JUNE 10th - JULY 10th
அன்று அவன் அவ்வளவு குடிப்பான் என்று அவனே நினைக்கவில்லை. ஆனாலும் அந்தநாள் அவனோடு இருந்த அனைவரும் குடிப்பதற்காக தேர்ந்தெடுத்த நாள்தான். அன்றுதான் மாதங்கள் பல சேர்த்து பொக்கிஷமாய் வைத்திருந்த அவள் மீதான காதலை அவளிடம் தெரிவித்திருந்தான். ஏதும் யோசிக்காமல் உடனே அவள் தந்த சம்மதம் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம், அவன் அன்று அவ்வளவு குடித்ததற்கு. ஏனென்றால் எல்லோரையும் போல அவனுக்கும் குடிப்பதற்கு ஏதோவொரு காரணம் தேவைப்பட்டிருக்கும் போல்.
அவனின் காதலுக்கு அவ்வளவு எளிதில் அவள் சம்மதம் தெரிவிக்கவில்லை. பல மாதங்களுக்கு முன்பே அதற்கான நிலத்தை சீர்படுத்தி விதை போட்டிருந்தான். அவன் அவளை நேசிப்பதை அவளிடம் மறைமுகமாகவோ, தெரியும்படியோ ஏதோ ஒருவகையில் வெளிப்படுத்தியே வந்தான். அவள் ஒன்றும் யாரோ ஒருத்தியோ எங்கோ உள்ளவளோ இல்லை. இயல்பாக வரக்கூடிய காதலுக்காக வர்க்கம் சார்ந்தோ சாதி சார்ந்தோ ஆணவக்கொலை பண்ணக்கூடிய குடும்பத்தினரைக் கொண்டிருக்க கூடியவளும் அல்ல. அவனின் ஊர்தான் அவளுக்கும், ஏதோ ஒரு வகையில் தூரத்து சொந்தமும் கூட. இரண்டு தெரு தள்ளி உள்ளவள் தான்.
அன்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து அழகாய் கிளம்பி வந்தான். ஏற்கனவே திட்டமிட்டபடி, அந்த ஊர் இளைஞர்களுடன் சேர்ந்து குடிப்பதற்கு. ஏனோ அவனுக்கு அன்று காலையில் தூக்கம் முடிந்து எழுந்ததில் இருந்தே ஒரு உற்சாகம் இருந்து கொண்டே தான் இருந்தது. ஒருபக்கம் குடியுடன் சேர்ந்து கடித்துக் கொள்வதற்காக அடுப்பில் கறி வெந்துகொண்டிருந்தது. அவனின் அண்ணன்களும் மாப்பிள்ளைகளும் மாமாக்களும் அவனோடு இருந்தார்கள். குடிப்பதற்காக இரு அடுப்பில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களில் ஒன்றில், கறியின் சுவை அருகில் இருந்தோர் மட்டுமல்லாமல் தள்ளி இருப்போரையும் சுண்டி இழுத்தது. இன்னொரு அடுப்பில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் அரிசி சோறாகிக் கொண்டிருந்தது.
பொதுவாகவே அவனுக்கு எந்த வேலை செய்தாலும் அவள் நினைப்பு வருவதை மட்டும் தடுத்திட இயலாது. அவள் இரண்டு தெரு தள்ளி தான் இருக்கிறாள். இங்கு கறி தயாராகிக் கொண்டிருக்கிறது. அவனோடு இருப்பவர்கள் அதற்கான வேலையில் இருக்கிறார்கள். அவன் மனம் அவளைத் தேடி அலைந்தாலும், கறி விருந்திற்காக வாழை இலையினை அளவாய் வெட்டி கொண்டிருக்கிறான். அந்த வெட்டும் பணியும் முடியவில்லை, அவள் நினைவு மனதில் எழுவதையும் அவனால் தடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கெல்லாம் அவர்களிருவரும் பழகவும் இல்லை. அன்றுவரை காதலை அவளிடம் சொல்லவுமில்லை. என்றாலும் அவனின் நடத்தையில் அவள் மீதான அவன் விருப்பத்தை பல நாள் அவளிடம் உணர்த்தி இருக்கத்தான் செய்தான். பெண்களைச் சுற்றி அலையும் எல்லா விடலைப் பையன்கள் போல்தான், அவனும் அவள் பின்னாலேயே அலைந்து இருக்கிறான்.
