சொந்தவீடு

உண்மைக் கதைகள்
5 out of 5 (9 रेटिंग्स)
कहानी को शेयर करें

"இந்த ஆளு ரெம்ப பிடிவாதக்காரரு தான் பா. கடைசியா சொந்தமா வீடு கட்டி முடிச்சுட்டாருல..." என்று ஒரு சத்தம் மட்டும் தனியே ஒலித்தது சோமு வாயிலிருந்து. அதுவரை ஆங்காங்கே அரசல்புரசலாக பேசிய வார்த்தைகளின் சத்தம் எல்லாம் கலந்து இரைச்சல் போல் ஒலித்தது சட்டென்று தணிந்தது.

"அட நீங்க வேற ஏன்யா., மனுசன் கல்லு! நினச்சத முடிச்சுட்டான்ல..." என்று சுந்தரமூர்த்தி பதில் கூறினார்.

"சரி தான். நல்ல மனுசன்..." என்று பெருமூச்சு விட்டார் சோமு.

"இவரோட பசங்க எல்லாம் எப்போ வராங்க சுந்தரம்?" என்றார் நல்லகண்ணு.

"அவருக்கு ஒரு பொண்ணு தானாம்பா. சொல்லியாச்சு... வாக்கப்பட்ட ஊருல இருந்து புள்ளைங்களோட காத்தாலையே கெளம்பியாச்சாம். சனியம்பிடிச்ச இந்த ரயிலு எங்கையோ நிறுத்திப்புட்டானாம்... வந்துரும் அந்த புள்ள." என்றார் சுந்தரமூர்த்தி.

"பொண்ணு மட்டும் தானா? சொந்தக்காரங்கனு யாரும் வரலையா...? இல்ல யாரும் இல்லையா?" என்று இழுத்து கேள்வி எழுப்பினார் சோமு.

"அவனுக்கு ஒரு தங்கச்சி இருக்கு. வந்துட்டு இருக்கும் அந்த அம்மாளும்." என்று பதில் அளித்தார் சுந்தரமூர்த்தி.

சில நேரம் இடம் சற்று அமைதி ஆனது. பின்னால் சில பல சத்தங்கள் வந்தாலும் சுந்தரமூர்த்தியை அது எட்டவில்லை. இவருக்கும் அவருடைய நண்பர் கதிரேசனுக்கும் இருக்கும் பழைய நியாபகங்கள் கண் முன்னே வந்து போனது.

<<< முதன்முதலாய் கதிரேசனை சுந்தரமூர்த்தி பார்க்கும் பொழுது ஒரு கையில் உடுப்பு அடைத்த பெட்டியும் இன்னோரு கையில் வயது வந்த ஒரு பெண்ணும் இருந்தாள். தங்கை என கூறிய போதும் நம்பாத சமூகம் வீடு தர மறுத்து, நொந்து போய் கடைசியாய் இங்கு வந்து நின்றான். அன்று தான் கதிரேசனை முதன் முறையாக சுந்தரமூர்த்தி பார்த்தாலும் அவனுக்குள் ஏனோ இனம்புரியாத சிநேகம் உண்டானது. அதன் விளைவாக தன்னுடைய தந்தையையும் வீடு வாடகைக்கு தர சம்மதிக்க வைத்து அவர்கள் இருவரையும் குடி வைத்தான்.

மிகவும் அமைதியாக இருந்த கதிரேசனும் நாட்கள் ஆக ஆக சுந்தரமூர்த்தியுடன் நட்பாக பழக ஆரம்பித்தான். அந்த நட்பு பின்னாளில் மிகவும் பற்றுக்கொண்டு எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் அளவு வந்தது. இதற்கு முன்பு வரை கதிரேசனின் பின்புலம் பற்றி சுந்தரமும் கேட்டது இல்லை. அன்று தான் எல்லாவற்றையும் சொன்னான் கதிரேசன்.

