வெ(ட்டி)ற்றியின் காதல்

nanthalala2021
பதின்பருவக் கதைகள்
4.4 out of 5 (7 रेटिंग्स)
कहानी को शेयर करें

“ அப்புறம்?”

வெளிப்படுத்தப்படாத கோபத்துடன் கூர்மையாக மஞ்சுவைப் பார்த்துக் கேட்டான் வெற்றி.


“ இவ்ளோ நேரம் கதையா சொன்னேன்? 'அப்புறம், விழுப்புரம்’ன்னுகிட்டு! கடைசியா சொல்றேன், நல்லாக் கேட்டுக்கோ. அப்பாகிட்ட நானும் உன்னப் பத்திப் பெருமையா எவ்வளவோ எடுத்து சொன்னேன். ஆனா அவங்க அதைக் கேக்கவே மாட்டேங்கிறாங்க.”

“ ஓ! எப்போ எடுத்து சொன்ன? அவர் தூங்கும் போதா?”

“ நீ எப்பவும் என்னை இப்படி மட்டம் தட்டறதுக்குதான் லாயக்கு! உருப்படியா ஒரு வேலைக்குப் போயிருந்தா இந்நேரம் உன்னைப் பத்தி நான் சொல்லவே தேவை இல்லாம அப்பாவே நம்ம விசயம் தெரிஞ்சதும் நமக்கு கல்யாணம் செய்து வச்சு இருப்பாங்க” - மஞ்சு சீறினாள்.


மஞ்சு இளங்கலை கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படிக்கிறாள். ஆனால் இவர்கள் காதலுக்கு வயது இரண்டு வருடங்கள்!

மஞ்சுவின் குற்றச் சாட்டைக் கேட்ட வெற்றிக்கு மனமெல்லாம் வலித்தது.

அவன் இப்போதுதான் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து இருக்கிறான். அவன் இதற்குள் என்ன வேலைக்குப் போயிருக்க முடியும்?

அவனுக்கு மேல் இரண்டு அண்ணன்கள் உண்டு. அவர்கள் இருவருக்கும் அவ்வளவாக படிப்பு வராததால் கல்லூரிகளிலும் பிற நிறுவனங்களிலும் முட்டிக்கொண்டு இருக்காமல் அவர்களின் அப்பாவுடன் அவர்களின் மாட்டுப் பண்ணையையும், பெட்டிக் கடையையும் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கே வீட்டில் இன்னும் திருமண பேச்சு ஆரம்பித்து இருக்கவில்லை.

வெற்றி வீட்டின் கடைக் குட்டி செல்லம்.

பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் படித்துக் கொண்டே வீட்டில் லேப் டாப்பில் கேம்ஸ் விளையாடிக் கொண்டு இருந்தான், மஞ்சுவுடன் காதலில் விழும் வரை. அவன் வீட்டினர் அவன் ' பெரிய படிப்பை' நினைத்து அவனிடம் வேறு வேலைகள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அதில் கொஞ்சம் கட்டவிழ்ந்து தான் இருந்து விட்டான்.


மஞ்சுவின் வீடு இவர்களுக்குப் பக்கத்து வீடு. சிறு வயதில் எல்லோரும் ஒன்றாக தெருவில் விளையாடியவர்கள் தான். அவள் வயதுக்கு வந்ததும், பள்ளிக் கூடம் செல்வதற்குத் தவிர வீட்டை விட்டு வெளியே பெரும்பாலும் அனுப்ப மாட்டார்கள் அவள் பெற்றோர்.

டியுசன் போகும் வழியில் சில காவாலிகள் டீக்கடையில் வெட்டியாக அமர்ந்து போகிற வருகிறவர்கள் கேலி கிண்டல் செய்வது அவருக்கு எரிச்சல். ஆனால் அதை அவரால் தடுக்க முடியவில்லை. மகளைத் தடுத்து இருந்தார் டியூசன் செல்ல.
மஞ்சுவும் பள்ளி மேல்நிலை வகுப்பில் கணினி அறிவியல் எடுத்து இருந்தாள். ஆரம்பத்தில் அதில் வந்த சந்தேகத்தை தீர்க்க அவர்கள் தெருவில் இருந்த வல்லவன் நல்லவன் நாலும் தெரிந்தவன் என்று மஞ்சுவின் அப்பா இந்த வெற்றியை வீட்டுக்கு அழைத்து இருந்தார். அப்போது அவன் கல்லூரி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து இருந்தான்.

