அப்பாவுக்காகவும் கொஞ்சம் கண்ணீர்!

உண்மைக் கதைகள்
5 out of 5 (27 रेटिंग्स)
कहानी को शेयर करें

அப்பாவுக்காகவும் கொஞ்சம் கண்ணீர்!

- ரவிபிரகாஷ்

அப்பா விழுந்துவிட்டார். எதையோ அலமாரியில் எடுக்கப் போனவர், மயக்கம் வந்தவர்போல் தள்ளாடி, பின்னால் நகர்ந்து, கட்டிலில் அமர்ந்துவிடும் முயற்சியில் தோற்றவராய்ச் சரிந்து, கட்டிலின் விளிம்பை உரசிக்கொண்டு தடாலென்று தரையில் உட்கார்ந்து, அப்படியே சாய்ந்துவிட்டார். அவரின் பின் தலையில் கட்டிலின் பக்கவாட்டு இரும்புச் சட்ட விளிம்பு தட்டியது சின்ன ஒலியாய் உணர்த்தியது.

“அப்பா…” என்று கத்தியபடி எழுந்து அறைக்குள் ஓடினேன். அலமாரி அருகில் அவர் தள்ளாடும்போதே நான் சுதாரித்திருக்க வேண்டும். வயதாவதன் வழக்கமான தள்ளாட்டம்தான் என அசிரத்தையாய் இருந்துவிட்டேன்.

எசகுபிசகாகப் பக்கவாட்டில் ஒருக்களித்து விழுந்திருந்தவரை நிமிர்த்தி உட்கார வைத்தேன். “அப்பா… என்னாச்சுப்பா? என்ன திடீர்னு மயக்கம்? பிபி மாத்திரை போட்டுக்க மறந்துட்டீங்களா?” என்றேன்.

அப்பாவால் பேச முடியவில்லை. ஏதோ சொல்ல முயன்றார். என்னவென்று விளங்கவில்லை. மார்பில் வலி, மூச்சு விடச் சிரமப்படுகிறார் என்று புரிந்தது.

“அம்மா… கொஞ்சம் குடிக்கத் தண்ணி கொண்டு வாங்க” என்று குரல் கொடுத்தேன்.

“தடால்னு சத்தம் கேட்டுதேன்னு வந்தேன்…” என்று உள்ளே வந்த மகன், “என்னப்பா… தாத்தா விழுந்துட்டாரா?” என்றான்.

“டேய்… போய் காரை வெளியே எடுத்து வை. தாத்தாவை உடனே ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போகணும்…” என்று அவனை அனுப்பிவிட்டு, “என்னப்பா பண்ணுது? ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல… தைரியமா இருங்க” என்று அப்பாவின் சட்டையைத் தளர்த்தி, மார்பை நீவி விட்டேன்.

அம்மா தண்ணி கொண்டு வந்தாள். “விழுந்துட்டாரா…?” என்றாள். “நேத்திக்கே வாக் போறப்ப கிறுகிறுன்னு வருதுன்னார். பாதி வழியில பழமுதிர்சோலை வாசல்ல ஒரு செவுத்துக் கட்டை இருக்கும் பாரு… அதுல உட்கார்ந்துட்டோம் கொஞ்ச நேரம்! வயசாயிடுச்சில்லியா, முந்தி மாதிரி ரொம்ப தூரம் நடக்க முடியலை!” என்றாள்.

அம்மாவிடமிருந்து டம்ளர் தண்ணீரை வாங்கி, அப்பாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்டினேன். பின்பு இரண்டு கட்கத்திலும் கை கொடுத்துத் தூக்கிக் கட்டிலில் உட்கார வைத்தேன். “இப்ப கொஞ்சம் பரவாயில்லையா… மூச்சு விட முடியுதா?” என்று கேட்டேன்.

“ஒண்ணும் இல்லடா! அப்பாவுக்கு மாம்பழமே ஒத்துக்கறதில்லை. சொன்னா கேட்க மாட்டேங்கறார். நேத்திக்கு ராத்திரி ரெண்டு மணிக்கு எழுந்து உட்கார்ந்துக்கிட்டுக் கூடையில வெச்சிருந்த ஒட்டு மாம்பழம் ரெண்டையும் முழுசா தின்னு தொலைச்சிருக்கார். வாயைக் கட்டலேன்னா உடம்பு என்னத்துக்காகும்?” என்றாள் அம்மா.

“காரை வெளியே எடுத்து வெச்சிட்டேன். போலாமாப்பா?” என்றபடி வந்தான் மகன்.

