JUNE 10th - JULY 10th
தலைப்பு : "மூன்றாம் பால் "
'கீச் கீச்' என்னும் குயிலின் கூச்சல்களும் எதிரில் இருக்கும் ஐயர் வீட்டில் ஒலிக்கும் சுப்ரபாத பாடலும் காலை விடியலை ஜெயந்திக்கு உணர்த்தியது.
பொழுது விடிந்து விட்டது என்பதை உணர்ந்தவள் சிறிதும் தாமதிக்காமல் வேகமாக படுத்திருந்த பாயில் இருந்து எழுந்து அமர்ந்தாள். ஏதோ ஒன்றை இன்று சாதிக்க போவதாய் அவள் உள்ளுணர்வு அவளுக்கு உணர்த்தியது.
என்றும் இல்லாத புதிய புத்துணர்ச்சியுடன் வேகமாக குளித்து முடித்து விட்டு அவளுக்கு பிடித்த அழகிய நீல நிற புடவை ஒன்றை எடுத்து உடுத்தினாள். பின் அந்த நீல நிறத்திற்கு பொருத்தமான கண்ணாடி வளையல்களை எடுத்து கை நிறையப் போட்டுக் கொண்டாள். பெண்கள் செய்யும் அனைத்து ஒப்பனைகளையும் ஒன்று விடாமல் ரசித்து ரசித்து செய்துக் கொண்டவள் தன்னை ஒரு முறை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டாள்.
பின்பு சற்றும் தாமதிக்காமல் சமையல் அறை புகுந்தாள். சமையல் அறையில் அவளது அண்ணி காலை உணவை தயார் செய்துக் கொண்டிருந்தாள். அவளின் அருகில் சென்ற ஜெயந்தி, "அண்ணி நான் ஏதேனும் உதவி செய்யவா " என்று கேட்டாள்.
ஜெயந்தியை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்த அவளது அண்ணி, "எனக்கு உன்னுடைய உதவி எதுவும் தேவையில்லை! உன்னை யார் சமையல் அறைக்குள் வரச் சொன்னார்கள் முதலில் வெளியே போ " என்று கோபமாக அதட்டினாள்.
"இல்லை அண்ணி உங்களுக்கு உதவலாம் என்று எண்ணி தான் வந்தேன் " என்று தயக்கத்தோடு ஜெயந்தி கூற, "நீ என் அருகில் வராமல் இருந்தால் அதுவே எனக்கு பெரிய உதவி " என்று கூறினாள் ஜெயந்தியின் அண்ணி.
அதனைக் கேட்டு ஜெயந்தியின் மனம் வலிக்கத்தான் செய்தது. ஆனால் இது ஒன்றும் அவளுக்கு புதிதல்ல. இது போன்ற பல வார்த்தைகளால் அவளது மனம் ஏற்கனவே காயப்பட்டுதான் இருந்தது.
சமையல் அறையில் ஜெயந்திக்கும் அவளது அண்ணிக்கும் நிகழ்ந்த இந்த உரையாடலைக் கேட்டு அவளது அண்ணனும் அம்மாவும் அங்கே வந்தனர்.
"என்ன ஆச்சு! உங்க இரண்டு பேருக்கும் என்ன பிரச்சனை " என்று தன் மனைவியைப் பார்த்தவாறே கேட்டான் ஜெயந்தியின் அண்ணன்.
"எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை! என்ன பிரச்சனைன்னு அங்க கேளுங்க " என்று ஜெயந்தியைப் பார்த்துக் கொண்டே கூறினாள் அவனது மனைவி.
அவனும் என்ன என்பது போல் ஜெயந்தியைப் பார்க்க, அவள் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக தன் அறைக்குள் சென்று விட்டாள்.
ஜெயந்தி சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த அவளது அண்ணன் தன் தாயிடம், "இப்போ அதுக்கு என்ன பிரச்னையாம். அதான் என் சாம்பாத்தியதில வேல வேலைக்கு நல்லா கொட்டிக்குது தான பிறகு என்னவாம். தயவு செய்து என் முன்னாடியும் என் பொண்டாட்டி முன்னாடியும் வந்து நிற்க வேண்டாம்னு சொல்லுங்க " என்று அவளை வசை பாடினான்.
தன் அண்ணனின் பேச்சைக் கேட்க கேட்க ஜெயந்தியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறு போல் ஓடத் தொடங்கியது.
