மன்னன் மகள்

Ramasundari
காதல்
5 out of 5 (7 रेटिंग्स)
कहानी को शेयर करें

மன்னன் மகள்

டாக்டர் எப்படியாவது என் மகளைக் காப்பாத்துங்க. அவ இல்லாட்டா நாங்க வாழ்வதில் அர்த்தமே கிடையாது என்று கதறும் வேந்தனை சமாளிக்க வழி தெரியாமல் திணறினார் டாக்டர் ஆதித்யா.
ப்ளீஸ் மிஸ்டர் வேந்தன், நீங்க கொஞ்சம் படபடக்கறதை நிப்பாட்டுங்க. நீங்க முதல்ல டென்ஷன் ஆகாதீங்க. உங்க பொண்ணுக்கு தலையில அடி கொஞ்சம் பலமா பட்டிருக்கு, இப்போதைக்கு கோமால இருக்காங்க, கூடிய சீக்கிரம் கண்விழிப்பாங்க அப்ப நீங்க நல்ல கதியா இருந்தா தானே உங்க பொண்ண நீங்க பாத்துக்க முடியும்.
எப்படி டாக்டர் ?எப்படி டாக்டர் பதட்டப்படாமல் இருக்க முடியும்? ஒரே பொண்ணு சார் கண்ணுக்குள்ள வச்சு வளர்த்தேன். கோடிக்கணக்கான பணம் இருக்கு என்கிட்ட அதை கட்டியாள ஒரு குழந்தை வேணும் அப்படின்னு சொல்லிட்டு தவமாய் தவமிருந்து பெத்த பொண்ணுங்க.
இவளுக்கு அப்புறம் ஒரு குழந்தை எங்களுக்கு அமையவே இல்லை சரி, ஒரு பொண்ணு இருந்தாலும் மஹாராணி மாதிரி வழக்கனும்னு சொல்லிட்டு வளர்த்தேன். ஆனா பாருங்க, டூர் போறேன்னு சொல்லி அடம் பிடிச்சு காலேஜ் டூர் போய்ட்டு கீழே விழுந்து இப்படி கண் முன்னாடி அசைவே இல்லாம படுத்து கிடக்கறாளே என் தங்கம் நான் என்ன பண்றது?
சார் ,அட்மிட் ஆன இந்த ஒரு வாரத்தில் உங்க பொண்ணோட உடம்பு எவ்வளவோ தேறி இருக்கு . வெளி காயமெல்லாம் நல்ல ஆறி இருக்கு. கொஞ்சம் பொறுத்திருக்க தாங்க வேணும்.
என்னத்தங்க பொறுத்திருக்க ?அந்தப் பாழாப்போன டூருக்கு போகாம இருந்திருந்தா? அந்த வீணாப்போன அருவியில் குளிக்காம இருந்திருந்தால் இந்நேரம் என் பொண்ணு தங்கமா என் பக்கத்தில் இருந்திருப்பாளே? என்ன பண்ண? கடவுளுக்கு கருணையே இல்லை அப்படின்னு சொல்லி அழ ஆரம்பிக்கிறார்.
என்ன பெயர் சொன்னீங்க? அப்படின்னு அந்தப்பெயரைக் கேட்டதும் திடீரென்று உடம்பு முழுக்க ஒரு அதிர்வு கிளம்பற மாதிரி கேட்டார் டாக்டர் ஆதித்யா.
அதாங்க டாக்டர் தஞ்சாவூர் பெரிய கோயில் பார்த்துட்டு அங்கனகுள்ள சுத்தி பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு போன பொண்ணு அங்க பக்கத்துல இருந்த சூரியசுனைல விழுந்துட்டா என்றபடி குமுறினார் வேந்தன்.
ஆதித்ய பொய்கை என்று கத்தினாள் சகுந்தலை.
எங்கே செல்கிறோம் சகுந்தலை?
ஆதித்ய பொய்கைக்கு செல்கிறோம் இளவரசி.
ஆதித்ய பொய்கை, கேள்விப்பட்டார் போல் இல்லையே என்றாள் இளவரசி சந்திர பிரபை.
