ஆகஸ்ட் 99

Bharathi Balasundaram
சிறார் இலக்கியம்
4.3 out of 5 (4 )

ஆகஸ்ட் 99

ஊரின் பெரிய ஏரியின் நுழைவு மதுகு அது, ஆற்றங்கரையின் கடைசி வடிகாலில் ஆற்றை பார்த்தபடியே அவனும் அமைதியான ஆறும் தனிமையாய் மாலை பொழுதில் செவ்ஞ்சூரியனை பார்த்தபடியே இருந்தார்கள்.

கூட்டிற்கு திரும்ப செல்லும் நாரைகள், ஆற்றில் மிதந்து வரும் சில கட்டைகளை பார்த்தபடியே மெல்ல எழுந்து தன் ஆடைகளை அகற்றி ஆற்றில் குதித்தான். மேகங்கள் நகர்வதை பார்த்துக் கொண்டே நீரில் மதிந்துக் கொணுடிருந்தான். நீர் திவளைகள் முகத்தில் இருந்து வழிந்து தண்ணீரில் சேர்ந்தது.
நகரும் மேகம், நாரைகள், ஆறு இவையாவும் சில வருடங்கள் அவனை பின்னே அடித்து சென்றது!

தாரிடாத சிதறி கிடந்த கருங்கல் சாலையில் வாய்க்கால் வெட்டி போடப்பட்ட மண் மூடி,
மண் சாலையாய் கிடந்த அந்ந பாதையில் ஆடுகளின் சத்தத்துடன், குட்டிகளின் துள்ளல் விளையாட்டுடன் கையில் ஒரு மூங்கில் சிம்பை எடுத்துக் கொண்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக ஏரிக்கரையில் விட்டு விட்டு வருவதாக அவன் சென்றுக் கொண்டிருந்தான்.

தூரத்தில் இருந்து அழைக்கும் குரல் ஒன்று அவனுக்கு கேட்க திரும்பினான்.
ஒரு கையில் நெகிழி பையும் ஒரு கையில் பழையச் செய்தித்தாளில் செய்த அரையடி அளவுள்ள ஒரு பட்டத்துடன் கால்சட்டையும், மண் துகள்கள் படர்ந்த பனியனுடன் அவன் ஓடிவந்தான். கால்சட்டையை மேலே இழுத்து அரணாக்கொடியில் இருக்கிக் கொண்டு
இவனுக்கு அருகில் ஓடி வந்தான்.

"ஏன்டா, இன்னைக்கு இவ்வளவு நேரங் கழிச்சி ஓட்டிட்டு போற"
"எங்க அம்மா எழவுக்கு போய்டு வந்து இப்பதா தண்ணி வச்சிது ஆட்டுக்கு........ இப்போ மணி என்னாடா இருக்கு..?"
அந்த ஊரை கடந்து சென்ற பேருந்தின் சத்தம் இருவருக்கும் கேட்டது.
"பத்தரை வண்டி இப்பதா போது...." பட்டத்தின் நூலை சற்று நீட்டி விட்டான். பட்டம் காற்றில் மிதந்தது..
"என்னாடா இருக்கு அந்த ஜௌத்தாலுல... " வேலியில் ஏறி கொடியை மேய்ந்த ஆட்டை கம்பை எடுத்து விரட்டி ஓடினான். பாதிக் கொடியை இழுத்து கவ்விக் கொண்டு அந்த பழுப்பு நிற ஆடு ஓடியது.
இவனும் பட்டத்தை காற்றில் சடசடக்க விட்டே அவனிடம் ஓடினான்.
"அதான்டா, பூசைக்கு போட்ட பூ. ஆயா ஏரில உட்டுட்டு வர சொல்லிச்சி"