அவள் எங்கோ தூரத்தில் உள்ள கல்லூரியில் தான் படிக்கிறாள். அங்கு வீடு எடுத்து தங்கி படிப்பதால் எப்போதாவதுதான் ஊருக்கு வருவாள். அவள் வரும் நாளெல்லாம் அவள் தெருவிலேயே அலைந்து திரிவான். சூரியன் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி தான் போகும். ஆனால் இவனோ அவள் தெருவில் மேற்கிலும் கிழக்கிலுமாக, சூரியன் மறைந்து அவளின் பிரகாச அழகினைப் பார்ப்பதற்காக தினந்தோறும் வரக்கூடிய நிலவு வரும்வரை அதே தெருவில் அலைவான். அந்த தெருவில் உள்ள எல்லோரும் தண்ணீர் பிடிக்கக் கூடிய நல்லிக்குத் தான் அவளும் தண்ணீர் பிடிக்க வருவாள். தண்ணீர் வர ஆரம்பித்தது முதல் நிற்கும் வரை நல்லியின் அருகிலிருக்கக் கூடிய திண்ணையை விட்டு நகரவே மாட்டான். அவளுக்கும் அவன் பார்ப்பது பிடித்து இருக்குமோ என்னமோ, ஒவ்வொரு குடமாக தண்ணீர் பிடிக்க வரும் போதும் போகும்போதும் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு தான் செல்வாள். சில நேரங்களில் ஓரமா சிரிக்கக் கூட செய்வாள். அப்போதெல்லாம் பக்கத்தில் இருக்கும் சொந்தக்கார வீட்டில் டீ வாங்கி குடித்துக் கொண்டிருக்கும் அவனுக்கு, என்னமோ உலகத்தில் உள்ள மொத்த தேனையும் அந்த டீயில் வந்து ஊற்றியது போல் இனித்துக் கிடக்கும்.
அன்றும் அப்படித்தான் வாழை இலை வெட்டும் பணி முடியவில்லை. அவளைப் போய் ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்தான். எதேச்சையாக எழும்பி சாதாரணமாகச் செல்வதுபோல் கிளம்பிச் சென்றான். எப்போதும் செல்லக்கூடிய தெருதான்.அந்த ஒற்றைத் தெருவிலேயே மணிக்கணக்கில் காலத்தை கழித்திருக்கிறான். ஆனால் அன்று ஏனோ அந்தத் தெருவில் நுழையும்போதே ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி அவனுக்குள் தென்படுவதை உணர்ந்தான். அவள் வீட்டினைக் கடக்கும் போதுதான் அவனுக்கு தெரிகிறது, பெரும்பாலும் அம்மாவோடு இருக்கக் கூடிய அவள் அன்று தனியாக வீட்டில் இருக்கிறாள் என்று. யாருமற்ற தெருவில் ஏனோ துள்ளிக் குதிக்கிறான். மறுபடியும் சமையல் நடக்கும் இடம் நோக்கி சென்று பார்க்கிறான். அனைவரும் குடிப்பதற்கு முன்பான குஷியில் இருக்கிறார்கள். சமையல் முடியும் தருவாயில் இருக்கிறது. இவனால் அவர்களோடு இருக்க முடியவில்லை. அவள் வேறு அங்கு வீட்டில் தனியாக இருக்கிறாள். திரும்பவும் அவன் அவள் தெரு நோக்கி நடக்கிறான். போன முறையிலும் இந்தமுறை உற்சாகமாக. அவள் தெருவில் நுழைந்து மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நடக்கிறான். அவள் வீட்டை கடக்கும் போது அவளை பார்த்து சிரித்துக் கொள்கிறான். அவளும் அவனைப் பார்த்துக் கொள்கிறாள். மறுபடியும் வந்த வழியிலேயே திரும்புகிறான். இந்த முறை அவன் பார்த்ததும் அவள் அவனைப் பார்த்து பதிலுக்கு அம்சமாய் சிரிக்கிறாள். இவனும் மனசுக்குள் ரெக்கைகட்டி பறந்தவாறு அதே தெருவின் முடிவை அடைகிறான்.
