JUNE 10th - JULY 10th
டூப்
மணிகண்டன் வீட்டு கதவை திறந்த போதே, ராணி அவனை தடுத்தாள்..
"வேண்டாம் மணி.. சொன்னால் கேளு.. எப்படியாவது சமாளிப்போம்.. இது மட்டும் வேண்டாம் டா.." என அவள் கெஞ்ச, அவளை வெறுமையாக பார்த்தவன், நிதானமாக கையை கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து நின்றான்..
"இருப்பது இன்னும் இருபத்து நாலு மணி நேரம்.. அதற்குள் என்ன செய்து விடுவாய்..? சொல்லு.. உன்னால் உருப்படியாக ஒரு யோசனை சொல்ல முடிந்தால் கூட, நான் போகவில்லை.."
அவன் கேள்விக்கு பதில் தெரியாமல் ராணியின் கண்கள் தானாக கலங்க, காதல் மனைவியின் கண் கலங்குவதை அவனாலும் தாங்க முடியவில்லை..
ஒற்றை கையால் அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து கொண்டவன், "தயவு செய்து அழுது மட்டும் என்னை பலவீனமாக்காதே மஹாராணி.." என்றான் கரகரத்து போன குரலில்.
எப்போதும் செல்லமாக கூப்பிடுகிறேன் பேர்வழி என நீட்டி முழக்கி அவன் அழைக்கும் இந்த அழைப்பு, அவள் முகத்தில் தானாக ஒரு புன்னகையை தோற்றுவிக்கும்..
இன்றோ இருவருமே எதையும் ரசிக்கும் நிலையில் இருக்கவில்லை..!
அவள் முகத்தை நிமிர்த்தி அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தவன், "வரேன் டா" என்றுவிட்டு அவளை நகற்ற, ஏதோ யோசித்தவள், "இரு டா" என்றுவிட்டு வேகமாக உள்ளே ஓடினாள்.
சாமி படத்திற்கு முன் இருந்த விபூதியை எடுத்து வந்தவள், "குனி மணி" என கூற,
"அட! 'குனி மணி' ரைமிங்கா வருது பாரேன்..!" என கிண்டலடித்து கொண்டே குனிந்தான் மணிகண்டன்...
'இவனுக்கு எப்படி தான் சிரிப்பு வருதோ!' என சலித்து கொண்டவள், அவன் நெற்றியில் விபூதியை வைத்து, கைகளால் அவன் கண்ணை மறைத்து கொண்டு ஊதி விட்டாள்..
"நானும் வரேன் மணி" என்றவள், பூட்டு சாவியை எடுக்க,
"என்னுடன் வர போகிறாயா..? அப்போ அங்கே யார் பார்ப்பது..?" என்றான் மணிகண்டன் புரியாமல்.
"ஆமா, போனால் உள்ளே விட்டுட்டு தான் மறுவேலை பாக்கறாங்க பாரு..! சேர்ந்தே போவோம்.. முதலில் உன்னுடன் வரேன்.." என அவள் கூறிவிட,
"எதுவும் ஆர்ப்பாட்டம் பண்ண கூடாது" என்றான் அவன் முன் எச்சரிக்கையாக.
அதில் வலியுடன் அவனை பார்த்தவள், "மாட்டேன் டா.. வா.." என்றுவிட்டு வீட்டை பூட்டினாள்.
இருவரும் ஒரு ஆட்டோ பிடித்து ஏற, மணிகண்டன் கையை அழுத்தமாக பிடித்து கொண்டாள் ராணி.
'உன்னை என்னை வீட்டு யாராலும் பிரிக்க முடியாது' என உணர்த்த முயன்றாளோ..!
மனைவி கஷ்டமும் பயமும் அவனுக்கும் புரிய தான் செய்தது.. என்ன செய்ய..? அவர்கள் சூழ்நிலை அப்படி..!
நினைத்தவுடன் பணம் சம்பாதிக்கும் திறன் அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே..!
எந்த அதிர்ஷ்ட தேவதையும் அவர்கள் வீட்டு கதவை தட்டவில்லையே..!
மாறாக பெரிய வெடிகுண்டை தானே அவர்கள் தலையில் போட்டுவிட்டு சென்றது..
வெடிக்க கூடாது என்று வேண்டி உயிரை இழப்பதை விட, வெடிப்பதை தடுப்பது தான் புத்திசாலி தனம்.. அதுக்கு தான் அவன் முயல்கிறான்..
நல்லபடியாக நடக்க வேண்டும்..!
அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும், இருவரும் இறங்கினர்..
