விடுமுறை

காதல்
5 out of 5 (93 रेटिंग्स)
कहानी को शेयर करें

கிராமமும் இல்லாம நகரமும் இல்லாம ரெண்டும் கெட்டனா ஒரு ஊர் தான் என்னோடது. ‘மதுரை மேலூர்’ பக்கத்துல நாவினிப்பட்டி. இன்னும் தெளிவாய் சொல்லனும்னா மதுரையில் இருந்து ‘காரைக்குடி’ போக பஸ் ஏறுனா மேலூர் வழியா எங்க ஊர தாண்டமா உங்களால காரைக்குடி போக முடியாது.

1௦வது முடிக்குர வரை எப்டியாது பெரிய டவுன்ல போய் படுச்சு நல்லா ஊர் சுத்தணும், டவுனு தியேட்டர்ல படம் பாக்கணும், டவுன் பயல்க மாதி டிரஸ் போட்டு கெத்தா திரியனும்ன்னு ஆசை. எங்க ஊர்ல ஒண்ணுமே இல்லன்னு நெனச்ச ஜீவன் நான். அதுனாலயே 11வது திருச்சில போய் சேந்தேன் அதுவும் ஹாஸ்டலில், கம்மாய், ஆத்துக்கால், கேணின்னு ஆட்டம்போட்ட என்னைய பக்கட் தண்ணியில் குளிக்க சொன்னாய்ங்க, அதுலயே தொவைக்கவும் செய்யணுமாம்! றெக்க இருந்தும் பறக்க அனுமதி இல்லாத கூண்டு பறவையா இருந்தேன். சின்ன சின்ன லீவ்க்குள்ளா ஊருக்கு போன நம்ம கெத்து போயிரும்னு ஒரு வருஷத்த கழிச்சு முழு ஆண்டு லீவுக்கு தான் ஊருக்கு போனேன் ஆனா இந்த லீவ் என் வாழ்க்கைல மறக்க முடியாத லீவா மாறும்னு நான் நெனைகல…

வீட்டிக்கு போனதும் அம்மா கண்ணாலயே என்னை அளவெடுத்து எத்தனை கிலோ ட்டேனு சொல்லிட்டு இருந்துச்சு .அப்பா நான் வந்தத பாத்ததும் கறிவாங்க போய்ட்டார். தம்பிதான் என் புது சட்டையை கிழிச்சு வச்சிருந்தான் என் கைல சிக்கினா தீபாவளி தான்னு பய ஆளையே காணாம், எப்படியும் ராத்திரி தலைவருக்கு கச்சேரி இருக்கு.. ஊருக்கு வந்ததை உயிர் நண்பனுக்கு சொல்லனும்னு குளிச்சுட்டு மணியின் வீட்டுக்கு போனேன்.

டேய் வெள்ளை என்றேன் வாசலில் செருப்பை கழட்டும்போதே ( அதான் அவன் பட்ட பெயர் ) எந்த சத்தமும் இல்ல. வீட்டுக்குள்ள நொழையும்போது..

‘மணி இல்லையே’ என்ற கொரளு மட்டும் கேட்டுச்சு..

அதுவும் இதுவரை கேட்காத குரல், மணி அம்மா எப்போது இத்தனை மென்மையான குரலில் பேச ஆரம்பிச்சாங்க அது கீச்சு குரளாச்சே என்ற சந்தேகத்தில் இன்னும் ரெண்டடி எடுத்து வைக்க ! திரையை பிடித்துகொண்டு பாதி முகம் தெரிய,

‘இப்பத்தான் மணி வெளிய போனான்’ என்றது அந்த குரல்.

இந்த ஊரில் இல்லை என் வாழ்வில் இதுவரை கண்டிராத முகம், சிறுவயது முதல் கேள்விப்பட்ட தேவதை கதைகளில் வருமே அந்த முகம்!

அத்தை.....

என்று எனக்கே கேக்காத குரலில் சொன்னேன்

‘ரைஸ்மில் போயிருகாங்க’

நடு வீட்டில் படுத்துக்கிட்டு பகுமானமா டிவி பாத்த வீடு, இப்போது வேற்று கிரகம் போல ஒரு மாயை!

