JUNE 10th - JULY 10th
அய்யலூர் சந்தையில் ஆடு வாங்கி விடு வந்து சேர்வதற்குள் அதற்கு பெயர் சூட்டாவிட்டால் எம் இல்லாளுக்கு தலையே வெடித்து விடும். ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது தொத்தலோ தூங்கலோ வாங்கி வந்து கத்தவிடாட்டி அவளுக்கு அவ்வளவு சீக்கிரமாய் பொழுது போகாது. எதை வாங்கினாலும் அதற்கு ஒரு பெயரை வைத்து கூப்பிட்டே அந்த ஆட்டை பழக்கி விடுவாள். அப்படித்தான் இந்த காளியப்பன் (இல்லாள் சூட்டிய பெயர்தான்) அடைமழை காலத்திய வியாழக்கிழமையொன்றில் வீடு வந்து சேர்ந்தான்.
வாங்கி வரும்போது மிகவும் தொத்தலாக மூக்கெல்லாம் சளி ஒழுக கரட்டுப் புரட்டு என்றுதான் இழுத்துக்கொண்டு வந்தது. நான் பார்த்தவுடன் கேட்ட கேள்வி "நீ இந்த ஆட்ட பணத்துக்குத்தான் வாங்குனியா இல்லை ஓசியா கொடுத்தாங்கலா" என்பதுதான். என்னைப் போலவே ஊரில் வேறு பலரும் இந்தக் கேள்வியைத்தான் என் இல்லாளிடம் கேட்டு வைத்தனர். அந்த அளவுக்கு உடளவில் படு மோசமாக இருந்தான் காளியப்பன்.
ஆடு வாங்குற பொம்பள ஒச்சம் ஏதும் இல்லாம சுழியெல்லாம் பாத்து வாங்கனும். கொண்டுவந்து தள்றதயெல்லாம் மறுபேச்சு இல்லாம வாங்கியாந்தா இப்படித்தான் இருக்கும் என்று அவ்வப்போது என் அம்மாவும் இடித்துரைக்கவே செய்தார்.
காளியப்பன் நடக்கவே ரொம்ப சிரமப்படுபவனாக தெரிந்தான். மூக்கெல்லாம் சளி அப்பி குண்டியில் எப்போதும் கழிச்சல் கண்டபடி இருந்தான். மொட்ட வெயிலில் நீட்டி நிமிர்ந்து முழியெல்லாம் நட்டுக்கிட்டாற் போலே படுத்துக்கிடப்பான். புதிதாய் பார்ப்பவர்களுக்கு அது செத்துக்கிடப்பது போலவே தோன்றும்.
ஆரம்பத்தில் எனக்கு இந்த காளியப்பனை பிடிக்கவேயில்லை. என் வாழ்நாளில் இவ்வளவு நோஞ்சானாய் ஒரு ஆட்டுக் குட்டியை நான் பார்த்ததேயில்லை. இவ்வளவுக்கும் என் வீட்டில் என் அம்மா விதவிதமாய் ஆடு வளர்த்தவள்தான். கிடை பழுகி ஊர் பழுகினாற் போல பெரிய ஆட்டு மந்தையையே நிர்வகித்த குடும்பம் எங்களுடையது. அதெல்லாம் தனிக்கதை.
நாளடைவில் காளியப்பன் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகி வந்தான். எலும்பு துறுத்திக்கொண்டிருந்த இடமெல்லாம் சதை தட்டுப்பட தொடங்கியது. கழிசல், சளி போன இடம் தெரியாமல் உடல் மெருகேறிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. நெற்றிக்கு கீழும் மூக்குக்கு மேலேயும் கொஞ்சம் புடைப்பாக இருப்பதாலேயே முகத்திற்கு ஒருவித கம்பீரத் தன்மையை தரித்துக்கொண்டது போலத் தெரிந்தது. பிறரால் கொஞ்சப்படாத, விரும்பப்படாத ஆடாகவே வளர்ந்தாலும் எல்லோராலும் கவனிக்கப்படும் விதமாகவே அதன் நடவடிக்கைகள் இருந்தது.
