தனி அறை

பயண இலக்கியம்
5 out of 5 (777 )

தனி அறை

-- செசிலி வியாகப்பன்

"இந்த வயசான காலத்துல உங்க அப்பா அம்மாவுக்கு தனியா ஒரு ரூம் இல்லன்னா என்ன பிரச்சனை? ஏன் அவங்களால ஹாலில் படுத்துக்க முடியாதா?" என்று கோபமாக கத்திக்கொண்டிருந்த அருணாவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று அவளது கணவன் கதிரவனுக்கு புரியவில்லை.

நிச்சயம் அவள் பேசுவது வெளியே இருக்கும் அவனது பெற்றோர் இருவருக்கும் கேட்டிருக்கும் என அவனுக்குத் தெரியும். அதுவே அவனை மிகுந்த தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியது. ஆனாலும் மனைவி பேசுவதிலும் சிறு நியாயம் இருப்பது போலவே அவனுக்குத் தோன்றியது.
"இங்க பாரு அருணா நீ கொஞ்சம் பொறுமையா இரு எங்க அப்பா அம்மா கிட்ட பேசறேன்." என்று கதிரவன் கூற, கணவனின் கெஞ்சலில் அருணா சற்று நேரத்திற்கு தனது கோபத்தை ஒத்திவைத்தாள்.

வெளியே சோபாவில் அமர்ந்தபடி மகன் மற்றும் மருமகள் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த நிலவழகன், சூர்யவதனா தம்பதியருக்கு வருத்தம் மட்டுமே மேலோங்கியிருந்தது.

மருமகள் பேசியதெல்லம் அவர்களுக்கு பெரிதல்ல; தங்கள் மகனாவது தங்களுக்காக பேசுவான் என்று இருவரும் கொஞ்சம் எதிர்பார்ப்பை மனதில் வைத்து இருந்தனர்.

ஆனால் அவனோ 'இப்பொழுது நான் உங்கள் மகன் அல்ல; அருணாவின் கணவன்.' என்பதை இருவருக்கும் தலையில் ஆணி அடித்தாற் போல புரிய வைத்தான்.

"வதனா நாம கோவில் வரைக்கும் போயிட்டு வரலாமா." என்று நிலவழகன் தனது மனைவியிடம் கேட்க, வீட்டில் இருப்பது மூச்சு முட்டுவது போல உணர்ந்த சூர்யாவும் கணவனுடன் கிளம்பினாள்.

தெருவில் நடந்து சென்ற இருவரது மனமும் ஒன்று பாேலவே அவர்களின் கடந்த காலத்தை சிந்தித்து பார்த்தது.

திருமணமாகி முதல் முதலாக தன் கணவன் நிலவழகனுடன் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த சூரியவதனாவின் கண்கள் தன் புகுந்த வீட்டை சுற்றிப்பார்த்தது.

நல்ல விசாலமான ஹால், சமையலறை, ஒரு படுக்கையறை எளிமையாகவும் அதே சமயம் கச்சிதமாக இருந்தது. வீட்டை ஓரக்கண் பார்வையால் அளந்து கொண்டிருந்த சூரியாவின் அருகில் வந்த அவளது மாமியார் கனகம்,

"இங்க பாரு சூரியா இந்த வீட்டுல இருக்கிறது ஒரு ரூம்மு தான். இருக்கிற முக்கியமான எல்லாத்தையும் அதுல தான் போட்டு வச்சிருக்கோம்." என அவர் கூறிக்கொண்டு இருக்கும் போதே,

'சரி அதுக்கு என்ன. இப்போ இத எதுக்கு இவங்க என் கிட்ட சொல்றாங்க' என்று சூரியா மனதிற்குள் எண்ணம் ஓட, அதற்கான பதிலையும் அவள் மாமியர் உடனே தந்தார்.

"இத ஏன் சொல்றேன்னா நீ பாட்டுக்கு பொழுதன்னைக்கும் ரூம்முக்குள்ள போய் கதவ அடைச்சிக்கிட்டு இருந்திற கூடாது பாரு." என கூறி விட்டு செல்ல, சூரியாவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இரவு உணவு வரை உடன் இருந்த சூர்யாவின் உறவுகள் சில பல அறிவுரைகளை வழங்கிவிட்டு செல்ல, அவளோ தனித்து விடப்பட்ட மழலையாக மிரண்டு விழித்தாள்.

திருமணமான முதல் நாள் இரவு.... அதை பற்றி அறியாதவளல்ல. ஆனாலும் மாமியரையும், பதினாறு வயது நாத்தனாரையும் தவிர அனைவரும் ஆண்களாக இருக்கும் வீட்டின் கூடத்தில் தனித்து இருப்பது ஒரு வித அவஸ்தையை தந்தது.