நிற்பதா? இல்லை போவதா?எதுவம் சொல்லாமல் தடுமாறி வெளியே வந்து வலது செருப்பை இடது காலிலும், இடது செருப்பை வலது காலிலும் மாட்டிவிட்டு உடல் வியர்க்க எங்கே செல்கிறேன் என்று தெரியாமல் சென்று கொண்டு இருந்தேன்.இப்போது படிப்பது ‘பயாலஜி’ என்பதால் இத்தனையும் என் உடலில் அட்ரலின் செய்வது என்பது புரிந்தது. இல்லையேல் மாரடைப்பு என்று பயத்திலயே செத்துருப்பேன். எப்போது வீட்டுக்கு சென்றேன் எப்படி சாப்பிட்டேன் எதுவும் நினைவில்லை. மாலை மணி வீட்டுக்கு வந்து முதுகில் ‘பொழீற்’ என்று வைத்து,

ஏன்டா மதியம் கூப்டுறேன் கேக்காத மாதி போய்டே இருக்க வெண்ண, மாட்ட ஆஸ்பத்ரிக்கு கூட்டிட்டு போயிடு இருந்தேன், இல்லைனா அங்கயே செல்லைலயே ரெண்டு போட்டுருப்பேன் என்று சொன்ன பின்னாடிதான் எல்லாம் தெளிந்தது.

சரி, வா வீட்டுக்கு போவோம் அம்மா உன்ன கூட்டி வர சொல்லுச்சு என்றான். இல்லைடா வேலை இருக்கு என்றேன்.நீங்க என்ன புடுங்குவிங்கனு எங்களுக்கு தெரியும் வாங்க போவோம்னு இழுத்துக்கொண்டப் போனான். அவன் கைகையில் எங்க வீட்டில் சுட்டு வச்ச பலகாரம் தான் இருந்தது.ரெண்டு பேர் வீட்டிலும் அப்படித்தான் அடுப்படி வரை சென்று கேட்காமல் கூட எதையும் எடுத்து தின்போம், அப்படிபட்ட நண்பனின் வீட்டுக்கு போக முதல் முறையாக தயங்குகிறேன். வழியில் அவன் கேட்ட அத்தனை கேள்விக்கும் ஏதேதோ உளறினேன். சுடுகாட்டுக்கு night 12 மணிக்கு தனியா போயிட்டு வரவனுக்கு பொரட்டா வாங்கி தரேன்னு போண்டா குரமார் சொன்னதுக்காக, சுடுகாட்டுக்கு போய் பந்தயம் செயிசுட்டு இப்ப, நண்பன் வீட்டுக்கு போக கால் நடங்குதேனு எனக்கே என்ன நெனச்சா கேவலமாத்தான் இருந்துச்சு..

என்ன தொரை வந்து, மணி இருக்கானானு கேட்டு அப்டியே போய்டிங்கலாமே? ஏன் வெளி ஊர்ல படுச்சா எங்களலாம் பாக்க மாட்டிங்கலோ !

என்று வம்பிழுக்க ஆரம்பித்தாங்க மணியின் அம்மா. என் கண்கள் அந்த வீட்டின் எல்லா மூலையிலும் திரைக்கு பின்னால் நின்று தரிசனம் தந்த அந்த முகத்தை தேடிக்கொண்டு இருந்தது. இல்ல அத்தை அம்மா ஒரு வேல சொல்லுச்சு அதான்... என்று இழுக்கும் போது ஒரு கை டம்லரில் காப்பியோடு மூஞ்சிக்கு முன்னாடி நீட்டியது, காப்பியாது குடிப்பிங்கிள்ள தொரை! இல்லை பூஸ்ட் கேப்பிங்களா? நான் நிமிர்ந்து காப்பி டம்ளர் கொண்டுவந்த முகத்தை பார்த்தால்!!. இதுவரை தேடிக்கொண்டு இருந்த அதே முகம் ! இப்போது எனக்கு தேவை ‘காப்பி அல்ல ஆக்சிசன்’ எனது இதயம் துடிப்பது எனக்கு தெளிவாய் கேட்ட துவங்கியது.

