இது ஒரு சாமானியனின் குரல்!!!

அரசியல்
5 out of 5 (16 रेटिंग्स)
कहानी को शेयर करें

இது ஒரு சாமானியனின் குரல்!!!

இங்கு டியூஷன் எடுக்கப்படும் என்ற குட்டிப் பலகையைத் தாங்கியிருந்த கேட்டினை திறந்து பக்கவாட்டில் இருந்த படிக்கட்டில் மூச்சுவாங்க வேகமாக மேலே சென்ற பெண்மணியின் கையில் ஒரு சிறுவனின் கை அடங்கியிருந்தது.

“இதுதான் நீ படிப்பு சொல்லித் தர லட்சணமா? அங்கங்க கும்பலா விளையாட விட்டிருக்க? இப்படி இருந்தா பிள்ளைங்க எப்படி படிச்சு மார்க் எடுப்பாங்க?” என்று படப்படவென பொரிந்து தள்ளியவரை நிதானமாக ஏறிட்ட சக்தி,

“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை?”

“என்ன பிரச்சனையா? டியூஷன் போறதுக்கு முன்னாடியே ஏதோ கொஞ்சம் மார்க் எடுத்துக்கிட்டு இருந்தான்...இப்ப என்னடான்னா அதைவிட கீழ மார்க் வாங்கியிருக்கான்...அவன் இங்க வந்த ரெண்டு வாரத்துல நீ என்னதான் சொல்லி கொடுத்த? ஏதோ ஒரே தெருவுல இருக்கோம் பசங்களை நல்லா மார்க் வாங்க வைப்பன்னு பார்த்தா இப்படி முதலுக்கே மோசம் பண்ணியிருக்க?”

“வந்ததுல இருந்து சும்மா மார்க் மார்க்ன்னு எதுக்கு ஏலம் விட்டுட்டு இருக்கீங்க? மார்க் மட்டும் போதும்னா உங்க பையனுக்கான இடம் இதில்ல...”

“நாலுபேரு முன்னாடி சொல்ற அளவுக்காவது மார்க் வாங்கணும்னுதானே ஸ்கூல்ல படிக்கறது இல்லாம டியூஷன் சேர்க்கிறது...நீ குறைவா பீஸ் சொல்லும் போதே யோசிச்சிருக்கணும்...மிச்சம் பண்றேன்னு பையன் படிப்புல குறைவைக்க முடியுமா? அவனை படிக்க வைச்சு மனப்பாடம் செய்ய வைச்சு அதை எழுத வைக்கற அளவுக்கு எங்களுக்கு நேரமும் பொறுமையும் இல்லைன்னுதானே உங்கிட்ட அனுப்பினது?”

“மனப்பாடமா?”என்று நக்கலாக கேட்ட சக்தி அருகே பத்தாவது படிக்கும் பையனை அழைத்தாள்.

“இவனும் உங்க பையனும் பத்தாவதுதான் படிக்கறாங்க...”என்ற சக்தி இருவரையும் ஒன்றாக முன்னே நிறுத்தி இருவருக்கும் பொதுவாக ஒரு கேள்வியை முன்னே வைத்தாள்.

“சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் எத்தனை பேர்? இப்போ நம்மோட முதலமைச்சர் யாரு? அவரை எப்படி தேர்ந்தெடுத்தாங்க?”என்ற கேள்விக்கு அந்த பெண்மணியின் பையன் பதில் சொல்ல தெரியாமல் முழித்தான்.

“போன ஆட்சியில நம்ம குமாரசாமி எப்படி முதலமைச்சரானாரு? இப்ப யார் ஆட்சி செய்யறா?”என்று கேட்ட சக்தியின் பார்வை அந்த பெண்மணியிடமும் சென்றது.

அதற்கு அந்த பெண்மணி,“போனமுறை அவங்க கட்சி ஜெயிச்சாங்க இந்த முறை இந்த கட்சி ஜெயிச்சாங்க...அதனால அவங்கதான் முதலமைச்சர்...” என்றார் பதில் சொல்லிய பெருமையில்.

“எப்படி மொத்த தமிழ்நாடும் அந்த ஒருத்தருகே ஓட்டு போட்டாங்களா?” என்று பையனிடம் கேட்க அவனோ ஆம் என்று குழப்பமாக தலையசைக்க,

“இல்ல...ஊருக்கு ஒருத்தரா நிற்பாங்க...” என்றார் பெண்மணி.

