JUNE 10th - JULY 10th
களியக்காவிளை பஸ்ஸ்டாண்டிலிருந்து அந்த பஸ் வெளியே வந்த போது இரண்டு முறை ஹாரன் அடித்தது. அது கூட ‘பூங்கனி பூங்கனி’ என்று அழுதது. பாலன் கண்ணிலிருந்து கண்ணீர் பொங்க ஆரம்பித்தது.
முன் சீட்டில் இருந்த இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“பஸ் எல்லாம் இனிமே வராதுன்னு பேசிக்கிறான். தெரியுமாலே? கொரோனான்னு ஒரு புது நோய் காத்துல கூட பரவும்னு கேட்டியா?”
“அடப்போலே! எந்த வைரஸா இருந்தாலும் நம்ம கிளைமேட்ல பரவாதுலே. கேரளாவுக்கு வேணா வரும்”
“எலே இப்பம் நாம எங்க இருக்குறோம்”
“தமிழ்நாடு பார்டர்லதானேலே இருக்கோம். பயப்படாத”
மார்ச் மாதம் கோடை வெயில் ஆரம்பித்திருந்தது. பக்கத்திலிருந்த ஒருவர் செய்தித்தாள் வைத்திருந்தார்.
“சார்! கொஞ்சம் பேப்பர் குடுக்க முடியுமா...?”
அவர் செய்தித்தாளைக் கொடுத்தவுடன் பாலன் உடனே தலைப்புச் செய்தியைப் படித்தான்.
‘துபாயிலிருந்து விமானத்தில் திரும்பிய பெண்ணுக்கு கொரோனா அறிகுறி!’ என்று ஆரம்பித்து ‘பூங்கனி என்ற அந்தப் பெண் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்’ என்று எழுதியிருந்தது.
கூடவே பூங்கனியின் ஃபோட்டோ… கன்னங்குழி சிரிப்பில்லாத ஃபோட்டோ. எதற்கெடுத்தாலும் ஒரு கன்னங்குழி சிரிப்பு சிரிப்பாள். புகழ்ந்தாலும் சரி, திட்டினாலும் சரி... அதே சிரிப்புதான்.
- 2 -
பூங்கனி அவனது காதல் மனைவி! அவனது மரக்கடை முதலாளியின் மகள். ஒவ்வொரு முறையும் முதலாளி ஏதாவது ஒரு வேலையாக அவனை அவரது வீட்டுக்கு அனுப்பும்போது ஏற்பட்ட உயிருக்கு உயிரான காதல்.
‘அடிலே செருப்பு கொண்டு! நான் யாருன்னு தெரியுமாலே?’ என்று விஷயம் தெரிந்து முதலாளி அடிக்க வந்தபோது அவரைத் தடுத்து முன்னால் வந்து நின்றவள்தான். இன்று வரை பாலனுக்குத் துணையாக நிற்கிறாள்.
‘சினேகிச்ச பிறகு என்னால விட்டுட்டுப் போக முடியாது’ என்று உறுதியாக எதிர்த்து நின்றாள்.
‘அவன் பணத்தைக் கண்டுட்டான்ல? அதான் உன்னை லவ் பண்ணியிருக்கான். கொள்ளையில போவான்… விளங்குவியாலே நீ’ என்று அவர் கத்தியதெல்லாம் கேட்டுக்கொண்டே வீட்டை விட்டு வெளியேறினாள்.
அவளது அப்பா அந்தஸ்தைக் காரணமாகக் காட்டினாரென்றால் அவனுடைய அப்பா ஜாதியைக் காரணம் காட்டி அவர்கள் கல்யாணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நண்பர்கள் துணையுடன் பதிவுத் திருமணம் செய்தார்கள். பூங்கனி தன் பங்களாவை விட்டுவிட்டு அவனுடன் வாடகை ஓட்டு வீட்டில் சந்தோஷமாகக் குடியேறினாள்.
ஒரு நாள் அவளை வெளிநாட்டு வேலைக்குப் போகச் சொன்னான்.
‘கல்யாணமாகி மூணு மாசம் தானே ஆச்சு. அதுக்குள்ள ஃபாரின்லாம் போக முடியாது’ என்று அழுதாள்.
‘அப்பம் நான் படிச்ச அஞ்சாப்புக்கு ஒட்டகத்தைக் கூட மேய்க்க முடியாது. எத்தரை சம்பளம் தரப் போறான்? நீ படிச்ச நர்சிங் கோர்ஸ் நமக்கு நல்ல வழி காட்டப் போவுதும்மா. மூணு வருஷம்தான். அப்புறம் நானும் உங்க அப்பாவைப் போல மரக்கடை வெச்சு அவரோட ஸ்டேட்டஸுக்கு வந்துட்டோம்னா உங்க வீட்டுல உன்னைப் பாக்க வருவாங்க’
- 3 -
‘இப்ப எங்கம்மா, அப்பால்லாம் பாக்க வரலைன்னு நான் அழுதேனா?’
