கல்யாணப் பரிசு

பெண்மையக் கதைகள்
4.9 out of 5 (123 )

மதுரை அரசு மருத்துவமனை,

இரவு பதினொரு மணி ,

வெளியே மழை பேய்மழை பெய்து கொண்டிருந்தது.. அந்த மழையின் சத்தத்தை விட வராண்டாவில் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழும் தம்பதிகளின் சத்தம் அந்த ஆஸ்பத்திரியை நிறைத்துக் கொண்டிருந்தது..

" ஐயோ கடவுளுக்கு கண் இல்லையா ??இப்படி கூறு போட்டு தந்துட்டாங்களே" என்று தலையில் அடித்துக்கொண்டு ஆண் என்பதும் மறந்து அவர் அழுது கொண்டிருக்க..

"அவருக்கு கண் இருந்திருந்தா இதெல்லாம் நடக்கும் பொழுது பார்த்துகிட்டு இருந்திருப்பாரா? அருமை பெருமையா வளர்த்து இப்படி நார் நாராகக் கிழிஞ்சி போய் கிடக்கிறாளே",தாய் தன் வயிற்றில் அடித்துக் கொண்டு அழுதாள்..

எல்லோரும் ஆண்குழந்தைக்கு தவமாய் தவம் இருந்த பொழுது பெண் குழந்தைக்காக 10 வருடம் கோவில் கோவிலாக ஏறி இறங்கி அபூர்வமாக பெற்ற குறிஞ்சி மலர் அல்லவா அவள்...

சரஸ்வதி அள்ளி அள்ளி அறிவைக் கொடுக்க, லட்சுமி கடாட்சம் நிறைந்தவள்.. அவள் இதழ் விரித்து சிரித்தால் பனித்துளி நுனியில் ஆடும் ரோஜாப் பூ போல அவ்வளவு அழகு, நுனி முதல் அடிவரை அழகு .. அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து கண்டிப்பாக இருக்கும், ஆனால் அந்த ஆபத்து அவளிடத்தில் இருக்கவில்லை.. அவளை சுற்றி இருந்ததை அறியாள் அந்தப் பேதை பெண்..

சிற்பா ...

இருபத்தி ஐந்து வயது .. சென்னை ஐடி கம்பெனியில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இளம் பெண்.. அவள் இரவு வேலை முடித்து பஸ்ஸில் ஏறினாள் ..தினமும் தகப்பன் வந்து அழைத்து செல்வார் இன்று அவர் வேலை விஷயமாக வெளியூர் போனதால் தனியாக வர வேண்டிய நிலை .. ஆள் அதிகம் உள்ள பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள்.. பாவம் அவளுக்கு கெட்டநேரம் எனும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் கை கொடுக்க வில்லை போலும் .. அவளுடைய நிறுத்தம் வரும், முன் நிறுத்தத்தில் 4 ரவுடி போன்ற இளைஞர்கள் ஏறினார்கள்.. இவள் அமைதியாக திரும்பி அமர்ந்து கொண்டாள்.. தன் நிறுத்தம் வந்ததும் சிற்பா வேகமாக இறங்கி துரிதமாக தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.. பின்னால் அவர்களும் நடந்து வர.. பயம் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.. ஓடினால் விடுவார்களா? விரட்ட ஆரம்பித்தார்கள்.. பயம் அவளை பலவீனப்படுத்தியது... முடிவு ஒரு பள்ளத்தில் விழுந்து எழும்ப முடியாமல் தனக்கு உதவிக்கு ஆட்களை கூப்பிட வாயை திறக்க போகவும், அவள் துப்பட்டா கொண்டே அவள் வாய் அடைக்கப்பட்டது.. அவளை அந்த நால்வரும் தரதரவென இழுத்துக் கொண்டு போய் ஆள் ஆரவாரம் இல்லாத இடத்தில் போட்டு, பெண் என்றும் பாராமல், மனுஷி என்றும் பாராமல், ஒரு உயிர் என்றும் பாராமல் உருக்குலைய வைத்தனர்.. மாறி மாறி நான்கு பேரால் கற்பழிக்கப்பட்ட பெண் குற்றுயிராக அந்த இடத்தில் அப்படியே கிடந்தாள்.. விடிய ஆரம்பிக்கவும் நான்கு பேரும் அவளை அப்படியே போட்டு விட்டு ஓடிவிட , பக்கத்தில் இருந்தவர்கள் அவளை எடுத்து கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்...