சாலையோர வாய்காலில் சலசலப்பு சத்தம் கேட்க, "ஓய்... பெரிய மீன் இருக்குடோய்..."
இருவரும் வாய்காலை ஓடி எட்டி பார்த்தனர். நீரில் வட்டம் வட்டமா அலைகள் படர்வதை பார்த்து கொண்டே, "டேய், இந்த குச்சியை பிடி" மூங்கில் சிம்பை அவனிடம் கொடுத்தான்.
ஒரு பெரிய மண்கட்டியை எடுத்து வட்டத்தின் மய்யத்தில் தலைக்கு மேலே தூங்கி வேகமாக வாய்க்காலில் போட்டான். தண்ணீர் இருவரின் மேலே வரை உயர்ந்து சற்றி இவர்களை நனைத்து சென்றது.
மீன்கள் நீத்தி செல்வதற்கு தடயம் இருக்குமாயென வாய்க்காலை ஊற்றி பார்த்தபடியே நின்றுக் கொண்டிருந்தனர்.

வாயுகாலில் சலசலப்பு அடங்கியது, மீன்கள் இருந்த மாதிரி எதுவும் இல்லையென ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"டேய்....ஆடு அங்க மேலவேலிக்கு உள்ள நுழைது டோய்...." பக்கத்து வயலில் இருந்து குரல் சத்தமாக கேட்டது. அவனிடம் மூங்கில் சிம்பை திரும்ப பெற்றுக் கொண்டு ஓடினான்.

திறந்து இருந்த வேலி வழியாக ஐந்து ஆடுகள் உள்ளே நுழைந்தும், மூன்று ஆடுகள் வரிசையில் நின்றது நுழைவதற்காக. வேகமாக ஓடிவந்து ஆடுகளை விரட்டி உள்ளே சென்று முற்புதரை சிம்பால் தட்ட உள்ளேயிருந்த மற்ற ஆடுகளும் சாலைக்கு ஓடியது.

பட்டத்தை ஒரு கையில் இருக பிடத்துக் கொண்டு கால்சட்டையை மேலே தூக்கி போட்டுக் கொண்டான், பையில் இருந்து இரண்டு சூடமிட்டாயை எடுத்து அவனிடம் கொடுத்தான்.
திறந்து கிடந்த வேலியை மூடிவிட்டு அதை வாங்கி கொண்டான்.
"டேய், சன்னல் கடையிலை சூடமிட்டாய் வந்துச்சா" ஒரு மிட்டாயை கன்னத்தின் இடையில் வைத்துக் கொண்டான்.
"ராத்திதா, வாங்கிட்டு வந்நு வச்சித்தான்"

இருவரும் வாய்க்கால் கரையில் வேறு ஏதாவது மீன் தெரிகின்றதாயென பார்த்துக் கொண்டே ஒரு மண் மேட்டில் ஏறி ஆற்றங்கரைக்கு வந்தனர்.
" டேய் ஜௌத்தால இந்த தொரய்லயே போட்டுட்டுடா.."
"பட்டத்த புடி" நெகிழியில் இருந்த காய்ந்த பூக்களையும், மாலைகளையும் தண்ணீரில் கொட்டினான். அந்த பையை மட்டும் ஆற்றில் விடாமல் திரும்பி வந்து பட்டத்தை வாங்கி கொண்டான்.

"வேற முட்டாய் இருக்கா.." வாயில் கரைந்திருந்த இறுதி பகுதியை கடித்துக் கொண்டே கேட்டான்.
"இல்லடா....நாலு வாங்குன, உனக்கு ரெண்டு எனக்கு ரெண்டு"
"சரி, என் கிட்ட இருவது பைசா இருக்கு நாம சாயந்தரம் வாங்லா..."

இருவரும் ஆற்றங்கரை சாலையில் கிடந்த சில கருங்கற்களை எடுத்து அந்த நெகிழியின் உள்ளே போட்டார்கள். நெகிழி நிறைந்து ஓரிரு கற்களை கையில் எடுத்துக் கொண்டர்.