மற்ற ஆடுகளெல்லாம் குதியாட்டம் போடுகையில் இது மட்டும் தாமுண்டு தமது வேலையுண்டு என்று இருக்கும். புளியமரத்தடியிலும் தாவாரத்தின் கீழும் அசைபோட்டபடியே எதையோ ஆழ்ந்து யோசிப்பவன் போல படுத்திருக்கும். அதன் விழிகளில் கொஞ்சம் கூட சலனம் இருக்காது. ஆழ்கடல் அமைதியை ஒத்திருக்கும். ஆட்களை ஏறிட்டு பார்க்கும் போது அதன் பார்வை மிகுந்த தெனாவெட்டாய் இருக்கும். அப்போதெல்லாம் 'சாகப் பொழைக்க கிடந்ததுக்கு வந்த திமிரப் பாருடா' என்று இல்லாள் பொய்க்கோபம் கொள்வாள்.
காளியப்பன் என்று பெயர் சூட்டுவதற்கு ஊர் காளியம்மன் கோயிலுக்கு நேந்து விட்டதும் ஒரு காரணம். எந்த ஆடும் எங்களிடம் வெறுமனே வளர்வதில்லை. வாங்கிய கையோடு அதை காளியம்மனுக்கோ, கருப்பசாமிக்கோ, அய்யனாருக்கோ வெட்டி பூஜை போட்டுவிடுவதாய் வேண்டிக்கொண்டுதான் அதற்கு புல்லையே காட்டுவோம்.
**
வீட்டின் முன்பாகவே கொஞ்சமாய் இருந்த நிலத்தில் மேய்த்து மேய்த்து அலுத்துப்போன இல்லாள். எங்காவது வெளியில் கொண்டு போய் மேய்த்துவந்தால் தேவலாம் என்பாள் அடிக்கடி. நானும் அதை ஆமோதித்து வைத்தேன்.
அன்று ஆடுகளை வரட்டாற்றங்கரைப் பக்கம் ஓட்டிக்கொண்டு போனாள். காளியப்பன் குதியாட்டம் போட்டுக்கொண்டு ஓடினான். சிறகிருந்தால் பறந்துவிடுவது போல பரவச நிலையில் இருந்தன அனைத்து ஆடுகளும். காளியப்பன் தலையை ஆட்டியபடி பரந்த வெளிகள் கண்டு குதூகலமடைந்தான். ஒரே இடத்தில் இத்தனை நாட்களும் மேய்ந்த காளியப்பன் தடைகளற்ற புல்வெளி பரப்புகள் பார்த்து சதிராட்டம் போட்டது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய இடங்களுக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டினாள் இல்லாள். கட்டிப்போட்டு மேய்ப்பதை விட நாலு பக்கம் அலையவிட்டு மேய்த்தால் ஆடுகள் சீக்கிரம் பெருக்கும் என்ற உண்மையை கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணெதிரே
காணத் தொடங்கினேன்.
காளியப்பன் முன்பு பார்த்தது போல இல்லை. நிறைய மாறி விட்டிருந்தான். எனது வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் நன்கு அறிந்து வைத்திருந்தான். எனது மகள் மகனிடமும் நல்ல அன்யோன்யம். பிள்ளைகளும் காளியப்பனை ஆடாய் பார்க்கவில்லை. வீட்டில் உள்ள ஒரு ஆள் என்பது போலத்தான் நடத்தினார்கள். மற்ற ஆடுகளை விட காளியப்பனே எனக்கும் பிடித்தவனாக மாறிப்போனான்.
கடைவீதியிலிருந்து நான் வீடு போகும் போதெல்லாம் தமது வரவேற்பை மெல்லிய சத்தமெழுப்பி அறிவிப்பான். நான் கட்டிலில் போய் உட்கார்ந்தால் என்னருகில் வர படாதபாடு படுவான். தலையை ஆட்டுவான், தரையை கால்களால் நிமிண்டுவான்.
அது சரியான காற்றடி காலம். புளியமரங்களை எல்லாம் வேரோடு புடுங்கிப் போடும் அளவுக்கு காற்று அசுரத்தனமாக வீசத்தொடங்கியது. அக்கம் பக்கத்து காடுகளெல்லாம் மணல் பூசிக்கிடந்தன. கிழக்கே வேளார் வீட்டு பனங்காட்டில் எந்நேரமும் பனமட்டைகள் சரசரத்துக்கொண்டிருந்தன. காற்று அடிக்கும் அடியைப் பார்த்தால் மக்க மனுச உடம்புல எந்தத் துணியும் நிக்காது போல என்று வீதியில் வருவோர் போவோர் பேசிக்கொண்டனர். அதே போல அடித்த காற்றில் பக்கத்து வீட்டுச் சிறுமி பவுனுவின் பாவாடை அவள் தலைவரை மேலெழும்பி பறக்கத்தொடங்க தெருவே சிரிப்புக்கோலம் பூண்டது.
