JUNE 10th - JULY 10th
அகரம் காலனி அடிமை
-கலையமுதன்
விடியும்பொழுதே தன்னுடலில் வழக்கத்தைவிட வித்தியாசத்தை உணர்ந்தார் ஜனநாதன். இன்று ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று அவரது உள்ளுணர்வு சொல்லியது.. அதற்கேற்றாற்போல் அவரால் எழ முடியவில்லை. பாழாய்ப்போன இடுப்புவலி வெட்டி இழுத்தது.
ஐம்பது வயதில் ரிட்டயர்டு ஆயிடணும்னு நெனச்சி எழுபது வயது வரைக்கும் போராடிட்டு இருக்கிற வாழ்க்கையா போயிடிச்சு அவருக்கு. இப்பலாம் முன்னமாதிரி சைக்கிள் விட முடியறதில்லை. மூணு மாடி ஏறி இறங்க முடியறதில்லை. தொடர்ந்தாற்போல கொஞ்ச தூரம் நடக்கமுடியறதில்ல.. அவரைப் பொறுத்தவரை அகரம் காலனி இருநூறு நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் சொர்க்க பூமி. . அடைக்கலம் தேடி அங்கு வந்தபிறகுதான் அவருக்கு ஒரு மன நிறைவு கிடைத்தது. இத்தனைக்கும் அவர் ஒரு அனாதையில்லை.
"ஜனநாதா... ஜனநாதா..." என்று முனகினார். அதுதான் அவரது பழக்கம்.
எல்லோரும் கஷ்ட காலத்தில் அவரவர் இஷ்ட தெய்வங்களை கூப்பிடும்போது இவர் மட்டும் சுகதுக்கம் இரண்டிற்குமே தன்னைத்தானே அழைத்துக்கொள்வார். அதில் அவருக்கு அப்படி ஒரு பிரியம் மனநிறைவு.
பார்ப்பவர்களின் கேள்விக்கு “கண்ணுக்கு தெரியாதவர்களைவிட என்னை நான் நம்புகிறேன். ' என பெருமிதமாகச் சொல்வதுண்டு. ஒரு யோகியை போல் வாழ்தலைப் பற்றிய புரிதல் அவருக்கிருப்பதாக அவருடன் பழகியவர்கள் சொல்வதுண்டு.
"இது உத்தமமான வேல. யாருக்கும் பொல்லாப்பு இல்ல"- என்று அவரது பால்யகால சிநேகிதன் மாணிக்கம் அடிக்கடி சொல்வதுண்டு.
இந்த அகரம் காலனிக்கு வந்ததுகூட நட்பு நாடியே. வாட்ச்மேன் வேலை பார்க்கும் மாணிக்கத்தின் தயவால்தான் காலனி வாசம். மன ரீதியாகவும் ஜனநாதனின் அலைவரிசைக்கு ஒத்துப்போகிற ஒரே ஆள் மாணிக்கம் மட்டும்தான். அனைத்து விஷயங்களையும் அவனிடம் மட்டும்தான் பகிர்ந்துகொள்வார்.
அகரம் காலனிக்கு வருவதற்கு முன் ஜனநாதனுக்கு இப்படி வலி வருவதில்லை. லேசான மின்னல்வெட்டு போல ஒரு கணம் வரும் அவ்வளவுதான். அதுவும் குனிந்து நிமிர்கையில் அந்த மின்னல் வெட்டு கழுத்திலிருந்து கால்வரை ஒருகணம் ஒரு வெட்டு வெட்டும்.. ஆனால் இந்த இரண்டு வருடத்தில் உயிர்போகும் வதை. மருத்துவரை பார்க்கும் எண்ணம் அவருக்கு எப்போதுமே இருந்ததில்லை. அவரது நீண்ட நாள் ஆசையேகூட, தூங்கிக்கொண்டிருக்கும்போதே உயிர் பிரிந்துவிட வேண்டும் என்பதே. ஒவ்வொரு முறையும் இந்த வலி வந்து அந்த ஆசையைக் கெடுத்துவிடுமோ என்று பயம் வந்துவிடும். இறப்பதில் கூட அமைதியாக இறக்கவே எண்ணினார். வேதனையோடோ ஆர்ப்பாட்டமாகவோ செத்துப்போவதில் அவருக்கு உடன்பாடில்லை. ஆனால் உடல் இன்று இப்படி படுத்தி எடுக்கிறதே. எழக்கூட முடியவில்லை.
