கார்ப்பரேட் கிளாடியேட்டர்

சாகசம்
4.4 out of 5 (12 रेटिंग्स)
कहानी को शेयर करें

இளங்காலையில், இரவின் ஓடுகளை பறவைகளின் சத்தம் கொத்திக் கொத்தி உடைத்துக் கொண்டிருக்கிறது. என்னுடைய டெகாத்லான் எம்.டி.பி பைக்கை எடுத்துக்கொண்டு காலை உடற்பயிற்சி ஆரம்பித்தேன். தினமும் 24 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் எண்டார்பின் சுரக்கும் என்பது அறிவியல். வீட்டை ஒட்டிய தெருவில் கான்கிரீட் ரோட்டில் சற்று பயணித்தால் அந்த வண்டிப்பாதையை அடைந்துவிடலாம். நீண்டு நெளிந்து அந்த கிராமத்தின் ஆன்மாவை தொடும்படி உள்ளே போய்க் கொண்டிருக்கும். இரண்டு பக்கமும் வயல்வெளி, தென்னந்தோப்புகள் என மிக ரம்மியமான பச்சைப்பசேலென்ற காட்சி, என்னுடைய விருப்பமான சைக்ளிங் ட்ராக்.


அந்த மண் ரோட்டில் 500 அடி தான் போயிருக்க முடியும், அதற்குள் அண்ணன் இருதயராஜ் எதிர்ப்பட்டார். இருதயராஜ் எங்களுடைய பெரியப்பா மகன்.


இந்த மனுஷன் கிட்ட கொஞ்சம் பேசணும், பையனை இன்ஜினியரிங் படிக்க வச்சுட்டு வீட்டில் உட்கார வச்சு இருக்காரு.


“அண்ணே இருதயராஜ் அண்ணே, நல்லா இருக்கீங்களா” என்று ஆரம்பித்தேன்.


“நல்லா இருக்கேன் கண்ணு, கொழந்தைங்க நல்லா இருக்கா?, எல்லாத்தையும் கூட்டிட்டு வந்து இருக்கியா? ஒரு எட்டு நம்ம வீட்டுக்கு எல்லாத்தையும் கூட்டிட்டு வா” இது அண்ணன். அவரது கருத்த முகம் சுருக்கங்களின் வழியே தன் உறவை பார்த்ததினால் ஒரு பிரகாசமாக ஒளியை உமிழும் தொடங்கியிருந்தது


“நா மட்டும் தான் வந்தேன், ஒரு கெரயம் இருக்குது, அத முடிச்சுட்டு போலாம்னு வந்தேன், இன்னும் ரெண்டு நாள்ல போயிருவேன்”


சட்டென முகம் வாடி போச்சு “புள்ளைங்க கண்ணிலேயே இருக்கிறாங்க, நல்லா வளர்ந்திருப்பார்கள் இல்ல”


“எங்க இந்த பக்கம்” நான் பேச்சை மடை மாற்றினேன்


காதோடு கட்டியிருந்த தனது தலைப்பாகையை எடுத்து அவிழ்த்து முகத்தை தொடைச்சிகிட்டே “தெனமும் வரதுதானே, சோசிட்டிக்கு பால் வூத்த போய்க்கிட்டு இருக்கேன்”


தன்னுடைய அழுக்கான ஹீரோ சைக்கிள் நளினமாக இழுத்து பால் சிந்தாத வகையில் சென்டர் ஸ்டாண்ட் போட்டுக் கொண்டே சொன்னார்.


அப்படியே தொடர்ந்தேன், “ஏன்னா, நம்ம ஜீவாவ படிக்க வெச்சிட்டு வீட்லயே உட்கார வச்சிருக்கீங்க, இது நாயமா?, எங்கேயாவது மெட்ராஸ்கோ பெங்களூருக்கு வேலைக்கு அனுப்ப வேண்டிய தானே?, நல்ல கேம்பஸ் இன்டர்வியூ எல்லாம் வந்துச்சாமே” அவர் லெவலுக்கு இறங்கி கிராமத்து மொழியிலே என் கேள்விக் கணைகளைத் தொடுத்தேன்.