ஏண்டி இப்டி அவனை கிண்டல் பண்ற போய் , கறி வெந்துருச்சானு பாரு அவனுகுக்கு சூப் எடுத்து வட்சுருக்கேல கொண்டு வா, என்றபடி மணியின் அப்பா பின்பக்கத்தில் இருந்து வந்தார். சற்று சுயநினைவு வந்தவனாய் கைகளில் இருந்த டம்ளரை வாங்கிக்கொண்டேன். என்ன மாப்ள எப்பவும் உங்க அத்தைய நீதான் கிண்டல் பண்ணிட்டு இருப்ப இன்னிக்கி அவ கை ஓங்குதே! பெரிய பள்ளிகூடத்துல பேச கூடாதுன்னு சத்யம் எதுவும் வாங்கிடான்களா ? சொல்லுங்க இந்த பயலையும் அங்கயே சேத்துவிட்ருவோம் என்றார் சிரித்துக்கொண்டே. முதல் முறையாக அந்த தேவதை எனை பார்த்து சிரித்தது.. காப்பி தொண்டையில் தித்தது. அம்மா காப்பில சீனியே போடலயா என்றான் வெள்ளை.. இப்போது தேவதை என்னை பார்த்து மறுபடியும் சிரித்தது.

அடுத்தநாள் காலை கம்மாய்ல குளிக்கும்போது, ஏண்டா வெள்ளை, யார்ட அது வீட்ல புதுசா ? என்றேன் தயக்கத்தோடு . சீயக்கா பாக்கெட்டுக்குள் தண்ணியை விட்டு அதை சாம்பு போல் செய்து தலையி தேய்த்து விட்டு மடார் என்று குதித்தான் மணி.

யார்ட நம்ம வீட்டுலயா ?

ஒருவேளை தெரிந்துகொண்டே கிண்டல் செய்கிறானோ என்று நினைத்துகொண்டு நானும் குதித்தேன். இல்லைடா டீ கொண்டு வந்து கொடுத்தாங்களே... அந்த பொண்ணு என்று இழுத்தேன்.

என்னது கொடுத்தாங்களா ? டேய் அது நம்ம திருச்சி ஜோதி சித்தி பொண்ணுடா தெர்லையா? ரெண்டு வருஷம் முன்னாடி திருவிழாவுக்கு கூட வந்திருந்துச்சுல ! ஆமல.. அப்பத்தான் நீ உங்க அம்மாச்சி செத்துடாங்கனு ஊருக்கு போயிட்டியோ. என்று அவனே கேள்வி கேட்டு பதிலும் சொன்னான்.

பயங்கர வாயாடிடா என்ன பத்தி எதையும் ஒளறி வச்சுராத ஓட்டி எடுத்துருவா என்றான். சரி ‘மச்சான்ன்ன்ன்ன்ன்’ என்றேன்.

மாலை வீட்டுக்கு மணியின் தம்பி வந்தான், அண்ணே வெள்ள உன்ன வீட்டுக்கு கூட்டி வர சொல்லுச்சு என்றான்.

போவதா வேண்டாமா? சினிமாவில் மட்டும் பார்த்த வயிற்ருக்குள் பறக்கும் பட்டாம்பூச்சி அவளை பார்க்கும் போதெல்லாம் எனக்குள்ளும் பறக்கிறது. போகாமலும் இருக்க முடியாது வீட்டிருக்கு வந்து செருப்பால அடிச்சு கூட்டிட்டு போவான். எதுக்குடா கூப்டான்?என்றேன்.

அப்பா புதுசா கேரம் போர்டு வாங்கிட்டு வந்துருக்கு அதான் கூட்டிவர சொன்னான். நான் மணியை விட நல்லாவே விளையாடுவேன் தொடர்ந்து ரெண்டு தடவை தோத்துட்டா மணி ஆட்டைய கலச்சுருவான், அதுக்காகவே சில சமயம் வேண்டும் என்றே தோத்து இருக்கிறேன். எப்படியும் தேவதையின் தரிசனம் ஒருமுறையாவது இன்று கிடைக்கும் என்று மனதுவேற சொல்லிக்கொண்டே இருந்தது.