சரி படு்க்கையறைக்கு செல்லலாம் என்றால் மாமியாரின் வார்தைகள் அச்சு பிசக்காமல் அவள் காதில் ஒலித்தது. அதுமட்டுமின்றி அந்த அறைக்குள் யாரவது போவதும் வருவதுமாக இருந்தன.

ஒரு வழியாக நேரம் இரவு பதினொன்றை நெருங்கும் சமயம் அவளது கனவன் அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு அறைக்குள் செல்ல, சிறுது நேரத்திலே அங்கே வந்த அவளது மாமியார்

"எல்லாரும் தூங்க போங்க.'' என்று தனது கனவன், இரு மகன்கள் மற்றும் மகளிடம் கூறிவிட்டு

"நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும்." என மெதுவாக கூறினாலூம் அவரது வெண்கல குரலுக்கு சற்று சத்தமாகவே கேட்டது. அதில் மற்றவர்கள் தன்னை பார்ப்பது போல உணர்ந்த சூர்யா சரி என தலையை அசைத்துவிட்டு அறைக்குள் வந்து சேர்ந்தாள்.

அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு அறையை விட்டு வெளியே வந்த சூர்யா விழித்தென்னவோ மாமியாரின் கோப முகத்தில் தான்.

"நான் அவ்வளவு சொல்லியும் என் பேச்சுக்கு மரியாதை இல்லல்ல. ஏன் மகாராணிக்கு கட்டிலை விட்டு வர முடியலையோ?." எனறு கனகம் தன் முழு குரலில் திட்ட ஆரம்பிக்க, சூர்யா அவமானத்தில் கூனிகூருகி நின்றாள்.

யார் முத்தையும் நிமிர்ந்து பாராமல் வீட்டின் பின் பக்கம் வந்து அழுது முடித்தவள், சற்று நேரத்திலேயே தன்னை தேற்றிக் கொண்டு யாரும் கூறாமலே அங்கே கிணற்றடியில் குமிந்து கிடந்த பாத்திரங்களை கழுவி வைக்க ஆரம்பித்தாள்.

அன்றிலிருந்து அந்த வீட்டின் பெரிய மருமகளாக பெறுப்பெடுத்துக் கொண்ட சூர்யவதனா தன்னை அந்த வீட்டுடன் இணைத்து கொள்வதற்கு சில வருடங்கள் எடுத்தன. அந்த சில வருடங்களில் அவளுக்கு கிடைத்த பாடங்களும் ( பட்டங்களும்) கணக்கில் அடங்காதவை.

இரவு பதினொரு மணிக்கு தனது மாத்திரையை மாமனார் எடுத்துக் கொண்டு உறங்க செல்லும் வரை கதவை அடைக்க கூடாது. காலை நான்கரை மணிக்கு மாமியார் எழுந்து கொள்ளும் நேரம் அறை கதவு திறந்திருக்க வேண்டும்.

வீட்டில் உள்ள அனைவரின் உடை, நகை புத்தகம், பத்திரம் என அனைத்துப் பொருள்களும் அந்த ஒரு அறையிலேயே இருப்பதால் எப்பொழுதும் யாராவது ஒருவர் அந்த அறைக்குள் வந்து கொண்டேதான் இருந்தனர்.

தன் தாய் வீட்டில் தான் நினைத்த நேரம் அனைத்தையும் செய்து பழகிய சூர்யா முதல் சில நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டாள் என்றுதான் சொல்லவேண்டும். சரி நாமே சிலதை மாற்றியமைக்கலாம் என அவள் எடுத்த முடிவுகள் அனைத்தும் 'இது உனக்கு தேவையா? இதுக்கு நாம சும்மாவே இருந்திருக்கலாம்.' என அவளை நினைக்க வைத்தது.
மாமனாரின் மாத்திரையை அவர் படுக்கைக்கு அருகில் இருந்தால் எடுத்துக் கொள்ள வசதியாக இருக்குமே என்று நினைத்து மாத்திரையை இடம் மாற்ற அதற்கு மாமியாரிடம் வங்கிய பேச்சுகள் காது கொடுத்து கேட்க முடியாதவை.

நாத்தனாரின் புத்தகங்களை ஹாலில் உள்ள மேசையில் படிப்பதற்கு ஏதுவாக அழகாக அடுக்கி வைத்துவிட்டு அதற்கும்

"இப்பவே என் பொண்ணோட பொருள வெளியே தூக்கி போட்டடுட்ட. உன்ன இப்படியே விட்ட நாளைக்கு அவளுக்கு கல்யாணம் ஆனதும் இந்த வீட்டுக்குள்ளே வர விடமாட்டேன் போலயே." என்று மாமியாரிடம் திட்டு வாங்கிய சூர்யா இனி இந்த வீட்டில் எதையும் மாற்றியமைக்க கூடாது என்ற முடிவிற்கு வந்தாள்.