“வேட்டி அழுக்கா இருக்குடா. வேற மாத்திக்கிறேன்” என்று முனகலாகச் சொன்னார் அப்பா. தூக்கி நிற்க வைத்தேன். பழைய வேட்டியை அவிழ்த்தெறிந்துவிட்டுப் புது வேட்டியை உடுத்திவிட்டேன். “அந்தச் சட்டையை எடு” என்று பலகீனமாகக் கை உயர்த்திக் காட்டினார். வெள்ளையில் நீலக் கோடுகள் போட்ட ஸ்லாக் சட்டையை எடுத்து அப்பாவுக்கு அணிவித்தேன். “பனியன் கிழிசலா இருக்கே… பரவாயில்லையா?” என்றார். “பரவாயில்லைப்பா. அதை யார் பார்க்கப் போறாங்க. வாங்க, போகலாம்! கீழே படி இறங்க முடியுமா?” என்றேன். “பார்க்கறேன். முடியும்னுதான் நினைக்கிறேன். மூச்சு விட முடியலை. இடது தோள் பக்கம் ஏதோ பிடிச்சுக்கிட்ட மாதிரி வலி. கையைப் பிடிச்சுக்கோ!” என்று, அப்போதுதான் புதிதாக நடை பழகும் குழந்தை மாதிரி கால்களை எடுத்து வைத்து நடந்தார்.

“இருடா… நானும் வரேன். நீ அப்பாவை அழைச்சுட்டுப் போயிட்டே இரு. நான் இதோ ஒரு நொடியில புடவையை மாத்திக்கிட்டு வந்துடறேன்” என்றாள் அம்மா.

“என்னங்க… பர்ஸ் எடுத்துக்கிட்டீங்களா?” என்று ஞாபகமூட்டினாள் சௌம்யா. “என் மேஜையில வெச்சிருப்பேன் பார், கொண்டு வா! அப்படியே என் மொபைலையும் எடுத்துட்டுக் கீழே வா. நான் அப்பாவை அழைச்சுக்கிட்டுப் போயிட்டேயிருக்கேன்” என்றேன்.

ஆனால், அப்பாவால் சின்ன வாசற்படியைக் கூடத் தாண்ட முடியவில்லை. ஒரு யு-டர்ன் திருப்பத்துடன் ஐந்தும் பன்னிரண்டுமாய் மொத்தம் 17 படிகள். முதல் படியில் கால் வைப்பதற்குள் வண்டி குடை சாய்கிற மாதிரி சாய்ந்தார் அப்பா. முன்னால் இருந்த மகன் தாத்தாவைத் தாங்கிக் கொண்டான்.

“விடுங்கப்பா… தாத்தாவால இறங்க முடியாது. நான் தூக்கிட்டு வரேன். நீங்க முன்னால போய்க் கார்க் கதவைத் திறந்து வைங்க” என்றான். கைலாகு கொடுத்துத் தாத்தாவைத் தூக்கிக்கொண்டான். பூ மாதிரி சுமந்து வந்து, ஸீட்டில் உட்கார வைத்தான். வெளியில் நீண்டிருந்த அவரின் கால்களைத் தூக்கி உள்ளே வைத்தான். அப்பா அருகில் அம்மா ஏறிக்கொண்டாள். சௌம்யா பர்ஸும் மொபைலும் கொடுத்து, “டாக்டரைப் பார்த்ததும் போன் பண்ணுங்க. கவலைப்பட்டுட்டே இருப்பேன். நான் போய் பூஜை ரூம்ல சாமி விளக்கு ஏத்தி வைக்கிறேன்” என்றாள். நான் முன்பக்கம் ஏறிக்கொள்ள, காரை உயிர்ப்பித்து நகர்த்தினான் மகன்.

கார் நாலைந்து தெருக்களில் புகுந்து புறப்பட்டு, மேகா ஹாஸ்பிட்டல் ஓரமாக நின்றது. இறங்கி உள்ளே போய் ஸ்ட்ரெச்சர் கொண்டு வரச் சொன்னேன். அப்பாவை மெதுவாக அதில் ஏற்றி, இரு நர்ஸுகள் அதைத் தள்ளிக்கொண்டு வார்டுக்குப் போனார்கள். “வேட்டி விலகறதுடா…” என்று கண் மூடி முனகியபடி வலக்கையால் வேட்டியைத் தள்ளி, முழங்கால் தெரியாமல் சரிசெய்துகொண்டார் அப்பா.

