வைரமணி

vanisha79
கற்பனை
4.9 out of 5 (188 )

“நல்லா டிப் டிப்பா கிளம்பிட்ட போல”

“பின்ன! வருஷத்துக்கு ஒரு முறைதான் வருந்தி வருந்தி அழைக்கிறாங்க! அன்றைக்காவது அலங்கரிச்சுக்கிட்டு அம்சமா போகனும்ல! போன தடவை போனப்போ எனக்கு என் மகன் எடுத்துக் குடுத்த சீலை இது! நல்லாருக்கா?” என்றவாறே ஒரு சுற்று சுழன்றுக் காட்டினார் வைரமணி.

“அம்மன் சிலையாட்டம் அழகா இருக்க இந்தச் சீலையில” எனப் பாராட்டினார்கள் அந்த சிமெந்து பெஞ்சில் அமர்ந்திருந்த வைரத்தின் தோழிகள்.

“சரி, டைமாகுது! இப்போதைக்குக் கிளம்பினாத்தான் சாப்பாட்டு நேரத்துக்கு கரேக்டா போய் சேர முடியும்! நான் போய்ட்டு வரேன்” எனச் சிரித்த முகமாக விடைப் பெற்றார் அவர்.

“நூறு ரூபா கூட இருக்காது இந்த சீலை! அதுக்கே அவ முகம் ஜொலிக்குது பார்த்தியா!” என ஒருத்தி சொல்ல,

“இந்த ஒரு நாள், மருமகக்காரி முக்கி முனகிட்டே சமைச்சிப் போடுறத, வருஷம் முழுக்க ஆவலா காத்திருந்து முகம் சுழிக்காம வயிறார சாப்பிட்டு வரா! இவள போய் யாரும் புரிஞ்சுக்கலியே!” என அரற்றினாள் இன்னொருத்தி.

“அட விடுங்கடி! நமக்கு மட்டும் என்ன வாழுதாம்! இது கெட்ட கேட்டுக்கு ஓட்டை வடைதான் இப்போ ரொம்ப முக்கியம்னு முனகலும், நாலு வகை இனிப்பில்லாட்டி என்ன, இதுக்கு ஆக்கிப் போடறதே பெரிய விஷயம்னு ஒரு எள்ளலும்தான் மிச்சம். அதையும் நம்மள ஒழுங்கா சாப்பிட விடுதுங்களா? நாம கைய வைக்கறதுக்கு முன்னமே இலையில இருந்து எடுத்துத் தின்னுடுதுங்க! காலம் கலிகாலமா ஆயிடுச்சு!” எனச் சலித்துக் கொண்டாள் இன்னொருத்தி.

தூரமாய் நடந்திருந்தாலும் இவர்கள் பேசியது காதில் விழத்தான் செய்தது வைரத்துக்கு.

‘விலையில என்ன இருக்கு! எடுத்துக் குடுக்கனும்னு எண்ணம் இருக்கே, அதே பெரிய வரமில்லையா! என் மருமக எப்பொழுதுமே அப்படிதான்! வேலைன்னா வணங்காது! அங்க இருந்த வரைக்கும் எல்லாமே நானே செஞ்சுக் குடுத்து சொகுசா பழக்கி விட்டுட்டேன். இப்போ யார நொந்து என்னப் பயன்!’ என நினைத்துப் பெருமூச்சு விட்டவர், நடையை எட்டிப் போட்டார்.

அந்தத் தெருவில் இவர்களது வீடுதான் பெரிய வீடு. வீட்டைச் சுற்றி தாராளமாய் இடம் இருக்க, இவர்தான் காய்கறிகளோடு பழ மரங்களும் நட்டு வைத்திருந்தார். மாங்காய் சீசன் வந்தால், இவர் வைத்த மரங்களில் மாங்காய் காய்த்துக் குலுங்கும். இவர்கள் சாப்பிட்டு, ஊறுகாய் போட்டும் கூட இன்னும் மீதமிருக்கும். தெருவில் உள்ள அத்தனை வீட்டுக்கும் பழங்களை இலவசமாகவே குடுப்பார் வைரம். தெருப் பிள்ளைகள் இவரை ‘மாங்காப்பாட்டி’ எனச் செல்லமாய் கூப்பிடுவார்கள்.

வெளியே வந்து இவரை யாரும் வரவேற்காவிட்டாலும், அந்த மரங்கள் ‘வா தாயீ’ எனத் தலையசைத்து வரவேற்றன.

புன்னகையுடன் வீட்டின் உள்ளே நுழைந்தார் வைரமணி. வீடே ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி வாசத்தில் மணமணத்தது. உள்ளே ஒரே களேபரமாய் இருக்க, இவர் வந்ததை யாரும் கண்டுக் கொள்ளவில்லை.

