JUNE 10th - JULY 10th
இன்று 27-04-2022, காலை 7.45 மணி
"உங்க கதை நல்லா இருக்கு தம்பி.. ஆனா...", என்று இழுத்தார் சீனிவாசன் சார்.
"பண்ணீரலாம்ல சார்??", என்றேன் நான் கொஞ்சம் தயக்கத்துடன்.
"கண்டிப்பா.. உங்களுக்கு தான் சான்ஸ். ஆனா, இது நம்மளோட ரெண்டாவது படமா வச்சுக்கலாம். எங்களுக்காக முதல்ல வேற ஒரு படம் பண்ணிக்குடுங்க..", என்றார் அவர்.
"என்ன சார் சொல்றீங்க??", என்றேன் நான் குழப்பத்துடன்.
"கூட்டணி இல்லாம பிரிஞ்சு வந்து எங்க ப்ரொடக்ஷன் கம்பெனிக்கும் இது முதல் படம். எடுத்த உடனேயே த்ரில்லர், காமெடின்னு இல்லாம ஒரு வில்லேஜ் சப்ஜெக்ட் இருந்தா நல்லா இருக்கும்ன்னு விருப்பப்படுறோம்.", என்றார் அவர்.
"வில்லேஜ் சப்ஜெக்ட் எழுதிடலாம் சார். ஆனா, ரொம்ப டைம் எடுக்குமே. உங்களுக்கே தெரியும் நான் எடுத்தோம் கவுத்தோம்ன்னு எதையும் எழுத மாட்டேன். நிதானமா யோசிச்சு ரெண்டு மூணு தடவ ஆராய்ச்சி செஞ்சு பாத்துட்டு தான் எழுதுவேன்னு.", என்றேன் நான்.
"புரியுது தம்பி.. நீங்க கதை சொல்ற விதம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. அதனால தான் உங்களையே ரெண்டு படத்துக்கும் புக் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணீருக்கோம். உங்களுக்கு எவ்வளவு டைம் வேணுமோ எடுத்துக்கோங்க. நல்ல கிராமத்து கதையோட வாங்க. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நம்ம ரெண்டு படமும் பெரிய ஹிட் ஆகும்..", என்றார் அவர் உற்சாகத்துடன்.
"சரி சார்.. கதையோட வரேன்..", என்று சொல்லி புன்னகைத்துவிட்டு எழுந்து வெளியே வந்தேன்.
வீட்டை நோக்கி வண்டியை கிளப்பினேன்.
'திடீர்ன்னு வில்லேஜ் சப்ஜெக்ட் கேட்டா நான் எங்க போவேன். இப்போதைக்கு தமிழ்நாட்டுல எந்த கிராமம் கிராமமா இருக்கு?? எல்லாம் சிட்டி ஆயிருச்சு. பிக்பாஸ் ஓவியா ஆர்மி, ஆன்லைன் கிளாஸ் பள்ளிக்கூடம், ஹாட்ஸ்டார்ல குக் வித் கோமாளி பாக்குறதுக்கு ஒரு கூட்டம்ன்னு நல்லா டெவலப் ஆயிட்டாங்க. இப்ப போய் வில்லேஜ் சப்ஜெக்ட் கதை எடுத்து எப்டி ஓட்டுறது?? ஒருவேளை நம்மல கழட்டி விடுறதுக்கு காரணம் தெரியாம இப்டி ஒரு டெஸ்ட் வச்சுருப்பாங்களோ??', என்று எனக்குள் நானே யோசித்துக்கொண்டு வீட்டை அடைந்தேன்.
என் போன் சிணுங்கியது. யார் என்று பார்க்காமல் காதில் வைத்து,
"ஹலோ...", என்றேன்.
"என்னடா?? நீ இன்னும் கிளம்பலையா??", என்றது அந்தப்பக்கம் இருந்த குரல். என் அக்கா அகிலா.
"என்னவாம்??", என்றேன் நான் அலட்சியமாக.
