JUNE 10th - JULY 10th
பள்ளி சீருடை அணிந்த சிறு பிள்ளைகள் இருவர், பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அந்த மினி பேருந்தை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால், கொஞ்ச தூரத்தில், முதிய வயது கொண்ட ஒரு அம்மா, ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார்.
பிள்ளைகள் இருவரும் வேகமாக ஓடி வந்து, பேருந்தின் படிக்கட்டு பக்கத்தில் நின்று கொண்டு, "பாட்டி சீக்கிரம் வாங்க" என்று கோரஸாக சத்தம் போட்டனர். அந்த அம்மா வந்து பேருந்தில் ஏறியதும் அந்த மினி பேருந்து புறப்பட்டது.
இதை பேருந்து நிறுத்தத்தில் உள்ள பென்ச்சில் அமர்ந்தபடி, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சண்முகத்திற்கு, ஏதோ தானே ஓடி சென்று அந்த பேருந்தை பிடித்த ஒரு வெற்றி உணர்வு.
தன் பேரன், ஆரவ் பள்ளி படிப்பு படிக்கும் போது, சண்முகமும், அவரின் மனைவி நிர்மலாவும் சொந்த ஊரில் இருந்தார்கள். அங்கு சொந்தமாக மளிகை கடை ஒன்று வைத்து நடத்தி வந்தார்கள். தன்னுடைய ஒரே பையன் சுந்தரத்திற்கு கல்யாணம் ஆகி சென்னையில் வீடு எடுத்து போகும் போது எவ்வளவு கூப்பிட்டும் பிடிவாதமாய் வரவில்லை.
சில வருடங்களுக்கு முன் மனைவி காலமானார். அதனால் ஏற்பட்ட தனிமையும், வயது காரணமாக, அவரோட உடம்பு தன்னோட பேச்சை கேட்காததாலும், வேறு வழியில்லாமல் சென்னையில் உள்ள சுந்தரம் வீட்டில் வந்து தங்கி இருக்க சம்மதித்தார்.
அதனால் தன் பேரனை தினசரி பள்ளிக்கூடத்திற்கு சென்று, அவனை விட்டு வரும் வாய்ப்பு தனக்கு இல்லாமலேயே போனது நினைத்து வருந்தினார். ஆரவ் இப்போது கல்லூரியில் படிக்கிறான். அவனுக்கு யார் துணையும் தேவையில்லை. அப்படி தேவைப்பட்டாலும், சண்முகநாதனால் எந்த உதவியும் செய்ய முடியாத காலத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
சண்முகநாதன், பேருந்து நிறுத்தத்தில் இருந்து எழுந்து புறப்பட்டார். தன் மகன் சுந்தரத்தின் வீடு ஐந்து நிமிட நடையில் தான் இருக்கிறது. ஆனால் சண்முகம் வீடு சென்று சேர குறைந்த பட்சம் இருப்பது ஐந்து நிமிடங்கள் பிடிக்கும்.
எண்பது வயதான சண்முகத்திற்கு நடையும், பார்வையும், கேட்கும் திறனும் குறைபாடு கொண்டது என்பது தவிர்க்க முடியாத கால கொடைகள். ஆனாலும் இன்று வரை முடிந்த மட்டும் தன் வேலைகளை தானே பார்த்து கொள்கிறார்.
தினசரி காலை 5.30 மணிக்கு அலாரம் வைத்தது போல எழுந்துவிடுவார். எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, முதல் வேலையாக டி.வி. ஆன் செய்து பார்க்க தொடங்கிவிடுவார். அவர் தொலைக்காட்சி பார்க்கும் போது, ஒரு நாற்காலியை இழுத்து தொலைக்காட்சிக்கு மிக அருகில் போட்டு கொண்டு அமர்ந்து கொள்வார்.
வால்யூம் வைத்திருக்கிறாரா, இல்லையா என்று சந்தேகம் வரும் அளவுக்கு வைத்திருப்பார். தூரத்தில் இருந்து பார்க்கிறவர்களுக்கு ஏதோ ஊமை படம் பார்ப்பது போலத்தான் இருக்கும். அவரைப் பொறுத்த வரையில் முகங்கள் மட்டும் போதும். குரல்கள் இரண்டாம் பட்சம்தான். பெரும்பாலும் பழைய படம் அல்லது பாடல்கள் தான் பார்ப்பார்.
