுத்தார் முத்துவின் அப்பா.
'அதுக்கென்ன சம்பந்தி அது ஏதாச்சும் சொல்லிக்கிட்டு கெடக்கும்.நாம நம்ம கொரவத்ததான் பாக்கனும்.வேணும்னா கல்யாணம் பண்ணிக்கிட்டு படிச்சுட்டுப் போகுது யாரு வேணாம்னா' உறுதியாய் நின்றார் வனிதாவின் அப்பா.
இருவரின் ஆழந்த உரையாடலுக்கு இடையே சூடாக தேநீர் கொண்டுவந்து கொடுத்துப்போனாள் முத்துவின் அம்மா.
இதுல இன்னொரு சிக்கலும் இருக்கு சம்பந்தி அதான் யோசிக்கிறேன்..'முத்துவின் அப்பா தேநீரை உறஞ்சியவாறே இழுக்க..'என்ன சிக்கல்னு சீக்கிரம் சொல்லுங்க' அவசரப்படுத்தினார் வனிதாவின் அப்பா.
'அது என்னன்னா சம்மந்தி பொண்ணுக்கு இப்போதான் பதினேழு நடக்குது.சட்டப்படி கல்யாணத்துக்கு பதினெட்டு வயசு ஆகனும்.ஊருல எவனாவது ஒருத்தன் புரட்சி பண்ணுறேன் பொங்க வைக்குறேன்னு சமூக நலத்துறைக்கு போன் பண்ணி மைனர் பொண்ணுக்கு கல்யாணம் பன்றாய்ங்கனு சொல்லிப்புட்டா என்னா பண்ணுறது சொல்லுங்க..அதான் யோசிக்கிறேன்.இப்போலாம் காலம் ரொம்ப கெட்டுக்கெடக்கு சம்பந்தி' என கவலையோடு தெரிவித்தார் முத்துவின் அப்பா.
'என்ன சம்பந்தி நீங்கவேற புதுக்குண்ட தூக்கி போடுறிய.அதயெல்லாம் பாத்துக்கிட்டு இருக்க முடியுமா...நம்ம புள்ளகளுக்கு நாம கல்யாணம் பண்ணி வைக்கிறோம் யாரு கேட்பா..அதெல்லாம் பாத்துக்கிடலாம் சம்மந்தி கவலய விடுங்க..' அசால்டாக பேசினார் வனிதாவின் அப்பா.
'இல்ல சம்பந்தி எதுக்கு சொல்றேன்னா ஊருல இதுக்கு முன்னாடி ரெண்டு முனு சம்பவம் இது மாதிரி நடந்துபோச்சுல்ல..அன்னைக்கு அந்த குடும்பங்க பட்ட பாட்ட பாத்தோம்ல அதான் யோசிக்கிறேன் சம்மந்தி..நீங்க வேற எதிரிய உள்ளூர்லயே உருவாக்கி வச்சிருக்கிய..என்றவாறு யோசன சொல்லியபடி இருந்த முத்துவின் அப்பா பேச்சை மறித்து..'அதெல்லாம் ரொம்ப யோசிக்காதிங்க சம்மந்தி நாம நெனச்சா எல்லாம் நல்லபடியா முடியுமென ஒற்றைக்காலில் நின்ற வனிதாவின் அப்பாவின் மனமெங்கும் உதயாவின் அப்பாவே ஓடினார்.
'அப்புறம் என்ன சம்மந்தி நீங்க இவ்வளவு சொன்னதுக்கு பெறவு நான் பேசுறது நாயமில்ல..நாளயிலிருந்து ஆக வேண்டிய வேலைகள பாப்போம்' என்றவரை இடைமறித்த வனிதாவின் அப்பா 'நாளைக்கு எதுக்கு சம்மந்தி இந்தா இப்போவே வேலைகளத் தொடங்குறோம்..கல்யாணத்த ஜாம்..ஜாம்னு நடத்துறோம்' என சிரித்தார்.