“சரி!அப்படி எத்தனை பேரு நிற்கணும் எத்தனை பேரு ஜெயிக்கணும்... சென்னை ஒரு ஊர்தானே ஆனா அதுல ஏன் அத்தனை பேர் நின்னாங்க?” என்று சக்தி கேட்டதற்கு,

“அது.....அது.....”என்று அந்த பெண்மணி இழுத்தார்.

“நீ சொல்லு பிரபு...”என்றாள் அருகே இருந்தவனிடம்.

“அவன் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிறான்...என் பையனுக்கு தெரிஞ்சது கூட அவனுக்கு தெரியாது...”

ஆனால் பிரபுவோ, “சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை மொத்தம் 234... நம்ம தமிழ்நாட்டுல 234 தொகுதி பிரிச்சு அதுல கட்சி சார்பா ஒவ்வொருத்தரையும் நிறுத்தறாங்க... அவங்கள்ல யாரு வேணுமோ அவங்களை மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கறாங்க...234 பேர்ல 130 பேருக்கு மேல எந்த கட்சி ஜெயிக்குதோ அதுல ஒருத்தரை அவங்க ஒருமனதாக செலக்ட் பண்ணி முதலமைச்சராக்குறாங்க…”

“இப்ப நடந்த தேர்தல்ல நம்ம எம்கேன் கட்சி 150 இடத்துக்கு மேல ஜெயிச்சு ஆட்சியைப் பிடிச்சவங்க அவங்க கட்சி சார்பா கண்ணனை முதலமைச்சராக்கி இருக்காங்க...ஒருவேளை இந்த 150 பேர்ல ஒரு ஐம்பது பேர் திடீர்னு எதிர்கட்சிக்கு தாவிட்டா அப்பவே ஆட்சி மாறும்...”என்றவன் மேலும் அவர்களின் தகுதி, வயது, வரம்பு என எல்லாவற்றையும் விளக்கமாக சொன்னான்.

அவன் சொல்வதை கேட்ட அந்த பெண்மணி மனதுக்குள் மெச்சிக்கொண்டாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாது,

“இதெல்லாம் சொன்னா மார்க் வந்துடுமா?”

“பிரபு உன் மார்க் என்னடா?”

“சோசியல்ல 95 அக்கா...”

அந்த பெண்மணி ஆச்சர்யத்தில் கண்களை விரிக்க,

“பசங்களுக்கு புத்தகப்புழுவா படிப்பை சொல்லிக் கொடுக்கறதை விட புத்தகத்துல இருக்கறதோட சேர்த்து உலகத்தையும் சொல்லி தர்றதைதான் நான் செய்யறேன்...”என்றாள் சக்தி பொறுமையாக.

“சும்மா இந்த கதையெல்லாம் வேணாம்...பையனை படிக்க வைச்சு மார்க் எடுக்க வைக்காம இந்த மேடைப் பேச்செல்லாம் வேணாம்...”


“உங்க பையனை மார்க் எடு படி படின்னு சொல்லி அவனைப் போட்டு ரொம்ப படுத்தாதீங்க...அதனாலேயே படிக்க நினைக்கறவனுக்கு கூட அந்த எண்ணம் வராது...”

“உனக்கு என்ன சொல்லாது?அவன் படிக்கலைன்னா அவனோட எதிர்காலத்தை நீயா பார்த்துக்க போற?சும்மா நியாயம் பேசிக்கிட்டு...நீ இங்க படிச்ச வரைக்கும் போதும்...வாடா...”

“அம்மா! இந்த அக்கா நல்லா ஈஸியா சொல்லிக் கொடுக்கறாங்கம்மா... இப்பதானே இங்க சேர்ந்திருக்கேன் அடுத்த பரிச்சையில நானும் நல்ல மார்க் எடுப்பேன்மா...”என்றான் சிறுவன் ஆர்வமாக.

“உனக்கு என்ன பைத்தியமா?இங்க இருந்து டைம் பாஸ் பண்ணலாம்னு நினைக்கறியா?வாடா...”என்றவர் அவனை இழுத்துக் கொண்டு சென்றாலும் புலம்பல் நிற்கவில்லை.

அந்த பெண்மணி கீழே இறங்கி வர எதிரே வந்தவரிடம்,

“உங்க மருமகளுக்கு நாட்டை திருத்தணும்னா கட்சி மேடையில பேச சொல்லுங்க சுந்தரிக்கா...அதை விட்டுட்டு புள்ளைங்க படிப்புல விளையாட வேணாம்னு சொல்லுங்க... இதுக்கா பணம் செலவு பண்ணி அவ்வளவு பெரிய ஸ்கூல்ல சேர்த்து விட்டிருக்கோம்...”என்று புலம்பியவாறு பையனை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.