“டேய் சிவா! எங்கடா தேங்காய்?” எனக் கத்தினார் வைரத்தின் மகன் மகேந்திரன்.

“ஃப்ரிட்ஜ் பக்கத்துல பாருங்க! சும்மா நொய் நொய்னு என் பேர ஏலம் போடறது!” என முதல் வாக்கியத்தை சத்தமாகவும், இறுதி வாக்கியத்தை முணுமுணுப்புடனும் சொன்னான் சிவா.

“ஏன்டா, காலையில இருந்து நானும் உங்கம்மாவும் ஆடிக்கிட்டு இருக்கோம்! போனை நோண்டறத விட்டுட்டு கொஞ்சம் வந்து உதவி செஞ்சா என்னடா? தண்டக்கழுத!”

“இருய்யா இரு! பாட்டிய நீ கை கால் விழுந்ததும்தான் ஆசிரமத்துக்கு அனுப்பன! உன்னை நான் நல்லா இருக்கறப்பவே பேக் பண்ணிடறேன்” எனக் அடிக்குரலில் கருவிக் கொண்டே உதவி செய்யப் போனான் அவன்.

அவன் பேசுவதைக் கேட்ட வைரம் விரக்தியாய் சிரித்துக் கொண்டார்.

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு சும்மாவா சொல்லி வச்சாங்க பெரியவங்க! மகனே, நீயாவது என்னைப் போல இல்லாம சூதனமா உனக்குன்னு நாலு காசு சேர்த்து வச்சிப் பொழச்சிக்கடா! உன் படிப்பு, கோலாகலமா கல்யாணம், வீடு வாங்கப் பணம், உன் பொண்டாட்டிக்கு நகை நட்டு, பேரனுக்கு பைக்குன்னு இருந்ததெல்லாம் உங்களுக்கே அழிச்சேன். மிச்சம் மீதி வச்சிருந்தத எடுத்து, என்னை ஆசிரமத்துல கொண்டு சேர்த்துட்டீங்க! கடைத் தேங்காவ எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைச்ச மாதிரி, என் காசுல என்னையே பேக் பண்ணி அனுப்பிட்டீங்க! என்னமோ போடா முருகேசா!’ என மனதிற்குள் சலித்துக் கொண்டவர், நேராக வரவேற்பறைக்குச் சென்று, தனது படத்தை வைத்திருந்த மேசைக்கு அருகே அமர்ந்துக் கொண்டார்.

“என்னங்கடா நீங்க! எத்தனை எத்தனைப் போட்டோ சரோஜா தேவி போலவும், பத்மினி போலவும் அழகழகா போஸ் குடுத்து எடுத்து வச்சிருந்தேன். கால முச்சோடும் வச்சிருந்துப் பார்க்கப் போறதுக்கு, நான் மேக்கப் இல்லாம அழுது வடிஞ்சு நிக்கறப் போட்டோவ வச்சிருக்கீங்களே! அதுக்காச்சும் அழகா வட்டமா பொட்டு வச்சிருக்கீங்களா!! இப்படி கோணல் மாணலா இருக்கு! இத்தன வருஷமா இந்த உள்ளூர் கிழவிக் காப்பாத்தி வச்சிருந்த இமேஜே டேமேஜ் ஆகிப் போச்சு!” என வருடா வருடம் புலம்புவதுப் போல இப்பொழுதும் புலம்பினார் வைரம்.

இந்த முறையும் மாலைப் போட்டிருந்த இவரின் படத்தின் முன்னே இப்பொழுது அவர் அணிந்திருந்த அதே கட்டம் போட்ட புடவை, வேறு நிறத்தில் வீற்றிருந்தது. படத்தின் முன்னே நின்று கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த மருமகளை நோக்கியவருக்கு ஒரே ஆச்சரியம்.

அவள் முணுமுணுத்ததை உற்றுக் கேட்க ஆரம்பித்தார் வைரம்.