‘எங்கே போனான் இந்த மாணிக்கம் பயல் ... வலி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறுகிறதே ...’
“ஜனநாதா பொறுத்துக்கோ ஜனநாதா தாங்கிக்கோ" - முனகல் அதிகமானது.
தோள்பட்டை வரை வலி ஊடுருவி இடது மேற்கை வரை வலி வந்து நிலை கொண்டுள்ளதை அவர் உணர்ந்தார்.
காலனி கேட் அருகே இருந்த கொன்றை மரத்திலிருந்து காகங்கள் கரையும் சப்தம் கேட்டது. அது அவருக்கான தினசரி அலாரம். காகம் கரைந்தால் எதிரே ஊமச்சி பாட்டிக் கடை திறந்துவிட்டாள் என்று அர்த்தம். இத்தனைக்கும் மணி மணியாகப் பேசுகிறவள் அந்தப் பாட்டி. எப்படி அவளுக்கு ஊமச்சி பாட்டி என்றும் , அவளது கடைக்கு ஊமச்சி கடை என்றும் பெயர் வந்திருக்குமென்று ஜனநாதனுக்கு விளங்கவில்லை.
கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாகச் சாலையோர ஓலைக்குடிசைதான் அவளது வசிப்பிடம் என்பதறிந்து வியந்துதான் போனார் ஜனநாதன். கடைதான் ஓலைக்குடிசையே தவிர அது அந்த ஊருக்கே பசி போக்கும் அமுதசுரபி. ஊர் மக்களுக்கும் ,வெளியூர்ப் பயணிகளுக்கும், பள்ளி பிள்ளைகளுக்கும் மிகக் குறைந்த விலையில் இட்லி தோசை அவித்து தருபவள். சில பல வேளைகளில் காசில்லாதோருக்கு இலவச சேவையும் நடக்கும்.அவள் வைக்கும் சாம்பாரின் மணம் அந்த காலனி எல்லை வரை மணக்கும். ஊமச்சி பாட்டியின் கைப்பக்குவத்திற்கு ஜனநாதனும் அடிமை.
ஊமச்சி பாட்டியின் சேவையைப் பார்த்தபிறகுதான் தானும் எதாவது உபயோகமாய் செய்யவேண்டுமென்கிற ஆவல் மேலோங்கியது. என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு அவரது சகா மாணிக்கம்தான் அந்த யோசனையை முன்வைத்தார். அகரம் காலனியில் நிறைய குழந்தைகள் மதிய உணவு எடுத்துச்செல்ல வசதியின்றி பட்டினி கிடக்கிறார்கள். சிலருக்கு காலை உணவே கேள்விக்குறியாக இருக்கிறது என்ற தகவலை சொல்லி அவர்களுக்கு ஏதாவது செய்யலாமே? என கருத்தை முன்வைத்தார்.
அப்படித் துவங்கியதுதான் இந்தச் சிற்றுண்டி தானம் திட்டம். தினசரி பத்துப் பனிரெண்டு பள்ளி பிள்ளைகளுக்காவது இட்லி தோசை அடைத்துக் கொடுத்துவிடுவார். ஊமச்சி பாட்டியிடம் வியாபாரம் செய்த மாதிரியும் ஆச்க பிள்ளைகளின் பசியைப் போக்கிய மாதிரியும் ஆச்க. சரியான இடத்திற்குத்தான் வந்து சேர்ந்திருக்கிறேன். இதுதான் நான் தேடிய இடமா ஜனநாதா? என்று கேட்டுக்கொள்வார். இதுதான், இதேதான் ஜனநாதா என்று பதிலும் கூறிக்கொள்வார்.
எந்தெந்த வீடுகளில் பாத்திரம் உருள்கிற சத்தம் கேட்கிறதோ எந்த வீட்டில் கூச்சல் குழப்பம் நிலவுகிறதோ அந்தந்த வீட்டு பிள்ளைகள், மாதக்கடைசியை சந்திக்கும் சம்பளக்காரர்களின் பிள்ளைகள் என குறிப்பறிந்து வாங்கிக் கொடுத்தார். சில நாட்களிலேயே பிள்ளைகள் உரிமையோடு கேட்க ஆரம்பித்தார்கள். சில வீடுகளில் பெற்றோர்களும் அவரிடமோ ஊமச்சி பாட்டியிடமோ வாங்கிக்கொள்ளச் சொல்லி உரிமையோடு பணித்தனர். மெல்ல மெல்ல அவரின் ஜனநாதன் என்ற பெயர் மறந்து காலனி தாத்தா என்ற அடைமொழியோடு வலம்வரத் தொடங்கினார். அங்குள்ள காலனி வாசிகள் அனைவருக்கும் அவர் காலனி தாத்தாவானார். அது அவருக்குப் பிடித்திருந்தது.
