முனியப்பன்-தூய்மைபணியாளர்

கற்பனை
4.9 out of 5 (204 रेटिंग्स)
कहानी को शेयर करें

"ஹய் அப்பா புது டிரஸ்" என முனியப்பன் ஆடையை பையில் இருந்து எடுத்துக் கொண்டிருக்கும் போதே கை தட்டிக் கொண்டு துள்ளி குதித்து கொண்டு இருந்தாள் ஆறு வயது சிறுமி பவானி. தன் மகளின் சிரிப்பை கண்டவர் அவரும் புன்னகையை உதிர்த்து ஆடை எடுத்து அவள் கையில் கொடுக்க அவளும் அதை தன் மீது வைத்துப் பார்த்து தன் தாயிடம் "எப்படிமா இருக்கு?" என ஆர்வமாக கேட்டாள்.

"உனக்கு என்ன தங்கம். எதைப் போட்டாலும் அழகா தான் இருக்கும்" எனக்கூறிவிட்டு தன் மகளுக்கு நெட்டி முறித்து விட்டார் கண்ணம்மா.
தாயின் பாராட்டை கேட்டதும் குழந்தை குதூகலமாகி "என்னோட புது ட்ரஸ என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட காமிச்சுட்டு வரேன்" என கூறிவிட்டு ஒற்றை அறை கொண்ட அஸ்பெஸ்ட்ரால் ஷீட் கூரை போடப்பட்டிருந்த தனது வீட்டை விட்டு மகிழ்ச்சியாக பக்கத்து வீட்டில் வசிக்கும் தன் தோழியின் பெயரை அழைத்துக் கொண்டே வெளியேறினாள்.
மகள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு தன் கணவரிடம் "இந்த ட்ரஸ் பாக்க ரொம்ப ஆடம்பரமா இருக்கே. உனக்கு எப்படியா கெடச்சுச்சு?" என வினவியவருக்கு, "ஜவுளி கடை அண்ணாச்சி பொண்ணுது. அந்த பாப்பாவுக்கு வேணாமாம்.நான் அந்தப் பக்கம் வேலைக்குப் போகவும் என்ன கூப்பிட்டு குடுத்தாங்க" எனக் கூறிவிட்டு உறங்கச் சென்றுவிட்டார்.

நாட்கள் யாருக்கும் நிற்காமல் அதன் போக்கில் செல்ல, பதிமூன்று வயதை அடைந்த பவானி ஒரு நாள் காலையிலேயே வீட்டில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு தனது தோழிகளுடன் ஊர் சுற்றலாம் என கிளம்பிவிட்டாள். அன்று பள்ளிக்கு செல்லாததால் நேரத்தை போக்க தன் தோழியை அழைத்து கொண்டு அப்படியே சுற்றிப் பார்க்கச் செல்லலாம் என நினைத்து கொண்டு அவளது தோழி வீட்டிற்கு செல்லலானாள்.
அப்போது தெருவில் விசிலால் சத்தம் எழுப்பிக் கொண்டு ஒரு பெரிய வண்டியை தள்ள முடியாமல் ஆங்காங்கே சிறியதாக கிழிந்திருந்த பேன்ட், லேசாக கசங்கி இருந்த சட்டை அணிந்து இருந்த ஒருவர் தள்ளிக்கொண்டு வர, அதில் அவரவர் வீட்டில் இருக்கும் குப்பைகளையும் எடுத்துக்கொண்டு வந்து அத்தெருவில் வசிப்பவர்கள் தர, அதை தன் கைகளால் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து எடுத்து போட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு பெண்மணி வந்து அவரிடம் தான் ஒரு கையில் பிடித்திருந்த குப்பை தொட்டியை அவரிடம் கொடுத்துவிட்டு, "ஏன்யா இன்னிக்கு லேட்? இப்பதான் குளிச்சிட்டு வந்தேன்" என தான் இப்போது தான் குளித்துவிட்டு வந்ததால், தன் வீட்டுக் குப்பைகளை கூட தன் கைகளால் எடுத்துக்கொண்டு வர முகம் சுளித்தாள். அவரோ அப்பெண்மணியின் முக சுளிப்புகளையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் "நாளையில இருந்து கரெக்டா வந்துடுறேன்மா" எனக் கூறிக்கொண்டே குப்பைகளை பிரித்து எடுத்து போட்டுவிட்டு அடுத்த வீட்டை நோக்கி நகர்ந்தார்.