தாங்கள் எப்படி கேள்விப்பட்டிருக்க முடியும் இளவரசி , இங்கிருந்து பலகாத தூரத்திற்கு அப்பால் இருக்கும் மகிழ வனத்திற்குள் இருக்கிறது அந்த சுனை. மலைகளில் இருந்து வடியும் அருவியின் தண்ணீர் அவ்வளவு அழகாக தேங்கி நிற்கிறதாம். குளத்தின் தண்ணீரில் பிரதி பிம்பமாய் தெரியும் காலைக் கதிரவனின் பிம்பம் குலத்தையே தங்க முலாம் பூசியது போல் தகதகக்க வைக்கிறதாம் . கேட்டார் சொல்லக் கேள்விப்பட்டதுதான் இளவரசி. ஆகையால், இன்று அங்கு சென்று பார்த்து வரலாம் என்று இருக்கிறேன் நீங்கள் அனுமதித்தால்? என்று பவ்யமாக கேட்டாள் சகுந்தலை.
முடியாது. முடியவே முடியாது. நீ எங்கேயும் போகக்கூடாது . உனக்கு இன்று விடுமுறை கிடையாது! என்று கடுமையாக பதிலளித்தாள் இளவரசி சந்திர பிரபை.
இளவரசி தாங்களா இப்படி சொல்லுவது?
பின்னென்ன சகுந்தலை! ஆதித்தப் பொய்கையாம் ஆனால், இந்த சந்திரிகை இல்லாமலா? நீ மட்டும் போவேன் என்கிறாயே! என்னை அழைத்துச் சென்றால் என்ன? குடியா முழுகிப் போய்விடும்?
ஹா! என்று ஒரு நிமிஷம் அதிசயித்த சகுந்தலை, போதும் இளவரசி! போதும்! என் சிரம் கழுத்தில் இருப்பது தங்களுக்கு பொறுக்கவில்லையா? தங்கள் மீது ஒரு மயிற்பீலி பட்டாலே துடித்துப் போவார் மன்னர். இந்த பேச்சிற்கே நான் வரவில்லை என்று இரண்டடி பின்னால் சென்றாள் சகுந்தலை.
அடியே! சகலமும் தெரிந்து வைத்திருக்கிறாயே? என் தந்தைக்கு தெரிந்து சென்றால் தானே நமக்கு பிரச்சனை தந்தைக்குத் தெரியாமல் சென்றால்?
இளவரசி தாங்கள் சொல்வது நியாயமா? என் தாய்க்கு ஒற்றை மகளான நான் இன்னும் சற்று காலம் உயிர் வாழ்ந்து கொள்கிறேன். தயவு கூர்ந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று சகுந்தலை பேசும் எதையுமே கவனிக்காமல்,
என்ன சகுந்தலை? மசமசவென்று நின்று கொண்டு இருக்கிறாய். சீக்கிரம், சீக்கிரம் கிளம்பு, இந்த உடையில் “நான் அழகாக இருக்கிறேனா” என்று அப்பொழுது தான் போட்ட சேடிப்பெண் உடையை சுட்டிக்காட்டி கேட்டாள் இளவரசி.

இது எதில் சென்று முடியுமோ? என்று பயந்தபடி இளவரசி நான் சொல்வதை ஒரு முறையேனும் காது கொடுத்து கேளுங்கள் என்று ஆரம்பித்த சகுந்தலையை, வாயை மூடிக் கொண்டு என் பின்னால் வா. இது என் கட்டளை! என்றபடி சகுந்தலையின் வாயை அடக்கி தன்னோடு அழைத்துக்கொண்டு கோட்டையின் பின்வாசல் வழியாக வெளியேறினாள் இளவரசி சந்திரபிரபை.