உரிமையோடு வந்து வாங்கிச் செல்லும் குழந்தைகளில் மதனும் ஒருவன். மதனுக்கு செய்யும்போது மட்டும் வாஞ்சையுடனும் தனிக்கவனத்துடனும் வாங்கித் தருவார். மதன் தன் பேரனை ஒத்திருந்தான். அவனது நளினம், துறுதுறுப்பு, கொடுக்கிற மரியாதை அனைத்தும் அவரது பேரனை நினைவு படுத்தியது. எனினும் சிறு வயதில் தன் மகனும் இப்படித்தான் இருந்தான் என்று நினைத்து மகிழாமலில்லை.. வாழும் நாட்களில் அவருக்கு சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போக மதனும் ஒரு காரணம். அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். ஒரு இனம்புரியாத ஈர்ப்பிற்குள் சிக்கித்தான் போனார். அவர் அந்த அகரம் காலனிக்கு அடிமையாகிப்போக இன்னொரு சுவாரஸ்யமும் அங்கே அரங்கேறத்தான் செய்தது.
ஆம்! அகரம் காலனி மக்கள் நல சங்கத்தின் செயலாளர் பொன்னம்பலத்தின் மனைவி ஜெயா. சாயலில் அவள் முத்ராவை ஒத்திருந்தாள் . தனது பராமரிப்பில் வளர்ந்த முத்ராவை இல்லையில்லை அவளது சாயலில் இருக்கும் ஒருத்தியை தினசரி பார்க்கலாம், பேசலாம். கவலைகள் மறக்க கொஞ்சம் கதைக்கலாம். அவளுக்கு செய்ய மறந்ததை இவளுக்கு செய்து அழகு பார்க்கலாம். அவளிடம் கேட்காத மன்னிப்பை இவளிடம் கேட்கலாம். நட்பு பாராட்டலாம். தாய்மை போற்றலாம்.
எல்லாம் சரியாகத்தான் நடந்தது. அனால் ஜெயாவின் கணவன் பொன்னம்பலத்திற்குத்தான் அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. சந்தேகக்காரன். அந்தப் புது உறவால் தன் உறவு அறுந்துவிடுமோ என்று அஞ்சுகிறவன். எப்போதும் ஜனநாதனை வெறுப்புடனே பார்க்கிறவன். அவரைப்பற்றிய புனை கதைகளை அளவில்லாமல் அளந்துவிடுபவன். அது எதற்கும் அவர் செவி சாய்த்துக்கொள்வதேயில்லை. அவனது துரதிர்ஷ்டம் அவரிடமே உதவி வேண்டி கையேந்திய சூழ்நிலையும் வந்ததுண்டு.
மாணிக்கம்தான் தாள மாட்டாமல் ஜனநாதனிடம் கோபிப்பதுண்டு.
"அவனை இப்படியே விட்டின்னா சீக்கிரமே அவன் உன்ன இங்கிருந்து காலி பண்ணிடுவான் பாத்துக்கோ.."
"விடு மாணிக்கம் சின்ன பையன்தானே "
"உனக்கெல்லாம் கோபமே வராதா ?"-ஆதங்கத்தில் கேட்டான் மாணிக்கம்.
வரும். வந்தா பிரச்சினையாகும். ஆனா கூட்டம் கூடும். கூட்டத்துல மொதல்ல குரல் கொடுக்கிறான் பாரு அவன் பக்கம்தான் பத்துப் பேரும் பேசுவாங்க. ஒருவேளை நமக்கு ஆகாதவன் கூட்டத்துல மொதல்ல வாய தொறந்துட்டான்னு வையி பத்துப்பேரோட வாயிலையும் நாம கெட்டவங்கதான். அதுக்கு இந்த ஒருத்தன்கிட்ட மட்டும் கெட்டவனா இருக்கிறதுல தப்பில்லையே/"பொறுமையாக விளக்கமளித்தார் ஜனநாதன்.
