பொட்டு

உண்மைக் கதைகள்
4.8 out of 5 (44 रेटिंग्स)
कहानी को शेयर करें

‘எதிர்பார்க்கவில்லை, இதுபோல் நடக்கும் என்று ஒருபோதுமே எதிர்பார்த்திருக்கவில்லை. முப்பது வயதினிலே மாமா எங்களை விட்டுச் சென்றிருந்தார்’.

‘எங்களை’ என்பதை விட, என் அக்காவையும் தன் இரு செல்ல மகள்களையும் விட்டு செல்வார் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. எல்லாம் சில மணி நேரங்களில் நடந்து முடிந்திருந்தது.

புதுவீடு கட்டி முடித்து சில மாதங்களே ஆகியிருந்தது. ஆனால், இப்போது அவருக்கு அவ்வீடு சொந்தமற்று போயிருந்தது. மாமாவை தெருவாசலில் பந்தலின் கீழ் கிடத்தி வைத்திருந்தனர். பல கனவுகளுடன் அவர் அமைத்த கோட்டையை இன்று ஆள முடியாமல் போனது. வந்து செல்லும் வழிப்போக்கனாக அவர் பயணம் பாதியில் முடிந்தது.

புதுமனை விழாவிற்கு மாமாவிற்கு என் அம்மா ஆசை ஆசையாய் எடுத்துக் கொடுத்த பட்டுவேட்டி, கத்திரிப்பூ நிற சட்டை உடுத்தி அமைதியாக படுத்திருந்தார் மாமா.

அக்காவின் இரண்டு வயது மகள், மாமாவின் உடல் கிடத்தப்பட்டிருந்த கண்ணாடிப்பெட்டியைச் சுற்றி வந்து ‘ரிங்கா ரிங்கா ரோஸஸ்’ என்று பாடிக்கொண்டே இறந்த தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தது. தன் வாழ்வில் விதி விளையாடியதை பாவம், அக்குழந்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்பா தூங்குறாரு… யாரும் சத்தம் போடாதீங்க, அவருக்கு உடம்பு சரியில்ல, அவரை தூங்கவிடுங்கன்னு சுற்றியிருந்தோரை பார்த்து நிகழ்வதறியாத பிஞ்சுக்குரல் கட்டளையிட்டது.

நோயுடன் போராடி தோற்ற மாமாவின் பூத உடலின் மீது புரண்டு அழுதுக் கொண்டிருந்தாள், கத்தினாள், கதறினாள் முப்பதே வயதினைத் தொட்ட என் அக்கா.

‘அய்யோ நந்து… என்னை விட்டு போயிட்டீங்களே…. உங்க பிள்ளைங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்… அப்பா எங்கனு அதுங்க கேக்குமே, நான் என்னத்த சொல்லுவேன்? நீங்க இல்லாத உலகத்தில நாங்க எப்படி இனி வாழப்போறோம். நீங்க போன இடத்துக்கே நாங்களும் வந்துடறோம்… எங்களை விட்டு எப்பவும் பிரியாத நீங்க, இப்படி மொத்தமா விட்டுட்டு போயிட்டீங்களே…’ என்ற அக்காவின் கதறல் காற்றினைக் கிழித்துக் கொண்டு, என் செவியினை அடைந்து, மனதினை பிசைந்தது.

சாதாரண காய்ச்சல் என நினைத்திருந்த நிலையில், மாமாவின் உயிரையே கொண்டு செல்லும் எமனாக அமைந்தது. எவ்வளவோ முயன்றும் மாமாவை மீட்டுக் கொண்டுவர இயலவில்லை. அது மாமாவின் உயிரை மட்டும் அல்ல, என் அக்காவின் சிரிப்பையும், சந்தோஷத்தையும் பறித்துச் சென்றது. என்றும் சிரித்த முகமாகவும், வாறியதலையும், சூடிய பூவுமாக வளைய வரும் அக்கா முற்றுமாக மாறிப்போயிருந்தாள்.

‘நந்து, நந்து..’ என்று அவள் கதறியது பார்ப்போரை கலங்கடித்தது. ஆனால், ஒரு சிலருக்கு, அது கதறலாக தெரியவில்லை. திடீரென்று கூட்டத்தில் ஒரு சலசலப்பு. ஒரு குரல் வேகமாக என்னை அழைத்தது. அத்திசை நோக்கி நடந்தேன்.