மழை வெளுத்து வாங்க அந்த தம்பதிகள் அழுகை மட்டும் ஓயவே இல்லை ஒரே பெண்.. வேலைக்கு வலுக்கட்டாயமாக போ உலகம் தெரியும் என அனுப்பி வைத்தார்கள்.. உலகம் இத்தனை கொடூரமானது என்பதை கூற மறந்து போனார்கள் ... இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்ற நிலையில் இப்படி ஆனதை யாரால் ஏற்று கொள்ள இயலும் கனவாக இருக்காதா என்று பரிதவித்து போயினர்..

மழையில் ஒரு போலீஸ் வாகனம் வந்து நின்றது .. அதிலிருந்து காக்கிச் சீருடையில் இறங்கினான்

சத்யன் இன்ஸ்பெக்டர் ...

அவனோடு இரண்டு கான்ஸ்டபிள் வர..

"அந்த பொண்ணு ஏதாவது பேசிச்சா" என கேஸ் பைலை புரட்டி கொண்டு உள்ளே நுழைந்தான் ..

"இல்லைங்க சார் வாயே திறக்கல .."

"ஓஓஓ" தன் நாடியை தடவி கொண்டான்...அவனை பார்த்ததும் சிற்பாவின் பெற்றோர்கள் ஓடி வந்து அவன் முன்னே நின்றவர்கள் கையெடுத்துக் கும்பிட்டபடி ..

"சார் தயவுசெய்து போயிடுங்க சார், ஏற்கனவே என் பொண்ணு குறை உயிரா இருக்கா, நீங்க விசாரணை போலீஸ் ஸ்டேஷன்னு அவளை முழுசா கொன்னுடாதீங்க , உங்களுக்கு ஒன்னும் இல்ல இந்த பாவிகளை கண்டுபிடிச்சா, ஒரு ஸ்டார் தருவாங்க.. ஆனா என் மகளுக்கு அப்படி இல்லை ஊருக்குள்ள தெரிஞ்சது , உலகம் எல்லாம் தெரியும் அவளால வாழவே முடியாது.. உடம்பு தேறுனதும் அவளை கூட்டிகிட்டு எங்க சொந்த ஊருக்கு போயிடலாம்னு இருக்கோம் .. அப்படியே உயிர் இருக்க வரையும் எப்படியோ வாழ்ந்துட்டு போறோம் தயவுசெய்து இந்த விஷயத்தை விட்ருங்க சார்.. நாங்க எந்த கம்ப்ளைன்ட்டும் கொடுக்கல, எங்களுக்கு யாரு கூடையும் போராட முடியாது" என அந்த பெரிய மனிதர் .. சத்ரியன் முன் அழுதுகொண்டே கெஞ்ச ஆரம்பித்தார்.. அவரை ஒரு பார்வை பார்த்தவன்..

"இது என் கடமை , தடுத்தா யாராயிருந்தாலும் எனக்கு கோபம் வரும்.. அது பாதிக்கப்பட்டவங்களாக இருந்தாலும் சரி, பாதிப்பை கொடுத்தவங்களா இருந்தாலும் சரி" என்று கறார் வார்த்தையில் சொன்னவன்.. கேஸ் ஃபைலை கான்ஸ்டபுளிடம் கொடுத்துவிட்டு சிற்பா இருந்த ஐசியூ நோக்கிப் போனான்.. டாக்டரிடம் அவள் உடல் நலன் பற்றி கேட்டு அறிந்து கொண்டான்..