ஏன்டா குட்டி , ஜோதி சித்தி பொண்ணு வந்துருக்கே என்ன படிக்குதடா அது ? 11வது தான் அண்ணே, எதோ ‘பயாலாஜி’ யினு அம்மாட்ட சொல்லிட்டு இருந்துச்சு .. ஏண்ணே என்றான். இல்லைடா நானும் ‘பயாலாஜி’ தான் புக்ஸ் வேணும் என்றேன் அசடு வழிந்தபடி.. முதல்முறையாக பயாலாஜி எடுத்ததிற்கு பேரானந்தம் கொண்டேன். அமீபா ஆர்டின் வடிவத்தில் மனக்கண்ணில் ஓடிக்கொண்டிருக்க, என்னைக்கிடா வந்துச்சு.... என்று கேக்கும் முன் மணியே வாசலுக்கு வந்து, இங்க இருக்க வீட்டுல இருந்து வர இவ்ளோ நேரமாடா உனக்கு. பாத்தியா, போர்டு வாடைக்கு எடுத்து தானே விளடுவோம் இப்ப ‘நம்ம போர்டு' விடிய விடிய விளாடுறோம்’ என்றான் கெத்தாக .

குட்டி எனக்கு எதிரே உட்கார மணி எனது இடப்பக்கம் உட்கார்ந்தான். மூன்று பேர் மட்டுமே இருந்ததால் ‘போண்டி’ விளையாடுவோமா என்றேன். வேணாம்ட போர் அடிக்கும் டீம் போட்டு ஆடலாம் என்றான் மணி. நான் மூன்று பேரை வச்சு டீம்மா ! என்று சந்தேகமாக அவனை பார்க்க, கைகளில் கேரம் பவுடர் டப்பாவுடன் , தேவதை கேரம்போரடின் முன் நின்றது. எனக்கு வலது பக்கம் மட்டுமே இடம் காலியாக இருந்ததால், எதுவும் கேட்காமல் தேவதை அந்த இடத்தில் அமர என் இடப்பக்க இதயம் வலப்பக்கம் என்னை கேக்காமலே நகர்வதை உணர்ந்தேன்..

கேரம் போர்டு காயின்கள் அனைத்தும் என்னை பார்த்து கேலி செய்து கொண்டிருந்தது.. தொடர்ந்து 13 முறை தோர்த்துவிட்டோம் என்று குட்டி என்னை கழுவி ஊத்தும் வரை ஒரு எழவும் எனக்கு தெரியவில்லை. எனக்கு நினைவில் இருந்தது எல்லாம் ஒவ்வொரு முறையும் என் தேவைதை ஸ்ட்ரைக்கரை சுன்டிய போதும் அதை அவளிடம் நகர்த்தியது மட்டுமே நான் செய்த ஒரே வேலை..

அடுத்த நாள் மணி வீட்டுக்கு போனபோது தேவதையை காணவில்லை.இப்ப தானேடா உன்ன பாக்க போறேன்னு அவன் உங்க வீட்டுக்கு போனான் , அவன பாக்க நீ இங்க வந்துட்டியாக்கும் என்றார்கள் மணியின் அம்மா. நான் அந்த வெண்ணைய பாக்க வரல, என் தேவதைய பாக்க வந்தேன்னு சொல்ல ஆசைதான் ஆனால் முடியாதே.. தொடர்ந்து மூன்று நாட்களாக வீட்டில் அவள் இல்லை ! யாரையும் கேட்கவும் முடியாமல் கடுப்பாக இருந்தது. மணி இல்லாமல் நான் வெளியே போகும் ஒரே இடம் எங்க ஊர் நூலகம் மட்டுமே, மணி இதுக்காக என்னை கெட்ட வார்த்தையில் கூட திட்டி இருக்கிறான். எப்டிடா புக்குலாம் படிக்கிற கருமம் என்று. தின பத்திரிக்கை, வாரமலர் முடிந்து , கொஞ்சம் சுஜாதா, புதுமை பித்தன் ஜெயகாந்தன், அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில புது கவிதைகள் அவ்வளவே எங்கள் ஊர் நூலகம். வாரம் ஒருமுறையேனும் போய் விடுவேன். தேவதையின் தரிசனம் இல்லாத கடுப்பை தனியே கழிக்க இருக்கும் ஒரே இடம் நூலகம் தான் என்று அங்கே சென்றேன்.