'மொத வேலயா கல்யாணத்துல சாப்பாடு மொறயா போடனும்்எப்படியும் ஒரு ரெண்டாயிரம் பேருக்கும் கொறயாமனு சொன்ன சம்மந்தியின் ஆசையை புரிந்துகொண்ட முத்துவின் அப்பா..'அப்படி நல்ல சாப்பாடு போடுறதுன்னா நம்ம சுத்துவட்டாரத்துலேயே நம்ம செதம்பரம் சமையல் ஏஜெண்ட்தான்.அவன்தான் எத்தனை பேருக்குன்னாலும் கொறயில்லாம நெறைவா செய்யுற ஆளு.அது மட்டுமில்லாம அவனோட சமையல்லதான் சாம்பார்னா சாம்பார் மாரி இருக்கும்.ரசம்னா ரசம் மாரி இருக்கும்னு அங்கலாய்த்தார்.
அப்பறம் என்ன சம்பந்தி யோசிக்கிறது இருக்கு.இப்பவே போயி அந்த சமையல் ஏஜென்ட பாத்து அட்வான்ஸ் குடுத்துட்டு வந்துருவோம்னு தயாரானார்கள் சம்மந்திகள் இருவரும்.
வண்டியில் போகும்போதே திருமண வேலைகள் குறித்து உரையாடிச் சென்றவரகளின் பேச்சினூடே முத்துவின் அப்பா முனுமுனுத்தார்.
'சம்பந்தி எதுக்கும் ஒங்களோட பழைய சம்பந்தி வீட்டுமேல ஒரு கண்ணு வச்சுங்குங்க'
'சரி அத விடுங்க சம்பந்தி அத நான் பாத்துக்கிறேன் கவலைய விடுங்க' என்றார் வனிதாவின் அப்பா.
வாசலில் வந்து இறங்கியவர்களை வரவேற்ற சிதம்பரம்.விசயத்த கேட்டுத் தெரிந்துகொண்டு..'ரொம்ப சந்தோசம் மனசுக்குாநெறைவா பண்ணி குடுத்துருவோம்' என்றபடி எத்தனாந்தேதி என்றார்.
'வர்ற பதினான்காம் தேதி' என்றார்கள் சம்மந்திகள் இருவரும்.
சரி சிறப்பா செஞ்சுடுவோம்னு சொன்ன சிதம்பரம் சமையல் சாமானால்லாம் நிங்களே வாங்கி தந்திருறீயளா இல்ல மொத்தமா கான்ராக்டா பேசிடலாமா என்றார்.
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட சம்பந்திகள் என்ன யோசித்தார்களோ.'.இருக்கும் பிரச்சினைகளில் இதவேற சுமக்கனுமா என்றவாறு அதெல்லாம் ஓடி அலைஞ்சு வாஙகிகிட்டு இருக்க முடியாது..நாளுவேற நெருங்கிருச்சு அதனால நீயே மொத்த கான்ட்ராக்டா பேசிக்கப்பா..'என்றார்கள்.
'சரிங்க ரெண்டாயிரம் பேருக்குதானே.. அப்டினா நாளைக்கே எவ்வளவு தொகை என்னனு ரசீத கொடுத்துட்டு அட்வான்ஸ வந்து வீட்டுல வாஙகிக்கிறேன்' என்றார் சிதம்பரம்.
திரும்பி வரும் வழியில் என்னென்ன வேலைகள் இருக்கிறதென பட்டியலிட்டவாறும் எவ்வாறு வேலைகளை இருவீட்டாரும் பிரித்துக் கொள்வதென்றும் பேசியவாறு அவரவர் வீடடைந்தனர்.