'நல்லவன் ஒருத்தன் உனக்காக குரல் கொடுக்க மாட்டான்னு சொல்றியா?'
'அமைதியா வேடிக்கைப் பார்த்துட்டு நகர்ந்திடறான்னுதான் கவலையே'.
'எப்படியோ கெடந்து சாவு' - விருட்டென்று வெளிக்கிளம்பினான் மாணிக்கம்.
சாவை நோக்கி தான் பயணித்துக்கொண்டிருப்பதை முற்றிலும் உணர்ந்தார். ஊமச்சி கடையில் ஜன நடமாட்டம் துவங்கிவிட்டது. கொத்தனார், சித்தாள்களின் பேச்சரவம் மங்கலாக அவரது காதுகளில் வந்து விழுந்தன. ஒன்றிரண்டு பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பி வந்துகொண்டிருந்தனர். வேலைக்கு செல்பவர்களும் சிலர் வீட்டில் மீதியான பழஞ்சொற்றை கொண்டுவந்து வாட்ச்மேன் அறையின் வைத்துவிட்டு கிளம்பினர். ஊர்ப்பிள்ளைகளுக்கே சூடாக உணவு வாங்கி கொடுக்கும் அவருக்கு ஊர் மக்கள் கொடுப்பது பழங்கஞ்சிதான். அதை அவர் விரும்பித்தான் ஏற்றுக்கொள்வார்.
அன்றைக்கு சூழ்நிலையோ வேறு மாதிரி பயணித்துக்கொண்டிருந்தது. அவருக்கு நாக்கு வறண்டது. யாராவது தண்ணீர் ஊற்றினால் தேவலாம் என்று நினைத்தார். இயல்பாகவே அவரது கண்கள் மதனை தேடியது. ஏமாற்றத்தை சந்தித்ததும் அடுத்தது ஜெயாவைத் தேடியது. ம்கூம். வெறுமைதான். இந்த நேரத்திற்கு மதன் கிளம்பி வருவதற்கே வாய்ப்புகள் அதிகம். நம்பிக்கையோடு அந்தத் தெருவைப் பார்த்தார்.
வீண்போகவில்லை . தூரத்தில் மங்கலாகத் தெரிவது மதன்தானே... அவனது கையில் என்ன? அடக்கடவுளே... தூக்குச் சட்டியல்லவா அது? அதுவும் அதை ஆட்டிக் கொண்டல்லவா வருகிறான். அப்படியானால் அது காலிப் பாத்திரம். ஜனநாதா... ஐயோ ஜனநாதா...
அவருக்கு குப்பென்று வியர்த்தது. கண்கள் மேலே செருகியது. அப்போதுதான் நினைவடுக்கின் கடைசிப் புள்ளியில் மங்கலாக அவரது மகன், மருமகள், பேரன் கடந்த காலம் எல்லாம் வந்துபோனது.
ஓய்வறியாமல் ஓடியாடி சம்பாதித்தார் ஜனநாதன். சொந்த பந்தங்களுக்கோ, நிலபுலன்களுக்கோ, பணப்புழக்கத்திற்கோ குடும்ப சந்தோசத்திற்கோ எந்த குறையுமில்லை. அவரை நன்கு புரிந்துவைத்திருந்த துணைவியாக மலர்விழி அமைந்தாள். அவரது சிந்தனைக்கு, சுதந்திரத்திற்கு எந்த தடையும் சொல்லாத ஒரு தோழி. அப்படித்தான் அவளை நினைத்தார். அவர்களுக்கு ஒரே மகன் அரவிந்த். அத்தனை அறிவு, அவ்வளவு பாசம்.
ஜனநாதன் வாழ்வில் அனைத்தும் கொடுப்பினைதான் என பெருமிதம் கொண்டு வாழ்க்கையைக் கொண்டாடியபோது மகன் பள்ளியிறுதி வகுப்பை எட்டியிருந்தான். அவரது பூரிப்பா அல்லது மற்றவர்களின் பொறாமையா அல்லது சுகதுக்கங்களில் கடவுளை அழைக்காமல் தன்னைத்தானே அழைத்துக்கொள்கிறானே இந்த கர்வி என்று அவர் வணங்காத தெய்வங்களின் சூழ்ச்சியா என தெரியவில்லை... ஒரு கோர விபத்தில் அகாலம் அரவணைத்துக் கொண்டது மலர்விழியை.