"என்னடா எதுவுமே தெரியாத மாதிரி கேக்குற??", என்றாள் கொஞ்சம் பதட்டத்துடன்.
"என்னன்னு தான் சொல்லேன்..", என்றேன் எரிச்சலுடன்.
"இன்னைக்கி சாமி தூக்கி வைக்கிறாங்கடா. நாளைக்கி பொங்கல். நீ வரேன்னு சொன்னியே..", என்றாள்.
அப்போது தான் நாட்காட்டியில் தேதியை பார்த்தேன்.
"ஐயோ.. தோ கெளம்பீட்டேன்..", என்று சொல்லி அவசர அவசரமாக ஆடைகளை மாற்றினேன்.
"மறந்துட்டியா??", என்றாள் அக்கா.
"ஆமாக்கா.. தேதியே நியாபகம் இல்ல. நீயாச்சும் நேத்து நைட் ஞாபகப்படுத்தியிருக்கலாம்ல..", என்றேன்.
"ஆமாடா.. இங்க இருக்க வேலை பத்தாதுன்னு உனக்கு இந்த வேலை வேற பாக்குறேன்..", என்று சலித்துக்கொண்டாள்.
"என்ன வேலை பாத்துட்டியாம் அப்டி?? இருக்க ரெண்டு பேருக்கு சாப்பாடு செஞ்சுருப்ப, அதும் நீ எங்க சமைச்சுருக்க போற?? பாட்டி தான் சமைச்சுருப்பாங்க, நீ நல்லா தின்னுட்டு தூங்க போற.. இதுல சலிப்பு வேற..", என்றேன்.
"சொல்லுவடா.. நீ சொல்ல மாட்ட?? ரெண்டு பேரா?? நீ வரன்னு சொல்லி எல்லாரும் வந்துருக்காங்க. ஒழுங்கா கிளம்பி வந்து சேரு. இப்பவே மணி 9 ஆச்சு. இப்ப கிளம்புனா தான் மதிய சாப்பாட்டுக்கு இங்க வந்து சேர முடியும்..", என்றாள்.
"சரி சரி.. வந்துடுறேன்..", என்றேன்.
"டேய்.. டேய்.. ஸ்டாப் தெரியுமா இல்ல யாரையாச்சும் வந்து நிக்க சொல்லவா??", என்றாள் அக்கா.
"அதெல்லாம் வந்துருவேன்..", என்று சொல்லி போனை வைத்துவிட்டு, பையில் இரண்டு நாள் தேவைக்கான துணிகளை திணித்துக்கொண்டு கிளம்பினேன்.
பண்டிகை நாள் இல்லை. ஆதலால் பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
"பஸ் ஊருக்குள்ள போகுமா??", என்றேன்.
"ஊருக்குள்ள போற பஸ் தான் ஏறுங்க..", என்றார் கண்டக்டர்.
நானும் உள்ளே ஏறி ஜன்னல் சீட்டாய் பார்த்து அமர்ந்தேன். என்னை தொடர்ந்து உள்ளே ஏரிய சிலர் அவரவருக்கு பிடித்து சீட்டில் அமர்ந்தனர். ஒரு 10 - 15 நிமிடத்தில் அந்த பேருந்து மெல்ல நகர ஆரம்பித்தது. பேருந்து நகர நகர எனக்குள் இருந்த என்னை நானே உற்று பார்க்க ஆரம்பித்தேன்.
நான், பார்த்திபன். வயது 28. பெற்றோரின் பெருமைக்காக இன்ஜினியரிங் பட்டம் பெற்றேன். ஏன் எதற்கு என்றே தெரியாமல், எம்.பீ.ஏ., படித்து முடித்தேன். ஆனால், இன்று எதற்கும் சம்மந்தம் இல்லாத சினிமா என்னை வாழவைக்க முடிவெடுத்திருந்தது. என் மன அழுத்தத்தை குறைப்பதற்காக ஆரம்பித்த எனக்கும் என் பேனாவிற்குமான உறவு, ஒரு கட்டத்தில் போதையாக மாறியது. அந்த போதை தான் நான் இன்று இப்படி நிற்க காரணம்.