திருமண நாள் நெருங்க நெருங்க வனிதாவுக்கு திருமண வயது நிறைவடையாத கவலை அவளது குடும்பத்தாரை வாட்டி வதைத்தது.வனிதாவின் அப்பா வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் ஒவ்வொரு நொடியும் உள்ளுக்குள் நாய் கண்ட பூனையாய் பயந்து மருகினார்.அவருக்கு யாரைப் பார்த்தாலும் எதிரியாகவே தெரிந்தனர்.அவரது பால்ய வயது சிறுபிள்ளை சண்டைகள் முதற்கொண்டு நினைவுக்கு வந்து படுத்தின.மகள் திருமணம் குறித்து யார் கேட்டாலும் ஒப்புக்கு பதிலளித்து ஓடி வந்து விடுகிறார்.நெடுநேரம் பேச்சுக்கொடுத்தால் தானே தமது மகள் 'மைனர்' என்று சிந்தை மறந்து சொல்லி விடுவோமென்ற பெரும்பயம் அவரை அவ்வாறு துரத்தியது.
வனிதாவின் அம்மாவோ இந்த 'மைனர்' விசயம் தெரிந்த நாள் முதல் தனது அக்கம் பக்கத்து சண்டைக்கார பெண்களையெல்லாம் சரிகட்டத் தொடங்கினாள்.யாரைப் பார்த்தாலும் வம்படியாய் பேசி 'கல்யாணத்துக்கு வந்துறங்க' என வாயார அழைக்கத் தொடங்கியிருந்தாள்.எதிர்படும் எல்லோரிடமும் 'எங்க குடும்ப மானமே இந்த கல்யாணம் நலலபடியா நடக்குறதுலதான் இருக்கு' என மனமுருகி பேசினாள்.
வனிதாவின் அண்ணனோ தனது நெருங்கிய நண்பர்களிடத்தில் செய்தியைக் கூறி உதவி கோரலானான். 'அந்த உதயா பையன் குடும்பத்து மேல ஒரு கண்ணு இருக்கட்டுமென' ஓயாமல் உணர்த்திக் கொண்டே இருந்தான். அவர்களும் அவனுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தனர்.
வனிதாவின் வீடு திருமண களை கட்டத் தொடங்கினாலும் வீட்டு ஆட்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் இருந்தார்கள்.நடக்கும் திருமண ஏற்பாடுகளை எவ்வித் ஈடுபாடுமின்றி வெறுமனே பார்த்துக் கொண்டிருந்த வனிதா தனது நிலைமை எந்தவொரு பெண்ணிற்கும் வரக்கூடாதென எண்ணினாள்.அப்பா சொல்வதையெல்லாம் கேட்டு வளர்ந்த அவளுக்கு இப்போது அப்பாவை நினைத்தால் அருவருப்பாய் இருநதது.தன்னை சந்திக்க வந்த பள்ளித் தோழிகளிடம் தனது நிலையெண்ணி வருந்தினாள்.வந்திருந்த தோழிகளில் ஒருத்தி ' நாங்க வேணும்னா நம்ம கணக்கு சார்ட்ட சொல்லி இதுமாரி வனிதாவுக்கு கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்கிறாங்கனு சொல்லட்டுமா' என கேட்டாள்.முதலில் ஏதோ நினைத்தவாறு சரியென்று அவசரமாய் தலையாட்டியவள் தனது அப்பா அம்மா புலம்புவதை நினைத்துப் பார்த்து வேண்டாவென மறுத்துவிட்டாள்.
வனிதாவின் அப்பாவும் அண்ணனும் மைக்செட்..பந்தல்..மேடை..கேமரா என ஒவ்வொன்றுக்கும் அச்சாரம் கொடுக்கும் வேலைகளில் மும்முரமாய் இருந்தனர்.ஒவ்வொரு வேலையும் சுலபமாக முடியும்போதும் திருமணமும் எவ்வித சலசலப்புமின்றி நிம்மதியாய் நடந்துவிட வேண்டுமென வழிகளில் கண்ட தெய்வங்களையெல்லாம் இருவருமே வேண்டினர்.