ஆடுகள் அந்த சிதறிகிடக்கும் கருங்கற்களுக்கு இடையில் தலையை மேலும் கீழும் அசைத்து செல்ல, குட்டிகள் ஆடுகளுக்கு இடையில் தடுமாறி தடுமாறி தாய் ஆட்டிற்கு அருகில் செல்கிறது... தேங்கி கிடக்கும் ஒரு குட்டையில் மொத்தமாக தண்ணீர் குடிக்க அந்த குட்டையை சூழ இருவரும் ஒரு அரசமரத்தின் நிழலில் நின்றனர்.
"டேய்,, ஓட்டி விட்டுட்டு வந்து குளிப்போமா?" பட்டத்தை மரத்தில் கட்டிவிட்டு கீழே கிடந்த சில காய்ந்த மரகட்டைகளை எடுத்துக்கொண்டான். ஆடுகள் தண்ணீர் குடித்து விட்டு குட்டையை விட்டு விலக இருவரும் ஆற்றின் பாலத்தை நோக்கி ஆட்டை ஓட்டி சென்றனர்..
"என்டா, அந்த ஆடு இழுத்து இழுத்து நடக்குது இப்போதா பாக்குற... கால முள்ளு இருக்கா??"
கட்டையால் ஒரு கருநிற ஆட்டை அவனிடம் காட்டினான்.
"இல்லடா,, முந்தாநேத்தி வாழக் கொல்லக்கு உள்ள போய்டிச்சி, போய் மேயகூட இல்லடா உள்ள போச்சி அதா... அந்த கல்லுவீட்டு கிழவன் வழுக்க மண்டையன் கல்ல தூக்கி போட்டுடா... "
கையில் இருந்த ஒரு கல் கீழே விழ அதை எடுத்துக் கொண்டு "ஒரு நாள் இந்த கல்லால அந்த கிழவ மேல தூக்கி போட போற பாரு.... "
"போடு, போடு அந்த மாமா மிலிட்டரில இருக்காரு! உன்ன புடிச்சிட்டு போய்டுவாரு... "

ஏரிக் கரையின் தூரத்தில் மேய்ச்சலுக்காக இவர்களுக்கு முன்பே சென்ற ஆடுகள் கத்த இந்த ஆடுகளும் கத்திக் கொண்டே ஆற்றின் பாலத்தை கடந்தது.

பாலத்தை கடந்து ஏரியின் கரையோர பாதையில் ஆடுகள் வேகமாக கத்தி கொண்டி மற்ற ஆடுகளுடன் சேர்வதற்கு ஓடியது.

இருவரும் ஏரியின் கரையில் இருந்த பெரிய, பல கிளைகளுடன் நீண்டு வளர்ந்திருந்த ஒரு நாவல் மரத்தின் கீழே வந்து பழங்கள் இருக்கிறதா என மரத்தின் கிளைகளை பார்த்து கொண்டிருந்தனர்.
கொண்டு வந்த கட்டையை தூக்கி ஒரு கிளையில் விளாசினான்.. சில பழங்களும் பல காய்களும் தண்ணீரில் விழுந்து மிதந்தது....
இவனும் மூங்கில் சிம்பை கரையில் தூக்கி போட்டு விட்டு அவனிடம் பையில் இருந்த கற்களை வாங்கினான்.
சில கற்களை வீசி நிறைய காய்களாக விழுவது பார்த்து, "டேய்,, யாரோ மரத்துல ஏறி உலுக்கி இருக்கான்கடா..... பழலாம் நேத்தி அதிகாம இருந்துதே....."
"இப்போ என்ன பண்றது..."
"நீ கல்ல கொட்டிட்டு ஜௌத்தால என் கிட்ட காட்டு, நா நத்தை புடிச்சி போடுற.... இங்க வந்ததுக்கு இத புடிச்சிட்டு போய் கண்ண அண்ண கிட்டி குடுத்து வறக்க சொல்லுவோம்... அப்பறம் பொட்டி கடைக்கு போய் இருவது பையாசா என் கிட்ட இருக்குல அதுக்கு சூட முட்டாயும், தேன் முட்டாயும் வாங்கலாம்,, என்ன சொல்ற...? "
கற்களை தண்ணீரில் கொண்டிவிட்டு மிதந்த சில நாவல் பழங்களை எடுத்து கையில் வைத்துக் கொண்டு பையயை அவனிடம் விரித்து காட்டினான்.
சரசரவென கல்லில் ஒட்டியிருந்த நத்தைகள் எடுத்து அந்த பையில் போட பாதி பை நிறைந்தது. இருவரும் தண்ணீரில் இருந்து மேலே கரைக்கு வந்து பாலத்தை கடந்து திரும்பி சென்றனர்.