வீட்டின் உள்ளே சென்ற சுந்தரியோ மகனிடம் மருமகளை பற்றி புகார் வாசிக்க அவனோ காதில் வாங்காது விலகினான்.
“பொண்ணு பார்க்க வரும் போது பார்க்க அமைதியா இருக்கியேன்னு நினைச்சு என் பிள்ளைக்கு கட்டிவைச்சேன்...ஆனா இப்ப இந்த வீடு அமைதியா இல்ல...தினமும் ஒரு பஞ்சாயத்தை வைக்கறியே உனக்கு கொஞ்சமும் அலுக்காதா?”

“எனக்கு சரின்னு பட்டதைத்தானே செய்யறேன் இதுல என்ன தப்பிருக்கு அத்தை?”


“இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சலில்லை...”என்று நொடித்துக் கொண்டார்.

“நான் கடைக்கு போய்ட்டு வர்றேன் அத்தை”

கையில் க்ளவுஸும் முகத்தில் முகக்கவசமும் போட்டுக்கொண்டு பொருள் வாங்க வந்த சக்தி கூட்டத்தோடு நிற்காமல் ஒரு ஓரம் ஒதுங்கி நின்றிருந்தாள்.

ஆனால் மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் முந்தியடித்து வாங்குவதைப் பார்த்து பெருமூச்செடுத்து,

“ரேகா அக்கா ரெண்டு நிமிஷம் நின்னுதான் வாங்குங்களேன்...பாமா அக்கா கொஞ்சம் தள்ளி நில்லுங்க...” என்று இங்கிருந்தே குரல் கொடுக்க அது அவர்கள் செவியில் விழுந்தது போல தெரியாததால் சோர்ந்து போனாள்.

கொஞ்சம் கூட்டம் குறைந்ததும் இரண்டு பேருக்கு பின்னாடி நின்ற சக்தி முன்னே பொருள் வாங்குபவர்களை கவனிக்க,


“அண்ணா!ஒரு கிலோ மிளகா விலை இருநூறு ரூபாய்க்கு மேல கண்டிப்பா கிடையாது...ஆனா நீங்க நூறு கிராம் மிளகா இருபத்தைஞ்சு ரூபான்னு போட்டிருக்கீங்க...அவங்க கையில இருக்க மாவு பொருள் காலாவதியாகி இருக்கு...”

“இப்ப என்னம்மா அநியாயம் பண்ணிட்டேன்...வாங்கற பொருள் மேல நான் லாபம் வைச்சு விற்கமாட்டேனா... இது என்ன இருபது நாள்தானே ஆச்சு... பொருள் என்ன கெட்டா போச்சு...சும்மா வந்து வியாபாரத்தை கெடுத்துக்கிட்டு...”


“மக்களை தள்ளி நிக்க வைச்சு பொருள் கொடுக்கல...உங்க கையில சானிடைசர் போடாம பணம் வாங்கி கொடுக்கறீங்க... லாபம் பார்க்கலாம் ஆனா பேராசை படக்கூடாது...கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம காலாவதியான பொருளை விற்கறீங்க...இதை கேட்டதற்கு என்னை பேசறீங்க?”

“லாக்டவுன்ல பொருள் சுலபமா கிடைக்கிறதே பெரிய விஷயம்...இங்க வாங்க உனக்கு விருப்பம் இல்லைன்னா கிளம்பி போயிட்டே இரு...”

“சுத்துவட்டாரத்துல கடைங்க இல்லைன்னு எல்லாரும் உங்ககிட்ட வர்றதால இப்படி அநியாயம் பண்றீங்களா? இருங்க கம்பளைண்ட் பண்றேன்...”

“பண்ணிக்கோ எனக்கு என்ன பயமா என்ன?”

“எதுக்கு சக்தி இப்ப சும்மா கத்திக்கிட்டு தேவையில்லாம பேசிட்டு இருக்க?”

“ஆமா! நீங்க சொல்றது சரிதான் இது எனக்கு தேவையில்லாததுதான்... எனக்கு ஆவின் தயிர் பாக்கெட் ஒன்னு கொடுங்க…இஞ்சி,பச்சைமிளகாய் ஐஞ்சு ரூபாக்கு கொடுங்க...”