அவன் தலை தெரிந்தது தான் தாமதம், "யோவ் மணி, எவ்வளவு நேரம்..! எல்லாம் ரெடி.. லைட்டிங் கூட செமையா இருக்கு... சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு வா.." என ஒரு குரல் கேட்க,
"இதோ, அஞ்சு நிமிஷம் சார்" என பதில் கூறியவன்,
"இங்கேயே இரு ராணி.. கத்தி கலாட்டா செய்தாலும் ஒன்றும் மாறப்போவதில்லை.. மீண்டும் மீண்டும் ரீ டேக் போவது தான் மிச்சமாக இருக்கும்.. அதனால் அமைதியாக இரு.. ப்ளீஸ்.. எனக்கு என்ன ஆனாலும் உன் கையில் பணம் வந்துடும்.. அழுவதென்றால் கூட பணத்தை வாங்கிட்டு அழு.." என அவன் அழுத்தமாக கூற,
"நீ ரொம்ப கல் நெஞ்சக்காரனா மாறிட்ட..." என்றாள் அவள் இயலாமையுடன்.
"நீயும் மாறிக்கொள்.. இப்போ நமக்கு தேவைப்படுவது கல் நெஞ்சு தான்.." என்றவன், அதற்கு மேல் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டான்..
ஒரு பக்கம் தனியாக சென்று நின்ற ராணி, அந்த இடத்தை சுற்றி மெதுவாக கண்களை சுழற்றினாள்..
அது ஒரு மிக பெரிய அபார்ட்மென்ட்..
அங்கு தான் அன்று ஷூட்டிங் ஸ்பாட்..
பலர் ஏதேதோ வேலை செய்து கொண்டிருந்தனர்..
அவள் கவனம் அங்கு இருந்த யார் மீதும் பதியவில்லை..
அவள் கவனம் முழுவதும் கண்ணுக்கு எதிரில் இருந்த மிக பெரிய கட்டிடம் முன்பு தான் இருந்தது..
இருபது தளம் கொண்ட மிக பெரிய அபார்ட்மென்ட் அது..
அங்கிருந்து விழுந்தால் முழு உடலாவது மிஞ்சுமா..!
இதோ அவள் கணவன் குதிக்க தான் தயாராகி கொண்டிருக்கிறான்..
கயிறெல்லாம் கட்டுவார்கள் தான்..! ஆனால் நாயகர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வெறும் 'டூப் ஆர்ட்டிஸ்ட்' மணிகண்டனுக்கு இருக்குமா..!
அதுவும் பலர் செய்ய மாட்டேன் என பயத்துடன் கை விரித்து விட்ட காட்சி.. ஏன் அந்த படத்தின் நாயகன் ஸ்ரீதரே இது பெரிய ரிஸ்க் கிராபிக்ஸ் பண்ணிக்கலாம் என்று சொல்லி இருந்த காட்சி..
காலம் தான் அவர்களை இங்கு தள்ளி விட்டது..!
அந்த நொடி, தான் தினமும் தவறாமல் வணங்கும் கடவுளை மனதார சபித்தாள் ராணி..
"மணி ரெடியா...?" என்ற குரல் வர,
"ரெடி சார்" என்ற கணவன் குரலும் அவள் காதில் விழுந்தது..
குரல் வந்த திசை நோக்கி அவள் திரும்ப, அவனும் அவள் அருகில் தான் வந்தான்..
மீண்டும் ஒரு முறை அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தவன், "பயப்படாமல் இரு.. வந்துடுவேன்.." என்றுவிட்டு வேகமாக சென்று விட்டான்.
அடுத்த சில நிமிடங்களில் கீழே அவள் அருகில் அமர்ந்திருந்த பைட் மாஸ்டர், தன் போனில் இருந்து மணிகண்டனுக்கு செய்ய வேண்டியதை விளக்கினார்..
"கவனி மணி, ரீடேக் போவது போல் வச்சுக்காதே.. உனக்கு தான் கஷ்டம்.. சன்ஷேட் மேல் மட்டும் தான் குதிக்கனும்.. அதுவும் வேகமாக.. குறிப்பிட்ட நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்க கூடாது.. பத்தாம் தளத்தில் பால்கனியில் இருந்து நெருப்பு வரும்.. அப்போ சரியா இடப்பக்கம் ஒதுங்கனும்.. உன் உடம்பில் இருக்கும் கேமரா கழண்டு விட கூடாது.. மொத்தமா வேஸ்ட் ஆகிடும்.. உன் ஆர்ம் பவர் யூஸ் பண்ணு.. காலில் அழுத்தம் கவனிச்சுக்கோ.. கயிறு இருக்கே என்று இஷ்டத்திற்கு குதித்து விடாதே..! புரிந்ததா..?" என அவர் நிறுத்த, அவனுக்கு புரிந்ததோ இல்லையோ! ராணிக்கு பயத்தில் வியர்த்து வழிந்தது..
