காளியாத்தா

iam.usaami
மர்மம்
5 out of 5 (3 )

பெரியபாளையம் அருகே இருக்கும் ஜெயமங்களம் என்னும் கிராமம் தான் வளவனின் ஊர். மேற்கு தொடர்ச்சி மலையின் பக்கத்தில் அந்த ஊர் இருப்பதால் அங்கு இருக்கும் எந்த வீட்டின் மொட்டை மாடியில் ஏறி பார்த்தாலும் சுற்றி மலைகள் மட்டுமே தெரியும். அந்த ஊர் பச்சை பசேல் என மிகவும் ரம்மியம் மிக்கதாய் இருந்தது. பாரி சிறு வயதில் இருந்தே சிட்டியில் வளர்ந்தவன். அவன் ஊரில் பச்சையாய் இருந்த வயல்வெளிகள் அனைத்துமே கட்டடங்களாக மாற்றபட்டன. பாரிக்கு வளவன் கிராமத்தை பார்க்கையில் ஆச்சர்யமாக இருந்தது. வளவனை ஊரில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்து இருந்தது. அது மட்டும் இல்லாமல் அவன் கிராமத்தினர் அனைவரும் மாமன் மச்சான் என்று உறவுமுறை சொல்லியே ஒருவரோருவர் கூப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். வளவன் பாரியை அவனது ஊர் திருவிழா என்று கூறியே அவனை அழைத்து இருந்தான். அந்த திருவிழா நான்கு வருடங்களுக்கு பிறகு நடப்பதாகவும் ஆகையால் இந்த திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது என்று வளவன் கூறுகிறான். பாரி அவன் கொடுத்த அதீத விவரணையே அவனை அந்த திருவிழாவை பார்க்க வேண்டும் என்று தூண்டியது. ஆகையாலேயே அவன் சம்மதித்தான். “டேய், தீபாவளி பொங்கலுக்கு கூட இந்த ஊர்ல இருக்கவனுங்க வேலை இருக்குனு வர மாட்டனுங்க. ஆனா ஊர்ல திருவிழா நடக்குதுன்னு சொன்னா போதும் எல்லாரும் அஞ்சு நாளைக்கு ஊர்ல கூடிடுவானுங்க. அப்போ இந்த ஊரே கூடி இருக்கும்.” என்று வளவன் கூறுகிறான். பாரி அதை கேட்டு ஆச்சர்யப்பட்டு, “சரி, ஊரு எல்லாம் ஒண்ணு கூடி என்ன வேண்டிபீங்க. எதுக்கு இப்போ இந்த திருவிழா நடத்துறீங்க?” என்று கேட்கிறான். அதை கேட்டு, “ஊர்ல மழை தண்ணி பெய்யணும், மக்கள் எல்லாம் நல்ல இருக்கணும்னு தான் திருவிழா கொண்டாடுறோம்” என்று வளவன் சொல்கிறான். அதன் கேட்டு பாரிக்கு சிரிப்பதா இல்லை உண்மை என்று நம்பி அமைதியாக இருப்பதா என்று தெரியவில்லை. அவனின் மனம் கேக்கவில்லை. உடனே அவனுக்கு உள்ளே இருக்கும் பகுத்தறிவுவாதி வெளியே வந்து,”டேய் என்னடா, நீங்க சாமி கும்பிட்டா மழை பேய்ஞ்சுடுமா? நல்ல கதையா இருக்கே!” என்று சொல்லி ஏளனமாக சிரிக்கிறான். அதற்கு வளவன், “ டேய், உனக்கு என்ன தெரியும், 4 வருஷத்துக்கு முன்னாடி ஊர்ல மதகலவரம் அதுல இருந்து இங்க திருவிழாவே நடக்கல. அப்புறம் சரின்னு ரெண்டு வருஷம் முன்னாடி நடத்தலாம்னு பாத்தா அப்போ கொரானான்னால நடத்த முடியல. ஊர்ல இதுனாலேயே சரியா மழை தண்ணி இல்ல. காளியாத்தா குறி சொல்லி இந்த வருஷம் நடத்தணும்னு சொல்லிடுச்சு. அதான் இந்த தடவை திருவிழா நடத்துறோம். நீ வேணும்னா பாரு. இன்னும் நாலு நாள் கழிச்சு திருவிழா முடியுற கடைசி நாள் அன்னிக்கு எப்பிடி மழை பெய்ய போகுதுன்னு. அப்போ நா சொல்றது உனக்கு புரியும்” என்று சொல்லி அவன் பெருமூச்சு விடுகிறான். பாரி அதை கேட்டுவிட்டு அப்படி என்ன தான் நடக்கும் என்று பார்க்கலாம் என்று அவனுக்குள்ளாகவே நினைத்து கொண்டான். “டேய் நீங்க நல்லா விவரமா மழைக் காலத்துல திருவிழா வச்சுட்டு மழை பெஞ்சதும் ஆத்தா தான் காரணம்ன்னு கதை கட்டிட்டு இருப்பீங்க. போடா டேய்” என்று சொல்லி பாரி நடந்து செல்கிறான். உடனே வளவன். “மே மாசம் உங்க ஊர்ல மழைக் காலமா? நாலு வருசமா சரியா மழை இல்லன்னு சொல்றேன். சும்மா எதாவது பேசிட்டு இருக்காத. இங்கதான இருக்கபோற, திருவிழா கடைசி நாள் அன்னிக்கு வா, பாப்போம். அப்போ நீ நம்புவ” என்று சொல்லி அவன் அங்கிருந்து நடந்து செல்கிறான்.

பாரிக்கு ஊர் திருவிழாவை பார்ப்பதில் பயங்கர ஆர்வம் இருந்தது. வளவன் அவனை பக்கத்தில் இருக்கும் மேகமலைக்கு விடியற்காலை அழைத்து சென்றான். “காளியாத்தா, பூந்தபனையை பறிக்க சொல்லி உத்தரவு கொடுத்துடுச்சு” என்று வளவனின் மாமா சங்கிலி கூறினார். காளியாத்தா என்ற பெயரை அவன் இதோடு ஒரு பத்தாவது முறை அவர்கள் அனைவரும் சொல்லி கேட்கிறான். முதல் சில நாட்கள் அவன் அந்த பெயரை கேட்கும்போது ஊர் பூசாரியாக இருக்கும் என்று நினைத்து அவன் அதை பற்றி பெரிதாக சட்டை செய்யவில்லை. பின் நாட்கள் போக போக, அவனுக்கு அந்த பெயரின் மேல் பல்வேறு கேள்விகள் எழ ஆரம்பித்தது. அவன் உடனே வளவனின் காதருகே சென்று, “மச்சி, யார் டா காளியாத்தா, ஊரே அவர பத்தி பேசிட்டு இருக்கு?” என்று கேட்கிறான். வளவன் உடனே, “அவர்தான் எங்க ஊரோட காவல் தெய்வம். எங்களுக்கு எல்லாமே அவர்தான்.” என்று சொல்லி நடந்து செல்கிறான். “அவரு எங்க இருக்காரு” என்று பாரி கேட்க, “இங்க ஊர்லதான் இருப்பாரு. நீ ஊர்க்கு உள்ள