வாட, திருச்சி இப்பதான் விட்டுச்சா, மெலுஞ்சுட்ட போலியே என்றார் எங்க ஊர் நூலகர் ஸ்டான்லி அண்ணன். அதலாம் இல்லை அண்ணே. ‘விகடன்’ எங்கே என்று கேட்டேன் இப்பதாண்டா யாரோ எடுத்துட்டு போனாங்க , அங்க டேபிளில் இருக்காணு பாரு என்றார். ரெண்டு டேபிள்தான் மொத்தமே! இதுல என்ன தேடுறது என்று அவரை கலாய்த்துகொண்டே புத்தக அலமாரியை தாண்டி இருக்கும் டேபிளை நோக்கி நகர்ந்தேன். ஆனந்த விட்கனின் அட்டை படத்தில் எதோ ஒரு பிரபல தமிழ் சினிமா நாயகியின் புகைப்படம் அது யார் என்று உன்னித்து பார்க்க அந்த புத்தகம் வாசித்த கண்கள் புத்தகத்தை இறக்கி என்னை நிமிர்ந்து பார்த்து, அப்படியே நின்றது...

ஆம் என் தேவதையே தான். மூன்று நாட்கள் சொல்லாமல் எங்கே போனாய் என்று கோபப்பட்டிருக்க வேண்டும் அல்லவா ஆனால் அந்த கண்களை பார்த்தபின்பு அந்த சின்ன நூலகம் இன்னும் சுருங்கி போனது காற்று இல்லாத என் நுரையீரலைப் போன்று..

கால்கள் மரத்து போய் அப்படியே நின்றேன்,கண்களால் ‘வா’ என்றாள், காந்தத்தால் ஈர்க்கப்படும் சிறு இரும்பாய் அவள் முன் நின்றேன். உட்காரும்படி கண்களால் கட்டளை இட்டாள், உட்கார்ந்தேன், பிடித்த புத்தகம், பிடித்த எழுத்தாளர் என்று எதை கேட்டாலும் 1 மணி நேரம் என்னால் பேசமுடியும், ஆனால் என்னால் அவளின் கண்களை சில நொடிகள் கூட தொடர்ந்து பார்க்க முடியவில்லை பின்பு எப்படி வாரத்தைகள் வரும்.. நான் அங்கு இருந்த வேறு சில பத்திரிகைகளை படிப்பது போல் பவனை செய்துகொண்டிருந்தேன். இப்போது வெளிபடையாக சிரித்தாள்.. என் கையில் இருந்த ஏதோ ஒரு வார பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் ஆண்மைக்குறைவு விளம்பரம்..

அதை பார்த்து நான் அசடு வழிந்ததை புத்தக அலமாரியில் இருந்த சுஜாதா பார்த்திருந்தால் என்னை வைத்து கேவலமாக அசடு வழிவது எப்படி என புத்தகமே எழுதி இருப்பார்.. விகடனை என் முன் வைத்துவிட்டு எழுந்து நின்றாள்..

மூணு நாள் மேலூர்ல இருந்த மாமா வீட்டுக்கு போயிருந்தேன். என்று சொல்லிவிட்டு ஒரு முறை முறைத்துவிட்டு போய்விட்டாள். ஒரு வேலை நான் கேட்க வேண்டும் என்று இத்தனை மணி நேரம் காத்திருந்தாளோ ! நீயெல்லாம் தும்பை செடியில் தூக்கு போட்டு தொங்குடா என்று என்னை நானே கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிகொண்டேன். அதன்பின் மணி வீட்டுக்கு எப்போது போனாலும் ஒரு ‘முறை முறைப்பாள்’ ஓடி வந்துவிடுவேன்..

அன்று நானும் மணியும் தோப்புக்கு போயிட்டு வந்துகொண்டு இருந்தோம் மணியின் அத்தை பொண்ணு மலர் யாருக்கோ சைக்கிள் ஓட்ட கத்துகொடுத்து கொண்டிருந்தது. இப்போதெல்லாம் 1௦௦௦ அடி தூரம் என்றாலும் அவள் இருப்பது மட்டும் எப்படியோ மனதுக்கு தெரிந்துவிடுகிறது. அது அவளேதான்.. நான் அருகில் வருவதை பார்த்ததும் உடனே சைக்கிளில் இருந்து இறங்கி நின்றாள். நான் வேண்ணா ஓட்ட கத்து குடுக்கவா ? மலரை வம்பிழுத்தான் மணி...