போதும் இளவரசி. குளித்தது போதும். வந்ததிலிருந்து இத்தோடு இரண்டு நாழிகை நேரம் ஆகிவிட்டது. தண்ணீருக்குள் இருந்து கொண்டு வெளியே வர மாட்டேன் என்கிறீர்களே, தயவுசெய்து வெளியே வாருங்கள் தங்களுக்கு தடுமன் பிடித்தது என்ற செய்தி மன்னருக்கு எட்டினால், என் தலைத் தப்பிக்காது. வந்து விடுங்கள் என்று கதறினாள் சகுந்தலை. ஆனால், எப்பொழுதும் போல் அவளின் பேச்சை காதில் வாங்காமல்,
ஒரே ஒருமுறை, கடைசியாக ஒருமுறை குதித்து நீந்தி விட்டு வருகிறேன் என்று அருகிலிருந்த சின்ன பாறையின் மீது ஏறியவள், என்ன நடந்ததோ? வினாடி நேரத்திற்குள் கால் வழுக்கி பாறையில் இருந்து சரிந்து தண்ணீருக்குள் விழ, பாறை தலையில் இடிக்க சுயநினைவிழந்து தண்ணீருக்குள் விழுந்தாள்.
நிமிட நேரத்தில் இளவரசி சந்திரபிரபை மயங்க, உலகமே தட்டாமாலை சுற்றுவதுபோல் சுழன்றது சகுந்தலைக்கு. என்ன செய்வது என்றறியாது, யாராவது காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று அபயக்குரல் எழுப்பத் தொடங்கினாள்.
சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே யாராவது காப்பாற்றுங்கள் என்று சகுந்தலை கத்திக் கொண்டிருக்க அந்நேரம் தெய்வமாய் பார்த்து அனுப்பி வைத்தது போல் அங்கே தோன்றிய ஒரு அழகிய ஆண்மகன் ஒருவன் கையில் வைத்திருந்த பையை தூக்கி வீசிவிட்டு என்ன ஆயிற்று ? என்ன ஆயிற்று? என்று பரபரப்பாக ஓடி வந்தான்.
ஐயா தயவு செய்து அவர்களைக் காப்பாற்றுங்கள், தயவு செய்து அவர்களை காப்பாற்றுங்கள் என்று பிதற்றத் தொடங்கினாள் சகுந்தலை.
நெற்றியின் மீது பாறை மோத, தன்னிலை மறந்து மயங்கி விழுந்த இளவரசி சந்திரபிரபையை நீர் இழுத்து செல்ல, சட்டென்று தண்ணீருக்குள் பாய்ந்து இளவரசியைக் காப்பாற்றி வெளியே தூக்கி வந்தான் அவன்.
சட் சட்டென்று முதலுதவிகளை முடித்து, இளவரசி நெற்றியில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு பச்சிலையை வைத்து தடவிவிட்டு,கீழே கிடந்த பையிலிருந்து சிறு குடுவையை எடுத்து, அதற்குள் இருந்த மூலிகைச் சாற்றை இளவரசியின் வாயில் ஊற்றினான் அவன்.
என்ன புகட்டுகிறீர்கள் என்று சகுந்தலை பதற, பயப்படாதீர்கள் அம்மணி இது வெறும் மூலிகைச்சாறு தான் இன்னும் சற்று நேரத்தில் உங்கள் தோழி கண்விழித்து விடுவார் என்றான் அவன்.
சொன்னது போலவே சிறிது நேரத்திற்குள் கண் விழித்து மருண்ட மான் குட்டி போலப் பார்த்தாள் இளவரசி சந்திரபிரபை.
திரிபுரத்தை எரித்த அந்த கங்கை தலை கொண்ட ஈசன் தான் எங்களைக் காப்பாற்றுவதற்காக உங்களை அனுப்பி வைத்தான் போலும். தாங்கள் வித்தை தெரிந்தவர் தான் ஐயா என்று சிலாகித்தாள் சகுந்தலை. உடனே அவன் சிரித்துக் கொண்டே, அப்படி எல்லாம் தவறாக முடிவுகட்டி விடாதீர்கள் அம்மணி. நான் வித்தைத் தெரிந்தவன் அல்ல, வைத்தியம் தெரிந்தவன். வைத்தியன் ஆதித்த வர்மன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் அந்த ஆடவன்.