வந்தப்போ ஒரு கம்மாய் பக்கத்துல ஒரு மலை இருந்துச்சு இல்ல.” என்று கேட்க பாரி ஆமா என்று தலையை ஆட்டுகிறான். “அங்கதான் அவரு இருக்காரு. அவருக்கு எத்தன வயசு தெரியும்ல?” என்று கேட்க, “எனக்கு எப்டிடா தெரியும். பதட்டத்துலயே வச்சுகாம சொல்லு” என்று பாரி அவனிடம் கடிந்து கொள்கிறான். “அவருக்கு 272 வயசு ஆகுது.” என்று சொல்ல பாரி அதிர்ச்சியாகிறான். பின்ன வளவனை பார்த்து சிரித்தே விடுகிறான். அப்போது சங்கிலி வளவனை கூப்பிட வளவன் ஓடுகிறான். சங்கிலி அங்கு ஒரு மரத்தை பார்க்க, அதில் வளவன் ஏற ஆரம்பித்தான். வளவன் வேக வேகமாய் மரத்தில் ஏற, அவன் கையில் ஒரு அருவாளை, கீழே இருந்த சங்கிலி கொடுக்கிறார். அவன் அதைக் கொண்டு அந்த மரத்தில் தொங்கும் பூந்தபனையை அறுக்கிறான். அதை அறுத்து கீழே தள்ளிவிடுகிறான். உடனே சங்கிலியும் மீதி ஆட்களும் அந்த பூந்தபனையை எடுத்து அவர்கள் வந்த டிராக்டர் வண்டியில் ஏற்றுகின்றனர். ட்ராக்டர் முழுக்க பூந்தபனையை நிரப்பியபின் வண்டியை எடுத்து மலையில் இருந்து இறக்க ஆரம்பித்தனர். பாரி ஊரில் சென்று பூந்தபனையை கட்டுவதோடு எல்லாம் முடிந்துவிடும் என்று வண்டியில் சந்தோசமாக ஏறிக்கொண்டு போனான். ஆனால் வண்டி ஊரை வந்து சேர, ஊரே அதை தாரையும் தப்பட்டையும் சேர்த்து வரவேற்றது. மொத்த ஊரும் அந்த வண்டியை தொட்டு வணங்க ஆரம்பிக்க பாரி என்ன நடக்கிறது என்று புரியாமலேயே இருந்தான். ஊரில் இருக்கும் சிலர் அந்த மேள சத்தத்தை கேட்டு பரவசம் அடைந்து வண்டியை தொட்டு வணங்கியபடி சாமி ஆட ஆரம்பித்தனர். சாமி ஊர்வலம் வரும்போது சாமி ஆடுவதை அவன் பார்த்து இருக்கிறான்.ஆனால் ஊருக்கு அலங்கரிக்க எடுத்து வரும் டிராக்டரை பார்த்தே இவர்கள் சாமி ஆடுவதை பார்த்து அவன் இவர்கள் அனைவரும் நடிக்கிறார்கள் என்று அவனுக்கு உள்ளாகவே நினைத்து கொண்டான். ஆனால் அவர்களின் ஆட்டத்தை பார்க்கும் போது அது நடிப்பு போல் தெரியவில்லை. அவன் தன் கண் முன்னையே ஒரு அதிசயம் நிகழ்வது போல் அது அனைத்தையும் பார்த்துக் கொண்டு வந்தான். வளவன் சொன்னது போல் அந்த வண்டி கோவிலுக்கு போக நடுநிசி ஆனது. பாரி வளவனிடம் தூக்கம் வருகிறது என்று சொல்லி பூந்தபனையை கட்டாமல் வீடு நோக்கி சென்றான். வளவன் பூந்தபனை அனைத்தையும் ஊர் முழுக்க கட்டி வருவதற்கு விடியற்காலை ஆனது.