வெற்றி அவளைப் பற்றி இதற்குமுன் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. சொல்லப் போனால் அவள் இருக்கும் திசையைக் கூட அவன் பார்த்ததில்லை.

மூன்று வருடங்கள் முன்பு ஒரு தீபாவளி திருநாளில் கையில் கேக் பெட்டியுடன் வீட்டுக்கு வந்தபோது லேசுபாசாக ஒருமுறை பார்த்திருந்தான்.

“ கோகிலா மதனி பாத்ரூம்ல வழுக்கி விழுந்து பத்து நாளா பெட்ல தான் இருக்கா. அதான் தீபாவளிக்கு பலகாரம் செய்யாததுக்கு ராமு அண்ணன் கேக் வாங்கி கொடுத்து விட்டு இருக்கார். அவருக்கு இதுலாம் செய்ய கூச்சம். அதான் அதிசயமா மஞ்சுவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருக்காங்க “ _ வெற்றியின் அம்மா வனிதா மஞ்சு வீட்டு பெருமை பேசியபோது அதைக் கண்டு கொள்ளாமல் ‘ என்ன 'கேக்'கா இருக்கும்?’ என யோசித்தான் அவன் அன்று.


ஆனால் அடுத்த வருடமே மஞ்சு ஆசைப்பட்டு எடுத்த கணினி அறிவியல் புரியாமல் திண்டாடி அவள் அப்பா ராமனிடம் புலம்ப, அவர்தான் கையில் இருக்கும் மூலிகையாக நினைத்து வெற்றியை அவளுக்கு பாடத்தில் சந்தேகம் தீர்த்து வைக்கச் சொன்னார்.


அவரைப் பொறுத்தவரை மகள் எப்படி இன்னும் அவருக்கு குழந்தையோ, அப்படியே வெற்றியும் அவர் கண்களுக்கு சிறுவன்தான்.
ஆனால் அவர்கள் இருவரும் உண்மையில் தடுமாற கூடிய தடம் மாறக் கூடிய விடலைப் பருவத்தில் இருப்பதை இரு வீட்டினரும் உணரவில்லை.

அவர்களும் ஆரம்பத்தில் நல்ல பிள்ளைகள்தான்.

ராமன் கோகிலாவை நம்பி இவர்கள் இருவரையும் விட்டுச் செல்ல அவரோ இன்னும் கீழே விழுந்ததில் பாதிப்பு குறையாததால் சாப்பிடும் மருந்துகளின் விளைவில் இந்த இரு அரை வேக்காடுகளையும் நம்பி பக்கத்து சோபாவில் அவ்வப்போது கண் அசந்து விடுவார். ஒரு சத்தத்திற்கு விழித்து விடுவார்தான். ஆனாலும் இவர்களை அவ்வளவாக கண்காணிக்கவும் இல்லை.


அந்த நேரங்களில் தான் இருவர் கவனமும் எந்த இடத்தில் என்று தெரியாமல் ஓரிடத்தில் மாறிப் போய் இருந்தது.

எதிர்காலம் குறித்த அக்கறை இன்றி இருவரும் காதல் கடலில் குதித்தே விட்டனர்.

கடந்த வாரம் தற்செயலாக மகளின் படிப்பைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டி ஒன்றும் தெரியாவிட்டாலும் அவளது பாட புத்தகத்தில் ஒன்றை எடுத்தவர் அதில் வரைந்து இருந்த இதயத்தில் அம்புவிட்ட படத்தை பார்த்து அதிர்ந்தார். அது அவருக்குப் புரிந்தது.

தன் அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் மெதுவே மகளை ஆராய்ந்ததில் இவர்கள் இரண்டுபேரும் மாட்டிக் கொண்டனர்.