“அட போப்பா, வெளிநாட்டு லாபமும் சரி உள்நாட்டு நட்டமும் சரி, அவன் இங்கேயே இருந்து, காடு கன்னி பார்த்துக்கிட்டா போதாதா?”


என்னது சென்னை வெளிநாடா? அவர் அறியாமையை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன், அவனவன் சென்னைக்கு அருகாமையில் என்று சொல்லி விழுப்புரத்தில் பிளாட் போட்டு வித்துக்கொண்டிருக்கிறான்.


இந்த மனுஷனை எல்லாம் எப்படித்தான் திருத்த முடியுமா தெரியலையே!


“என்ன, நீங்கள் இந்த கரம்புள இருந்து கஷ்டப்படுவது போதாதா? உங்க பையன் வேற இதிலேயே இருக்கனுமா? என்ன தான் இருந்தாலும் ஒரு நீ படிச்ச பையன வீட்ல வச்சு இருக்கிறது நியாயமில்லைதான்”


“என்னையா கஷ்டம் இது, நாங்க நல்லா தான் இருக்கிறோம்”


இவங்களுக்கெல்லாம் வசதி அப்படின்னா என்னன்னே தெரியறதில்ல . சிட்டில பணம் இருந்தா எவ்வளவு வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்


“ என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, சிட்டியில் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை செஞ்சா மாச மாசம் சொளையா ஒரு அம்பது, அறுவது ஆயிரம் சம்பளம் கிடைக்கும், அதை வச்சி வசதியான வாழ்க்கையை அமைச்சிக்கலாம் இல்ல “


"இங்கே இல்லாதது என்னப்பா அங்கு கிடைச்சிருச்சு"


"நானும் 15 வருஷம் முன்னாடி மெட்ராஸ் போனன், இப்ப வீடு வாசல் வசதி நல்லா செட்டில் இல்லையா, அது மாதிரி ஜீவாவும் செட்டில் ஆகணும் தானே கேட்கிறேன்”


“என்னப்பா சொல்ற?”


“எனக்கு மாசம் ரெண்டரை லட்சம் சம்பளம் வருது அதுல மாசு செலவு போவ மீதி எல்லாம் நமக்கு லாபம் தானே, ஏசியில் உட்கார்ந்து வேலை செய்யறோம், ஏசி காரிலேயே போறோம் வர்றோம். சிட்டில எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருக்கு. நான் வெளியே யார்கிட்டயும் சொல்லுறது இல்ல, உங்க கிட்ட சொல்றேன், ஏறக்குறைய 5 கோடிக்கு சொத்து சேர்த்து வச்சிருக்கேன். “


“அப்படியா தம்பி பரவாயில்லையே”


“5 கோடி தான் ஆனா இன்னும் பத்து வருஷத்துக்கு லோன் கட்டினால் தான் நம்ம கைக்கு வரும்”


“என்னப்பா சொல்ற?”


“ஆமாண்ணே, ஒன்ற கோடில ஒரு அபார்ட்மெண்ட் வீடு வாங்கினேன், ஒன்னேகால் கோடி லோன் போட்டேன். 25 லட்சம் தான் நம்ம கையில இருந்த போடணும். மீதிய மாச மாசம் இஎம்ஐயா கட்டிக்கலாம்”


“அப்ப எவ்வளவு இஎம்ஐ கட்டற?”


“மாசத்துக்கு 90 ஆயிரம்”


“செரி, உன் சம்பளத்துல இது போக மீதி ஒரு லட்சத்தி பத்தாயிரம் கையில நிக்குது, சரிதானே”


“அதெப்பிடின்னே, மத்த செலவுல்லாம் இருக்குதுல்ல”


“அப்படி என்ன மத்த செலவு?”