"டிக்கெட்.. டிக்கெட்.. உங்களுக்கு எங்க தம்பி??", என்று என் நினைவலைகளை கொஞ்சம் நிறுத்தினார் கண்டக்டர்.
"மேலப்பட்டி ஒன்னு", என்று சொல்லி ஐம்பது ரூபாயை நீட்டினேன்.
"எந்த ஸ்டாப்??", என்றார் அவர்.
நான் சற்று திடுக்கிட்டேன்.
"என்ன தம்பி?? மில் ஸ்டாப்பா இல்ல சாவடி ஸ்டாப்பா??", என்றார்.
"கருப்பசாமி கோவிலுக்கு போகணும்.. அதுக்கு எந்த ஸ்டாப்??", என்றேன் நான்.
"சாவடி ஸ்டாப்ல எறங்கிக்கோங்க.. அங்க இருந்து 5 நிமிஷம் தான்..", என்று சொல்லி டிக்கெட்டையும் பாக்கி சில்லரையையும் என் கையில் திணித்துவிட்டு அடுத்த சீட்டிற்கு நகர்ந்தார் அவர்.
'ஸ்டாப்பே ரெண்டா பிரிஞ்சுருச்சா?? என்னடா இது?? இதுக்கு தான் அக்கா ஆள வர சொல்லவான்னு கேட்டாங்களோ??', என்று எனக்குள் நானே யோசித்துக்கொண்டு என் நினைவலைகளில் மீண்டும் நீந்த தொடர்ந்தேன்.
எந்த வீட்டில்தான் 'சினிமா'வில் சேர பெற்றோர்கள் சம்மதித்தார்கள்?? அதுவும் 'டைரக்டர்' ஆகப்போகிறேன் என்றால் நூறு என்ன ஐநூறு சதவிகிதம் 'வேண்டாம்' என்ற பதிலே வரும். எனக்கும் அதே பதில் தான் கிடைத்தது. எப்படியோ சமாளித்து, சண்டை போட்டு, அடம் பிடித்து ஒரு வருடம் கால அவகாசம் பெற்றேன். இந்த முயற்சியில் எனக்கு துணையாக இருந்தது என் அக்கா.
என்னை ஆரம்பத்திலிருந்தே, "சும்மா எழுதுடா.. என்னைக்காச்சும் ஒரு நாள் உனக்கு வாய்ப்பு கிடைக்கும்.. இப்ப வர்ற படம்லா பாரு.. நல்லாவா இருக்கு?? இதெல்லாம் பாக்குறப்போ நீ எழுதுறது 200 சதவீதம் பெட்டர்..", என்று சொல்லி ஊக்குவித்துக்கொண்டே இருப்பது அக்கா மட்டுமே.
நான் எழுதும் ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்து பார்த்து, அதில் வரும் குறை நிறைகள் கண்டுபிடித்து மாற்றங்கள் செய்வது, என என்னை மெருகேற்றியது என் அக்கா அகிலா தான். இப்படி நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் என் அக்காவின் பங்கு அதிகமாகவே இருந்தது. இதனாலேயே இந்த ஒரு வருடத்தில் கண்டிப்பாக வெற்றியை மட்டுமே தொட வேண்டும் என்ற முடிவுடன் இருந்தேன்.
எனக்கு கிடைத்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 8 மாதங்கள் முடிந்துவிட்டது. இப்பொழுது வாய்ப்பும் கிடைத்துவிட்டது. இந்த சந்தோஷத்தை முதலில் அக்காவிடம் நேரில் சொல்லவேண்டும் என்பதற்காகவே நான் ஊருக்கு வர சம்மதித்தேன். நான் கடைசியாக 2017இல் திருவிழாவிற்கு வந்தது. ஐந்து வருடங்களுக்கு பின் இப்பொழுது வருகிறேன்.