என் இல்லாள் வெவ்வேறு பக்கம் ஆடுகளை ஓட்டிப்போய் மேய்த்து வந்தாள். காளியப்பன் உடம்பில் நல்ல வனப்பும் மினு மினுப்பும் கூடிக்கொண்டே வந்தன. அதன் அருகில் போய் தடவிக்கொடுத்து குரல்வளையோடு முகத்தை அணைத்துக்கொள்ளும் அளவுக்கு எனக்கும் அதற்குமான நெருக்கம் கெட்டிபடத் தொடங்கியது.
எனது வண்டிச்சத்தம் கேட்டாலே ஆவலோடு சாலையை பார்ப்பதை வழக்கமாய் கொண்டிருந்தான் காளியப்பன். பெரிதாகவெல்லாம் அலட்டிக்கொள்ள மாட்டான். தெனவெட்டாய் ஒரு ராஜபார்வையை என்மேல் வீசி தலையை சிலுப்பிக்கொள்வான். என்னைப் போலவே எனது சின்னமகளும் காளியப்பன் மேல் உயிரையே வைத்திருந்தாள். பள்ளிக்கூடம் போகும் நேரம் போக மற்ற நேரமெல்லாம் காளியப்பனின் அருகாமைதான் அவளுக்கு சொர்க்கம். 'ஒரு சாதாரண ஆட்டின் மேல் இவுங்க ஏன் இவ்வளவு பாசம் வைக்கிறாங்க, என்னைக்கா இருந்தாலும் வெட்டித்திங்கிற ஆடுதானே' என்று ஊர் சனம் பேசுகின்ற அளவுக்கு காளியப்பன் மேலான பாசம் பக்கத்தூர் வரை பிரசித்தி பெற்றதாய் மாறியது.
ஒருமுறை தீபாவளிக்கு எல்லோருக்கும் ட்ரெஸ் எடுக்கையில் காளியப்பனுக்கும் ட்ரெஸ் வேண்டும் என்று சின்னமகள் அடம் பிடிக்கத்தொடங்கினாள். வேறு வழியில்லாமல் துணி எடுத்து தைக்க கொடுத்து தீபாவளி அன்று காளியப்பனுக்கு குளித்துவிட்டு போட்டுவிட்டோம். பக்கத்து வீடு எதுத்த வீட்டு காரர்களெல்லாம் இதென்னடா விந்தை என்று மூக்கின்மேல் விரலை வைத்து பார்த்தனர். சிலர் 'ரொம்பத்தான் ஓவர்' என்பது போல கடுப்படித்தனர். நாங்கள் எதையும் காதுக்கே வைத்துக்கொள்ளவில்லை. காளியப்பனை அழகுபடுத்தி பார்ப்பதும், அதற்கு பூ பொட்டு வைத்து அலங்கரிப்பதுமாக சின்னமகளோடு சேர்ந்துகொண்டு என் இல்லாளும் நாளெல்லாம் வேடிக்கை நிகழ்த்திக்கொண்டிருந்தாள்...
மற்ற ஆடுகளையெல்லாம் விட்டுவிட்டு காளியப்பனை மட்டும் அவிழ்த்து வந்து இரவுநேரங்களில் சின்னமகள் தன்னோடு படுத்துக்கிடக்கும்படி பழக்கிவிட்டிருந்தாள். காளியப்பனும் இரவெல்லாம் அசைபோட்டபடி அவள் தலைமாட்டிலோ கால்மாட்டிலோ படுப்பதை வழக்கமாய் கொண்டிருந்தது.
••
நான் பிற்பாடு பெயிண்டிங் வேலைகளில் பிஸியாகி ஊர் ஊராக அலைந்துகொண்டிருந்த ஒரு பொழுதில் சின்னவளிடமிருந்து போன். பெயிண்ட் வாளியோடு சாரத்தில் சாய்ந்தபடியே செவிமடுத்தேன்.