திருவிழாவின் அடுத்த நாள், கும்மி அடிப்பதும் முளைப்பாரி தூக்குவதும் நடைபெறும் என்று வளவன் கூறி இருந்தான். வளவனும் அவனது தந்தையும் முளைப்பாரி தூக்கி கொண்டு கோவிலுக்கு சென்றனர். அவனின் அப்பாவுக்கு அருள் வந்து அவர் கண்கள் கலங்கி வந்து கொண்டு இருந்தார். பின்னர் பெண்கள் கும்மியடித்து கொண்டு இருந்தனர். அந்த ஊரிலேயே வயது மிகுதியாய் இருக்கும் ஒரு கிழவி கும்மிப்பாட்டு பாட, அந்த ஊரின் இளம்பெண்கள் அனைவரும் கும்மியடித்தபடி ஆடிக்கொண்டு இருந்தனர். பாரி அது அனைத்தையும் பார்த்தபடி இருந்தான். கும்மிப்பாட்டு பாடி முடிக்க, மைக்செட்டில் விழாக்குழுவை சேர்ந்த ஆள் பேசுகிறான். “இன்னிக்கு கரகம் செய்யபோறோம், அதுக்கு நம்ம காளியாத்தா இறங்கி கரகம் செய்யபோகுது. ஊர் ஆம்பளைங்க எல்லாம் வந்துருங்க. சாமி ஊர்வலத்தோட நேரா குளத்தாங்கரைக்கு போய் நம்ம காளியாத்தா கரகம் செய்ய போறாரு” என்று சொல்ல பாரி அதை கேட்டு மிகவும் ஆர்வம் அடைந்தான். அதை பற்றி வளவனிடம் விசாரிக்க, கரகம் எப்பொழுதும் இரவு 2 மணி போல் ஆரம்பித்து அது விடிய விடிய நடக்கும் என்று கூறுகிறான். பாரி கரகம் பார்க்க வரவில்லை, அவன் காளியாத்தாவை பார்ப்பதிலேயே ஆர்வம் கொண்டு இருந்தான். அவன் அதை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறான். மாலை வேலை ஆரம்பிக்க, அனைவரும் அவர் அவர் வீட்டில் பூஜை சாமான்களை வைத்துகொண்டு சாமி ஊர்வலம் வருவதற்காக காத்துகொண்டு இருக்கின்றனர். ஊர் பூசாரி ஒவ்வொரு வீடாக சென்று அவர்கள் தரும் பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு அவர்களுக்கு ஆசி வழங்கி கொண்டே செல்கிறார். அப்போது அவர் ஒரு வீட்டை தாண்டி செல்ல அந்த வீட்டில் இருக்கும் ஒருவன் கத்துகிறான் “என்ன பூசாரி, பயம் விட்டு போச்சா ஆத்தா வீட்டையே தாண்டி போற” என்று மிரட்டல் தொனியில் கேட்க, பூசாரி பயந்தபடி “மறந்துட்டேன் செல்வம்” என்று சொல்லி வீட்டின் உள்ளே செல்கிறார். அங்கு ஒரு தாத்தாவின் போட்டோ ஓட்டப்பட்டு இருக்கிறது. அவர் அதில் பூஜை செய்துவிட்டு செல்கிறார். பின்னர் பூசாரி வெளியே வர, செல்வம் மீண்டும் அவரை சீண்டும் விதமாக, “காளியாத்தா அவர் நாக்குல இருக்காரு மறந்துடுச்சா. பாத்து இருந்துகோங்க” என்று சொல்கிறான். பின்னர் செல்வம் அவன் நண்பனிடம் “இந்த அம்பு பண்ற வேலை எதுவும் எனக்கு புடிக்கல. அவன் பண்ற காரியத்துக்கு ஏறி தொண்டைலையே மிதிக்கக் போறேன் பாரு.” அவனின் நண்பன், “டேய் நீ என்ன உங்க அண்ணன் மொக்கையும் தான் கோவில் பூசாரி. அத