“ நான் ஆதித்த வர்மன்” என்று ஆதித்தவர்மன் தன்னை அறிமுகப்படுத்திய நொடி, கண்களை முழுதாக திறந்து தெளிவாக அவனை நோக்கினாள் இளவரசி சந்திர பிரபை. சந்திரப் பிரபையும், ஆதித்த வர்மனும் ஒருவரையொருவர் நோக்கிக் கொண்டார்கள். அந்த ஒரு நொடி போதுமானதாக இருந்தது அவர்களுக்கு இடையில் காதல் மலர்வதற்கு

ஆதித்யனைக் காண சந்திரன் இல்லாமலா? என்று எந்த நேரத்தில் சந்திர பிரபை வாய்விட்டாளோ? இப்பொழுது அவள் கண்டு கொண்டிருப்பது ஆதித்தனின் பொன் கதிர் முகத்தைத் தான். அவன் முகத்தை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சற்றே தெளிந்து சூழ்நிலையை புரிந்து சுதாரித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தாள் சந்திரபிரபை. அவள் அமர ஏதுவாக கீழே அமர்ந்து தனது தோளில் அவளை சாயத்துக் கொள்கிறாள் சகுந்தலை.
அந்நேரம் சடசடவென்று மழைத்துளி மண் தழுவ, மூவரும் எழுந்து ஓடி, வேகமாக அங்கிருந்த மகிழ மரத்தடியில் ஒதுங்கினார்கள்.
மழைத்துளிகள் பட்டதால் சந்திர பிரபையின் நெற்றியில் ஆதித்தவர்மன் பூசியிருந்த பச்சிலை நழுவி கரைய, அங்கிருந்த அந்த காயம் தெரிய ஆரம்பித்தது. அந்த காயம் லேசாக பிறை வடிவத்தில் அமைந்திருந்தது

ஐயோ! இனி நான் என்ன செய்வேன்! காயம் தழும்பாகி விடும் போல் இருக்கிறதே? பிறை வடிவில் பெரிதாக இருக்கிறது என்று பதறினாள் இளவரசியின் தலையைப் பார்த்த சந்திரபிரபை.
ஆனால் சந்திரபிரபை அலட்டிக்கொள்ளாமல்,” ஒரு சிறு காயம் தான், இதற்கு ஏன் இப்படி பதறுகிறாய் என்றாள். உடனே அருகில் இருந்த ஆதித்தவர்மன், சந்திர பிரமை யின் முகத்தை கூர்ந்து பார்த்தவாறு சகுந்தலையிடம் பேசினான். முழுமதி முகத்தில் பிறை நிலா தோன்றி இருப்பதாய் நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தோழியின் முகம் முழு மதியைப் போலத்தான் இருக்கிறது என்றான்.

அவனது வார்த்தைகளில் மகிழ்ந்து போன இளவரசி சந்திரபிரபை, மெல்ல சகுந்தலையை நோக்கி, என்ன சகுந்தலை? வைத்தியருக்கு வாய்துடுக்கு பலமாகத்தான் இருக்கிறது. என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்? என்னைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது என்று முகத்தை வெட்டித் திருப்பினாள்.
என்னென்னவோ தோன்றுகிறது, உங்கள் தோழியை இப்படி பார்க்கையில், ஒற்றை ஒற்றைப் பூவாய் உதிர்ப்பதற்கு சோம்பேறித்தனப்பட்டுக் கொண்ட இந்த மகிழமரம் பூக்குவியலை கீழே உதிர்த்து விட்டது என்று நினைத்தேன்.
ஹா! ஹா! ஹா! நன்றாகத்தான் பேசுகிறீர்கள். விட்டால் பேசிக்கொண்டே போகிறீர்கள் என்று சட்டென்று இவ்வளவு நேரம் சகுந்தலையை ஊடே வைத்துப் பேசியது மறந்தது போல் அவன் முகத்தை நேராக நோக்கினாள் சந்திரபிரபை.

சட்டென்று ஆதித்தன், நீங்கள் தான் தப்பாய் பேசுகிறீர்கள். அம்மணி, நான் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்லுங்கள், பேசிக் கொண்டு போகிறேன் என்று சொல்லாதீர்கள் .உங்களைப் பார்த்தபிறகு உங்களை விட்டு ஒரு நொடியேனும் விலக கூட என் மனம் மறுக்கிறதே?