அவனுடைய அப்பா குடித்து குடித்து எப்பொழுதும் தகராறு செய்தவே வழக்கமாக கொண்டவராம். அதனால் எங்கு வாடகைக்கு போனாலும் அதிகபட்சம் 6 மாதங்கள் தான். மீண்டும் வேறு ஒரு இடம் தேடி அலைவது, மறுபடியும் தகராறு... நன்றாக இருந்த ஒருவர் தானம். ஏதோ குடும்பத்துக்குள் ஏற்பட்ட சொத்து பிரச்சனையில் அவனுடைய அப்பாவை சொந்தம் ஏமாற்றி விட, தனக்கென்று கடைசியாக இருந்த வீடும் பறி போன சோகத்தில் தான் முழு நேர குடிகாரன் ஆகி போனாராம். இப்படியே போய்க்கொண்டிருந்த வாழ்க்கை ஒரு நாள் முற்றிலும் மாறியது கதிரேசனுக்கு. அன்றும் அப்படி தான், குடித்துவிட்டு ரயில் தண்டவாளத்தில் படுத்திருக்கும் சேதி கேட்டு அவன் அம்மாளும் அங்க செல்ல, எதிர்பாராத நேரம் பார்த்து வந்த ரயில் இருவரின் உயிரையும் பறித்து சென்றுவிட்டது. அவர்கள் இருவரின் மறைவிற்கு பிறகும் சில காலம் வரையில் ஊரில் இருந்த இருவரும், ஊராரின் வார்த்தைகளும் பரிதவிக்கும் சொல்லும் கேட்டு கேட்டு நொந்து போய் ஊரே வேண்டாம் என எண்ணி இங்கு வந்த கதை முழுதும் சொல்லி முடித்தான்.

அதுவரை கதிரேசன் மேல் நம்பிக்கை இருந்தாலும் ஓரமாய் இருந்த சிறு சந்தேகமும் மொத்தமாய் சிதைந்தது சுந்தரமூர்த்திக்கு. மேலும் கதிரேசன் மேல் சுந்தரமூர்த்திக்கு மிகுந்த மதிப்பும் வந்தது. அப்படியே நாட்கள் செல்ல செல்ல தனக்கு ஒரு சொந்த வீடு கட்டி ஒரு நாளாவது உள்ளிருக்க வேண்டும் என்ற ஆசையையும் அப்பொழுது தான் சொன்னான். அதற்கு தன்னால் முடிந்த வரை சிக்கனமாய் செலவு செய்து சேகரித்தும் வைத்தான்.

ஆனால் இவ்வளவு ஆசையிலும் அவன் தங்கைக்கு அவன் செலவு செய்வதை நிறுத்தவில்லை. அவள் ஆசைப்பட்டத்தை முடிந்த அளவு நிறைவேற்றி தான் வைத்தான். அவள் ஆசைப்படும் சுடிதாரும் சரி, வளையலும் சரி... கண் மையும் சரி, கால் கொலுசும் சரி... முடிந்தவரை எல்லாம் செய்தான். வயது வந்த பெண் என்பதால் அவளுக்கு வரங்களும் நிறைய வரத்தான் செய்தது. வந்தவற்றில் முக்கால்வாசி "எவ்வளவு போடுவிங்க?" என்பது தான் முதற்கேள்வியாக இருந்தது. தன்னால் முடிந்த அளவு சேகரித்து வைத்த பணம் மொத்தமும் போட்டு ஒரு நல்ல மாப்பிளைக்கு கட்டியும் கொடுத்தான். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவன் கண்களில் கண்ணீரை பார்த்ததே இல்லை இந்நாள் வரை சுந்தரமூர்த்திக்கு. அதுபோக இங்கு வந்த நாள் முதல் வீட்டு வாடகை ஒரு மாதம் கூட தராமலும் இருந்தது இல்லை.

சரஸ்வதி புருசன் வீட்டிற்கு போன அடுத்த சில மாதங்களிலே கதிரேசனுக்கும் பெண் அமைந்தது. வீடு கட்டி தான் திருமணம் செய்வேன் என்று சொன்னவனை சுந்தரமூர்த்தி தான் சமாதானம் செய்து கலியாணம் செய்து வைத்தார். முதலில் கதிரேசன் மறுத்தாலும் அந்த பெண்ணை பார்த்தவுடன் மனம் மாறிக்கொண்டான்.

கதிரேசனுக்கு வந்த மனைவியோ அவனை நன்றாக புரிந்து கொண்டவள். அவனுடைய வீடு கட்டும் ஆசையை, மீண்டும் புதுப்பித்தவளும் அவளே தான். ஆமாம், இருவருக்கும் இடையில் இருந்த புரிதல் அலாதியானது. அன்பும் சரி, அரவணைப்பும் சரி சமமாகவே பகிர்ந்து கொண்டனர். சரஸ்வதி மேல் கதிரேசனுக்கு எவ்வளவு பாசம் இருந்ததோ அதே அளவு அவன் மனைவிக்கும் இருந்தது. நாட்கள் போக போக கதிரேசனும் அவன் மனைவியும் இணைந்து சுந்தரமூர்த்தி வீட்டிற்கு அருகினில் இருந்த ஒரு காலி இடத்தை வாங்கினர். அப்பொழுது கதிரேசனின் கண்களில் இருந்த ஆனந்தத்தை பார்த்து சுந்தரமூர்த்திக்கும் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. கதிரேசனும் சுந்தரமூர்த்தியும் வெளியில் அதிகம் பகிராவிட்டாலும் அவர்கள் நட்பு இறுகி இருந்தது.