மட்டும் பாரு. நீ ஏன் இன்னொரு பூசாரி பத்தி எல்லாம் யோசிக்குற. ஊர் கருப்புசாமியா வேற ஆடுறான் அவன். நீ லூசு மாதிரி எதாவது பண்ணி அப்புறம் சாமி குத்தம் ஆகிட போகுது” செல்வம் உடனே அமைதியாகி, “இல்ல, காளி ஊர தாண்டி எல்லைல உக்காந்து இருந்தா, இந்த ஈன பயலுவோளுக்கு பயம் போய்டுமா என்ன. மரியாத செய்யாம போறானுங்க. என் கொள்ளுதாத்தான் வராம இவனுக்கு எப்பிடி கரகம் கட்டுரானுங்கன்னு நா பாக்குறேன்” என்று சொல்லி அவன் அங்கிருந்து அவனது வீட்டுக்கு செல்கிறான். அவன் நண்பன் அதிர்ச்சியாகி, “டேய் என்னடா செய்ய போற.” “என் தாத்தான பாக்க போறேன்” என்று சொல்லி பாரியை கிராஸ் செய்து அவர்கள் செல்கிறார்கள். பாரி அவர்கள பேசியது அனைத்தையும் காதில் வாங்கிகொண்டு இருந்தான். அவன் வளவனிடம் அவர்கள யார் என்று விசாரித்தான். அவர்கள் பேசியதிலேயே அவனின் தாத்தா தான் ஊரே காளி என்று நம்பும் காளியாத்தா என்று தெரிந்து இருந்தாலும் அவன் அதை உறுதி செய்து கொள்ள நினைத்தான். வளவனும் அதை உறுதி செய்தான். மேலும் அவன் காளியாத்தா கரகம் செய்ய வரவழைக்க அவரது குகை முன் ஊர் பூசாரி சென்று விளக்கு ஏற்றி படையல் படைத்தது தப்பும் மேளமும் ஒரு கள்ளு பாட்டிலும் சேர்த்து கொடுத்து பாடல் பாடினாலே அவர் வெளியே வருவார் என்று அவன் கூறுகிறான். காளியாத்தா அந்த குகையிலேயே ஒரு நூறு வருடம் வாழ்வதாகவும் அவர் முழு நேரமும் உறக்கத்தில் இருப்பார் என்றும் கூறுகிறான். மேலும் அவருக்கு உகந்தா நாளான பௌர்ணமி மற்றும் அமாவாசையில் மட்டும் மக்கள் அவரவர் வீட்டில் இருந்து செய்த சாப்பாடை கொடுப்பார்கள். அவ்வாறு செய்து கொடுத்தால் அது அவர்களின் குடும்பத்தை செழுமையுடன் வாழ செய்யும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு மாதமும் இரண்டு இரண்டு குடும்பங்கள் மாறி மாறி அவருக்குள் படையல் பரிமாறுவார்கள். அதை அவர்களின் குடும்பத்தாரே எடுத்து சென்று சூடம் பற்ற வைத்து பாடல் பாடி வைத்துவிட்டு வந்துவிடுவர். ஊரே காளியாத்தாவை பார்க்க கூடும் ஒரு நாள் அந்த கரகம் செய்யும் நாளே மற்ற நாட்களில் அவரை பார்க்க முடியாது. கிட்டத்தட்ட அவர் ஒரு ஜீவா சமாதி அடைந்தது போல் அவர் மற்ற நாட்கள் உறக்கத்திலேயே இருப்பார். ஊர் மக்களும் சாமி குத்தம் ஆகிவிடும் என்று மற்ற நாட்கள் அங்கு வருவதை தவிர்த்தே வந்தனர். ஒரு அறுபது வருடத்துக்கு முன், இவ்வாறு காளியை பார்க்க எண்ணி அந்த குகைக்கு சில இளைஞர்கள் சென்றனர். அவர்கள் அவருக்கு வைத்து இருந்த படையலை திருடி