‘அதுதான் பூங்கனி எனக்குக் கஷ்டமாயிருக்கு… நீ சொல்லாட்டினாலும் உன் வேதனை என்னன்னு எனக்குத் தெரியும்…’
‘எனக்கு நீங்க உங்களுக்கு நானுன்னு இருப்போம். இருக்குறதை வெச்சு வாழ்ந்து காட்டுவோம்’ என்று அடம்பிடித்தாள்.
‘பூங்கனி! வசதியான உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனோமேன்னு நினைக்குறப்ப என் மனசு தினமும் கிடந்து குத்துது. ஒரு மூணு வருஷம் எனக்காக இந்தத் தியாகத்தையும் பண்ணிட்டேன்னா நாம மேல ஏறி வந்துரலாம். நாளைக்கு நமக்குக் குழந்தைன்னு வந்துட்டா சமாளிக்கணும்லே’
‘ஆட்டும்’ என்று வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொண்ட பூங்கனியை இதே போல சென்னைக்கு பஸ்ஸில் கூட்டிச் சென்றான். விமானம் ஏறுவதற்கு முன் வருத்தத்தை வெளியில் காட்டாமல் அதே கன்னங்குழி சிரிப்பு சிரித்தாள்.
பஸ் கோயம்பேடில் வந்து நின்றபோது அவனை எதேச்சையாகப் பார்த்த மனிதர்கள் எல்லாம் அவனை முறைத்தது போல இருந்தது. ‘பூங்கனியை இப்பிடி ஆக்கிட்டேயேடா’ என்று கேட்டது போல தோன்றியது.
‘பூங்கனி! நான் உனக்குச் செய்த துரோகத்துக்கு உயிரைத் தவிர குடுக்குறதுக்கு என் கிட்ட ஒன்னும் இல்லம்மா…’ என்று நினைத்தவாறு அவசர அவசரமாக ஆட்டோவைப் பிடிக்க ஓடினான்.
“நாளை மறுநாள்லே இருந்து ஆட்டோவே ஓடாதாம்… கோயம்பேடே காலியாயிடும்” என்று சொல்லிக்கொண்டிருந்த ஆட்டோக்காரரின் தோளைத் தொட்டான்.
“ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரி போகணும்…”
- 4 -
மருத்துவமனையில் இறங்கியவுடன் ஆட்டோ ஓட்டுனரிடம் மீதி சில்லறை கூட வாங்காமல் மருத்துவமனை வளாகத்தினுள் ஓடினான். கொரோனா வார்டு என்று எழுதியிருந்த இடத்தின் வாசலில் ஒரு மேஜை போட்டு அமர்ந்திருந்தவரிடம் சென்றான். நடு இரவு நேரம்.
“அய்யா! கொரானா சிகிச்சை வார்டு எதுங்கய்யா?”
அரைத் தூக்கத்தில் இருந்த அந்த வாட்ச்மேன், “யாரு வேணும்?” என்றான்.
“அய்யா! அந்த வார்டுல சிகிச்சையில இருக்குற பொண்ணு என் மனைவிங்க!”
“எந்தப் பொண்ணு? அந்த கன்னியாகுமரிப் பொண்ணா? அது உன் பொண்டாட்டியா?”
ஆமாம் என்பது போல அவன் அழுதுகொண்டே தலையாட்டினான்.
“தமிழ்நாட்டிலேயே ரெண்டாவது பொண்ணோ மூணாவது பொண்ணோன்னு பேசிக்கிறாங்க. உள்ளேயெல்லாம் போய்ப் பாக்க முடியாதுபா. இந்தாண்ட குந்து. வெளிய நர்ஸம்மா வருவாங்க. நான் எப்பிடி இருக்காங்கன்னு கேட்டுச் சொல்றேன்”
கேட்டின் அருகிலே சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தான்.
‘என் பூங்கனிக்கு இந்த நிலைமை வந்திருக்காது… என்னைச் சந்திக்காமலிருந்தால்? என்னைக் காதலிக்காமல் இருந்தால்? தன்னோட குடும்பத்தை எதிர்த்து என்னைக் கல்யாணம் செய்யாமலிருந்தால்? என்னோட கட்டாயத்துக்காக வெளிநாடு போகாம இருந்தால்?...’ என்று ஏகப்பட்ட இருந்தால்களை நினைத்து மனம் குமைந்தது.
