வாடகை வீடு

உண்மைக் கதைகள்
5 out of 5 (6 )

"விட்டு விடுதலையாகி இந்த சிட்டு குருவியை போலே"

அப்ப்பா...பாரதி அனுபவித்து உணர்ந்த வரிகள். எழுத்தில் வடிக்க எத்தனை ரசனை இருந்திருக்க வேண்டும்?

அனுஷாவுக்கு சிலிர்ப்பாக இருந்தது. உண்மை தான். சிட்டுக்குருவி யாய் இருந்தால் அவளும் ரமணாவும் ஒரு சின்னஞ்சிறு கூடு கட்டி கொண்டு வசித்து இருக்கலாம். தூக்கணாங்குருவி மின் மினிப் பூச்சியை கொண்டு வந்து கூட்டில் விளக்காக வைக்குமாம். பெண் பறவை பயப்படாமல் இருக்க. இப்போது அனுஷா பயப்படுவது போல.


ரமணாவுக்கு மாதத்தில் இருபது நாள் டூர். அவன் ஆபீஸ் ஒரு செய்ன் ஆஃப் ஹோட்டல். ரமணா வேலை செய்வது ஆடிட் விங்கில். வரும் வருமானம் கைக்கும் வாய்க்கும் சரியாக போகிறது. இதில் எதிர்கால சேமிப்பு எங்கே? சொந்த வீடு எங்கே? ரமணா வும் அவளும் தனியாக இருக்கும் போது அவன் பேச்சு பெரும்பாலும் சொந்த வீடு பற்றியே இருக்கும்.

அனுஷா வும் வேலைக்கு போகிறாள். ஒரு தனியார் பேப்பர் மில் கம்பெனி யில் கணக்கு பிரிவில் வேலை. அவள் கொண்டு வரும் சம்பளம் அவள் மற்றும் ரமணா வின் மருத்துவ செலவு, விருந்தினர் உபசரிப்பு கல்யாணம் காதுகுத்து இவற்றுக்கு சரியாகி விடும்.

இவ்வளவுக்கும் நடுவில் அவர்கள் குருவி மூக்கால் சேர்ப்பது போல சேர்த்து வைப்பது எல்லாம்"வீடு" என்ற ரமணா வின் கனவுக்காகவே.

அனுவுக்கும் ரமணா வுக்கும் திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. இன்னும் கொஞ்ச ஒரு குழந்தை உண்டாகவில்லை. இதோ அதோ என்று அதற்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்து நாலு வருடம் ஆகிறது. ஜாதகத்தில் கட்டாயம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று ஜோசியர் சொன்னதால் அனுஷாவிற்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் குழந்தை ஆசையை விடவும் அனுஷாவுக்கு ஆசை எல்லாம் ரமணா வின் கனவு பற்றி தான்.

அனுவை கல்யாணம் பண்ணி கூட்டி வரும்போது ரமணா இதை விட சாதாரண வேலையில் இருந்தான். நாலைந்து பிள்ளைகள் பெற்ற அனுவின் அம்மா மாப்பிள்ளை குணவானா என்றுபார்த்தாளே தவிர தனவானா என்று பார்க்க வில்லை. ஒரு ஹால் ஒரு மினி சமையல் அறை மட்டுமே கொண்ட சைடு போர்ஷனில் அவர்கள் வாழ்க்கை தொடங்கியது. பாத்ரூம் டாய்லெட் வாசற்பக்கம்.


ஓரளவு வசதியான குடும்பத்தில் இருந்து வந்த அனுவிற்கு இதெல்லாம் புதிது. இரவு நேரத்தில் பாத்ரூமுக்கு செல்ல அஞ்சுவாள். அலைந்து திரிந்து விட்டு வந்து தூங்கும் கணவனை எழுப்ப மனம் வராது. ஆனால் அவர்கள் சொற்ப வாடகை பட்ஜெட்டில் அந்த வீடுதான் கிடைத்தது. அட்வான்ஸ் ரொம்ப குறைவு. ஆனால் வீட்டில் ஒரு அவசரத்துக்கு கூட விருந்தினர் வந்தால் தங்க முடியாது.

அந்த சமயத்தில் தான மாம்பலத்தில் இப்போது இருக்கும் இந்த வீடு கிடைத்தது. இதுவும் சின்ன போர்ஷன் தான். ஆனால் வீட்டுக்கு உள்ளேயே பாத்ரூம் டாய்லெட் முக்கியமாக எல்லா இடங்களிலும் குழாயில் தண்ணீர் கொட்டியது. ஒற்றை படுக்கையறை வீடு.அது அவர்களுக்கு போதுமான தாய் இருந்தது. ஆனால் அது எப்பேற்பட்ட இன்னல்களை தரப்போகிறது என்று அவர்கள் அறியவில்லை.