அந்த சூன்யத்திலிருந்து விடுபட ஜனநாதனுக்கு வெகு நாட்களாயிற்று. மகனுக்காக மறுமணம் செய்துகொள்ள உறவினர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் மலர்விழி இடத்தில் வேறொருத்தியை வைத்து பார்க்க அவருக்கு தைரியம் இருந்ததில்லை.
தனது சுதந்திரம் பறிபோய்விடக்கூடாதென்றே அப்பா மறுமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்பதை புரிந்துகொண்ட அரவிந்துக்கு அப்பா மேல் அளவுகடந்த அன்பும் நம்பிக்கையும் ஏற்பட்டது. அவனது மேல்நிலைப் பருவத்தின்போது அவர்கள் வீட்டிற்கு தனது பத்து வயது மகளுடன் அடைக்கலம் தேடி வந்தாள் கற்பகம். ஜனநாதனுக்கு தூரத்து உறவு. இளம் விதவை. போக்கிடம் இல்லாமல் இருந்தவளை தனது மாமனாரின் வற்புறுத்துதலுக்காக அடைக்கலம் கொடுத்தார் ஜனநாதன். அதுவும் தன பிள்ளையை கவனித்துக் கொள்ளவேண்டியே.
கற்பகத்தின் மகள் முத்ரா படு சுட்டி. படிப்பில் கெட்டிக்காரி. ஆனால் அவளைப் படிக்க வைக்க கற்பகம் விரும்பவில்லை. இன்னொருவர் தயவில் வாழவேண்டிய சூழலாலும் தன்னால் யாரும் அதிக துன்பத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவும் அந்த முடிவை எடுத்திருந்தாள். ஆனால் ஜனநாதன் பிடிவாதமாக அவளை ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தார்.
கற்பகம் வந்தபிறகு மகனுக்கு ஒரு பாதுகாப்பான சூழல் உருவானதை உணர்ந்தார். அதற்குப்பிறகு தொழில் கவனத்தை செலுத்தினார். மலர்விழி உடனிருந்து தன்னை இயக்குவதாக மனப்பூர்வமாக உணர்ந்தார். அதனாலே கடுமையாக உழைத்தார். அதனால் மேலும் மேலும் உயர்ந்தார் வாழ்க்கையிலும் வசதியிலும். மகன் அரவிந்தும் முத்ராவும் கோல்டுக்கு மெடலுடன் கல்லூரி படிப்பை முடித்திருந்தனர். மகனுக்கு பெங்களூருவில் உயர் பதவி கிடைத்து சென்றான். கற்பகமோ தன் மகளுக்கு திருமணம் செய்துவைக்க முனைப்பு காட்டினாள். அதோடு தன் சொந்த ஊருக்கு செல்லவும் தீர்மானித்தாள். முத்ராவுக்கு சீர் வரிசையும், கற்பகத்திற்கு பண ஒப்படைப்பும் செய்து அனுப்பிவைத்தார்.
கார், பங்களா என வசதியாக வாழ்ந்தாலும் தனிமையில் வாழ ஜனநாதன் விரும்பவில்லை. இளவயதில் அவர் நினைத்ததுபோல் கிட்டத்தட்ட தனது ஐம்பதாவது வயதிலேயே தேவையானதை ஈட்டி ஓய்வை அனுபவிக்க தயார்தான். ஆனால் இந்த தனிமையை என்ன செய்வது? அவர் செய்து முடிக்க வேண்டிய கடமை இன்னும் ஒன்று பாக்கி உள்ளது. மகனுக்கு ஒரு துணையை அமைத்துக் கொடுத்தால் போதும்.
மகன் அப்பாவிற்குச் சிரமம் எதுவும் வைக்கவில்லை. தன்னுடன் பணிபுரியும் மேகலாவை இதுதான் தன் துணையென்று அப்பா முன் நிறுத்தினான். அவருக்கு பூரண சந்தோசம், மன திருப்தி. அரவிந்தும் மேகலாவும் அத்தனை பொருத்தம். இப்போது வாழ்க்கையில் அவருக்கு இன்னும் சுவாரஸ்யம் கூடியதாய் தோன்றியது. மகன் ஆளாகி மண வாழ்க்கைக்கு தயாராகிவிடடான் என்பது அவரை தாய்மையை உணரச் செய்தது. அவரது சந்தோசம் நிலைப்பதற்குள் மகன் தன் துணையுடன் பெங்களூரு பறந்துவிட்டான். ஜனநாதன் மறுபடியும் தனிமைக்குள் தள்ளப்பட்டார்.