சிற்பா படுக்கையில் கிழிந்த நாராக கிடந்தாள்..சத்யன் அவள் அருகில் போய் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தான் .. இவளை பார்த்ததும் சிற்பா கண்கள் கலங்கியது, உதடுகள் துடித்தது ஏற்கனவே அழுது முடித்த அழுகை மறுபடியும் இவனை பார்த்தும் வெடிக்க ஆரம்பித்தது..

சத்யன் தன் தலையில் உள்ள தொப்பியை கழட்டி அருகில் வைத்தவன்.. சட்டையில் உள்ள ஸ்டார்களையும் கழட்டி பக்கத்தில் உள்ள மேஜையில் வைத்துவிட்டு..

"நான் இப்போ இன்ஸ்பெக்டர் சத்தியனா பேசல உன் கூட படிச்ச சக தோழனா உன்கிட்ட பேசுறேன் பேசலாமா? என்று கேட்க வாயைப் பொத்திக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.. தன் உடல் கூசியது எந்த ஆண்மகனையும் நேர் கொண்டு பார்க்க முடியவில்லை , குலுங்கி குலுங்கி அழுத அவளை சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான்.

எவ்வளவு சுட்டிப்பெண் படிப்பில், பண்பில் இவளைப் போல் வரவேண்டுமென்று எத்தனை நாள் இவளோடு போட்டி போட்டிருப்பான்.. அந்தப் போட்டியே நாளடைவில் அவள் மீது ஒரு சிறிய காதலை விதைத்தது.. தன் தங்கை திருமணத்திற்கு பிறகு இவள் வீட்டில் பேசி அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் வரை யோசித்திருந்தான்.. அவளை இப்படி பார்க்கும் பொழுது மனது கனத்து இருதயத்தில் கடப்பாரை உருவி போனதுபோல் வலி எடுத்தது..

"என்ன செய்யப் போற சிற்பா ..

" என்ன செய்ய சொல்றீங்க .. அம்மா அப்பா சொல்ற மாதிரி எனக்கு நடந்த கேவலம் யாருக்கும் தெரிய வேண்டாம் .. நாங்க எங்கேயாவது போயிடுறோம்.. எனக்கு என் அம்மா அப்பாவாவது வேணும்" என்று அழுகை நடுவில் திக்கி திணறி முடிவை கூறினாள்..

"சரி போயிட்டா, உனக்கு நடந்தது எதுவும் மாறப்போகுறது இல்லையே, இதே போல பல பெண்கள் அவங்களால சிதைக்கப்பட்டா பரவாயில்லையா சிற்பா? தப்பு செய்வதை விட தப்புக்கு துணை போவது அதை விட தப்பு.. நீ இப்போ அமைதியா போனேன்னு வை, அவங்களுக்கு குளிர் விட்டுப் போகும், இதையேதான் மறுபடியும் செய்வாங்க.."

"அதுக்காக கோர்ட் ,கேஸூன்னு நிற்க சொல்றீங்களா.அதுக்கு என் மனசுலயும் தெம்பு இல்லை உடம்புலேயும் தெம்பில்லை ..

" எதுக்கு பயப்படுற .. யாருன்னு மட்டும் நீ சொல்லு, நீ நடந்தது சொன்னா, கண்டிப்பா என்னால ஆக்சன் எடுக்க முடியும்.."

" நீங்க ஆக்சன் எடுத்தா மட்டும், போன என் கற்பு திரும்ப வந்துவிடுமா , இல்ல என் மேல பட்ட அசிங்கம் காணாம போயிடுமா.. "

" வாஸ்தவம்தான் , ஆனா நீ கற்புன்னு எதை சொல்ற ?."