வந்த புதிதில் எல்லாம் நன்றாக போய் கொண்டு இருந்தது. கொஞ்ச நாளில் ஆரம்பித்தது பிரச்சினை. வாசற்பக்கம் பெரிய வராண்டா.வீட்டைச் சுற்றி மண்தரை. எல்லா இடமும் அனுதான் தினமும் பெருக்கி சுத்தம் செய்து கோலம் போட வேண்டும். பண்டிகை நாட்களில் வீடு முழுவதும் மாக்கோலம் போட்டு காவி இட வேண்டும். இடுப்பு விட்டு போகும். மோட்டார் கரண்ட் இவர்கள் மீட்டரில். கரண்ட் சார்ஜ் யூனிட்டுக்கு எட்டு ரூபாய். இதெல்லாம் கூட பரவாயில்லை. மாசா மாசம் ரேஷன் அப்புறம் தினமும் காய்கறிகள் இவைகளை ஓனர் அம்மாவுக்கு அனு தான் வாங்கி தர வேண்டும். பால் வாங்கி தருவது ரமணா வேலை. மொத்தத்தில் அவர்கள் இருவரும் ஓனர் அம்மாவின் எடுபிடி ஆனார்கள். வாடகை குறைவு என்பதால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டனர். அவள் முகம் வாடும்போதெல்லாம் ரமணா"கொஞ்ச நாள் பொறுத்துப்பியா குட்டிம்மா.நாம் சொந்த வீடு வாங்கிட்டா உன்னை ராணி போல வெச்சுப்பேன்.அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கோ தங்கம்" என்பான் அவள் பூ முகத்தை கையில் ஏந்தி.


அந்த கண்களில் தெரியும் அன்பும் பாசமும் அனுவை கட்டிப்போடும். சிறுகச் சிறுக சேர்ந்து வரும் தொகை அவர்களுக்கு உற்சாகம் தரும்.

போனவாரம் நடந்த நிகழ்ச்சி அனுவை ரொம்பவும் பாதித்து விட்டது. மாதம் கொஞ்சம் சேமித்து வைத்த பணத்தில் ஒரு புது ஃபிரிஜ் வாங்கினான் ரமணா. ஓனரம்மா வந்து பார்த்து விட்டு போனாள். வந்தது வினை. அவர்கள் வீட்டு விசேஷத்துக்கு வாங்கிய காய்கறி மூட்டை புது ஃபிரிஜ்ஜில் வந்து உட்கார்ந்து கொண்டது. அனுவின் தோசை மாவு பால் பாக்கெட் எல்லாம் வெளியே போட்டு விட்டு போய் விட்டார் அந்த அம்மையார். உதடு துடிக்க முறையிட்டாள் கணவனிடம். அவன் வழக்கம் போல்"இன்னும் கொஞ்சம் நாள் அனுக்குட்டி" என்றான்.

போன மாதம் புது கிரைண்டர் வாங்கிய போதும் இதே கதை தான். தினமும் இட்லிக்கு அறைத்து தரச் சொல்வாள் அந்த பெண்மணி. விதியே என்று செய்வாள் அனு.

அன்று வெள்ளி கிழமை. ஸ்டேஷனில் இறங்கி பிள்ளையார் கோயிலில் வணங்கினாள். அப்போது எதிர் வீட்டு மாமி வந்தாள்."அனு, உன் கூட பேசணும். இப்படி வா." என்றாள்.

இருவரும் பிரசாதம் வாங்கி கொண்டு ஓரமாய் வந்தார்கள்.
"இதோ பார் அனு, அந்த அலங்காரம் இருக்காளே , உன் ஹவுஸ் ஓனர். அவ இப்படி தான். வர்ற குடித்தன காரா எல்லாரையும் அடிமை மாதிரி நடத்துவா. இவ டார்ச்சர் பொறுக்காமல் எல்லாரும் நாலைந்து மாதத்தில் காலி செய்துவிட்டு போய்டுவா. உன் பொறுமை யால நீ நாலு வருஷம் தாக்கு பிடிச்சே. ஆனால் அவ இந்த வாரம் உங்களை சண்டை போட்டு விரட்டி வேற ஆளுக்கு வீட்டை விட ப்ளான் பண்ணி இருக்கா. அவ சண்டை போடறதுக்குள்ள நீங்களா காலி பண்றது நல்லது. நான் வரேன்" என்று கிளம்பினாள்.

ரமணா விடம் சொன்னதற்கு டூர் போகும் அவசரத்தில்"நான் ஊர்லிருந்து வந்ததும் வேற வீடு பாக்கறேன்" என்று போய் விட்டான்.