அரசமரத்தின் அருகில் வந்து பட்டத்தை அவிழ்த்தான்..
"டேய், குளிக்கலாம்.... இல்ல சாய்காலம் குளிக்கலாமா...?"
"பட்டத்தை கயட்டாத... நான் போய் ஆய் இருந்துட்டு வரன்..." மூக்கில் சிம்பை மரத்தில் சாய்த்துவிட்டு அருகில் இருந்த தேக்கந் தோப்பிற்கு உள்ளே சென்றான்.

பட்டம் காற்றில் மெல்ல ஆடிக் கொண்டே இலைகளை உரசிச் சென்றது. அதற்கு கீழே அவனுக்கா காத்திருந்தான். தூரத்தில் ஆடுகள் குட்டியை தேடி கத்தும் சத்தம் கேட்டது. மரத்தில் கருவாட்டு குருவி வந்து அமர்ந்தது. ஆற்றில் தண்ணீருக்கு மேல கொக்கும், மீன் கொத்திகளும் பறக்க நீர்க்கோழிகள் தண்ணீரில் மூழ்கி எழுந்தது....
"டேய்........."அவனை வேகமாக அழைத்துக் கொண்டே பனியனை கழட்டி மரத்திற்கு அருகில் தூக்கி போட்டான்.
"வரன்டா...." தோப்பில் இருந்து இளங்குரல் சத்தமாக கேட்டது.
தேக்க தோப்பில் அமரந்து மரத்தின் உச்சியில் இருக்கும் சூரியனை பார்த்துக் கொண்டிருந்தான்."ம்ம்ம்...."
குயில் சத்தம் ஒன்று கேட்க எங்கே என சுத்தி சுத்தி பார்த்தபடியே எழுந்தான். தோப்பை விட்டு வெளியே வந்தான்.

மரத்திற்கு அடியில் பனியனும, கால்சட்டையும் கழட்டி கிடந்தது... அதை பார்தபடியே அவனை அழைத்தான்..."ஓய்ய்இஇஇ" ஆற்றிற்கு அருகில் சென்றான்.
சுற்றி சுற்றி பார்க்க யாரும் இல்லை, அவனையும் காண வில்லை. "டேய்...." வேகமாக கத்தினான். தண்ணீர் காற்று குழியி தோடர்ந்து வந்துக் கொண்டே இருக்க கத்திக் கொண்டே சாலையில் ஓடி, அருகில் இருந்த வயலில் இருந்த ஆட்களை அழைத்தான்.

அனைவரும் வேகமாக ஓடிவர, காற்றுக் குமிழி வரும் இடத்தை ஓடிபோய் கண்களில் கண்ணீருடன் காட்டினான். அழுதுக் கொண்டே ஆற்றை பார்க்க ஓடி வந்தவர்கள் மளமளவென நீரில் குதித்தனர்.
அனைவரும் மூழ்கி மூழ்கி எழ ஒன்றும் புலப்படவில்லை இவனுக்கு..

அனைவரும் ஒருவருக்கு ஒருவர் முகத்தை பார்த்த படியே மரத்திற்கு அடியில் நின்று அழும் அவனை பார்த்தார்கள். அவன் அவர்களுக்கு அருகில் சென்றான்.... "அண்ணாஅஅஅ"

மரத்தில் கட்டிருந்த பட்டம் காற்றில் ஆடிக்க கொண்டிருந்தது..... காற்றின் ஓசை அனைவரையும் அமைதியாக்க மீண்டும் ஒருமுறை அனைவரும் உள்ளே மூழ்கினார்கள்....!!!!


தண்ணீரில் வானத்தை பார்த்த படியே அந்த நாட்களை நினைத்து மிதந்துக் கொண்டிருந்தான். மேகங்களுக்கு கீழே நாரைகள் ஏரியின் திசையில் கூட்டிற்கு பறந்து செல்கிறது.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...