இப்படியாக என் நினைவுகள் ஓடிக்கொண்டிருக்கையில், "பஸ் ஊருக்குள்ள போகப்பொது. விருதுநகர் போறவங்க இங்கயே எறங்கிக்கோங்க. பஸ் 10 நிமிஷம் நிக்கும்..", என்று சொல்லி கீழே இறங்கினார் கண்டக்டர்.
'எப்படா எறங்குவோம்??', என்று காத்திருந்தது போல கண்டக்டர் பின்னாலேயே இறங்கினார் டிரைவர்.
உண்மையை சொல்லவேண்டுமானால், நானும் இந்த 10 நிமிடத்திற்காகத்தான் காத்திருந்தேன். ஊருக்கு போகிறோம் என்றதுமே, எனக்கு பல நினைவுகள் என் கண் முன் வந்தன. அதில் ஒன்று தான் இந்த, 'மணிமாறன் பேக்கரி'.
விருதுநகர், ராஜபாளையம் செல்லும் வண்டிகள் இங்கே தான் நிற்கும். அதனால் தேநீர் கடைகளும், சில ஹோட்டல்களும் இருந்தன. இந்த மணிமாறன் பேக்கரியை போல கிட்டத்தட்ட 10 - 15 பேக்கரிகள் இருந்தன அந்த பேருந்து நிலையத்திற்குள். அப்படி பல கடைகள் இருக்கையில் இந்த 'மணிமாறன் பேக்கரி' மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்?? என்று கேட்கிறீர்களா?? சொல்கிறேன்..
மணிமாறன் பேக்கரி... சின்ன கடை தான். ஒரு ஆள் மட்டுமே நின்று பலகாரம் வாங்கக்கூடிய அளவே இடம் இருக்கும். அத்தனை பெரிய பலகார பட்டியல் ஒன்றும் இல்லை. வழக்கம் போல இருக்கும் முறுக்கு, மிக்சர் வகைகள் தான். ஆனால் இந்த பேக்கரியில் போடும் 'வெங்காய பக்கோடா' தான் இந்த அளவுக்கு 'மணிமாறன் பேக்கரி' பெயர் பெற்றதற்கான காரணம். ஒரு பக்கம் அடுப்பில் பக்கோடா வெந்துகொண்டே இருக்கும். இன்னொரு பக்கம் தட்டு காலியாகிக்கொண்டே இருக்கும். பேருந்துகள் நிற்கும் அந்த பத்து நிமிடத்தில் அனல் பறக்கும் வியாபாரம்.
என் பள்ளி பருவத்தில் நாங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் ஆளுக்கொரு பொட்டலம் வாங்கி மேய்ந்து கொண்டே செல்வோம். இன்றும் அப்படி தான். அடித்துப்பிடித்து ஒரு பொட்டலத்தை வாங்கிக்கொண்டு உள்ளே ஏறி அமர்ந்தேன். டிரைவர் ஆடி அசைந்து வந்து வண்டியை கிளப்பினார். மெல்ல நகர்ந்தது பேருந்து.
இங்கிருந்து எங்கள் ஊர் 7 கிமீ தூரம். குறைந்தது 20 நிமிடம். வெங்காய பக்கோடாவை சுவைத்துக்கொண்டே என் சிறு வயது நினைவுகளை அசைபோட ஆரம்பித்தேன். ஒற்றை ரோடு. சில நேரங்களில் நாங்கள் நடந்தும் செல்வதுண்டு. விருதுநகர் மாவட்டம் ஆதலால் வெயில் கொஞ்சம் அதிகமே. பாரதிராஜா படங்களில் இருக்கும் பச்சை பசேல் கிராமம் இல்லை இது. ஆனாலும் அழகான ஒரு ஊர் தான் இதுவும்.
அந்த கரிசல் பூமியை பருத்தி செடிகளே அதிகமாக ஆக்கிரமித்திருந்தன. வழி நெடுக சோளத்தட்டைகளை தார் ரோடுகளில் பரப்பி வைத்துவிட்டு ஆங்காங்கே ஆடு மாடுகளை மேய்ப்பார்கள். வண்டிகள் ஏறிச்செல்ல அந்த சோளத்தட்டைகளிலிருந்து சிதறும் சோளங்கள் பார்க்க சிவப்பு முத்துக்கள் போல் இருக்கும்.