- 5 –
தமிழ் நாட்டின் அந்தக் கடைசி எல்லையிலிருந்து இவ்வளவு தூரம் வந்தும் உள்ளே சென்று தன் பூங்கொடியைப் பார்க்க முடியவில்லையே என்று அவன் கண்களை மூடி ஏங்கிக்கொண்டிருந்தான். இவன் தூங்குவதாக நினைத்த அந்த வாட்ச்மேன் படியில் இறங்கி சாலையில் நின்றிருந்த சைக்கிள் டீயை வாங்கிக் குடிக்கச் சென்றான். விழித்துப் பார்த்த பாலன் அந்தச் சிறிய இடைவெளியில் வார்டுக்குள் பாய்ந்து புகுந்தான். தூங்கிக்கொண்டிருந்த போலீஸையும் தாண்டி அங்கிருந்த இரண்டு, மூன்று கண்ணாடி ஜன்னல் வைத்த அறைகளில் ஒவ்வொன்றாகப் பார்த்தான்.
ஒரு நோயாளி முகமூடிக்குள் இருந்ததைப் பார்த்து அது பூங்கனிதானா என்று சந்தேகத்துடன் தொட்டுப் பார்த்தான். அதற்கு அடுத்து இரண்டு அறையில் இருந்த நோயாளிகளைத் தொட்டுப் பார்த்துவிட்டு வெளியே வந்தான். மூன்றாவது அறையில் முகமூடிக்குள் அவனைக் காதலுடன் பார்த்த அந்தக் கண்கள்… பூங்கனிதான்! பாலனை நோக்கி எழுந்து வர ஆரம்பித்தாள்.
உள்ளே செவிலியர்கள் அவளது இரத்தத்தைப் பரிசோதித்துக் கொண்டிருந்தனர். பாலன் அதற்குள் ரூமுக்குள் சென்று அவளது கைகளை இறுகப் பற்றிக்கொண்டு “பூங்கனி!” என்று கதறிவிட்டான். உடனே அவனை அப்போதுதான் பார்த்த மருத்துவர்களும், நர்ஸ்களும் “தொடாதே தொடாதே” என்று சொல்லிப் பிரிக்கப் பார்த்தார்கள்.
டாக்டர் வெளியே சென்று “போலீஸ்! போலீஸ்! எங்கய்யா போனீங்க? இவர் எப்பிடி உள்ள வந்தார்? இங்க வந்து இவரை இழுத்துட்டுப் போங்கய்யா!”
ஓடி வந்த போலீஸ் “யோவ்! யாருய்யா நீ? எப்பிடி உள்ளே வந்தே?” என்று கேட்டுக்கொண்டே ஓடி வந்தார்கள். கண்ணீருடன் இருந்த பாலனும், பூங்கனியும் பிரிக்கப்பட்டனர். அவனே வெளியே தள்ளிச் சென்றார்கள்.
- 6 –
“போலீஸ்! அந்த ஆளை வெளியே அனுப்ப வேண்டாம். இங்க பேஷண்டைத் தொட்டுட்டார். இன்னொரு ரூம்ல அடைங்க. அப்சர்வேஷன்ல வைக்கணும்” என்றார் டாக்டர்.
பாலனை இன்னொரு ரூமில் தள்ளி அடைத்தார்கள். உடம்பெங்கும் காற்றுப் புகாமல் மூடியது போல விசேஷப் பாதுகாப்பு உடைகள் அணிவித்தார்கள். அவனுக்கு இப்போது கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. ஏன் என்று யோசித்துப் பார்த்தான். பூங்கனி பக்கத்து ரூமில்தான் இருக்கிறாள் என்ற உணர்வுதான் அந்த சந்தோஷத்துக்குக் காரணம் என்று புரிந்து கொண்டான்.
அன்று இரவே செவிலியர்கள் பரிசோதனை செய்ய உள்ளே வரும்போது அவர்களைத் தள்ளிவிட்டு பூங்கனியிடம் சென்று பேச முயற்சித்தான். மறுபடி அடைக்கப்பட்டான். போலீஸின் உதவியுடன் டெஸ்ட்டுக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டன.
அடுத்த நாள் காலையில் பாதுகாப்பு கவசங்களுடன் மன நல ஆலோசகர் ஒருவர் வந்தார். அவனிடமிருந்து தூரமாக உட்கார்ந்து கொண்டார்.
“சார்! நீங்க பதட்டப்பட வேண்டிய அவசியமே இல்லை. உங்க மனைவிக்கு அறிகுறிதான் இருக்கு. டெஸ்ட் எடுத்திருக்கோம். உங்களுக்கு அந்த அறிகுறி கூட இல்லை. ஜஸ்ட் அப்சர்வேஷன்தான். ரிசல்ட் பாசிட்டிவ் இல்லைன்னா உடனே உங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு அனுப்பிருவோம்..” என்று நிதானமாகத்தான் பேசினார். பாலன் அவர் சொன்ன எதையுமே கவனித்ததாகத் தெரியவில்லை.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் அதே ரூமில்தான் தனிமையாக வைக்கப்பட்டான். இரண்டு நாட்களில் நான்கு முறை வெளியே சென்று பூங்கனியைப் பார்க்க முயற்சித்தான். சரியாகத் தூங்குவது கூட இல்லை. பூங்கனியை எப்போது பார்த்துப் பேசுவது என்ற கவலையுடனே இருந்தான்.