நன்றாக வியர்த்திருந்த கைகளை அழுத்தமாக கோர்த்து கொண்டவள், அவன் நன்றாக வந்துவிட வேண்டும் என வேண்டி கொண்டே கணவனையே பார்த்து கொண்டிருந்தாள்..
"ஆக்க்ஷன்" என டைரக்டர் சத்தம் கேட்ட அடுத்த நொடி, மணிகண்டன் மாடியில் இருந்து குதித்தான்..
லாவகமாக குதித்தாலும் அத்தனை உயரத்தில், லேசாக தடுமாற தான் செய்தது..
அவன் ஒவ்வொரு முறை தடுமாறும் போதும், ராணியின் இதயம் நின்று நின்று துடித்து கொண்டிருந்தது..
அதிலும் பத்தாம் தளத்தில் இருந்து உண்மையாகவே அவர்கள் நெருப்படித்த போது, என்ன தான் மணிகண்டன் விலகிவிட்டாலும், அவன் உடலில் நெருப்பு பட்டுவிட்டதை அவளால் இங்கிருந்தே உணர முடிந்தது...
அடுத்த தளங்களையும் கடந்தவன், கீழே கடைசியாக குதித்த நொடி, "கட்..." என டைரக்டர் கத்த, அடுத்த நொடி சிலர் கையில் கோணிப்பையுடன் அவனிடம் ஓடினர்..
கையிலும் காலிலும் அங்கங்கு லேசாக எரிந்துகொண்டிருந்த நெருப்பை அவர்கள் அணைத்து விட, ஸ்டண்ட் மாஸ்டரும் வேகமாக அங்கு வந்தார்..
"ஒன்னும் இல்லையே மணி..!" என அவர் கேட்க,
"இல்லை சார்.. சின்ன சின்ன காயம் தான்.. பார்த்துக்கறேன்.." என்றவன் முகம் வலியில் சற்றே சுருங்கி தான் இருந்தது..
அத்தனை காயங்கள் அவன் உடலில்..
நெருப்பு காயம் மட்டுமில்லாமல், அங்கங்கு சுவரில் இடித்ததில் தோல் நிறைய உராய்ந்திருந்தது..
அதிலேயே நெருப்பும் பட்டு எரிந்ததில், அவனாலும் முகத்தில் தெரிந்த வலியை மறைக்க முடியவில்லை..
"டேய் மணி என்ன டா செய்தாய்..?" என கத்திகொண்டே வந்த ஸ்ரீதரை பார்த்து அவன் மெலிதாக சிரித்தான்..
வந்தவன் அந்த படத்தின் நாயகன்..
மணி பதிலை எதிர்பார்க்காமல் அவன் இயக்குனரிடம் காய்ந்தான்..
"இந்த சீன் கிராபிக்ஸ் பண்ணிக்கலாம் என்று சொன்னேன் தானே மிஸ்டர்..! ஏன் இவனை வச்சு எடுத்தீங்க..? எதாவது தவறாக ஆனால் அவனுடையது உயிர் இல்லையா..?" என அவன் கத்த,
"நான் எதுவும் வற்புறுத்தவில்லை சார்.. அவன் தான் 'பணம் வேண்டும், எவ்வளவு ரிஸ்க் இருந்தாலும் சொல்லுங்க பண்ணுறேன்.. அதுக்கான பணம் கொடுத்துடுங்க போதும்' என்று காலில் விழுந்தான்.. நான் என்ன செய்ய..? எப்படியும் இந்த காட்சி கிராபிக்சில் நல்லா வராது என்று யோசித்துக்கொண்டே தான் இருந்தேன்.. அவனுக்கு பணம் ஆச்சு.. நமக்கு சீன் ஆச்சு.." என்றார் அவர் அசால்டாக.
"பணமும் உயிரும் ஒன்றா..?" என்றவன் மணியை முறைக்க,
"நல்லா கேளுங்க சார்" என்றாள் ராணி மூக்கை உரிந்து கொண்டே.
மணி மெதுவாக தன் தேவையை கூற, "என்னிடம் கேட்டால் தரமாட்டேனா டா.. வா.. நானும் உடன் வரேன்.." என்ற ஸ்ரீதர் மணிக்கு வர வேண்டிய பணத்தை வாங்கி கொண்டு அவனை தன் காரிலேயே அழைத்து சென்றான்..