ஊரை நெருங்கையில் ஓடை நீரின் சத்தம் நம்மை வரவேற்கும். காற்றின் வாசத்தில் இருந்த மாற்றம் நமக்கு ஏதோ ஒரு வித புத்துணர்ச்சியை கொடுக்கும். நகர நகர ஓடை நம் கை பிடித்து ஊருக்குள் அழைத்துச்செல்லும். இன்னொரு பக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி. நான் அங்கே தான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன். கோடை விடுமுறைகளில் நாங்கள் இங்கே வந்து விளையாடிக்கொண்டிருக்கும் நாட்களின் நினைவு, என்று நினைத்தாலும் என் இதழ்களின் ஓரத்தில் ஒரு புன்னகையை உண்டாக்கும். பள்ளியை கடந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இரட்டை ஆலமரங்கள் நம் வருகைக்காக தோரணமிட்டு காத்திருப்பது போல காட்சியளிக்கும்.
அந்த மரங்களில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள், 'அங்கே இடி முழங்குதே.. கருப்பசாமி தங்க கலசம் மின்னுது...', என்று பாடுவதை கேட்கையில் ஒரு நிமிடம் நம் உடம்பெல்லாம் சிலிர்க்கும்.
ஊருக்குள் நுழைகையிலேயே, "என்ன மாப்ள.. இப்ப தான் வாரீங்களா?? வாங்க சாப்ட்டு போகலாம்..", என்பார் யாரோ ஒரு மாமன் முறைக்காரர்.
"வாயா.. கலர் குடிக்கிறியா??", என்று கேட்டுக்கொண்டே பன்னீர் சோடாவை நீட்டுவார் பெட்டிக்கடை பேச்சி பாட்டி.
இப்படியாக, வீட்டை அடைவதற்குள் பாதி வயிறு நிரம்பிவிடும் அளவிற்கு சொந்தங்களின் உபசாரங்கள் இருக்கும். இது தான் கிராமம்.
'என்ன நான் இன்னும் ஊருக்குள் போகவே ஆரம்பிக்கவில்லையா??', என்று ஏதோ ஒரு எண்ணம் என்னை நினைவுகளிலிருந்து பின்னுக்கு இழுத்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். அனைத்தும் புதிதாக தெரிந்தது எனக்கு. காற்றில் நான் எதிர்பார்த்த வாசம் வரவில்லை. மாறாக ஒரு வித துர்நாற்றம் வீசியது. பஸ்சில் இருந்த அனைவரும் தங்கள் மூக்கை பொத்திக்கொண்டனர். நானும் என் கைக்குட்டையை எடுத்து என் மூக்கை மூடிக்கொண்டேன்.
என்ன இது இப்படி ஒரு நாற்றம்??
சிறிது நேரத்தில், "மில் ஸ்டாப் எல்லாம் எறங்குங்க..", என்று சொல்லி விசிலடித்தார் கண்டக்டர்.
'ஓஹோ... இது தான் மில்லா?? இந்த மில் தான் இந்த நாற்றத்திற்கு காரணமோ??', என்று எண்ணிக்கொண்டே அந்த மில்லை பார்த்தேன்.
இருங்கள்... இந்த இடத்தில் வேறேதோ ஒன்று இருந்ததாக ஞாபகம் இருக்கிறதே. ஆமாம்... மேலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கே தான் இருந்தது அந்தப்பள்ளி. பள்ளி இருந்த இடத்தில் மில்லா?? சினிமாவில் மட்டுமே இது சாத்தியப்படும். என்னை நானே நொந்துகொண்டு சீட்டில் சாய்ந்தேன்.
மில்லை கடந்து வந்தாலும் அந்த துர்நாற்றம் என் மூக்கை விட்டு அகலவில்லை. 'அப்படி என்ன தான் மில் அது??', என்று எண்ணிக்கொண்டு எதார்த்தமாக திரும்புகையில் அந்த ஓடை என் கண்ணில் பட்டது.