மற்றொரு பெண்மணியோ குப்பைத் தொட்டியை கையில் வைத்துக்கொண்டு "நாளையில இருந்து கரெக்ட் டைம்க்கு வந்துருங்க. எனக்கு வேலைக்கே டைம் ஆகுது. வேலைக்கு போயிட்டேனா அந்த நாள் குப்பை அப்படியே வீட்ல தேங்கி நாத்தம் அடிக்க ஆரம்பிக்கறது" என தன் புலம்பல்களை தொடங்க, அவரோ முன்பு கூறியதைப் போல் நாளையில் இருந்து சரியான நேரத்திற்கு வந்து விடுவதாக கூறி விட்டு நகர்ந்தார். அவரது மனம் இன்று தான் முதல் முதலில் இத்தெருவிற்கு வேலை செய்ய வந்துள்ளோம் என்பதை கூட கவனிக்காமல், இதற்கு முன் வேலை செய்து கொண்டிருந்தவர் என்ன ஆனார் என ஒருவர் கூட விசாரிக்கவில்லையே என இறந்து போனவரை பற்றி வருந்தினாலும் அடுத்த நிமிடம் 'இதுதான் நம்ம வேலை. நாம இந்த வேலை செய்தா தான் நம்ம வீட்ல உலை கொதிக்கும்' என நினைத்துக் கொண்டு விசிலை எடுத்து வாயில் வைத்து ஊத ஆரம்பித்தார். இத்தெருவிற்கு தூய்மை பணி செய்பவர் முன்தினம் இறந்துவிட்டதால் இன்று இவர் இத்தெருவிற்கும் சேர்த்து தூய்மை பணி செய்ய அனுப்பிவைக்கப்பட்டார்.

அவ்வண்டிக்கு வெளியே இருந்த சிறிய ஆணியில் மஞ்சப்பை ஒன்று தொங்கிக் கொண்டிருக்க, அதை கண்ட பவானி தன் தந்தையும் இதே மஞ்சப்பையில் தானே சாப்பாடு கட்டிக் கொண்டு செல்வார் என யோசித்துக் கொண்டே அங்கே நடந்து கொண்டிருந்தவற்றை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவள் சற்று முன்புறமாக வந்து அவரது முகத்தை காண, அவள் யூகித்தது போல முனியப்பன் தான் வேலை செய்து கொண்டிருந்தார்.

அவரைக் கண்டதும் தன் தந்தைபடும் இன்னல்களை நேரில் கண்டும் காணாதது போல், வேகமாக சென்று வீட்டின் ஒரு ஓரத்தில் மறைந்து கொண்டு, அவர் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றவுடன் தன் நண்பர்களுடன் ஊர் சுற்றக் கிளம்பிவிட்டாள் சிறுபெண்ணவள்.

இரவு வீட்டிற்கு வந்து சேர்த்து வைத்திருந்த வீட்டுப் பாடங்கள் அனைத்தையும் நாளை பள்ளிக்கு சென்றால் ஆசிரியர் திட்டுவாரே என்னும் பயத்தால் தன் தோழியின் புத்தகத்தை பார்த்து எழுதிக் கொண்டிருந்தவளைக் கண்டு, தன்னைப் போல் அல்லாது தன் மகள் படித்து பெரிய ஆளாக வருவார் என நினைத்து மகிழ்ந்து அவளது தலையை வாஞ்சையாக முனியப்பன் தடவ, அவரது கையை தன் மேல் பட்டதும் சட்டென்று தீசுட்டாற்போல் தட்டி விட்டவள் "உன்கிட்ட எவ்வளவு தடவைப்பா சொல்றது? குப்பையை தொட்டுட்டு வந்து என்னையும் தொடுற" என முகம் சுளித்துக் கொண்டு கூறினாள்.

தன் மகளின் பேச்சு தனக்கு வருத்தத்தை அளித்தாலும், "நா குளிச்சுட்டு தான் கண்ணு வரேன்" என புன்னகையுடன் கூறினார்.

தனது ஆள்காட்டி விரலால் தன் தந்தையின் கையில் அவரது வேலைகளுக்கு பரிசாக கிடைத்த சிகப்பு நிற புள்ளிகளை சுட்டிக்காட்டி "எனக்கு இது பிடிக்கல" எனக்கூறிவிட்டு வெளியே சென்று விட்டாள்.