மறுக்கும், மறுக்கும். மறுக்கத் தெரிந்த மனதிற்கு இந்த சம்பவத்தை மறக்கவும் கற்றுக்கொடுங்கள். வா சகுந்தலை போகலாம் என்று சகுந்தலையின் கையை இழுத்துக் கொண்டு மழையில் வேகமாய் நடக்கத் தொடங்கினாள் சந்திரபிரபை. ஆனால் மனதிற்குள் ஆதித்தன் பற்றிய நினைவுகள் தூறிக்கொண்டு தான் இருந்தது.

“ இன்னிக்கு மழை என்ன இப்படி வெளுத்து வாங்குது சிஸ்டர்? சீக்கிரம் ஜன்னலை மூடுங்க” அப்படின்னு சொல்லி விட்டு நிலாவுக்கு நெற்றியில் உள்ள தையலை பிரிக்க ஆரம்பித்தார் டாக்டர் ஆதித்யா. ஆதித்யா டிரஸ்ஸிங் செய்து முடிக்கவும், பக்கத்திலிருந்த சிஸ்டர் த்ச்! த்ச்! என்று பரிதாபப்படவும் சரியாக இருந்தது. என்ன சிஸ்டர்? பல்லி போல கத்துறீங்க என்று கேட்டுச் சிரிக்கவும், பக்கத்திலிருந்த சிஸ்டர் மரியா மெல்ல சொன்னாள். “இல்ல டாக்டர், இந்தப் பொண்ணு எவ்ளோ அழகா இருக்கு, ஆனா, இந்த தையல் நெருடலாக இருக்குனு சொல்ல, உடனே ஆதித்யா, அப்பொழுதுதான் படுத்திருந்த நிலாவின் முகத்தை உற்று நோக்கினான் போல! பிறை போல ஒரு சின்ன தழும்பு தானே? அது ஒரு அழகாத்தான் இருக்கு. திருஷ்டி பொட்டு வச்ச மாதிரி அப்படின்னுட்டு நிலாவின் நெற்றியில் இருந்த காயத்தில் லேசாக ஆயின்மென்டை தடவினான்.
நெற்றி காயம் சுரீரென்று வலிக்க “ஸ்” என்று சப்தம் எழுப்பினாள் இளவரசி சந்திரபிரபை.
இன்னும் காயம் வலிக்கிறதா இளவரசி என்று கேட்ட சகுந்தலையிடம், ஒன்றுமில்லைடி, திடீரென்று வலிக்கிறார் போல் இருந்தது அதனால் தான். சரி அதை விடு. நான் கேட்க வேண்டும் என்று நினைத்தேன், நாளை எத்தனை மணிக்கு போகலாம் மகிழ மரத்தடி குளத்திற்கு? என்று கேட்டாள் சந்திரபிரபை.
சரியாய் போயிற்று அன்று தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தான். நாளை எல்லாம் அரண்மனையை விட்டு வெளியே செல்வதை நினையாதீர்கள் என்று ஒரு கும்பிடு போட்டாள் சகுந்தலை.
ஆனால் சகுந்தலைக்குத் தெரியுமா என்ன? காற்றுக்கு மட்டுமல்ல, காதலுக்கும் வேலி போட முடியாதென்று.
மறுநாளிலிருந்து, தினமும் அதேநேரம் மகிழம்பூ மரத்தடிக்கு செல்ல ஆரம்பித்தாள் இளவரசி சந்திரபிரபை. தஞ்சைக் கோயிலில் கொலுவீற்றிருக்கும் மகேஸ்வரனை தரிசிக்க செல்வதாய் பொய் சொல்லிவிட்டு தினமும் மகிழ மரத்தடியில் மனம் கவர்ந்தவனை சந்திக்கச் சென்றாள் அவள்.
இப்படியே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரத் தொடங்கியது சந்திர பிரபை, ஆதித்த வர்மனின் காதல்.