என்ன கொடுமை இது?? ஓடைக்கு செல்லும் வழியில் கருவேல முற்களை வெட்டிப்போட்டிருந்தனர். ஓடை நீரெல்லாம் நுரை நுரையாக இருந்தது. அந்த மில் கழிவுகள் இந்த ஓடையிலா கலக்கின்றன?? அப்படி ஒரு மில் தேவையா இந்த ஊருக்கு??
இந்த எண்ணங்கள் என் ஓடிக்கொண்டிருக்கையில் பஸ் திடீரென நின்றது.
"என்ன ஆச்சு?? இது தான் சாவடி ஸ்டாப்பா??", என்றேன் கண்டக்டரிடம்.
"இல்ல தம்பி.. டெம்போ ஒன்னு நிக்குது.. அது கெளம்புனா தான் நாம போக முடியும்..", என்றார் அவர்.
"சரி நான் இங்கயே எறங்கிக்கிறேன", என்று சொல்லி என் பையை எடுத்துக்கொண்டு இறங்கினேன்.
அங்கே எனக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த டெம்போ சுமந்து நின்றது அந்த இரட்டை ஆலமரங்களை தான். என்னை வரவேற்க அந்த மரங்களாவது இருக்கும் என்று இருந்த என்னை அவையும் ஏமாற்றிவிட்டு. கோவிலுக்கு செல்ல மனமில்லாமல் வீட்டை நடந்தேன். வழியில் யாருமே இல்லை. பாட்டு சத்தமும் இல்லை.
வீட்டுக்குள் நுழைந்த நான், "அக்கா.. அக்கா..", என்று கத்தினேன்.
"வாடா.. கரெக்ட்டா வந்துட்ட..", என்றாள் அக்கா புன்னகையுடன்.
"இன்னைக்கி தானே சாமி தூக்கி வைக்கிறாங்க??", என்றேன் சந்தேகத்துடன்.
"ஆமா.. ஏன்டா இப்டி கேக்குற??", என்றாள் குழப்பத்துடன்.
"ஊருக்குள்ள வந்த திருவிழா மாதிரியா இருக்கு?? ஏதோ ஊரடங்கு போட்ட மாதிரில இருக்கு..", என்றேன் விரக்தியுடன்.
"இனிமே தான் காட்டுவாங்கடா..", என்றார் அக்கா சலிப்புடன்.
"அது சரி ஊருக்குள்ள ஆளாச்சும் இருக்காங்களா இல்லையா??", என்றேன்.
"உனக்கு என்னடா ஆச்சு??", என்றாள் அக்கா.
"எனக்கு ஒன்னும் ஆகல.. இந்த ஊருக்கு தான் என்னமோ ஆச்சு... ஸ்கூல் இருக்க வேண்டிய எடத்துல மில் இருக்கு. ஓடைல குளிக்க கூடாதாம், சாக்கடைய கலந்து விட்ருக்காங்க.. திருவிழான்னு சொல்றீங்க ஒரு பாட்டு இல்ல ஒன்னும் இல்ல.. அந்த மரத்த எதுக்கு வெட்டுனாங்க??", என்றேன் வெறுப்பாக.
"முந்தாநாளு மில்லுக்கு சரக்கு கொண்டுவந்த லாரி ஒன்னு அந்த மரத்துல மோதி பெரிய ஆக்ஸிடென்ட்.. அந்த மரம் எடஞ்சலா இருக்குன்னு சொல்லி வெட்டீட்டாங்க..", என்றாள் அக்கா.
"அவன் தண்ணிய போட்டு லாரிய மரத்துல விட்டா அதுக்கு மரம் பொறுப்பாகுமா??", என்று கத்தினேன்.
"சரி.. பேச்சி பாட்டி கடை ஏன் பூட்டீருக்கு??", என்றேன்.