"நீயாவது என்னிடம் சொல்ல கூடாதா மா..?" என ஸ்ரீதர் கேட்க,
"நான் தான் கேட்க வேண்டாம் என்று சொன்னேன் சார்.. எவ்வளவு கேட்க முடியும்.. எப்படியும் கடன் தான்.. ஓரளவாவது நான் சம்பாதிக்க வேண்டாமா...?" என்றான் மணி.
"உன் ரோஷத்தில் தீயை வைக்க..!" என ஸ்ரீதர் காய்ந்த போது, இருவருமே தங்களை அறியாமல் மெலிதாக சிரித்தனர்.
கார் நின்றது ஒரு பெரிய மருத்துவமனை முன்..
அதற்கு மேல் மூன்று பேருமே பேசிக்கொள்ளவில்லை..
வேகமாக இறங்கி உள்ளே சென்றவர்கள், தேவையான பணத்தை கட்டிவிட்டு, உடனடியாக டாக்டரிடம் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்ய சொல்லி கூறினர்..
சிறிது நேரம் உடன் இருந்த ஸ்ரீதர், "ஏதாவது உதவி வேண்டுமென்றால் கூப்பிடு மணி.. எங்காவது போய் குதித்து கொண்டிருக்காதே.." என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.
அவன் கிளம்பிய சில மணி நேரத்தில் மணியையும், ராணியையும் டாக்டர் அழைத்தார்..
"பயப்படாதீங்க.. இப்போ குழந்தையை ஆபரேஷனுக்கு கூட்டிட்டு போயிடுவோம்.. சீக்கிரம் குணமாகிடுவாள்.." என அவர் கூற,
"தேங்க்ஸ் டாக்டர்.. உங்களை தான் கடவுள் போல் நம்பி இருக்கோம்.. பார்த்துக்கோங்க.." என்றனர் மணியும் ராணியும்.
"ஒரு முறை குழந்தையை பார்க்கலாமா டாக்டர்..?" என மணி கேட்க,
"ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்" என்றார் டாக்டர்.
அதுவே போதும் என்று கூறிவிட்டு, இருவரும் வேகமாக அவர்கள் பெண் மாலினி இருக்கும் அறைக்கு வந்தனர்..
குழந்தை எப்போதும் போல் மயக்கத்தில் தான் இருந்தாள்..
அவள் மேல் ஆயிரம் வொயர்கள் வேறு..!
நன்றாக இருந்த குழந்தைக்கு திடீரென மூச்சு பிரச்சனை ஏற்பட, இதயத்தில் பெரிய பிரச்சனை இருப்பது தெரிய வந்தது..
மேஜர் ஆபரேஷன் செய்தால் தான் குழந்தை பிழைக்கும் என்று கூறிய மருத்துவர்கள், அதற்கான தொகையை கூறிய போது, மணி ஆடி தான் போய்விட்டான்..!
எத்தனை கடன் வாங்கியும் பத்தாமல் போனதால் தான், டைரக்டரிடம் அந்த ரிஸ்க்கான ஷாட்டை கேட்டு நடித்தான்..
பெண் உயிருக்கு முன் அவனுக்கு தன் உயிர் பெரிதாக தெரியவில்லை..!
மாலினியின் இரு பக்கமும் மணியும் ராணியும் மெதுவாக அவள் முகத்தருகில் குனிந்தனர்..
"கண்ணம்மா, எங்களுக்கு எல்லாமே நீ தான்.. இந்த ஆறு வருடமா உன்னை எப்படி வளர்த்தோமோ, அதே போல் காலம் முழுக்க உன்னை நாங்க பார்த்துப்போம்.. அம்மா அப்பாவை அனாதை ஆக்கிடாதே கண்ணம்மா.. ப்ளீஸ்.. எங்க மாலி பாப்பா தைரியமான பெண் ஆச்சே..! ஸ்கூலில் எல்லாருக்கும் பிடித்த புத்திசாலி குழந்தை இல்லையா என் மாலி பாப்பா..! என் கண்ணம்மாக்கு அப்பா இல்லாமல் சாப்பிட தூங்கவெல்லாம் தெரியாதே..! அப்பாக்கும் அப்படி தானே..! அப்பாவால் உங்களை தூக்காமல் இருக்கவே முடியலை தெரியுமா..? சீக்கிரம் வந்து என் தோளில் ஏறிக்கோங்க.. அப்போ தான் அம்மா நம்மை குரங்கு என்று திட்டுவாங்க.. ஜாலியா இருக்கலாம்.. பயப்படாமல் இரு கண்ணம்மா.. அப்பா உன்னுடனே தான் இருக்கேன்.."