தின்றனர். அவர்கள் திங்கும் பொழுதே பெரும் புயலும் காற்றும் அடிக்கவே அனைவரும் திகிலாகினர். பின்னர் காளியாத்தா அவர்களை நோக்கி நடந்து வர, அவர்கள் பயந்து அந்த இடத்தை விட்டு தெறித்து ஓட ஆரம்பித்தனர். பின்னர் அவர்கள் ஊரை விட்டு ஓடி ஒளிந்து கொண்டனர். அவ்வாறு சாப்பிட்ட அனைவரும் ஒவ்வொருவராக குறிப்பிட்ட கால இடைவெளியில் இறக்க ஆரம்பித்தனர். ஒவ்வொருவரும் மர்மமான நோய் வந்தும் விபத்துகளிலும் அடிபட்டு இறந்து போக, அதில் உயிரோடு இருந்த ஒருவன் மட்டும் கோவிலில் பூசாரி காலில் விழ, அவன் காளியாத்தாவிடம் பரிகாரம் கேட்டு வர சொன்னான். அந்த நேரத்தில் கோவில் பூசாரி செல்வத்தின் அப்பா. அவர் காளியாத்தாவிடம் கேட்டு அவர் சொன்னதாய் சொல்லி உயிர் பிழைத்த திருடனிடம் ஊருக்கு அவனின் சொத்தை கோவில் கொடையாக கொடுக்க சொன்னார். அவனும் அதை கொடுக்கவே அவன் மட்டும் ஒத்தை ஆளாக பிழைத்தான் என்று ஊரே நம்பியது. பாரிக்கு அதை வளவன் நம்புகிறானா என்று சந்தேகமாக இருந்தது. அதை அவன் கேட்டும்விட்டான். “அந்த உயிர் பிழைச்சு கோவில்லுக்கு சொத்து எழுதி வச்சான்ல. அது வேற யாரும் இல்ல. எங்க தாத்தா தான்.” என்று வளவன் சொல்கிறான். அதை கேட்டதும் பாரிக்கு ஏன் வளவன் ஊர் சம்மந்தமான விஷயங்களை நம்புகிறான் என்று புரிந்தது. அவனிடம் அவன் இனி வாதிடுவது வீண். வளவன் அவன் தாத்தா காளிக்கு கொடுத்த கொடையால் தான் தனது வாழ்க்கையே நன்றாக இருக்கிறது என்று ஆழமாக நம்பினான்.

பாரிக்கு இரவு வரை காளியாத்தாவை காத்திருந்து பார்ப்பதில் விருப்பம் இல்லை. அவன் செல்வம் எப்படியும் காளியாத்தாவை பூஜை எல்லாம் செய்து கூப்பிடவே சென்று இருப்பான் என்று எண்ணி அவனை பின் தொடர்ந்து செல்கிறான். செல்வம் நேராக அந்த கம்மாயை நோக்கி தனது சைக்கிளில் லைட்டை போட்டுக்கொண்டு செல்ல, அவனுக்கு பின்னால் பாரி சைக்கிளில் லைட் போடாமல் பின் தொடர்ந்து வருகிறான். செல்வத்துக்கு பாரி பின்னாடி வருவது தெரியாமலே இருந்தது. அவன் நேராக மலையின் அருகே செல்கிறான். அங்கு அவனது சைக்கிளை நிறுத்துகிறான். அவன் கையில் இருக்கும் டார்ச் லைட்டை எடுத்து சுற்றி முற்றி காட்டுகிறான். பாரி செல்வம் சைக்கிளை நிறுத்துவதை பார்த்துவிட்டு அவனது சைக்கிளை சிறிது தூரம் தள்ளி நிறுத்துகிறான். அவன் சைக்கிளை அங்கே இருக்கும் சீமை கருவேலை செடிகளின் பக்கத்தில் சாய்த்துவிட்டு மெதுவே அந்த மலையின் அருகே இருக்கும் குகைக்கு நோக்கி நடந்து செல்கிறான். அவன் அங்க குகைக்கு நேர் எதிராக் இருக்கும் ஒரு சிறிய குன்றின் மேலே ஏறி