அவளிடம் அதற்கு பதில் இல்லை ..உலகத்தில் பாதி பேருக்கு அதற்கு பதில் இல்லையே ..

"விலை உயர்ந்த ஒரு டிரெஸ் எடுத்து போடுற.. அது மேல ஏதோ கொட்டி அழுக்காக போச்சி, அதுக்காக டிரஸ்ஸை கிழிச்சி தூர போட மாட்ட தானே.. அதை துவைச்சி, மறுபடியும் புதுசா போட தான செய்வ "

"அது டிரெஸ் நான் உயிருள்ள பொண்ணு .."

"என்ன பொறுத்தவரை அனுமதி இல்லாம திருட படுற எதுவும் பொருள்தான் .. யாரோ நாலு பேர் உன்ன அசிங்கப்படுத்தி போனதுக்காக, உன்னையே நீ ஏன் தீட்டா நினைச்சுக்கிற.. மௌனங்கள் தான் ஆயிரம் தப்புகளை உருவாக்குது , அந்த மௌனத்தை உடைச்சு பேசு தப்புகள் நடக்காமல் இருக்காதுன்னு இல்லை , தப்பு குறைய வாய்ப்பு உண்டு" ..

"நீங்க சொல்றது எனக்கு புரியுது, போலீஸ் ஸ்டேஷன்ல, கோர்ட்ல அசிங்கமா கேட்டாங்கன்னா அந்த இடத்திலேயே நான் கூனிக்குறுகி செத்துப் போவேனே.."

"தப்பு செஞ்ச அவங்களே கூச்சம் இல்லாம வாழும் போது , தப்பே செய்யாத நீ ஏன் அசிங்க படணும் உடம்புல உள்ள கண்ணு,மூக்கு எப்படியோ , அதே போல தான் உன்னுடைய பெண்மையும், அது அசிங்கமா பார்த்தா, அசிங்கம்! அழகா பார்த்தா அழகு, உன் சிறகுகள் உடைக்கப்பட்டிருச்சின்னு நீயே நெனச்சுக்கிட்டு இருக்க.. சிறகுகள் பிடுங்கப்பட்டிருக்கு பருந்துகள் போல பிடிக்கப்பட்டிருக்கு .. மறுபடியும் புது பெலன் கொண்டு பருந்துகள் உயர உயரப் பறக்கும் .. அதே போல நீயும் பயத்தை விட்டு வெளியே வா , உனக்கு நடந்தத சொல்லு, அசிங்கமா பேசுறவேன் பேசிட்டு போகட்டுமே.. காது எதுக்கு இரண்டா படைச்சிருக்கான்.. ஒரு காதுல கேட்டு இன்னொரு காதுல விடதானே.. நல்லதை உள்ள வச்சுக்கோ, கெட்டதை வெளியே விட்டுடு .. என்னோட தோழியா இத நான் சொல்லணும் நினைக்கிறேன் சொல்லிட்டேன்" என மறுபடியும் தன் தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டவன்..

"கம்ப்ளைன்ட் கொடுக்கிறீர்களா மேடம்? என்று கடமைக்குள் போய் கேட்க.. சிற்பா பரிதவித்து தன் முன்னால் நின்ற பெற்றவர்களை பார்க்க, அவர்களோ வேண்டாம் என்பது போல் தலையை ஆட்ட .. மறுபடியும் சத்யன் முகத்தைப் பார்த்தாள்..

அவன் உன் இஷ்டம் என்பது போல் முகத்தை வைக்க..சிற்பா கண்களை மூடி 2 நிமிடம் யோசித்தவள்..

"கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் சார்" என்று திடமாக கூற .. அவன் மீசை நடுவே மெல்லிய புன்னகை.. தாய் தகப்பன் ஓடி வந்து ஏதேதோ அவளிடம் கூறினார்கள் ..