வனிதாவின் அண்ணன் தனது தங்கையின் !மைனர்' விவகாரம் குறித்து உதயா குடும்பத்தில் ஏதாவது பேச்சடிபடுகிறதா என்று தனது நண்பர்களை அனுப்பி சந்தேகம் வராதவாறு விசாரிக்கச் சொல்லியிருந்தான்.அவர்களும் உதயாவின் அக்கம் பக்கத்தாரிடம் விசாரித்த வகையில் அப்படி ஒன்றும் தெரியவில்லை என்றும் அவர்களும் திருமண வேலைகளில் சுழன்றுகொண்டு இருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர்.இந்த செய்தி உண்மையிலேயே வனிதாவின் அண்ணனுக்கு சற்று மன ஆறுதலை தந்தாலும் யாரையும் எளிதில் நம்பும் தைரியத்தில் அவன் தற்போது இல்லை என்பதை அவனது நடவடிக்கைகள் காட்டவே செய்தன.
சமையல் ஆர்டருக்கான அச்சாரம் வாங்க வந்த சிதம்பரம் வனிதாவின் அப்பாவிடம் 'அண்ணே ஒங்க ஒறவுக்காரங்க கல்யாணமும் வர்ற இருபதாந்தேதி இருக்காம்ல..அதாண்ணே பையன் பேருகூட உதயாவாம்ல..நேத்துதான் அப்பனும் மகனும் வந்து அச்சாரம் கொடுத்துட்டுப் போனாங்க' என்று அச்சாரம் வாங்க வந்த இடத்தில் அச்சாணியொன்றை சொருகிவிட்டுப் போனார்.தனது மனம் படும் பாடுகளுக்கும் சிதம்பரம் சொல்லிச் சென்ற செய்திக்கும் திக்கென்றிருந்தது வனிதாவின் அப்பாவுக்கு.'ஒருவேள நமக்கு போட்டியாத்தான் அந்த எடுபட்டப்பய இதே சமய ஏஜென்ட புடிச்சுருக்குறானோ' என நினைக்கும்போதே அவருக்கு நெஞ்சு தாங்கியது.
நாள் நெருங்க நெருங்க வனிதாவோட குடும்பத்தாருக்கு போன் பேசுபவர்களைக் கண்டாலே இதுகுறித்துதான் பேசுகிறார்களோ என்கிற சந்தேகம் தோன்றி அவர்களை சங்கடப்படுத்தியது.
ஒருநாள் சமையல் விசயமாக சிதம்பரத்திற்கு அழைத்த உதயாவிடம் பேச்சினூடே 'அந்த வனிதா பொண்ண ஒனக்குத்தான் கட்டனும்னும் இருந்துச்சாம்ல..இப்போ ஏதோ பெரச்சின ஆயித்தான் வேற எடத்துல முடிக்கிறாகலாம்லல என்று என்ன நினைத்தோ ஏற்றிவிட்டார்.அதற்கு உதயா 'அதெல்லாம் முடிஞ்சுபோன விசயம்ணே நாங்களே மறந்துட்டோம்' என்று இணைப்பை துண்டிக்க தயாரானவனை தடுத்து 'இல்ல தம்பி விசயமாத்தான் சொல்றேன் கேளு..அந்த பொண்ணுக்கு இன்னும் மொறயான கல்யாண வயசு வல்லயாம்.. ஊருக்குள்ள பேசிக்கிறாங்க..வேணும்னா சொல்லு சமூக நலத்துறையோட நம்பர் தாரேன் பேசு.அவுங்கள அசிங்கப்பட வைக்க ஒனக்கு கெடச்சுருக்குற கடைசி ஆயுதம்னு நெனச்சுக்கோ.இதெல்லாம் ஏன் சொல்றேனா ஒங்க அப்பா எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு அதுக்காகத்தான்..வேறொன்னுமில்ல' என்ற சிதம்பத்திரத்திடம் 'எங்கப்பா ஆசப்பட்டது அந்த நெலம்தான் அதுவே கெடச்சுருச்சு வேறென்ன வேண்டிக்கெடக்கு..சமையல நல்லா முடிச்சுக்குடுணே' பேசியவாறே துண்டித்தான் உதயா.