ஒரு வழியாக அனைத்தையும் ஏற்று வாழ பழகிக் கொண்ட சூர்யா தாய்மை அடைய அதில் அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

'ஏழாவது மாசம் வளைகாப்பு போட்டு அம்மா வீட்டுக்கு போயிடலாம். அங்க போய் கொஞ்ச நாள் நம்ம இஷ்டத்துக்கு இருக்கலாம்." என்று அவள் மனது ஆனந்த கூத்தாட விதி அவளது எண்ணத்தில் ஒரு லாரி மண்ணை அள்ளி வந்து தட்டியது. ஏழாவது மாதம் வளைகாப்பு பற்றி பேச வந்த சூர்யாவின் பெற்றோரிடம்

"எங்க குடும்பத்தில ஒன்பது மாசம் தான் வளைகாப்பு போடுவோம்." என்று கறாராக கூறிவிட அவர்களுக்கும் மறுத்துப் பேச தோன்றவில்லை.

மசக்கையால் அவதிப்பட்ட சூர்யாவிற்கு பகலில் சற்று நேரம் தூங்கினாள் நன்றாக இருக்கும் என்று நினைத்து படுத்தால் அப்பொழுதுதான் யாராவது ஒருவர் அறைக்குள் வருவதும் போவதுமாக இருப்பார்கள்.

மாமனார் கொழுந்தன் இப்படி யாராவது ஒருவர் வரும்பொழுது கட்டிலில் படுக்க சங்கடப்பட்ட சூர்யா மயக்கமே வந்தாலும் ஹாலில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருப்பாளே தவிர அறைக்குள் செல்ல மாட்டாள்.

ஒருவழியாக 9வது மாதம் வளைகாப்பு முடிந்து தன் பிறந்தகம் சென்றிருக்க அடுத்த ஐந்து நாட்களிலேயே அவரது செல்வ மகன் கதிரவன் அவசரமாக இவ்வுலகிற்கு வந்து சேர்ந்தான்.

பேரன் பிறந்த மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த கனகம் அடுத்த நாற்பது நாட்களிலேயே மருமகள் மற்றும் பேரனை தங்களுடன் அழைத்து வந்துவிட்டார்.

முன்பாவது அவள் மட்டும் தான், ஆனால் இப்பொழுது தன் மகனையும் வைத்துக்கொண்டு சூர்யாவால் சமாளிக்க முடியவில்லை. ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை பசியால் அழும் மகனிற்கு பாலூட்டுடவவது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. அந்த நேரத்தில் யாராவது கதவை தட்டினாள் அவளுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.

நிலவழகனும் தன் மனைவியின் கஷ்டத்தை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான், ஆனாலும் வீட்டில் நிலையை உணர்ந்து அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

மகன் விஷயத்தில் இனியும் சும்மா இருக்க முடியாது என்பதை உணர்ந்து இரு மரத்தடுப்புக்களை வாங்கி வந்து ஹாலில் சிறு மறைவு போல அமைத்துத்தர அன்றிலிருந்து அது சூர்யாவின் பிள்ளைகளான கதிரவன், அடுத்து பிறந்த தேனிலாவின் இடமானது. ஆனால் அதற்கும் அவர்கள் பேச்சு வாங்கத்தான் செய்தார்கள்.

"ஏண்டா உன் பொண்டாட்டிக்கு எல்லாரும் கூடவும் இருக்க முடியாதா. இப்பவே அவளுக்கு தனி ரூமு கேக்குதா. இதுல இன்னும் கொஞ்சம் வசதி வந்தால் எங்க எல்லாம் விட்டுட்டு உன்ன தனியா கூட்டிட்டு போயிடுவா தான." என்று கனகம் பேச, தான் பேசினால் அதற்கும் தாய் தன் மனைவியை பேசத்தான் செய்வார் என்று நிலவழகன் அமைதியாக அதை கடந்துவிட்டான்.

இவ்வளவு பேச்சுகள் பேசிய கனகம் தன் மகளின் கனவன் பத்து மணி வரை கதவை திறக்கவில்லை என்றாலும் எதுவும் கேட்பதில்லை. மாறாக அவர் வரும் முன்பே வீட்டினர் தங்களுக்கு தேவையான பொருட்களை ஹாலில் மர தடுப்பிற்கு பின்னே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

"அண்ணன் மாதிரி எங்க பொண்டாட்டிங்கள வசதி இல்லாத வீட்டுல தங்க வைச்சி கஷ்படுத்த முடியாது." என இளைய மகன்கள் இருவரும் தனி குடித்தனம் சென்ற போது அவரால் ஒன்றும் கூற முடியவில்லை.