மாமாவின் உறவுக்கார பெண்மணியின் குரலது. என்ன என்று யோசனையுடன் அவரிடத்தே கேட்டேன். அக்கணம் அவர் கூறியதனை கேட்டு பெருங்கோபம் கொண்டேன். வெறித்த பார்வையோடு அங்கிருந்து நகர்ந்தேன். தேளின் விஷத்தினைவிட கொடிய நச்சு வார்த்தைகள் அவை.

‘நாலு பேரு வந்து போவுற எடம் இது, உன் அக்கா என்னமோ, பெத்த புள்ளைய கூப்பிடுற மாறி நந்து, நந்துன்னு பேர் விட்டு கூவிட்டு கிடக்குறா.. பாக்குறவங்க என்ன நெனப்பாங்கன்னு கொஞ்சமாவது அறிவிருக்கா? இடம் பாத்து நடந்துக்க வேணாமா?’ என்று அவர் கொட்டி முடித்தவுடன், விரக்தி அதிகமானது.

மாமாவின் பெயர் நந்தகுமார் என் அக்கா அவரை ஒருபோதும் பெயர்ச் சொல்லி அழைத்ததில்லை. இன்றும் அவளாக அப்படி அழைக்கவில்லை. மாறாக, எப்படியாவது அவளின் அழுகுரல் கேட்டு அவர் மீண்டும் வந்துவிட மாட்டாரா என்று துடித்துக் கொண்டிருந்தாள்.

தன்நிலை மறந்து அழுபவளிடம் இக்கொடுஞ்சொற்களை எப்படி கூறுவேன். அமைதியாக நின்றேன். ஆனாலும், அவர்கள் விடுவதாக இல்லை. உடனே, வேறொருவர் மூலமாக அக்காவுக்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. அதுவரை அழுதவள், அமைதியாக அடங்கிப்போனாள். ஆனால், கண்களில் நீர் இன்னும் வற்றவில்லை.

ஒரு அத்தியாயமே வாழ்க்கையில் முடிந்துவிட்ட துயரத்தை எண்ணி வாய்விட்டுக் கூட அழுக ஒரு பெண்ணுக்கு உரிமையில்லை என எண்ணும் போது இதயம் குமுறியது. போனவரை நினைத்து புலம்பக் கூட அவளுக்கு அனுமதியில்லாத ஒரு சமூகக் கட்டமைப்பு. கணவன் இறந்தபின் ஒரு பெண்ணிடமிருந்து பறிபோவது பூவும், பொட்டும் மட்டும் அல்ல. அவளின் குரலும் பறிக்கப்பட்டு, நிரந்தர ஊமையாக்கப்படுகிறாள்.

அனைத்தும் முடிந்துவிட்டது. நான்கு நாட்களாக அக்காவும், குழந்தைகளும் உணவு, உறக்கமின்றி தவித்தார்கள். மாமா இருந்தபோது ‘இளவரசியாக பாவிக்கப்பட்ட அக்குழந்தைகள் இன்று கேட்பாரின்றி கிடந்தார்கள்’.

சடங்கு நாள் வந்தபோது, அனைவரது தட்டிலும் தவறாது ஒரு வெள்ளை சீலையும், இன்னும் பிற பொருட்களும் வைத்திருந்தனர். வரிசையாக வந்து சடங்கு செய்து, வெள்ளைப்புடவையை உடுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தினர். கூடவே, அடுக்கடுக்காக பல ஆணைகள் பிறப்பித்தனர்.

‘பூ – கூடாது, பொட்டு – கூடாது, கலர் சீலை உடுத்தக்கூடாது, சத்தமாகப் பேசக்கூடாது, காலையிலும், வெளியில் யாரும் செல்லும்போதும் எதிரினில் வரக்கூடாது, சிரிப்பு கூடவேக் கூடாது…’ என்று பட்டியல் நீண்டு கொண்டே போனது.

பெண்கள் முறை முடிந்தவுடன், சடங்கிற்காக தாய்மாமன் அங்கு வந்தார். பையிலிருந்து சில பொருட்களை தட்டில் எடுத்து வைத்து அக்காவிடம் நீட்டினார் பெரிய மீசைக்கார மாமா. கூட்டத்தில் சலசலப்பு அதிகமானது.

ஒரு பெரிய தட்டில் ரோஸ் கலர் பூ போட்ட சீலை, கைநிறைய அணிய கண்ணாடி வளையல்கள், கலர்கலராக ஸ்டிக்கர் பொட்டுக்கள், மல்லி, கனகாம்பரம் தலா ஒரு சரம், அப்புறம் ஒரு மடித்த காகிதம். இதைப் பார்த்தவுடன் அனைவரும் கூச்சலிட ஆரம்பித்தனர்.