ராமன் வெற்றியை நேரில் கூப்பிட்டு கண்டித்து அனுப்பியதோடு அவன் பெற்றோரிடமும் அதட்டலைப் போட்டார்.

அவர் அந்த வீதியில் கொஞ்சம் வசதியானவர் என்பதாலும் பெண்ணைப் பெற்றவர் என்பதாலும் வனிதாவும் கனகவேலும் பதட்டப்பட்டார்களே அன்றி சண்டைக்குப் போகவில்லை. இவனைத்தான் திட்டி புத்திமதி சொன்னார்கள்.


அண்ணன்கள் இருவரும் அடிஷனலாக அட்வைசை போடவும் கோபம்தான் வந்தது இவனுக்கு.

மஞ்சுவும் கல்லூரிக்கு செல்லவில்லை. ராமன் அனுப்பவில்லை.

எப்படியோ போராடி அவளை அவள் வீட்டு மொட்டை மாடிக்கு வரவைத்து துவைக்கும் கல்லுக்கு கீழ் சுடும் தரையில் 'கோ கோ' விளையாட்டில் அமர்வது போல அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறான் இப்போது.

“ கடைசியாக..” என்று ஆரம்பித்து தொண்டையைச் செருமிக் கொண்டான் வெற்றி.

“ கடைசியாக என்ன சொல்ற?”_ ஒருவழியாக நாக்கை படாதபாடு படுத்தி அவளிடம் கேட்டு விட்டான்.

மஞ்சுவின் கண்கள் சுற்றும் முற்றும் சுழன்று கொண்டே இருந்தது. அதை வேதனையும் ஆசையுமாகப் பார்த்துக் கொண்டே இருந்தான் வெற்றி.

“ பார்த்த வரைக்கும் போதும். இந்த உச்சி வெயில்ல யாரும் மொட்டை மாடிக்கு வர மாட்டாங்கன்னுதான் இப்போ வந்து இருக்கேன்.” அவன் குரல் மீது அவனுக்கே அத்தனை பயம் . தன் ஆசை நிராசையாகிவிடும் என்பது புரிந்ததால் அவனது குரல் கமறிக் கொண்டே இருந்தது. அது அவன் மனதுக்கு நடுக்கத்தைக் கொடுத்தது.

மஞ்சு அவனை 'கடு கடு'வென்றுப் பார்த்தாள்.

“ உன்னால என் நிம்மதியே போச்சு. இப்பல்லாம் அப்பா எனக்கு சாக்லேட் வாங்கிட்டு வர மாட்டிக்கிறாங்க. என்னைப் பார்த்து சிரிக்க மாட்டேங்கிறாங்க. என்னை மஞ்சுமான்னு கூப்பிட மாட்டேங்கிறாங்க. எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?” பேசப் பேச அழுகை வந்தது அவளுக்கு.
அதைக் கேட்கக் கேட்கக் கோபம் வந்தது இவனுக்கு.

“ லூசு. அதெல்லாம் சரி பண்ணிடலாம்டி. நீ தைரியமா என்னைத்தான் கட்டுவேன்னு சொல்லு”

‘ நான் சொல்லித்தான் இதை இவள் சொல்வாளா?’ என்று மனது அலறியது. ஆனால் அவனுக்கு வேறு வழி இல்லையே?

“ செருப்பு பிஞ்சிடும்!”

“ அடீங்க்!”

வெற்றி இருந்த இடத்தில் இருந்து எழுந்துவிட, அவள் பதறி விட்டாள்.

“ ஏய்! என்ன பண்ற? இப்ப போகாத” என படபடத்தாள்.

“ உன்னை விரும்பி வந்ததுக்கு செருப்பால அடிப்பேங்கிறியே”

அவள் சொல்லைத் தட்டாமல் மீண்டும் அதே நிலையில் உட்கார்ந்து கொண்டவனுக்கு மூச்சு வாங்கியது.