கடைக்காரரும் அவள் கேட்டதை கொடுக்க அவர் கொடுத்த அளவில் சக்தி அழுத்தமாக ஏறிட அவரோ அதை சற்றும் சட்டை செய்யாமல் தயிர் பாக்கெட்டை கொண்டு வந்து கொடுத்தார்.

“நான் ஆவின் கேட்டேன்...எதுக்கு இத தர்றீங்க?”

“ஆவின் இல்ல...”

“ஓ!அப்ப ஹாட்ஸன் கொடுங்க...”


“வேற எதுவும் இல்ல இதான் இருக்கு... வேணும்னா எடு இல்லைனா விடு...”

“நானும் உங்களை மரியாதை இல்லாம பேசட்டுமா...”

“எதுக்கு இப்ப சும்மா வம்பு பண்ணிக்கிட்டு... இதான் இருக்கு...” என்றார் எரிச்சலாக.

அவர் கொடுத்த ஊரு பேரு தெரியாத தயிர் பாக்கெட்டை கையில் எடுக்க அதுவோ கட்டிப்போயிருந்தது…அதிர்ந்து அதன் காலத்தேதி பார்க்க அது காலாவதியாகி ஐந்து நாள் ஆகியிருந்தது.

“உங்ககிட்ட என்ன பொருள் கேட்கறமோ அதை மட்டும் கொடுங்க...நீங்க வாங்கின பொருளெல்லாம் வித்து போக எங்ககிட்ட தள்ளாதீங்க...இது ஐஞ்சு நாள் முன்னாடியே முடிஞ்சு போச்சு...தயிரை ஐஸ் கட்டியாக்கி வைச்சிருக்கீங்க...”

“உனக்கு எந்த பொருளும் இல்லை இடத்தை காலி பண்ணும்மா...”என்றவர் தயிர் பாக்கட்டை கையில் வாங்கி கொண்டு பணத்தை திருப்பி வைக்க கோபமாக வீட்டிற்கு வந்தாள்.
அதற்குள் கடைக்கு வந்திருந்த பெண்மணிகள் சுந்தரிக்கு செய்தி வழங்கியிருக்க சுந்தரி மறுபடியும் ஆரம்பித்தார்.

அரைமணி நேரம் கழித்து வெளியே காய்கறி விற்கும் குரல் கேட்கவும் முகக்கவசத்தோடு வெளியே வந்த சக்தி பார்த்தது மூன்று சக்கர சைக்கிளில் மூட்டையாக சில காய்கறிகளை புதிதாக வைத்திருப்பவரைதான்...

“எவ்வளவு அண்ணா?”

“கிலோ பத்துரூபாம்மா...”

பச்சை பசேலென்று புதிதாக இருந்த காய்கறியின் இந்த குறைந்த விலையில் ஆச்சர்யமாக,

“என்னண்ணா சொல்றீங்க?”

“இதான்ம்மா நிஜவிலை...இந்த லாக்கடவுனால வெளியூருக்கு எங்கும் சுலபமா அனுப்ப முடியல...அப்படி அனுப்பினா லாபத்துக்கு கூட வைச்சு விற்கலாம்... இங்க நம்ம ஏரியாத்தானே அதுவில்லாம இதெல்லாம் இந்த வெயிலுக்கு ரெண்டு நாள் கூட தாங்காதும்மா...இருந்து வீணா போறதுக்கு இப்படி வித்துட்டு போனாலாவது கொஞ்சம் திருப்தியா இருக்கும்...”என்றார் எடைப்போட்டபடி.

காயும் வெயிலில் அந்த தெருவை இரண்டு முறை வலம் வந்தவரிடம் இரண்டு பேருக்கு மேல் யாரும் வாங்கவில்லை...அது அவர் முகத்தில் ஒரு தொய்வை கொடுக்க சக்தி பாவமாக பார்த்தாள்.

அக்கம் பக்கம் இருப்பவரிடம் இங்கிருந்தே குரல் கொடுக்க அவர்களோ நாளை கடையில் வாங்கி கொள்வதாக சொல்லிவிட,சக்தியும் சோர்ந்து திரும்ப கடைக்காரன் அந்த விவசாயிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தான்.


“ஒரு கிலோ பத்து ரூபாதான்ப்பா...என் நிலத்துல விளைஞ்சது நானே இருக்க சூழ்நிலையில போட்ட முதலை விட கம்மியாத்தான் சொல்றேன்...கொஞ்சம் பார்த்து சொல்லுப்பா...”என்றார் இறங்கி.