நிற்கிறான். அவன் நிற்கும் இடத்தில் இருந்து செல்வம் கீழே குகையின் வாசல் அருகே நிற்பது தெரிகிறது. அவன் டார்ச் லைட் வைத்துகொண்டு விளக்கு ஏற்றுகிறான். பின் அங்கு இருக்கும் சாப்பாட்டை எடுத்து அவன் சாப்பிடுகிறான். அதை பாரி பார்த்து குழப்பத்தோடு நிற்கிறான். உடனே அவன் அருள் வந்து ஆடுவது போல் பாட்டு பாடிக்கொண்டே ஆடுகிறான். அவன் அந்த குகையின் வாசலையே பார்த்தபடி நிற்கிறான். அந்த குகையில் இருந்து காளியாத்தா வெளியே வந்ததாக அவனுக்கு தெரியவில்லை. செல்வம் பாடியபடி இருக்கிறான். பின்னர் அவன் ருத்ர தாண்டவம் ஆடுவது போல் ஆடுகிறான். அப்போது திடீரென காத்து வேகமாக அடிக்கிறது. அதனை பாரி கவனித்து சுற்றி முற்றி பார்க்கிறான். அப்போது தூரத்தில் அவனுக்கு மேளம் அடிக்கும் சத்தம் கேட்க, பாரி அங்கிருந்து வேறு இடத்துக்கு ஓட, அப்போது சில கற்கள் சறிக்கி விழுந்தது. அந்த சத்தம் கேட்டு செல்வம் சத்தம் வந்த திசை நோக்கி பார்க்கிறான். அவன் பாரி நிற்கும் இடத்தை பார்த்தபடியே நடந்து வருகிறான். அப்போது வழியில் இருக்கும் ஒரு முள் செடியை தெரியாமல் மிதிக்கிறான். அவன் அந்த முள்ளை நீக்க குனிந்தபடி இருப்பதை பாரி பார்க்கிறான். பின் செல்வம் பரி இருக்கும் இடம் நோக்கி டார்ச் அடிக்க, பாரி ஒரு கல்லின் அருகே மறைந்து கொள்கிறான். பாரி வெளியே பார்க்கும் சமயத்தில் செல்வம் அங்கு இல்லை. அவன் எங்கே என்று தேடியபடி இருக்கிறான். அதற்குள் ஊர் மக்கள் அனைவரும் மேளம் கொட்டியபடி ஆடுகிறார்கள். அவர்கள் அங்கு இருக்கும் சாப்பாடு சாப்பிட்டதை பார்த்து காளியாத்தா விளித்துவிட்டாதாக நினைத்து மேளம் கொட்ட ஆரம்பித்தார்கள். காளியை வருமாறு அழைக்கிறார்கள். “ எங்க ஊர காப்பத்துற காவல் தெய்வமே. வெளியே வா. உன் முகத்த நீதான் கரகத்துல கட்டி தூக்கி கோவில்லுக்கு எடுத்து வரணும். வா ஆத்தா வெளியே வா” என்று சொல்லி அவன் பாட, அவர்கள் மேளம் கொட்டியபடி இருக்கிறார்கள். அங்கு இருக்கும் மக்களில் பாதி பேர் சாமி ஆடியபடி இருக்கிறார்கள். அப்போது வேகமாக காத்து அடிக்க, இடி இடிக்கிறது. அந்த குகையின் வாசலில் இடி இடிக்கும் வெளிச்சத்தில் ஒரு கருத்த உருவம் உடல் முழுக்க சால்வையை போட்டபடி முகம் முழுவதும் சுருக்கங்களுடன் நிற்கிறது. அதை மக்கள் பார்க்க மக்கள் அனைவரும் சாமி பிடித்து ஆடுகின்றனர். மீதி பேர் கீழே விழுந்து சாமி கும்பிடுகிறார்கள். சங்கிலி மட்டும் கையில் அருவாள் வைத்துக்கொண்டு காளியாத்தாவை சுற்றியபடி ஆடிக்கொண்டு இருக்கிறான். அவன் அருகில் யாரும் நெருங்காத