மாலைக்கு சொல்லிவிட்டு வருகையில் எதேச்சையாக மாப்பிள்ளை முத்துவை கடை வீதியில் பார்த்த வனிதாவின் அண்ணன் நடந்துள்ள வேலைகளைப் பற்றி விசாரித்தான்.உரையாடலின் ஊடே 'ஒங்க ப்ரண்ட்ஸ்கிட்டயும் சொல்லி வைங்க மச்சான் கொஞ்சம் உஷாரா இருக்கச் சொல்லி..ஏன்னா கல்யாணத்து அன்னைக்கி என்ன வேணாலும் நடக்கலாம்' என்றான். 'நானும் எல்லா ஏற்பாடும் பண்ணிகிட்டுதான் இருக்கேன் மச்சான் நீங்க பயப்படாம போங்க மச்சான்' என தைரியம் கொடுத்தனுப்பினான் முத்து.
வனிதாவின் திருமணத்திற்கு முதல் நாள் மதியம் தனது வேலையாளுடன் தான் வழக்கமாக வாங்கும் மளிகைக் கடைக்கு வந்த சிதம்பரம் கடைக்காரரிடம் 'அண்ணே நாளைக்கு சமையல் ஆர்டர் ஒன்னு இருக்கு இந்த லிஸ்ட்ல உள்ள சாமானெல்லாம் போட்டு வைங்க வாரேன்' என்றார்.மளிகை பட்டியலை வாங்கிப் பார்த்த கடைக்காரர் 'என்ன செதம்பரம் நானூறு பேருக்கா சமையல்' என்றார்.
'ஆமா அண்ணாச்சி போட்டு வையுங்க' சொல்லிச் சென்றார் சிதம்பரம்.
சமையல் பாத்திரங்களுக்கு சொல்லிவர போகும் வழியில் காலையில் தான் அழைத்த சமூக நலத்துறை எண்ணிற்கு தனது இன்னொரு எண்ணிலிருந்து அழைத்து 'ஊர்ல ஒன்னுந்தெரியாத பச்ச மண்ணுக்கெல்லாம் புடிச்சு கலயாணத்த பண்ண பாக்குறாய்ங்க சார்.இதுனாலயே ஏகப்பட்ட பொம்பள புள்ளகளோட படிப்பு பாழாப்போகுது சார்' என்று அக்கறை வழிய அளந்தார் சிதம்பரம்.
நீங்க ஒன்னும் கவலப்படாதிங்க சார்.சரியான நேரத்திற்கு நாங்க அங்கே இருப்போம்.எப்டி கல்யாணம் பன்றாய்ங்கனு நாங்களும் பாத்துடுறோம்' எதிர்முனையில் பேசியவர் உரத்தக் குரலில் ஆற்றுப்படுத்தினார்.
திருமண நாள்.அனைத்து ஏற்பாடும் சிறப்பாக நடந்தேறி பதினோரு மணிக்கு தாலிகட்டு என கூட்டம் பந்தெலெங்கும் நிறைந்து அலைமோதியது.வந்தவர்கள் ஒருவரையொருவர் நலம் விசாரித்தவாறு திருமண சீர்வரிசைகளை பார்வையிட்டு குறைகளை குறிப்பிட்டு பேசிக்கொண்டிருந்தனர்.வனிதாவின் அப்பா மற்றும் அவரது உடன் பங்காளிகள் வந்தவர்களை வரவேற்ற வண்ணம் அரக்க பறக்க நின்றிருந்தனர்.இதுவரை எந்த அசம்பாவிதமும் இல்லை என்பதே வனிதாவின் அப்பாவுக்கு பெரிய ஆறுதலாய் இருந்தது.இன்னும் ஒரு மணி நேரமும் இப்படியே ஓடிவிட்டால் போதுமென குல தெய்வத்தை நினைத்துக் கும்பிட்டுக்கொண்டார்.