நிலம் வாங்கி சில நாட்கள் வரையில் வீடு கட்ட பணம் சேமித்துக்கொண்டே இருந்தனர் இருவரும். இதற்கிடையில் அவன் மனைவி கர்ப்பம் ஆக சில நாட்கள் பரவசமாகவே இருந்தான் கதிரேசன். அதற்கு முன்பு வரை இறுகிய முகத்தோடு தான் இருந்த கதிரேசனை பார்த்த சுந்தரமூர்த்திக்கு இது வித்தியாசமான மகிழ்ச்சியை தந்தது. ஆனால் பாவம் கதிரேசன், அவன் சந்தோசம் மீண்டும் குன்றி போய் தான் விட்டது.

பிரசவ வலி வந்து மருத்துவமனை கொண்டு செல்ல, தாய் இறந்து சேய் மட்டும் அவன் கைகளில் வந்து சேர்ந்தது. அவ்வளவு ஆசையாய் வாழ்ந்த நாட்கள் அவன் கண்முன்னே சென்றதை சுந்தரமூர்த்தியும் காண தவறவில்லை... ஆறுதல் சொல்லி அருகினில் இருந்தாலும் அந்த சேய் முகம் பார்த்தே இருந்தான் கதிரேசன்.

அவன் மனைவி போனபின்பு வீடு கட்டும் ஆசை அவன் அடி மனதில் புதைந்து விட்டது. அவன் மகளோடு மட்டும் உறவாடி அவளுக்கு பிடித்ததை மட்டும் செய்து தன் நாட்களை கரைத்தே கொண்டான் கதிரேசன். பேதையாய் அவளிருக்க களிமண் பொம்மை வாங்கி தந்தான். பெதுமையாய் அவளிருக்க நகரும் விளையாட்டு சாதனம் பரிசளித்தான். மங்கையாய் அவள் மாற அவள் ஆசை கேட்டு செய்ய துவங்கினான். மடந்தையாய் அவளிருக்க இவனுக்கு தாயாய் அவள் மாறினாள். அரிவை பருவம் எய்திட அவளும், மாற்றான் தோட்டத்து மல்லிகை ஆகி போனாள். இதுநாள் வரை அவன் கண்களுக்கு தனிமை அண்ட விடாமல் காத்த மகளும் இப்பொழுது கணவன் வீட்டிற்கு செல்ல, அப்பொழுது தான் மனதிற்குள் புதைந்த அணைத்து நினைவுகளிலும் மனம் சென்று வந்தது.

முன்னமே வீடு கட்டும் ஆசை இருந்த கதிரேசனுக்கு அவன் மனைவி விட்டு சென்ற இடம் இன்னும் அவன் மனதை தூண்டியது. அதன் விளைவு தான் இதுநாள் வரை ஆசையை தோளில் சுமந்த மகளின் பேச்சையும், அவன் தங்கை பேச்சையும் மீறி வீடு கட்ட வைத்தது. "இனி வீடு கட்டி என்னப்பா பண்ண போற... பேசாம இடத்த உன் மகளுக்கு கொடுத்துட்டு சும்மா இருந்துறேன்பா" என்று ஊர்வாய் சொன்னதை பொருட்படுத்தாமல் கட்டியே முடித்தான். மிக பிரமாண்டம் என்று சொல்லும் அளவு வீடு இல்லை தான். ஆனால் அவன் ஆசையும் அவன் துணைவி ஆசையும் இணைந்து உருவான வீடு தான் இது. முக்கால் சென்ட் வீடு, கால் சென்ட் வெற்று இடம். இவ்வளவு தான் அவன் ஆசை. ஒருவழியாக எல்லாம் முடித்தான் கதிரேசன். இன்று தான் அவன் குடியேறும் நாள். >>>

இவ்வாறு சுந்தரமூர்த்தி யோசித்து கொண்டிருக்கும் போதே ஒவ்வொருவராய் வரும் சத்தம் கேட்க துவங்கியது. இவ்வளவு நேரம் நினைவுகளை அசை போட்ட சுந்தரமூர்த்தி சத்தம் கேட்டு வாசல் நோக்கினார்.