கடைசி வரியை அழுத்தமாக அவன் கூறிய போது, அந்த பிஞ்சின் உதடுகள் லேசாக வளைந்தது..
அதை பார்த்து தாங்கமாட்டாமல் ராணிக்கு அழுகை வந்து விட, அவள் வேகமாக வெளியே ஓடி விட்டாள்...
அவளை ஒரு முறை பார்த்துக்கொண்ட மணிகண்டன், மகள் நெற்றியில் மென்மையாக இதழ் ஒற்றிவிட்டு, வெளியே மனைவியை தேடி வந்தான்..
அவன் வந்தது தான் தாமதம், அவனை அணைத்து கொண்டு ராணி கதறி அழுது விட்டாள்..
மனைவி வேதனை புரிந்தவனாய் அவனும் அவளை அணைத்து கொண்டான்..
"ஒன்னும். இல்லை டி.. இன்னும் கொஞ்ச நாளில் நம் கண்ணம்மா கண் முழிச்சுடுவா.. பயப்படாமல் இரு.." என்றான் மணி அழுத்தமாக..
அவன் நெஞ்சில் இருந்து நிமிர்ந்தவள், "ஸ்ரீதர் பணம் கொடுத்திருப்பாரே மணி.. பேசாமல் அவரிடம் வாங்கி இருக்கலாம்.. இத்தனை ரிஸ்க் வேண்டுமா..?" என கேட்க,
"அவர் சும்மா எவ்வளவு தருவார் என்று நினைக்கிறாய் ராணி..! நாம் எப்படி கடனை அடைப்பது..? அப்படியே சும்மா கொடுத்தால் கூட, நாளை ஏதாவது பிரச்சனை வந்து பணத்தை கேட்டால் என்ன செய்வது..? இஷ்டத்திற்கு கடன் வாங்க முடியாது மா.. யார் பயந்தால் என்ன..! எனக்கு இருந்த நம்பிக்கையில் தான் செய்தேன்.. ஒன்றும் ஆகவில்லையே, விடு.." என அவன் சமாதானம் செய்து முடித்த போது, ஒரு நர்ஸ் வந்து அவனுக்கும் முதலுதவி செய்து விட்டார்..
அடுத்து வந்த நாட்கள் எப்படி சென்றது என்று கேட்டால் மணி, ராணி இருவருக்குமே தெரியாது..
ஒருவாறு, "மாலினியை நீங்க பார்க்கலாம்" என நர்ஸ் சொன்ன அன்று தான், இருவரும் தங்கள் இயந்திர உலகத்தை விட்டு இயல்பு உலகிற்கு வந்தனர்..
இருவரும் உள்ளே நுழைந்த போது, மாலினி சோர்ந்து போய் தான் படுத்திருந்தாலும், அவள் உயிருக்கு இனி ஆபத்தில்லை என்பதிலேயே அவர்கள் மனம் நிறைந்து விட்டது..
அன்று போலவே இன்றும், "கண்ணம்மா" என மணி அவள் காதருகில் அழைக்க, அவனது சில அழைப்புகளை தொடர்ந்து அந்த பிஞ்சு மெதுவாக கண் திறந்தது..
"அப்பா" என்ற அவள் ஒற்றை அழைப்பில், அவனுக்கு உலகையே வென்றுவிட சக்தி கிடைத்தது போல் இருந்தது..!
"அ.. அம்மா" என அவள் ஏதோ கூற வர,
"என்ன டா..?" என்றாள் ராணி அவள் அருகில் குனிந்து.
அன்னையை திரும்பி பார்த்தவள், "நீ... நீ தான் குரங்கு.. நான் குட் பாய் அண்ட் கேர்ள்.." என தந்தை கையை பிடித்துக்கொள்ள, மகளது மழலையில் அவர்கள் வலி எல்லாம் பறந்து எங்கோ போய்விட்டது..
இருவருமே ஆனந்த கண்ணீருடன் குழந்தையை முத்தமிட, அதுவும் அவர்கள் கன்னத்தில் முத்தமிட்டு அந்த காட்சியை அழகான சுபமான முடிவாக்கியது..
********** சுபம் **************
#53
मौजूदा रैंक
60,660
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 8,160
एडिटर्स पॉइंट्स : 52,500
170 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 4.8 (170 रेटिंग्स)
sugan.lakshna
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
priya3deepa
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स