அதன்பிறகு குளித்து விட்டு, வெள்ளை அல்லது மஞ்சள் நிற காட்டன் சட்டையும், வெள்ளை கரை வேட்டியும் அணிந்து, மெதுவாக நடந்து பேருந்து நிலையத்திற்கு சென்று கொஞ்ச நேரம் அங்கு இருந்து விட்டு வருவார்.
"என்னப்பா, தாத்தா பஸ் ஸ்டாண்டுக்கு போனாலும், வேட்டி சட்டையோட ஏதோ கல்யாண மாப்ள மாதிரி ஒரு கெட்டப்பா கிளம்பிடுறாரு?" என்று ஆரவ், சுந்தரத்திடம் கிண்டலாக சிரித்தபடி கேட்பான்.
அது சுந்தரத்திற்கே ஒரு ஆச்சரியமான விஷயம்தான். சண்முகம் வீட்டை விட்டு வெளியே போகணும் என்றாலே, வேட்டி சட்டைதான் அவரோட காஸ்ட்யூம். வீட்டுக்குள் மட்டும் தான் சாதா சட்டை, கைலியில் பார்க்கலாம்.
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை கட் பனியன், கைலி என்று மளிகை கடையில் புழங்கியவருக்கு பாந்தமான ஒரு துணி போட்டுக்கொள்ள பெரிதாக வாய்ப்பு இருந்திருக்காது. அதனால்தான் இப்போது போட்டுக் கொண்டு சமன்படுத்தி கொள்கிறார் என சுந்தரம் நினைத்து கொண்டார்.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து வந்த பிறகு, காலை டிபன் சாப்பிடுவார். அப்புறம் மெனக்கெட்டு செய்தித்தாளின் சில பக்கங்களை படித்து முடிப்பார். பிறகு கொஞ்ச நேரம் தொலைக்காட்சி, அப்புறம் மதிய உணவு, குட்டி தூக்கம், ஒரு மாலை நேர நடை, இரவு உணவு, தொலைக்காட்சி, பின்பு உறக்கம்.
பேரனுக்கு நேரம் இருந்து, அவனுக்கு 'மூட்' இருந்தால் அவனோடு செஸ் விளையாடுவார்.
"உங்களோடு ஆடுவது ரொம்ப போர் தாத்தா! உங்க ஆட்டத்தையும் சேர்த்து நானே ஆட வேண்டியதா இருக்கு" என்று ஒவ்வொரு முறை ஆட உட்காரும் போதும் ஆரவ் அலுத்துக் கொள்வான். ஏனென்றால் இப்ப வரைக்கும் சண்முகத்திற்கு செஸ்ஸில் எது யானையின் நகர்வு, எது சிப்பாயின் நகர்வு என்று சரியாக தெரியாது.
சண்முகத்திற்கு வேண்டியது தன் பேரனோடு விளையாட வேண்டும். அவ்வளவுதான். அது ஆரவிற்கும் புரிந்தே இருந்தது. சொல்ல போனால் அவனுடைய தாத்தாவின் அறியாமையை அவன் ரசிக்கவும் செய்கிறான்.
அதுவுமில்லாமல் ஆரவுக்கு எப்போதும் சண்முகத்தின் மீது பெரும் அன்பும், கரிசனமும் உண்டு. வீட்டில் அவன் ராஜா வீட்டு கண்ணுக்குட்டியாகத்தான் வளர்கிறான். இதுவரைக்கும் தன்னுடைய அப்பா அம்மாவுக்காக ஒரு துரும்பை கூட எடுத்து போட்டதில்லை. ஆனால் தாத்தாவுக்காக என்றால், துள்ளி குதித்து வேலை செய்வான்.