மகளுக்கு ஏழாம் மாதமே வளைகாப்பிட்டு அழைத்து வந்து, பிள்ளை பிறந்து ஐந்து மாதம் கழித்து செல்லும் வரை மௌன பார்வையாளர்களாகவே நிலவழகனும், சூரியவதனாவும் இருந்தன.

சில வருடங்களில் அந்த ஒற்றை அறை நோய்வாய்ப்பட்ட மாமனார் மாமியாருக்கும் தரப்பட்டது. பின் பிள்ளைகளின் திருமணத்திற்கு பிறகு அது கதிரவன் அருணாவின் அறையானது.

சில நாட்களுக்கு முன்பு தான் நிலவழகனின் மொத்த சேமிப்பையும், சூரியவதனாவின் நகைகளையும் கரைத்துவிட்டு புதிய வீடு உருவானது.

மூன்று படுக்கயைறை கொண்ட அந்த வீட்டில் மகன், பத்து வயது பேரன், எட்டு வயது பேத்தி மூவரும் தனித்தனி அறையை எடுத்துக்கொள்ள வழக்கம் போல நிலவழகன் சூர்யா தம்பதியினர் ஹாலுக்கு தள்ளப்பட்டனர்.

ஒரு நாள் பேச்சுவாக்கில் சூர்யா தன் மகளிடம் அதை கூறிவிட, அவளோ அண்ணனை காச்சி எடுத்துவிட்டாள். அதை பற்றி மனைவியிடம் கூறி எந்த அறையில் பெற்றவர் தங்க வைப்பது என கேட்டதற்கு தான் அத்தணை சண்டை.

"கடைசி வரை நமக்கு தனி ரூம் கிடையாது போல." என்று சோக புன்னகையுடன் நிலவழகன் கூற,

"இனி நமக்கு எதுக்கு தனி ரூம். நாம வாழ்ந்து முடிச்சிட்டோம். சின்ன பிள்ளைங்கக்கிட்ட போய் ரூம் கேட்டு மல்லுக்கு நிக்க கூடாது." என்று பெருந்தன்மையாக சூர்யா கனவனுக்க அறுதல் தரும்படி பேசினாள்.

"நீ வாழ்க்கைன்னு எத சொல்ற சூர்யா... கட்டில் சந்தோஷத்தை மட்டுமா." என்று மனைவியை உற்று பார்த்து கேட்க, கணவனின் கேள்வில் சூர்யா வாயடைத்து போனார்.

"வாழ்க்கை அது மட்டும்ன்னு நான் நினைச்சிருந்த எனக்கு இருபத்தி ஏழு வயசாகும் போதே உன்ன தனியா கூட்டிட்டு போயிடுப்பேன். இப்போ எனக்கு அறுபத்தி மூணு. கணவன் மனைவிக்குள்ள படுக்கைய தவிர பகிர்ந்துக்க நிறைய இருக்கு அது உனக்கும் புரியும். உனக்கு மூட்டுவலி வரும்போது எல்லாம் நான் உன் கால பிடிச்சி அழுத்திவிட நினைப்பேன்... எனக்கு நீ எண்ணெய் தேய்ச்சு விடனும், நான் உன்கிட்ட மனசு விட்டு பேசனும் இப்படி நிறைய நிறைவேறாத எதிர்பார்ப்பு என்கிட்டையும், உன்கிட்டையும் இருக்கு. அது எல்லாம் எப்படியாவது நிறைவேத்திகளாம் என்கிற எதிர்பார்ப்பிலே முப்பத்தாறு வருஷம் ஓடி போயிருச்சு, அது கூட எனக்கு கஷ்டமா இல்ல. ஆனா அது இனி நிறைவேறாது என்கிற ஏமாற்றத்த தாங்கிட்டு எப்படி இருக்க போறேன்கிறது தான் கஷ்டமா இருக்கு." என்று நிலவழகன் கூற, சூர்யா நடுங்கும் அவர் கையை ஆதரவாக பிடித்துக்கொண்டாள்.

பெற்றோரிடம் பேசிவிட வேண்டும் என அவர்களை பின் தொடர்ந்து வந்த கதிரவன் தந்தையின் வார்தைகளில் இருந்த வலியில் பேச்சற்றவனாக உறுதியான முடிவுடன் வீடு திரும்பினான்.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...