பார்த்துக்கொண்டிருந்த நோயாளியைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அவசர கேஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அப்பாவைப் பரிசோதிக்க விரைந்தார் டாக்டர். காத்திருந்தோம்.

“அப்பாவுக்கு ஒண்ணும் இல்லடா. கால் வலி மாத்திரம்தான் ஆதி நாள்லேருந்து உண்டு. மத்தபடி அப்பாவுக்கு ஒண்ணும் இல்லே. நொறுக்குத் தீனியைக் குறைச்சுக்கிட்டா தாராளமா நூறு வயசு வரைக்கும் இருப்பார். கேட்க மாட்டேங்கறாரே! ஆனா பாவம், அந்த நாள்ல பணத்துக்கு ரொம்ப கஷ்டம். எலிமென்ட்டரி ஸ்கூல் வாத்தியாருக்கு எவ்ளோ வந்துடும்? டியூஷன் எடுப்பார். ஆனா, கிராமத்துல எல்லாம் ஏழைப் பசங்க. அவங்களா பார்த்து ஏதாவது கொடுத்தாதான் உண்டு. மாம்பழம்னா அப்பாவுக்கு உசிர். ஓமப்பொடி, மிக்சர்னு நொறுக்குத் தீனின்னா இஷ்டம். வாங்கலாம்னு கடைக்குப் போவார். ஆனா, வேடிக்கை பார்த்துட்டு வந்துடுவார். அந்தப் பைசாவுல குழந்தைங்களோட படிப்புக்கு உபயோகமா பேனா, பென்சில், நோட்டுப் புஸ்தகம்னு ஏதாவது வாங்கலாமேனு நினைப்பார். இப்பத்தான் நீ தலையெடுத்து, அப்பா ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கித் தரே. அந்த நாள்ல அனுபவிக்க முடியாததை இப்பவாவது ஆசையா சாப்பிடட்டுமேனு நானும் தடுக்கறதில்லே. என்ன பண்றது… தெம்பும் திடனுமா இருக்கிற காலத்துல அப்பாவால எதையும் அனுபவிக்க முடியலே. இப்ப வயசான காலத்துல எதுவும் ஜீரணமாக மாட்டேங்கறது…” என்று நீளமாகப் பேசிக்கொண்டே போனாள் அம்மா.

என்னைச் சமாதானப்படுத்தச் சொல்வதாகத் தோன்றவில்லை; தன் பயத்தைப் போக்கிக் கொள்வதற்காகச் சொல்கிற மாதிரிதான் பட்டது.

டாக்டர் வார்டை விட்டு வெளியே வந்தார். அருகில் சென்றேன். “எப்படியிருக்கு அப்பாவுக்கு?” என்றேன். “ஹார்ட் அட்டாக் மாதிரி தெரியுது. இங்க கத்திப்பாரா பிரிட்ஜுக்கு முன்னாடியே பெட்ரோல் பங்க் தாண்டினா வேதா ஹாஸ்பிடல்னு வரும். பேஷன்ட்டை உடனே அங்கே கொண்டு போங்க. அர்ஜெண்ட். நான் அவங்களுக்கு போன் பண்ணிச் சொல்லிடறேன்” என்றார்.

அப்பாவை ஸ்ட்ரெச்சரில் கொண்டு வந்து, காரின் பின் ஸீட்டில் படுக்க வைத்தார்கள். நினைவின்றிக் கிடந்தார் அப்பா. “என்னவாம்டா அப்பாவுக்கு? வீட்டுக்குப் போகலாம்னுட்டாரா?” என்று கேட்டாள் அம்மா.

“இல்லம்மா… இங்கே பெரிய ஆஸ்பத்திரி ஒண்ணு இருக்கு. அங்கே கொண்டு போகச் சொல்லியிருக்கார்” என்றேன்.

“வேற ஆஸ்பத்திரி கொண்டு போறதுக்கு இவர் என்னத்துக்கு இங்கே ஒரு ஆஸ்பத்திரியைக் கட்டி வைத்தியம் பார்க்கணும்? என்னவோ போ!” என்றாள் அம்மா.

அப்பா கண்டிப்பானவர். பொய் புரட்டு, ஏமாற்று அறவே பிடிக்காது. பெரியவர்களை மதிக்க வேண்டும்; படிப்பில் கவனம் வேண்டும்; இவற்றில் எதில் கொஞ்சம் குறைந்தாலும் பிரம்பை எடுத்து விளாசிவிடுவார். நாங்களெல்லாம் சமூகத்தில் நல்ல பேர் எடுக்க வேண்டும், நாலு பேர் மதிக்கும்படி வாழ வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பார்.