இனி யாருக்காக உழைக்க வேண்டும்? சொத்து பணம் சேர்த்து என்ன பிரயோசனம்? என அப்போதே நினைக்க ஆரம்பித்துவிட்டார். மகன் ஆளாகிவிட்டான். தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டுவிடடான். எல்லாவற்றிற்கும் மேலாக கை நிறைய சம்பாதிக்கிறான். பத்தாததுக்கு அவனது மனைவியும் சம்பாதிக்கிறாள். என் தயவு இனி அவர்களுக்கு தேவையில்லை. உழைத்தது போதும். இனி நமக்கான சுதந்திர வாழ்க்கையை நாம் வாழலாம், உழைத்துக் களைத்த உடம்புக்கு ஓய்வு கொடுக்கலாம் என்றெண்ணினார். அவரது அசையும், அசையா சொத்துக்களை மகன் பெயருக்கு உயில் எழுதும் பணியை மேற்கொண்டார்.
எப்படித்தான் ஓடியது பத்து வருடங்கள் என்பது ஜனநாதனுக்கு புரியாத புதிராகவே இருந்தது. எத்தனையோ வற்புறுத்தல்களை எல்லாம் புறந்தள்ளி அவனது அலுவல்களை காரணம் சொல்லி வராமலே இருந்த மகன் அரவிந்த் அவருக்கு உடல்நலக்குறைவு என்று கேள்விப்பட்டு வந்து சேர்ந்தான் குடும்பத்துடன். இப்போது குடும்பமென்றால் எட்டு வயது பேரனையும் சேர்த்து.. அரவிந்தை பிரதியெடுத்து தந்திருக்கிறாள் மேகலா. தன் பேரனை பார்த்ததும் ஜனநாதனின் நோயெல்லாம் பறந்தே போனது.
"பேர் என்னப்பா?" வாஞ்சையுடன் இழுத்து அணைத்து மடியிலமர்த்தி கேட்டார் ஜனநாதன்.
" ஜனா!" என்ற பேரனை சடுதியில் உச்சி முகர்ந்தார். உடனே மகனைப் பார்த்தார். அவன் ஆமோதிப்பதுபோல் கண்களை மூடித்திறந்தான். அவருக்கு உடலெல்லாம் சிலிர்த்தது. அத்தனை உவகையும் பெருமையும் ஒருங்கே அவரை தழுவியது. தன் பிள்ளை தன் மீது வைத்திருக்கும் மாறாப்பற்றை எண்ணி கண்கலங்கினார்.
தனது மனைவியின் நினைவு நாளன்று போட்டோ முன் வைத்து பத்திரங்களை மகனிடம் ஒப்படைத்தார் ஜனநாதன்,
"என்னப்பா இதெல்லாம்?"- குழப்பமாய் கேட்டான் அரவிந்த்.
"என்னோட சொத்து. இதுல என்னோட உழைப்பு மட்டுமில்ல உங்க அம்மாவோடதும்தான் இருக்கு."
இப்ப என்ன அவசரம்னுதான்...?
"இது எப்பவோ செஞ்சாச்சு. நீ வரதுக்குத்தான் லேட்"
'இப்ப எனக்கு இது தேவைப் படல அதனாலதான் " அவன் முடிக்குமுன் இடைமறித்தார்.
"உனக்கு தேவைப்படும்போது நான் இல்லாமல்கூட இருக்கலாம். அப்ப உன்ன சுத்தல்ல விட்ருவானுங்க."
அதுக்குன்னு எல்லாத்தையுமேவா?
"எனக்குன்னு எதுவுமே வேணாம்டா நான் தேசாந்திரியா போறேன். எனக்கு பிடிச்சமாதிரி வாழணும்னு நெனைக்கிறேன் அவ்வளவுதான்."
அதற்குமேல் இருவரும் பேசிக்கொள்ளவேயில்லை.
அன்றிரவு பேரன் ஜனாவுடன் படுத்துறங்கினார். தான் பிறவிப்பயன் அடைந்ததாய் உணர்ந்தார். மலர்விழி இருந்திருந்தால் அப்படி கொண்டாடி தீர்த்திருப்பாள்.
மறுநாள் அதிகாலையில் பக்கத்துக்கு அறையில் மகனும் மருமகளும் பேசிக்கொள்வது ஜனநாதனின் காதுகளில் விழுந்தது.