கடைக்காரனோ, “அதெல்லாம் முடியாதுப்பா...ஒரேவிலை கிலோ ஐஞ்சு ரூபா... அவ்வளவுதான்...”என்றான் விடாப்பிடியாக.

லாக்டவுன் அங்கங்கே போலீஸ் இருக்க வீதிவீதியாக சென்று விற்க நேரமும் இல்லை…உடலில் இப்போது தெம்பும் இல்லாததாக உணர்ந்த விவசாயிக்கு வேற வழியில்லாததால் அவனிடமே கொடுத்துவிட்டு சென்றார்.

அதிலும் மறுநாள் அந்த கடைக்காரன் அந்த காய்களை கிலோ பதினைந்து ரூபாய் என்று விற்க மனம் உஷ்ணத்தில் சீறியது…அதைவிட எதையும் ஆராயாமல் தப்பை தட்டிக் கேட்காமல் இருக்கும் இந்த மக்களை பார்க்க பார்க்க சக்திக்கு மனம் காந்தியது.

“தான் விளைச்சல் செய்த பொருள் வீணாக கூடாதென்று விற்கும் விவசாயி எங்கே?கிடைக்கும் பொருளில் எல்லாம் லாபம் பார்க்கும் வியாபாரி எங்கே? இதுதான் விவசாயிக்கும் வியாபாரிக்கும் இருக்கும் வித்தியாசம் போல...”என்று மனதோடு பெருமூச்செடுத்தாள்.

அன்றிரவு பத்துமணிக்கு மேலே மின்சாரம் போய்விடவும் சக்தி வீட்டிற்கு வெளியே வந்து பார்க்க இவர்கள் வீட்டோடு சேர்த்து நான்கு வீட்டில் மட்டும் மின்சாரம் இல்லை.

“இவனுங்களுக்கு எப்ப பாரு இதே வேலை...இந்த நாலு வீடு மட்டும் என்ன பண்ணுச்சோ? எப்ப பாரு கட் பண்ணிக்கிட்டு...அந்த காமாட்சி வீட்டுல வேற கைக்குழந்தை இருக்கு...இருட்டுல வைச்சுக்கிட்டு என்ன பண்றாங்களோ....”என்றார் சுந்தரி சலிப்பாக.


சக்தி ஈபிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அடுத்த அரைமணி நேரம் கழித்து ஒருவர் வந்து பார்க்க அவரிடம் விவரம் கேட்டாள்.

“அண்ணா!இது மாதிரி தினமும் நடக்குது...வோல்ட்டேஜ் வேற கம்மியாகிடுது... அந்நேரம் எதாவது பொருள் ஓடிட்டு இருந்தா பாழா போயிடுது...ஏண்ணா இப்படி?”

“ஏன்மா?எந்த பொருளா இருந்தாலும் ஒரு அளவுக்கு மேலதான்மா தாங்கும்... இந்த ஒரு கம்பத்துலையே இருபது வீட்டுக்கு மேல கரண்ட் போகுது...உங்க வீட்டுல எல்லாம் ஒரு பேஸ்தான் மத்த வீட்டுல மூணு பேஸ்...அப்ப வோல்ட்டேஜ் மொத்தமும் அங்கதான் இழுக்கும்...”


“இதுக்கு என்னண்ணா பண்ணனும்?”

“உங்க வீட்டுல மூணு பேஸ் மாத்தணும்... அப்படியே மாத்தினாலும் ஒரு கம்பத்துக்கு ஒரு ஐஞ்சு வீடு இல்லை பத்து வீடு வரைக்கும்தான் கொடுக்கணும்...”

“இதெல்லாம் உங்க ஆபிசுல கேட்க மாட்டாங்களாண்ணா?”

“பணம் இருக்கும் போது எங்கயும் எதுவும் நடக்காது, நடக்கறதும் வெளிய வராது...உங்க வீட்டு ஓனர் பணம் கொடுத்து வாங்கின ஒரு பேஸ்க்கான பொருளை யூஸ் பண்ணனும்...வாங்கும் போது வாங்கிட்டு அதை சரியா மெயின்டைன் பண்றது இல்ல...”

“இன்னொரு ஓனரு பணம் மிச்சமாகும்னு ஒரே இடத்துல எல்லா கனக்ஷனும் கொடுத்து வைச்சிருக்காங்க...நீங்க எல்லாம் விருப்பட்டா ரெண்டு மூணு வீடு சேர்ந்து காசு போட்டு தனியா கம்பம் வைச்சிக்கலாம்மா...ஆனா யார் முன் வருவா? யாரும் வரமாட்டாங்க...”