- 7 –
அன்று மாலையில் நர்ஸ் அவனது அறைக்குள் வரும்போது அவளிடம் கெஞ்சி பூங்கனியை வெளியிலிருந்தே பார்த்து விட வேண்டும் என்ற முடிவுடன் இருந்தான். ஆனால் அதோ…! நர்ஸ் உள்ளே வருவதற்குள் தள்ளிவிட்டு பூங்கனி உள்ளே ஓடி வந்தாள்!
“ஏய்! என்னம்மா பண்றே? வெளியே போ” என்ற நர்ஸ், “போலீஸ் இங்க வாங்க!” என்று வெளியே சென்று கத்த ஆரம்பித்தாள். அதற்குள் பூங்கனி கதவை உள் புறமாகத் தாழிட்டாள். ஓடி வந்து அவனைக் கட்டிக்கொண்டாள்.
வெளியே போலீஸ், டாக்டர், நர்ஸ் என்று கதவைத் தட்டினார்கள். ஒன்றுமே பேசத் தோன்றாமல் அப்படியே கட்டிலில் உட்கார்ந்து இருவரும் அழுதார்கள். வெளியே எல்லோரும் இவர்களிடம் ஏதோ சொன்னார்கள். கண்ணாடி ஜன்னல் வழியே சத்தம் கேட்கவில்லை. கதவைத் திறக்கச்சொல்லி சைகையிலும் சொன்னார்கள். இருவரும் ஏதும் பேசாமல் கட்டிக்கொண்டு அழுதார்கள். வெளியே போலீஸ்காரர்கள் கண்ணாடியை உடைக்கலாமா என்று ஆலோசனை செய்வது புரிந்தது.
சிறிது நேரம் கழித்து அந்த மன நல ஆலோசகர் பாலனுடைய அம்மாவை அழைத்து வந்தார். அம்மாவை கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே நிற்க வைத்தார். பாலன் கல்யாணம் செய்தது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால் நேற்று வரை பார்க்க வராத அவன் அம்மா! இன்று அவன் இங்கே இருப்பது கேள்விப்பட்டுப் பார்க்க வந்திருக்கிறாள். அவனும், பூங்கனியும் அம்மாவைப் பார்த்ததும் அழுதார்கள்.
அம்மா அவனைப் பார்த்து அழுதுகொண்டே ஏதோ சொன்னாள். அவனுக்கு விளங்கவில்லை. அலைபேசியை எடுத்து உபயோகித்தாள். அவன் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையில் மெதுவாக அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. பையிலிருந்து அதைக் கையில் எடுத்துப் பார்த்தான். அம்மாதான் அழைத்திருக்கிறாள். அந்த பழைய நோக்கியா ஃபோனின் பேட்டரி ஒரே ஒரு கோடுடன் எப்போது வேண்டுமானாலும் அணைந்து விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தது.
- 8 -
மொபைலை ஆன் செய்து காதில் வைத்தான்.
“அம்மா!”
“பாலா… பாலா…” என்று ஒன்றும் சொல்லாமல் அம்மா அழுதுகொண்டேயிருந்தாள்.
“அம்மா! என்னை மன்னிச்சிடு! அவ இல்லாத உலகத்துல என்னால மட்டும் எப்பிடி வாழ முடியும்? அதுனாலதான் நானும் அவளோட செத்துரலாம்னு வந்து சேர்ந்துட்டேன்.”
“எலே! அவளுக்கு இது வரைக்கும் நோய் ஒன்னும் இல்லையாம். உனக்குத்தாண்டா நோய் வந்துருக்கு! அதுனாலதான் அவ உன்னோட வந்து சேர்ந்துருக்காடா…” என்று அவள் சொல்லி முடித்ததும் அலைபேசி சக்தியிழந்து அணைந்தது.
பாலன் தன் மார்பில் சாய்ந்திருந்த அவளைக் குனிந்து பார்த்தான். அவளிடம் பாதுகாப்புக் கவசம் எதுவும் இல்லை. பூங்கனி அவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தாள். அதே கன்னங்குழி சிரிப்பு!
*****
#534
मौजूदा रैंक
50,400
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 400
एडिटर्स पॉइंट्स : 50,000
8 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 5 (8 रेटिंग्स)
kskselvakumar86
வளரும் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள் எனது கதை https://notionpress.com/ta/story/ssc/19561/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D#.YrfF
santhymariappan
Prabhu Subramaniam
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "நீலி" "பிள்ளைக்கும் காசு" "தோணி".. தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स