நாங்கலாம் நல்லாத்தான் ஓட்டுவோம் உங்க தொங்கச்சிக்கு தான் ஓட்ட தெர்லையாம் அவளுக்கு வேணா சொல்லி கொடு என்றாள் மலர் நக்கலாக,

கண்களால் நான் சொல்லி தரவா என்றேன். மீண்டு அதே முறை ... வாட போவோம் என்று அவனை இழுத்துக்கொண்டு சென்றேன் எங்கள் தலை மறையும் வரை ஒற்றை கையில் சைக்கிளை பிடித்துக் கொண்டு ஒற்றை கையில் இடுப்பில் வைத்துகொண்டு பாவாடை தாவணியில் ஓவியம் போல் எங்களை ( என்னை) பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அன்று அம்மா கொடுத்த சீம்பாலை மணி வீட்டுக்கு எடுத்து சென்றேன். நுழைந்ததும் அத்தையும் தேவதையும் முற்றத்தில் கேரம்போர்ட் ஆடிக்கொண்டு இருந்தார்கள்.. அத்தையை பார்த்து சிரித்தேன், போச்சு நீ வேற பாத்துடியா இவ தாண்டா போர் அடிக்கிதுன்னு உட்கார வச்சுட்டா எனக்கு ஒரு மண்ணும் தெரியல, நான் சுண்டுன்னா இது வெளிய போய் விழுது என்று அத்தை சிரித்துக்கொண்டே ஸ்ட்ரைக்கரை காட்டிச் சொன்னாள். அம்மா சீம்பால் கொடுத்தார்கள் என்று சொன்னதும் வாங்கிகொண்டு எனக்கு வேலை நெறைய கெடக்குடா செத்த இவ கூட விளாடேன், மணி அவுங்க அப்பா கூட மேலூர் சந்தைக்கு போய்ருக்கான் என்று சொல்லிவிட்டு கையில் இருந்த தூக்கை வாங்கிகொண்டு அடுப்படிக்குள் நுளைந்துவிட்டாள் அத்தை...

வெளி கதவுக்கும் எனக்கும் எவ்வளவு தூரம் என்றும் ஓடினால் அத்தைக்கு தெரிந்துவிடுமா என்றும் நினைத்துகொண்டு அடுப்படியயையும் வாசல் கதவையும் பார்த்துகொண்டிருக்க, அவள் அடுத்த ஆட்டத்துக்கு காய்களை வட்டமாக அடுக்கி பின் நிமர்ந்து என்னை நோக்கி ஒரு பார்வை ! அவ்வளவு தான் அவள் எதிரில் அமர்ந்துவிட்டேன்.

இரண்டு கைகளையும் போர்டில் இருக்கும் காய்களில் வைத்து காய்களை அவளை நோக்கி சற்று நகர்த்தி, பின் அது சரியாக இருகிறதா என்று ஒரு பார்வை பார்த்து ஸ்ட்ரைக்காரை மையத்தில் இருந்து சற்று விலகி இருந்த ஒரு வெள்ளை காயினை நோக்கி சுண்டினால் எதிரில் இருந்த இரண்டு குழிகளிலும் இரண்டு வெள்ளை காய்கள் விழுந்தன , மூன்றாவது குழியில் நானும் !

மூன்றாவது காயின், அவளது வலது புறம் எதிர் பக்கம் இருக்கும் குழியை பார்த்தாள் ஆனால் குழியின் அருகில் எனது கருப்பு காய் நின்றது. கொஞ்சம் இடுப்பை வளைத்து ,கழுத்தை சாய்த்து வெள்ளையை நோக்கி ஒரு சுண்டு, எனது கருப்பு காயை தள்ளிவிட்டு வெள்ளை குழிக்குள் விழுந்தது. ஸ்ட்ரைக்கர் எனது பக்கத்தில் நின்றது, புருவத்தை உயர்த்தி கொடு என்பதுபோல் ஒரு பாவனை .. ஸ்ட்ரைக்கரை அவள் பக்கம் நகர்த்த அவளும் சரியாய் தனது கையை நகர்த்த இருவரின் விரல்களின் நுனிகளும் உரச, மின்சாரம் உராய்வின் காரணமாக உண்டாகும் என்னும் இயற்பியல் பாடம் நினைவுக்கு வரும் அளவு கண்களை மூடி ரசித்து, கண்களை திறந்து அவளைப் பார்க்க, இடுப்பில் கைகளை வைத்து முறைத்துகொண்டிருந்தாள்..