“இந்த கம்பத்துல எவ்வளவு ஒயருங்க சரியான முறையில இல்லாம எப்படி தொங்குதுன்னு நீயே பாரும்மா... இதெல்லாம் எங்க லெவல்ல கேட்க முடியாது...கேட்டாலும் சரியான பதில் வராது...இதெல்லாம் ரிஸ்க்ம்மா...பணம் மிச்சம் பண்றேன்னு உயிரோட விளையாடறாங்க...”என்றவர் வேலையை முடித்து கிளம்ப சிறிது நேரத்தில் மின்சாரம் வரவும் சக்தி யோசனையுடன் உள்ளே சென்றுவிட்டாள்.

மறுநாள் தெருவில் தண்ணீர் லாரியின் சத்தம் கேட்டதும் சக்தி கீழே இறங்கி செல்ல லாரி நின்றிருந்த இடம் பார்த்து சலிப்பு தட்டியது.

வீட்டில் வரும் தண்ணீர் இந்த கோடைகாலத்தில் சில நேரம் சொதப்ப அப்போது லாரித்தண்ணீர் பெரிதளவில் உதவும்…ஆனால் எப்போது வந்தாலும் தெருவில் இருக்கும் அந்த பெரிய வீட்டின் முன்னே மட்டுமே நிற்கும்.

இங்கிருந்து மற்றவர்கள் தங்கள் வீட்டிற்கு அந்த பெரிய குடங்களில் மூச்சு வாங்க தண்ணீர் கொண்டு செல்வதை பார்க்க என்னவோ போல இருக்கும் அதிலும் வயதில் மூத்த பெண்களும் சிரமப்படுவதைப் பார்க்க சொல்ல வார்த்தை இல்லை.

இதற்கு முன் ஒருமுறை அந்த லாரி டிரைவரிடம் சொல்லக்கூட செய்தாயிற்று…

ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்க வைப்பதற்கு பத்துநிமிடம் என்ற கணக்கில் அந்த நீண்ட தெருவில் இரண்டு இடங்களில் நிறுத்தி உதவி செய்யலாம் என்று...ஆனால் அதற்கான பதில் இன்றுவரை கிடைக்கவில்லை...

இப்போதும் கேட்பதற்கு வாய் துடித்தது ஆனால் அந்த பெரிய வீட்டின் முதலாளி அந்த டிரைவரிடம் நூறு ரூபாயை நீட்ட அந்த ஒற்றை நோட்டில் மனிதாபிமானம் விலை போனது போல தோன்றியது.

தண்ணீர் லாரி கிளம்பியதும் அந்த வீட்டின் முதலாளியிடம் சென்ற சக்தி,
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...”

“சொல்லும்மா...”

“இல்ல உங்க வீட்டுல பத்து குடும்பம் வாடகைக்கு இருக்காங்க... அவங்களுக்கான தண்ணீர் வசதியை கூட நீங்க சரியா செய்ஞ்சு கொடுக்கல... வாடகை வீட்டுல இருந்தும் லாரித்தண்ணிதான் வந்து எடுக்கறாங்க... இது இப்ப சம்மர்ல மட்டும் இல்ல மத்த நேரம் கூட தெருக்குழாயிலதான் தண்ணி பிடிக்கறாங்க...அவங்களுக்கான தேவையானதை செய்ஞ்சு கொடுக்கலாமே...”

“நீ சொன்னா நான் கேட்பேன்னு என்ன நம்பிக்கையில என்கிட்ட சொல்ற?”

“தெரியல சொல்லணும்னு தோணுச்சு...ஏற்கனவே பத்து வீட்டோட கனக்ஷன் இருக்க கரண்ட் கம்பத்துல உங்களோட இந்த மொத்த வீட்டுக்கும் கனக்ஷன் கொடுத்திருக்கீங்க... உங்களுக்கு மட்டும் தனியா ஒரு கம்பம் வைச்சிருந்தா யாருக்கும் பிரச்சினையில்லதானே...அது ரொம்ப செலவுகூட இல்லையே...”

“எப்ப என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்...இதெல்லாம் கேட்கற அளவுக்கு நீ ஒன்னும் என்வீட்டுல வாடகைக்கும் இல்லை,இந்த தெருவோட கவுன்சிலரும் இல்ல சரியா...”என்றதோடு உள்ளே சென்றுவிட சக்தியின் சிந்தனை அதிகரித்தது.

அதற்குள் அந்த பணக்காரனின் மனைவி செய்தியறிந்து சுந்தரியிடம் வந்து சக்தியை பேச சுந்தரியின் கோபம் மொத்தம் மருமகள் மேல் திரும்பியது.