“கூறுகெட்டபய, என்னென்ன வாங்கிறதுன்னு ஒரு அறிவு வேணாமா, இவன் இஷ்டத்துக்கு கண்ட குப்பைய வாங்கிட்டு வந்துருக்கான் பாரு, அவளுக்கு இப்ப என்ன கல்யாணமா நடக்க போகுது” என்று குமுறினார்கள்.

‘நிறுத்துங்க எல்லாரும்’ என்றார் தாய்மாமா உரத்த குரலில். ‘இனிமே இது மாதிரி தான் அவ உடுத்துவா, வெள்ளை சீலை உடுத்த மாட்டா’ என்றார் தீர்க்கமாக.

இத நான் ஒன்னும் புரட்சிக்காக பண்ணல, இன்னையோட அவ வாழ்க்கை ஒன்னும் முடியப்போறதில்லை. இனிமே வாழப்போற வாழ்க்கைதான் ஒரு நிஜமான அக்னிபரிட்சை. பத்து பேரு பாக்கிற மாதிரி வெள்ளை சீலையும், வெறும் நெத்தியா இருக்கிறதனால போனவர் திரும்பி வரப்போறதில்லை. மாறாக இந்த சமூகத்தோட பார்வை வேறமாறி இருக்கும். அவளுக்கு அது நிறைய தொல்லைகளை கொடுக்கும். இந்த பூவும், பொட்டும் அவளுக்கு ஒரு பாதுகாப்பாவும் பல சமயங்கள்ள தன்னை காத்துக்கிற ஆயுதமா கூட இருக்கும். நம்ம மனசாட்சிப்படி உண்மையா வாழ்ந்தாலே போதும். கைம்பெண்ணோட புற மாற்றங்களால ஒரு பயனும் வரப்போறதில்லை. மாறாக, இந்த சமூகம் தானும், எல்லாரும் போல சக மனுஷிதான்னு அவர்களை உணர வைக்கனும். அதுதான் நாம அவங்களுக்கு பண்ணுற பேருதவி.

யாரும் அவங்களை பார்த்து பரிதாபப்பட வேண்டாம். அதுக்கு பதிலா, அவங்க இயல்பா வாழ ஒத்துழைப்பு தந்தாலேபோதும் என்று முடித்தார். அனைவருமே அமைதியாயினர். தட்டிலிருந்த காகிதத்தை எடுத்து அக்காவிடம் நீட்டினார்.

ஆசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்விற்கான அறிவிப்பு அதில் இருந்தது. ‘போ மா. உன் வாழ்க்கையோட அடுத்த அத்தியாயத்தை நம்பிக்கையோட தொடங்கு. துணையில்லன்னு கவலைப்படாதம்மா, இந்த உலகத்துக்கு யாரும், யாரையும் கூட்டிட்டு வரலை, யாரையும் கூட்டிட்டு போகவும் முடியாது. நம்ம நேசிச்சவங்க பயணம் முடிஞ்ச பிறகும், நம்ம பயணம் தொடர்ந்து போகத்தான் வேணும். போம்மா இந்த உலகம் பெரிசு.. பறவை மாதிரி பறந்து போய்க்கிட்டே இரு..’ என்று நம்பிக்கையை விதைத்தார். அங்கிருந்த ஒருசிலரைத் தவிர அனைவருமே அதனை ஆமோதித்தனர்.

அக்காவிடம் ஒரு தெளிவு தெரிந்தது, அவளுக்கு பிடித்த ஊதா கலர் ஸ்டிக்கர் பொட்டினை நெற்றியில் பதித்தாள். ‘இனி நீ ஓர் வண்ணம் கொண்ட வெண்புறா அல்ல, வானையே நிரப்பும் வானவில்’ என்றார் எனதருமை பெரியமீசைக்கார மாமா.

நிமிர்ந்து நின்ற அக்கா என் கண்ணிற்கு புதியவளாகத் தெரிந்தாள்… அவளை நிமிர வைத்த மீசைக்கார மாமா என் மனம் கவர்ந்த பாரதியாக தெரிந்தார்…

கத்தியும், சுத்தியும் மட்டுமே ஆயுதமல்ல, பல நேரங்களில் பூவும், பொட்டும், புடவையும் கூட நம்மை காக்கும் ஆயுதங்களே!

பெண்ணே!!! தென்றலாக இருக்கும் நேரத்தில் தென்றலாக இரு. தேவையான இடங்களில் புயலாக மாறு…

நம்பிக்கையுடன்

-பொ.காயத்ரி

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...