ஒரு அழகிய மாலை நேரத்தில் மகிழ மரத்தடியில் சாய்ந்திருந்தான் ஆதித்த வர்மன். அவனது தோளில் கொடிபோல படர்ந்திருந்தாள் சந்திர பிரபை.
இன்று அமாவாசையா சந்திர பிரபை?என்று சந்திரப் பிரபையை மென்னகையுடன் நோக்கினான் ஆதித்தவர்மன். என்னோடு நீங்கள் இருக்கும் நாளெல்லாம் எனக்கு முழு நிலவாய் பௌர்ணமி போல்தான் தோன்றுகிறது. என்னை விட்டு பிரிந்து செல்கையில் எனக்கு உலகமே இருண்டது போல் தான் தோன்றுகிறது அதனால் தானோ என்னவோ உங்களுக்கும் இன்று அமாவாசை என்று தோன்றி இருக்கும் என்றாள் சந்திரபிரபை. சட்டென்று சிரித்த ஆதித்தவர்மன், என்ன சந்திர பிரபை இவ்வளவு கோபமா? ஒரே ஒரு நாள் ஒரு நாள் தானே நாளை மாலை நான் உன்னைத் தேடி வந்து விடுவேன்.
பழையாறை ஆதுரச்சாலைக்கு தேவைப்படும் மூலிகை மருந்துகள் எல்லாம் சேகரித்து விட்டேன் அதை அங்கு கொண்டு சேர்த்துவிட்டால் எனது கடமை முடிந்தது. நாளை மறுநாள் கட்டாயம் உன் கண்முன்னே இருப்பேன் இது சாத்தியம் என்று வாக்களித்தான் ஆதித்தவர்மன். சத்தியமென்ற ஆதித்த வர்மனின் கையை விடாமல் பற்றிக் கொண்ட சந்திரபிரபை, “எனக்கு வாக்களித்த இந்த கைகளுக்கு நான் தரும் பரிசு இதுதான் என்றபடி தனது கைகளில் போட்டிருந்த கணையாழியை எடுத்து ஆதித்தவர்மன் கைகளில் போட்டாள் சந்திர பிரபை.
“நான் இல்லாத நேரத்தில் எனது கணையாழி உங்களுக்கு காதலியாய் இருக்கட்டும். உங்கள் கைகளை தழுவியபடியே, பாருங்கள் பிரபு, இந்தக் கணையாழி மிகவும் வித்தியாசமானது சூரியனும் சந்திரனும் பொறிக்கப்பெற்றார் போல் இருக்கும் இந்த உருவம் நமது காதலை பறைசாற்றும்.
“சரிதான், சரிதான், நமது திருமணத்திற்கு இன்றே அச்சாரம் போட்டு விட்டாய் போல இந்த வைத்திருக்கும்,சேடிப் பெண்ணுக்கும் நடுவில் நடக்கும் திருமணத்திற்கு என்ன தடை வந்து விடப்போகிறது என்று சிரித்து விட்டு எழுந்தான் ஆதித்தவர்மன். ஆனால் சந்திர பிரபை மனதிற்குள், “பிரபு , நான் ஒரு மன்னன் மாடத்து நிலவென்று தாங்கள் அறியும் காலம் எக்காலம்? ஆனால், சொன்னால் புரிந்து கொள்வீர்களா? நான், மன்னன் மாடத்து நிலவாக அல்ல உங்கள் இல்லத்து முற்றத்து நிலவாய் இருப்பதையே விரும்புகிறேனென்று” என்று புலம்பியபடியே ஆதித்த வர்மனின் கைகளுக்குள் கைகளைக் கோர்த்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்.
இருவர் நடக்கும் காலடி பட்டு சலசலக்கும் சருகுகளின் சப்தம் மறையும் வரை காத்திருந்து, மகிழ மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தான் அவன். மாமன்னனின் மகா சாமர்த்தியமான ஒற்றன்.