இரண்டு நாட்கள் கழித்து ஆபீஸ் புறப்படுகையில் ஓனரம்மா வந்தாள். "இந்தா அனு , பாத்ரூம் குழாய திறந்து வைத்து விட்டு போ. தண்ணீர் இல்லாமல் செடிகள் வாடுது." எனவே "வந்து... தண்ணீர் வீணாகுமே..."என இழுத்தாள்.
"அந்த கவலை உனக்கு வேண்டாம்"

"இல்லம்மா... தண்ணீர் தீர்ந்துட்டா மறுபடியும் மோட்டார் போடணும். கரண்ட் அதிகம் ஆகும். அதான்....."

"இத பாரு. நானும் வந்ததில் இருந்து பார்க்கிறேன். வர வர வாய் நீளுது. இங்கே ஓனர் நானா நீயா? ஒண்ட வந்தவளுக்கு வாயப் பாரு. நல்லா வளர்த்து வெச்சிருக்காங்க "
என்று அந்த அம்மையார் வாய்க்கு வந்தபடி பேச முடிவில்"உன்கிட்ட எனக்கு என்ன பேச்சு. உன் புருஷன் வரட்டும். பேசிக்கிறேன்"என்று விருட்டென்று போனாள் அலங்காரம்.

அது போல ரமணா வந்ததும் அதே தரக்குறைவாக பேச ரமணா வும்"எண்ணி அறுபது நாளில் காலி பண்றேன். அதுவும் வாடகை வீட்டுக்கு இல்லை. சொந்த வீட்டுக்கு." என்று சவால் விட்டு விட்டு வந்தான்.

புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும்வீடு வாங்க அலையோ அலை என்று அலைந்து திரிந்து கடைசியில் தாம்பரத்தில் ஒரு சிங்கிள் பெட் அபார்ட்மெண்ட் அவர்கள் பட்ஜெட்டில் கிடைத்தது . அனுவின் நகைகள் ரமணா வின் சேமிப்பு வங்கி கடன் உறவுகளிடம் கடன் என்று ஒருவழியாக புது மனை புகுவிழா செய்தனர்.

புது வீட்டுக்கு வந்து ஒரு மாதம் வரை அனுவால் நம்ப முடியவில்லை. இது நிஜம் தானே என்று தன்னை கிள்ளி கொண்டாள். அலங்காரத்தின் பிடியிலிருந்து தப்பியதை இப்போது நினைத்தாலும் நடுங்குவாள் . அந்த சின்னஞ்சிறு ப்ளாட் அவர்கள் சொர்க்கம் ஆனது.

"அனு, என்ன உட்கார்ந்துகொண்டுதூங்கி வழியறே" என்றவாறு உள்ளே வந்தான் ரமணா.

" என்னங்க, யாரோ போன் பண்ணாங்களே வீட்டுக்கு, என்ன ஆச்சு? " என்று கேட்டாள்.

" நம்ம டேர்ம்ஸ் எல்லாம் சொல்லிட்டேன். ஓகே சொல்லிட்டாங்க. அடுத்த வாரம் குடி வராங்க. நம்ம போலவே இரண்டே பேர். வேலைக்கு போற தம்பதி. "

"டேர்ம்ஸ என்ன சொன்னிங்க"

"நீ சொன்னது போல் தான் அனும்மா. மூணு மாசம் அட்வான்ஸ். ஈ.பி தனி கார்டு. ஆக்சுவல் ரீடிங் கட்டினா போதும். மெயின்டனன்ஸ் ப்ளாட்ல குடுத்துடணும். அவ்ளோதான்."

"கரெக்டுங்க"என்று மனம் விட்டு சிரித்தாள் அனு.

என்ன விழிக்கிறீங்க? அனுவுக்கும் ரமணா வுக்கும் இப்பவும் குழந்தை இல்லை. ஆனால் அவங்க இப்போது தனி வீடு கட்டிட்டாங்க.ரமணா சொன்ன மாதிரி அவளை ராணியாட்டம் பாத்துக்கிறான். அவர்கள் வாங்கிய ப்ளாட்டை வாடகைக்கு விட்டுட்டாங்க. அதுதான் அவங்க குழந்தை. வீட்டுக்கு குடி வரவங்க வீட்டை சுத்தமா வெச்சுக்கணும் என்பதை தவிர வேறு எந்த கண்டிஷன் கிடையாது. குடிவரும்போது அட்வான்ஸ் வாங்க போவார்கள். மறுபடியும் காலி செய்கையில் அட்வான்ஸ் முழுவதும் திரும்பி தருவார்கள். நாம் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

கஷ்டம் அனுபவித்தவர்களுக்கு தானே அந்த வலி தெரியும்?

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...