"பேச்சி பாட்டி 3 மாசத்துக்கு முன்னாடி மூச்சு திணறல் வந்து திடீர்ன்னு கடையில இருந்தப்பவே செத்துப்போச்சுடா..", என்றாள் அக்கா வருத்தத்துடன்.
"என்னக்கா சொல்ற?? செத்துப் போச்சா??", என்றேன் அதிர்ச்சியுடன்.
"வயசாயிருச்சுல்ல.. யாரு என்ன பண்ண முடியும்??", என்று அக்கா சலித்துக்கொண்டாள்.
"வயசு மட்டுமே எல்லாத்துக்கும் காரணம் இல்லக்கா..", என்றேன்.
"வேற எது காரணம்?? மில்லா??", என்றாள் அக்கா. நான் அக்காவை மிரட்சியுடன் பார்த்தேன்.
"என்னடா பாக்குற?? மில் தான் காரணம்ன்னு இந்த ஊருல இருக்க எல்லாருக்கும் தெரியும். ஆனா ஒருத்தனும் வாய தொறக்க மாட்டான்..", என்றாள் அக்கா ஆக்ரோஷமாக.
"ஏன்??", என்றேன் குழப்பத்துடன்.
"ஏன்னா இங்க இருக்க யாருக்கும் எதிர்காலம் முக்கியமில்ல. இன்னைக்கி வீட்டுல அடுப்பு எரியணும்.. அது தான் முக்கியம்..", என்றாள் அக்கா.
"சரி ஸ்கூலுக்கு என்ன பண்ணுவாங்க??", என்றேன்.
"இந்த ஸ்கூல்ல அட்மிஷன் கம்மியா ஆயிருச்சு. இங்க வர்ற 20 - 30 பேருக்காக தனியா வாத்தியார் போட்டு சம்பளம் குடுக்க முடியாதுன்னு இழுத்து மூடிட்டாங்க. இழுத்து மூடுன மூணாவது மாசம் மில் வேலை ஆரம்பிச்சுட்டாங்க. உனக்கே எல்லாம் புரிஞ்சுருக்கும்..", என்றாள் அக்கா.
"எல்லாம் தெரிஞ்சும் எதுவும் எப்டிக்கா இருக்காது??", என்றேன் கடுப்பாக.
"என்ன பண்ணனும் இப்ப?? எங்க போனாலும் ஒன்னும் நடக்காது. உனக்கு இந்த ஊருல இருக்கவங்களே சப்போர்ட் பண்ண மாட்டாங்க. ஆடு மாடு மேய்க்கிறது,விவசாயம் பண்றதுல இங்க வெறும் 4-5 பேர் தான். மத்த எல்லாரும் அந்த மில்லுல தான் வேலை பாக்குறாங்க. படிச்சவன்னு ஒருத்தனும் ஊருல இல்ல. எல்லாரும் வெளியூர்ல வேலைக்கு போயாச்சு. அடிக்கும் அமாவாசைக்கும் இப்டி உன்ன மாதிரி ஊருக்கு வரவன் எல்லாம் ரெண்டு நாள் கத்துவான், மூணாவது நாள் ஆபீஸ்ல இருந்து கால் பண்ணாங்கன்னு சொல்லி கிளம்பி போயிருவான். அடுத்து வரப்போ ஊரு வேற மாதிரி இருக்கும். இதெல்லாம் மாத்த முடியாது. முன்னேற்றம்ன்னு இதுக்கு பெருசா பேரு வேற வச்சுருக்கோம் நாம.. போடா.. போய் சாப்ட்டுட்டு அடுத்த வேலைய பாரு..", என்றாள் அக்கா.
விரக்தியில் வாசலில் சென்று அமர்ந்தேன். அக்கா சொன்னது உண்மை தான். நமக்கான எதிர்காலம் நாம் பார்க்கும் வேலையில் தான் இருக்கிறது என்று எண்ணி நல்ல வேலையை தேடி அலைந்த நாம், நம் எதிர்காலம் நம் சூழலிலும் இருக்கிறது என்பதை மறந்துவிட்டோம் என்பது புரிந்தது.