இன்று தன்னை இவ்வளவு வெறுக்கும் இதே அண்ணன் தான் சில ஆண்டுகளுக்கு முன்னால் தன் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தான். அந்த பாசம், அன்பு எல்லாம் இன்று எங்கே போனது என்று எண்ணி தன்னையே நினைத்து நொந்துக் கொண்டாள் ஜெயந்தி.
இதே ஜெயந்தி தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயந்தனாய் தன் அண்ணனோடு என்றும் இணைப்பிரியாமல் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.
நாட்கள் செல்ல செல்ல ஜெயந்தன் ஜெயந்தியாக மாறத் தொடங்கினான். பெண்கள் உடுத்தும் ஆடைகளை விரும்பி உடுத்திக் கொண்டான். பெண்கள் செய்யும் ஒப்பனைகளை தானும் செய்து ரசித்துப் பார்த்தான்.
இவை அனைத்தையும் கண்ட அவனது அண்ணன் மெல்ல மெல்ல அவனை வெறுக்க ஆரம்பித்தான்.
மற்றவர்கள் தன்னை தன் தம்பியோடு கேலி செய்வதைக் கண்டு அவமானத்தில் கூனிக் குறுகிப் போனான். அவனது படிப்பைப் பாதியில் நிறுத்தி ஜெயந்தனை வீட்டிலேயே முடக்கி வைத்தான்.
இன்றும் தான் பட்ட அவமானத்திற்கு தன் தம்பி தான் காரணம் என்று அவனை ஒதுக்கியே வைத்தான்.
பிள்ளையின் மனம் கல்லே ஆனாலும் பெற்ற மனம் பிள்ளையை நினைத்து வருந்தத்தானே செய்யும்.
ஜெயந்தியின் தாய் அவளின் அருகில் வந்து , "அண்ணன் ஏதோ கோவத்தில் பேசறான் அதெல்லாம் பெருசா எடுத்துக்காதப்பா! வா சாப்பிடலாம் " என்று பாசமாக அழைத்தாள்.
"ஏம்மா! நான் மட்டும் இப்படி பிறப்பேன்னு முன்னவே தெரிஞ்சிருந்தா என்னை வயித்துலயே அழிச்சிருப்பீங்க தான" என்று தன் தாயிடம் கேட்டாள் ஜெயந்தி.
அதைக் கேட்ட அவளின் தாயோ, "தயவு செய்து இப்படிலாம் பேசாத " என்று அவளை வாரி அணைத்துக் கொண்டவள் "அண்ணன் சொல்றதை தான் கொஞ்சம் கேட்டு நடந்துக்கிட்டா என்னப்பா ! இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகலை இந்த கன்றாவிய எல்லாம் கழட்டி வெச்சுட்டு அழகா பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு நல்ல பயனா நடந்துக்கோப்பா " என்று அன்புடன் கூறினாள்.
அதனைக் கேட்ட ஜெயந்தி, "நீங்கக் கூட என்னை சரியா புரிஞ்சுக்கலயே அம்மா! நான் என்ன வேணும்னேவா இப்படி நடந்துக்கறேன்? எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. இந்த மாதிரி உடை அணிந்தால் தான் நான் நானாவே என்னை உணர்கிறேன். நீங்க சொல்ற மாதிரி பேண்ட் சட்டை அணிந்தால் எனக்கு நானே அந்நியமா தோன்றுகிறேன். என் உடலில் ஏற்படும் மாற்றங்களை யாருமே புரிந்துக் கொள்ள மாட்டேங்கறீங்களே " என்று வருந்தினாள்.
"என்னையும் என் உடல் மாற்றத்தையும் புரிந்துக் கொள்ளாத இந்த வீட்டில் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை" என்றுக் கூறி விட்டு, தான் சிறியதாக சேர்த்து வைத்திருந்த பணப் பையினை எடுத்துக் கொண்டு வெளியேறினாள் ஜெயந்தி.
அதனைக் கண்ட அவளின் தாய் பதறிப் போய், "வேண்டாம் ஜெயந்தா! நான் சொல்றதை கொஞ்சம் கேள் " என்று அவளைத் தடுக்க முயன்றாள்.
ஆனால் ஜெயந்தியோ அதை எதையும் காதில் வாங்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றாள்.