“ரெண்டரை லட்சத்துல, எம்பது ஆயிரம் மோடிஜிக்கு கொடுக்கணும்” அவருக்கு புரியிற மாதிரி சொன்னேன்.


“மோடிக்கு எதுக்கு கொடுக்கணும்?”


"அதுதான் அண்ணே டேக்ஸ்," தொடர்ந்தேன், டேக்ஸ் புடிச்சிட்டு தான் சம்பளம் கொடுப்பாங்க”


“காருக்கு இஎம்ஐ பன்னிரண்டாயிரம் கட்டணும், வீட்டுக்கு மெயின்டனன்ஸ் ஏழாயிரம் ரூவா கட்டணும்”


“என்னப்பா உன் சொந்த வீட்டுக்கே நீ வாடகை கொடுக்கிற மாதிரி சொல்ற”


“ஆமாண்ணே 13 மாடி வீடு, வீட்டில ஸ்விம்மிங் புல், ஹாப் பாஸ்கெட்பால் கிரவுண்ட், வாக்கிங் டிராக், கார்டன் எல்லாம் இருக்குல்ல. அத மெயின்டனன்ஸ் பண்ணனும் இல்லையா, அதுக்காக மாசம் மாசம் எல்லாரும் மெயின்டனன்ஸ் சார்ஜ் கொடுக்கணும்”


“சரி, அப்புறம்” அவர் உதடு வழியே வழிந்த மென்சிரிப்பு நம்மை ஏளனம் செய்வதை மறைக்க முயன்று தோற்றுப் போனார்.


நெளிந்துகொண்டே தொடர்ந்தேன் “வீட்டுக்கு மளிகை சாமான் வாரத்துக்கு 2000 வரும்”


“அது ஒரு 8000”


“பெட்ரோல் செலவு மாசம் பத்தாயிரம்”


“சரி”


“ஞாயிற்றுக்கிழமை வார வாரம் எல்லாரும் ஒரு ஹோட்டலில் போய் சாப்பிடுவோம், குடும்பத்தோடு போய் சாப்பிடுவதற்கு ஒரு நாலாயிரம்”


“என்னப்பா, ஒருவேளை சாப்பிடறதுக்கு 4000 ரூவாவா”


“ஆமாண்ணே, ஹோட்டல் தான் நம்ம ஊர்ல இருக்க சாதாரண பரோட்டா கடை மாதிரி நினைச்சுக்காதீங்க, பார்பிக்யூ நேசன் மாதிரியான ஹோட்டல்”


“அப்படின்னா?”


“கறிய குறிச்சியில் சொருகி, அடுப்புல நாமலே வாட்டி சாப்பிட்றது”


“எது, நம்ம ஆடியில தேங்காய் சுடுற நோன்பில, தேங்காய்க்குள்ள அவல் - வெள்ளம் எல்லாம் போட்டு குச்சியை சொருகி நெருப்புல சுட்டு சாப்பிடுவது மாதிரியா?”


"ஆமாம், ஏறக்குறைய அப்படித்தான்,"


இந்த மனுஷன் நான் பார்பிக்யூ சிக்கன ஆடி தேங்காயோட கம்பேர் பண்றான்? ஒரு நாள் இவர அங்க கூட்டிட்டு போகணும்


“அப்புறம் மாசம் மாசம் கேபிள் டிவி, நெட் கனெக்சன் அதுதான் ஒரு 2500 ரூபா ஆயிரும்”


“அப்ப மீதி 50 ரூபா இருக்குன்னு சொல்லு”


கணக்கில் ரொம்ப வீக் போல


“அவ்வளவு எல்லாம் வராது, மாசம் ஒரு முப்பது ஆயிரம் தங்கும். அவ்வளவுதான், பிள்ளைங்க ஸ்கூல் யூனிபார்ம், டிரஸ், திருவிழாவுக்கு போக வர பிளைட் டிக்கெட், அப்படி இப்படின்னு போட்டு பார்த்தா பதினைந்து- இருபது ஆயிரதான் ஒரு மாசத்துக்கு நமக்கு நிக்கும். அது வந்து ஸ்டாக் மார்க்கெட்டில், மியூச்சுவல் ஃபண்டில் இன்வெஸ்ட் பண்ணி பல மடங்காக பெருக்கி லைஃப்ல செட்டில் ஆயிடலாம் இல்ல”