“ஆனாலும் கெய்வி, உனக்கு இருக்கற அலும்பு வேற யாருக்கும் இருக்காது! எவ்ளோ நேக்கா, அந்த ரெட்டை வடம் சங்கிலிய உன்னோட தங்கச்சி மகளுக்குக் கழட்டிக் குடுத்துட்ட! ஆசிரமத்துல ஜோலி முடிஞ்சா கழட்டி எங்கிட்டத்தான் குடுப்பாங்கன்னு தப்புக் கணக்குப் போட்டுட்டேன். காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் லவட்டிக்கிட்டுப் போனது போல, அவ வந்து புடுங்கிட்டுப் போய்ட்டா”

‘அடிப்பாவி! உனக்கு நான் வாங்கிப் போட்டதுல இருந்து, என்னோட நகைங்க எல்லாத்தையும் குடுத்தும் கூட, புருஷன் செத்துப் போனவளுக்கு அன்பா நான் போட்ட அந்தச் சங்கிலிதான் உன் கண்ணை உறுத்துதா! செத்துப் போனா நகை நட்டு ஒன்னும் கூட வராதுடி! ஒத்த வெள்ளை சேலைதான் வருஷம் முழுக்க! தெவசம் அன்னைக்கு மட்டும்தான் கலர் ட்ரேஸ்சு! இப்பவே எல்லாத்தையும் போட்டு அனுபவிச்சுக்கடி என் அருமை மருமகளே!’

“என்னங்க, மணியாகுது! படையலப் போடலாம்” என வீட்டு மருமகள் குரல் கொடுக்க, வீட்டு மக்களோடு அக்கம் பக்கத்து மக்களும் கூடினார்கள்.

தேங்காய் உடைத்து, கற்பூரம், ஊதுபத்திக் காட்டி, தலை வாழை இலையில் சைவமாய் விருந்து படைத்தார்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துப் போயிருந்த வைரமணிக்கு.

இடது பக்கமாய் வைரத்தின் படத்துக்கு முதலில் ஆரத்திக் காட்டிய மகேந்திரன் உடைந்து அழுதார்.

“என்னை மன்னிச்சிடுமா! வேலை வேலைன்னு ஓடி, உன்னைச் சரியா கவனிக்கல நான்! எங்களுக்காக ஓய்வில்லாம உழைச்சு உருக்குலைஞ்சுப் போன உன்ன, கூட வச்சும் பார்த்துக்கல! யூஸ் அண்ட் த்ரோ குப்பையைத் தூக்கிப் போடற மாதிரி, தூக்கிப் போட்டுட்டேன். இப்போ ‘யய்யா(அய்யா) சாமி, நைட்டுல பட்டினியாப் படுக்காத! ஒரு வாய் சாப்பிடுப்பா’ன்னு சாதத்தப் பிசைஞ்சு எடுத்துக்கிட்டு என் பின்னாடியே வருவியே, அதுக்கு மனசு ஏங்குதுமா! மன்னிச்சிடுமா இந்தப் பாவிய” எனக் கதறினார்.

மகன் அழுகையை அமைதியாகப் பார்த்திருந்தார் வைரம்.

“வருஷா வருஷம் இந்த ஒரு நாள் மட்டும் இந்தாள் போடற சீன் இருக்கே! ஷப்பா!” என முனகியபடியே பேரனும் பாட்டியின் படத்துக்கு ஆரத்திக் காட்டினான்.

மனதிற்குள்,

“பாட்டீ! நீ இல்லாம, என்னை யாருமே கவனிச்சுக்கறது இல்லைத் தெரியுமா! ரெண்டு பேரும் வேலைக்குப் போயிடறாங்க! காலேஜ் முடிஞ்சு வந்தா வெறுமையா இருக்கு வீடு! ‘வாய்யா ராசா! களைச்சுப் போயிருப்ப, இந்தாடா கண்ணு டீயீ!’ன்னு உன் குரலுக்கு ஏங்கறேன் பாட்டி. நீ ஆசிரமத்துல இருந்தப்போ ப்ரேண்ட்ஸ், பார்ட்டின்னு உன்னை வந்து எட்டிக் கூடப் பார்க்கல! நீ இருந்தப்போ உன் அருமைத் தெரியல. ஆனா இப்போ உன்னை ரொம்பவே மிஸ் பண்ணறேன்” என மெல்லியக் குரலில் புலம்பியவன், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, மூலையில் போய் அமர்ந்துக் கொண்டான்.

பேரனின் புலம்பலுக்கும் அமைதியாய் அமர்ந்திருந்தார் வைரம்.

மருமகளும் தன் பங்குக்கு ஆரத்திக் காட்டினாள்.