எனக்கு அப்போது ஏழெட்டு வயது இருக்கும். அப்பா நன்றாகப் படம் வரைவார். வரலக்ஷ்மி நோன்பு வந்தால், சுவரில் வெள்ளையடித்து வரலக்ஷ்மி படம் வரைவார். கூஜாவில் சுண்ணாம்பு தடவி வரலக்ஷ்மி முகம் வரைவார்.

அப்படி ஒருமுறை, வீட்டுச் சுவரில் அழகாக வரலக்ஷ்மி படம் வரைந்திருந்தார். கண்களை மட்டும் வரையாமல் விட்டு வைத்திருந்தார். ‘கண் திறக்கும் வைபவம்’ என மறுநாள் பூஜையன்றுதான் விழிகள் வரைய வேண்டும்போல! சிறுவனான எனக்கு இந்த விவரம் தெரியாததால், படம் பூர்த்தியாகாதது உறுத்தியது. அதைச் சரிசெய்துவிடக் கைகள் பரபரத்தன. ஒரு கரிக்கட்டையுடன் படத்தை நெருங்கினேன். வெளுத்திருந்த விழிகளின் மத்தியில் கறுப்பு வட்டங்கள் வரைந்தேன். தள்ளி நின்று பார்த்தபோது, வரலக்ஷ்மி மாறுகண்ணுடன் கோரப்பார்வை பார்த்தாள்.

அருகில் போய், நான் வரைந்திருந்த கறுப்பு விழிகளைக் கையால் அழித்தேன். கறுப்பு திட்டாய்ப் பரவி, அழகான புருவங்கள், இமைகள் சிதைந்தன. ஈரத் துணி கொண்டு வந்து துடைத்தேன். தண்ணீர் கோடாக இறங்கி, வரலக்ஷ்மி அழுவது போன்ற தோற்றம் கொடுத்தது.

இன்னும் சில முயற்சிகள் மேற்கொண்டும் படம் மேலும் மேலும் பாழானதேயன்றி, அதை என்னால் சீர் செய்யவே முடியவில்லை. உள்ளுக்குள் பயம் வந்தது. அப்பா கோபக்காரர். பார்த்தாரானால், என்னை நொறுக்கி எடுத்துவிடுவார். நான் அடி வயிறு கலங்க, அறைக்குள் சென்று, ஒரு மூலையாகப் படுத்து, உறங்குவது போல பாவனை செய்தேன்.

சற்று நேரத்தில் ஹாலில் அப்பாவின் அதட்டும் குரல் கேட்டது. “யார் இந்தப் படத்தை இப்படிச் சின்னாபின்னப்படுத்தி வெச்சிருக்கிறது?” என்றார். “தெரியலையே! கொஞ்சம் முன்னாடி பார்த்தப்போகூட நல்லாதானே இருந்தது! யாருமே இங்கே வரலியே?” என்றாள் அம்மா.

அப்பா உள்ளே வந்தார். படுத்திருக்கும் என் அருகில் அமர்ந்தார். என் கை விரல்களை எடுத்துப் பார்த்தார். கரி அப்பியிருந்தது. பெயர் சொல்லி அழைத்தார். நடிப்பை விட்டு, பயத்துடன் எழுந்து உட்கார்ந்தேன்.

“என்னப்பா பண்ணினே…?” என்றார். “அது... அதுப்பா… வந்து… கண்ணு இல்லாம இருந்தது. அதான் கண்ணு போடலாம்னு பார்த்தேன்…” என்றேன்.

இன்ப அதிர்ச்சியாக, என்னை இழுத்து இறுக அணைத்துக்கொண்டார். “தங்கம்டா… பார்த்தியாடி என் புள்ளைய! சாமிக்குக் கண் வரையணும்னு ஆசைப்பட்டிருக்கான். கலைஞன்டி இவன்! இவனுக்குள்ளே ஒரு பெரிய ஓவியன் இருக்கான். டேய், உனக்கு நான் படம் வரையக் கத்துத் தரேண்டா. பேப்பர், பேனா, ஸ்கெட்ச், கிரேயான், வாட்டர்கலர், ஆர்ட் புக்… இன்னும் என்னென்ன வேணுமோ வாங்கித் தரேன். ஜமாய்!” என்று முதுகில் தட்டிக் கொடுத்தார்.