“என்னப்பா சொல்ற நீ, கூட்டி கழிச்சு பார்த்தா மொத்த ரென்ற லட்சத்தையும் உனக்காக நீ சம்பாரிக்காம, மத்தவங்களுக்காக நீ ஓலைச்சு சம்பாதிக்கிற மாதிரி இல்ல இருக்கு!”


“என்னன்னே சொல்றீங்க, நான் தானே சம்பாதிக்கிறேன். எனக்குத்தானே செலவு பண்றேன் .”


“நீ சம்பாதிக்கிறதுல ஒரு பங்க டேக்ஸா கவெர்மென்டுக்கு சம்பாதிக்கிற, பாதி ஹவுசிங் லோன் காரனுக்கு சம்பாதிக்கிற, மீதி வந்து பெட்ரோல் காரனுக்கு, சினிமாக்காரனுக்கு, ஷாப்பிங் மால் காரனுக்கு, கேபிள் டிவி காரனுக்கு பங்கு போட்டுக் கொடுத்தர்ற. இரண்டு லட்சத்தில் உனக்கு ஒரு பத்து பதினஞ்சு ஆயிரம் தான் சொச்சம் இருக்கு போல இருக்கு, அதையும் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்டாக் மார்க்கெட் காரனுக்கு குடுத்தர்ற , சரி அதாவது நிலையான வருமானத்தை உனக்கு குடுத்தா சரி “


நெத்தியடி, அந்த காலையில் உடைத்தது இருட்டின் திரை மட்டுமல்ல. இப்போது முழுதாக விடிந்திருந்தது.


ஆனாலும் காட்டிக் கொள்ளாமல் “இங்க மட்டும் என்ன வாழுது, மழை பெஞ்சா விவசாயம் இல்லைன்னா காடு கரடா கெடக்கும், வருமானத்துக்கு நிலையான வழி ஏது ?


“அப்படி இல்லப்பா, எவ்வளவு பஞ்சம் ஆனாலும் ஆடும் மாடும் தென்னை மரமும் நம்மள கைவிடாது. மாச செலவுக்கு அதுவே போதும். அதுபோக விவசாயத்தில் வருவதெல்லாம் நமக்காக நாமே சம்பாரிச்சிக்கிறது தானே. என்ன, இப்ப முன்ன மாதிரி ஆளுங்க கெடக்கறதில்ல, அதுக்காக டிராக்டர் வச்சிருக்கேன். அதை வைத்து சமாளிக்க வேண்டியதுதான். அப்படியும் நஷ்டம் ஆச்சுன்னா மோடி எங்களுக்கு காசு கொடுக்கிறார். பாருங்கள் உங்ககிட்ட இருந்து கவர்மெண்ட் காசு எடுக்குறாங்க, ஆனா எங்களுக்கு கொடுக்குறாங்க. என்ன உங்கள மாதிரி ஏசில்லை படுத்து தூங்கறத்துக்கு வசதி இருக்காது. ஆனா, ஏசி இங்க தேவையும் படாது. டிராக்டர்ல போனா என்ன கார்ல போனா என்ன. போற எடம் போய் சேர்ந்தால் போதாதா”


“மாசம் பூரா கஷ்டப்பட்டு ஒரு கம்பெனியில வேலை செஞ்சு, ஒரு முதலாளி கிட்ட சம்பளத்தை வாங்கி, அத பல முதலாளி கிட்ட பகிர்ந்து கொடுக்கிற வூடகமா ஆயிராதப்பா”


சென்னையில வேலை கிடைச்ச உடனே என் பங்கிலிருந்த வயலெல்லாம் வித்துட்டு அங்க போயி ஒரு வீடு வாங்கிட்டேன். அதோடு சேர்ந்து, இப்போ வாங்குன புது அப்பார்ட்மெண்ட்டையும் சேத்தா நம்ம சொத்து மதிப்பு எல்லாம் சேர்ந்து ஒரு 5 கோடி. இவருக்கு எவ்வளவு தேறுதுன்னு பார்க்கலாம்.