"ஏண்டா இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல? பெத்து வளர்க்கிறது நாங்க. சேவகம் பண்றது என்னோட அப்பனுக்கா?" என்று சுந்தரம் ஆரவை சீண்டுவார். வெளியில் காட்டிக்கொள்ள வில்லை என்றாலும் இந்த விஷயத்தில் ஆரவை நினைத்து சுந்தரத்திற்கு உள்ளுக்குள் ஒரு சின்ன பெருமிதம் உண்டு
சுந்தரம் மற்றும் அவரது மனைவி சைந்தவி இருவரும் சென்னை புறநகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிகிறார்கள். காலை எட்டு மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டால், மாலை ஐந்து மணிக்கு திரும்பி விடுவார்கள்.
புறப்படுவதற்கு முன் சுந்தரமும், சைந்தவியும் சேர்ந்து காலை உணவு மற்றும் மதிய உணவு செய்து வைத்து விட்டு கல்லூரி சென்று விடுவார்கள். ஆரவ் காலை டிபனை சாப்பிட்டுவிட்டு 8 30 மணிக்கு கல்லூரி சென்று விடுவான்.
சுந்தரம்-சைந்தவி பணிபுரியும் கல்லூரியில் ஆரவுக்கு இடம் கிடைத்தும், பிடிவாதம் பிடித்து வேறு கல்லூரியில் சேர்ந்து விட்டான். கேட்டதுக்கு,"நீங்க ரெண்டு பேரும் வீட்ல என்னை மானிட்டர் பண்றது போதாதா?" என்றான்.
சுந்தரமும் சைந்தவியுடன் சேர்ந்து சமையல் செய்வது சண்முகநாதனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதே நேரத்தில் தான் ஒரு நாள் கூட தன் மனைவிக்கு எந்த ஒரு சிறு உதவியும் செய்ததில்லை என்று நினைத்தால், லேசாக குற்ற உணர்ச்சி மனதுக்குள் எழும். சொல்லப்போனால் தன் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, மளிகை கடைக்கு வந்து தன் கணவனுக்கு உதவியாக இருந்திருக்கிறார்.
இப்போது தன் பிள்ளை வீட்டில் இருக்கும் போது, தன்னால் முடிந்த சின்ன சின்ன வேலைகளை செய்கிறார். குறைவான பாத்திரங்கள் இருக்கும் போது அலம்பி வைப்பது, துணிகளை மடித்து வைப்பது, அவ்வப்போது வீட்டை பெருக்குவது என்று செய்வார்.
"மாமா நீங்க எதுவும் எடுத்து செய்யாதீங்க. நான் வந்து பார்த்துகிறேன்" என்று சைந்தவி சொல்லி விட்டு போனாலும், மனசு கேட்காமல் செய்கிறார்.செய்வார்.
வீட்டில் அனைவரும் தன்னை கரிசனத்துடன் கவனித்துக் கொள்கிறார்கள் என்பது தன்னால் நன்றாக உணர முடிகிறது. எப்பாவது யாராவது கடிந்து கொண்டதுண்டு. காரணம் பெரிதாக இருக்காது. அந்த காரணமும் அன்றே, அப்போதே மறந்து போகிற ஒன்றாகத்தான் இருக்கும்.
இப்போது இருக்கும் மனநிலையில் சண்முகத்திற்கு தான் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்வதாகவே படும். யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதனால் யாரிடமும் எந்த வருத்தமும் இல்லை.
சண்முகத்திற்கு ஒரே ஒரு உறுத்தல் மட்டும் உண்டு. அது சுந்தரத்திற்கும், சைந்தவிக்கும் அவ்வப்போது ஏற்படும் சண்டைகள் வீடே இரண்டாகி விடும். ஒரு பக்கம் ஒன்னு மன்னா நின்னு வேலை பார்க்குறாங்க. இன்னொரு பக்கம் நீயா நானான்னு சண்டை போட்டுக்குறாங்க.
ஒரு நாள் சுந்தரமும், சண்முகமும் நூலகத்திற்கு மெதுவாக நடந்தபடி செல்கிறார்கள்.
"எதுக்குப்பா நீயும், சைந்தவியும் அப்பப்ப சண்டை போட்டுக்கிறீங்க யாராவது ஒருத்தர் விட்டு கொடுத்து போங்கப்பா" என்று சொன்ன சண்முகத்தை ஒரு வகையான இயலாமையுடன் பார்த்தான்.