அவ்வளவு வறுமையான நிலையிலும் பேப்பர், பேனா வகையறாக்களுக்குக் கணக்குப் பார்க்காமல் செலவு செய்தார். படங்கள் வரைந்து பள்ளிச் சுவர்களை அலங்கரித்தபோது, அப்படிக் கொண்டாடினார்.

பின்னால் திரும்பிப் பார்த்தேன். அதே அப்பாதான் காரின் குலுக்கலால் உண்டான அசைவுகள் தவிர வேறு அசைவுகளின்றி ஜடமாகப் படுத்திருந்தார். கார் போக்குவரத்தில் நீந்தி, வேதா ஹாஸ்பிட்டலை அடைந்தது. ரிசப்ஷனில் ஸ்ட்ரெச்சர் தயாராகக் காத்திருந்தது. ஆண் நர்ஸுகள் வந்து அப்பாவை அலாக்காகத் தூக்கி, அதில் படுக்க வைத்துத் தள்ளிக்கொண்டு போனார்கள். பின்தொடர்ந்தேன்.

அப்பா ஐ.சி.யு-வுக்குள் கொண்டு செல்லப்பட்டார். வெளியே பெஞ்சு போடப்பட்டிருந்தது. “நீங்க இங்க வெயிட் பண்ணுங்க. டாக்டர் இப்ப வந்து பார்ப்பாரு” என்றாள் ஒரு நர்ஸ். காத்திருந்தேன். ஒரு டாக்டர் வேகமாக வந்து கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனார். வட்டக் கண்ணாடி வழியாகப் பார்த்தேன். அப்பா ஒரு கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவர் மார்பில் ஏகப்பட்ட வயர்களைப் பொருத்தி, முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க்கை மாட்டினார்கள். அருகில் ஒரு மானிட்டரில் பச்சைக் கோடுகள் மேலும் கீழுமாகத் துள்ளிக்கொண்டிருந்தன. மேலே பார்க்கத் திராணியின்றி, பெஞ்ச்சில் வந்து உட்கார்ந்துகொண்டேன்.

கால் மணி காத்திருத்தலுக்குப் பின், டாக்டர் வெளியே வந்தார். “உள்ளே இருக்கிற பேஷன்ட்டோட அட்டெண்டரா நீங்க…?” என்றார். “ஆமாம்” என்றேன்.

“ஈசிஜி பார்த்ததுல சிவியர் அட்டாக் வந்திருக்கிறது தெரியுது. எக்கோ டெஸ்ட் எடுக்கணும். தவிர, இன்னும் சில டெஸ்ட்டும் எடுக்கணும். உள்ளே என் அசிஸ்டென்ட்ஸ் பேஷன்ட்டைப் பார்த்துட்டிருக்காங்க. நான் காலையில வந்து பார்க்கிறேன். கொஞ்சம் கிரிட்டிக்கல் ஸ்டேஜ்லதான் இருக்கார். கவலைப்படாதீங்க. காப்பாத்திடலாம். வி வில் ட்ரை அவர் பெஸ்ட்!” என்று என் தோளில் தட்டிவிட்டு நகர்ந்தார் டாக்டர்.

நான் மறுபடி ஒருமுறை வட்டக் கண்ணாடி வழியாக உள்ளே பார்த்தேன். சலனமற்றுப் படுத்திருந்த அப்பாவின் மார்பு சீராக உயர்ந்து தாழ்ந்துகொண்டிருந்தது.

இரவு மணி 10. ரிசப்ஷன் ஹாலுக்கு வந்தேன். ஓரிருவர் தவிர, ஹால் கூட்டமின்றி சிலோவென்றிருந்தது. டியூப் லைட்டுகள் அணைக்கப்பட்டு, மெல்லிய வெளிச்சம் பரவியிருந்தது.

அம்மா எழுந்தாள். “என்னடா… டாக்டர் என்ன சொன்னார்? ஊசி போட்டாரா? அப்பாவுக்கு எது சாப்பிட்டாலும் லேசுல ஜீரணமாகாது. காலையில முதுகு வலின்னார். வாயுப் பிடிப்புதான்; வேறென்ன?” என்றாள்.

“இல்லம்மா… இன்னிக்கு ராத்திரி இங்க தங்க வேண்டியிருக்கும். வா, உன்னைக் கொண்டு விட்டுட்டு, நான் டூ வீலரை எடுத்துட்டு வரேன்” என்றவன், “வாடா போகலாம்” என்றேன் மகனிடம்.