வருடங்கள் உருண்டோட பவானி பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, கல்வி ஆதரவாளர் ஒருவரின் உதவியால் அரசு பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு மாற்றப்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

அன்று சரஸ்வதி பூஜை, உடல் நலிவுற்று இருந்த முனியப்பன் எளிமையாக தன் வீட்டில் நடைபெற்ற பூஜையை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக வெளியே செல்ல அவரை தடுத்த அவரது மனைவி "எங்கேயும் போக வேண்டாம். வீட்டிலேயே ஓய்வு எடுங்க" எனக் கூற, "நமக்கு சோறு போடுற வண்டிக்கு நாம தானே போய் பூஜை போடனும்" எனக்கூறிவிட்டு சட்டையின் பட்டன்களை போட்டவாறே தன் மனைவியின் புலம்பல்களையும், மகளின் முகச்சுளிப்புகளையும் தாண்டி சென்றார்.

திடீரென ஒருநாள் நகரில் மழை அதிகமாக பெய்ததால் சாக்கடை நிரம்பி வழிந்து, அவருக்கு குப்பைகளை அள்ளும் வேலையோடு சாக்கடையை சுத்தம் செய்யும் வேலையும் சேர்ந்து கொண்டு அந்த நாள் முழுவதும் உடல்நிலை சரியில்லாத போதும் தனது குடும்பத்திற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு செய்து கொண்டிருந்தார். சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அதிலிருந்து வந்த ஹைட்ரஜன் சல்பைட், மீத்தேன் மற்றும் மற்ற வாயுக்களால் மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி சரிந்தார்.

அவர் கீழே விழுந்ததை பார்த்து அவருடன் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க, அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரது மனைவியும், மகளும் அழுது கொண்டே வந்து சேர அவர்களைப் பார்த்து புன்னகைக்க முயன்று, அது முடியாமல் போகவே தனது தளர்ந்து மெலிந்த கரங்களை அவர்களை அருகில் அழைத்து தனக்கு பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் முககவசத்தை கழற்றி அவரது மனைவியிடம் "நம்ம பொண்ண பத்திரமா பாத்துக்கோ" என மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட கூற, அவரது மகள் பவானி அவரது ஆக்சிஜன் முககவசத்தை திருப்பி பொருத்திவிட்டு அவர் கைகளைப் பிடித்து "அப்பா உங்களுக்கு ஒன்னும் ஆகாது" என அழுது கொண்டே கூற 'குப்பையை தொட்டுட்டு வந்து என்ன தொடாதே' என அவள் கூறியது அவருக்கு நினைவுக்கு வரவே, அவளது கைகளிலிருந்து தன் கைகளை விலக்கிக் கொண்டு ஆக்சிஜன் முக கவசத்தை அவர்கள் இருவரும் கூற கூற கேட்காமல் விலக்கிவிட்டு "அழாதீங்க" என தன் விழிகளில் இருந்தும் விழும் கண்ணீரோடு அவர் கூற, அவரது கன்னத்தை நனைத்த கண்ணீரை துடைத்து விட்ட தன் மகளின் கையை விலக்கி விட்டவர் "அப்பா வேலைக்கு போயிட்டு கைய கூட கழுவுல கண்ணு" என தன் மகளின் மீது அக்கறையாக,அவளுக்கு பிடித்தவற்றை மட்டும் செய்ய வேண்டுமென படுத்த படுக்கையாக இருக்கும் அந்நிலையிலும் தன் மகள் தனக்காக தன்னைத் தொட்டு ஆறுதல் கூறுகிறாளே என மனநிறைவோடு தன் சுவாசத்தை பற்றி மறந்தவராய் புன்னகை சிந்தியவாறே தன் இன்னுயிரை நீத்தார். "அப்பா" என கண்களில் குளம் போல் தேங்கியிருந்த கண்ணீரோடு கத்தியவளின் குரல் அந்த மருத்துவமனை படுக்கை தொகுதி எங்கும் எதிரொலித்தது.

கலங்கிய கண்களோடு இதையெல்லாம் நினைத்துப் பார்த்து கொண்டிருந்தவளை "மேடம்" என்னும் அழைப்பை கலைத்தது. தன் கண்களின் ஈரத்தை யாருக்கும் தெரியாதவாறு மறைத்தவள், "உள்ள வாங்க" என வந்து இருப்பவருக்கு அனுமதி அளித்தாள்.

