ஒவ்வொரு நாளும்

பயண இலக்கியம்
5 out of 5 (9 रेटिंग्स)
कहानी को शेयर करें

ஒவ்வொரு நாளும்

************************

பேருந்தின் கடைசி படிகளின் விளிம்புகளில் ஒற்றைக் காலின் நுனியை மட்டும் ஊன்றியபடி சன்னல் கம்பிகளை இறுக்கிப் பிடித்த கைகள் தோள்பட்டை வரை சுருண்டு இழுக்கும் வலியோடு சிலர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

அவர்களைக் கீறிப் பிளந்து செல்லும் சிறு இடைவெளியை நிரப்பிய காற்றின் உதவியால் பேருந்தின் உள் பயணிகள் கொஞ்சம் பெருமூச்சிரைத்தபடி கம்பியை பிடித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் நெருக்கியபடி இருந்ததில் .

சிலரின் வியர்வை துர்நாற்றமும் சிலரின் மூச்சுக் காற்றின் வெப்பமும் பேருந்து நிறைத்து பரவிக் கிடந்தது.

அன்றாட வாழ்வின் ஒரு பகுதியென தினமும் இந்தப் பயணத்தை எதிர்கொள்ளும் மனிதர்கள்தான் அவர்கள்.

கல்லூரி செல்பவர்கள் பணிக்குச் செல்பவர்களென பல வகையான நெருக்கடிகளோடு இந்த வாழ்வை நகர்த்தி கொண்டிருந்தார்கள்.

பல பரிணாமங்களில் பயணிக்கும் அவர்களோடு தானும் ஒருவளாக பயணித்தாள் மேகா.

வயிறு பெருத்திருந்த அவளின் எதிர்கால உயிரை சுமந்தே தனியார் பள்ளிக்கு பணிக்கு செல்லும் நடுத்தர குடும்பத்தினவள் மேகா.

" மாசம் ஆறாச்சி இன்னும் ஏம்மா வேலைக்குப் போறே... வீட்டுல இருந்து நல்லா ஆகாரம் எடுத்திட்டு ஓய்வெடுத்தாதானே குழந்தை நல்லா ஆரோக்கியமா இருப்பா ... போதும்மா வேலைய விட்டுட்டு ஓய்வெடுனு " சொல்லும் உறவுகளிடம்

"இன்னும் கொஞ்ச நாள் தான் வேலைக்கு போக முடியும். குழந்தை பிறந்தா நிச்சயமா உடனே வேலைக்கு போக முடியாது .. அதனால குழந்தை பிறக்கிற வரை வேலைக்கு போறேனே ... ஏதாவது செலவுக்கு பயன்படுமே ... குழந்தை பிறக்குற நேரத்துல என்னோட கையிலயும் மிச்ச மீதி பணம் இருக்கும். " என்று சொல்லித் தன்னால் முடிந்தவரை பணிக்கு செல்வதில் உறுதியாக இருந்தாள் மேகா.

" எத்தனை தடவை சொன்னாலும் மேகாவின் பதில் எப்போதும் இது தான்".

அதனால் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் அவளின் விருப்பதை அனுமதித்தார் அவளது கணவர் .

என்னதான் சோர்வுகளை வெளி காட்டாமல் வேலைக்குச் சென்றாலும் சில சமயம் தன்னை மீறி அயர்ந்து விழும் அவள் கண்கள் ஓய்வைத் தேடியபடி தான் இருந்தது.

ஓர் உயிரைச் சுமந்து உழைப்பதிலும் ஒருவித அனுபவம் மிகையாகி தான் மிளிர்ந்தது மேகாவுக்கு.

அவளுக்கு மிகவும் பிடித்த வேலையாக இருந்தாலும் பள்ளிகளில் மாணவர்களின் இரைச்சலை அமர்த்துவதிலே அவளின் பாதி சக்தி போய்விடுகிறது.

அவளாக விரும்பி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான இளந்தளிர்களுக்கு வகுப்பெடுத்தாள்.

இன்னதென அறியாத மழலையின் குறும்புகளைக் கோபித்துக் கொள்வது கனவிலும் சாத்தியமாகாதது மேகாவுக்கு.

அத்தனை பிரியமானவள் . மனதுக்கு நெருக்கமான பணியைச் செய்யும் போது எல்லாமே இன்பம் தான்

இந்தப் பேருந்தின் இடையூறுகளும் அப்படி தான் இன்பமானது மேகாவுக்கு.

பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையேயான இந்த சிறிய பயணத்தைச் சில சமயம் வெறுத்ததுண்டு. அவள் சந்திக்கும் மனிதர்களைப் பொறுத்தே அந்நாளில் அது தீர்வாகும்.

பயணங்களை நேசிக்கும் மனமும் அலுத்துப்போகும் படி அத்தனை நெரிசல்களை வாரி இறைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பேருந்து பயணம்.

பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையேயான தூரம் பெருந்துயரக் கோடாகவும் சில நேரங்களில் பெரு மகிழ்ச்சியை தரும் மலைகளின் கொண்டை ஊசி வளைவாகவும் மாறி மாறி சுழலும்.

அப்படித் தான் இன்றும் மேகாவின் மனம் பயணிக்கத் தொடங்கியது.

அடர்ந்த புல்வெளிக்குள் நுழைந்து உடல் நெளிந்து உரசி நகரும் புழுவென பேருந்தின் உள் நுழைந்து தனக்கென ஒரு கம்பி பிடியைப் பிடித்து வயிற்றைத் தாங்கி நின்று கொண்டாள். கைப் பையில் சிறிய துண்டு இருக்கிறது. அதை கையிலேயே வைத்திருக்க வேண்டும் என நினைத்திருந்தாள். மறதியாய் உள்ளேயே மாட்டிக் கொண்டது. வழிந்தோடும் வியர்வையைத் துடைக்க இப்போதைக்கு சிரமம்தான் என்பது போல உடலோடு உருண்டோடும் துளி நீரை ஆடையோடு அணைத்துக்கொண்டாள்.

எப்போழுதுமே இடம் கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. முன்பெல்லாம் நின்றபடியே செல்வாள். ஈருயிரான பின்புதான் யாராவது ஒருவர் என்றாவது அவரின் கருணைப் பார்வையை மேகாவின் கரங்களில் நுழைத்து அமர இடம் கொடுப்பார்கள்.

அருகில் நின்றாலும் உறங்குவது போல சன்னல் கம்பிகளில் சாய்ந்து முகத்தை திருப்பிக் கொள்கிறவர்களும் உண்டு. இந்த நாடக முகங்கள் எல்லாம் பழகியதே மேகாவுக்கு.

ஆனால் சில சமயங்களில் இந்த மனிதர்கள் மேல் கோபமும் உண்டு. தனக்கு இடம் இல்லாதது காரணம் இல்லை.

தனக்கு இடம் கிடைத்த நேரங்களில் கூட கைக்குழந்தையோடு நுழையும் யாருக்காவது இடம் கொடுத்து எழுகையிலும் உடல் ஊனமுற்றோருக்காக எழுகையிலும் மேகாவின் வயிறு கடவுள் தாங்கி நிற்பதாக பெருமை அவளுக்கு.

தளர்ந்த விரல்களால் பேருந்தின் ஏதோவொரு மூலையை பிடித்து உறைந்து நிற்கும் முதியவர்களை அலட்சியம் செய்யாது இருப்பவர்கள் பற்றி கவலை கொண்டதில்லை. பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெரியவர்களையே யாரும் கண்டுகொள்வதில்லை என்கிற போது சற்று நேரம் பயணிக்கும் பெரியவர்களுக்கா கருணை கொள்வார்கள் இந்த நல்ல மனிதர்கள்.

யாருக்கும் அகப்படாத இடைவெளியை ஆக்கிரமித்து அகன்று நின்று பயணிக்கும் சிலரைக் கூட கடிந்து கொள்ள முடியாமல் நகர்கிறாள் மேகா.

" கொஞ்சம் உள்ளே தள்ளி நில்லுங்க படியில நிக்கிறவங்க மேலே வரட்டும் " என்று சகபயணிகளிடம் கருணைக் கேட்கும் மேகாவிடம்

" இதுக்கு மேல எங்க போறது யார் மேலயாவது இடிச்சிகிட்டு நாங்க வம்புக்கு நிக்கனுமா , அடுத்த வண்டியில வர வேண்டியது தானே அவ்வளவு அவசரமா போகனுமுனா இப்படி தான் போகனும் , நீங்க வேணா இடிச்சி கடிச்சி கிட்டு நெரிசலுல நில்லுங்க , மத்தவங்கள எதுவும் சொல்ல வேணடாமென்று"பதில் சொல்லும் பயணிகளின் ஓயாத முணுமுணுப்பை தினமும் குப்பையெனச் சேகரித்து கொட்டுவாள்.