விஷயம் மன்னர் காதுகளுக்குப் போக, அசையாமல் மன்னர், “பாண்டிய மன்னனுக்கும் சந்திரபிரபைக்கும் நடக்க இருக்கும் திருமணத்தில் தான் சோழநாடும் சேரநாடும் கைகோர்த்துக் கொள்ளப் போகிறதென்று நினைத்திருந்தேன் நான். என் மகள் இப்படி செய்வாள் என்று கனவிலும் நினைக்கவில்லை. இருந்தாலென்ன? “ நாளை மாலை இருவரும் சந்திக்கையில் ஆதித்தனின் சிரம் கொய்யுங்கள்” என்று கட்டளையிட்டார் மன்னர்.
அந்நேரம் மாடத்திற்கு தீபம் வைக்க வந்த சகுந்தலையின் காதுகளில் இந்த வார்த்தைகள் விழ, நேரடியாக சென்று சந்திரபிரபையிடம் சொல்லிவிட்டாள்.
இரவு நிலவாக உறங்காமல் உலாவிய சந்திரபிரபை மறுநாள் மாலை எந்தவித தயக்கமுமின்றி மகிழ மரத்தடிக்கு சென்றாள்.
ஒரு யுகமாய் பிரிந்திருந்தார் போல், சந்திரபிரபையை கண்டதும் ஓடி வந்து அள்ளிக்கொண்ட ஆதித்ய வர்மனின் கைகளை மெல்ல விலக்கிவிட்டு சந்திரபிரபை, “சுவாமி நான் உங்களிடம் ஒன்று கூற வேண்டும்” என்றாள்.
சொல் சந்திர பிரபை! நீ என்ன சொல்வதாக இருந்தாலும் சரி, நீ கூறும் வார்த்தைகள் எல்லாம் எனக்கு அமுதமொழிகள் தானென்று புன்னகையோடு பதில் சொன்னான் ஆதித்யன். சுவாமி ஒரு அழகான மாலை நேரத்தில் நான் சாகாமல் காப்பாற்றி எனக்கு உயிர் கொடுத்தீர்கள். உங்கள் முகத்தை நோக்கிய அந்த நொடியிலிருந்து இனி என் விழிகள் பிற ஆண்மகனை காணாது என்று சபதம் எடுத்துக் கொண்டேன் நான். இந்தப் பத்து திங்களும் திகட்ட திகட்ட காதல் ரசத்தை அனுபவித்த நாம் இனியும் இப்படியே மகிழ்ச்சியாய் இருக்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டான் காலதேவன்.
என்ன பிதற்றுகிறாய் சந்திரபிரபை? என்ன ஆயிற்று? உனக்கு சுரம் இருக்கிறதா என்று சந்திரபிரபையின் மதி முகத்தின் பிறை நெற்றியில் கை வைத்து பார்த்தான் ஆதித்தன்.
இல்லை பிரபு! இல்லை. இன்று இக்கணம் சொல்லாவிட்டால் இந்த உண்மை உங்களுக்கு தெரியாமலேயே போய் விடும். நீங்கள் நினைப்பது போல் நான் அரண்மனை அந்தப்புரத்தில் சேவை செய்யும் சேடிப் பெண்ணல்ல.
“ கட்டுக்காவல் கடுமையாக இருந்ததால் கட்டுகளை களைந்தெரிந்து விட்டுச் சிறகடிக்கலாமென்று அரண்மனைக்குள் இருந்து வெளியே வந்த மன்னன் மகள் நான்” என்றாள் சந்திரப் பிரபை.
ஒரு கணம் ஸ்தம்பித்து, “இளவரசி” என்றும் மெல்ல முனுமுனுத்தான் ஆதித்தன்.
ஆதித்தனின் வாயிலிருந்து அம்மொழியைக் கேட்டதுமே சந்திரபிரபை புழுவாய் துடித்தாள். வேண்டாம்! வேண்டாம்! “அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதீர்கள். நான் அப்படி இல்லாமல் உங்கள் இதய அரசியாகவே இருக்க விரும்புகிறேன், அது முடியாது போனால்! இக்கணமே உயிர் துறக்கிறேன். காதல் தந்த காலம், வரம் தரும் வரை காத்திருக்கிறேன். இன்னொரு ஜென்மம் இருந்தால், வாய்ப்பிருந்தால் மீண்டும் சந்திப்போம் பிரபு” என்று சொல்லியபடி வேகமாக ஓடி அருவியிலிருந்து கீழே குதித்தாள் சந்திரபிரபை.