அசோக் நகரில் வீடு. அம்மாவை விட்டுவிட்டு, சௌம்யாவிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, டூ வீலரை எடுத்துக்கொண்டு மீண்டும் வேதா ஹாஸ்பிட்டல் வந்தேன்.

“வாங்க, உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கோம். இதைக் கொண்டு போய் விஜயா ஹாஸ்பிட்டல்ல கொடுத்தீங்கன்னா டெஸ்ட் பண்ணி ரிப்போர்ட் கொடுப்பாங்க. ஒரு அரை மணி வெயிட் பண்ணி, இருந்து வாங்கிட்டு வந்துடுங்க” என்று ஒரு சின்ன கண்ணாடி சீஸாவைக் கொடுத்தான் டாக்டரின் அசிஸ்டென்ட்டாக இருந்த இளைஞன். விஜயா ஹாஸ்பிட்டலில் எந்தப் பக்கம் போய், எத்தனாவது மாடியில் எத்தனாவது அறையில் லேப் இருக்கிறது என்று விவரமாகச் சொன்னான்.

டூ வீலரில் கிளம்பினேன். டிராஃபிக் குறைந்திருந்தது. இருந்தும் வடபழனி போக அரை மணி பிடித்தது. ஆஸ்பத்திரி வாசலில் செக்யூரிட்டியிடம் விவரம் சொல்லி, வழி கேட்டு, லேபுக்குச் சென்று, அந்தச் சிறு கண்ணாடி பாட்டிலை அவர்களிடம் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். கவுன்ட்டரில் ரூ.650 பணம் கட்டி ரசீது கொண்டு வரச் சொன்னார்கள். செய்தேன். ரிப்போர்ட் கிடைத்ததும் கிளம்பி மீண்டும் ‘வேதா’ வந்தேன். அந்த டாக்டர் இளைஞன் அதைப் பார்த்துவிட்டு, “ம்…” என்று அந்த ரிப்போர்ட் பேப்பரில் புறங்கையால் ஒரு தட்டுத் தட்டினான். அதற்கு என்ன அர்த்தம் என்று விளங்கவில்லை. உள்ளே போய்விட்டான்.

மணி 12. அதே இளைஞன். அதே போன்ற ஒரு சீஸா. “மறுபடி போய் அதே போல ரிப்போர்ட் வாங்கி வாருங்கள்” என்று அதை என் கையில் கொடுத்துவிட்டு, உள்ளே போனான். மறுபடி இருளில் வடபழனிப் பயணம். “என்ன டெஸ்ட் இது?” என்று லேபில் இருந்தவர்களிடம் கேட்டேன். என்சைம் டெஸ்ட், ட்ராப்போனின் என்று டெக்னிக்கலாக ஏதோ சொன்னார்கள். ஒரு மண்ணும் புரியவில்லை. ரிப்போர்ட் தந்தார்கள். வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன்.

“அப்பாவைப் பார்க்கலாமா?” என்று கேட்டேன். “ஓ… தாராளமாய்!” என்று கதவு திறந்து உள்ளே அழைத்தான் டாக்டர் இளைஞன். அப்பாவை நெருங்கினேன். மார்பு சீராக உயர்ந்து தாழ, கண் மூடிப் படுத்திருந்தார்.

“பார்க்கலாம். ட்ரீட்மென்ட் போயிட்டிருக்கு. காலையில வரைக்கும் தாக்குப்பிடிச்சுட்டோம்னா அப்புறம் பயமில்லே. நீங்க வெயிட் பண்ணுங்க” என்று என்னை வெளியே அனுப்பினான்.

திரும்பவும் விடியற்காலை 3 மணிக்கு ஒரு முறை, 5 மணிக்கு ஒருமுறை என்னை சீஸாவுடன் வடபழனிக்குத் துரத்தினார்கள்.

காலையில் 6 மணிக்கு டாக்டர் வந்தார். ஐசியு கதவு திறந்து, “என்னப்பா… எனி இம்ப்ரூவ்மென்ட்?” என்றார் உதவியாளர்களிடம். அவர் உள்ளே சென்ற சற்று நேரத்துக்கெல்லாம் வெளியே வந்தான் அந்த டாக்டர் இளைஞன். “நேத்திக்கு ட்ரீட்மென்ட்டுக்குப் பணம் கட்டிட்டீங்க இல்லியா…? பில் வெச்சிருக்கீங்களா?” என்று கேட்டான். ரூ.10,000 செலுத்திய ரசீதை அவனிடம் காண்பித்தேன்.