வாறு அவன் காவலாய் நின்று கருப்பு சாமியே வந்தது போல் உக்கிரமாக ஆடுகிறான். காளியாத்தா அவனது கையில் ஒரு பெட்டியை வைத்துகொண்டு நிற்க, அந்த பெட்டியை திறக்க, அதில் சாமியின் முகம் இருக்கிறது. அந்த முகத்தை எடுக்க, அங்கு இருக்கும் பூசாரி கரகம் செய்ய தேவையான பூ, வாழைபட்டை என்று அனைத்து பொருட்களையும் எடுத்து வருகிறார்கள். அதை காளியாத்தா அழகாக சொம்பின் மேல் பூவை சுற்றி உடலை போன்று உருவாக்கி அம்மனின் முகத்தை மேலே வைக்கிறான். அவன் அந்த அம்மன் கரகத்தை திருப்ப, அங்கு இருக்கும் மக்கள் வெடியை போடுகின்றனர். மக்கள் அனைவரும் எழுந்து அமர்கின்றனர். அனைவரும் சூடம் கொளுத்த அந்த கரகத்தை சங்கிலி எடுத்து காளியாத்தாவின் மேல் வைக்க அவன் ருத்ர தாண்டவம் வந்தது போல பரவசம் அடைந்து ஆடுகிறார். அவரது கருப்பு சால்வை அவர் உடம்பில் இருந்து அவிழ்ந்து அவரது உடல் தெரிய அந்த உடலில் சதையை விட சுருக்கமே அதிகம் இருந்தது. அந்த சுருக்கத்தோடு அவன் ருத்ர தாண்டவம் ஆடுகிறான். அப்போது இடி இடிக்க, அந்த பேரொளியில் சிவனே ஆடுவது போல் அவனுக்கு இருக்கிறது. அவன் பூசாரி அம்புவை பார்க்கிறான். அவனை பார்த்து கையை நீட்டி கூப்பிட அவன் ஓடி வருகிறான். காளி அவனை அறைய, அவன் பயந்து காலில் விழுகிறான். அவன் எழாமலே இருக்கிறான். பாரி அதை பார்த்து செல்வம் காளியாத்தாவிடம் இது பற்றி கூறி இருப்பான் என்று நினைத்தபடியே கீழே இறங்குகிறான். காளி ஆடியபடி ஊருக்குள் நுழைகிறது. அவனை சுற்றி அனைவரும் ஊர்வலமாக வருகிறார்கள். பாரி அவர்களோடு சேர்ந்து கொண்டு ஊர் நோக்கி செல்கிறான். வளவன் அவனை பார்த்து, “நீ எங்கடா போன?” என்று கேட்க, “தூங்கிட்டேன், வெடி சத்தம் கேட்டு வந்தேன்” என்று பொய் சொல்கிறான். காளி கோவிலுக்கு செல்லும் வழியெங்கும் ஊர் மக்கள் நிற்கிறார்கள். அவர்கள் காலில் விழுந்து ஆசி கேட்கிறார்கள். காளியும் அவர்களின் குறைகளை அதுவாகவே கூறி பின் அதற்கு பரிகாரமும் சொல்லியபடி இருக்கிறது. அப்போது வளவன் பாரியின் கையை பிடித்து இழுத்து காளியின் அருகில் அழைத்து செல்கிறான். வளவன் காலில் விழுந்து திருநீர் பெற்று கொள்கிறான். அவன் பாரியை திரும்பி பார்க்க, பாரி என்ன செய்வது என தெரியாமல் நிற்கிறான். வளவன் அவனை காலில் விழுமாறு சைகையில் சொல்கிறான். பாரி உடனே காலில் விழுகிறான். அவன் காளியின் காலை கவனிக்க, அதில் ரத்தம் வழிகிறது. அது முள் கீறிய காயத்தை போல் இருக்கிறது.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...