அங்கே இவனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் நண்பர்கள். ஆனால் இவனோ மறுபடியும் அவளை நோக்கி செல்கிறான். அவள் வீட்டின் முன் நின்று ஒரு நொடி இருபுறமும் பார்த்துக் கொள்கிறான். ஏதோ ஒரு விதமாய் அவள் வீட்டில் நுழைந்து விட்டான். அவள் அவன் வரும்போது மஞ்சள் கலரில் சிவப்பு பூ போட்ட நைட்டி அணிந்து கட்டிலில் படுத்து இருக்கிறாள். நெற்றியில் ஒரு சின்ன ஸ்டிக்கர் பொட்டு. அதற்கு சற்றே மேலே அதனை ஒட்டியவாறு சின்னதாய் ஒரு சந்தனக்கோடு. கைகளிரண்டையும் கன்னத்திற்கு தலையணையா கொடுத்து தெருவையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். நைட்டி சற்றே உயர்ந்திருந்ததால் ஒற்றைக்காலில் வெள்ளிக்கொலுசும் கூட வெளியே தெரிந்தது. அவன் அவ்வாறு அன்று அவள் வீட்டிற்கு வருவான் என்று அவளும் ஊகித்து இருந்திருக்கிறாள். அவன் வந்ததும் பற்களேதும் வெளியே தெரியாமல் சின்னதாய் சிரித்தவாறே எழுந்து அமர்ந்து கொள்கிறாள். அவனும் அவள் அருகிலேயே அமர்ந்து கொள்கிறான். இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். கொஞ்ச நேரம் வார்த்தைகள் ஏதும் வரவில்லை. கண்களால்தான் பேசிக்கொள்கிறார்கள். சடாரென்று அவள் கை விரல்களை பற்றிக் கொள்கிறான். அவள் கையை திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை. விரல்களைப் பிடித்துக் கொண்டே கேட்க வந்த சொல்ல வந்த விஷயத்தை பேசாமல், சாப்பிட்டாயா என்கிறான். அவளும் கொஞ்சம் நாணமும் தெருவில் யாரேனும் வந்து பார்த்துவிடுவார்களோ என்ற பயமும் கலந்தவாறு நான் சாப்பிட்டேன், நீ சாப்பிடுகிறாயா என்கிறாள். நான் சாப்பிட்டேன் என்கிறான். திடீரென்று என்ன தைரியம் வந்ததோ அவனுக்கு, கேட்டே விட்டான் அவளிடம் 'என்னைக் கட்டிக்கிறயானு' . அவளும் இதையேதான் எதிர்பார்த்திருந்திருப்பாள் போலும். உடனே பதில் கூறினாள் எங்கள் வீட்டில் கேளுங்கள் என்று. இருவரின் கைவிரல்களும் இணைந்துதான் இருந்தன அப்போது வரை. அவன் அவள் விரல்களை இன்னும் இறுக்கமாய் பிடித்துக் கொள்கிறான். வீட்டில் கேட்பது இருக்கட்டும் உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா உனக்கு சம்மதமா என்கிறான். அவளுக்கும் முகமெல்லாம் வெட்கம் மலர கண் இமைகளை ஓரிருமறை மேலும் கீழும் அடித்துக் கொள்கிறாள். வெட்கம் கலந்து ஓரமாய் சிரித்துக் கொள்கிறாள். விரல்களை விடுவித்துக் கொள்ள முற்படுகிறாள். ஆனால் அவனோ இன்னும் இறுக்கமாக விரல்களை இணைத்துக் கொள்கிறான். உன் விருப்பத்தை கூறு என்கிறான், அவளது விருப்பம் அவனுக்கு தெரிந்திருந்தாலும். அதுவரை விரல்களை விடுவிக்க முற்பட்ட அவள், அவன் விரல்களை இன்னும் இறுக்கமாய் பிடித்துக் கொண்டு 