“காலம் காலமா இந்த தெருவுல இருக்கோம்...நம்ம குடும்பம்னு சொன்னாலே எல்லோருக்கும் அவ்வளவு மரியாதை...ஆனா இப்ப எல்லாம் போறவன் வர்றவன்லாம் இந்த வீடேறி வந்து பேசற நிலைமை வந்துடுச்சு...”

இரண்டு நாள் வீட்டினரின் பேச்சிலும் சுற்றத்தின் செயலிலும் யோசனையோடவே சுற்றிக் கொண்டிருந்த சக்தி அந்நேரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியில் தீர்க்கமான முடிவெடுத்திருந்தாள்.

“நான் இப்ப வர்ற கவுன்சிலர் எலெக்ஷன்ல சுயேட்சையா நிற்க போறேன்...” என்று சக்தி சொன்னதும் கணவனும் மாமியாரும் அதிர்ந்தனர்.


“டேய்!உன் பொண்டாட்டிக்கு கிறுக்கு கிறுக்கு எதாவது பிடிச்சு போச்சா... என்னவோ உளறிட்டு இருக்கா...தினம் பஞ்சாயத்தை நிமிஷத்துக்கு ஒரு பஞ்சாயத்தை வைக்க போறாளா?”

“சக்தி உன்னை வேலைக்கே போக வேணாம்னு சொல்லியிருக்கேன்... ஏதோ நீ கேட்டதாலதான் டியூஷனுக்கு கூட சரின்னு சொன்னேன்...இப்ப எதுக்கு தேவையில்லாத பேச்சு பேசிட்டு இருக்க?

“இல்ல நான் இதுல முடிவா இருக்கேன்...”

“எலக்ஷன்னா சும்மாவா இதுக்கு பணம் என்ன உங்க வீட்டுல இருந்து கொண்டு வர போறியா? ஏதோ சின்ன பொண்ணு ஆர்வ கோளாறுல பேசறா செய்யறான்னு சும்மா இருந்தா குடும்பத்தோட பேரை மொத்தமா கெடுத்துடுவ போல இருக்கே?”என்று மாமியார் வசைபாடினார்.

கணவன் மற்றும் மாமியாரிடம்,

“நான் பதவி, பணம், புகழுக்கு ஆசைப்பட்டு இதுல இறங்கல...எப்படி இந்த குடும்பம் என் பொறுப்போ இதுல ஏதாவது ஒரு தப்பு நடந்தா அதை சரி செய்யற கடமை எனக்கு இருக்கோ, அதே மாதிரி என்னை சுத்தியிருக்க விஷயங்களை சரி செய்ய நினைக்கறேன்...அது வெறும் பேச்சா இருந்தா நடக்கல, இந்த மாதிரி பதவியில இருந்தாதான் நடக்கும்னா அந்த இடத்துக்கு நான் போவேன்...”


“இது உங்க ரெண்டு பேரோட துணையில்லாம என்னால செய்ய முடியாது... ப்ளீஸ் அத்தை...ப்ளீஸ்ங்க... புரிஞ்சிக்கோங்களேன்...”என்றவளை வார்த்தைகளால் தடுக்க முயல அவளோ விடாது நின்று மனுத்தாக்கலும் செய்துவிட்டாள்.

அதன்பின் வீடு வீடாக சென்று எல்லோரிடமும் பிரச்சாரம் செய்ய அவளை ஆதரித்தோர் பலர் எதிர்த்தோர் பலர்...அதையெல்லாம் அசட்டை செய்து,

“நான் உங்கள்ல ஒருத்தி...நம்மோட தேவையை நம்மதானே தீர்த்துக்க முடியும்...உங்க எல்லார் சார்பாகவும் உங்க தேவையை நான் தீர்த்து வைக்கிறேன்...”

அந்த ஒற்றை கவுன்சிலர் பதவிக்கே எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி, பணபலம், ஆள்பலம் இருப்பவர்கள் என அனைவரும் அவளை எதிர்த்து வாபஸ் வாங்க வைக்க முயல, முடியாது என்று உறுதியாக நின்றவள் வெற்றியும் பெற்றாள்.