என்ன நடந்ததென்று சுயநினைவு பெற்று சந்திரபிரபையை பின்பற்றி ஆதித்தவர்மன் ஓடுவதற்கும், அநநேரம்வரை மலைகளுக்கு பின்னால் ஒளிந்திருந்த மன்னனின் வீரர்கள் வெளியே வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. மன்னரின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இங்கே சந்திர பிரபையைத் தொடர்ந்து அருவிக்குள் பாய்ந்தான் ஆதித்தன்.

ஆதித்யன்! என்று பரவசக் குரல் எழுப்பினார் வேந்தன்.
ஆமா சார்! உண்மை தான். உங்க பொண்ணு நிலா கண்விழிச்சுட்டாங்க, அதேசமயம் இந்த சந்தோசமான நேரத்துல நான் இன்னொரு விஷயத்தையும் சொல்ல ஆசைப்படுறேன். எந்த ஜென்மத்து பந்தமோ? எனக்கு தெரியாது? ஆனா, உங்கப் பொண்ணு முகத்தைப் பார்த்ததுமே எனக்கு பிடிச்சிருந்தது. அப்ப சொல்ல சமயம் சந்தர்ப்பம் வரல ஆனா, இப்ப சொல்லுறது பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன். உங்களை சார்னு கூப்பிடுறதை விட மாமா ன்னு கூப்பிட ஆசை படுறேன் என்றார் டாக்டர் ஆதித்யன். கூடவே இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியப்படுத்தணும்னு நினைக்கிறேன், நான் டாக்டர் ஆதித்தியன். அது மட்டுமில்ல இந்த மகிழம் ஹாஸ்பிடலோட உரிமையாளர் . சோ, உங்களுக்கு விருப்பமிருந்தா சொல்லலாம். வாங்க! இப்ப போய் உங்க பொண்ண பார்க்கலாம் என்றபடி வேந்தரை அழைத்துக்கொண்டு நகர்ந்தான் ஆதித்யன்.
ஆதித்யன் வெட்ஸ் நிலா என்ற பெயர்ப்பலகை பளபளக்க, மண்டபத்திற்குள் கலகலப்பாக இருந்தது.
கெட்டி மேளம்! கெட்டி மேளம்! என்று ஐயர் சொல்லவும், நிலாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான் ஆதித்யன்.
டேய் ஆதி! இதுதான் சமயம், தேடித் தேடி அலைஞ்சு திரிஞ்சு அவளுக்காக கொடுக்கணும்னு ஒரு மோதிரம் வாங்கினயே அதை சபையில் வைத்தே அவ கையில் போடு என்றால் அவனது அக்கா சகுந்தலா.
புன்னகைத்தபடியே அவள் கொடுத்த மோதிரப் பெட்டியை வாங்கி உள்ளே இருந்த மோதிரத்தை வெளியே எடுத்தான் ஆதித்யன்.
அதில் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருந்தது சூரியனுக்குள் சந்திரன் பதித்தார் போன்ற அந்த மோதிரம். சூரியனுக்குள்ள சந்திரனா அடடே ஆதித்யா உனக்குள்ள நிலாவா! அசத்துறீங்க மாப்பிள்ளை என்று சுற்றியிருந்தவர்கள் கலாய்க்க, ஏங்க! என் பொண்ணு வேந்தன் மகள். இந்த குட்டி மோதிரத்துக்கெல்லாம் அசர மாட்டா என்றபடி புன்னகைத்தார் வேந்தன். “தப்பு டாடி .அது அப்போ, காலம் மாறி போச்சு டா டி இப்போ நான் வேந்தன் மகள் கிடையாது, மிஸஸ் ஆதித்யா. இல்லையா ஆதித்தன்?” என்றபடி ஆதித்யனைப் பார்த்து கன்னத்தில் குழி விழ சிரித்தாள் நிலா. அவளது புன்னகைக்கு ஈடாய் மின்னியது அவளது விரல்களில் ஆதித்தன் அணிவித்த அந்த மோதிரம் .

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...