வீட்டை விட்டு வெளியே வந்த ஜெயந்திக்கு எங்கே செல்வது என்று புரியவில்லை. பின்பு ஏதோ யோசனை வந்தவளாய் எப்படியேனும் கடைத்தெருவில் உள்ள ஏதோ ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்து சொந்தமாக உழைத்து வாழ வேண்டும் என்ற முடிவிற்கு வந்தாள். தான் இருக்கும் இடத்தில் இருந்து கடைத் தெரு சற்றுத் தொலைவில் உள்ளதால் கடைத் தெருவிற்கு பேருந்தில் செல்ல அருகில் இருந்த பேருந்து நிற்குமிடத்திற்கு வந்தாள்.
ஜெயந்தியைக் கண்டவுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்களிடம் சிறு சலசலப்பு ஏற்பட்டது. சுற்றி நின்றவர்கள் அனைவரும் சற்று தள்ளி நின்றனர்.
அதை ஏதும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஜெயந்தி இயல்பாக இருக்கத் தொடங்கினாள்.
அருகில் ஒரு தாய் தனது குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் தடுமாற அவளுக்கு உதவி செய்ய எண்ணினாள் ஜெயந்தி.
அழுகின்ற அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பார்த்து புன்னகைத்தவள், "ஏன்டா செல்லம் எதுக்கு அழறீங்க " என்று கேட்டவாறே குழந்தையை ஜெயந்தி அந்த பெண்ணிடம் இருந்து வாங்க முயன்றாள்.
ஆனால் அந்த பெண்மணியோ உதவி செய்ய எண்ணிய ஜெயந்தியை அருவெறுப்பான பார்வையால் தாக்கி குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாள்.
ஜெயந்திக்கோ அந்த பெண்ணின் செயல் மிகுந்த மன வேதனையைத் தந்தது. நான் உதவி செய்யத் தானே எண்ணினேன் ஆனால் அந்தப் பெண் ஏன் என்னை எதிரியைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் என்று மனம் வருந்தினாள்.
அப்பொழுது அங்கே வந்த மற்றொரு திருநங்கை பெண், பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்த அனைவரிடமும் வற்புறுத்தி பணம் வாங்கிக் கொண்டிருந்தாள்.
அதனைக் கண்ட ஜெயந்தி அந்த திருநங்கையிடன் சென்று, "அக்கா ஏன் இப்படி மற்றவர்களை வற்புறுத்தி பணம் பெறுகிறீர்கள்! சுயமாக வேலை செய்து சாம்பாதித்து வாழலாம் அல்லவா " என்றுக் கூறினாள்.
அதனைக் கேட்ட அந்த திருநங்கை பெண் ஜெயந்தியை ஏற இறங்க பார்த்துவிட்டு "இன்று தான் நீ உன் வீட்டை விட்டு வெளியே வந்திருக்காயா?" என்று கேட்டாள்.
அதற்கு ஜெயந்தியும் 'ஆம் ' என்பதுபோல் தலையை ஆட்ட, "அப்பொழுது இனிமேல் தான் நீ இந்த உலகத்தைப் பற்றி புரிந்துக் கொள்வாய் " என்று வெற்றுப் புன்னகையை உதிர்த்து விட்டு சென்றாள் அந்த திருநங்கைப் பெண்.
சிறிது நேரத்தில் அவள் எதிர் பார்த்திருந்த பேருந்து வந்து நின்றது. அதைக் கண்ட ஜெயந்தி சிறிதும் தாமதிக்காமல் முன் புற படிக்கட்டின் வழியாக பேருந்தில் ஏற முயற்சி செய்தாள். ஆனால் இது பெண்கள் ஏறும் வழி பின்னே செல்லுங்கள் என்று முன்னால் நின்றுக் கொண்டிருந்தப் பெண்கள் அவளை அனுமதிக்கவில்லை சரி பின்னால் சென்று ஏறிக் கொள்ளலாம் என்று எண்ணினால் பின் படிக்கட்டு வழியிலும் இதே நிலைமைதான். இது ஆண்கள் ஏறும் வழி என்று அவர்களும் அனுமதிக்கவில்லை.