"உங்களுக்கு தெரியாதுப்பா, எப்பவும் நான்தான் விட்டு கொடுக்கணும். நான் சொல்றது அவ காதுக்கு எட்டவே எட்டாது. வெறுப்பா இருக்கு " என்று சுந்தரம் கொஞ்சம் எரிச்சலுடன் சொன்னார்.
"அதுல என்னப்பா வெறுப்பு. ஒவ்வொரு முறையும் நீயே விட்டு கொடுக்குறதுல என்ன குடி மூழ்கிட போகுது. காலம்காலமாக அவங்க தானேப்பா விட்டு கொடுத்திட்டிருந்தாங்க. இனி அந்த பொறுப்பை நம்ம கைல எடுத்துக்குவோம்" சண்முகம் பொறுமையாகவும், அழுத்தமாகவும் சொன்னார்.
"சொல்றது ரொம்ப சுலபம் ! என்று அலட்சியமாக சிரித்த சுந்தரம். "என்னை சொல்றீங்களே! நீங்க எப்பாவது அம்மாவுக்கு விட்டு கொடுத்துருக்கீங்களா?" என்று கேட்டார்.
இந்த கேள்வியை சண்முகம் எதிர்பார்த்தார். மனதுக்குள் சிரித்துக் கொண்டார். அது விரக்தி சிரிப்பு.
ஆண்கள் இந்த விஷயத்தில் எப்போதும் 'தெளிவுதான்'. எல்லாவற்றிலும் 'நீ அந்த காலம். உன்னை மாறியே என்னையும் இருக்க சொல்றியா. அந்தந்த காலத்திற்கு தகுந்தார்போல் நாம மாறிக்கணும்! " என்று அப்பனுக்கே அறிவுரை சொல்லுவானுங்க. ஆனா ஒரு பெண்ணை நடத்தும் விதத்தில் மட்டும் இவர்களுக்கு அப்பாக்கள் ஆதர்சம் ஆகிவிடுவார்கள். விதி விலக்குகள் இருக்கலாம். அதனால் விதிகள் மாறவா போகப்போகிறது?
இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக நடந்தார்கள். சண்முகம், திடீரென்று ஏதோ நினைவு வந்தவராய், "நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டியே " என்று இழுத்தார். சுந்தரம் 'என்ன?' என்பதுபோல் அவரைப் பார்த்தார்.
"எனக்கு நான் எங்க வேணா இருக்கலாம். நான் சந்தோஷமாக இருப்பேன்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சுந்தரம் இடைமறித்தார்.
"எதுக்கு இப்ப இதெல்லாம் சொல்றீங்க. உங்களுக்கு நம்ம வீட்ல இருக்கிறது ஏதாவது பிரச்சனையா?" என்று சுந்தரம் நேரடியாக கேட்டார்.
"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனா.... உங்களுக்கு தான் நான் கொஞ்சம் தொந்தரவா இருந்தா..." அதற்கு மேல் சண்முகம் பேசவில்லை. ஆனால் சுந்தரம் புரிந்து கொண்டான்.சுந்தரமும், தன் மனைவியும் சண்டை செய்வதற்கு, சண்முகமும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்கிற சந்தேகம் அவருள் எழுந்துவிட்டது. அதான் இப்படி எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்.
அவர்களின் சண்டைக்கும் சண்முகத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது சண்டையிடும் அந்த இருவர் மட்டுமே அறிவார். பிள்ளை வீட்டில் தங்கி இருக்கும் எல்லா பெற்றோருக்கும் வரும் குழப்பம்தான் தன் தந்தைக்கும் வந்திருக்கிறது என்று சுந்தரம் நன்றாகவே உணர்ந்தார்.
சுந்தரம், சண்முகத்தை பார்த்தார். சண்முகம் எதையோ யோசித்தபடி தளர்வுடன் நடந்து கொண்டிருந்தார். சுந்தரம் இன்னும் அருகில் சென்று அவர் கைகளை இறுக பற்றி கொண்டு நடக்க தொடங்கினார்.
#545
35,400
400
: 35,000
9
4.4 (9 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
sanjeevkumar9492
ramesh.rajendiran
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50