"காளியப்பனுக்கு முடியலப்பா... யூரினும் போகல, அசைப்போடவும் மாட்டேங்குது..." என்றாள் கவலை தேய்ந்த குரலில்.
"கடையில் ஓம வாட்டர் இருந்தால் வாங்கி ஊத்துங்கம்மா சரியாப்போயிடும்...
" அம்மா ஊத்துச்சுப்பா ஆனா இன்னும் அப்படியேதான் இருக்குது."
"கொஞ்சநேரம் கழித்து பாருங்க, சரியாப்போயிடும்" என்று சொல்லி தொடர்பை துண்டித்தேன்.
மனதுக்குள் கவலை குடிகொண்டது. இத்தனை காலமும் காளியப்பனுக்கு நோய் நொடியென்று எதுவும் வந்ததில்லை. வேண்டாத இலைதலைகளை ஏதும் தின்றிருக்குமோ, அல்லது யாரும் அடித்திருப்பார்களா என்று பலவாறாக சிந்தனைகள் உள்ளுக்குள் ஓடியது.
இரவு வீட்டிலிருந்து போன் எதுவும் வரவில்லை. நானும் போட்டுக் கேட்க தோதற்றவனாய் இருந்தேன். இரவிலும் பெயிண்டிங் வேலை. புது வீடு. இரண்டு தினங்களில் கிரகப்பிரேசம். அதனால் மேஸ்த்திரி எங்களை எங்கேயும் விடாமல் வேலையை பிதுக்கி எடுத்தார்.
காலையில் வேலை தொடுவதற்கு முன்பாகவே இல்லாளிடமிருந்து போன். காளியப்பன் ஓயாது கழிகிறான் என்றும் அதனால் ரொம்பவும் கிறங்கியிருப்பதாகவும் உள்ளுக்குள் உடைந்திருப்பவளாய் பேசினாள். பலமுறை இப்படி ஆடுகளுக்கு முடியாமல் போவதும் பிறகு சரியாவதும் வழக்கமான ஒன்றுதான். எல்லாம் சரியாப்போகும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு யுடியூப்பில் இரவே பார்த்து வைத்திருந்த இரண்டொரு மருத்துவமுறைகளை சொல்லி தொடர்பை துண்டித்தேன்.
எனக்கு வேலையே ஓடவில்லை. மனமெல்லாம் சோர்வு அப்பிக்கொண்டது. சின்னமகளை நினைத்தால்தான் கவலையாக இருந்தது. அவள் உணர்வுகள் என்னவாக இருக்கும் என்று ஒருநிமிடம் நினைத்துப்பார்த்தேன். மனம் நிலைகொள்ளவில்லை. கூட வேலை பார்த்தவர்கள் பல்வேறு ஆலோசனைகளை சொன்னார்கள். பூசாரியை கூப்பிட்டு மந்திரித்து பார்க்கச் சொன்னார்கள். பின் அவரவருக்கு தெரிந்த சில எளிய மருத்துவ முறைகளைச் சொன்னார்கள். இதெல்லாம் நான் சொல்லாமலே செய்பவள்தான் என் இல்லாள். இந்நேரம் காளியப்பன் நலம்பெற அவள் சக்திக்கு என்ன முடியுமோ அவ்வளவையும் செய்து பார்த்திருப்பாள்.
நான் வேலையில் மனம் ஒட்டாமல் மேஸ்திரியிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினேன். வேலைபார்த்த காசில் மேஸ்திரி கொஞ்சமாய் செலவுக்கு பணம்கொடுத்தார். குட்டி பயணம். நகரப் பேருந்து ஆடி அசைந்து ஊர் அடைவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
வீட்டிலிருந்து மீண்டும் போன். என்னவோ ஏதோவென்று பதைபதைப்புடனே செவிமடுத்தேன். இல்லாள்தான் பேசினாள். தான் டாக்டரை கூட்டிவந்து பார்த்ததையும் அவர் மருந்து ஏதும் கொடுக்காமல் ஊசி மட்டும் போட்டுவிட்டு சென்றதையும் சொன்னாள். தற்போது வீட்டின் பின்புறம் புங்கை மரத்தடியில் படுத்திருப்பதாகவும் பிற ஆடுகளும் மேய்ச்சலுக்கு போகாமல் காளியப்பன் உடனேயே படுத்திருப்பதாகவும் சொன்னாள். எனக்கு என்னவோ போலிருந்தது. ஊருக்கு வந்திட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்திலெல்லாம் வீட்டுக்கு வந்திடுவேன் என்று சொல்லி தொடர்பை துண்டித்தேன்.