“ஃபைன்! இந்தாங்க. இதுல உள்ள மெடிசின்ஸ் எல்லாம் வாங்கிட்டு வாங்க. அலைய வேண்டாம். வாசல்லியே நம்ம பார்மஸி இருக்கு. சீக்கிரம் போய் வாங்கிட்டு வந்துடுங்க. டாக்டர் வெயிட் பண்ணிட்டிருக்கார்” என்று மளிகைக்கடை பில் போல நீளமான லிஸ்ட்டை என் கையில் திணித்துவிட்டு உள்ளே புகுந்துகொண்டான்.

அந்த மருந்துச் சீட்டை பார்மஸியில் காட்டினேன். “வெயிட் பண்ணுங்க. எல்லாத்தையும் எடுத்து வெச்சிட்டுக் கூப்பிடறேன்” என்றாள் அங்கிருந்த பெண்மணி. அலமாரிகளில் இருந்த ஒவ்வொரு பிளாஸ்டிக் இழுப்பறையாகத் திறந்து மாத்திரைப் பட்டைகள், மருந்துப் புட்டிகள், சிரிஞ்சு மருந்து சீசாக்கள், குடுவைகள் என தீபாவளி பட்டாசு ரகங்கள் போன்று வகை வகையாக எடுத்து மேஜையில் கடைபரப்பினாள்.

பின்பு கால்குலேட்டரில் தட்டித் தட்டிக் கணக்குப் போட்டு, “சார், மொத்தம் ரூ.48,000 ஆகுது. பில் போட்டுறலாமா? கேஷா, கார்டா?” என்றாள். “ஜீபே” என்றேன். “அங்க இருக்கு பாருங்க க்யூ.ஆர் கோடு” என்று காட்டினாள். ஸ்கேன் செய்ததும், ‘வேதா பார்மஸி’ என்று காட்டியது. பணம் அனுப்பியதற்கான டிக் வந்ததும், அவளிடம் காண்பித்தேன். பில்லை பிரிண்ட் அவுட் எடுத்து, ஒரு பிளாஸ்டிக் டிரேயில் மருந்துகளைப் பரப்பி என்னிடம் நீட்டினாள். “போறப்போ மறக்காம ட்ரேயைக் கொடுத்துட்டுப் போங்க. மறந்தாப்ல அப்படியே எடுத்துட்டுப் போயிடறாங்க; இல்லாட்டி அங்கேயே எங்கனா வெச்சுட்டுப் போயிடறாங்க. ட்ரே வாங்கிக் கட்டுப்படியாகலை” என்று சலித்துக்கொண்டாள்.

அதன்பின், இரண்டு மணி நேரம் ஓடியது. வட்டக் கண்ணாடி வழியாக எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பா சீராக மூச்சு விட்டுக்கொண்டிருந்தார். சுற்றிலும் அந்த டாக்டரும் உதவியாளர்கள் இருவரும், நர்ஸுகளும் மும்முரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். எப்படியும் காப்பாற்றிவிடுவார்கள் என்று தைரியம் வந்தது. தவிப்போடு காத்திருந்தேன்.

மணி 8:45. ஐ.சி.யு-வை விட்டு வெளியில் வந்தார் டாக்டர். தலையில் அணிந்திருந்த பச்சைத் தொப்பியை அகற்றினார். என்னை ஆழமாக ஒரு பார்வை பார்த்தார். “ஸாரி டு ஸே திஸ்… எவ்வளவோ போராடியும் உங்கப்பாவைக் காப்பாத்த முடியலே!” என்றார். உள்ளே மளுக்கென்று ஏதோ முறிந்தது.

அறைக்குள் சென்றேன். மார்பு வயர்களை நீக்கியிருந்தார்கள். அப்பாவின் மார்பு உயர்ந்து தாழ்வதை நிறுத்தியிருந்தது. மீளாவுறக்கத்தில் ஆழ்ந்திருந்தார் அப்பா.

“இந்தாங்க சார்” என்று ஒரு ட்ரேயை நீட்டினாள் நர்ஸ். “யூஸ் பண்ணினது போக மீதி மருந்துகள் இதுல இருக்கு. இதை ரிட்டர்ன் பண்ணிட்டு நீங்க பைசா வாங்கிக்கலாம்” என்றாள். ஆம். கிடைத்தது, ஒரு ரெண்டாயிரத்துச் சொச்சம்!