"உங்களுக்கு நல்லாத் தெரியுமா உங்கப்பா எல்லா சொத்துக்களையும் உங்க பேர்ல எழுதி வெச்சிட்டார்னு?"- மேகலா சந்தேகத்துடன் கேட்பது அரவிந்துக்கு புரிகிறது.
“சேச்சே... எங்கப்பாவ எப்பவும் தப்பா நினைக்க முடியாது. அவர் சராசரி மனுஷர் கெடையாது."
மவுனமானாள் மேகலா.
"அதுவுமில்லாம மறைக்கணுமின்னு அவருக்கு தேவை என்ன இருக்கப் போகிறது?"
“இல்ல... தன் பெண் குழந்தையோட ஒரு அம்மா வந்து அடைக்கலமா தங்கியிருந்து உங்களை வளத்தாங்கனு சொல்வீங்களே அது உண்மையிலேயே யாரோ ஒருத்தியா? அல்லது உங்கப்பாவோட..?
பக்கத்துக்கு அறையில் கேட்டுக்கொண்டிருந்த ஜனநாதன் "ஜனநாதா..."என்றபடி காதுகளைப் பொத்திக்கொண்டார்.
"சீச்சீ... அந்தமாதிரியான ஆள் இல்ல எங்கப்பா. எங்கம்மாவைத் தாண்டி யாரையும் ஏறெடுத்து பார்த்தது இல்ல. அவ்வளவு நேர்மையானவர், உண்மையானவர். எத்தனையோ பேர் சொல்லியும் அவர் மறுமணத்துக்கு சம்மதிக்கல.. அந்தம்மா உண்மையிலேயே அடைக்கலம் தேடி வந்தாங்க. எங்களை வளர்த்தாங்க. நாங்க ஆளானதும் கெளம்பிப் போயிட்டாங்க. ஒருவேளை அந்தம்மா அப்படி எதிர்பார்த்திருக்கலாம். ஆனா இவர் அந்த ரகம் இல்ல. இது நடந்து ரொம்ப நாளாச்சி. இப்ப அந்தம்மா எங்க எப்படி இருக்காங்கன்னு கூட தெரியல."
"ஒருவேளை அப்படி நடந்திருந்தா?"
"சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் எங்கப்பா. இதோட இந்த பேச்சை நிறுத்திக்கிறது நல்லது மேகலா" கொஞ்சம் கடுமையாகச் சொன்னான் அரவிந்த்.
மகனது பேச்சும் தன்மீது வைத்திருக்கும் அளவுகடந்த நம்பிக்கையும் அவருக்கு ஆறுதலாயிருந்தது. இருந்தாலும் அவருக்குள் ஒரு கவலை தோன்றியதை மறுக்கவும் முடியாது.
பொதுவாக சபையில் இப்படி யாராவது ஒருவர் எதிர்மறையான கருத்துக்களை தூவிவிட்டால் கேட்பவர் மனதிலும் அதுபோன்ற சிந்தனையே ஓடும். ஒருவேளை அதுபோல இருக்குமோ? நெருப்பில்லாமல் புகையாதே என்ற சந்தேகம் எங்காவது ஒரு மூலையில் தொற்றிக்கொள்ளும்.
சபையில் நல்ல பேச்சுக்களை துவக்குவது சாலச் சிறந்தது. தன் மகன் தன்னைப் பற்றி உயர்வாகத்தான் நினைக்கிறான். தவறாக நினைத்தாலும் அதுபற்றி கவலையில்லை. அவருக்கு. அதற்குமேல் அவருக்கு அங்கிருக்க எண்ணமில்லை. தூங்கிக்கொண்டிருந்த ஜனாவின் நெற்றியில் அழுந்த ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு கிளம்பினார்.
அவரது நினைவில் வாட்ச்மேன் மாணிக்கம் தோன்றினார்.
***** ***** ****
தூக்குச் சட்டியுடன் மதன் காலனி தாத்தாவை நெருங்கும்போது அவரது கைகால்கள் வெட்டி இழுப்பதைப் பார்த்தான். அவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அவனுக்குத் தோன்றியது.
"தாத்தா...காலனி தாத்தா... தாத்தா.." என்று கூப்பாடு போட்டான்.
அவனது சத்தம் கேட்டு முதல் ஆளாக பொன்னம்பலம் ஓடிவந்தார். அடுத்தடுத்து அக்கம்பக்கமிருந்தவர்கள் எல்லோருமே வந்தார்கள். ஊமச்சி பாட்டியும் ஓடிவந்தார்கள்.