'எனக்கு சம்மதம் கடைசி வரைக்கும் உன்கூட இருக்கணும்' என்கிறாள். அந்த நொடி குடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த மது போத்தல்கள் அடுத்த தெருவில் இருந்தாலும், இவனுக்கு அவள் அவளது சம்மதம் சொன்னதுமே அவ்வளவு சரக்கையும் மொத்தமாய் ஒற்றை ஆளாய் குடித்தது போன்ற கிறக்கம். இருவரும் இமைக்காமல் கண்களையே பார்த்துக் கொள்கிறார்கள். விரல்களை இன்னும் விடவில்லை இன்னும் இறுக்கி கொள்கிறாள். அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் இதழ் நோக்கி முகம் நகர்த்துகிறான். இருவரின் இதழ்களும் நெருங்கி வரும் வேளை அவள் இரு இமைகளையும் அணைத்து கண்களை சற்றே மூடும் நிலையில் இருக்கையில், கொஞ்சம் தண்ணீர் கொடு என்கிறான். அவளோ மூடிய கண்களைத் திறந்து வெட்கச்சிரிப்பு சிரிக்கிறாள் சிறிதாக. பின் வெட்கம் மாறாமல் எழுந்து சென்று தண்ணீர் கொண்டு வருகிறாள். இருகைகளையும் நீட்டி அவள் விரல்களை இவன் விரல்களால் தழுவி செம்பினை வாங்கி பாதி அளவு தண்ணீரை குடித்து விட்டு மீதமுள்ள தண்ணீரோடு அவளிடம் கொடுக்கிறான். என்ன நினைத்தானோ, சரி வருகிறேன் என்று கூறி வாசலில் வந்து தெருவில் இருபுறமும் பார்த்துக்கொண்டு நான் போகனுமா என்கிறான். அவளும் சரி எனக் கூற அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே படியில் இறங்கி தெருவில் நடக்கிறான், அடுத்த தெருவில் தயாராகி இருக்கும் கறியோடு சேர்ந்த மதுவிருந்து நோக்கி.
இவன் வருவதற்கு முன்பே நண்பர்கள் மத்தியில் மது ஊற்றி வைக்கப்பட்டு இருந்த கிளாசை கையில் எடுத்துக் கொண்டு இவனும் அவர்களோடு அமர்ந்து கொள்கிறான். மனதினுள் உலகையே வென்று விட்டது போன்ற சந்தோஷம் மகிழ்ச்சி. கையில் வைத்திருந்த மதுவினை கொஞ்சம் குடிப்பதும் கறியினை எடுத்துக் கடிப்பதுமாக மாறிமாறி சந்தோசத்தில் குடித்துக் கொண்டிருக்கிறான். உடன் இருந்த நண்பர்களும் தடுக்கவில்லை.
எப்போதாவது குடிக்க கூடியவன் தான் என்றாலும், இன்று ரொம்ப குஷியாக குடித்து விட்டான். அதன் பிறகு என்ன நடந்தது என்று அவனுக்கு தெரியவில்லை. எவ்வளவு நேரம் என்றே தெரியவில்லை. எப்படிப் போனான் என்றும் அவனுக்குத் தெரியவில்லை. நடுநிசியில் எழும்போது எங்கோ தள்ளி உள்ள ஓடையில் படுத்திருந்தான். கட்டியிருந்த லுங்கி அவிழ்ந்த நிலையில்...
#312
मौजूदा रैंक
31,190
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 1,190
एडिटर्स पॉइंट्स : 30,000
24 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 5 (24 रेटिंग्स)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
muganool786
ttskowsalya
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स