கொஞ்சமாய் மது அருந்தினால் தேவலாம் போலிருந்தது. சந்தைப்பக்கம் பிளாக்கில் கிடைத்ததில் ஒரு கோட்டர் வாங்கி அதில் கட்டிங் மட்டும் போட்டுக்கொண்டேன். சைடிஸாய் மிளகாய்த்தூள் போட்ட மாங்காய் துண்டுகளை நீட்டினர். கிரேப் மாங்காய் துண்டுகள். வயிறு கபகபவென்று எரிந்தது. புகைக்க வேண்டும்போல் தோன்றியது. சந்தை கேட்டின் பின்புறம் நூற்றுக்கணக்கான ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன.
எனக்குள் காளியப்பன் நினைவுகள் மீண்டும் மீண்டும் அலைமோதின. பக்கத்தூரில் உள்ள ஆட்டு வைத்தியர் ஒருவரை போய் கையோடு அழைத்து வந்து காளியப்பனை சரிசெய்ய வேண்டுமென மனதிற்குள் உறுதிபூண்டிருந்தேன். கைராசியான வைத்தியர். போட்ட கட்டிங் போதையாய் உடலெங்கும் பரவ தொடங்கிய நேரத்தில் மீண்டும் வீட்டிலிருந்து போன்.
"காளியப்பன் செத்துப்போச்சுங்க..."
வார்த்தைகள் அழுகையில் சிக்குண்டதாய் வெளிப்பட்டன. பின்னணியில் சின்னமகள் அழுவதும் கேட்டது. வெள்ளை வெள்ளையாய் கழிந்ததாகவும் அதில் அரிசியும் இருந்ததாகவும், அரிசியை தின்ற ஆட்டுக்கு கண்ட மருந்துகளை தந்ததால் இறந்திருக்கும் என்று பக்கத்துவீட்டு பாப்பா சொன்னதாகச் சொல்லி அழுது அரற்றினாள்.
சாவதற்கு முன்பாக தட்டுத்தடுமாறி எழுந்து சின்னமகள் முகத்தையே முகர்ந்து பார்த்ததாகவும் பிறகு தமது சக ஆடுகள் ஒவ்வொன்றிடமும் போய் நின்றதாகவும் சொல்லி மீண்டும் தொடரமுடியாதவளாய் அழுதாள். நான் செய்வதறியாது ஆழ்ந்த மௌனத்தில் உறைந்துகொண்டிருந்தேன்...
"ஆடு உறிக்கிறவர் வந்திருக்காருங்க. கறிய கூறுபோட்டு வித்திட்டா முதலுக்கு மோசமிருக்காதுகாது..." என்றவளை இடைமறித்து கத்தினேன்...
"நீ செத்தா நான் கறிய கூறுபோடுவேனாடி..."
என் கத்தலால் சந்தைத் திடலே அதிர்ந்தது. சுற்றும் முற்றும் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர்.
" ஒழுங்கு மரியாதையா அந்த ஆளா போகச் சொல்லிடு..." என் நா தழுதழுக்கத் தொடங்கியது.
மனம் விம்ம விம்ம சந்தைத் திடலுக்கு வெளியே இருந்த பூ கடையில் ஒரு பெரிய மாலை கட்டச் சொன்னேன். பூக்கடைக்காரர் "என்ன தம்பி பெரிய காரியமா?" என்றார். 'ஆமாண்ணே' என்று சொல்வதற்கும் கன்னங்களில் கண்ணீர் தாரைதாரையாய் இறங்குவதற்கும் சரியாய் இருந்தது.
••
#473
मौजूदा रैंक
70,530
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 530
एडिटर्स पॉइंट्स : 70,000
11 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 4.8 (11 रेटिंग्स)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
mohamedynsari
gravi7872
அருமை இருந்த போதிலும் கள்ளதனமாக கிடைத்த மது அருந்தும் பழக்கம் வராமல் இருந்தால் இன்னும் சிறப்பு என்றும் அன்புடன் ரவிச்சந்திரன்
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स