"யாருப்பா அது?? முத்தையன் பேரனா??", என்றது ஒரு குரல்.
அந்த குரலை கேட்டதும் விரக்தியில் இருந்த எனக்கு ஏதோ ஒரு புது உற்சாகம் தோன்றியது. அந்த முகத்தை பார்த்து தான் அடையாளம் சொல்லவேண்டும் என்பதில்லை. அது பொன்னையா தாத்தா. எழுந்து அவரை நோக்கி சிறு குழந்தை போல் ஓடினேன்.
"என்ன ராசா?? எப்டி இருக்க?? இந்த தாத்தாவ ஞாபகம் இருக்கா??", என்றார் அந்த கிழவர் தனது தழுதழுத்த குரலில்.
நான் ஒரு புன்னகையை சிந்திவிட்டு அவரிடம் கையை .நீட்டினேன்.
கலகலவென சிரித்த அந்த கிழவர், "வாட்சா?? ஏரோபிளேனா??", என்றார்.
"ஏரோபிளேன்..", என்றேன்.
தனது தோளில் சாய்த்து வைத்திருந்த கம்பின் மேலே இருந்த ஜவ்வு மிட்டாயை இழுத்து தனது கைவண்ணத்தால் 'ஏரோபிளேன்' செய்து எனது கையில் கட்டிவிட்டார். அதை உற்சாகமாக வாங்கிக்கொண்டு அவரிடம் பத்து ரூபாயை நீட்டினேன். சிரித்துக்கொண்டே அதை வாங்கி தனது சட்டை பைக்குள் வைத்துவிட்டு இன்னும் கொஞ்சம் ஜவ்வு மிட்டாயை கன்னத்தில் ஒட்டிவிட்டார் பொன்னையா தாத்தா. அந்த மிட்டாயை எடுத்து நான் சுவைப்பதைக் கண்ட அந்த கிழவரின் கண்ணில் தெரிந்த ஆனந்தம் விலைமதிப்பில்லாதது.
ம்ம்ம்.. என்ன சுவை.. எத்தனை ஆண்டுகள் ஓடினாலும் மாறாமல் இருந்தது பொன்னையா தாத்தாவின் சிரிப்பும் அந்த ஜவ்வு மிட்டாயின் சுவையும் தான்..
இன்று 18-05-2022, காலை 11.25 மணி..
"படத்தோட பேரு 'ஜவ்வு மிட்டாய்' சார்...", என்றேன்.
"அருமையான கதை.. சுவையான டைட்டில்..", என்றார் சீனிவாசன் சார்.
ஏதோ யோசித்துவிட்டு, "இந்த மாசம் 26ம் தேதி நாள் நல்லா இருக்கு. அன்னைக்கே பூஜைய போட்டு படத்த ஆரம்பிச்சுரலாம் தம்பி..", என்றார் அவர். எனக்கு வார்த்தை எதுவும் வரவில்லை. அவரிடம் ஆசீர்வாதம் பெற்று அங்கிருந்து கிளம்பினேன்.
"அன்னைக்கி சீனிவாசன் சார் சான்ஸ் உறுதின்னு சொன்னப்போ, நான் ஜெயிச்சுட்டேன்னு என் அக்கா கிட்ட சொல்லணும்ன்னு நெனச்சேன். ஆனா ஊருக்கு போனப்ப தான் உண்மை என்னன்னு புரிஞ்சுச்சு. நாளைக்கி என்னோட படம் ரிலீஸ் ஆகி எங்க ஊருக்கு ஏதாவது ஒரு மாற்றம் வந்தா, அப்போ சொல்லுவேன் என் அக்கா கிட்ட.. நான் வெற்றிபெற்றவன்னு.."
அன்று உருவானது ஜவ்வு மிட்டாய்...
#184
47,510
2,510
: 45,000
51
4.9 (51 )
Hithayadhulla
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை கருவேலக் கனவுகள் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Annapurani Dhandapani
Fantastic story
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50