“சார், நம்ம ஹாஸ்பிட்டல் ஆம்புலன்ஸ்லயே பாடியைக் கொண்டு வந்து வீட்டுல கொடுத்துடுவாங்க. இதுக்கு நீங்க தனியா எதுவும் பே பண்ண வேணாம். ஆபீஸ் ரூமுக்குப் போய் உங்க அட்ரஸை எழுதிக் கொடுத்துட்டு… ஒரு ரெஜிஸ்டர் காட்டுவாங்க, அதுல கையெழுத்துப் போட்டுட்டுப் போங்க. டெத் சர்ட்டிஃபிகேட்டுக்காக!” என்றான் அந்த டாக்டர் இளைஞன். “அப்பா எத்தனை மணிக்குத் தவறினார்?” என்று கேட்டேன். “சரியா எட்டரைக்கு” என்றுவிட்டு அகன்றான்.

“கண்ணாடி வழியாப் பார்த்தேன்… கொஞ்சம் முந்தி வரைக்கும்கூட மூச்சு விட்டுட்டிருந்தாரே?” என்றேன் நர்ஸிடம் முனகலாக.

அவள் என்னைக் கழிவிரக்கத்தோடு பார்த்தாள். “மார்பு ஏறி இறங்கறதைப் பார்த்திருப்பீங்க. அதை அவர் மூச்சு விடறதா நினைச்சிருப்பீங்க. இல்லைங்க. வென்டிலேட்டர் வெச்சிருந்தாங்க இல்லியா, அதான் அப்படிக் காண்பிச்சிருக்கு. டாக்டர் சொன்னாவுட்டுதான் அதை எடுத்தோம்!” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

எனில்…? அப்பா எட்டரைக்குதான் இறந்தார் என்பது எவ்வளவு உண்மை? ராத்திரியே இறந்திருப்பதற்கும் வாய்ப்பு உண்டா? அல்லது, இங்கே கொண்டு வந்து சேர்த்தபோதே அவர் பிராணன் போயிருந்ததா? ஏதோ டெஸ்ட் எடுக்க என்னை விடிய விடிய வடபழனிக்குத் துரத்தியதில் அர்த்தம் உண்டா? விடியற்காலையில் அப்பாவின் சாவை அறிவிப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக ரூ.48,000-க்கு மருந்து, மாத்திரைகள் வாங்கியதன் உண்மையான காரணம் என்ன? அந்த மருந்து, மாத்திரைகளால் அப்பாவைக் காப்பாற்றிவிட முடியும் என்று டாக்டர் நிஜமாக நம்பினாரா? ரூபாய் இரண்டாயிரத்துச் சொச்சம் மதிப்பிலான மருந்துகளைத் திருப்பி, அந்தப் பணத்தை நாணயமாக எனக்குத் திரும்பக் கொடுத்தது நாடகத்தில் ஓர் அங்கமா? ஆஸ்பத்திரிக் கட்டணம், மருந்துச் செலவுகள் என ரூ.50,000-க்கும் மேல் ஆனது, இவர்கள் என் தலையில் அரைத்த மிளகாயா? இலவச ஆம்புலன்ஸ் வசதி என்னை மாதிரி இளித்தவாயர்களுக்கான ஒத்தடமா? மேகா டாக்டர் அவராகவே இந்த வேதா ஹாஸ்பிட்டலுக்குப் பேசி, அப்பாவை இங்கே அழைத்துப் போகச் சொன்னது ஏன்? அவருக்கும் இதில் ஏதாவது கமிஷன் உண்டா?

கேள்விகள்… கேள்விகள்… கேள்விகள்… வசமாக ஏமாற்றப்பட்டிருக்கிறேனா? எப்படி இதை உறுதி செய்துகொள்வது? தலையைப் பிய்த்துக்கொண்டேன்.

கொஞ்சம் யோசிக்க, உள்ளே தடக்கென்று அதிர்ந்தது. அப்பாவே போய்விட்டார். எவ்வளவு பெரிய இழப்பு?! ஆனால், அந்த துக்கத்தையும் மறந்து பணக்கணக்கு பார்த்துக்கொண்டிருக்கிறேனா நான்? அதற்காகத்தான் துயரப்பட்டுக்கொண்டிருக்கிறேனா? இவ்வளவு சீக்கிரமாக அப்பா இரண்டாம்பட்சமாகிவிட்டாரா எனக்கு! ஐயோ!

“அப்பா…” என்று இதயம் வெடித்து அழுதேன். சத்தியமாய் இந்தக் கண்ணீர் அப்பாவுக்கான கண்ணீர்தான்!

0000000

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...