வாசல் அருகினில் வைக்கப்பட்ட தேநீர் வாலி அதிகம் சீண்டாமல் ஓரமாய் நின்று வருவோரை வரவேற்றது. வீட்டின் முன்பு போடப்பட்ட பந்தல் சூரியன் சுட்டெரிப்பதை கொஞ்சம் தடுத்து வைத்தது. இரண்டடுக்கு வாசற்படி வருவோரின் காலடிகளை இடறி விடுவது போல் பார்க்க, கொஞ்சம் சுதாரித்து வந்தவர்கள் தாவி தப்பித்து கொண்டனர். வாசற்படி நோக்காமல் வீட்டினுள்ளே எட்டிப்பார்த்தே வந்தவர்கள் கொஞ்சம் இடறி உள்ளே வந்தனர்.

அப்பொழுது தான் தூரத்தில் வந்த ஒரு உருவம் விம்மி விம்மி வருவது தெரிந்தது. ஓட்டமும் நடையுமாக வேக வேகமாக வந்தது. அருகினில் வர வர தான் தெரிந்தது சரஸ்வதி என்று. பஸ் ஸ்டாண்டிலிருந்து வேக வேகமாக வந்திருப்பாள் போல. உடல் முழுதும் வேர்த்து விறுவிறுத்து வந்தாள். அவள் வந்ததை பார்த்த சோமு மற்றும் சுந்தரமூர்த்தி மனைவி அவள் வரும் திசை நோக்கி செல்ல, சுந்தரமூர்த்தியும் எந்திரித்தார். அதற்குள் வீட்டின் உள்ளையே பார்த்து வந்த சரஸ்வதி படி ஏறி உள்ளே நுழைய கால் இடறி கீழே விழுந்தாள்.அவள் விழுகவும் சுந்தரமூர்த்தியின் மனைவி அவளை பிடிக்கவும் சரியாக இருந்தது. கால் இடறிய வலியையும் பொறுட்படுத்தாமல் தவழ்ந்து தத்தி கதிரேசன் நோக்கி சென்றாள்.

அழுது சிவந்து தடம் பதிந்த கன்னத்தோடு வந்த சரஸ்வதி கதிரேசன் முகம் பார்க்க, "ஓ" என ஓலமிட்டு மயங்கி விழுந்தாள். இவள் கீழே விழுந்ததை கதிரேசன் பார்க்கும் நிலைமையில் இல்லை. அவனுக்கு என்று பிரத்தியேகமாக குளிரூட்டப்பட்ட பெட்டியில் அமைதியாய் படுத்திருந்தான்.

உண்மை தான். புது வீடு எல்லாம் கட்டி முடித்து இன்று தான் குடியேற வேண்டிய நாள். சாமான் சட்டு எல்லாம் எடுத்து இந்த புது வீட்டில் வைத்தாகிவிட்டது. சுந்தரமூர்த்தியின் வாடகைவீட்டில் இருந்து வெளியேற வேண்டிய கடைசி நாள். விடிந்தால் புது மனையில் வருமுன்னமே இரவு தூக்கத்திலையே ஏற்பட்ட நெஞ்சு வலியால் அப்படியே இறந்து போயிருந்திருக்கிறார். விடிந்தும் கதிரேசன் வெளி வராததால் சுந்தரமூர்த்தி உள்ளே சென்று பார்க்க, மூச்சு இல்லாததை உணர்ந்து எல்லாருக்கும் தகவல் சொல்லி இருக்கிறார்.

தன் ஆசைப்படி ஒரு நாள் கூட சொந்த வீட்டில் கதிரேசனால் வாழ முடியவில்லை. ஏன் ஒரு அடி எடுத்து வைக்கும் முன்னமே எல்லாம் நிராசையாகி போனது. சொந்தமாய் கட்டிய வீட்டில் தான் கால் பதிக்க முடியவில்லை. கடைசியாக தன் சொந்த வீட்டில்.., இல்லை இல்லை சொந்த இடத்தில் 8 அடியில் அழகான மரப்பெட்டியில் படுக்கை செய்து நிம்மதியாய் உறங்க தயாரானார் கதிரேசன்.

அவரின் இந்த சொந்த வீட்டின் கனவும் அவ்வளவு எளிதாய் நடக்கவில்லை. அவர் உடலை எரிக்க சொல்லி நடந்த சில விவாதம் எல்லாம் கடந்து இறந்தும் ஒருவழியாக தனக்கென இந்த வீட்டில் உறங்க சென்றார் கதிரேசன். இப்பொழுது அவரை யாரும் எழுப்ப போவது இல்லை. இனி நிம்மதியாக கதிரேசன் அவருடைய வீட்டில் உறங்குவார் சொந்த வீட்டில்…

©Samcb

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...