இப்போது மையப்பகுதில் இருக்கும் ஒரு வெள்ளையை குழியை நோக்கி செலுத்த வேகம் சற்று அதிகமானதால் அது கட்டையில் முட்டி , குழிக்கு அருகிலேயே நின்றது. உதடுகளை சுழித்து ஸ்ட்ரைக்கரின் நுனியை கடித்தபடி கண்களை சுருக்கி ச்சே.. என்றாள். நான் ஸ்ட்ரைக்கரை எடுத்து ஆட்டையை துவங்கும் முன்பு இயல்பாக செய்வது போல் அவள் உதடு பட்ட அதே இடத்தில் அவளுக்கு தெரியாத மாதிரி ஒரு முத்தம் கொடுத்தேன்.. ஆனால் ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி ஒரு சின்ன முறை முறைத்தாள்.. எனது சட்டையில் ஸ்ட்ரைக்கரை துடைத்துவிட்டு கேவலமா ஒரு சிரிப்பு சிரித்தேன். உதடுகளை குவித்து துப்புவது போல் செய்தாள்.. முகத்தை கைகளால் மூடி கொண்டேன்.

சும்மா விட கூடாது என்று எதிர் திசையில் இருந்த மூன்று காயின்களை அடுத்து அடுத்து பாக்கெட் செய்தேன், பின் ஒரு ரிவெர்ஸ்,பின் ஒரு ஆரோ கட், அதன் பின் ஒரு செண்டர் பாயிண்ட் 5 காயின்கள் பாக்கெட் செய்துவிட்டு கெத்தாக பார்த்தேன்..ஒரு கையை கண்ணத்தில் வைத்து நான் ஆடியதை பார்த்து கொண்டிருந்தவள் , என்னைப் பார்த்து ‘ திருச்சி’ SRV ஸ்கூல்ல படிக்கிறிங்க போல என்றாள். நான் சுண்டிய ஸ்ட்ரைக்கர் நேரடியாக குழிக்குள் விழ ஹா ஹா மைனஸ் மைனஸ் என்று சிரித்துவிட்டு பரவால பர்ஸ்ட் மைனஸ் தானே காயின் வைக்க வேணாம்... என்று கொஞ்சலாக சொல்லிவிட்டு ஸ்ட்ரைக்கரை கையில் எடுத்தாள். நான் ஆச்சர்யமாக அவளை பார்க்க, 1௦வதுல 443 மார்க்,இந்த ஊர் போர் அடிக்குதுனு சொல்லி, திருச்சில 11வது சேந்துருகிங்க, அதுவும் ‘பயாலஜி’ பட் ஏன் எடுத்தோம்னு தெரியாது ஹா ஹா, புடுச்ச கலர் கருப்பு, புடுச்ச சாப்பாடு சாம்பாரும் சிக்கனும், பெஸ்ட் ஃபிரண்ட் மணி உங்க பிறந்த நாள் ஆகஸ்ட் 14. சிகப்புக்கு ஒரு துணைகாயின் வெள்ளையை தவிர அதனையும் முடித்து விட்டு சொன்னதலாம் சரியா ? என்பது போல் மீண்டும் ஒரு பார்வை.. ரெட்க்கு துணை காயின் போட ரிவர்ஸ் ட்ரை பண்ண அது குழிக்கு அருகில் சென்று நின்றது. என்னிடம் ஸ்ட்ரைக்கரை தள்ளினாள்

டேய் ! அப்டியே போய் கேணில குதுச்சு செத்துடுடா. மனச்சாட்சி சத்தமாக சொல்லிக்கொண்டு இருந்தது, எதையும் காட்டிக்கொள்ளாமல் மீதம் இருந்த எனது கருப்பு காய்களில் சிவப்புக்கு துணை காயின் மட்டும் ஒன்னை மிச்சம் வைத்து மத்த எல்லா காயினையும் போட்டு, எனக்கு நேர் எதிரில் இருந்த சிவப்பை தேர்ட் பாக்கட் செய்து போட்டு துணை காயினை போடும் முன் அவளை பார்க்க , நாளைக்கு ஊருக்கு போறேன் என்றாள் !

ரெட்டுக்கு துணை காயினாக எனது கருப்பை போடாமல் அவளின் வெள்ளை காயினை பாக்கெட் செய்து கண்கள் களங்க U WIN என்பது போல ஸ்ட்ரைக்கரை அவளிடம் நீட்ட, என்ட எதுவும் கேக்க தோணலையா ? என்றாள்.

உன் பேர் என்ன ? என்றேன் அப்பாவியாய் ..

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...