“இப்போ எவ்ளோ நெலம் வெச்சிருக்கீங்க, அண்ணே?”


“எட்டு ஏக்கரா”


“ஓகே, ஒரு ஏக்கர், எவ்வளவு வெலைக்கு போவது”


“யாராவது நிலத்திற்கு வெலய கணக்குப் போட்டு பார்ப்பார்களா”


“சும்மா சொல்லுங்க, ஒரு மதிப்புக்கு தான்”

“நம்ம குழந்தைசாமி போன வருசம் வித்தப்ப, 80 லட்சம்”


“ஆக மொத்தம் உங்க நெட்வொர்த் 6.4 கோடி”


இந்த மனுஷன் படிக்காம வேலைக்கு போகாமல் இன்டர்வியூ அப்ரைசல் எல்லாம் பார்க்காமல், யார்கிட்டயும் கைகட்டி வேலை பாக்காம ராஜா மாதிரி கிராமத்திலேயே இருந்து ஆடு மாடு வளர்த்து தென்னை மரத்தை வளர்த்து விட்டு விவசாயம் பண்ணிட்டு, நம்மளோட பெரிய நெட்வொர்த் வச்சிருக்கிறாரே!


“அது என்னமோ, நெட்வொர்த்தோ, கெரகமோ, எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நிலத்தை எல்லாம் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். அதுதான் நமக்கு சோறு போடுற அம்மா மாதிரி”


சொல்லிவிட்டு நன்றாக விடிந்திருந்த அந்த காலை வெளிச்சத்தை உமிழும் சூரியனை ஒருமுறை பார்த்துக் கொண்டார். வைட்டமின் டி!


“சரி சொசைட்டிக்கு பாலூத்த நேரமாச்சி, வேன் வந்துரும் நான் கிளம்புறேன், சாயங்காலம் ஒரு எட்டு உங்க வீட்டுக்கு வந்துட்டு போறேன். நம்ம ஜீவாவுக்கு இங்கே ஒரு தொழில் அமைச்சு கொடுக்கலாம்ன்னு இருக்கேன். நீதான சிட்டியில் வேலை செஞ்சு, நாலும் தெரிஞ்ச ஆளா இருக்க இல்ல, உன்கிட்டயும் ஐடியா கேட்டுக்கணும் ”


சாரி, என் பெயரை நான் உன்கிட்ட சொல்லவே இல்லையே. பேரு எதுக்கு. நான் யாருன்னு தெரிஞ்சா போதாதா, நான்தான் கார்ப்பரேட் கிளாடியேட்டர். கிளாடியேட்டர் ஞாபகம் இருக்கா நல்ல சாப்பாடு போட்டுக் கொழுக்க கொழுக்க வளர்த்து கொலோசியத்துல விளையாட அனுப்புவாங்களே


“நீங்க சிங்கம் அண்ணே, பையனுக்கு ஒரு நல்ல தொழில் இங்கே பார்த்து கொடுங்க, அவனாவது நல்லா வரட்டும்”


தன்னுடைய தலைப்பாகையை திரும்பும் தலையில் கட்டிக்கொண்டு சொசைட்டியை பார்த்து அவருடைய நாள்பட்ட ஹீரோ சைக்கிளை மிதித்தார்


நான் இறங்கி என் சைக்கிளை தள்ளிக்கொண்டு போனேன், திரும்பப் போக வேண்டிய இடம் நெடுந்தொலைவு போலத் தோன்றியது.

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...