மனிதர்கள் தான் எத்தனை விதம். சில நேரம் கருணையின் உருவமாக சில நேரம் கோரத்தின் பற்களை மாறி மாறி பரிணமிக்கும் புதுமையை இந்த பயணம் காட்டிவிடுகிறது. மற்ற ஆசிரியைகள் போல என்றாவது ஒரு இரு சக்கர வாகனத்தை வாங்கி விட்டால் இப்படியான இடர்களில் சிக்கிக் கொள்ள வேண்டியதில்லை . என்ன செய்வது வரவும் செலவும் சரியாக உள்ளது. தனியார் பள்ளிகளில் வேலைகள் தான் அதிகம். உழைப்பை கொடுக்கும் அளவு ஊதியம் என்பது கனவு தான் என்று மனதில் அசைபோடும் மேகாவின் எண்ணங்கள் இன்னும் இன்னுமென புதிய மனிதர்களின் பக்கங்களைப் புரட்டி படித்து கொண்டு தான் இருக்கிறது ‌.

சாலையின் வேகத்தடை காரணமாக தனது கையைப் பிடித்து கொள்ளும் யாரோ ஒரு குழந்தையின் புதிய உணர்வை இன்றைய நாளின் வரமென அனுபவித்தாள். என்றாவத சன்னலோரம் அமர்கையில் தெருவோரம் டாட்டா காட்டி மகிழும் குழந்தைகளை அப்படியே அள்ளி கொஞ்சும் விழிகளால் அணைத்துக்கொள்வாள்.

யுகமென கடப்பதும் மின்னலென மறைவதும் இந்த பயணம் நீண்டு கிடப்பதும் நொடியில் மறைவதுமான அதிசயத்தை அணைத்துக் கொண்டாள் மேகா.

எப்போதாவது உடல் உரசி பயணித்து உயிர் குடிப்பது போல பார்வையிடும் சில மிருகங்களின் தொந்தரவால் உடல் குலையும் போது வெடித்து பிளக்கும் கோபங்களை அழுகையின் மூட்டையென முழுவதும் நிறைத்து சாவதெல்லாம் மிகவும் எளிதாகி போனது.

உடல் உரசுவதில் கரையவா போகிறோம். மனம் எப்படியும் தூய்மையாகத் தானே இருக்கிறது. கற்பென்று வைத்த மூடர்களைப் பற்றி எதற்கு கவலைப்பட வேண்டுமென நினைத்துக் கொள்வாள்.

ஆணின் உடலுக்கு மட்டும் ஏதுமில்லாமல் போனது தான் இயற்கை என்றாகிவிட்டது என்று பலவாறு தன்னைத் தேற்றிக் கொண்டாலும் ஏனோ மேகாவின் உடல் நடுங்குவதைச் சமூகம் கட்டமைத்து கொள்கிறது.

இந்தச் சமுதாயம் இப்படிதான் என்பது பழகிப்போனதே. இன்று அது போன்ற நபர்களை எதிர்கொள்ளாதது பெரும் வரம் தான் என்று நிம்மதி கொண்டாள்.

அடிவயிற்றை தடவி தாங்கி பிடித்தபடியே தனக்கான பேருந்து நிறுத்தம் வரப் போகிறது என்பதால் இறங்குவதற்கு ஆயத்தமானாள்.

பெரும் விடுதலையை அடைவது போல தோன்றியது .

இதே பிம்பங்களை மாலை வீடு திரும்பும் போதும் எதிர் கொள்ளத் தான் வேண்டுமென அடிமனதைத் தயார் செய்து கொண்டாள். மேகாவின் நிறுத்தத்தில்

பேருந்து நின்றது.

கூட்டங்களைக் கடந்து இறங்குகையில் நிம்மதி பெருமூச்சை அடைந்த மேகாவின் இதழ்கள் நேற்றைக்கு இன்று பரவாயில்லை ஒவ்வொரு நாளும் இப்படி தான் என்று ஒரு புன்னகை பூத்தது.

நிழலி

k.tamilbharathi@gmail.com

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...