இறுதியில் ஜெயந்தி ஏறுவதற்கு முன்பே அந்த பேருந்து சென்று விட்டது. சுற்றி நின்றவர்கள் எல்லாம் ஏளனமாகத் தன்னைப் பார்ப்பதை எண்ணி கலங்கிய ஜெயந்தி தன்னிடம் உள்ள பணத்தை வைத்து டாக்ஸியில் சென்று விடலாம் என்று எதிரே வரும் டாக்ஸியைக் கைக்காட்டி நிறுத்தினாள்.
அந்த நான்கு சக்கர வாகனமும் இவளின் அருகில் வந்து நின்றது. அதனைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தாள் ஜெயந்தி. ஆனால் அந்த மகிழ்ச்சியை அவள் முழுவதுமாய் அனுபவிப்பதற்கு முன்பு அந்த வாகனத்தில் இருந்த காண்ணாடி மட்டும் கிழே இறங்கி, இந்தா இது தானே உனக்கு வேண்டும் என்று சில சில்லறைகளை அவளின் முகத்தின் மேல் எறிந்து விட்டு அவள் கூற வருவதைக் கூட கவனிக்காமல் வேகமாக சென்று விட்டது.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெயந்திக்கு இந்த செயல் பேரதிர்ச்சியைத் தந்தது. நம்மை ஒரு மனிதனாகக் கூட மதிக்காத இந்த சமூகத்தில் நாம் எப்படி வாழ்வது என்று எண்ணி நிலைகுலைந்து நின்றாள்.
அவளின் நிலையைக் கண்ட அந்த திருநங்கை பெண் மீண்டும் ஜெயந்தியின் அருகில் வந்து, "உன்னை மாதிரி தான் நானும் வீட்டை விட்டு வெளியில் வந்த புதிதில் உழைத்து வாழனும் அப்படிங்கற வைராக்கியத்தில் இருந்தேன். ஆனால் இந்த சமுதாயத்தில் நமக்குன்னு ஒரு அடையாளமே இல்லை. அப்படி இருக்கும்போது நாளுக்கு நாள் பல அவமானங்கள் சந்தித்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த வேலை மட்டும் கிடைக்கவில்லை. நம்மளை மாதிரி ஆளுங்க இந்த சமுதாயத்தில் உயிர் வாழ வேண்டும் என்றால் ஒன்னு ஒடம்ப விக்கனும் இல்லை பிச்சை எடுக்கணும். முதல்ல சொன்னதை விட இரண்டாவதே மேல்னு மத்தவங்க கிட்ட பணம் வாங்கி வயித்தை நிறைத்து கொள்கிறேன். பெத்தவங்களும் புரிஞ்சுக்கல சமுதாயமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்ய முடியும் " என்று தன் வேதனையை ஜெயந்தியிடம் சொல்லி விட்டு சென்றாள்.
இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஜெயந்திக்கு தாம் அடுத்து என்ன செய்ய போகிறோம், எங்கே போவது என்ற கவலை ஏற்பட்டது. காலை எழுந்தது முதல் நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்தவளுக்கு கண்களில் நீர் நிரம்பியது.
கண்களின் திரை முழுவதும் நீர் நிரம்பி இருக்க எதிரே வரும் லாரியை அறியாதவளாய் அதற்கு தன் உயிரைப் பரிசாக குடுத்தாள்.
இது ஜெயந்தி என்னும் ஒரு பெண்ணின் கதை இல்லை. பல ஜெயந்திகள் இதே போல் தம் உயிரை சமுதாயத்திற்கு பலிக் கொடுத்து இருக்கிறார்கள்.
என்ன தான் இன்று திருநங்கைகள் நல்ல நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் கூறிக் கொண்டிருந்தாலும் பலரும் ஜெயந்தியைப் போல் அல்லது அந்த திருநங்கை கூறியதைப் போன்று உடம்பை விற்றோ பிச்சை எடுத்தோ தான் வாழ்கிறார்கள்.
மூன்றாம் பாலினதவர்களை அங்கீகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொது மக்கள் அனைவரும் மூன்றாம் பாலினத்தவர்களையும் சக மனிதர்களாய் நடத்த வேண்டும்.
மனிதநேயம் ஓங்கி, திருநங்கை மற்றும் திருநம்பிகளும் இயல்பான வாழ்வினை வாழும் நிலை உருவாக வேண்டும்.
-மாற்றம் வேண்டும் -
-நந்தினி மோகனமுருகன்
#734
25,120
120
: 25,000
3
4 (3 )
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
Nandhini M
Pavalamani Pragasam
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50