"நீங்க சொன்ன மாதிரியே குப்பை அள்ளுறவங்களுக்கு.." என கூறிக் கொண்டிருக்கும் போதே தனது கண்ணசைவால் அவரை நிறுத்தியவளின் செயலுக்கான காரணத்தை புரிந்து கொண்டவர், "சாரி மேடம்.. தூய்மை பணியாளர்களுக்கு சீருடை,கை கவசம், முக கவசம், கேப் எல்லாம் குடுத்தாச்சு.அவங்க எல்லாருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, அதற்கான ரிப்போர்ட்ஸ் இதுல இருக்கு" என அவர் கொண்டு வந்திருந்த மருத்துவ அறிக்கைகளை பவானியின் முன் நீட்ட ஒரு சின்ன புன்முறுவலோடு அதை வாங்கி கொண்டவள் அதைப் பார்க்க ஆரம்பித்தாள்.

"மேடம் உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா?" எனக் கேட்ட தன் உதவியாளரை கண்டு, மேலும் கீழுமாக தலையை அசைத்தவளின் கண்கள் அவர் கொண்டு வந்திருந்த மருத்துவ அறிக்கையையே பார்த்துக் கொண்டிருக்க, "நீங்க ஏன் மேடம் அவங்க பெருக்கி சுத்தம் செய்த இடங்கள் எல்லாம் தூய்மையான இருக்கானு பாக்குறத விட அவங்களோட மருத்துவ அறிக்கைகளை இவ்ளோ உன்னிப்பா பார்க்குறீங்க?" என வெகுநாட்களாக தன்னை குடைந்து கொண்டிருந்த கேள்வியை இன்று கேட்டுவிட்டார்.
அதற்கு சிறு புன்னகையை உதிர்த்தவள், "என் கடன் உழவாரப்பணி செய்து கிடப்பதேனு திருநாவுக்கரசர் கூட சொல்லி இருக்காரு. கோவில சுத்தம் பண்ணி உழவாரப்பணி செய்தவர நாம எல்லாரும் வணங்குறோம். ஆனா நம்ம இருக்கிற இடத்தை சுத்தம் பண்ற இவங்கள மதிக்கறது கூட இல்ல. கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாருனா அவர் இருக்கிற இந்த பூமியே சுத்தம் செய்யும் அவங்க எல்லாருடைய வேலையும் என்ன பொருத்தவர உழவாரப்பணி தான். இன்னிக்கு பெரிய பெரிய ஆளுங்க ஒரு தொடப்பத்த புடிச்சிட்டு சும்மா போட்டோக்கு போஸ் கொடுக்கறத ஷேர் பண்ணி வைரல் ஆக்குற நாம தினமும் இந்த வேலையை செய்றவங்கள பார்த்தா மதிக்கிறது கூட இல்லை. இன்னுமும் நிறைய இடத்துல இவங்களுக்கெல்லாம் தண்ணிய கூட யூஸ் அண்ட் த்ரோ வாட்டர் பாட்டில கொடுத்துட்டு அந்த பாட்டில அவங்க கொண்டு வர வண்டியிலேயே போடுறதெல்லாம் நடக்குது. அவங்கள லணங்கணும்னு நா சொல்லல. அட்லீஸ்ட் மதிக்கவாவது செய்யலாமேனு தான் சொல்றேன்" கலங்க இருந்து தன் கண்களை கட்டுப்படுத்திக்கொண்டு "அவங்க எல்லாரும் நம்ம மேல அக்கறையா நாம இருக்கிற இடத்த சுத்தப்படுத்தி நம்மளோட ஆரோக்கியத்தை பாதுகாக்கும் போது, அவங்கள பார்த்துக்க வேண்டிய பொறுப்பும் நம்ம கிட்ட தான் இருக்கு?" என சுகாதாரத் துறை தலைவரான பவானி கேள்வி எழுப்ப அவளது மேஜையில் வைத்து இருந்த புகைப்படத்தில் இருந்து அவளது தந்தை முனியப்பன் தன் மகளை எண்ணி கர்வமாக புன்னகைத்துக் கொண்டிருந்தார்.




कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...