“ நீ சொன்ன மாதிரி அப்பாகிட்ட சொன்னா செருப்பு பிஞ்சிடும்னு சொன்னேன்”

“எனக்காக உன் அப்பாகிட்ட செருப்படி வாங்கிக்க மாட்டியா?”

அவளுக்குக் கோபம் வந்துவிட்டது.

“ என்ன இருந்தாலும் உன் சாணி அள்ளுற புத்தி வேற எப்டி யோசிக்கும்? அப்படிலாம் உன்னை அடிச்சு வளத்து இருந்தா பாடம் சொல்லிக் குடுக்க வந்த இடத்தில என்னை கரெக்ட் பண்ண நினைச்சு இருப்பியா?“ என்றாள் சடாரென்று.

உடனே மூண்ட கோபத்தை முயன்று அடக்கிய வெற்றி

“ உன்னை நல்லாதான் வளத்து இருக்காங்க. அதான் காதலிச்சவனை கட் பண்ணி விடப் பாக்குற” என்றான்.

“ சீ. உன் கூடலாம் பேசிட்டு இருக்கேன் பாரு? என்னைச் செருப்பால அடிக்கணும்”

“ அதைத்தான் சொன்னேன்” என்றவன் எழுந்து கொண்டான்.

அவள் வெடுக்கென அங்கிருந்து கிளம்பி ஒரே தாவாக படிகளில் இறங்க ஆரம்பித்து இருந்தாள்.

சற்று நேரம் அவள் திரும்பி வருவாளா? எனப் பார்த்தவன் அவள் வீட்டினுள் டிவி சத்தம் கேட்கவும் அதற்குமேல் நிற்காமல் கிளம்பிவிட்டான்.

சிறிது நாட்கள் சென்றால் இவனும் ஒரு வேலை வாங்கி பேசாமல் அவளைப் பெண் கேட்டு விடலாம் என முடிவு செய்து கொண்டான். (வேலையை வாங்குவானாம்!)


அவனைப் போல் அல்லாமல் அதிரடியாக சிந்தித்த ராமன் நல்ல, படித்த, பணக்கார, அழகான, அமைதியான, மாப்பிள்ளையைப் பார்த்து மகளுக்குத் திருமணத்தை முடிவு செய்து விட்டார். என்ன ஒன்று_ இத்தனை தகுதிகள் உள்ள அந்த மாப்பிள்ளை கனடாவில் வேலை செய்கிறான்.

விசயம் தெரிந்ததும் வனிதா மகனைப் பாதுகாப்பதில் இறங்கினார்.

அப்படியும் அவள் திருமணத்தன்று மொட்டை மாடியில் இருந்து குதித்து குறுக்கே சென்று கொண்டிருந்த மின்கம்பிகளைப் பிடித்துத் தொங்கி கீழே விழுந்து இருந்தான் வெற்றி.

அப்போது காப்பாற்றி விட்டார்கள்.
மஞ்சு மாமியார் வீட்டுக்கும் அதன் பிறகு கனடாவுக்கும் சென்றுவிட்டாள்.


வெற்றி குடிக்கு அடிமையானான்.

சில வருடங்கள் கழித்து....

ஊர் வழக்கப்படி அவர்கள் ஊருக்கு அருகே இருந்த மலைக் கோவிலில் மஞ்சுவின் முதல் குழந்தைக்கு மொட்டை அடித்துக் காது குத்தும் போது அதே மலையில் இருந்து குதித்து வாழ்க்கையை முடித்துக் கொண்டான்_ பெயரில் மட்டும் வெற்றியைக் கொண்டவன்.

காவல்துறை, ஆம்புலன்ஸ் என கலவரப்பட்ட அந்தப் பகுதியைத் தற்செயலாக கடந்தது மஞ்சுவின் குடும்பம்.

“ அய்யோ! இதுலாம் குழந்தை பார்க்கக் கூடாதே?” என பதறியவாறு சந்தனத் தலையும், வைரக் கம்மலுமாக இருந்த மகளை நெஞ்சோடு வலிக்காமல் அணைத்துக் கொண்டு குடும்பத்தினருடன் விறுவிறுவென நடந்தாள் திருமதி மஞ்சு.


कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...