"இல்லம்மா எனக்கு நம்பிக்கை இருக்கு , இந்த உலகத்தை எதிர்கொள்வேன்னு நம்பிக்கை நிறைய இருக்கு.. தப்பு செஞ்ச அவங்களே இந்த உலகத்தில் வாழும் போது.. என்னால வாழ முடியாதா? உங்க பொண்ண நம்பினா அமைதியா இருங்க.. "

"என்னடி இது .. ஏற்கனவே உன் வாழ்க்கையை பற்றி எங்களுக்கு பயமா இருக்கு, இப்படியே அமைதியா போனா ஒரு 5 வருஷம் கழிச்சு , யாராவது ஒருத்தன் உன்னை கல்யாணம் கட்டிக்குவான்.. இப்படி கோர்ட் கேஸூன்னு போனா உன் வாழ்க்கை இதோடு மண்ணா போகும்டி, அம்மா சொன்னா கேளு .."

"இல்லம்மா நான் முடிவாதான் இருக்கேன், என்ன நடந்தாலும் பரவாயில்லை" என்று சொன்ன மகளை என்ன செய்வது என்று தெரியாமல் பெற்றவர்கள் ஓரமாக நிற்க .. தனக்கு நடந்த அவலத்தை வாய்மொழியாக அவனிடம் கூறினாள்.. அவன் கண்களும் கலங்கியது..

"இதில ஒரு சைன் பண்ணுங்க" என்று கையெழுத்து வாங்கிக் கொண்டவன்.. ஓரத்தில் நின்ற அவள் பெற்றவர்கள் முன்னால் போய் நின்றவன் ..

"உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை என்ன மாதிரி இருந்தா ஓகேவா?" என்று கேட்க அதிர்ச்சியில் மூவரும் அவனை பார்க்க ..

"இப்பவும் கற்பு மனச பொறுத்ததுதான்.. என் மனைவி கற்பானவன்னு நான் நம்புறேன்.. நீங்களும் நம்பினா எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க .. அவ கண்ணுல தூசி விழுந்து அழுவாளேத் தவிர என்னால அழ மாட்டா.. அதுக்கு நான் கேரண்டி.."

"தம்பி" என்று இருவரும் அவன் கையைப் பிடித்துக் கொள்ள.. சிற்பா எதுவும் சொல்லும் நிலையில் இல்லை அவள் எண்ணக்கிடங்கை அறிந்த சத்யன் ..

"அந்த மூன்று பேருக்கும் சட்டத்தால தண்டனை வாங்கி கொடுத்துட்டு, அவ கழுத்துல தாலி கட்டுறேன்.. அதுதான் அவளுக்கு கொடுக்கப் போற முதல் கல்யாண பரிசு" என்றதும் அவள் முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளி வந்து போனது .. தைரியமாக நீதிமன்றத்தை எதிர்கொண்டாள் ... நால்வரையும் அடையாளம் காட்டினாள் ..

ஆறு மாதம் கழித்து..

"பெண்ணை கற்பழித்த வழக்கில் , கைது செய்யப்பட்ட 4 பேரையும் துடிக்கும் வரை தூக்கிலிட்டு கொல்லும்படி தீர்ப்பு வழங்கப்படுகிறது" என்று நீதிபதி தீர்ப்பை எழுதி பேனாவை உடைத்தார் ...

அடுத்த நாள் காலை சத்யன் சிற்பா திருமணம் அந்த நீதிபதியின் முன்னிலையில் நடைபெற்றது.. தாலியை அவள் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சு இட்டவன் சிற்பாவின் நெற்றியில் முத்தமிட்டு

"என்னோட கல்யாணப்பரிசு புடிச்சிருக்கா?" என்று கேட்க வெட்கப் புன்னகை புரிந்தாள்

"உங்களையும் சேர்த்து பிடிச்சிருக்கு" என்று தன் காதல் சம்மதத்தை சொன்னாள்....

அவள் வாழ்க்கையை அழகாக்கிய காதல் பரிசு!!

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...