இதற்கிடையே வனிதாவின் அண்ணனுடைய நண்பர்கள் குழு ஒன்று உதயா குடும்பத்தாரை வேவு பார்த்தவாறும் ஊருக்குள் ஏதும் அரசாங்க வாகனங்கள் வருகிறதா என்றவாறும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.
மணி பத்து முப்பது ஆகியிருந்தது.மீண்டும் ஒரு அழைப்பு பறந்தது சிதம்பரத்திடமிருந்து அதே எண்ணிற்கு.
அடுத்த பத்தாவது நிமிடம் அரசாங்க வாகனம் அங்கு வந்தடைந்தது அவ்வளவுதான் அந்த இடமே பதற்றமாகி அல்லோகலப்பட்டது.கூடியிருந்த பெருங்கூட்டம் சிதறியடித்து ஓடியது.வனிதாவின் அப்பா வயிற்றில் அடித்துக்கொண்டு 'அடப்பாவியளா என்னோட மானத்த வாங்கிப்புட்டியளடா' என அலறியடித்து ஓடினார்.
முத்துவின் அப்பாவோட ஆலோசனையின்பேரில் ஏற்கனவே முடிவெடுத்தபடி பெண்ணையும் மாப்பிள்ளையையும் பின்வாசல் வழியாக ஓர் இளைஞர் கூட்டம் வாகனத்திலேற்றி காட்டுப் பக்கமாய் கூட்டிப்போனது.குறிப்பட்ட தூரத்திற்குமேல் வகனம் செல்ல முடியாத அந்த பாதையில் பாதியில் இறங்கி மணமக்கள் முள்ளுக்காட்டிற்குள் ஓடினர்.அப்படி ஓடுகையில் அவர்கள் அணிந்திருந்த மாலைகளை முட்கள் கோர்த்து இழுத்தன.
அந்த இக்கட்டான தருணத்தில்கூட 'நம்ம அப்பா இன்னும் கொஞ்சம் பொறுமை காத்திருந்தால் இன்னும் மூன்று வருடங்களில் எப்படியொரு நல்ல நினைவாய் நிகழ்ந்திருக்கும் இந்த கல்யாணம்' என நினைத்தவாறே ஓடினாள் வனிதா.
ஒருவழியாய் அந்த அடர்ந்த முள்ளுக்காட்டில் கூட வந்த நான்கு நண்பர்கள் கைகளை மங்கள ஒலியெனத் தட்டி அட்சதை தூவ முத்து வனிதாவிற்கு தாலி கட்டினான்.வனிதாவின் மனமெல்லாம் முட்கள் குத்திய வலிகளில் துடித்தது.அப்பாவின் கௌரவம் தனது ஆசைகளை எல்லாம் அத்துவானக் காட்டில் தவிக்க விட்டதை எண்ணி வெடித்து அழுதாள் அவள்.
பத்து நிமிடத்தில் திருவிழா முடிந்த இடமென ஆகிவிட்ட திருமணப் பந்தலை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தது சிதம்பரத்தின் மனம்.மணமக்கள் வீட்டாரின் மனநிலையைப்போல பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தது குழம்பு.
மூன்று நாள் கழித்து சிதம்பரத்தின் வீடு நோக்கி வந்த சம்பந்திகள் இருவரும் சமையலுக்கு பேசிய மிச்சப் பணத்தை கொடுத்துவிட்டு விடைபெற்றுச் சென்றனர்.
திரும்பும் வழியில் இதேபோன்று இதற்கு முன்னால் ஆகிப்போன இரண்டு மூன்று திருமணங்களை நினைத்துப் பார்த்தார் முத்துவின் அப்பா.ஒன்றும் புரிபடவில்லை.
என்றாவது ஒருநாள் புரிபடக்கூடும் அவருக்கு அந்த மூன்று திருமணங்களுக்கும் சமையல் ஏஜென்ட் சிதம்பரம்தான் என்பது..

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...