“மாமி! நீங்க இருந்தப்போ வீடு, வீடு மாதிரி இருந்துச்சு! இப்போ ஓர் ஒளியில்ல இங்க! தெனம் விளக்கேத்தி, சாம்பிராணி புகைப் போட்டு, சுத்தமா அழகா வச்சிருப்பீங்க வீட்ட! எங்கப் பார்த்தாலும் பளபளன்னு இருக்கும். பசியா வீட்டுக்கு வரப்போ, சுடச் சுட மனசும் வயிறும் நெறைய சாப்பாடு போடுவீங்க! ஆனா நீங்க உடம்பு முடியாம கிடந்தப்ப உங்கள பார்த்துக்க முடியாம ஆசிரமத்தில விட்டோம். ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம்! வேற வழித் தெரியல மாமி! ஆனா விட்டப் பிறகு, அடிக்கடி வந்து பார்க்கல! வரனும்னு நெனைக்கறப்பலாம், வீட்டு வேலை, சமையல் அப்படின்னு நேரம் ஓடிருச்சு. முடிஞ்சா என்னை மன்னிச்சுடுங்க மாமி. ஆனா ஒன்னு மட்டும் உங்க கிட்ட இருந்துக் கத்துக்கிட்டேன். குடும்பம், வேலை, புள்ளைக் குட்டின்னு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாலும் நம்மளயும் நாம பார்த்துக்கனும். அப்படிப் பார்த்துக்கலனா, எனக்குன்னு ஓய்வு, எனக்கான நேரம்னு எடுத்துக்கலனா உங்களப் போலதான் அனாதையா யாருமில்லாம செத்துப் போகனும்! நீங்க செஞ்ச அந்தத் தவற கண்டிப்பா நான் செய்யமாட்டேன்!”

மருமகள் முணுமுணுத்ததையும் அமைதியாகக் கேட்டிருந்தார் வைரம்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லோரும், இவர் படம் முன்னே வந்து நின்று வணங்கினார்கள்.

“மாங்காப்பாட்டி! நீ இல்லாம இந்த மாங்கா மரம் காய் விடவே மாட்டுது! உன்னையும் நீ தரும் மாங்காயையும் நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் தெரியுமா!” எனக் குட்டி ஒருவன் இவர் படம் முன்னே புலம்ப,

“போறப்போ மரத்துக்கிட்ட சொல்லிட்டுப் போறேன்டா ராஜா! என் செல்லத்துக்கு பழம் குடுன்னு சொல்லிட்டுப் போறேன்” என்றவருக்குக் கண்ணில் நீர் நிறைந்தது.

வந்திருந்தவர்களுக்கு வீட்டினர் இலைப் போட்டு, உணவுப் பரிமாற, வைரம் தன் இலையின் முன்னே வந்து அமர்ந்தார். உயிரோடு இருந்தப் போது இத்தனை வகையாய், ரகமாய் யாரும் இவருக்கு சமைத்துப் போட்டது இல்லை. இவர்தான் எல்லோருக்கும் சமைத்துப் போட்டு, அவர்கள் சாப்பிடுவதில் மனமகிழ்ந்துப் போவார்.

பெருமூச்சுடன், அமைதியாய் சாப்பிட ஆரம்பித்தார் வைரமணி. இந்த ஒரு உணவுதானே அடுத்த திவசம் வரை. மூச்சு முட்ட முட்டச் சாப்பிட்டார் வைரம். திருப்தியாக சாப்பிட்டு முடித்ததும், எழுந்துக் கொண்டவர் தான் வாழ்ந்து முடித்த வீட்டை ஒரு முறை வலம் வந்தார். பின் மகன் அருகே வந்தவர், அவர் தலையை மெல்லக் கோதிக் கொடுத்தார்.

“நல்லா இருடா சாமி! அம்மா அடுத்த வருஷம் வரேன்! உடம்பப் பார்த்துக்கோ!”

பக்கத்தில் நின்றிருந்த மருமகளின் கன்னம் வருடியவர்,

“உடம்பப் பார்த்துக்கோடி! வேலை என்னிக்கும்தான் இருக்கும். நீ சொன்னது போல, கொஞ்சம் ஓய்வும் எடுத்துக்கோ! அடுத்த வருஷம் பார்க்கலாம்” எனச் சொன்னார்.

பேரனின் தாடையைப் பிடித்து,

“எஞ்சாமி! நல்லா சாப்பிடுடா! இப்படி எலும்பும் தோலுமா கிடக்க! அடுத்த வருஷம் பார்க்கிறப்ப நல்லா திடகாத்திரமா இருக்கனும். பாய்டா கண்ணா” எனச் செல்லம் கொஞ்சி விட்டு மெல்ல வெளியே வந்தார்.

இனி ஒரு வருடம் இவர்களைப் பார்க்க முடியாது என்பது மனதை வருத்த,

“செத்தாக் கூட இந்தப் பொம்பள ஜென்மத்துக்கு பந்தபாசம் அத்துப் போக மாட்டுதுய்யா!” எனப் புலம்பியபடி சொய்ங்க் என வந்த இடத்துக்கே திரும்பிப் பறக்க ஆரம்பித்தார் வைரமணி.

முற்றும்.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...