ஜனநாதனின் கண்கள் எதற்காகவோ காத்திருந்ததுபோல் தெரிந்தது. உயிர் தண்ணீருக்காகவா? அல்லது அந்த சபையில் வந்து விழும் முதல் வார்த்தைக்காகவா?
"அப்பாடா கிழம் போயிடுச்சி. இந்த அகரம் காலனிக்கு ஒரு விடிவுகாலம் பொறந்துடுச்சி."- என்று ஆரம்பித்தான் பொன்னம்பலம்.
அவனது வார்த்தைகள் மதனுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.
கூடியிருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தார்கள்.
"பின்ன என்னயா இந்த காலனி குழந்தைகளை எல்லாம் தினம் அவன்கிட்ட பிச்சை எடுக்கிறமாதிரி பளக்கியிருக்கிறான்..... பொம்பளைங்களா பாத்து பாத்து போய் மணிக்கணக்கா பேசி வழியறான்…” காலனி தாத்தாவைப்பற்றி தப்பு தப்பாக பொன்னம்பலம் ஏதேதோ பேசிக்கொண்டே போனான். ...." அதைக் கேட்க கேட்க மதனுக்கு கோபம் கோபமாக வந்தது...
சுற்றியிருந்தவர்கள் யாரும் எதுவும் பேசவேயில்லை. வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவனை எதிர்க்க யாருக்கும் துணிவில்லையா? அல்லது காலனி தாத்தா பற்றிய விமர்சனத்திற்கு ஆமோதிக்கிறார்களா? மதன் ரொம்பவே குழம்பித்தான் போனான். அங்கு நின்றிருந்தவர்கள் அத்தனைபேரும் காலனி தாத்தாவால் பலனடைந்தவர்களே.
யார் பேசாமல் போனது பற்றியும் மதனுக்கு கவலையில்லை. தனது பெற்றோரே ஊமையாகி நிற்கிறார்களே எனும் ஆதங்கம் அவனுக்கு. அவர் அப்படியில்லை ரொம்ப நல்லவர் என்று நிறையபேர் வாதிடுவார்கள் என்று நம்பினான். அந்த நம்பிக்கை பொய்யானது.
நகராட்சி ஊழியர்கள் பெட்சீட்டால் காலனி தாத்தாவின் உடலை போர்த்தினார்கள். அவரது கண்கள் மட்டும் மதனையே பார்த்துக்கொண்டிருப்பதாய் பட்டது அவனுக்கு. ஏமாற்றப்பட்டவனைப்போல் உணர்ந்தான் அவன்.
அப்பாவின் கையைப் பிடித்து " அப்பா வேணாம்னு சொல்லுங்கப்பா " என்று உலுக்கினான்.
"அமைதியா இருடா" என்று அவனை சமாதானப் படுத்துவதிலேயே கவனமாய் இருந்தார்.
"போய் ஊமச்சி பாட்டி கடையில இட்லி வாங்கிட்டு போ" அவனது அம்மா சொன்னாள் .
அவன் தனக்கென்றிருந்த ஒரு ஆத்மார்த்தமான உயிரை எல்லோரும் சேர்ந்து பறித்து, தன்னை வஞ்சித்துவிட்டதாக நெக்குருகிப் போனான்.
அவரது உடலை துப்புரவு தொழிலாளர்கள் வண்டியில் ஏற்றி புறப்பட்டனர். அவரது கண்கள் மட்டும் மதனையே நிலைகுத்திப் பார்ப்பதாய் தோன்றியது அவனுக்கு.
தன் கரங்களைப் பற்றியிருந்த அப்பாவின் கரங்களை உதறிவிட்டு ஓட்டமாய் ஓடி ஸ்கூல் ஆட்டோவில் ஏறினான். அவனுக்கு அழுகை வரும்போலிருந்தது. ஆனால அழ த்தோணவில்லை. மாறாக அவனது உதடுகள் எதோ மந்திரம் சொல்வது போல முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
"ஜனநாதா...ஜனநாதா... ஜனநாதா...ஜனநாதா....."
#486
मौजूदा रैंक
60,500
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 500
एडिटर्स पॉइंट्स : 60,000
10 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 5 (10 रेटिंग्स)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
ramajayamk2016
abiramannadurai
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स