தனது வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி சொல்ல மறுபடியும் அவர்களின் வீடு தேடி செல்ல,

“அதை உங்க மாமியாருக்கும் புருஷனுக்கும் சொல்லும்மா...”என்று அவர்கள் சொல்ல ஆனந்தமாக அதிர்ந்து விசாரிக்க,

“உன்னைவிட அவங்கதான் உன்மேல அதிக நம்பிக்கை வைச்சு,எங்களையும் நம்ப வைச்சு உனக்கு ஓட்டு போட சொன்னதே...அன்னைக்கு கடைக்காரன் உன்னை பேசினான்னு தெரிஞ்சதும் உன் புருஷன் வெற்றி அவனை லெப்ட் ரைட் வாங்கிட்டான்...” என்றவர்கள் மேலும் பலகதைகள் சொல்ல ஆர்வமாக வீட்டிற்கு வந்தாள்.

“டேய்!உன் பொண்டாட்டியை சும்மாவே கையில புடிக்க முடியாது...இதுல கவுன்சிலர் வேற ஆகிட்டா நம்மை இனி எங்க மதிக்க போறா...”என்ற மாமியாரை சிரிப்போடு பார்க்க,


“சொல்ல சொல்ல கேட்கலல்ல விடுங்கம்மா...” என்றான் மகனும்.

“எனக்கு என்ன கவலை அதான் நீங்க ரெண்டு பேரும் என்கூட இருக்கீங்களே... விட்டுடவா போறீங்க...” என்றாள் சக்தி புன்னகையுடன்.

“உன் பொண்டாட்டி கிறுக்குன்னு அப்பப்ப இந்த மாதிரி உளறி காட்டிக் கொடுக்கறாடா...”


“அத்தை எனக்கு ஒரு சந்தேகம்...”


“நீங்க எனக்கு அம்மாவா மாமியாரா? அடிக்கடி இந்த சந்தேகம் வருது அத்தை...”என்று குறும்போடு சொன்னவளைப் பார்த்து முறைத்த சுந்தரி,

“உனக்கு மட்டும் நான் அம்மாவா இருந்திருந்தா நீ பண்ற அலம்புக்கு கொமட்டுலே ரெண்டு குத்தியிருப்பேன்...மாமியாரா போனதால பேச்சோட நிறுத்தறேன்...” என்று நொடித்துக்கொண்டவரை பார்த்து வாய்விட்டு சிரித்தாள் சக்தி.

“உங்களுக்கு வேணும்னா குத்துங்க நான் தாராளமா இன்னொரு கன்னத்தையும் காட்டறேன்...”என்றவள் அவர் அடுத்து பேசவரும் முன் மகிழ்வோடு அங்கிருந்து கிளம்பி வெளியே வர,உள்ளே மாமியார் மற்றும் கணவனின் பேச்சை கேட்டு புன்னகையோடு நின்றிருந்தாள்.

“டேய் வெற்றி!வர வர இவளுக்கு குசும்பு கூடி போச்சு...அமைதியா இருந்தே காரியம் சாதிக்கறா...”

“சுந்தரி மருமகன்னா சும்மாவா...”


“அவ எதிரில் சொல்லிடாத...நம்ம கொஞ்சம் முறைப்பை காட்டினாதான் அவ கொஞ்சம் உஷாரா இருப்பா... அதனாலதான் அப்பப்ப அவளை பேசிட்டே இருக்கறது இல்லைன்னா நம்மளும் துணைக்கு இருக்கோம்னு தெரிஞ்சுட்டா விளையாட்டுத்தனமா வீண் வம்புக்கு போய் மாட்டிக்குவா...”

“நம்மோட குடும்பத்துல இருக்க நேர்மையும் மத்தவங்களுக்கு உதவற குணமும் எங்கிருந்தோ வந்த அவள்கிட்டேயும் இருக்குடா...நீ வேணும்னா பாரு நான் வெறும் மேடை பேச்சுக்காரி இல்ல திறமையான செயல்காரின்னு இந்த உலகத்துக்கே நிரூபிப்பா...அவளை உன் கண்காணிப்புலே பத்திரமா வைச்சுக்கோடா வெற்றி...”என்ற மாமியாரின் அக்கறைக்கும் பெருமைக்கும் சற்றும் குறைவில்லாமல்,

“அம்மா!அவ இந்த வெற்றியோட பொண்டாட்டி...நான் பார்த்துக்கறேன்... நீ கவலைப்படாத...”என்றான் கணவன் காவலனாக.

இருவரின் பேச்சையும் கேட்டதும் மனதில் புதுதெம்பு பிறக்க சாமானிய மனுஷியாக தன்னுள் ஒலித்த குரலின் கட்டளைகளை நிறைவேற்ற கிளம்பினாள் சக்தி.

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...